009. விருந்தோம்பல் - 05. வித்தும் இடல்





திருக்குறள்
அறுத்துப்பால்

இல்லற இயல்

ஒன்பதாம் அதிகாரம் - விருந்தோம்பல்

     இந்த அதிகாரத்தில் வரும் ஐந்தாம் திருக்குறள், "வந்த விருந்தினரை வரவேற்று, உபசரித்துப் போற்றி, பின்பு உணவின் மிச்சத்தை உண்பவனது விளநிலத்தில், விதையும் விதைத்தல் வேண்டுமோ?" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்...

வித்தும் இடல் வேண்டும் கொல்லோ, விருந்து ஓம்பி
மிச்சில் மிசைவான் புலம்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     விருந்து ஓம்பி மிச்சில் மிசைவான் புலம் --- முன்னே விருந்தினரை மிசைவித்துப் பின் மிக்கதனைத் தான் மிசைவானது விளைபுலத்திற்கு;

     வித்தும் இடல் வேண்டுமோ - வித்திடுதலும் வேண்டுமோ? வேண்டா.

      ('கொல்' என்பது அசைநிலை. 'தானே விளையும்' என்பது குறிப்பெச்சம். இவை மூன்று பாட்டானும் விருந்து ஓம்புவார் இம்மைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, குமார பாரதி என்னும் பெரியார் தாம் பாடி அருளிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில், இளையான்குடி மாற நாயனாரின் வரலாற்றை வைத்துப் பாடியுள்ள பாடல்...

உய்வித் தவனடியார்க்கு ஓர்இருளில் போய்மாறன்
செய்வித்தும் வாரிஅனம் செய்தைனே - மெய்வருந்தி
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்துஓம்பி
மிச்சில் மிசைவான் புலம்.

         உயிர்க்கு உயிராய் இருந்து ஆன்மாக்களை உய்வித்து அருளுகின்ற சிவபெருமான், அடியார் வேடம் பூண்டு ஒரு நாள் நள்ளிரவில் அன்று முழுவதும் உணவு இன்றி வாட்டம் உற்றவரைப் போலத் தளர்ந்து சென்று, உறக்கத்தில் இருந்த இளையான்குடி மாறநாயனாரை எழுப்ப, அந்த நாயனார் எழுந்து அன்புடனே உபசரித்து, அமுதூட்டும் அவாவினராய், அன்று தமது வயலில் விதைத்திருந்த முளைவிதையை வாரிவந்தும், தோட்டத்தில் குழி நிரம்பாத முளைக் கீரையைப் பறித்து வந்தும் மனைவியாரிடம் கொடுக்க, அவர் விரைந்து பாகம் செய்து சிவனடியாரை அழைக்க, அடியார் சோதி வடிவினறாய்த் தோன்றித் தமது திருவடியில் சேர்த்து அருள் செய்தார்.

          மெய்வருத்தம் உற்று முன்னை விருந்தினரை உபசரித்து பின்பு மிக்கதனைத் தான் உண்ணுவோனது விளைபுலத்துக்கு வித்து இடுதலும் வேண்டுமோ? வேண்டா. அது தானே விளையும் என்றவாறு.

         உய்வித்தவன் --- சிவபெருமான். மாறன் --- இளையான்குடி மாற நாயனார். மாறன் --- காமக் குரோதாதிகளுக்குப் பகைவன் என்றபடி. செய் --- வயல், அனம் --- அன்னம், சோறு. மிச்சில் --- மிகுதி, சேடம். மிசைவான் --- உண்பான்.

இல்லறத்தார் எவ்வகையானும் விருந்தோம்புதல் கடமை என்பதாம்.

     பின்வரும் பாடல்கள், இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்து இருத்தலைக் காணலாம்...

