திருக்குறள்
அறத்துப்பால்
இல்லற
இயல்
பத்தாம்
அதிகாரம் - இனியவை கூறல்
இந்த அதிகாரத்தில் வரும் இரண்டாம் திருக்குறள், "மனம் மகிழ்ந்து ஒருவருக்கு
வேண்டிய பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் சிறந்தது, அவரைக் கண்டபோதே முகம் மலர்ந்து
இனிய சொல்லைப் பேசுவது" என்கின்றது.
திருக்குறளைக் காண்போம்.....
அகன்அமர்ந்து
ஈதலின் நன்றே, முகன் அமர்ந்து
இன்சொலன்
ஆகப் பெறின்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
அகன் அமர்ந்து ஈதலின் நன்று ---
நெஞ்சு உவந்து ஒருவற்கு வேண்டிய பொருளைக் கொடுத்தலினும் நன்று;
முகன் அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின் ---
கண்டபொழுதே முகம் இனியனாய் அதனொடு இனிய சொல்லையும் உடையனாகப் பெறின்.
இன்முகத்தோடு கூடிய இன்சொல், ஈதல் போலப் பொருள் வயத்தது அன்றித் தன்
வயத்தது ஆயினும், அறநெஞ்சு உடையார்க்கு
அல்லது இயல்பாக இன்மையின் அதனினும் அரிது என்னும் கருத்தான், 'இன்சொலன் ஆகப் பெறின்' என்றார்.)
பின்வரும் பாடல்கள், இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக்
காணலாம்....
ஈகை
அரிதுஎனினும், இன்சொலினும்
நல்கூர்தல்
ஓஒ
கொடிது கொடிது, அம்மா! - நாகொன்று
தீவினைக்
கம்மியனால் வாய்ப்பூட்டிடப் படின்மற்று
ஆஆ
இவர் என்செய் வார். --- நீதிநெறி விளக்கம்.
ஈதல் இல்லையானாலும் இன்சொல்லேனும்
வேண்டும் என்பது கூறப்படும்.
இதன் பதவுரை ---
ஈகை அரிது எனினும் --- தாம் ஒருவர்க்குக்
கொடுத்தல் முடியாது என்றாலும், இன்சொலினும் --- இனிய மொழிகளைக்
கூறுதலினும், நல்கூர்தல் ---
வறுமையடைதல், ஓஓ கொடிது கொடிது ---
ஐயோ மிகவும் கொடுமை, நா கொன்று ---
பேசமுடியாதபடி நாவைச் சிதைத்து,
வினைக்
கம்மியனால் --- பாவமாகிய கம்மாளனால், வாய்ப்பூட்டு
இடப்படின் --- வாய்ப்பூட்டும் போடப்பட்டால், இவர் --- இவர்கள், ஆஆ --- ஐயோ , என்செய்வார் --- யாது செய்வார்கள்?
பாவம் வந்து வாயைப் பூட்டிவிட்டது:
அதனால் அவர்வாய் திறந்து இனிய சொற்கூறுவதும் அரிதாயிற்று. எனப் புகழ்வது போல
இகழ்ந்தனர் எனக்கொள்க.
பொன்குடையும்
பொன் துகிலும் பொன்பணியுங்
கொடுப்பதென்ன பொருளே
என்று
நல்கமல முகமலர்ந்தே, உபசார
நல்கமல முகமலர்ந்தே, உபசார
மிக்கஇன்சொல்
நடந்தால் நன்றே,
கல்கரையும் மொழிபாகர் தண்டலையார்
கல்கரையும் மொழிபாகர் தண்டலையார்
வளநாட்டில் கரும்பின்
வேய்ந்த
சர்க்கரையின் பந்தலிலே தேன்மாரி
சர்க்கரையின் பந்தலிலே தேன்மாரி
பொழிந்துவிடுந் தன்மை
தானே. --- தண்டலையார் சதகம்.
