010. இனியவை கூறல் - 09. இன்சொல் இனிதீன்றல்





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

பத்தாம் அதிகாரம் - இனியவை கூறல்

     இந்த அதிகாரத்தில் வரும் ஒன்பதாம் திருக்குறள், "பிறர் சொல்லிய இனிய சொல்லானது, தனக்கு இன்பத்தைத் தருதலை அனுபவித்து அறிகின்ற ஒருவன், கடுமையான சொற்களைப் பிறரிடத்தில் வழங்குவது என்ன பயனைக் குறித்தது?" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம் ---

இன்சொல் இனிது ஈன்றல் காண்பான், எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் --- பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பம் பயத்தலை அனுபவித்து அறிகின்றவன்;

     வன்சொல் வழங்குவது எவன்கொல் --- அது நிற்கப் பிறர்மாட்டு வன்சொல்லைச் சொல்வது என்ன பயன் கருதி?

       ('இனிது' என்றது வினைக்குறிப்புப் பெயர். கடுஞ்சொல் பிறர்க்கும் இன்னாதாகலின், அது கூறலாகாது என்பது கருத்து.)

      திருக்குளின் பெருமையை விளக்க வந்த நூல்களுள், மாதவச் சிவஞான யோகிகள் அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" ஒன்று ஆகும்.  இந்த நூலில், இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ள பாடலை...

இன்சொல் இராமன் இயம்ப, இரேணுகைசேய்
துன்ப மொழியே புகன்றான், சோமேசா! - அன்புடைய
இன்சொல் இனிதுஈன்றல் காண்பான், எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.

         இனியவை கூறலாவது மனத்தின்கண் உவகையை வெளிப்படுப்பனவாகிய இனிய சொற்களைச் சொல்லுதல்.  இதுவும் விருந்தோம்புவார்க்கு இன்றியமையாததாம்.

இதன்பொருள்---

         சோமேசா! அன்புடைய இன்சொல் --- அன்போடு கூடிய பிறர் கூறும் இன்சொல், இனிது ஈன்றல் காண்பான் --- தனக்கு இன்பம் தருவதை அநுபவித்து அறிகின்றவன், வன்சொல் வழங்குவது --- அத்தகைய இன்சொல் தம்மிடத்து இருப்பவும் பிறரிடத்து வன்சொல்லைச் சொல்லுதல், எவன் --- என்ன பயன் கருதியோ?

         இராமன் --- இரகுவம்சத்தில் தோன்றிய தசரத புத்திரனாகிய சீராமன், இன்சொல் இயம்ப --- இனிய சொற்களைச் சொல்ல, இரேணுகை சேய் --- இரேணுகையின் புத்திரனாகிய பரசுராமன், துன்ப மொழியே புகன்றான் --- துன்பத்தைத் தரும் கடும் சொற்களையே கூறினான் ஆகலான் என்றவாறு.

         கடும்சொல் பிறர்க்கு இன்னாதாகலின், அது கூறலாகாது என்பது கருத்து.

         இராமன் விசுவாமித்திரரோடு மிதலை புகுந்து சிவன் வில்லை ஒடித்துச் சீதையை மணந்து அயோத்திக்குப் புறப்பட்டு வருகையில், எதிர்ப்பட்டு இராமனை நெக்கி சமதக்நி புத்திரனான பரசுராமன் பலவகைத் தீமொழிகளைக் கூறி விஷ்ணு வில்லைத் தந்து அதனை ஒடித்தால் பின் தான் போர் செய்வதாகக் கூறினான். பரசுராமன் விஷ்ணுவின் ஆறாவது அவதாரம். தசரதராமன் விஷ்ணுவின் ஏழாவது அவதாரம்.

     சிவன் வில்லை, சனகன் அவையில் ஒடித்து, சீதாதேவியை மணம் முடித்து, மிதிலையில் இருந்து, தயரதன் முதலானோர் அயோத்திக்குத் திரும்பும் வழியில் பரசுராமர் எதிர்ப்படுகின்றார். அவரைப் பார்த்து, தசரதன் மிகவும் அஞ்சுகின்றார்.

