013. அடக்கம் உடைமை - 07. யாகாவார் ஆயினும்




திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

பதின்மூன்றாம் அதிகாரம் - அடக்கம் உடைமை

     இந்த அதிகாரத்தில் வரும் ஏழாம் திருக்குறள், "தம்மால் காக்கப்படவேண்டிய எல்லாவற்றையும் காக்கவில்லையாயினும், நாவினை மட்டுமாவது காக்கவில்லையானால், சொலு குற்றத்தில் அகப்பட்டு, தாமே துன்பம் அடைவர்" என்கின்றது.

     சோகம் என்பதன் விகாரம் ஆகிய "சோ" என்னும் சொல்லும் "காப்பர்" என்னும் சொல்லும் ஒன்றாகி, "சோகாப்பர்" என வந்தது. அல்லாப்பர், செம்மாப்பர் என்பது போல, சோகாப்பர் என்பது ஒரு சொல் ஆயிற்று.

திருக்குறளைக் காண்போம்....

யா காவார் ஆயினும் நா காக்க, காவாக்கால்
சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு. 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     யாகாவார் ஆயினும் நா காக்க --- தம்மால் காக்கப்படுவன எல்லாவற்றையும் காக்க மாட்டாராயினும் நாவொன்றனையும் காக்க,

     காவாக்கால் சொல் இழுக்குப்பட்டுச் சோகாப்பர் --- அதனைக் காவாராயின் சொற்குற்றத்தின்கண் பட்டுத் தாமே துன்புறுவர்.
        
      ('யா' என்பது அஃறிணைப் பன்மை வினாப்பெயர். அஃது ஈண்டு எஞ்சாமை உணர நின்றது. முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. சொற்குற்றம் - சொல்லின்கண் தோன்றும் குற்றம். 'அல்லாப்பர் செம்மாப்பர்' என்பன போலச் 'சோகாப்பர்' என்பது ஒரு சொல்.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடியருளிய, "முதுமொழிமேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

சோதி திறம் அறிந்து சொல்ல அறியாது சொல்லி,
வேதநிலை கண்டானும் மெய்ம்மறந்தான், --- ஆதலால்
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு.

இதன் பொருள் ---

     சோதி ---  சிவபெருமான். வேதநிலை கண்டான் ---  வியாசர். 

     வியாச முனிவர் ஒரு காலத்தில் காசிப் பதியில் திருமாலே முதல்வர் என்று கூறித் தம் கையைத் தூக்க, அதனைத் தூக்கியபடியே நிற்கும்படி நந்திதேவர் பணித்தனர் என்பது வரலாறு. கையை வெட்டியதாகக் கூறுவதும் உண்டு. 'ஐயிரு புராண நூல் அமலர்க்கு ஓதியும், செய்யபன் மறைகளும் தெரிந்தும் மாயையால், மெய்யறு சூள்புகல் வியாதன் நீட்டிய, கையடு நந்திதன் கழல்கள் போற்றுவாம்' என்னும் கந்தபுராணம், கடவுள்.19 செய்யுளை நோக்குக.

     அடுத்ததா, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, குமார பாரதி என்பார், பெரியபுணாத்தில் வரும் சத்தி நாயனாரின் வரலாற்றை வைத்து, "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் பாடிய ஒரு பாடல்..

அண்ணல் அடியாரை இகழ்ந்தார் நரகில் ஆழாதே
தண்ணளியால் நாத்தறித்தார் சத்தியார், - எண்ணம்உற
யா காவார் ஆயினும் நா காக்க, காவாக்கால்
சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு.

இதன் பொருள் ---

     சத்தி நாயனார், சோழநாட்டிலே வரிஞ்சியூரிலே வேளாளர் குலத்திலே அவதரித்தவர். சிவபெருமானிடத்துப் பேரன்பு கொண்டு திருத்தொண்டு செய்பவர். சிவனடி மறவாச் சிந்தையினர். சிவனடியார்களை இகழ்ந்து பேசும் அதிபாதகர் நாக்கை அரிதலாகிய அருமைத் திருத்தொண்டைப் பெருமையுறச் செய்து வந்தார். இவர் நெடுங்காலம் இப்பணியைச் செய்துகொண்டு இருந்து சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்.