சேரர் உடனே திருஅமுது செய்தபின்பு கைகோட்டி
ஆரம்நறுமென் கலவை மான்மதச்சாந்து ஆடை அணிமணிப்பூண்
ஈரவிரை மென்மலர்ப் பணிகள் இனைய முதலாயின வருக்கம்
சார எடுத்து வன்தொண்டர்ச் சாத்தி, மிக்க தமக்கு ஆக்கி.
                                                                                 --- பெரியபுராணம்.

இதன் பொருள் ---

     சேரமான் பெருமாள் நாயனாருடன், உடன் அமர்ந்து உணவு உண்ட பின்பு, மணமுடைய சந்தனமும், அது கலந்த கத்தூரிச் சாந்தும், ஆடையும், அணியும், மணிப் பூண்களும் குளிர்ந்த மணம் நிறைந்த மலர் மாலைகளும் என்ற இவை முதலான அணியத்தகும் பொருள் வகைகளைத் தம் கைகளை வளைத்துச் சாரும்படி எடுத்து வன்தொண்டருக்குச் சாத்தியும், எஞ்சியவற்றைத் தமக்குப் பயன் படுத்தியும்.

     "மிக்க தமக்கு ஆக்கி" என்னும் சொல் அறிந்து இன்புறத் தக்கது.


துறந்தார், துறவாதார், துப்புஇலார், தோன்றாது
இறந்தார், ஈடுஅற்றார், இளையர் ---  சிறந்தவர்க்கும்
பண்ஆளும் சொல்லாய், பழிஇல் ஊண் பால்படுத்தான்,
மண்ஆளும் மன்னனாய் மற்று.     ---  ஏலாதி

இதன் பதவுரை ---

     பண் ஆளும் சொல்லாய் --- பண்ணிசையைப் போன்ற சொல்லையுடைய பெண்ணே!, துறந்தார் --- கைவிடப்பட்டவர்களுக்கும், துறவாதார் --- விருந்தினர்க்கும், துப்பு இலார் --- வறியவர்க்கும், இறந்து தோன்றார் --- காணப்படாத தென்புலத்தார்க்கும், ஈடு அற்றார் --- தனக்கு ஒப்பில்லாத ஏழைகட்கும், இளையர் --- துணையற்ற சிறுவர்கட்கும், சிறந்தவர்க்கும் --- சான்றோர்க்கும், பழி இல் ஊண் --- பழிக்கப்படுதல் இல்லாத உணவை, பால் படுத்தான் --- பகுத்துக் கொடுத்தவன், மன்னன் ஆய் --- மறுமையில் அரசனாய், மண் ஆளும் --- உலகத்தை ஆள்வான்.

         பண்ணின் இனிமையை வென்ற சொல்லை உடையவளே! துறந்தவர்க்கும், துறவாதவராகிய பிரம்மச்சாரி வானப்பிரத்தன் இவர்க்கும், வறியார்க்கும், தென்புலத்தார்க்கும், பலம் அற்றவர்க்கும், இவர் போல்வராகிய மற்றும் சிறந்த தக்கார்க்கும் நல்வழியில் ஈட்டிய உணவை அளித்து அன்பு செய்தவன், மறு பிறப்பில் பூமண்டலத்தை ஆளும் மன்னனாவான்.

     உண்மையாகவே ஒருவன் தன்னிடத்தே வந்த விருந்தினரை உண்பித்து, மிகுந்து நின்ற உணவினைத் தானும் உண்ணும் முறையைக் கைக்கொண்டு இருப்பானாயின், அவனுக்குத் தெய்வமே ஏவல் செய்யும் என்பதை அறிதல் வேண்டும்.
    