     பரசுராமர், இராமபிரானைப் பார்த்து, "சிவபெருமான் வில் முன்பே முறிந்த வில்; அதனை முறித்ததற்காகக் கர்வம்   கொள்ளாதே" எனக் குற்றம் கூறும் பரசுராமர் மிகப்பெரும் கர்வத்தோடு பேசுகிறார்.  "உன் தோள் வலிவைச்  சோதனையிடவும், என் தோள் தினவைச் சிறிது அடக்கிக் கொள்ளவும் இங்கு வந்தேன். வேறோர் காரியமில்லை" என்கிறார் பரசுராமர்.
     "இருபத் தொரு தலைமுறைகள், உலகத்தில்;  முடியுடை  முடி சூடிய வேந்தர்கள் அனைவரையும், பகைவர் தசை மேல் வெம்மை கொண்டெழும் பரசு எனும் கருவியின் முனையால் வேரோடு நீங்கக் களையெடுத்துக் கொன்று; அவர்கள் தசையிலிருந்து பெருகிய குருதியினைக்  குளமாக்கி, அக்குருதித் துறையிலே; இறந்தார்க்குச் செய்ய   வேண்டிய முறைப்படி என் தந்தைக்குச் செய்யத்தக்க  கடன்களைச் செய்து முடித்தேன். அதன் பிறகு என் அரிய  வெகுளியை அடக்கி வந்துள்ளேன். அதன் பின்பு, நான் வென்ற உலகங்களையெல்லாம் காசிப முனிவருக்குத் தானமாகத்   தந்தேன். பெரும்பகைகள் அனைத்தையும் அடக்கி வந்தேன்.  ஒப்பற்றதான அரிய மகேந்திர மலையிலே தங்கியிருந்தேன்; நீ வில்லை முறித்ததனால் எழுந்த ஓசையானது, அவ்விடத்தில் வந்து என் காதுகளில் மோதியதால், அதுகேட்டு வெகுண்டு இங்கு வந்தடைந்தேன்; வலிமையுடையவன் நீ என்றால், இந்த வில்லை வளைத்திடு. உன்னோடு யான் போர் செய்ய உள்ளேன்" என்றார் பரசுராமர்..
     பரசுராமர் இவ்வாறு கூற, இவற்றைக்  கேட்டு நின்ற இராமபிரானும் புன்னகை பூத்து, மகிழ்ச்சியால் விளக்கம்   பெற்ற முகத்தினனாகி, "திருமால் வலிமையினால் எடுத்துப்  பயின்ற வெற்றி வில்லைத் தருக" என்று கூற;  பரசுராமர்  உடனே  வில்லைக் கொடுத்திட்டார். இராமபிரான் வாங்கிக் கொண்டு,  நெருங்கிப் பெருத்த சடையினை உடையோனாகிய  பரசுராமன் அஞ்சுமாறு, அவ்வில்லைத் தன் தோள்வரையில்  வருமாறு வளைத்துக் கொண்டு கூறுவான்.  
     "மண்ணுலகத்தை ஆண்ட அரசர்களை எல்லாம் நீ   கொன்றாய். ஆகவே நான் உன்னைக் கொல்லலாம். ஆனாலும், வேதங்களை அழியாது காக்கும் வித்தினைப்  போன்ற மேலோன் ஒருவனின் மகன் நீ! அன்றியும்  தவவேடமும் தரித்து உள்ளாய். ஆகவே. உன்னைக் கொல்லக்கூடாது. எனினும் வில்லில் நான் நாண் ஏற்றித் தொடுத்துள்ள இந்த அம்பு தவறுதல் கூடாது. இந்த அம்புக்குக் குறியாகும் பொருள் யாது? காலம் தாழ்த்தாமல் கூறுக" என்றான் இராமபிரான்.
     இதைக் கேட்ட பரசுராமர், இராமபிரானைப் புகழ்கின்றார். "நீதியின் வடிவானவனே!;  நீ சினம் கொள்ளாதே. நீ  இவ்வுலகில் உள்ளோர் யாவர்க்கும் முதல்வன் என்பதனை நான் கண்கூடாக அறிந்தேன்.  துழாய் மாலை அணிந்து,  சக்கரம் ஏந்திய திருமாலே! வேதியனே!; வெள்ளிய பிறைச் சந்திரனைச் சூடியுள்ள சிவபெருமான்  முன்பு கையில் பற்றியிருந்த வில்லானது  பிளந்து முறிவதே அல்லாமல், உனது கையில் பிடித்தற்கும் போதாது" என்றார் பரசுராமர்.
     "பொன்னால்  செய்யப்பட்டு அணிதற்குரிய வீரக்   கழலையும், அழகினையும் கொண்ட திருவடிகளை உடையவனே!  நீ மின்னுகின்ற சக்கரப்படையை ஏந்திய  திருமால் என்பது உண்மையானதால்; உலகினுக்கு இனி.  உலகத்து மக்கட்கு துன்பங்கள் எப்படி இருக்கும்? நான்  இப்பொழுது உனக்குத் தந்த பழைய உன்னுடைய வில்லும்; உன்னுடைய வலிமைக்கு ஏற்றது ஆகாது" என்று மேலும் கூறினார் பரசுராமர்.
     மேலும், "நீ இப்போது எய்யப் பிடித்திருக்கிற அம்பானது; இடையிலே வீணாகாதபடி, என்னால்  செய்யப்பட்ட  தவத்தின் பயன் அனைத்தையும் இலக்காகக் கொண்டு அழிக்க வேண்டுகிறேன்" என்று பரசுராமர் கூற, அப்போது.  இராமபிரானின் கை நெகிழ்ந்த உடனே,  அம்பும் உடனே  சென்று, பரசுராமர்  ஈட்டியிருந்த தவத்தின் பயன்கள்  யாவற்றையும் வாரிக் கவர்ந்து கொண்டு அம்பறாத் தூணியை மீண்டும் வந்தடைந்தது.
     "கழுவித் தூய்மை செய்யப் பெற்ற நீல மணியின்  நிறமுடைய இராமனே! அழகிய துழாய் மாலை அணிந்தவனே! மூவுலகங்களிலும் வாழ்கின்ற அனைவர்க்கும்   புகல் இடமாகிற புண்ணியனே! நீ கருதி வந்துள்ள பொருள்கள்  எல்லாம் கருதியவாறே இனிதே நிறைவேறுவன ஆகுக. நான் விடை பெறுகின்றேன்என்று கூறி வணங்கிச் சென்றார் பரசுராமர்   

