திருக்குறள்
அறத்துப்பால்
இல்லற இயல்
எட்டாம் அதிகாரம் - அன்புடைமை
இந்த அதிகாரத்தின் இரண்டாவது திருக்குறளில், திருவள்ளுவ நாயனார், அன்பு
இல்லாதவர்கள் பிறர்க்குப் பயன்படாதவர்கள் என்பதால், எல்லாப் பொருளையும்
தமக்கே உரியவர்கள் அவர்கள் என்றும், அன்பு உடையவர்கள் பொருளால் மட்டும் அல்லாது தமது
உடம்பாலும் பிறருக்கு உரியவர்கள் என்றும் காட்டினார்.
எலும்பு என்பது ஆகுபெயராய் உடம்பை
உணர்த்தியது.
தமது உடம்பாலும் பிறருக்கு உதவுபவர்கள்
என்பது, சோழர் குலத்தில்
உதித்தவராகிய,
சிபிச்
சக்கரவர்த்தியையும், விருத்திராசுரனை வெல்லும்பொருட்டு தனது முதுகெலும்பை
இந்திரனுக்குத் தந்து உதவிய ததீசி முனிவரையும், அந்தணர் வடிவம் கொண்டு
வந்து யாசித்த இந்திரனுக்கு, தனது கவசகுண்டலங்களைக் கொடுத்த கர்ணன் முதலான
பிறரையும் குறிக்கும்.
தன்னை இழந்தும் பிறர் நலம் காணும் வள்ளலாய்
வாழ்ந்தவர் சூரியகுலத் தோன்றலாகிய சிபி என்னும்
சக்கரவர்த்தி. அவர் தம் வள்ளல் தன்மையை
உலகறியச் செய்ய எண்ணிய இந்திரன் பருந்தாகவும், இயமன் புறாவாகவும் உருக் கொண்டனர். புறாவினைப் பருந்து துரத்த, புறா சிபியிடம் அடைக்கலம் புகுந்தது. ''என் இரையைக் கொடு'' என்று பருந்து
சிபியைக் கேட்க, சக்கரவர்த்தியோ, தன்பால் அடைக்கலம் புகுந்த ஒன்றனைத் தருதல் இயலாது என மறுத்து, ஈடாக வேறு எதனை வேண்டினும் தருவதாகக் கூறினான். அதற்கு உடன்பட்ட
பருந்து, அந்தப் புறாவின் எடை அளவுக்குச் சிபியின்
உடலில் இருந்து ஊன் தந்தால் போதும் என்றது.
மகிழ்ந்த சிபி, புறாவினை ஒரு
தட்டில் வைத்து, தன் உடல் தசையில்
பகுதியை துலாக்கோலின் வேறு தட்டில் இட்டான். ஆனால், தன் உடல் உறுப்புகளை எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக அரிந்து வைத்த போதும் துலாக்கோல்
சமன் அடையாது, புறாவின் தட்டு
தாழ்ந்தே நின்றது. பின்னர், தானே தட்டில் ஏறி நின்றனன். தட்டுகள் சமநிலை உற்றன.
அப்போது இந்திரனும் இயமனும் தத்தம் உண்மை உருவோடு தோன்றி அவர்க்கு வேண்டிய
வரங்களைத்
தந்து போயினர் என்பது வரலாறு.
"புறவு ஒன்றின்
பொருட்டாகத் துலை புக்க
பெருந்தகைதன் புகழில் பூத்த
அறன்
ஒன்றும் திரு மனத்தான். அமரர்களுக்கு
இடர் இழைக்கும் அவுணர் ஆயோர்
திறல்
உண்ட வடி வேலான். ‘’தசரதன்’’ என்று.
உயர்
கீர்த்திச் செங்கோல் வேந்தன்.
விறல்கொண்ட
மணி மாட அயோத்திநகர்
அடைந்து. இவண் நீ மீள்தல்!’ என்றான்".
"இன் உயிர்க்கும் இன்
உயிராய்
இரு நிலம் காத்தார் என்று
பொன்
உயிர்க்கும் கழலவரை
யாம் போலும். புகழ்கிற்பாம்?-
மின்
உயிர்க்கும் நெடு வேலாய்! -
இவர் குலத்தோன். மென் புறவின்
மன்
உயிர்க்கு. தன் உயிரை
மாறாக வழங்கினனால்"
என்று
கம்பநாட்டாழ்வார் போற்றி உள்ளார்.