     இதனைப் பெரியபுராணத்துள் குண்டையூர்க் கிழார் என்பார் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு செந்நெல் அரிசியும், பொன் போன்ற பருப்பும், ஏனைய பொருள்களும் தினம்தோறும் கொடுத்து வந்தனர் என்றும், மழை வளம் சுருங்கியதால் குண்டையூர்க் கிழார் தாம் செய்து வந்த பணிக்கு இடையூறு வந்த காலத்து, இறைவரைத் தியானம் செய்து வருந்திய காலத்து, குண்டையூரில் நெல்மலையை நிறைப்பித்து, குண்டையூர்க் கிழார் அறியும்படிச் செய்தான் இறைவன் என்றும், அந்த நெல்மலையைப் பரவையார் மாளிகை வந்து சேர ஆள் இல்லை என சுவாமிகள் இறைவனைப் பாடிட காலத்து, இறைவன் பூதகணங்களைக் கொண்டு திருவாரூர் முற்றும் நிறையும்படிக் கொண்டு வந்து சேர்த்தனர் என்றும் பெரியபுராணம் விளக்குகின்றது.

"ஐயக் கடிஞை கையின் ஏந்தி
மையறு சிறப்பின் மனைதொறும் மறுகிக்              
காணார் கேளார் கால்முடப் பட்டோர்
பேணுநர் இல்லோர் பிணி நடுக்குற்றோர்
யாவரும் வருக என்று இசைத்து உடன் ஊட்டி,
உண்டு ஒழி மிச்சில் உண்டு, டுதலை மடுத்துக்
கண்படை கொள்ளும் காவலன் தான் என்".      
                                   --- மணிமேகலை, ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை.

இதன் பதவுரை ---

     ஐயக் கடிஞை கையின் ஏந்தி --- பிச்சைப் பாத்திரத்தைக் கையில் ஏந்தி, மை அறு சிறப்பின் மனைதொறும் மறுகி --- குற்றமற்ற சிறப்பினையுடைய மாடங்கள்தோறும் சுழன்று, காணார் கேளார் கால்முடப் பட்டோர் பேணுநர் இல்லோர் பிணிநடுக் குற்றோர் --- குருடர் செவிடர் முடவர் பாதுகாப்போர் அற்றோர் நோயால் துன்புறுவோர் ஆகிய, யாவரும் வருக என்று இசைத்து உடன் ஊட்டி --- அனைவரும் வருக என்று கூறி யழைத்து ஒருங்கு உண்ணச் செய்து, உண்டு ஒழி மிச்சில் உண்டு --- அனைவரும் உண்டு எஞ்சிய உணவை யுண்டு, ஓடு தலை மடுத்து --- அவ்வோட்டினைத் தலைக்கு அணையாகக் கொண்டு, கண்படை கொள்ளும் காவலன் தான் என் --- உறங்குதல் செய்வான் அவ் வாபுத்திரனாகிய காப்போன் என்க.

         உண்டு ஒழி மிச்சில் உண்டு என்பது ''விருந்தோம்பி மிச்சில் மிசைவான்'' என்பதன் பொருளைத் தழுவி வந்துளது.


வித்தும் இடல் வேண்டும் கொல்லோ, விடையடர்த்த
பத்தி உழவன் பழம்புனத்து --- மொய்த்து எழுந்த
கார்மேகம் அன்ன கருமால் திருமேனி
நீர்வானம் காட்டும் நிகழ்ந்து.       ---  திருமழிசை ஆழ்வார்.

இதன் பொருள் ---

     நப்பின்னைப் பிராட்டிக்காக எருதுகளின் வலியை அடக்கினவனும், தன் விஷயத்தில் அடியார்களுக்குப் பத்தி உண்டாவதற்குத் தானே முயற்சி செய்வனும் ஆன எம்பெருமானுடைய சம்சாரம் என்கிற பழமையான திருத்தலத்திலே சுயமுயற்சி ஆகின்ற விதையை நாம் விதைக்க வேண்டுமோ? நம் முயற்சி இன்றியே, தானை பகவத் விஷயத்தில் சுவை விளைந்தால், திருநாட்டுக்குச் செல்லுமளவும் நாம் எப்படித் தரித்து இருப்பது என்றால், திரண்டு கிளர்ந்த காளமேகம் போன்ற கரிய திருமாலினது திருமேனியை நீர் கொண்டு எழுந்த மேகமானது எதிரே நின்று காண்பிக்கும்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...