"நீதியாய்! முனிந்திடேல்; நீ இங்கு யாவர்க்கும்
ஆதி; யான் அறிந்தனென்; அலங்கல் நேமியாய்!
வேதியா இறுவதே அன்றி. வெண் மதிப்
பாதியான் பிடித்த வில் பற்றப் போதுமோ?"

"பொன்னுடை வனை கழல் பொலம் கொள் தாளினாய்!
மின்னுடை நேமியான் ஆதல் மெய்ம்மையால்;
என் உளது உலகினுக்கு இடுக்கண்? யான் தந்த
உன்னுடை வில்லும். உன் உரத்துக்கு ஈடு அன்றால்".

"எய்த அம்பு இடை பழுது எய்திடாமல். என்
செய் தவம் யாவையும் சிதைக்கவே!என.
கை அவண் நெகிழ்தலும். கணையும் சென்று. அவன்
மை அறு தவம் எலாம் வாரி. மீண்டதே".

     இந்த வரலாறு, கம்பராமாயணம், பாலகாண்டத்தில், பரசுராமப் படலத்தில் உள்ளது.

     அடுத்து,  சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து, சென்ன மல்லையர் பாடிய "சிவசிவ வெண்பா" என்னும் நூலில், இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்த பாடல்...

குன்று எடுத்தான் இன்சொல் கொடுகருணை வாரிதியைச்
சென்று எடுத்து இன்புற்றான், சிவசிவா! - நன்றெடுத்த
இன்சொல் இனிது ஈன்றல் காண்பான், எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.                      

     இப் பாடலில், முன்பு செருக்கினால் இாவணன், திருக்கயிலை மலையைப் பெயர்த்து எடுத்ததால் துன்பப்படும் நிலை உண்டானதும், பின்பு அன்பினால் இனிய வழிபாடு செய்யவும் வேண்டியவற்றைப் பெற்றதும் கூறப்பட்டது.

     குன்று - மலை. திருக்கயிலாயமலை.  எடுத்தான் - இலங்கைவேந்தன், இராவணன். வாரிதி - கடல்.