         ஒருவர் தம்மால் காக்கப்படுவன எல்லாவற்றையும் காக்க மாட்டாராயினும் நா ஒன்றனையும் காக்க.  அதனைக் காவாராயின் சொற்குற்றத்தின்கண் பட்டுத் தாமே துன்புறுவர் எனத் திருவள்ளுவ நாயனார் அருளியது காண்க.

     இதற்கடுத்து,  இத் திருக்குறளுக்கு விளக்கமாக, மாதவச் சிவஞான யோகிகள் பாடியருளிய "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
                                                                       
எல்லாம் உணர்ந்தும் வியாதன் இயம்பியஅச்
சொல்லாலே நாஅயர்ந்தான், சோமேசா! - வல்லமையால்
யாகாவார் ஆயினும் நாகாக்க, காவாக்கால்
சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு.

         அடக்கம் உடைமையாவது மெய் மொழி மனங்கள் தீநெறிக்கண் செல்லாது அடங்குதல் உடையனாதல். அஃது ஏதிலார் குற்றம் போல் தன் குற்றமும் காணும் நடுவுநிலைமை உடையார்க்கே ஆகும்.

இதன்பொருள்---

         சோமேசா!

     யா காவார் ஆயினும் --- (தம்மால் காக்கப்படுவன) எல்லாவற்றையும் காக்க மாட்டாராயினும், வல்லமையால் நா காக்க --- (தமக்குள்ள) வன்மையால் நா ஒன்றனையும் காக்க, காவாக்கால் --- (அதனைக்) காவாராயின், சொல் இழுக்குப்பட்டு சோகாப்பர் --- சொல் குற்றத்தின்கண் பட்டு, (தாமே) துன்புறுவர், 

         வியாதன் --- பராசர முனிவர் புத்திரராகிய வேத வியாசர், எல்லாம் உணர்ந்தும் --- எல்லாப் பொருள்களையும் நன்கு அறிந்து வைத்தும், இயம்பிய அச் சொல்லான் --- (தாம்) கூறிய 'நாரணனே பரப்பிரமம்' என்னும் அப் பொய்மொழியான், நா இழந்தான் --- (நிமிர்ந்த கை மடக்க வல்லாமையே அன்றி) நாவும் எழாது நின்றார் ஆகலான் என்றவாறு.

         சொற்குற்றம் - சொல்லின்கண் தோன்றும் குற்றம்.  அல்லாப்பர், செம்மாப்பர் என்பன போலச் சோகாப்பர் என்பது ஒரு சொல்.

         காசித் தலத்தில் கங்காதீரத்தில் முனிவர்களுக்கு அறிவுறுக்கவேண்டிப் பரத்துவம் கூறப்புக்க வியாசமுனிவர் மனம் தெளியாமையில் கை எடுத்து,  "நாரணனே பரன்" என்று கூற, அக் கையும் நாவும் எழாது நிற்ப, அவர் கூற்று முழுப் பொய்யென முனிவர் அறிந்தொழிந்தார். திருமால் வியாச முனிவர் முன் தோன்றி, "யாவர்க்கும் மேலாம் அறவிலாச் சீர் உடையான் சிவனே என்று அறிதி" என்று கூறத் தெளிந்து பெருமானைப் போற்றி செய்து உய்ந்தார்.

     "முன்னைநான் மறையும் முறைப்பட நிறீஇய மன் இருஞ் சிறப்பின் வாதராயணனும் கையிழந்தனன், து பொய் மொழிந்து அன்றோ" என, குமரகுருபர அடிகள் சிதம்பர மும்மணிக் கோவையில் மாடி இருத்தல் காண்க.

     அடுத்ததா, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்... 

ஓங்கு தருக்கம் வாதவூரர் உழைச் செய்தபுத்தர்
மூங்கையராய்ச் சேர்ந்தார், முருகேசா! - ஆங்குஅதனால்
யாகாவார் ஆயினும் நாகாக்க, காவாக்கால்
சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு.

