007. மக்கள் பேறு - 04. அமிழ்தினும் ஆற்ற





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

ஏழாம் அதிகாரம் - மக்கள் பேறு

     இந்த அதிகாரத்தில் வரும் நான்காம் திருக்குறள், "தம்முடைய மக்களின் சிறிய கைகளால் பிசைந்து குழைத்த உணவின் குழைவு, அமிழ்தத்தைக் காட்டிலும் மிகவும் இனியது ஆகும்" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம் ---


அமிழ்தினும் ஆற்ற இனிதே, தம் மக்கள்
சிறு கை அளாவிய கூழ்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

      அமிழ்தினும் ஆற்ற இனிதே --- சுவையான அமிழ்தத்தினும் மிக இனிமையுடைத்து;

     தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் --- தம் மக்களது சிறுகையான் அளாவப்பட்ட சோறு.

இத் திருக்குறளுக்கு ஒப்புமையாக அமைந்த பாடல்கள்....
        
படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெரும் செல்வர் ஆயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
 மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம்வாழு நாளே.  --- புறநானூறு.

இதன் பொருள் ---

    பல செல்வ வளங்களைப் பெற்று இருந்தாலும், பலருடனே கூடி இருந்து உண்ணும் சுற்றம், நட்பு ஆகிய பல செல்வங்கள் இருந்தாலும், தத்தித் தவழ்ந்து, தடுமாறி நடந்து, தனது அழகிய சிறிய கைகளை நீட்டி, உண்கலத்தில் உள்ள உணவைத் தொட்டு எடுத்து, வாயில் போட்டும், கையால் துழாவியும், நெய்யால் ஆன அந்த சோற்றை அள்ளித் தன் உடல் எல்லாம் வாரி இறைத்துக் கொண்டு விளையாடி, பெற்றவர்களை அன்பால் மயங்கச் செய்கின்ற பிள்ளைகளை இல்லாதவர்களுக்குப் பிறவியைப் பெற்ற பயன் இல்லை. அவர்கள் வாழும் நாளும் வீணே.

பொன் உடையரேனும், புகழ் உடையரேனும், மற்று
என் உடையரேனும் உடையரோ? --- இன்அடிசில்
புக்கு அளையும் தாமரைக் கை, பூ நாறும் செய்யவாய்
மக்களை இங்கு இல்லாதவர்.             ---  நளவெண்பா.

இதன் பொருள் ---

     இனிமையான உணவினை எடுத்து அளைக்கின்ற தாமரை போன்ற கைகளையும், மலர் மணக்கும் செவ்விய வாயினையும் உடைய மக்களைப் பெறாதவர், மிக்க பொன்னைப் படைத்து இருந்தாலும், பெரும் புகழைக் கொண்டு இருந்தாலும், வேறு எவற்றையும் கொண்டு இருந்தாலும், அவைகள் எல்லாம் உடைமைகள் ஆகா.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...