006. வாழ்க்கைத் துணைநலம் - 01. மனைத்தக்க மாண்பு





திருக்குறள்
அறுத்துப்பால்

இல்லற இயல்

ஆறாம் அதிகாரம் - வாழ்க்கைத் துணைநலம்

     முன் அதிகாரத்தில் சொல்லப்பட்ட இல்வாழ்க்கைக்குத் துணையாக நிற்பதொரு மனைவியால் விளையும் நன்மையைக் குறித்தது இந்த அதிகாரம்.

       இந்த அதிகாரத்தின் முதலாம் திருக்குறள், இல்லறத்திற்குத் தக்க நல்ல குணங்களையும், நல்ல செய்கைகளையும் உடையவளாய் இருந்து, "கொண்டானில் துன்னிய கேளிர் பிறர் இல்லையாதலால், தன்னைக்கொண்ட கணவனது வரவுக்குத் தக்க வாழ்க்கையை உடையவள், அந்த இல்லற வாழ்க்கைக்குச் சிறந்த துணையாவாள் என்கின்றது.

       நல்ல குணங்களாவன --- விருந்தினரை உபசரித்தல், துறவியரைப் போற்றுதல், இரந்தோர்க்கு ஈதல் முதலியன.

       நல்ல செயல்களாவன --- அறுசுவை உண்டிகளைச் சுவையாகச் சமைத்தலும், வீட்டைப் பாதுகாத்தல், வைட்டில் உள்ள பொருள்களைப் பாதுகாத்தல், அக்கம் பக்கத்தாரொடு நட்பாய் இருத்தல் முதலியன. குடும்ப வருவாய் அறிந்து, அதற்குத் தக்கபடி செலவு செய்தல்.

திருக்குறளைக் காண்போம் ---

மனைத் தக்க மாண்பு உடையள் ஆகி, தற்கொண்டான் 
 வளத்தக்காள், வாழ்க்கைத் துணை.

இதற்குப் பரிமேலழகர் உரை --- 
    
         மனைத் தக்க மாண்பு உடையளாகித் தன் கொண்டான் வளத்தக்காள் --- மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகளை உடையவளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை உடையாள்

     வாழ்க்கைத் துணை --- அதற்குத் துணை.

      (நற்குணங்களாவன : துறந்தார்ப் பேணலும், விருந்து அயர்தலும், வறியார்மாட்டு அருளுடைமையும் முதலாயின. நற்செய்கைகளாவன: வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், அட்டில் தொழில் வன்மையும், ஒப்புரவு செய்தலும் முதலாயின. வருவாய்க்குத் தக்க வாழ்க்கையாவது: முதலை அறிந்து அதற்கு இயைய அழித்தல். இதனால் இவ்விரண்டு நன்மையும் சிறந்தன என்பது கூறப்பட்டது.)

     இத் திருக்குறளை வைத்து, இளையான்குடி மாற நாயனாரின் வாழ்க்கையைக் காட்டி, கமலை வெள்ளியம்பலவாண முனிவர், தாம் இயற்றிய "முதுமொழிமேல் வைப்பு" என்னும் நூலில் பின்வருமாறு பாடி உள்ளார்....

முளையால் அமுது அமைத்து முக்கணர்பால் அன்பன்
இளையான் குடிமாறன் இல்வாழ் துணைபோல்,
மனைத்தக்க மாண்பு உடையள் ஆகித் தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

 முளை -- நெல்முளை.  முக்கணர் -- சிவபெருமான்.

     இளையான்குடி என்னும் பதியிலே, வேளாளர் மரபிலே, பிறந்தவர் மாறனார். அவருக்கு வேளாண்மையில் ஏராளமான வருவாய் உண்டு. அவர் சிவபத்தி, சிவனடியார் பத்தியில் சிறந்தவர். தமது இல்லத்திற்கு வரும் அடியவர் எல்லாருக்கும் சோறு இடுவதைப் பெரும் தொண்டாகச் செய்து வந்தார்.

     அவர் செய்து வந்த திருத்தொண்டின் பயனாகச் செல்வம் பெருகியது. அளகாபுரிக்கு அரசனாகிய குபேரனைப் போல வாழலானார்.  செல்வம் வந்த காலத்து மட்டுமன்றி, வறுமை உற்ற காலத்தும் திருத்தொண்டினை மனம் தளராமல் செய்யும் உறுதி உடையவர் இளையான்குடி மாற நாயனார் என்பதை உலகறியச் செய்ய, சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார். அவர்தம் செல்வ நிலை மாறில, வறுமை வந்து எய்தியது. அப்போதும் அவர் தனது நிலையில் மாறினாரில்லை. தமது பொருளை எல்லாம் விற்றுத் திருத்தொண்டு செய்து வந்தார். பின்னர், கடன் வாங்கியும் செய்து வந்தார்.

     இனி கடன் கொடுப்பார் யாரும் இல்லை என்ற நிலை வந்தபோது, உணவின்றித் தனித்து இருந்தார். அவ்வாறு இருந்த நாளில், ஒரு நாள் அடை மழை பொழிந்தது. அந்த இரவில், சிவபெருமான் அடியவர் வேடம் தாங்கி, கதவைத் தட்டினார். நாயனார் கதவைத் திறந்து, அழைத்துச் சென்று, திருமேனியைத் துடைத்து, இருக்கும்படி செய்தார்.

