திருக்குறள்
அறத்துப்பால்
இல்லற
இயல்
அதிகாரம்
14 - ஒழுக்கம் உடைமை
இந்த அதிகாரம், மனம், மொழி, மெய் முதலியவற்றால்
அடங்கியவர் கொண்டு ஒழுகும் நெறியே ஒழுக்கம் உடைமை ஆயிற்று என்கின்றது. மனம், மொழி, மெய்களால்
அடங்குவது அவரவர் நிலைக்கு ஏற்ப அமையும்.
இந்த அதிகாரத்தில் வரும் முதல் திருக்குறள், "ஒழுக்கமானது சிறப்பினை
ஒருவற்குத் தருவது; எனவே, அந்த ஒழுக்கத்தை உயிரினும் மேலானதாகப்
பாதுக்காக்கப்பட வேண்டும்" என்கின்றது.
திருக்குறளைக்
காண்போம்.....
ஒழுக்கம்
விழுப்பம் தரலான், ஒழுக்கம்
உயிரினும்
ஓம்பப் படும்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
ஒழுக்கம் விழுப்பம் தரலான் - ஒழுக்கம்
எல்லார்க்கும் சிறப்பினைத் தருதலான்,
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் -
அவ்வொழுக்கம் உயிரினும் பாதுகாக்கப்படும்.
(உயர்ந்தார்க்கும்
இழிந்தார்க்கும் ஒப்ப விழுப்பம் தருதலின், பொதுப்படக் கூறினார். சுட்டு
வருவிக்கப்பட்டது. அதனால், அங்ஙனம் விழுப்பந்
தருவதாயது ஒழுக்கம் என்பது பெற்றாம். 'உயிர்
எல்லாப் பொருளினும் சிறந்தது ஆயினும், ஒழுக்கம்
போல விழுப்பம் தாராமையின் உயிரினும் ஓம்பப்படும்' என்றார்.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை
வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய "முதுமொழிமேல் வைப்பு"
என்னும்
நூலில் இருந்து ஒரு பாடல்....
தில்லை மறையோர்
சிவசமயம் சார்ந்து ஒழுகி
இம்மையே சாரூபம்
எய்தினார் நல்ல
ஒழுக்கம்
விழுப்பம் தரலான், ஒழுக்கம்
உயிரினும்
ஓம்பப் படும்.
தில்லை மறையோர் --- தில்லை வாழ் அந்தணர்கள். இவ் அந்தணர்கள் தத்தமக்கு விதிக்கப்பட்ட
நெறியில் ஒழுகியதோடு, இறைவழிபாட்டில்
நின்றார்கள்.
இவர்கள் இம்மையிலேயே சிவசாரூபம் எய்தினமை, திருஞானசம்பந்தப் பெருமானுக்கு இவர்கள்
சிவகணங்களாகத் தோன்றியமையினால் விளங்கும்.
அண்டத்து
இறைவர் அருளால், அணிதில்லை
முண்டத்
திருநீற்று மூவாயிர வர்களும்
தொண்டத்
தகைமைக் கணநாதராய்த் தோன்றக்
கண்டு, அப்பரிசு பெரும்பாணனார்க்கும்
காட்டினார்.
எனச்
சேக்கிழார் பெருமான் பாடி உள்ளதை அறிக.
அடுத்ததாக, இத்
திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி
மாலை"
என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
பழுக்கும்
பழமொழி பார், ஒழுக்கம் விழுப்பம் தரலால்,
ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும் என்று உரைப்பர், நெஞ்சே!
செழிக்குந்
திருப்புல்லை மால்பதத்து அன்பில் திருந்துவையேல்
இழுக்கம்
இல்லாமை ஒழுக்கம் விழுப்பம் எல்லாம் தருமே.
உலகில்
சிறந்து விளங்கும் பழமொழியான திருக்குறள், ஒழுக்கம் சிறப்பைத் தருதலால், அந்த ஒழுக்கமானது
உயிரினும் மேலானதாகப் பாதுக்காக்கப்படும் என்று வழங்குவதாகச் சொலவர். எனவே, நெஞ்சமே! சிறந்த
நிலையில் விளங்கும் திருமாலின் திருவடிகளில் அன்பு பொருந்தி இருப்பாயானால், கீழ்மை ஏதும்
இல்லாதபடிக்கு,
அந்த
ஒழுக்கமானது மேன்மை எல்லாவற்றையும் தரும்.
