010. இனியவை கூறல் - 05. பணிவுடையன்




திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

பத்தாம் அதிகாரம் - இனியவை கூறல்

     இந்த அதிகாரத்தில் வரும் ஐந்தார் திருக்குறள், "அடக்கம் உடையவனாகவும், இனிய சொற்களைகை கூறுகின்றவன் ஆகவும் இருப்பதே ஒருவனுக்கு நல்ல அணிகலன்கள் ஆகும்; மற்றவை அணிகலன்கள் ஆகமாட்டா" என்கின்றது.
  
திருக்குறளைக் காண்போம்.....

பணிவு உடையன் இல்சொலன் ஆதல் ஒருவற்கு
அணி, அல்ல மற்றுப் பிற.                      

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     ஒருவற்கு அணி பணிவு உடையன் இன்சொலன் ஆதல் --- ஒருவனுக்கு அணியாவது தன்னால் தாழப்படுவார்கண் தாழ்ச்சியுடையனாய் எல்லார் கண்ணும் இனிய சொல்லையும் உடையனாதல்,

     பிற அல்ல --- அன்றி மெய்க்கு அணியும் பிற அணிகள் அணி ஆகா.

      (இன்சொலன் ஆதற்கு இனமாகலின், பணிவுடைமையும் உடன் கூறினார். 'மற்று' அசை நிலை. வேற்றுமை உடைமையான், பிற எனவும், இவைபோலப் பேரழகு செய்யாமையின் 'அல்ல' எனவும் கூறினார்.)

     திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்த நூல்களுள் ஒன்று, கமலை வெள்ளியம்பலவாணர் அருளிய "முதுமொழி மேல் வைப்பு" ஆகும். அதில் இத், திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்த பாடல்....

முதுகிரியான் அன்பர் முனிந்து அருள வந்த
தகுதி உடையான் சரிதம் சொலுமே,
பணிவு உடையன் இல்சொலன் ஆதல், ஒருவற்கு
அணி, அல்ல மற்றுப் பிற. 

இதன் பொருள் ---

     முதுகிரியான் அன்பர் --- விருத்தாசலம் என்று இப்போது வழங்கப்படும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பழமலைநாதரிடம் அன்பு கொண்ட அகத்தியரை உள்ளிட்ட ஐம்பது முனிவர்கள். தகுதியுடையான் --- வரர் என்ற முனிவர். அவரிடம் அகத்தியர் முதலிய ஐம்பதின்மர் சென்றபோது, அவர் இவர்களை மதியாது பணிவு இன்றி இருக்க, இவர்கள் அவரை எருமைக் கடா ஆகுமாறு சபித்தனர். அவரே மகிஷாசுரனாக அவதரித்துப் பின்னர் உமாதேவியாரால் சாபம் நீங்கப் பெற்றார் என்பர்.

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, குமார பாரதி என்னும் பெரியார் அருளிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்... 
                                                                       
 
பாலாழி உண்ட பழமுனிசொன் னான்முனிவர்க்கு
ஆலால சுந்தரன்சொல் அங்கினிதாய் - மேலாம்
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணிஅல்ல மற்றுப் பிற.

இதன் பொருள் ---

     வியாக்கிரபாத மகாமுனிவருடைய திருக்குமாரர் உபமன்னிய மகாமுனிவர். சிதம்பரத்திலே சிவபெருமானால் வருவித்தருளப்பட்ட திருப்பாற்கடலை உண்ட மெய்யடியார்.  அவர் கண்ணபிரானைச் சிவதீட்சை செய்து தடுத்து ஆட்கொண்டு அருளிய சைவாசாரியார். அம் முனிவர்பிரான் திருக்கயிலாயமலை அடிவாரத்தில் முனிவர் குழாத்துடன் விளங்கி இருந்தார். அவரைச் சுற்றிலும் எண்ணிறந்த முனிவர்களும், சிவயோகிகளும் அமர்ந்து வேத வேதாந்தங்களை ஆய்ந்து கொண்டு இருப்பது வழக்கம்.

"அன்ன தன்திருத் தாழ்வரை யின்இடத்து
இன்ன தன்மையன் என்றுஅறி யாச்சிவன்
தன்னை யேஉணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான்
உன்னஅ ருஞ்சீர் உபமன் னியமுனி".