"நிலமிசை
வாழ்நர் அலமரல் தீரத்
தெறுகதிர்க்
கனலி வெம்மை தாங்கிக்
கால்
உணவாகச் சுடரொடு கொட்கும்
அவிர்சடை
முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக்
கூருகிர்ப்
பருந்தின் ஏறுகுறித்து ஒரீஇத்
தன்
அகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி
அஞ்சிச் சீரை புக்க
வரையா
ஈகை உரவோன் மருக"
என்று
புறநானூற்றுப் பாடலிலும் சிபியின் பெருமை போற்றப்பட்டு இருப்பது காண்க.
இனி, திருக்குறளைக் காண்போம்.
அன்பு
இலார் எல்லாம் தமக்கு உரியர், அன்பு
உடையார்
என்பும்
உரியர் பிறர்க்கு.
இதற்குப்
பரிமேலழகர் உரை.....
அன்பிலார் எல்லாம்
தமக்கு உரியர்
--- அன்பு இலாதார் பிறர்க்குப் பயன்படாமையின் எல்லாப் பொருளானும் தமக்கே உரியர்;
அன்புடையார் என்பும் பிறர்க்கு உரியர்
--- அன்பு உடையார் அவற்றானே அன்றித் தம் உடம்பானும் பிறர்க்கு உரியர்.
இத் திருக்குறளையும், பெரியபுராணத்தையும் ஓதி உணர்ந்து தெளிந்த, குமார பாரதி
என்னும் பெரியார் தாம் இயற்றிய "திருத்தொண்டர் மாலை" என்னும்
நூலில்,
மூர்த்தி
நாயனாரின் திருத்தொண்டினை, மேற்படி திருக்குறளுக்கு விளக்கமாக அமைத்துப்
பாடிய பாடல் ஒன்று...
சேர்த்திமுழங்
கைஎலும்பும் தேயச்செஞ் சந்தனமா
மூர்த்திமது
ரேசருக்கு முன்புஅரைத்தார், - பார்த்தீரோ
அன்பிலார்
எல்லாம் தமக்குரியர், அன்புடையார்
என்பும்
உரியர் பிறர்க்கு.
பாண்டி நாட்டிலே, மதுரைப்பதியிலே, வணிகர் குலத்திலே மூர்த்தி நாயனார்
என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவபத்தியில் சிறந்தவர். அன்பையே திருவுருவாக்
கொண்டவர்.
நாயனார் சொக்கலிங்கப் பெருமானுக்குத்
சந்தனக் காப்பு அணிவதைத் தமக்கு உரிய திருத்தொண்டாகக் கொண்டு வாழ்ந்து வந்தார்.
வரும் நாளில், வடுகக் கருநாடக
மன்னன் ஒருவன் தென்னாடு போந்து,
பாண்டியனை
வென்று, மதுரைக்கு
அதிபதியானான். அவன், சமண சமயத்தைத்
தழுவித் திருநீறு அணியும் சிவனடியார்களுக்குத் தீங்கு இழைத்து வந்தான். அவன், தீங்குக்கு இடையே, மூர்த்தி நாயனாரின் திருத்தொண்டும்
நடந்து வந்தது.
கருநாடக மன்னன், மூர்த்தியாருக்குப் பல இடையூறுகள்
புரியத் தொடங்கினான். மூர்த்தியார் தம் திருத்தொண்டில் வழுவினாரில்லை. அது கண்ட
மன்னன், நாயனார் சந்தனக்
கட்டைகளைப் பெறாதவாறு தடைகளை எல்லாம் செய்தான்.
நாயனார் மனம் வருந்தலாயிற்று. வருத்த மேலீட்டால், "இக் கொடுங்கோலன் என்று மாய்வான்? இந் நாடு திருநீற்று நெறியினைத்
தாங்கும் வேந்தனை என்றே பெறும்?"
என்று
எண்ணி எண்ணிச் சந்தனக் கட்டையைத் தேடிப் பகல் முழுவதும் திரிந்தார். சந்தனக் கட்டை
எங்கும் கிடைக்கவில்லை.