இதன்
பதவுரை ---
கல் கரையும் மொழி பாகர் தண்டலையார் வளநாட்டில் --- கல்லும் கரையும்படியான
இனிய சொற்களை உடைய உமாதேவியாரை
இடப்பக்கத்தில் கொண்ட திருத்தண்டலை இறைவருடைய வளம் பொருந்திய நாட்டிலே, பொன் குடையும் பொன்
துகிலும் பொன் பணியும்
கொடுப்பது என்ன பொருளோ --- பொன்னாலான குடையும்
அழகிய ஆடைகளையும், பொன்னால் ஆன அணிகலன்களையும் கொடுப்பது என்ன சிறப்பு உடையது தானா, என்று --- என்பதை அறிந்து, நல் கமலம் முகம் மலர்ந்தே
உபசாரம் மிக்க இன்சொல் நடத்தல் நன்றே --- அழகிய தாமரை மலர்
போல, முகத்திலே
மலர்ச்சியுடன், ஆதரித்து, மிகுந்த இனிய மொழிகளைக் கூறுதலே நல்லது, (அவ்வாறு செய்வது)
கரும்பின்
வேய்ந்த சர்க்கரையின் பந்தலிலே தேன்மாரி பொழிந்து விடும் தன்மை - கரும்பினால் ஆக்கப்பட்ட சர்க்கரைப் பந்தலிலே, தேன்மழை பொழிந்து விடுவது போல ஆகும்.
கருத்து --- சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்தாற் போல' என்பது பழமொழி. அகம் மலர்ந்தால் முகமும்
மலரும் என்பதால் "முகம் மலர்ந்தே" என்றார். "ஆதரித்தல்"
என்பது உள்ளத்தின் தொழில். "ஆதரிக்கின்றது
உள்ளம்" என்றார் திருஞானசம்பந்தப் பெருமானார்.
உள்ளமும் முகமும் மலர்ந்து தருவது இல்லாத
கொடையால் பயனில்லை என்பது கருத்து.
யாவர்க்கு
மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு
மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு
மாம்உண்ணும் போதுஒரு கைப்பிடி
யாவர்க்கு
மாம்பிறர்க்கு இன்னுரை தானே. --- திருமந்திரம்.
இதன்
பொருள் ---
எந்நிலையில்
உள்ளார்க்கும் இன்பக் கூறாகிய சிவனை அன்புடன்
பச்சிலை இட்டு வழிபடுதல் கூடும். பச்சிலையே செம்பைப் பொன்னாக்கும். அதுபோல் சிவ வழிபாடே
ஆருயிரைச் சிவமாக்கும். அது போல் எல்லாராலும் ஆன்களுக்கு வாயுறையாகிய புல் முதலியன
கொடுத்தல் இயலும். இது பொருட்கூறு ஆகும். இவ்வாயுறை கொடுப்பதன்கண் இருவேறு தொண்டுகள்
அடங்கியுள்ளன. ஒன்று நந்தன வனத்துக்குக் களையெடுத்தல். மற்றொன்று பசுவினுக்குப் புற்கொடுத்தல்.
அதுபோல் யாவர்களாலும் உண்ணும்போது ஒரு கைப்பிடி யுணவு உவகையுடன் பிறர்க்குக் கொடுத்தல்
இனிதின் இயலும். இது அறத்தின் கூறாகும். 'இரப்பவர்க்கு ஈயவைத்தார், ஈபவர்க்கு அருளும் வைத்தார்' என்பதனால் மேலது விளங்கும். அனைவர்க்கும்
எல்லா இடத்தும் எல்லாக் காலத்தும் எல்லாருடனும் உயிர் தளிர்ப்ப, உணர்வு திருவடியில் மூழ்கிக் குளிர்ப்பச், சொல்லானும் பொருளானும் இனிமை பயப்பதாய் அதுபோல்
கேள்வியினும் வினையினும் இனியதாய் உள்ள நன்மொழிகளை ஆராய்ந்து பார்த்துக் கூறும் இன்னுரை
இயலும் என்க. இது வீட்டின் கூறாகும். பச்சிலையின் மாண்பு 'வில்வம் அறுகுக்கு ஒவ்வா மென்மலர்கள்' என்னும் பிற்காலச் சான்றோர் மொழியானும் உணர்க.
No comments:
Post a Comment