திருக்குறள்
அறத்துப்பால்
இல்லறவியல்
ஐந்தாம் அதிகாரம் -
இல்வாழ்க்கை
இந்த அதிகாரத்தின் ஏழாம் திருக்குறள், இல்வாழ்க்கையில் நின்று, அந்த
இல்வாழ்க்கைக்கு உரிய இயல்போடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுபவன், ஐம்புலன்களை விட
முயற்சி செய்வாருள் எல்லாம் மேம்பட்டவன் ஆவான் என்கின்றது.
முயல்வார் என்றது, முற்றத் துறந்த
முனிவர்களைக் குறிக்காது. ஏனெனில், அவர்கள் ஐம்புலனையும் விட்டவர்கள். வானப்
பிரஸ்தம் என்னும் நிலையிலே உள்ளோரைக் குறிக்கும். வானப்பிரஸ்தம் என்பது பல
வகைப்பட்டு இருப்பதால், முயல்வார்களுள் எல்லாம் என்றார்.
முயல்வார் குறித்து, "திருவிடைமருதூர்
மும்மணிக் கோவை"யில் பின் வருமாறு குறிப்பிடப்பட்டள்ளது காண்க..
"மலர்தலை
உலகத்துப் பலபல மாக்கள்
மக்களை
மனைவியை ஒக்கலை ஒரீஇ
மனையும்
பிறவும் துறந்து, நினைவு அரும்
காடும்
மலையும் புக்கு, கோடையில்
கைம்மேல்
நிமிர்த்து, கால் ஒன்று முடக்கி,
ஐவகை
நெருப்பின் அழுவத்து நின்று,
மாரி
நாளிலும், வார்பனி நாளிலும்,
நீரிடை
மூழ்கி நெடிது கிடந்தும்,
சடையைப்
புனைந்தும், தலையைப் பறித்தும்,
உடையைத்
துறந்தும், உண்ணாது உழன்றும்,
காயும்
கிழங்கும் காற்று உதிர் சருகும்
வாயுவும்
நீரும் வந்தன அருந்தியும்,
களரிலும்
கல்லிலும் கண்படை கொண்டும்,
தளர்வு
உறும் யாக்கையைத் தளர்வித்து,
ஆங்கு
அவர்
அம்மை
முத்தி அடைவதற்காகத்
தம்மைத்
தாமே சாலவும் ஒறுப்பர்..."
அவ்வாறு
முயன்றும், அவர் அடைய
வேண்டிய முத்தியை அடைந்தாரா என்பது உறுதியாக வில்லை. ஆனால், இல்வாழ்க்கையில்
இருந்து கொண்டே,
"ஈங்கிவை
செய்யாது, யாங்கள் எல்லாம்
பழுது
இன்று உயர்ந்த எழுநிலை மாடத்தும்,
செழுந்தாது
உதிர்ந்த நந்தன வனத்தும்,
தென்றல்
இயங்கும் முன்றில் அகத்தும்
தண்டாச்
சித்திர மண்டப மருங்கிலும்,
பூவிரி
தரங்க வாரிக் கரையிலும்,
மயிற்பெடை
ஆலக் குயிற்றிய குன்றிலும்,........
..............................
அஞ்சொல்
மடந்தையர் ஆகம் தோய்ந்தும்
சின்னம்
பரப்பிய பொன்னின் கலத்தில்
அறுசுவை
அடிசில் வறிது இனிது அருந்தாது,
ஆடினர்க்க்
என்றும், பாடினர்க்கு என்றும்,
வாடினர்க்கு
என்றும் வரையாது கொடுத்தும்,
பூசுவன
பூசியும், புனைவன புனைந்தும்,
தூசின்
நல்லன தொடையில் சேர்த்தியும்,
ஐந்து
புலன்களும் ஆர ஆர்ந்தும்,
மைந்தரும்
ஒக்கலும் மனமகிழ்ந்து ஓங்கி,
இவ்வகை
இருந்தோம், ஆயினும் அவ்வகை
மந்திர
எழுத்து ஐந்தும் வாய் இடை மறவாது
சிந்தை
நின்வழி செலுத்தலின் அந்த
முத்தியும்
இழந்திலம் முதல்வ!"
``யாங்கள்
இவ்வகை இருந்தேமாயினும், அந்த முத்தியும் இழந்திலம்`` என்றதனால், `தம்மைத் தாமே ஒறுப்பவர் அவ்வாறு
ஒறுப்பினும் அந்த முத்தியைப் பெறுகிலர்` என்பது
பெறப்பட்டது.
