011. செய்ந்நன்றி அறிதல் - 09. கொன்றன்ன இன்னா





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

பதினோராம் அதிகாரம் - செய்ந்நன்றி அறிதல்

     இந்த அதிகாரத்தில் வரும் ஒன்பதாம் திருக்குறள், "தமக்கு முன்னொரு நன்மையைச் செய்தவர், பின்னர் கொல்வதைப் போலும், வெறுக்கப்படுகின்ற செயலைச் செய்தாலும், அவர் முன்பு செய்த நன்மை ஒன்றை நினைத்தாலும், பின்னர் செய்த தீமையால் வரும் துன்பம் இல்லாது ஆகும், அந்த தீமை பெரிதாகத் தோன்றாது" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்....

கொன்று அன்ன இன்னா செயினும், அவர் செய்த
ஒன்று நன்று உள்ளக் கெடும்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     கொன்று அன்ன இன்னா செயினும் --- தமக்கு முன் ஒரு நன்மை செய்தவர், பின் கொன்றால் ஒத்த இன்னாதவற்றைச் செய்தாராயினும்;

     அவர் செய்த நன்று ஒன்று உள்ளக் கெடும் --- அவையெல்லாம் அவர் செய்த நன்மை ஒன்றனையும் நினைக்க இல்லையாம்.

       (தினைத்துணை பனைத்துணையாகக் கொள்ளப்படுதலின், அவ்வொன்றுமே அவற்றை எல்லாம் கெடுக்கும் என்பதாம். இதனால் நன்றல்லது அன்றே மறக்கும் திறம் கூறப்பட்டது.)

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்....

மலைநலம் உள்ளும் குறவன்; பயந்த
விளைநிலம் உள்ளும் உழவன்; சிறந்து ஒருவர்
செய்தநன்று உள்ளுவர் சான்றோர் : கயம் தன்னை
வைததை உள்ளி விடும்.             --- நாலடியார்.

இதன் பதவுரை ---

     மலைநலம் உள்ளும் குறவன் --- குறவன் ஒருவன் தனக்கு வளத்தைத் தந்த மலையினது நன்மையை நினைந்து பாராட்டிக் கொண்டிருப்பான்; பயந்த விளைநிலம் உள்ளும் உழவன் --- உழவன் தனக்கு விளையுள் பயந்த விளைநிலங்களின் நன்மையை நினைந்து பாராட்டிக் கொண்டிருப்பான்; சிறந்த ஒருவர் செய்த நன்று உள்ளுவர் சான்றோர் --- அவைபோல, ஒருவர் அருட்குணம் மிகுந்து தமக்குச் செய்த நன்றியை நினைந்து பாராட்டிக் கொண்டிருப்பர் சான்றோர்;  கயம் தன்னை வைததை உள்ளிவிடும் --- ஆனால் தாழ்ந்த அறிவினன், தன்னைப் பிறர் பழித்ததை நினைத்துப் பகைமை கொண்டுவிடுவன், (நலம் பாராட்டான் என்பது.)

     மெலிந்த அறிவினர், பிறர் தீமைகளை நினைத்தலை விலக்கி, நலத்தை நாடி உள்ளும் ஆற்றல் இல்லாதவராவர்.

     குறவர்க்கும் உழவர்க்கும் வாழ்வு மலையினாலும் விளை நிலுத்தினாலும் உண்டாதல் போல, சான்றோரது வாழ்வு பிறர் செய்த நன்றியினை உள்ளுதலையே அடிப்படையாகக் கொண்டு நடைபெறும். கீழோரது வாழ்வு பிறரைப் பகைத்துக் கொள்ளுதலையே அடிப்படையாகக் கொண்டு நடைபெறும்.

     உள்ளுதல் ---  நினைந்து பாராட்டுதல். கயம் - கயமைக் குணம். அது உடையவரைக் கயம் என்றார்.


ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த
பிழை நூறும் சான்றோர் பொறுப்பர், - கயவர்க்கு
எழுநூறு நன்றிசெய்து ஒன்று தீது ஆயின்,
எழுநூறும் தீதாய் விடும்.       ---   நாலடியார்.

இத்ன பதவுரை ---

     ஒரு நன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த பிழை நூறும் சான்றோர் பொறுப்பர் --- தமக்கு ஒரு நன்மை செய்தவர்க்குச் சான்றோர் அவரால் பின்பு தொடர்ந்து உண்டான நூறு குற்றங்களும் பொறுத்து நிற்பர்; கயவர்க்கு எழுநூறு நன்றி செய்து ஒன்று தீதாயின் எழுநூறுந் தீதாய் விடும் --- ஆனால், அறிவில் தாழ்ந்தோர்க்கு ஒருவர் எழுநூறு நன்மைகள் செய்து, பின்பு தவறுதலால் ஒன்று தீமையாக நேர்ந்து விட்டால் அவ் எழுநூறு நன்மைகளும் தீமைகளாய்க் கருதப்பட்டு விடும்.

         கயவர் அறிவு, நன்மைகளில் அழுந்தி நில்லாமல் தீமைகளையே முனைந்து எண்ணி நிற்கும்.


ஒன்று உதவி செய்யினும் அவ்வுதவி மறவாமல்
பின்றை அவர் செய்பிழை பொறுத்திடுவர் பெரியோர்:
நன்றி பலஆக ஒரு நவைபுரிவர் ஏனும்
கன்றிடுவது அன்றி முது கயவர் நினையாரே.  --- வில்லிபாரதம்.

இதன் பதவுரை ---

     ஒன்று உதவி செய்யினும் --- (ஒருத்தர்) ஓர் உதவி செய்தாரேயாயினும், அவு உதவி --- அந்த உபகாரத்தை, மறவாமல் --- மறந்திடாமல், பின்றை --- பிறகு, அவர் --- அந்த உபகாரம் செய்தவர், செய் --- செய்த, பிழை --- பலகுற்றத்தை, பெரியோர் --- சான்றோர்கள்,  பொறுத்திடுவர் --- பொறுத்துக் கொள்வர்; முது கயவர் --- பழமையான கீழ்மக்கள், நன்றி --- (ஒருவர் செய்த) உபகாரம், பல ஆக --- மிகப் பலவாயிருக்க,
(அந்த உபகாரஞ் செய்தவர்), ஒரு நவை புரிவர் ஏனும் --- ஒரு குற்றம் செய்வாரேயானாலும் (அன்னார் செய்த மிகப்பல நன்மைகளையும் மறந்து அவர் செய்த ஒரு தீமைக்காக), கன்றிடுவது அன்றி --- (அவர்மீது) கோபிப்பதேயன்றி, நினையார் ---(அவர்செய்த நன்மையை) எண்ணிச் சாந்தமாக இருக்க மாட்டார்.


     நீங்கள் கயவர் தன்மையை மேற்கொள்ளாமல் பெரியோர் தன்மையை மேற்கொண்டு விராடன் செய்த பல நன்மைகளை எண்ணி என் நெற்றியில் வடுச் செய்த இந்த ஒரு தீமையை மறக்கவேணும் என்றபடி: இந்தச் செய்யுளில் பொதுவாகக் கூறி 'நீங்கள் சினம் மாறுதலே செய்யத்தக்கது' என்ற சிறப்புப் பொருளைப் பெற வைத்தது-

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...