007. மக்கள் பேறு - 10. மகன் தந்தைக்கு




திருக்குறள்
அறத்துப்பால்
இல்லற இயல்

ஏழாம் அதிகாரம் - மக்கள் பேறு 

     இந்த அதிகாரத்தில் வரும் இறுதித் திருக்குறள், "தன்னைக் கல்வி அறிவு உடையவன் ஆக்கிய தந்தைக்கு, மகன் செய்யும் பிரதி உபகாரமாவது, இவனது தந்தை இவனைப் பெறுவதற்கு என்ன தவத்தைச் செய்தானோ என்று பிறர் சொல்லுமாறு விளங்குதல் ஆகும்" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்.....

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, இவன் தந்தை
என் நோற்றான் கொல் எனும் சொல்.   

இதற்குப் பரிமேலழகர் உரை ----

       தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி - கல்வி உடையன் ஆக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறாவது;

     இவன் தந்தை என் நோற்றான் கொல் எனும் சொல் - தன்னறிவும் ஒழுக்கமும் கண்டார், இவன் தந்தை இவனைப் பெறுதற்கு என்ன தவஞ் செய்தான் கொல்லோ என்று சொல்லும் சொல்லை நிகழ்த்துதல்.

         ('சொல்' என்பது நிகழ்த்துதல் ஆகிய தன் காரணம் தோன்ற நின்றது. நிகழ்த்துதல் - அங்ஙனம் சொல்ல ஒழுகல். இதனால் புதல்வன் கடன் கூறப்பட்டது)

     இந்தத் திருக்குறளின் பெருமையை, பெரியாழ்வார் பாடி உள்ள அருமையானதொரு பாடலின் வழி அறியலாம்.

"மின்அனைய நுண்இடையார்

         விரிகுழல்மேல் நுழைந்த வண்டு

இன்னிசைக்கும் வில்லிபுத்தூர்

         இனிது அமர்ந்தாய், உன்னைக் கண்டார்

என்ன நோன்பு நோற்றாள் கொல்லோ

         இவனைப் பெற்ற வயிறு உடையாள்

என்னும் வார்த்தை எய்துவித்த

         இருடிகேசா, முலை உணாயே"


இதன் பொருள் ---

     மின்னலைப் போன்ற மெல்லிய இடையை உடைய பெண்களின் கூந்தலின் மேல் தேனை உண்பதற்காகப் புகுந்த வண்டுகள், தேனை உண்ட களிப்பினால் இனிய ஓசையைச் செய்கின்ற திருவில்லிபுத்தூரில் எழுந்தருளி இருப்பவனே! உன்னைப் பார்த்தவர்கள் இவனைப் பிள்ளையாகப் பெற்ற தாய் என்ன தவத்தைச் செய்தாளோ? என்று கொண்டாடிச் சொல்லும் சொல்லை எனக்கு உண்டாக்கிய இருடிகேசனே! பால் உண்பாயாக.

     கண்ணன் பகல் எல்லாம் விளையாடி, இளைப்பு அடைந்து, பொழுது போனதும், பால் உண்பதையும் மறந்து உறங்கி, பொழுது விடிந்து, நெடுநேரம் ஆகியும் கண் விழியாமல் இருக்கவே, யசோதைப் பிராட்டி, அப் பெருமானைத் துயில் எழுப்பி, பால் உண்ணாமையை அவனுக்கு அறிவுறுத்த, முலை உண்ணவேண்டும் என்று நிர்ப்பந்தித்து ஊட்டினபடியே, பெரியாழ்வார் தாமும் அனுபவிக்க விரும்பி, தம்மை அந்த யசோதையாகவே பாவித்துக் கொண்டு, அவனை அம்மம் உண்ண எழுப்புதல் முதலியவற்றைப் பேசி மகிழ்ந்து பாடிய பாடல் மேற்குறித்தது.      
                                                     

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...