இனி, திருக்குறளைக் காண்போம் ...
இயல்பினான்
இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள்
எல்லாம் தலை.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
இல் வாழ்க்கை
இயல்பினான் வாழ்பவன் என்பான் --- இல்வாழ்க்கைக்கண் நின்று அதற்கு
உரிய இயல்போடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுவான்;
முயல்வாருள் எல்லாம் தலை --- புலன்களை
விட முயல்வார் எல்லாருள்ளும் மிக்கவன்.
(முற்றத் துறந்தவர் விட்டமையின், 'முயல்வார்' என்றது மூன்றாம் நிலையில் நின்றாரை.
அந்நிலைதான் பல வகைப்படுதலின், எல்லாருள்ளும் எனவும், முயலாது வைத்துப் பயன் எய்துதலின், 'தலை' எனவும் கூறினார்.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சோமேசர் முதுமொழி வெண்பா என்னும் நூலில், மாதவச் சிவஞான
யோகிகள்,
பின்வரும்
பாடலைப் பாடி உள்ளார்.
இல்வாழ் தருமன் இயல் சந்திர சேனன்
தொல் வார்த்தை கீழ்ப்படுத்தான், சோமேசா! - நல்ல
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
இதன்பொருள்---
சோமேசா!
இல்வாழ் தருமன் ---
மனைவியோடு கூடி இல்லற வாழ்க்கை நடத்திய தருமன் என்பவன், இயல் சந்திரசேனன் --- துறவற இயலை
மோற்கொண்ட சந்திரசேனனுடைய, தொல் வார்த்தை ---
பழமையாகிய பெருமை பொருந்திய சொல்லை,
கீழ்ப்படுத்தான்
--- தன் சொல்லுக்குத் தாழ்வாகும்படி செய்தான்,
ஆகலான்
இல்வாழ்க்கை --- இல்லற வாழ்க்கையின்கண்
நிலைபெற்று, நல்ல, இயல்பினான்
வாழ்பவன் என்பான் --- அவ் வாழ்க்கைக்குரிய நல்ல இயல்போடு கூடி வாழ்கின்றவன் என்று
சொல்லப்படுபவன் முயல்வாருள் எல்லாம் தலை --- ஐம்புலன்களையும் பொறிகளின் வழியே
செல்லாமல் தடுத்து முயற்சி செய்வார் எல்லாருள்ளும் சிறப்பு மிக்கவன் ஆவான்.
"தலைமை" என்பது
கடைக்குறைந்து, "தலை" என
நின்றது. இதற்குப் பொருள் உயர்வு. இங்கே இது பண்பாகு பெயராய் நின்றது என்பர்
இராமானுச கவிராயர்.
இல்வாழ்க்கைக்குரிய
பண்பாவது விருந்தினரைப் பேணி, அருந்தவரை ஆதரித்து
அறம் புரிந்து நிற்கும் தன்மை.
ஆடவ தேசத்தில் மாலிய
நகரில் சுபுத்தன் விபுலன் என்னும் இரண்டு அந்தணர்கள் வாழ்ந்தார்கள். அவர்களில்
சுபுத்தனுக்குத் தருமன் என்னும் ஒரு மகனும், விபுலனுக்குச் சந்திரசேனன், மிருதுசந்திரன் என்னும் இரு மகன்களும்
உண்டு. இவர்களுள், தருமன் சந்திரசேனன்
ஆகிய இருவரும் வித்தியானந்தன் என்னும் அருந்தவனை அடைந்தார்கள். அவன் இல்லறத்தின்
இழிவையும், துறவறத்தின்
உயர்வையும் எடுத்துக் கூறச் செவியேற்று, விடைபெற்று
வீடு புகுந்தார்கள். சந்திரசேனன் தன் தந்தையிடம் தான் துறக்க வேண்டினான். மற்றொரு
மகன் இருத்தலின், அவனும் அதற்கு
இசைதலின், சந்திரசேனன் திரிதண்ட
சந்நியாசியானான். அது கிடக்க, தருமன் தன்
தந்தையிடம் தான் துறக்க நின்றதை அறிவித்தான். சுபுத்தன் தன் கால்வழிக்கு வேறு
பிள்ளையின்மையால், அது கூடாதெனப் பலபடி
கூறியும் தருமன் அவன் சொற்களைச் செவியேற்றிலன், துறக்க நின்றான். தாய் தந்தையரும்
தமர்களும் அழுது வருந்தினார்கள்.