திருக்கோயிலுக்குச் சென்று,
"இன்று
சந்தனக் கட்டைக்கு முட்டு நேர்ந்தால் என்ன? அதைத் தேய்க்கும் என் கைக்கு எவ்வித
முட்டும் நேரவில்லை" என்று கருதி, ஒரு
சந்தனக்கல் மீது தமது முழங்கையை வைத்துத் தேய்த்தார். இரத்தம் பெருகிப் பாய்ந்தது.
எலும்பு வெளிப்பட்டது. எலும்புத் துளைகள் திறந்தன. மூளை ஒழுகிற்று. அதைக் கண்டு
பொறாத ஆண்டவன் அருளால், "ஐயனே! மெய்யன்பின்
முனிவால் இதைச் செய்யாதே. இராச்சியம்
எல்லாம் நீயே கைக்கொண்டு கொடுங்கோலனால் விளைந்த தீமைகளை ஒழித்து, உன் திருப்பணியைச் செய்து, நமது சிவலோகத்தை அடைவாயாக" என்று
ஒரு வானொலி எழுந்தது. நாயனார் நடுக்குற்றுக் கையைத் தேய்த்தலை நிறுத்தினார். அவரது
கை ஊறு நீங்கிப் பழையபடி ஆயிற்று.
அன்று இரவே அக் கொடிய மன்னன்
இறந்துபட்டான். அடுத்த நாள் காலை அவனுக்குத் தகனக் கிரியைகள் செய்யப்பட்டன.
அவனுக்குபு புதல்வர்கள் முதலிய அரசுரிமைத் தாயத்தார் எவரும் இல்லாமையால், எவரை அரசராக்குவது என்று அமைச்சர்கள்
ஆலோசித்து, முடிவாக, ஒரு யானையைக் கண்கட்டி விடுதல்
வேண்டுமென்றும், அது எவரை எடுத்துக்
கொண்டு வருகிறதோ, அவர் அரசர் ஆதல்
வேண்டும்என்றும் தீர்மானித்தார்கள். அவர்கள் தீர்மானித்தவாறே, ஒரு யானையை முறைப்படி அருச்சித்து, ஓர் ஏந்தலை எடுத்து வருமாறு பணித்துத், துகிலால் அதன் கண்ணைக் கட்டி
விட்டார்கள். யானை தெருக்களிலே திரிந்து, மூர்த்தி
நாயனார் முன்னே போய்த் தாழ்ந்து,
அவரை
எடுத்துப் பிடரியில் வைத்தது. மூர்த்தியார் "இறைவன் திருவருள் சுரப்பின், இவ் வையத்தை நான் தாங்குவேன்"
என்று நினைந்து, திருக்கோயில்
புறத்தில் நின்றார். அமைச்சர்கள் மூர்த்தி நாயனாரை அரசராகக் கொண்டு அவர்
திருவடியில் விழுந்து வணங்கி, அவரை மண்டபத்திற்கு
அழைத்துச் சென்று சிங்காசனத்தில் வீற்றிருக்கச் செய்தார்கள்.
முடிசூட்டற்குரிய கிரியைகள்
தொடங்கப்பட்டன. அப்போது, நாயனார், மந்திரிகளை நோக்கி, "சமணம் அழிந்து, சைவம் ஓங்கினால் நான் அரசாட்சியை ஏற்றல்
கூடும்" என்றார். அதற்கு எல்லாரும் இசைந்தனர். பின்னும் நாயனார், "எனக்குத் திருநீறு
அபிடேகப் பொருளாகவும், கண்டிகை கலனாகவும், சடைமுடி முடியாகவும் இருத்தல்
வேண்டும்" என்று கூறினார். அதற்கும் அமைச்சர் முதலானோர் உடன்பட்டனர். அம்
முறையில் முடி சூட்டு விழா நன்கு நடைபெற்றது. நாயனார் திருக்கோயிலுக்குப் போய்ச்
சொக்கநாதரைத் தொழுது யானை மீது ஏறி அரண்மனை சேர்ந்தார்.
மூர்த்தி நாயனார், பிரமசரியத்தில் உறுதிகொண்டு, திருநீறு, கண்டிகை, சடைமுடி ஆகிய மூன்றையும் அணிந்து, சைவம் ஓங்கப் பன்னெடு நாள் ஆட்சி
புரிந்து, சிவபெருமான் திருவடி
நீழலை அடைந்தார்.