"யாதவன் துவரைக்கு இறை ஆகிய
மாதவன் முடிமேல் அடி வைத்தவன்,
பூத நாதன் பொருஅருந் தொண்டினுக்கு
ஆதி அந்தம் இலாமை அடைந்தவன்".

"அத்தர் தந்த அருள்பாற் கடல் உண்டு
சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன்
பத்தர் ஆய முனிவர்பல் ஆயிரர்
சுத்த யோகிகள் சூழ இருந்துஉழி". ---  பெரியபுராணம்.

     ஒரு நாள், திடீர் என, ஆயிரம் சூரியர்கள் ஒரு உருக்கொண்டு வந்தது போலப் போரொளி ஒன்று தோன்றியது. அந்தப் போரொளியைக் கண்ட முனிவர்களும், யோகிகளும், "இது என்ன?" என்று வியப்பு உற்றார்கள். அப்போது, உபமன்னிய முனிவர், அந்திவான் பிறை சூடிய அண்ணலின் திருவடியை நினைந்து, "ஆண்டவன் அருளால் தென்னாட்டில் தோன்றிய வன்தொண்டர், திருக்கயிலைக்கு எழுந்தருள்கின்றார்" என்று தெளிந்து, உச்சிமேல் குவித்த கைகளோடு, கண்கள் நீர் பொழிய, அந்தப் போரொளி செல்லும் திசை நோக்கி நின்றார்.

அங்கண் ஓர்ஒளி ஆயிர ஞாயிறு
பொங்கு பேர்ஒளி போன்றுமுன் தோன்றிடத்
துங்க மாதவர் சூழ்ந்துஇருந் தார்எலாம்
இங்குஇது என்கொல் அதிசயம் என்றலும்.

அந்தி வான்மதி சூடிய அண்ணல்தாள்
சிந்தி யாஉணர்ந்து அம்முனி தென்திசை
வந்த நாவலர் கோன்புகழ் வன்தொண்டன்
எந்தை யார்அரு ளால்அணை வான்என.

கைகள் கூப்பித் தொழுதுஎழுந்து அத்திசை
மெய்யில் ஆனந்த வாரி விரவிடச்
செய்ய நீள்சடை மாமுனி செல்வுழி
ஐயம் நீங்க வினவுவோர் அந்தணர்.    ---  பெரியபராணம்.

     அதைக் கண்ட முனிவர்களும், பிறரும், தங்களுக்கு உற்ற ஐயத்தைப் போக்கிக் கொள்ள வேண்டி, பாற்கடலை உண்ட பரமஞானியாகிய உபமன்னிய முனிவரைப் பார்த்து, "பெருமானே! பிறப்பு இறப்பு இல்லாச் சிவனை அன்றி, எவரையும் தொழாத தங்களின் கைகள், இன்று இந்தப் போரொளியைக் கண்டதும் குவிந்தது என்ன? என்று வினவினார்கள்.

     அதற்கு, உபமன்னிய முனிவர், "இப் பேரொளிப் பிழம்பாய் எழுந்தருள்வோர், நம்பியாரூரர் என்னும் திருப்பெயர் உடையவர். அவருடைய சிந்தை எப்போதும் சிவத்தையே தழுவி இருக்கும். எனவே, அவர் நாம் வணங்கும் தகுதி உடையவர்" என்றார்.

சம்பு வின்அடித் தாமரைப் போதுஅலால்
எம்பி ரான்இறைஞ் சாய்இஃது என்எனத்
தம்பி ரானைத்தன் உள்ளம் தழீஇயவன்
நம்பி யாரூரன் நாம்தொழும் தன்மையான்.   ---  பெரியபராணம்.

     முனிவர்களும் பிறரும் மனம் மகிழ்ந்து, "அப் பெருமானாரின் தவப் பெருமையைக் கேட்க நாங்கள் விருப்பம் கொண்டுள்ளோம். அருள் புரிய வேண்டும்" என்றனர். அபமன்னிய முனிவர், முனிவர்கள் கூட்டத்துக்கு நம்பியாரூரர் வரலாற்றைச் சிறப்பாகக் கூறியருளினர். சிவபெருமான் கட்டளைப்படி பூமியிலே சென்று திருவவதாரம் செய்து ஆன்மாக்களை எல்லாம் உய்யும்படி தமிழ்வேதமாகிய தேவாரத்தை அருளிச் செய்து, இப்பொழுது தேவர்கள் சூழ வெள்ளையானை மேல்கொண்டு திருக்கயிலாயத்துக்கு எழுந்தருளி வருகின்றார் என்றார்.