அப்போது அங்கு எழுந்தருளிய பிருகு முனிவர், தருமனுக்குப் பல ஏதுக்கள் காட்டித்
துறவாது தடுத்து, மணம் புரிவித்துப்
பஞ்சாட்சர உபதேசம் செய்து போனார். தருமனும் குருமொழி வழி நின்றான். சிலகாலம்
சென்றபின் துறந்து சென்ற சந்திரசேனன் அங்கு வரக்கண்டு தருமன் அவனோடு அளவளாவினான். அப்போது
சந்திரசேனன் தான் பெற்ற பேற்றைப் பெரிதாகக் கூறித் தருமனை இழித்துப் பேசி, "இந்திரனையும் இங்குத்
தருகுவன்" என்று இறுமாந்து நிற்கவே, தருமன், "அது காண்பன்" என, உடனை அவன் இந்திரனை அழைத்தான். இந்திரன்
வந்து தன்னைப் பணிந்து நின்ற சந்திரசேனனுக்கு ஒன்றும் உரையாது அப்போதே
சென்றான். சென்றபின், தருமனும் அவ் இந்திரன் அங்கு வருமாறு
நினைத்தான். நினைத்த அளவில் இந்திரன் அங்கு வந்து அவனை வணங்கிப் பலவாறு பாராட்டி, விடைபெற்றுச் சென்றான். இவ்
வேறுபாட்டைக் கண்ட சந்திரசேனன் அதிசயமடைந்து நிற்கையில் தருமன், "யான் பிரமனையும்
அழைப்பன், காண்டி" என்று
வரவழைப்ப, அது செய்யமுடியாத
சந்திரசேனன் ஊக்கமிழந்து இரந்து அவனிடம் பஞ்சாட்சர உபதேசம் பெற்றான். இருவரும்
சிவகதி அடைந்தனர். இது உபதேச காண்டத்து உள்ளது.
அடுத்து, பிறைசை சாந்தக் கவிராயர், தாம் இயற்றிய நீதி
சூடாமணி என்னும் இரங்கேச வெண்பா என்னும் நூலில், இத் திருக்குறளுக்கு
விளக்கமாகப் பின்வரும் பாடல் ஒன்றைப் பாடி உள்ளார்.
பத்துடன்
நான்கு இல்லம் பரகதிகொண்டு ஏகினான்
இத்தலமேல்
ஆள்வான், இரங்கேசா! - நித்தம்
இயல்பினான்
இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள்
எல்லாந் தலை.
இப் பாடலின் பதவுரை ---
இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே,
இத்தல மேல் ஆள்வான் --- இந்தப் பூவுலகத்து
மேல் உள்ள மோட்சவீட்டை ஆள்பவராகிய கஞ்சனூர் ஆழ்வார், பத்துடன் நான்கு இல்லம் --- தன்
வீட்டுக்கு இருபுறங்களிலும் உள்ள பதினான்கு வீட்டில் உள்ளவர்களையும், பரகதி கொண்டு ஏகினான் --- பரமபதத்திற்கு
அழைத்துக் கொண்டு போனார்,
(ஆகையால்
இது) நித்தம் --- தினமும். இயல்பினான் --- இல்வாழ்க்கைக்கு ஏற்ற முறைமைப்படி, இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் --- இல்லற
தருமத்தை நடாத்துபவன் என்பவன், முயல்வாருள் எல்லாம்
தலை --- வனத்தில் வருந்தித் தவம் செய்வர்களுக் கெல்லாம் முதன்மையானவன் (என்பதை
விளக்குகின்றது).
"இல்லறம் அல்லது
நல்லறம் அன்று" என்னும் கொன்றை வேந்தன் வாக்கியத்தை இங்கு வைத்து எண்ணுக.
பரமபாகவதராகிய
கஞ்சனூர் ஆழ்வார் இல்லற தருமத்தை ஒழுங்குபெற நடத்தினார். ஆகையால், "நல்லார் ஒருவர்
உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை" என்றபடி, அவர் பொருட்டு அவரோடும் வாழ்ந்த
பதினான்கு வீட்டுக்காரர்களுக்கும் பரமபதம் கிடைத்தது.
தம்மைச் சேர்ந்தவர்களுக்கும் வீடுபேற்றை
வழங்கும் ஆற்றல் முற்றத் துறந்த முனிவர்க்கும் இல்லை. ஆதலால், இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன்
என்பான் முயல்வாருள் எல்லாம் தலை என்றார்.
No comments:
Post a Comment