இதனைச்  சேக்கிழார் பெருமான்,

"மண்ணுலகில் வாழ்வார்கள்
     பிழைத்தாலும் வந்து அடையில்
கண்ணுதலான் பெருங்கருணை
     கைக்கொள்ளும் எனக்காட்ட
எண்ணமிலா வல்லரக்கன்
     எடுத்து முறிந்து இசைபாட
அண்ணல் அவற்கு அருள்புரிந்த
     ஆக்கப்பாடு அருள்செய்தார்

என்று திருஞானசம்பந்தர் புராணத்திலே அருளிச்செய்தார்.

     பின்வரும் பாடல்கள், இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...


புன்சொல்லும் நன்சொல்லும் பொய்இன்று உணற்கிற்பார்
வன்சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ
புன்சொல் இடர்ப்படுப்பது அல்லால் ஒருவனை
இன்சொல் இடர்ப்படுப்பது இல். ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     ஒருவனை --- ஒருவனை, புன்சொல் இடர்ப் படுப்பதல்லால் --- வன்சொல் இடருள் படுத்துவதல்லது, இன்சொல் இடர்ப்படுப்பது இல் --- இனியசொல் இடருள் படுத்துவது இல்லை. (ஆகவே), புன் சொல்லும் நன் சொல்லும் பொய்யின்று உணர்கிற்பார் --- இன்னாத சொல்லாலும் இனிய சொல்லாலும் வரும் பயனைக் குற்றமின்றி அறியவல்லார், வன்சொல் வழியராய் --- வன்சொற் சொல்லி அதன் வழியே ஒழுகுபவராய், வாழ்தலும் உண்டாமோ --- வாழ்ந்திருத்தலும் உண்டோ.

இன்சொலான் ஆகும் கிளைமை, இயல்பில்லா
வன்சொல்லின் ஆகும் பகைமை, மன் - மென்சொல்லின்
ஓய்வில்லா ஆர்அருளாம், அவ்வருள் நன்மனத்தான்
வீவில்லா வீடாய் விடும்.                  ---  சிறுபஞ்சமூலம்.

இதன் பதவுரை ---

     இன் சொலால் கிழமை ஆகும் --- இன்சொல்லால்  ஒருவற்கு நட்புரிமை உண்டாகும்; இனிப்பு இலா வன் சொலான் வசை மனம் ஆகும் --- இன்பமில்லாத வன்சொல்லினால் கெட்ட கருத்து உண்டாகும்; மென்சொலின் நாவினால் அருள்மனம் ஆகும் --- நயமான சொல்லை உடைய நாக்கினால் இரக்க எண்ணம் உண்டாகும்;
அம் மனத்தால் வீவு இலா வீடு ஆய்விடும் --- அவ்வருள் நெஞ்சத்தால் அழிவில்லாத வீடு பேறு உண்டாகும்.

         இன்சொல்லால் நட்புரிமை யுண்டாகும்; வன்சொல்லால் கெடுநினைவு உண்டாகும்; நயமான சொற்களால் அருள் நெஞ்சம் உண்டாகும்; அவ்வருள் நெஞ்சத்தால் அழிவிலாத வீடுபேறு உண்டாகும்.

         இன்சொல்லால் நல்லோர் நட்பும், அந் நட்புரிமையால் நல்லெண்ணமும், அவ்வெண்ணத்தால் அருள் நெஞ்சமும், அதனால் வீடுபேறும் உண்டாகும் என்பது.


இன்சொலால் அன்றி, இருநீர் வியனுலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே, - பொன்செய்
அதிர்வளையாய்! பொங்காது அழல்கதிரால், தண்என்
கதிர்வரவால் பொங்குங் கடல்.               --- நன்னெறி.

இதன் பொருள் ---

     பொன்னால் ஆன ஒலிக்கின்ற வளையல்களை அணிந்தவளே!  கடலானது குளிர்ந்த நிலவு ஒளியால் பொங்கும். வெப்பம் நிறைந்த கதிரவன் ஒளியால் பொங்காது.  அது போல, பரந்த இந்த உலகத்தில் உள்ளவர்கள் இன்சொல்லால் மட்டுமே மகிழ்வார்கள். கடும் சொல்லால் மகிழ மாட்டார்கள்.

         வியனுலகம் - பரந்த உலகம். தழற்கதிர் - கதிரவன்ஒளி. தண்ணென்கதிர் - நிலவுக்கதிர். இரு - பெரிய. உலகம் - இங்கே உலகத்திலுள்ளவர்களை. கதிர் - நிலா.




No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...