திருக்குறள்
அறத்துப்பால்
இல்லற இயல்
எட்டாம் அதிகாரம் - அன்புடைமை
இந்த அதிகாரத்தில் வரும்
மூன்றாவது திருக்குறளில், "உடலோடு பொருந்திய உயிரின் முறைமை போன்று,
அன்போடு பொருந்திய வாழ்வே,
வாழ்வின் முறைமை ஆகும்" என்று காட்டினார் திருவள்ளுவ
நாயனார்.
உயிரானது உடம்போடு பொருந்தினால்
அன்றி, அன்பு செய்யல் ஆகாது.
எனவே, உயிரானது உடம்போடு பொருந்தினது போல,
உயிரானது அன்போடு பொருந்தி வாழவேண்டும் என்று
அறிவுறுத்தப்பட்டது.
இனி, திருக்குறளைக்
காண்போம்....
அன்போடு
இயைந்த வழக்கு என்ப ஆர் உயிர்க்கு
என்போடு
இயைந்த தொடர்பு.
இதற்குப்
பரிமேலழகர் உரை....
ஆர் உயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு --- பெறுதற்கு அரிய மக்கள் உயிர்க்கு
உடம்போடு உண்டாகிய தொடர்ச்சியினை;
அன்போடு இயைந்த வழக்கு என்ப ---
அன்போடு பொருந்துதற்கு வந்த நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்.
திருக்குறளின் பெருமையை உலகறியச் செய்ய வந்த
நூல்களுள் ஒன்று, சிதம்பரம்
ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய "முருகேசர் முதுநெறி
வெண்பா" என்னும் நூல் ஆகும். அந்நூலில் இத் திருக்குறளுக்கு விளக்கமாக
அமைந்த பாடல்....
கின்னரரோ
டேமேதா கேதரைமீட் டார்வசவர்
முன்அரன்பால்
சென்று, முருகேசா! - மன்உலகில்
அன்போடு
இயைந்த வழக்கு என்ப, ஆருயிர்க்கு
என்போடு
இயைந்த தொடர்பு.
இப்பாடலின்
பதவுரை ......
முருகேசா --- முருகப் பெருமானே, வசவர் முன் அரன்பால் சென்று ---
வசவதேவர் முன்னாளிலே சிவபெருமானிடம் போய், கின்னரரோடு மேதாகேதரை --- கின்னரையர்
மேதாகேதையர் என்னும் சிவசரணர்கள் இருவரையும், மீட்டார் --- மீட்டுக்கொண்டு வந்தார். ஆகவே, மன்உலகில் --- நிலைபெற்ற இந்த உலகத்திலே, ஆர் உயிர்க்கு --- அருமையான உயிருக்கு, என்போடு இயைந்த தொடர்பு --- உடலோடு
பொருந்தியிருக்கின்ற தொடர்பானது,
அன்போடு
இயைந்த வழக்கு என்ப --- அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்.
வசவதேவர் முன்னாளிலே சிவபெருமானிடம்
போய்க் கின்னரர், மேதாகேதர் என்பவர்களை
மீட்டுக்கொண்டு வந்தார். உயிருக்கு உடலோடு பொருந்தியிருக்கின்ற தொடர்பானது அன்போடு
பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர் என்பதாம். என்பு உடலை
உணர்த்துதலால் ஆகுபெயர்.
முன்னாளிலே
கலியாணபுரியிலே வசவதேவர் என்னும் வீரசைவர் வாழ்ந்திருந்தார். அவர்
சிவனடியாரிடத்திலே மிகுந்த அன்புடையவராக விளங்கினார். அவ் வசவதேவருடைய
அன்புடைமையைச் சிவபெருமான் உலகத்தார்கட்கு உணர்த்த எண்ணினார். அவ் வசவதேவர்
மிகுந்த அன்பு வைத்திருந்த கின்னரையர் மேதாகேதையர் என்பவர்களைத் தம்முடைய
பதவியாகிய திருக்கயிலையில் சேர்த்தருளினார். வசவதேவர் அவர்களிடத்தில் கொண்டிருந்த
மிகுந்த அன்புடைமையினால் அவர்களுடைய பிரிவுக்கு வருந்தினார். எப்படியும் அவர்களை
மீளவும் கொண்டு வந்து தம்மோடு வைத்துக்கொள்ள வேண்டுமென்று எண்ணினார்.
திருக்கயிலைக்குச் சென்று இருவரையும் மீட்டுக்கொண்டு வந்தார். இச்செய்கையைக்
கண்டோர் வசவதேவர் அவ் இருவர் மீதும் கொண்டிருந்த அன்பினைப் பெரிதும்
பாராட்டலாயினர்.
இத்
திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்த பாடல்கள் சில...
ஊர்திரை
தொகுத்த உயர்மணல் புதைப்ப
ஆய்மலர்ப்
புன்னை அணிநிழல் கீழால்
அன்பு
உடை ஆர்உயிர் அரசற்கு அருளிய
என்பு
உடை யாக்கை இருந்தது காணாய்... --- மணிமேகலை.
இதன்
பதவுரை ---
ஊர் திரை தொகுத்த உயர் மணல் புதைப்ப ---
பரந்த அலைகளால் திரட்டப்பட்ட உயர்ந்த மணல் மறைப்ப, ஆய்மலர்ப் புன்னை அணிநிழற் கீழால் ---
அழகிய பூக்களையுடைய புன்னை மரத்தின் அழகிய நிழலின் கீழிடமத்தே, அன்புடை ஆருயிர் அரசர்க்கு அருளிய
என்புடை யாக்கை இருந்தது காணாய் --- அன்பினையுடைய அரியவுயிரை அரசனாகிய நினக்குக்
கொடுத்த என்பினாலாகிய யாக்கை இருக்கின்றதைப் பாராய்.