பழுக்கும் பழமொழி - சிறந்து விளங்கும்
பழமொழியாகிய திருக்குறள். மால் பதத்தன்பில் - திருமாலின் திருவடி அன்பில். திருந்துவையேல் - பொருந்தி நிற்பாயானால். இழுக்கமில்லாமை - கீழ்மைத்தனமில்லாமை. விழுப்பம்
- மேன்மை.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு
விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...
விழுப்பமும்
கேள்வியும் மெய்ந்நின்ற ஞானத்
தொழுக்கமும்
சிந்தை உணர்கின்ற போது
வழுக்கி
விழாவிடில் வானவர் கோனும்
இழுக்கின்றி
எண்ணிலி காலம தாமே. --- திருமந்திரம்.
இதன்
பொழிப்புரை ---
`உண்மையான கல்வியும், கேள்வியும், ஞானச் செய்தியும் யாவை` என்று ஒருவனது உள்ளம் ஓர்கின்ற காலத்து, அது பிழைபட்டுப் பொய்ம்மையில்
விழாதிருப்பின், சிவபெருமான்
அவனுக்குத் தடையின்றிக் காலம் கடந்த பொருளாய் வெளிப்பட்டு நிற்பன்.
குறிப்புரை : வழுக்கி விழுதலாவது, பொய்யை மெய்யெனத் துணிதல். மெய்ம்மையான கல்வி
கேள்வி ஞானச் செய்திகளை உடையார் காலத்தானும், இடத்தானும் வரையறுக்கப்படாத இறை நிறைவை
எய்துவர்` என்றது. இதனால், மயக்க நூலைக் கற்றலும், மயக்க உரைகளைக் கேட்டலும், அவற்றின்வழி அறிந்த நெறியின் நிற்றலும்
ஆகாமை கூறப்பட்டது.
தானத்தின்
மிக்க தருமமும், தக்கார்க்கு
ஞானத்தின்
மிக்க உசாத்துணையும் --- மானம்
அழியா
ஒழுக்கத்தின் மிக்கதூஉம் இல்லை,
பழியாமல்
வாழும் திறம். --- அறநெறிச்சாரம்.
இதன்
பதவுரை ---
தானத்தின் மிக்க தருமமும் --- உயர்ந்தோரை
நாடி அவர்க்கு வேண்டுவன உதவுதலைக் காட்டினும் சிறந்த அறமும், தக்கார்க்கு --- பெரியோர்க்கு, ஞானத்தின் மிக்க --- அறிவைக் காட்டிலும்
சிறந்த, உசாத்துணையும் --- ஆராயுந்
துணைவனும், மானம் அழியா
ஒழுக்கத்தின் மிக்கதூஉம் --- பெருமை கெடாத ஒழுக்கத்தைக் காட்டிலும் சிறந்த
நல்லொழுக்கமும், இல்லை ---இல்லை, பழியாமல் வாழுந் திறம் --- இம்மூன்றும்
பிறர் பழியாமல் வாழ்வதற்கேற்ற செயல்களாகும்.
பிறப்பு, நெடுவாழ்க்கை, செல்வம், வனப்பு,
நிலக்கிழமை, மீக்கூற்றம், கல்வி, நோயின்மை,
இலக்கணத்தால்
இவ்எட்டும் எய்துப என்றும்
ஒழுக்கம்
பிழையாதவர். -- ஆசாரக் கோவை.
இதன்
பதவுரை ---
என்றும் --- எப்பொழுதும், ஒழுக்கம் பிழையாதவர் --- ஒழுக்கத்தில்
தவறாதவர், பிறப்பு ---
நற்குடிப்பிறப்பு, நெடு வாழ்க்கை ---
நீண்ட வாழ்நாள், செல்வம் --- பொருட்
செல்வம், வனப்பு --- அழகுடைமை, நிலக்கிழமை --- நிலத்திற்கு உரிமை, மீக்கூற்றம் --- சொல்லின் மேன்மை, கல்வி --- படிப்பு, நோய் இன்மை --- பிணியில்லாமை, இ எட்டும் --- இந்த எட்டு வகையினையும், இலக்கணத்தால் --- அவற்றிற்குரிய
இலக்கணங்களுடன், எய்துப --- அடைவர்.