இதன் பொருள் ---
    
     முருகேசா --- முருகப் பெருமானே,

     வாதவூரர் உழை --- திருவாதவூரடிகளிடத்தே , ஓங்கு தருக்கம் செய்த புத்தர் --- பொய்ம்மை மிகுந்த சொற்போரைச் செய்த புத்தர்கள், மூங்கையராய்ச் சோர்ந்தார் --- ஊமையர்களாகித் தளர்ச்சியை அடைந்தார்கள். அதனால் --- ஆகையால், யா காவாராயினும் --- ஒருவர் காக்க வேண்டியவற்றுள் எதனைக் காக்காமல் போனாலும், நா காக்க --- நாவானது உண்மைக்கு மானான சொற்களைப் பேசாமல் அதனைப் பாதுகாத்தல் வேண்டும், காவாக்கால் --- அவ்வாறு காவாவிடின், சொல் இழுக்குப்பட்டு --- சொற்குற்றத்தின் கண்ணே அகப்பட்டுக்கொண்டு, சோகாப்பர் --- தாமே துன்பத்தை அடைவார்கள்.

         திருவாதவூரடிகளிடம் சொற்போரிட்ட புத்தர்கள் ஊமைகளாகித் துன்புற்றார்கள். ஒருவர் காக்க வேண்டியவற்றுள் எதனைக் காவாது ஒழியினும் நா ஒன்றினையேனும் பேசவேண்டிய வரம்பைக் கடந்து பேசாது காத்தல் வேண்டும் என்பதாம்.

     ஓங்கு தருக்கம் --- சொற்போர் முறையைக் கடந்து நெறியல்லாமல் செய்த சொற்போர்.

     மூங்கை --- ஊமை. சோகாத்தல் --- துன்புறுதல்.

புத்தர் ஊமையர் ஆன கதை

         திருவாதவூரடிகள் என்னும் மாணிக்கவாசகர் காலத்தில் ஈழ நாட்டில் புத்தர்கள் மிகுதியானார்கள். அவர்கள் எல்லா இடங்கட்கும் சென்று தங்களுடைய புத்தமதத்தைப் பரப்ப எண்ணினார்கள். சிதம்பரம் என இந்நாளில் வழங்கும் திருத்தில்லைக்கு வந்தார்கள். தில்லைவாழ் அந்தணர்களைக் கண்டு, "சொற்போர் செய்யுங்கள், அல்லது புத்தர்கள் ஆகுங்கள்" என்று கூறினார்கள். தில்லைவாழ் அந்தணர்கள் கூத்தப் பிரானுடைய குறிப்பின்படி மாணிக்கவாசகரைப் புத்தர்களோடு சொற்போர் செய்யச் செய்தார்கள். மாணிக்கவாசகர் ஈழநாட்டு அரசனுடைய ஊமைப் பெண்ணைக் கொண்டே புத்த குருக்களின் கேள்விகட்கு எல்லாம் மறுமொழி கூறச் செய்தார். ஆயினும் புத்தர்கட்கு நல்லறிவு உண்டாகவில்லை. அவர்கள் நெறி கடந்து குதர்க்க வாதத்தில் (நேர்மையற்ற சொற்போரில்) இறங்கினார்கள்.  மாணிக்கவாசகர் அவர்களனைவரும் ஊமைகளாகும்படி செய்தார்.  இதனால் புத்தர்கள் மிகுந்த துன்பத்தை அடைந்து வருந்தினார்கள்.

     அடுத்ததா, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து, சென்ன மல்லையர் பாடிய, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...                                                                 --
இறைமுருகன் முன்னின் றிசைத்தமொழி தேரான்
சிறையிருந்தான் முன், சிவசிவா! - புறவுறுப்பின்
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

இதன் பொருள் ---

     சிறையிருந்தான் --- நான்முகன். திருமுருகன் அயனைக் குட்டிச் சிறையிட்டது.

முருகப் பெருமான் அயனைச் சிறை புரிந்த வரலாறு

         குமாரக்கடவுள் திருவிளையாடல் பல புரிந்து வெள்ளி மலையின் கண் வீற்றிருந்தருளினர். ஒரு நாள் பிரமதேவர் இந்திராதி தேவர்களுடனும், கின்னரர், கிம்புருடர், சித்தர், வித்யாதரர் முதலிய கணர்களொடும் சிவபெருமானைச் சேவிக்கும் பொருட்டு திருக்கயிலாய மலையை நண்ணினர். பிரமனை ஒழிந்த எல்லாக் கணர்களும், யான் எனது என்னும் செருக்கின்றி, சிவபெருமானை வணங்கி வழிபட்டுத் திரும்பினார்கள். ஆங்கு கோபுர வாயிலின் வடபால் இலக்கத்து ஒன்பான் வீரர்களும் புடைசூழ நவரத்தின சிங்காசனத்தில் குமரநாயகன் நூறு கோடி சூரியர்கள் திரண்டாலென்ன எழுந்தருளி வந்து அருந்தார். அவர்  அடிமலர் தொழுது தோத்திரம் புரிந்து சென்றனர்.