என்பு
என்பது, யாக்கை என்பது,
உயிர்என்பது, இவைகள் எல்லாம்
பின்பு
என்ப அல்லவேனும்,
தம்முடை நிலையில் பேரா,
முன்பு
என்ப உளது என்றாலும்
முழுவதும் தெரிந்த ஆற்றல்
அன்பு
என்பது ஒன்றின் தன்மை
அமரரும் அறிந்தது அன்றால். ---
கம்பராமாயணம், மருந்துமலைப்
படலம்.
இதன்
பதவுரை ---
என்பு என்பது, யாக்கை என்பது, உயிர் என்பது, இவைகள எல்லாம்
--- எலும்பு என்பதும் உடல் என்பதும் (அதனோடு இயைந்த) உயிர் என்பதும் ஆகிய இவையெல்லாம்; பின்பு என்ப அல்ல முன்பு
--- (அன்பினை நோக்கப்) பிற்பட்டது என்பது அல்லாமல், (அவ்வன்பு விளங்கித் தோன்றுவதற்கு
ஏதுவாக, அதன்) முன்பே தோன்றி இயைந்து நிற்பனவாகி; என்றும் தம்முடை நிலையின்
பேரா --- எக்காலத்தும் (அன்பு விளங்கித் தோன்றுவதற்கேதுவாக அதன் முன்பே தோன்றுதலாகிய)
தம்முடைய நிலையில் மாறுதலின்றி நிற்கின்றன; என்றும் உளதென்றாலும் --- இப்படிப்பட்ட தொடர்பு (உடலுயிர்
ஆகியன அன்பு தோன்றி விளங்குதற்குக் காரணமாய் முன்தோன்றுவதும், பின்பு, அன்பு அவை மாட்டுத் தோன்றி விளங்குவதுமாகிய
தொடர்பு) என்றும் உள்ளதென்றாலும்; முழுவதும் தெரிந்தவாற்றால்
--- முழுவதுமாக ஆராய்ந்து
பார்த்தால்; அன்பு என்பது ஒன்றின்
தன்மை --- அன்பு என்பதாகிய ஒன்றனுடைய (உடலுயிர் ஆகியவற்றைத் தளிர்ப்பச் செய்தலும், சிதைப்பச் செய்தலுமாகிய) இருவேறுபட்ட தன்மையினை; அமரரும் அறிந்ததன்றே ---
தேவர்களும் அறிந்தவர்களல்லவே?
இப்படாலின் கருத்தை, “அன்போடியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு என்னும் குறள் வழி நின்று காணுதல் வேண்டும்.
பிறவி என்பது உடலும் உயிரும் இணைவது. அறிவற்றதும் மாயாகாரியமும்
ஆகிய உடம்பு என்னும் பருப்பொருளை, அறிவு வடிவானதும், அருவமானதுமான உயிர் இயைந்து
இருப்பது அருளார்ந்த அறிவு வெளியாக இருக்கின்ற இறைவனை அடைந்து அனுபவித்தற்காகும். இதற்குப்
பிறவிதோறும் உடம்போடு கூடி உயிர் அன்பினைப் பெருக்கிக் கொண்டு அருள் நிலைக்கு உயர்தல் வேண்டியிருக்கின்றது. எனவே, அன்பு தோன்றி விளக்கம் பெறுதற்கு உடலோடு
உயிர் இயைதல் தேவையாகின்றது. உடலோடு உயிர் இனணந்த பின்பேதான் அன்பு தோன்றி விளக்கம்
பெறுதல் முடியும். எனவேதான் “என்பு என்பது, யாக்கை என்பது, உயிர் என்பது இவைகள் எல்லாம்
அன்பிற்குப் பின்பு அல்ல முன்பு” என்றார்.
உடலும் உயிரும் சேர்ந்தவழி தோன்றிச் சிறக்கின்ற
அன்பு,
அன்பிற்கு
உரியார் அருள் செய்த போது அவ்வுடலுயிர்கள் இன்புறும் வண்ணம் தளிர்ப்பதும்; அங்ஙனம் இன்றி அவ்வன்பிற்கு
உரியார் பிரிகின்ற காலத்து அவ்வுடலுயிர்கள் சிதைவு பெற்றழிய அவ்வன்பே காரணமாதலும் காணுகின்றோம்.
எனவே அன்பு, தளிர்ப்பச் செய்தலும்
சிதைப்பச் செய்தலுமாகிய இருகூறுகளை உடைய தன்மைகளை உடைத்தாகின்றது.
அன்பு, உடல் உயிர் இணைவிற்குப்
பின்பு அவற்றிடத்து நின்று தோன்றினும் அவை மென்மேலும்
இன்புற்றுச் சிறக்கவோ, அன்றி அவை இரண்டும் தனிப்பட்டுப்
பிரியவோ அதுவே காரணம் ஆகின்றது. நுணுகி ஆராய்ந்து பார்த்தால் இவ்வுண்மை புலப்படும். இதனைத் தேவர்களும் உணரார்கள் என்கின்றார்
கம்பநாட்டாழ்வார்.
No comments:
Post a Comment