திருக்குறள்
அறத்துப்பால்
இல்லற
இயல்
பதின்மூன்றாம்
அதிகாரம் - அடக்கம் உடைமை
இந்த அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறள், " இந்தப் பிறப்பில், ஆமையைப் போல், தனது
ஐம்பொறிகளையும் அடக்க வல்லவனாக ஒருவன் இருந்தால், அந்த வல்லமையானது
அவனுக்கு இனிவரும் பிறப்புக்களிலும் பாதுகாப்பாக அமையும்" என்கின்றது.
திருக்குறளைக்
காண்போம்...
ஒருமைஉள், ஆமைபோல் ஐந்து
அடக்கல் ஆற்றின்,
எழுமையும்
ஏமாப்பு உடைத்து.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
ஆமை போல் ஒருமையுள் ஐந்து அடக்கல் ஆற்றின்
--- ஆமைபோல, ஒருவன் ஒரு
பிறப்பின்கண் ஐம்பொறிகளையும் அடக்கவல்லன் ஆயின்;
எழுமையும் ஏமாப்பு உடைத்து --- அவ்
வன்மை அவனுக்கு எழுபிறப்பின் கண்ணும் அரண் ஆதலை உடைத்து.
(ஆமை ஐந்து
உறுப்பினையும் இடர் புகுதாமல் அடக்குமாறு போல இவனும் ஐம்பொறிகளையும் பாவம்
புகுதாமல் அடக்க வேண்டும் என்பார் 'ஆமை போல்' என்றார். ஒருமைக்கண் செய்த வினையின்
பயன் எழுமையும் தொடரும் என்பது இதனான் அறிக. இதனான் மெய்யடக்கம் கூறப்பட்டது.)
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு
விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...
பெருமை
சிறுமை அறிந்து எம் பிரான்போல்
அருமை
எளிமை அறிந்து அறிவார் ஆர்,
ஒருமையுள்
ஆமைபோல் உள் ஐந்து அடக்கி
இருமையும்
கெட்டு இருந்தார் புரை அற்றே. ---
திருமந்திரம்.
இதன்
பொருள் ---
பிறரது பெருமை சிறுமைகளை அறிந்து அவற்றிற்கு
ஏற்ப அரியனாயும், எளியனாயும் நிற்கின்ற
முறைமையை எங்கள் சிவபெருமான் அறிவதுபோல அறிவார் பிறர் யார்? ஒருவரும் இல்லை. அதனால், மேற்குறித்த அவன் அன்பர் இவ்வொரு
பிறப்பிலே, ஆமை தனது ஐந்து உறுப்புக்களையும்
தனக்குக் காவலாய் உள்ள ஓட்டிற்குள் அடக்குதல்போல, புலன் அவா ஐந்தனையும் தமக்கு அரணாய்
உள்ள அவனது திருவருளினுள் அடக்கி,
இம்மை
யின்பம், மறுமையின்பம்
இரண்டையும் உவர்த்துக் குற்றம் அற்று இருக்கின்றனர்.
ஒருமையுள்
ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும்
ஏமாப் புடைத்து. -குறள் 126
எனத்
திருவள்ளுவர் புலனடக்கத்திற்கு இவ்வுவமையைக் கூறினார்.
புலன்
அடக்கித் தம்முதற்கண் புக்குறுவர் போதார்
தலன்
நடக்கும் ஆமை தக. --- திருவருட்பயன்.
இதன்
பொருள்
---
ஆமை நிலத்தின் மேல் இயங்கும் பொழுது, தனக்குத் துன்பந் தருவதொன்று எதிரில்
வருவதாக உணர்ந்தால், அப்பொழுதே தனது
ஐந்து உறுப்புக்களையும் தனக்குக் காவலாய் உள்ள ஓட்டினுள்ளே அடக்கிக் கொண்டு
அசைவற்றுக் கிடக்கும். அதுபோல, அணைந்தோராகிய ஞானிகள்
உலக ஆசை தம்மைத் தாக்குவதாக உணர்ந்தால், உலகை
நோக்கிச் செல்கின்ற மனத்தை அவ்வாறு செல்லாமல் அடக்கித் தமக்கு முதலாய் உள்ள சிவனது
வியாபகத்துள்ளே ஒடுங்கி உலகை நினையாதிருப்பர்.
