011. செய்ந்நன்றி அறிதல் - 06. மறவற்க மாசற்றார்





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

பதினோராம் அதிகாரம் - செய்ந்நன்றி அறிதல்

     இந்த அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறள்,  "துன்பம் நேர்ந்த காலத்தில் தனக்கு உதவியவரின் நட்பை விட்டுவிடாது இருக்கவேண்டும்" என்றும், "அறிவு ஒழுக்கங்களில் குற்றம் அற்றவரின் நட்பை அல்லது உறவை மறந்துவிடாது இருக்கவேண்டும்" என்றும் அறிவுறுத்துகின்றது.

     விடாது பற்ற வேண்டியதையும், மறவாது பற்ற வேண்டியதையும் நாயனார் அறிவுறுத்தினார்.

திருக்குறளைக் காண்போம்....
                 
மறவற்க மாசு அற்றார் கேண்மை, துறவற்க
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு. 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு துறவற்க --- துன்பக் காலத்துத் தனக்குப் பற்றுக்கோடாயினாரது நட்பை விடாதொழிக;

     மாசு அற்றார் கேண்மை மறவற்க --- அறிவொழுக்கங்களில் குற்றமற்றாரது கேண்மையை மறவா தொழிக.

      (கேண்மை: கேள் ஆம் தன்மை. இம்மைக்கு உறுதி கூறுவார், மறுமைக்கு உறுதியும் உடன் கூறினார்.)

     துப்பு ஆதல் - உறுதியாய் நின்று உதவி புரிதல்.

     பின் வரும் பாடல்கள், இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்.....

துப்பு உடையாரை அடைவது எல்லாம்
      சோர்விடத்துத் துணை ஆவர் என்றே,
ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன்,
      ஆனைக்கு நீ அருள் செய்தமையால்,
எய்ப்பு என்னை வந்து நலியும்போது, அங்கு
      ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்,
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
      அரங்கத்து அரவணைப் பள்ளியானே.
                                ---  பெரியாழ்வார் திருமொழி.
இதன் பொருள் ---

     இந்திரியங்களும் மனமும் ஆகிய எல்லாம் தளர்ச்சியை அடைகின்ற காலத்திலே துணையாக இருப்பார்கள் என்று அல்லவோ, வல்லமை உடையவர்களைச் சேர்ந்து இருப்பது. நான் உன்னிடம் சரணாக அடையத் தகுதி இல்லாது இருந்தாலும், நீ அன்று கஜேந்திர ஆழ்வானுக்குக் கருணை செய்து காப்பாற்றியதால், உன்னை வந்து அடைந்தேன். என்ன மரண காலத்தில் தோன்றும் இளைப்பு வருத்தும் போது, அச்சமயத்தில் நான் உன்னைச் சிறிதும் நினைப்பதற்கும் ஆற்றல் இல்லாதவன். ஆகவே, திருவரங்கத்தில் ஆதிசேடன் ஆகிய படுக்கையில் பள்ளி கொண்டு இருப்பவனே! அந்த வேளையில் சொல்வதற்குப் பதிலாக இப்போதே சொல்லி வைத்தேன்.

     உயிர்களுக்குத் துன்பத்தில் துப்பாக இருப்பவன் இறைவன். எனவே, அவனிடம் இவ்வாறு விண்ணப்பித்தார் பெரியாழ்வார்.


அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்:
பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்;
வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்
பெறுமின் பெரியார்வாய்ச் சொல்.   ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     அறிமின் அறநெறி --- கடமை ஒழுங்கை அறிந்து ஒழுகுங்கள்; அஞ்சுமின் கூற்றம் --- நமன் வருதற்கு அஞ்சி ஒழுகுங்கள்; பொறுமின் பிறர் கடுஞ்சொல் --- பிறர் கூறும் வன்சொற்களைப் பொறுத்துக் கொள்ளுங்கள்; போற்றுமின் வஞ்சம் --- வஞ்சித்து ஒழுகுதலைக் காத்துக் கொள்ளுங்கள்; வெறுமின் வினை தீயார் கேண்மை --- செய்கை தீயவரது நட்பை வெறுத்து ஒதுக்குங்கள்; எஞ்ஞான்றும் பெறுமின் பெரியார்வாய்ச் சொல் --- எக்காலத்திலும் பெரியார் வாயிலிருந்து வரும் நன்மொழிகளை ஏற்று ஒழுகுங்கள்.

         நல்லாரினத்தைச் சார்ந்து பழகி அதனால் அறநெறி அறிதல் முதலிய நலன்களைப் பெறுதல் வேண்டும்.


ஒண்கதிர் வான்மதியும் சேர்தலால் ஓங்கிய
அங்கண் விசும்பின் முயலும் தொழுப்படூஉம்;
குன்றிய சீர்மைய ராயினும் சீர்பெறுவர்,
குன்றன்னார் கேண்மை கொளின்.   ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     ஒள் கதிர் வாள்மதியம் சேர்தலால் ஓங்கிய அங்கண் விசும்பின் முயலும் தொழப்படும் --- இனிய கதிர்களையுடைய ஒள்ளிய திங்களைச் சேர்தலால் அழகிய இடம் அகன்ற வானத்தின்கண் முயலும் மாந்தரால் வணங்கப்படும்;  குன்றிய சீர்மையர் ஆயினும் சீர்பெறுவர் குன்றன்னார் கேண்மை கொளின் --- ஆதலால், குறைந்த நிலைமை உடையராயினும், மக்கள் மலைபோன்ற பெருமையுடைய நல்லாரது நேயத்தை அடைந்தால் நிறைந்த சிறப்பினைப் பெறுவர்.

         மக்கள், நல்லார் நேயத்தராய் இருப்பின் சிறப்புறுவர்.

     வானில் தோன்றும் சந்திரனில் முயல்கறை இருக்கும். பிறையைத் தொழும்போது, முயற்கறையையும் சேர்த்தே தொழுகின்றோம்.
        

இம்மை அடக்கத்தைச் செய்து புகழாக்கி
உம்மை உயர்கதிக் குய்த்தலால்-மெய்ம்மையே
பட்டாங் கறமுரைக்கும் பண்புடை யாளரே
நாட்டா ரெனப்படு வார்.    ---  அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     இம்மை --- இப் பிறப்பில், அடக்கத்தைச் செய்து --- மன மொழி மெய்களால் அடங்குமாறு செய்து, புகழ் ஆக்கி ---புகழினைப் பெருக்கி, உம்மை --- மறுபிறப்பில், உயர் கதிக்கு உய்த்தலால் --- வீடுபேற்றை அடைவித்தலால் பட்டாங்கு ---இயல்பாகவே, மெய்ம்மை அறம் உரைக்கும் --- அத்தகைய உண்மை அறத்தினை உரைக்கும், பண்புடையாளரே ---குணமுடையவர்களே, நட்டார் எனப்படுவார் --- நட்பினர் என்று கூறப்படுதற்கு உரியராவார்.


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...