012. நடுவு நிலைமை - 02. செப்பம் உடையவன்





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

பன்னிரண்டாம் அதிகாரம் - நடுவு நிலைமை

     இந்த அதிகாரத்தில் வரும் இரண்டாம் திருக்குறள், "நடுவு நிலைமை உடையவனது செல்வமானது, பிறர் செல்வம் போல் அழியாமல், அவனது சந்ததிக்கும் காப்பாக அமையும்" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்....

செப்பம் உடையவன் ஆக்கம், சிதைவு இன்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     செப்பம் உடையவன் ஆக்கம் --- நடுவு நிலைமையை உடையவனது செல்வம்;

     சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து --- பிறர் செல்வம் போல அழிவு இன்றி அவன் வழியிலுள்ளார்க்கும் வலியாதலை உடைத்து.
        
         (விகாரத்தால் தொக்க எச்ச உம்மையான் இறக்கும் துணையும் அவன்றனக்கும் ஏமாப்பு உடைத்து என்பது பெற்றாம். அறத்தோடு வருதலின், அன்னதாயிற்று. தான் இறந்தவழி எஞ்சி நிற்பதாகலின் 'எச்சம்' என்றார்.)

     நடுவி நிலைமை தவறாமையால் செல்வம் அழியாமல் இருக்கும் என்றார் நாயனார். நடுவு நிலைமை தவறுவதால் உண்டாகும் தீமைகள் குறித்து, ஔவைப் பிராட்டியார் பாடி உள்ள பாடல்களைக் காணலாம்.

தண்டாமல் ஈவது தாளாண்மை; - தண்டி
அடுத்தக்கால் ஈவது வண்மை; - அடுத்தடுத்துப்
பின் சென்றால் ஈவது காற்கூலி; - பின்சென்றும்
ஈயான் எச்சம் போல் அறு.           --- ஔவையார்.

இதன் பதவுரை ---

     தண்டாமல் ஈவது தாளாண்மை - ஒரு பொருளை ஒருவன் கேட்பதற்கு முன்னர், தாமே வலிய வழங்குவது சிறந்த ஈகை முயற்சியாகும்

     தண்டி அடுத்தக்கால் ஈவது வண்மை --- கேட்டு வந்து அடைந்தபோது ஒன்றைக் கொடுப்பது வள்ளன்மையாகும்.

     அடுத்தடுத்துப் பின் சென்றால் ஈவது கால் கூலி --- திரும்பத் திரும்பச் சென்று போய்க் கேட்ட பின் தருவது, கால்நடைக்குத் தருகின்ற கூலியாகும்

     பின்சென்றும் ஈயான் எச்சம் போல் அறு --- அவ்வாறு தொடர்ந்து கேட்ட பின்னரும், ஒன்றையும் தராதவனின் சந்ததியானது அற்றுப்போகும் என்பது உண்மையானால், நீயும் (பொன் முடிப்பு) அறுந்து வீழ்வாயாக.

உள்ள வழக்கு இருக்க, ஊரார் பொது இருக்க,
தள்ளி வழக்கு அதனைத் தான் பேசி -- எள்ளளவும்
கைக்கூலி தான் வாங்கும்கால் அறுவான் தன்கிளையும்
எச்சம் அறும் என்றால் அறு.        ---  ஔவையார்.

இதன் பதவுரை ---

     உள்ள வழக்கு இருக்க ஊரார் பொது இருக்க --- உண்மையான வழக்கானது ஒரு புறம் இருக்கவும், ஊரில் உள்ளவர்களின் சபை அதற்கு ஆதரவாக இருக்கவும்

     தள்ளி வழக்கு அதனைத் தான் பேசி --- அந்த வழக்கை நிறைவேறாதபடி, அதனைத் தள்ளிவிடும் முறையிலே பேசி.

     எள் அளவும் கைகூலி தான் வாங்கும் காலறுவான் தன் கிளையும் --- அவ்வாறு செய்ததற்காக, இலஞ்சம் சிறிதாக இருந்தாலும், அதனைப் பெற்றுக் கொள்ளுகின்றவரின் சந்ததியும்,

     எச்சம் அறும் என்றால் அறு --- இல்லாது ஒழியும் என்பது உண்மையானால், பொன் முடிப்பே! நீயும்) அறுந்து வீழ்வாயாக.

வேதாளம் சேருமே, வெள் எருக்குப் பூக்குமே,
பாதாள மூலி படருமே, --- மூதேவி
சென்று இருந்து வாழ்வளே, சேடன் குடிபுகுமே,
மன்று ஓரம் சொன்னார் மனை.     ---  ஔவையார்.
  
இதன் பதவுரை --

     மன்று ஓரம் சொன்னார் மனை --- நீதிமன்றத்திலே நடுவுநிலைமை இன்றிச் சொன்னவருடைய வீட்டிலே, வேதாளம் சேரும் --- பேய்கள் வந்து சேரும்; வெள் எருக்குப் பூக்கும் --- வெள்ளெருக்கு முளைத்து மலரும்; பாதாள மூலி படரும் --- பாதாளமூலி என்னும் கொடி படரும்; மூதேவி சென்று இருந்து வாழ்வள் --- மூதேவியானவள் போய் நிலைபெற்று வாழ்வாள்; சேடன் குடிபுகும் --- பாம்புகள் குடியிருக்கும்.

         நீதிமன்றத்திலே வழக்கோரம் சொன்னவர் குடும்பத்தோடு அழிவதுமன்றி, அவர் குடியிருந்த வீடும் பாழாம் என்றபடி.    ஓரம் - நடுவுநிலையின்மை.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...