நற்குடிப் பிறப்பு, நெடிய வாணாள், செல்வம், அழகுடைமை, நிலத்துக்கு உரிமை, சொற்செலவு, கல்வி, நோயின்மை என்று சொல்லப்பட்ட
இவ்வெட்டினையும் இலக்கணத்தோடு நிரம்பப் பெறுவர் என்றும் ஆசாரம் தப்பாமல்
ஓழுகுவார். ஒழுக்கம் தவறாதவர்கள்
மேற்கூறிய எட்டு வகையையும் எய்துவர்.
திருஒக்கும்
தீதில் ஒழுக்கம், பெரிய
அறன்
ஒக்கும் ஆற்றின் ஒழுகல், --- பிறனைக்
கொலை
ஒக்கும் கொண்டுகண் மாறல், புலைஒக்கும்
போற்றாதார்
முன்னர்ச் செலவு. --- நான்மணிக்கடிகை.
இதன்
பதவுரை ---
தீது இல் ஒழுக்கம் திரு ஒக்கும் --- தீமை
கலவாத நல்லொழுக்கம் செல்வத்தை ஒக்கும்; ஆற்றின் ஒழுகல் பெரிய அறன் ஒக்கும் --- நெறிமுறைப்படி
ஒழுகுதல் சிறந்த அறச்
செய்கையோடு ஒக்கும்; பிறனைக் கொண்டு கண் மாறல் கொலை ஒக்கும் ---
பிறனொருவனை நட்பாகக் கொண்டு, பின்பு அந் நட்பு மாறிப் புறங் கூறுதல், அவனைக் கொலை செய்தலைப் போன்றதாகும்; போற்றாதார் முன்னர் செலவு புலை ஒக்கும் ---
தம்மை மதியாதாரிடத்தில் சென்று ஒன்றை
விரும்புதல், இழி தகைமையை
ஒப்பதாகும்.
நல்லொழுக்கம் செல்வம் போன்றது; பிறரைப் புறங்கூறல் அவரைக் கொலைசெய்தல்
போல்வதாம்; தம்மை மதியாரைத் தாம்
மதித்தல் இழிதகைமையாகும்.
கண்மாறல் : ஒரு சொல்; கருத்து மாறலென்பது பொருள்.
வன்
தெறு பாலையை மருதம் ஆம் எனச்
சென்றது; சித்திரவடம் சேர்த்ததால்
-
ஒன்ற
உரைத்து, ‘உயிரினம் ஒழுக்கம் நன்று’ எனப்
பொன்றிய
புரவலன் பொரு இல் சேனையே.
--- கம்பராமாயணம், திருவடி சூட்டு படலம்.
இதன்
பதவுரை ---
‘உயிரினம்
ஒழுக்கம் நன்று என ஒன்று உரைத்து ---
உயிரை விட நல்லொழுக்கமே சிறந்து
விளங்குவது எனக் கருதிச் சத்தியம் ஒன்றையே உரைத்து; பொன்றிய புரவலன் --- உயிர்விட்ட சக்கரவர்த்தியாகிய
தயரதனது; பொரு இல் சேனை --- ஒப்பற்ற
சேனையானது; வன்தெறு பாலையை --- கொடிய அழிக்கவல்ல பாலை நிலத்தை; மருதம் ஆம் எனச் சென்றது --- (முன் கூறியவாறு நீரும் நிழலும் பெற்றுக் குளிர்ந்தமையால் மருதநிலம் ஆகும் என்று கருதி எளிதாகக் கடந்து சென்று;) சித்திரகூடம் சேர்ந்தது --- சித்திரகூட மலையை அடைந்தது. பாலை மருதமாயினது. யானைகளின் மதநீர்ப் பெருக்கால்
வழி வழுக்கிச் சேறானதாலும், மன்னர் குடை நிழலால் குளிர்ச்சி ஆனதாலும்
ஆம் என மேற் கூறினார்.
No comments:
Post a Comment