012. நடுவு நிலைமை - 04. தக்கார் தகவிலர்





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

பன்னிரண்டாம் அதிகாரம் - நடுவு நிலைமை

     இந்த அதிகாரத்தில் வரும் நான்காம் திருக்குறள், "இவர் நடுவுநிலைமை உடையவர் என்பது அவருக்கு உள்ள நல்ல புதல்வர்களாலும், இவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது, அவருக்கு நல்ல புதல்வர் இல்லாமையாலும் காணப்படும்" என்கின்றது. 

     நல்ல பிள்ளைகள் இருப்பதை வைத்து ஒருவன் நடுவுநிலைமை உடையவன் என்றும், அல்லாததை வைத்து நடுவுநிலைமை அல்லாதவன் என்றும் அனுமானத்தால் அறியலாம்.

     மனுதரும சாத்திரம், மூன்றாம் அத்தியாயத்தில், "முக்கியமாய் உத்தமமான விவாகத்தால் பிறக்கும் பிள்ளைகள் சாதுக்களாய் இருப்பார்கள்; நிந்திக்கத்தக்க விவாகத்தால் பிறக்கும் பிள்ளைகள் துட்டர்களாய் இருப்பார்கள்" என்று சொல்லப்பட்டுள்ளது.

திருக்குறளைக் காண்போம்.....

தக்கார் தகவு இலர் என்பது, அவர் அவர்
எச்சத்தால் காணப் படும்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     தக்கார் தகவிலர் என்பது --- இவர் நடுவு நிலைமை உடையவர், இவர் நடுவு நிலைமை இலர் என்னும் விசேடம்;

     அவரவர் எச்சத்தால் காணப்படும் --- அவரவருடைய நன்மக்களது உண்மையானும் இன்மையானும் அறியப்படும்.

      (தக்கார்க்கு எச்சம் உண்டாதலும் தகவிலார்க்கு இல்லையாதலும் ஒரு தலையாகலின், இருதிறத்தாரையும் அறிதற்கு அவை குறியாயின. இதனால் தக்காரையும் தகவிலாரையும் அறியுமாறு கூறப்பட்டது.)

பின்வரும் பாடல்கள், இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்....
  
தக்கார் வழிகெடாது ஆகும், தகாதவரே
உக்க வழியராய் ஒல்குவர், - தக்க
இனத்தினான் ஆகும் பழியும் புகழும்,
முத்தினான் ஆகும் மதி.    ---  சிறுபஞ்சமூலம்.

இதன் பதவுரை ---

     தக்கார் வழி கெடாது ஆகும் --- தகுதியுடையாரது சந்ததி,  என்றும் தளராது விருத்தி அடைவதாகும்.

     தகாதவர் உக்க வழியராய் ஒல்குவர் --- தகுதியற்றவர்  அழிந்த வழியை உடையவராய்த் தளர்வார்,

     பழியும் புகழும் தக்க இனத்தினான் ஆகும் --- ஒருவனுக்கு உண்டாகும் பழியும் புகழும் அவன் சேர்ந்த இனத்தினால் உள்ளதாக அமையும்.

     மதி மனத்தினான் ஆகும் - அறீவானது, ஒருவனது மனத்தின் அளவே உண்டாகும்.

         தகுதியுடையார் வழிமரபு கெடாதாகும். தகுதி இல்லாதார் கெட்டவழி மரபை உடையவராயே தளர்ச்சியை அடைவார். பழிக்கத்தக்க இனத்தின் சார்பினால் பழியே உண்டாகும். புகழுக்குத் தக்க இனத்தின் சார்பால் புகழ் உண்டாகும். தனது மனத்தின் அளவே உண்டாகும் அறிவும்.


தக்காரும் தக்கவர் அல்லாரும் தம்நீர்மை
எக்காலும் குன்றல் இலர்ஆவர்  --- அக்காரம்
யாவரே தின்னினும் கையாதாம், கைக்குமாம்
தேவரே தின்னினும் வேம்பு.     --- நாலடியார்.

இதன் பதவுரை ---

     தக்காரும் தக்கவர் அல்லாரும் தம் நீர்மை எக்காலும் குன்றல் இலராவர் --- தகுதி உடைய பெரியோரும், தகுதி இல்லாத தீயவர்களும், அவரவர் இயல்புக்கு ஏற்ப, முறையே நன்மையும் தீமையும் செய்யும் இயல்புகளில் இருந்து மாறமாட்டார்கள்.

     அக்காரம் யாவர் தின்னினும் கையாது --- வெல்லக்கட்டியை யார் தின்றாலும் கசக்காது,

     கைக்கும் தேவரே தின்னினும் வேம்பு --- ஆனால், வேப்பங்காயை தேவரே தின்றாலும் கசக்கும்.

         நல்லோரும் தீயோரும் அவரவர் இயல்பை எந்நிலையிலும் காட்டிக் கொண்டிருப்பர்.

செந்நெல்லால் ஆய செழுமுளை, மற்றும் அச்
செந்நெல்லே ஆகி விளைதலால் - அந்நெல்
வயனிறையக் காய்க்கும் வளவய லூர!
மகனறிவு தந்தை யறிவு.        --- நாலடியார்.