தடக்
கையால் எடுத்து, அவன் - தழுவி, கண்ண நீர்
துடைத்து, வேறு இருத்தி, மற்று இனைய சொல்லினான் -
அடக்கும்
ஐம் பொறியொடு கரணத்து அப்புறம்
கடக்கும்
வால் உணர்வினுக்கு அணுகும் காட்சியான்.
--- கம்பராமாயணம், தைலமாட்டு படலம்.
துன்பம் மிகுந்து இருந்த சுமந்திரனை, இராமபிரான் எடுத்து அணைத்துப்
பேசுதல்
இத்ன
பதவுரை ---
அடக்கும் ஐம்பொறியோடு --- புலன்வழிச் செல்லாது
அடக்கிய ஐம்பொறிகளோடு; கரணத்து அப்புறம் --- அந்தக்கரணமாகிய மன முதலியவற்றுக்கு அப்பால்; கடக்கும் ---கடந்து செல்கின்ற; வால் உணர்வினுக்கு --- தூய மெய்ஞ்ஞானத்துக்கு; அணுகும் காட்சியான் --- நெருங்கிப் புலனாகின்ற தோற்றம் உடைய பரம்பொருளாகிய
இராமன்;
அவன்
--- அந்தச் சுமந்திரனை; தடக்கையால் எடுத்து --- (தனது) பெரிய கைகளினால் தூக்கி; தழுவி --- தழுவிக்
கொண்டு; கண்ண நீர் துடைத்து ---
கண்ணிலிருந்து வரும் நீரைத் துடைத்து; வேறு இருத்தி --- தனியாக
இருக்கவைத்து; இனைய சொல்லினான் --- இத்தகைய சொற்களைச் சொன்னான்.
பொறிபுலன்களுக்கு அப்பாற்பட்டு அந்தக்கரணங்களையும்
கடந்து நிற்பவனாய் யோகிகளின் மெய்யுணர்வுக்கே புலப்படுபவனாய் உள்ளவன் பரம்பொருள்.
வனவாசத்தை ஒப்புக்கொள்ளாதவன் சுமந்திரன். ஆதலால், அவனை இசைவித்துத் திருப்பி அனுப்பவேண்டித்
தனியே அழைத்துச் சென்று பேசினான் இராமன்.
தாமரைக்
கண்ணொடு ஏர் தவத்தின் மாலையன்;
ஆமையின்
இருக்கையன்; வளைந்த ஆக்கையன்;
நாம
நூல் மார்பினன்; நணுகினான் அரோ-
தூ
மனத்து அருந்ததி இருந்த சூழல்வாய்.
--- கம்பராமாயணம், சடாயு உயிர்நீத்த படலம்.
இதன்
பதவுரை ---
தாமரைக் கண்ணொடு ஏர் தவத்தின் மாலையன் --- தாமரை மணிகளாலான
அழகிய தவத்திற்குரிய மாலை அணிந்தவனாய்; ஆமையின்
இருக்கையன் --- ஆமை போல் ஐந்து பொறிகளை அடக்கியவன்
போன்ற தோற்றமுடையவனாய்; வளைந்த ஆக்கையன் --- கூனிய உடம்பை யுடையவனாய்; நாமநூல் மார்பினன் --- பெருமை பொருந்திய பூணூலை அணிந்த மார்பை உடையவனாய்
இராவணன்; தூமனத்து அருந்ததி இருந்த
சூழல் வாய் நணுகினான் --- மாசற்ற மனமுள்ள அருந்ததி போன்ற
சீதை இருந்த பன்ன சாலை இடத்தை வந்தடைந்தான். அரோ ---
அசை.
அருந்ததி வசிட்ட முனிவரின் மனைவி. தன் கற்பின்
சிறப்பால் வட திசையில் விண்மீனாய்
விளங்குகிறாள் என்பது புராண மரபு.
No comments:
Post a Comment