007. மக்கள் பேறு - 03. தம்பொருள் என்ப





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

ஏழாம் அதிகாரம் - மக்கள் பேறு

     இந்த அதிகாரத்தில் வரும் மூன்றாம் திருக்குறள், "தம் மக்களைத் தம் பொருள் என்று கூறுவர். அவர் மக்கள் அவரவர் வினைத் தொடர்பால் தோன்றுவர்" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம் ---

தம் பொருள் என்ப தம் மக்கள், அவர்பொருள்
தம் தம் வினையான் வரும்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

       தம் மக்கள் தம் பொருள் என்ப --- தம் புதல்வரைத் தம் பொருள் என்று சொல்லுவர் அறிந்தோர்;

     அவர் பொருள் தம் தம் வினையான் வரும் --- அப்புதல்வர் செய்த பொருள் தம்மை நோக்கி அவர் செய்யும் நல்வினையானே தம்பால் வரும் ஆதலான்.

       ('தம் தம் வினை' என்புழித் தொக்கு நின்ற ஆறாம் வேற்றுமை, 'முருகனது குறிஞ்சிநிலம்' என்புழிப் போல உரிமைப் பொருட்கண் வந்தது. பொருள் செய்த மக்களைப் 'பொருள்' என உபசரித்தார். இவை இரண்டு பாட்டானும் நன்மக்களைப் பெற்றார் பெறும் மறுமைப் பயன் கூறப்பட்டது.

இதற்கு ஒப்புமையாக அமைந்த பாடல்களைக் காண்போம்.....

ஆவும், ஆன் இயல் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும் பிணியுடை யீரும், பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போல் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
எம்அம்பு கடிவிடுது, நும்அரண் சேர்மின்என
அறத்தாறு நுவலும் பூட்கை மறத்தில்
கொல்களிற்று மீமிசை கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி, தம்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே.    --- புறநானூறு.

இதன் பொருள் ---

     "பசுக்களும், பார்ப்பனரும், மக்களும், பெண்களும், நோயினை உடையோரும், இறந்து தென்திசைச் சென்றோர்க்குப் பலிச்சோறு படைக்கச் சிறந்த பிள்ளைகளைப் பெறாதவரும், பாதுகாப்பு உடைய இடங்களைத் தேடிக் கொள்ளட்டும். எம்முடைய அம்புகள் விரைந்து வந்து உம்மை அழித்துவிடக் கூடும். எனவே, நீங்கள் உங்களுக்கு ஏற்ற பாதுகாவலைத் தேடிக் கொள்ளுங்கள்" என்று கூறி, போருக்கு முன்னே எச்சரிக்கும் அறச் செயலும், விர மறக் குணமும் உடையவனே! கொல்கின்ற வலிமை மிக்க யானை மேல் அசைந்து வரும் நின்னுடைய வெற்றிக் கொடிகள் ஆகாயத்தை இருளடையச் செய்கின்றன. எம் அரசே! குடுமிப் பெருவழுதியே! நீ வாழ்க! கூத்தர்க்குச் செம்பொன் காசுகள் அளித்த, கடல் தெய்வத்திற்கு விழா எடுத்த நெடியோன் மாண்டியன் உண்டாக்கிய பஃறுளி ஆற்றின் பரந்த மணல் பரப்பினும் மேலாகப் பல கோடி ஆண்டுகள் நீ புகழோடு வாழ்க.

     இப் பாடலில், "தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போல் புதல்வர்ப் பெறாஅ தீரும்" என்னும் அடிகள் எண்ணத் தக்கன.


கண்ணிற் சிறந்த உறுப்பில்லை; கொண்டானின்
துன்னிய கேளிர் பிறரில்லை; மக்களின்
ஒண்மையவாய்ச் சான்ற பொருளில்லை; ஈன்றாளோடு
எண்ணக் கடவுளும் இல்.       --- நான்மணிக் கடிகை.

இதன் பதவுரை ---

     கண்ணின் சிறந்த உறுப்பு இல்லை --- கண்ணைப் போல் மேலான உறுப்பு ஒருவனுக்கு வேறில்லை;

         கொண்டானின் துன்னிய கேளிர் பிறர் இல்லை --- தன்னைத் திருமணஞ் செய்து கொண்ட கணவனைப் போல நெருங்கிய உறவினர், குலமகளிர்க்கு வேறொருவருமில்லை;

         மக்களின் ஒண்மையவாய் சான்ற பொருள் இல்லை --- தம் மக்களைப்போல் ஒளியுடையவாய் அமைந்த வேறு பொருள், பெற்றோர்க்கில்லை;

         ஈன்றாளோடு எண்ண கடவுளும் இல் --- தாய்க்கு நிகராக  மதிப்பதற்குரிய கடவுளும் வேறில்லை.

         ஒருவனுக்குக் கண்ணைப்போல மேலான உறுப்பு வேறில்லை; குலமகளுக்குக் கணவனைப் போல நெருங்கிய உறவினர் வேறில்லை; பெற்றோர்க்கு மக்களைப் போல ஒளியுள்ள பொருள்கள் வேறில்லை; குழந்தைகட்குத் தாயைப்போல மேலான கடவுள் வேறெதுவுமில்லை.

         ஏனை எல்லாப் பொருள்களினும் அறிவொளி உடைய பொருளாய்ப், பெற்றோர்க்கு இம்மை மறுமைப் பயன்களை விளைவிப்பதாய்ப், பிறவி முழுவதும் உரியதாய் அமைந்து நிற்றலின் என்பது; ‘தம்பொருளென்ப தம் மக்கள' (மக்கட்பேறு, ) என்னும் திருவள்ளுவர் திருமொழியை இங்கு உற்று நோக்குக.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...