இதன் பதவுரை ---

     செந்நெல்லால் ஆய செழுமுளை மற்றும் அச் செந்நெல்லே ஆகி விளைதலால் --- சாலி என்னும் உயர்ந்த செந்நெல்லின் விதையினால் உண்டான செழுவிய முளையானது, செந்நெல் பயிராகவே தோன்றி விளைதலால்,

     அந்நெல் வயல் நிறையக் காய்க்கும் வளவயல் ஊர --- செந்நெல் செழித்து விளையும் வளம் மிக்க எழல்கள் நிறைந்த நாட்டுக்கு உரியவனே!

     மகன் இறிவு தந்தை அறிவு --- மகனுடைய அறிவு, அவனது தந்தையின் அறிவு வகையை ஒத்ததாக இருக்கும்.

         புதல்வனுடைய அறிவு ஒழுக்கங்களை விரும்புந் தந்தை, தான் நல்லறிவு நல்லொழுக்கம் உடையவனாய் விளங்குதல் வேண்டும்.


நோக்கி அறிகல்லாத் தம்உறுப்பு, கண்ணாடி
நோக்கி அறிப, அதுவேபோல் - நோக்கி
முகன்அறிவார் முன்னம் அறிப, அதுவே
மகன்அறிவு தந்தை அறிவு.     ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     நோக்கி அறிகல்லா தம் உறுப்பு --- தம் கண்ணால் நோக்கி அறியமுடியாத தமது உறுப்பாகிய முகத்தை,

     கண்ணாடி நோக்கி அறிப --- கண்ணாடியில் பார்த்துத் தெரிந்து கொள்வர்,

     அதுவே போல் --- அதே போல்,

     நோக்கி முகன் அறிவார் --- நோக்கி ஒருவன் முகத்தை அறிகின்றவர்கள்,

     முன்னம் அறிப --- முன்பு காணமுடியாத அவனது உட்கருத்தை அறிவார்கள்,

     அது --- உள்ளத்தின் கருத்தை அவர் முகம் நோக்கி அறிதல்,

     தந்தை அறிவு மகன் அறிவு --- தந்தையினது அறிவை அவன் மகனது அறிவு நோக்கி அறிதல் போலும்.

         முகத்தால் உள்ளக் கருத்து அறியப்படும். மகனது அறிவு தந்தையினது அறிவை ஒத்திருத்தல் போல, அகத்தினது கருத்தே முகத்திலும் அறியப்படும்.


மகன் உரைக்கும் தந்தை நலத்தை, ஒருவன்
முகன் உரைக்கும் உள்நின்ற வேட்கை, - அகல்நீர்ப்
புலத்து இயல்பு புக்கான் உரைக்கும், நிலத்து இயல்பு
வானம் உரைத்து விடும்.        --- நான்மணிக்கடிகை.

இதன் பதவுரை ---

     மகன் தந்தை நலத்தை உரைக்கும் - புதல்வன், - தனது தந்தையின் நலங்களைத் தனது நல்லியல்குளால் பிறர்க்கு அறி விப்பான்;

         ஒருவன் முகம் உள்நின்ற வேட்கை உரைக்கும் --- ஒருவனது முகமானது அவன் மனத்தில் உள்ள விருப்பத்தை, பிறர்க்குத் தனது குறிப்பினால் அறிவிக்கும்;

         அகல் நீர்ப்புலத்து இயல்பு புக்கான் உரைக்கும் --- அகன்ற நீரால் விளையும் வயலின் இயல்பை அந் நிலத்துக்கு உரியவன் அறிவிப்பான்;

         நிலத்து இயல்பு வானம் உரைத்துவிடும் --- உலகத்தார் இயல்பை, அந்த நிலத்துப் பெய்யும் மழையின் நிலை அறிவித்து விடும்.

     "நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை" என்பது ஔவைப் பிராட்டியார் அருளிய மூதுரை. நிலம் செழிப்பாக இருந்தால், நல்லவர்கள் உள்ள ஊர் என்று அறிந்து வானம் மழையைப் பொழிந்தது என்று அறியாலம்.


பழியின்மை மக்களால் காண்க, ஒருவன்
கெழியின்மை கேட்டால் அறிக, பொருளின்
நிகழ்ச்சியான் ஆக்கம் அறிக, புகழ்ச்சியால்
போற்றாதார் போற்றப் படும்.   ---  நான்மணிக்கடிகை.

இதன் பதவுரை ---

     பழி இன்மை மக்களால் காண்க --- ஒருவன் தான் பழிக்கப்படுதல் இல்லாமையை,  தன் மக்கட்பேற்றால் கண்டு கொள்க;

         ஒருவன் கெழி இன்மை கேட்டால் அறிக --- ஒருவன் தனக்கு நட்புரிமை இல்லாமையை அவனது கெடுதியால் கண்டு கொள்க;

         பொருளின் நிகழ்ச்சியால் ஆக்கம் அறிக - பொருள் வரவினால், ஒருவனுக்கு உண்டாகும் வளர்ச்சியைக் கண்டு கொள்க;

         புகழ்ச்சியால் போற்றாதார் போற்றப்படும் --- தான் பலராலும் புகழப்படும் புகழ்ச்சியினால், அவன் பகைவராலும் வணங்கப்படுவான்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...