அன்பிலாதார் பிறர்க்குப் பயன்படாமையின்
எல்லாப் பொருளாலும் தமக்கே உரியர். அன்புடையார் அவற்றானே அன்றித் தமது உடம்பானும்
பிறர்க்குரியர் எனத் திருவள்ளவர் கூறியருளினமை காண்க.
திருக்குறளின் பெருமையை உலகறியச் செய்ய வந்த
நூல்களுள் ஒன்று, பிறைசை சாந்தக்
கவிராயர் என்பார் இயற்றிய "இரங்கேச வெண்பா" என்னும் நீதி சூடாமணி
ஆகும். இந் நூலில், இத் திருக்குறளுக்கு விங்ககமாக அமைந்த ஒரு பாடல்....
வெற்பின்
சிறகு அரிய வெந் என்பு அளித்து,முனி
இப்புவியைக்
காத்தான், இரங்கேசா! -
நற்புகழாம்
அன்பிலார்
எல்லாம் தமக்கு உரியர், அன்புடையார்
என்பும்
உரியர் பிறர்க்கு.
இப்
பாடலின் பதவுரை
---
இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே!
வெற்பின் சிறகு அரிய --- இந்திரன் மலைகளின் சிறகுகளை வெட்டும்படி, முனி - ததீசி முனிவர், வெந் என்பு அளித்து ---
தமது முதுகெலும்பைக் கொடுத்து, இப் புவியைக்
காத்தான் --- இந்தப் பூலோகத்தை மலை அரக்கர் துன்பத்தினின்றும் காப்பாற்றினார்.
(ஆகையால், இது) நன்மை புகழாம் ---
நல்ல கீர்த்தியைத் தரத் தகுந்த அன்பு இல்லார் --- பிறர்மேல் அன்பு இல்லாதவர்கள், எல்லாம் தமக்கு உரியர் --- தங்களுடைய
உடல் பொருள் ஆவியாகிய எல்லாமும் தமக்கே உரியராவார், அன்பு உடையார் ---
பிறர்மேல் அன்புடையவர்கள், பிறர்க்கு என்பும் உரியர் --- பிறர்க்குத் தம்முடைய
எலும்பையும் உரிமையாக்கச் சித்தமாய் இருப்பார்கள் (என்பதை விளக்குகின்றது).
கருத்துரை --- உண்மை அன்பு, உடல் எலும்பை உதவவும் உடன்படும்.
விளக்கவுரை --- முற்காலத்தில்
மலைகளுக்குச் சிறகுகள் இருந்தன. அவைகள் தாம் நினைத்த இடங்களுக்குப் பறந்து சென்று ஊர்களையும்
அவைகளில் உள்ள மக்களையும், மேல் விழுந்து கொன்று
பாழாக்கின. எல்லாரும் இந்திரனை வேண்டிக் கொண்டதனால், அவன் அவைகளின் சிறகுகளை வெட்டி உலகத்திற்கு
உபகாரம் பண்ண எண்ணினான். தன்னுடைய வச்சிராயுதம் மழுங்கி இருந்தமையால் அங்ஙனம்
செய்ய அவனால் ஆகவில்லை. உடனே, அவன் பூலோகத்தில்
தவம் செய்துகொண்டிருந்த ததீசி முனிவரைக் கண்டு, "ஐயனே! அடியேனுடைய வச்சிராயுதம் மழுங்கினமையால், அதனால் மலைகளின் சிறகுகளை வெட்டி
இப்பூலோகத்து உயிர்களுக்கு உபகாரம் செய்ய முடியவில்லை. தேவரீருடைய முதுகெலும்பால்
வேறொரு புதிய வச்சிராயுதம் செய்துகொண்டால், அவைகளை நான் சிறகு அரிந்து அடக்கி
விடுவது நிச்சயம். ஆகையால், அதை எனக்கு
அருளவேண்டும்" என்று தன் குறையிரந்து வேண்டினான். அது கேட்டவர், முதல் எழு வள்ளல்களில் ஒருவராகையால், "ஏ, சுராதிப! ஜீவகாருண்யமே எமக்கு
முதற்படியாய் உள்ளது. அதுவே அன்பை வெளிப்படுத்துவது. இச் சரீரம் நிலையற்றது. இது
யாருக்குச் சொந்தம்? செத்தால் நாய்க்கும் பேய்க்கும் ஈக்கும்
எறும்புக்கும், காக்கைக்கும் கழுகுக்கும்
சொந்தம், எனக்கும் சொந்தம், உணக்கும் சொந்தம். இது ஒரு சாக்குப்பை.