     அடியவருக்கு அமுது படைக்க விரும்பினார். மனைவியைப் பார்த்தார். அம்மையார் செய்வது அறியாது திகைத்தார். "வீட்டில் ஒரு பொருளும் இல்லை. அயலாரும் இனிக் கடன் கொடுக்கமாட்டார்கள். பொழுதும் போயிற்று. போகும் இடம் வேறு இல்லை. என் செய்வேன்" என்று வருந்தி, பின்பு "இன்று வயலிலே விதைத்த நெல்லை வாரிக் கொண்டு வந்தால், முயன்று அமுதாக்கலாம்" என்றார்.

     துணைவியார் இவ்வாறு கூறக்கேட்டதும், பெரும் செல்வம் பெற்றது போல் நாயனார் அளவில்லா மகிழ்ச்சி கொண்டார். மழை பொழியும் நள்ளிரவில் ஒரு கூடையைத் தலையில் கவிழ்த்துக் கொண்டு, கும் இருட்டில், கால்களால் தடவித் தடவிச் சென்று, தமது வயலிலே மழை நீரில் மிதந்துகொண்டு இருந்த நெல்முளைகளை வாரி, கூடையில் நிரப்பிச் சுமந்து வந்தார். நாயனார் வரவை ஆவலோடு எதிர்பார்த்து இருந்த அம்மையார், நெல்முளைகளை வாங்கிக் கழுவி, நாயனாரைப் பார்த்து, "விறகு இல்லையே" என்றார். நாயனார் கிலமாய்க் கிடந்த தமது வீட்டின் கழிகளை அறுத்துத் தள்ளினார்.

     மனைவியார், அவைகளை அடுப்பில் வைத்து, நெல்முளைகளை வறுத்து, அரிசி ஆக்கி, அதைக் கொண்டு சோறும் ஆக்கி, "கறியமுதுக்கு என் செய்வோம்" என்றார். தொண்டனார், புறக்கடையில் சென்று, புன்செய்க் குறும் பயிர்களைத் தடவிப் பிடுங்கிக் கொணர்ந்தார். அம்மையார் அதைக் கொண்டு கறியமுது ஆக்கினார்.

     நாயனார், அடியவரைத் "திருவமுது செய்ய எழுந்தருள்க" என்று அழுப்பினார். அடியவர் சோதியாய் எழுந்தார். இருவரும் திகைக்க, இறைவன் உமையம்மையாரோடு விடைமேல் காட்சி தந்து ஆட்கொண்டார். 

     துறந்தார்ப் பேணுதல் என்னும் நற்குணம் அம்மையாரிடத்தே அமைந்து இருந்தது. 

     சிவபெருமான் விருந்தினராக இராக் காலத்தில் வந்தபொழுது, இளையான்குடி மாறனார் கொணர்ந்து கொடுத்த, அன்று பகலில் வயலில் வித்திய நெல் முளைகளைக் கொண்டு அவர் மனைவியார் திருவமுது அமைத்தமையின் அவ் அம்மையாரை, 'கொண்டான் வளத்தக்காள்' எனல் தகும். 

வருவாய்க்குத் தக்க வழக்குஅறிந்து, சுற்றம்
வெருவாமை வீழ்ந்து,விருந்து ஓம்பித் - திருவாக்குந்
தெய்வத்தையும் எஞ்ஞான்றுந் தேற்ற வழிபாடு
செய்வதே பெண்டிர் சிறப்பு.           ---  சிறுபஞ்சமூலம்.

இதன் பதவுரை ---

     வருவாய்க்குத் தக்க வழக்கு அறிந்து --- தம் கணவரது வரும்படிக்குத் தகுதியாகிய வழங்குதலை (செலவை)த் தெரிந்து (செய்து),

      சுற்றம் பந்துக்கள், வெருவாமை வீழ்ந்து --- சுற்றத்தினரும், உறவினரும் (தங்கள் கோபச் சொல்லால்) பயந்தொதுங்காமல் அவர்களை விரும்பி,

      விருந்து ஓம்பி --- விருந்தினரைப் பேணி,

      திரு ஆக்கும் தெய்வத்தையும் --- செல்வத்தை மென்மேலும் உயரச்செய்கின்ற தெய்வத்தையும்,

      எஞ்ஞான்றும் தேற்ற வழிபாடு செய்வதே பெண்டிர் சிறப்பு --- எப்பொழுதும் தெளிவாகிய வணங்குதலைச் செய்வதே, - மாதர்க்குரிய சிறப்புகளாம்.

      தமக்குள்ள பகுதியின் அளவு அறிந்து, அதற்குத்தக்க செலவினை அறிந்து, சுற்றத்தை வெருவாமைத் தழுவி, விருந்து புரந்து, திருவினை ஆக்கும் தெய்வத்தை வழிபாடு செய்க. இவ்வைந்து தொழிலும் பெண்டிர்க்குச் சிறப்பாவன.

      இல்வாழ்க்கைக்குத் துணைவியர்க்குச் சிறப்புக்களாவன கணவருடைய வரவின் அளவைத் தெரிதலும், அதற்குத்தக்க செலவு செய்தலும் சுற்றம் தழுவுதலும், விருந்தோம்பலும், தெய்வத்தை வழிபடுதலும் என்பனவாம்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...