     பிரமதேவர் குமரக் கடவுளைக் கண்டு வணங்காது, “இவன் ஓர் இளைஞன் தானே” என்று நினைத்து இறுமாந்து சென்றனர். இதனைக் கண்ட முருகப் பெருமான் சிவன் வேறு தான் வேறன்று, மணியும் ஒளியும்போல், சிவனும் தானும் ஒன்றே என்பதையும், முருகனாகிய தன்னை ஒழித்து சிவபெருமானை வழிபடுவோர்க்குத் திருவருள் உண்டாகாது என்பதையும் உலகினர்க்கு உணர்த்தவும், பிரமனுடைய செருக்கை நீக்கித் திருவருள் புரியவும் திருவுளங் கொண்டார்.

     தருக்குடன் செல்லும் சதுர்முகனை அழைத்தனர். பிரமன் கந்தவேளை அணுகி அகங்காரத்துடன் சிறிது கைகுவித்து, வணங்கிடாத பாவனையாக வணங்கினன்.

     கந்தப்பெருமான் “நீ யாவன்” என்றனர்.

     பிரமதேவர் அச்சங்கொண்டு “படைத்தல் தொழிலுடைய பிரமன்” என்றனன்.

     முருகப்பெருமான், அங்ஙனமாயின் உனக்கு வேதம் வருமோ?” என்று வினவினர்.

     பிரமன் “உணர்ந்திருக்கிறேன்” என்றனன்.

     “நன்று! வேத உணர்ச்சி உனக்கு இருக்குமாயின் முதல் வேதமாகிய இருக்கு வேத்தைக் கூறு,” என்று குகமூர்த்தி கூறினர்.

     சதுர்முகன் இருக்கு வேதத்தை "ஓம்" என்ற குடிலை மந்திரத்தைக் கூறி ஆரம்பித்தனன்.

     உடனே இளம் பூரணணாகிய எம்பெருமான் நகைத்து திருக்கரம் அமைத்து, “பிரமனே நிற்றி! நிற்றி! முதலாவதாகக் கூறிய `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை விளக்குதி" என்றனர்.

தாமரைத் தலை இருந்தவன் குடிலை முன் சாற்றி
மா மறைத்தலை எடுத்தனன் பகர்தலும், வரம்பில்
காமர் பெற்று உடைக் குமரவேள், "நிற்றி, முன் கழறும்
ஓம் எனப்படு மொழிப்பொருள் இயம்புக",ன்று உரைத்தான்.
                                                                                 ---கந்தபுராணம்.

ஆறு திருமுகங்களில் ஒரு முகம் பிரணவ மந்திரமாய் அமைந்துள்ள அறுமுகத்து அமலன் வினவுதலும், பிரமன் அக்குடிலை மந்திரத்திற்குப் பொருள் தெரியாது விழித்தனன். கண்கள் சுழன்றன; சிருட்டிகர்த்தா நாம் என்று எண்ணிய ஆணவம் அகன்றது; வெட்கத்தால் தலை குனிந்தனன். நாம் சிவபெருமானிடத்து வேதங்களை உணர்ந்து கொண்ட காலையில், இதன் பொருளை உணராமற் போனோமே? என்று ஏங்கினன்; சிவபெருமானுக்குப் பீடமாகியும், ஏனைய தேவர்களுக்குப் பிறப்பிடமாகியும், காசியில் இறந்தார்களுக்கு சிவபெருமான் கூறுவதாகியுமுள்ள தாரகமாகிய பிரணவ மந்திரத்தின் பொருளை உணராது மருண்டு நின்றனன்.

குமரக்கடவுள், “ஏ சதுர்முகா! யாதும் பகராது நிற்பதென்? விரைவில் விளம்புதி” என்றனர்.

பிரமன் “ஐயனே! இவ்வொரு மொழியின் பொருளை உணரேன்” என்றனன்.