இருகாலில் செல்லும் பேய்த்தேர்,
இது
நீர்க்குமிழி போன்றது. இது இருக்கும் இப்பொழுதே பல்லுயிர்க்கும் உபகாரம்
புரியவேண்டும். இந்தா, இதை எடுத்து உனது
விருப்பம் போல் செய்துகொள்" என்றார்.
தமது ஜீவனைக் கபாலமூலமாய் வெளிப்படுத்தி விட்டுக் கட்டைப் பிணமாய்
இருந்தார். அதுகண்ட இந்திரன் அவருடைய ஜீவகாருண்யத்தையும் அன்பையும் வியந்தபடியே, அந்த உடலின் முதுகெலும்பைக் கொண்டு ஒரு
புதிய வச்சிராயுதம் செய்து, அதனால் மலைகளின்
சிறகுகளைக் கொய்து, பல்லுயிரையும் காத்தான்.
பிறர்மேல் அன்பற்ற சுயநலப் பிரியர்கள்
தமது உடல் பொருள் ஆவி முன்றும் தம்மது என்று தாம் இருப்பர். அன்பு உடையார் அங்ஙனம்
இன்றித் தமது கண்ணைப் பிடுங்கி அப்பின கண்ணப்பரைப் போல், தமது உயிரையும் பிறர்க்கு வழங்கச்
சித்தமாய் இருப்பார்கள். பிரதி உபகாரம் கருதி செய்ய மாட்டார்கள். "கைம்மாறு
வேண்டா கடப்பாடு, மாரி மாட்டு
என்ஆற்றும் கொல்லோ உலகு" என்றபடி பிரதி உபகாரம் வேண்டாமலே பகைவர்க்கும் நன்றி
செய்வார்கள்.
இத்
திருக்குறளுக்கு ஒப்புமையாக அமைந்த பாடல்கள்....
‘நெகுதற்கு ஒத்த நெஞ்சும்,
நேயத்தாலே ஆவி
உகுதற்கு
ஒத்த உடலும்,
உடையேன்; உன்போல் அல்லேன்;
தகுதற்கு
ஒத்த சனகன்
தையல் கையைப் பற்றிப்
புகுதக்
கண்ட கண்ணால்,
போகக் காணேன்' என்றான். --- கம்பராமாயணம், நகர்நீங்கு படலம்.
இதன்
பதவுரை ---
நெகுதற்கு ஒத்த நெஞ்சும் --- உருகுதற்குப் பொருந்திய
மனமும்; நேயத்தாலே --- அன்பினால்; ஆவி உகுதற்கு ஒத்த உடலும் உடையேன் --- உயிர் விடுதற்குப் பொருந்திய உடலையும் உடையவன்
யான்; உன்போல் அல்லேன்-- - உன்னைப்போல் வன்மனமும், வலிய உடலும் உடையேனல்லேன்; தகுதற்கு ஒத்த சனகன் தையல்
கையைப் பற்றி --- தகுதிக்கு ஒத் தசனக ராசனுக்கு
மகளாகிய சானகியின் கையைப் பிடித்துக்
கொண்டு; புகுதக் கண்ட கண்ணால்
--- அயோத்தி நகருக்குள் (நீ) புகுவதைப் பார்த்த கண்களால்; போகக் காணேன்' --- (அயோத்தியை விட்டுக்)
காடு
செல்வதைக் காண மாட்டேன்;' என்றான்-.
ஈரம்வெய்
யோர்க்கு நசைகொடை எளிது. --- முதுமொழிக் காஞ்சி.
இதன்
பதவுரை ---
ஈரம் --- அன்புடைமையை, வெய்யோர்க்கு ---
விரும்பியிருப்பார்க்கு, நசை கொடை ---
பிறருக்கு விருப்பமாகிய பொருளைக் கொடுப்பது, எளிது --- எளிதாம்.
பிறரிடம் அன்புள்ளவர் அவர் எதை
விரும்பிக் கேட்டாலும் எளிதில் கொடுப்பர்.
No comments:
Post a Comment