         ஒருவனுக்கு அணி ஆவது தன்னால் தாழப்படுவார்கண் தாழ்ச்சி உடையனாய் எல்லார் கண்ணும் இனிய சொல்லையும் உடையனாதல். இவை இரண்டுமன்றி உடம்புக்கு அணியும் பிற அணிகள் அணியாகா என்று அருளினார் திருவள்ளுவ நாயனார்.

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து, இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
                                                              
அண்ட முதல்வற் பழித்தே ஐந்தலையுள் ஒன்றுஒழிந்தான்
முண்டகன் செம்மாந்து, முருகேசா! - மண்டிப்
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணிஅல்ல மற்றுப் பிற.

இதன் பதவுரை ---

     முருகேசா --- முருகப் பெருமானே,  முண்டகன் செம்மாந்து --- தாமரையில் உள்ளவனாகிய நான்முகன் இறுமாப்பை அடைந்து, அண்ட முதல்வன் பழித்து --- உலகங்கட்கெல்லாம் முதல்வனாகிய சிவபெருமானை இகழ்ந்து கூறி, ஐந்தலையுள் ஒன்று இழந்தான் --- தனக்கு இருந்த ஐந்து தலைகளில் ஒன்றைப் போக்கிக் கொண்டான். ஆகவே, பணிவுடையன் --- வணக்கமுடையவன் ஆகவும், இன் சொலன் -- இனிமையாகப் பேசுபவனாகவும், ஆதல் --- இருத்தல், ஒருவற்கு அணி -- ஒருவனுக்கு அழகாகும், பிற அல்ல --- இவ்வணிகள் அன்றிப் புறத்தே அணியும் பொன்னணிகள் அழகு தருவன ஆகா.

         நான்முகன் இறுமாப்பை அடைந்து சிவபெருமானை இகழ்ந்தபடியினால், ஐந்து தலைகளுள் ஒரு தலையைப் போக்கிக் கொண்டான். வணக்கமுடையவனாகவும் இனியமொழிகளைப் பேசுபவனாகவும் இருத்தலே ஒருவனுக்குச் சிறந்த அணிகலமாம். பொன்னணி முதலியன சிறந்த அணி அல்ல என்பதாம். அண்ட முதல்வன் --- எல்லா உலகங்களுக்கும் தலைவன். ஐந்தலை --- பிரமனுக்கும் முன்னாளில் சிவபிரானுக்கு உள்ளதைப் போல் ஐந்து தலைகள் இருந்தன. ஆணவம் கொண்டு இறுமாந்தபொழுது ஒரு தலையை இழந்தபடியால், பிறகு நான்முகன் ஆனான்.  முண்டகம் --- தாமரை, தாமரையில் இருப்பவன் முண்டகன் எனப்பட்டான்.

                                    பிரமன் தலையிழந்த கதை

         ஒருகாலத்தில் சனகர் முதலிய முனிவர்கள் நான்முகனிடம் சென்று, உலகத்திற்குத் தலைவர் யார் என்று உசாவினர். ஆணவம் கொண்ட பிரமன் நானே உலகத்திற்குத் தலைவன் என்றார். இதனை உணர்ந்த திருமால் பிரமனுக்கு முன் தோன்றி, உலகத்திற்கு நானே தலைவன் என்றார். அவர்கள் இருவருக்கும் போர் மூண்டது. இவர்களுடைய செய்கையை உணர்ந்த சிவபெருமான் இவர்கட்கு முன்னே தோன்றினார். பிரமன் சிவபிரானைப் போற்றி வழிபடாமல் ஆணவம் கொண்டு பலவாறு இகழ்ந்தான். அப்பொழுது வைரவக் கடவுள் தோன்றிப் பிரமனுடைய ஐந்து தலைகளுள் ஒன்றைத் தம்முடைய நகத்தால் கிள்ளி எறிந்தார். அந்நாள் முதல் பிரமன் நான்முகனானான்.


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...