திருக்குறள்
அறத்துப்பால்
இல்லற
இயல்
பன்னிரண்டாம்
அதிகாரம் - நடுவு நிலைமை
இந்த அதிகாரத்தில் வரும் பத்தாம் திருக்குறள், "பிறர் பொருளையும், தம்முடைய பொருள்
போலப் பாதுகாத்துச் செய்தால், அதுவே, வியாபாரம் செய்வாருக்கு, நல்ல வியாபாரம் சிறக்கும்"
என்கின்றது.
இதனால், அறமன்றத்தில் உள்ளோர்க்கும், வாணிகர்க்கும் நடுவுநிலை
பொருந்தி இருக்கவேண்டும் என்றது.
திருக்குறளைக்
காண்போம்...
வாணிகம்
செய்வார்க்கு வாணிகம், பேணிப்
பிறவும்
தம போல் செயின்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
பிறவும் தமபோல் பேணிச் செயின் --- பிறர்
பொருளையும் தம்பொருள் போலப் பேணிச் செய்யின்;
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் ---
வாணிகஞ் செய்வார்க்கு நன்றாய் வாணிகம் ஆம்.
(பிறவும் தமபோல் செய்தலாவது, கொள்வது மிகையும் கொடுப்பது குறையும்
ஆகாமல் ஒப்ப நாடிச் செய்தல். இப்பாட்டு மூன்றனுள், முன்னைய இரண்டும் அவையத்தாரை நோக்கின்; எனையது வாணிகரை நோக்கிற்று, அவ்விருதிறத்தார்க்கும் இவ்வறம் வேறாகச்
சிறந்தமையின்.)
பிறர் பொருளையும் தமது பொருள்
போலப் பேணிச் செய்தால், வாணிகம் செய்வார்க்கு நடுநிலையான நல்ல வாணிகம் ஆகும்.
வாணிகத்தைத் தொழிலாக உடையவர், தமது தொழில் நன்றாக வாய்க்கப்பெற, உலகில் உள்ள பொருள்களைக் கொண்டு நீண்ட நாள் நன்றாக வாழவேண்டுமானால், தாம் பிறர் இடத்துக் கொள்ளும் பொருளுக்குச் சரியாக, குறைவு இல்லாமலும், தீய பொருள் அல்லாமலும், உள்ள பொருளையே கொடுத்தல் வேண்டும்.
அப்படிக்கு அல்லமால், நிரம்பப் பொருளைப் பெற்றுக்கொண்டு, குறைவாகப் பொருளை நிறுத்துத் தருதல் அடாது. நல்ல பொருளைக் காட்டி, தீய பொருளைக் கொடுப்பதும் கூடாது. அவ்வாறு செய்தால், அவரது வாணிகம் மட்டும் அல்லாது, அவருக்கு முன்னிருந்த பொருளும் அழிந்து போகும்.
"நட்பிடை வஞ்சம் செய்து,
நம்பினார்க்கு ஊன்மா றாட்டத்து
உட்படக் கவர்ந்தும், ஏற்றோர்க்கு
இம்மியும் உதவார் ஆயும்,
வட்டியின் மிதப்பக் கூறி
வாங்கியும், சிலர்போல் ஈட்டப்
பட்டதோ, அறத்தாறு ஈட்டு
நம்பொருள் படுமோ என்னா".
எனத் திருவிளையாடல் புராணத்தில், மாமனாக
வந்து வழக்கு உரைத்த படலத்தில் காட்டியுள்ளது உணர்க.
இதன் பதவுரை ---
நட்பு இடை வஞ்சம் செய்தும் --- நண்பர்
மாட்டும் வஞ்சனை புரிந்தும், நம்பினார்க்கு ஊன்
மாறாட்டத்து உட்படக் கவர்ந்தும் --- நம்பிப் பொருளை வைத்தவர்க்கு உயிர் மயங்குமாறு
அப்பொருளைக் கவர்ந்தும், ஏற்றோர்க்கு
இம்மியும் உதவாராயும் --- இரந்தவர்க்கு இம்மியளவுங் கொடாதவராயும், வட்டியில் மிதப்பக் கூறி வாங்கியும் ---
வட்டியில் வரம்பின்றிச் சொல்லி அங்ஙனமே வாங்கியும், சிலர் போல் ஈட்டப்பட்டதோ --- சிலர்
தேடுதல் போலத் தேடப்பட்டதோ? (அன்று); அறத்து ஆறு ஈட்டும் நம் பொருள் படுமோ
என்னா --- அற நெறியால் ஈட்டிய நமது பொருள் அழியுமோ?
நட்பிடை வஞ்சஞ் செய்தல் --- நண்பர் பொருளைக்
கவர்ந்து
கொள்ளுதல்.
நண்பர் ஆயினார் மாட்டும் வஞ்சனை
புரிந்து, அவரது பொருளைக் கவர்தல் கூடாது. நம்பி ஒரு பொருளை வைத்தவர்க்கு, அவரது உயிர் மயங்குமாறு அப்பொருளைக் கவர்தல் கூடாது. தம்மிடத்தில் வந்து
இரந்தவர்க்கு இம்மி அளவும் கொடாதவராயும் இருத்தல் கூடாது. வட்டியில் வரம்பின்றிச்
சொல்லி வாங்குதல் கூடாது. இவ்வாறு கூடாதவற்றைத் தள்ளி அறவழியில் ஈட்டிய பொருளானது
அழியாது.
"கொடுமேழி நசை உழவர்
நெடுநுகத்துப் பகல்போல
நடுவுநின்ற நன்னெஞ்சினோர்
வடு அஞ்சி, வாய்மொழிந்து,
தமவும் பிறவும் ஒப்ப நாடி,
கொள்வதூஉம் மிகைகொளாது,
கொடுப்பதூஉம் குறைகொடாது,
பல்பண்டம் பகர்ந்து வீசும்" --- பட்டினப்பாலை.
வாணிகம் கொள்வினையையும்
விற்பனையையும் ஒப்பக் கருதுவதனாலும், பொய்க்கும் கொள்ளைக்கும் இடந்தராமை என்பது, மொத்த வணிகர் சில்லறை வணிகர் கொள்வோர் ஆகிய முத்திறத்தார்க்கும் தீதும்
கேடும் இல்லா நல்வாணிகம் ஆகும்.
அவ்வாறு இல்லாமல், பொருள் மீது கொண்ட பற்றுக் காரணமாக, அதைக் கவர்தல் வேண்டி, தமது உடம்பை வாணிகம் செய்பவர்கள் விலைமாதர்கள்
போன்றவர்கள். தம்மை நாடி வருபவர்களின் பொருளைப் பறிப்பதையே தொழிலாக உடையவர்கள்.
நாடி வந்தவரும் அழிந்து, தாமும் பின்னாளில் அழிந்து போவர்.
No comments:
Post a Comment