009. விருந்தோம்பல் - 09. உடைமையுள் இன்மை





திருக்குறள்
அறுத்துப்பால்

இல்லற இயல்

ஒன்பதாம் அதிகாரம் - விருந்தோம்பல்

     இந்த அதிகாரத்தில் வரும் ஒன்பதாம் திருக்குறள், "செல்வத்துள் வறுமையாவது, பொருள் இருக்கும் பாலத்திலும் விருந்தினரைப் போற்றாத அறியாமை ஆகும்; அந்த அறியாமை பேதைகளிடத்தில் உள்ளது" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்...

உடைமையுள் இன்மை விருந்து ஓம்பல் ஓம்பா
மடமை, மடவார்கண் உண்டு.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை ---உடைமைக் காலத்து இன்மையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை;

     மடவார்கண் உண்டு --- அஃது அறிந்தார் மாட்டு உளதாகாது; பேதையார் மாட்டே உளதாம்.

      (உடைமை - பொருளுடையனாம் தன்மை. பொருளால் கொள்ளும் பயனை இழப்பித்து உடைமையை இன்மை ஆக்கலின், மடமையை இன்மையாக உபசரித்தார். பேதைமையான் விருந்தோம்பலை இகழின் பொருள் நின்ற வழியும் அதனால் பயன் இல்லை என்பதாம். விருந்தோம்பா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)

இதற்கு ஒப்புமை.....

நாவலொடு பெயரிய மாபெரும் தீவத்து
வித்தி நல்லறம் விளைந்த அதன்பயன்
துய்ப்போர் தம்மனைத் துணிச்சிதர் உடுத்து
வயிறுகாய் பெரும்பசி அலைத்தற்கு இரங்கி
வெயில் என முனியாது புயல் என மடியாது
புறங்கடை நின்று புன்கண் கூர்ந்து,முன்
அறங்கடை நில்லாது அயர்வோர் பலரால்,
ஈன்ற குழவி முகங்கண்டு இரங்கித்
தீம்பால் சுரப்போள் தன்முலை போன்றே         
நெஞ்சு வழிப்படூஉம் விஞ்சைப் பாத்திரத்து
அகன்சுரைப் பெய்த ஆருயிர் மருந்து அவர்
முகங்கண்டு சுரத்தல் காண்டல்வேட் கையேன்என..
                                ---  மணிமேகலை, பாத்திரம் பெற்ற காதை.

இதன் பதவுரை ---

     நாவலொடு பெரிய மாபெருந் தீவத்து --- மிகப் பெரிய சம்புத் தீவின்கண், வித்தி நல்லறம் விளைந்த அதன் பயன் --- நல்லறத்தை விதைத்து அதன்கண் விளைந்த பயனாகிய செல்வத்தை, துய்ப்போர் தம் மனை --- அனுபவிக்கும் செல்வருடைய இல்லத்தில், துணிச் சிதர் உடுத்து --- கிழிந்த சீரைகளை உடுத்திக்கொண்டு, வயிறுகாய் பெரும்பசி அலைத்தற்கு இரங்கி --- வயிற்றினைக் காய்கின்ற பெரிய பசி அலைத்தலால் வருந்தி, வெயில் என முனியாது புயல் என மடியாது --- மிக்க வெயில் என்று வெறுப்படையாமலும் மழை என்று ஓரிடத்தில் தங்காமலும் சென்று, புறங்கடை நின்று புன்கண் கூர்ந்து --- தலைவாயிலில் நின்றுகொண்டு துன்பம் மிகுந்து, முன் அறங்கடை --- முற்பிறப்பில் செய்த தீவினையால், நில்லாது அயர்வோர் பலரால் --- ஓரிடத்தில் நில்லாமல் அயர்கின்றவர் பலராவர், ஆகலின், ஈன்ற குழவி முகம் கண்டு இரங்கி --- பெற்ற குழவியினது முகத்தைக் கண்டு இரங்கி, தீமபால் சுரப்போள் தன்முலை போன்றே --- இனிய பாலைச் சுரக்கின்ற தாயின் கொங்கையைப் போல, நெஞ்சுவழிப் படூஉம் விஞ்சைப் பாத்திரத்து --- மனத்தின் வழியே ஒழுகும் விஞ்சையை உடைய இப்பாத்திரத்தின்கண், அகன் சுரைப்பெய்த ஆருயிர் மருந்து --- அகன்ற உள்ளிடத்திலிட்ட அரிய உயிர் மருந்தாகிய உணவு, அவர் முகம் கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன் என --- அவ்வறிஞர்களின் முகத்தைக் கண்டு சுரத்தலைக் காணும் விருப்பமுடையேன் என்று மணிமேகலை கூற...

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...