013. அடக்கம் உடைமை - 02. காக்க பொருளா




திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

பதின்மூன்றாம் அதிகாரம் - அடக்கம் உடைமை

     இந்த அதிகாரத்தில் வரும் இரண்டாம் திருக்குறள், "அடக்கத்தின் மேம்பட்ட செல்வமானது இல்லை. ஏனவே, அடக்கத்தினை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியால் காக்கவேண்டும்" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்...

காக்க பொருளா அடக்கத்தை, ஆக்கம்
அதனின் ஊங்கு இல்லை உயிர்க்கு.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     உயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் இல்லை --- உயிர்கட்கு அடக்கத்தின் மிக்க செல்வம் இல்லை;

     அடக்கத்தைப் பொருளா காக்க --- ஆதலால் அவ்வடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காக்க.

      (உயிர் என்பது சாதியொருமை. அஃது ஈண்டு மக்கள் உயிர்மேல் நின்றது, அறிந்து அடங்கிப் பயன் கொள்வது அதுவே ஆகலின்.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, பிறைசை சாந்தக் கவிராயர் பாடியருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

ஆன்ற சபையில் அடங்காச் சிசுபாலன்
ஏன்று இறந்தான் அன்றோ? இரங்கேசா! - சான்றோர்கள்
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை யுயிர்க்கு.

இதன் பதவுரை ---

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே!

      ஆன்ற சபையில் அடங்காத சிசுபாலன் --- பெரியோர்கள் சபையில், அடக்கம் இன்றிப் பேசின சிசுபாலன், ஏன்று இறந்தான் அன்றோ --- அதற்கேற்ற தண்டனை அடைந்து செத்தான் அல்லவா, (ஆகையால் இது) அடக்கத்தை --- நாவடக்கம் முதலியவைகளை, பொருளா --- பெரிய பொருளாக மதித்து, சான்றோர்கள் காக்க --- பெரியோர்கள் காக்கக் கடவர்கள், (ஏனெனில்) உயிர்க்கு --- மக்கள் உயிர்க்கு, அதனின் ஊங்கு --- அதைக் காட்டிலும் (பெரிய), ஆக்கம் இல்லை --- செல்வம் கிடையாது (என்பதை விளக்குகின்றது).

         கருத்துரை --- அடக்கமே பெரும் செல்வம்.

         விளக்கவுரை --- இராஜசூய யாக முடிவில் தருமர், அங்குள்ள முனிவர்களை நோக்கி, "முதற்பூசை யாருக்குச் செய்வது?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "கண்ணனுக்குச் செய்க" என்றனர். அங்கிருந்த சிசுபாலன் சும்மா இராமல்,  "என்னைப் போன்ற பெரியோர் இருக்க, இந்த இடைப்பயலோ முதற்பூசை பெறுபவன், இடையனோ மடையனோ, தெரியாதா" என்றான். முனிவர் சொன்னபடி கண்ணபிரானே முதற்பூசை பெற்றார். அவர் சிசுபாலனை எதிர்த்துத் தாக்கிக் கொன்றார்.  அவனுடைய அடக்கமின்மையால் அவன் உயிரிழந்தான்.


     பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...

அடங்கி அகப்படஐந்தினைக் காத்துத்
தொடங்கிய மூன்றினால் மாண்டீண் - டுடம்பொழியச்
செல்லும்வாய்க் கேமம் சிறுகாலைச் செய்யாரே
கொல்லிமேல் கொட்டுவைத் தார்.   ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     அடங்கி --- துறவறத்திற்கு விதிக்கப்பட்ட நெறியின்கண் தாம் அடங்கி ஒழுகி, ஐந்தினை அகப்பட காத்து --- ஐம் புலன்களையும் பொறிகள் மேற் சொல்லாதவாறு செறியப் பாதுகாவல் செய்து, தொடங்கிய --- தாம் செய்யத் தொடங்கிய துறவற நெறியில், மூன்றினால் மாண்டு --- மனம், மொழி, மெய் என்ற மூன்றானுந் தூயராய் மாட்சிமைப்பட்டு, ஈண்டு உடம்பு ஒழிய --- இவ்வுலகத்தின்கண் இவ்வுடம்பு ஒழிந்து நிற்க, செல்லும் வாய்க்கு ஏமம் சிறு காலை செய்யாரே --- இனிச் செல்ல இருக்கும் மறுமைக்கு உறுதியைக் காலம்பெறச் செய்யாதவர்களே, கொல்லி மேல் கொட்டு வைத்தார் --- தீயின் மீது நெல்லினைப் பெய்து பொரித்து உண்ணுபவரோடு ஒப்பர்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...