     அது கேட்ட குருமூர்த்தி சினந்து, "இம்முதலெழுத்திற்குப் பொருள் தெரியாத நீ சிருட்டித் தொழில் எவ்வாறு புரிய வல்லாய்? இப்படித்தான் சிருட்டியும் புரிகின்றனையோ? பேதாய்!” என்று நான்கு தலைகளும் குலுங்கும்படிக் குட்டினார்.

சிட்டி செய்வது இத் தன்மையதோ?னச் செவ்வேள்
 குட்டினான் அயன் நான்குமா முடிகளும் குலுங்க”    
                                         ---கந்தபுராணம்.

பிரமதேவனது அகங்காரம் முழுதும் தொலைந்து புனிதனாகும்படி குமாரமூர்த்தி தமது திருவடியால் ஓர் உதை கொடுத்தனர். பிரமன் பூமியில் வீழ்ந்து அவசமாயினன். உடனே பகவான் தனது பரிசனங்களைக் கொண்டு பிரமனைக் கந்தகிரியில் சிறையிடுவித்தனர்.

வேதநான்முக மறையோ னொடும் விளை
  யாடியே குடுமியிலே கரமொடு
  வீரமோதின மறவா”               --- (காணொணா) திருப்புகழ்.

அயனைக் குட்டிய பெருமாளே”       ---- (பரவை) திருப்புகழ்.

ஆர ணன்றனை வாதாடி ஓருரை
 ஓது கின்றென வாராது எனாஅவன்
 ஆண வங்கெட வேகாவலாம்அதில்..... இடும்வேலா --- (வாரணந்) திருப்புகழ்.

      “.......................................படைப்போன்
அகந்தை உரைப்ப,மறை ஆதி எழுத்துஎன்று
     உகந்த பிரணவத்தின்உண்மை -- புகன்றிலையால்
சிட்டித் தொழில்அதனைச் செய்வதுஎங்ஙன் என்றுமுனம்
     குட்டிச் சிறைஇருத்தும் கோமானே”  --- கந்தர் கலிவெண்பா.

     நான்முகன் படைப்பக் கடவுள் தானே எனத் தனக்கு இருந்த அகந்தை காரணமாக நாவைக் காக்க முயலவில்லை.

     பின்வரும் பாடல்கள், இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...

காவாது ஒருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்
ஓவாது தன்னைச் சுடுதலால், - ஓவாதே
ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்து அமைந்த சொல்லார் கறுத்து.   ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     காவாது ஒருவன் தன் வாய் திறந்து சொல்லும் சொல் ---  அடக்காமல் சினத்தினால் ஒருவன் தன் வாய்விட்டுச் சொல்லிய சினச்சொல், ஓவாது தன்னைச் சுடுதலால் --- என்றைக்குமே தன்னை வருத்துதலால், ஓவாதே ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவுடையார் --- இடைவிடாமல் ஆராய்ந்து பண்பட்ட கேள்வி ஞானத்தை உடையவர்கள், எஞ்ஞான்றும் --- எப்பொழுதும், காய்ந்து அமைந்த சொல்லார் கறுத்து --- மனம் வெதும்புதலால் அமைந்த சுடுமொழிகளைச் சினந்து சொல்லமாட்டார்கள்.

         சினம் கொள்வது தன்னையே சுடுமாதலால், பண்பட்ட உள்ளமுடையோர் சினங்கொள்ளார்.


ஆவது கருதான் ஆகில்,
     அமைச்சர் சொல் கேளான் ஆகில்,
வீவது குறியான் ஆகில்,
     விளைவதும் உணரான் ஆகில்,
நாவது காவான் ஆகில்,
     அவனுக்கா நடந்து போரில்
சாவது பழுது அன்றோ
     சகத்துளோர் சாற்றுகின்றார்.    ---  வில்லிபாரதம், கிருட்டிணன் தூது.

இதன் பதவுரை ---

     (ஒருவன்), ஆவது கருதான் ஆகில் --- (தனக்கும் பிறர்க்கும்) நன்மையாகும் காரியத்தை ஆலோசியானானாலும், அமைச்சர் சொல் கேளான் ஆகில் --- மந்திரிகளது வார்த்தையைக் கேட்டு நடவானானாலும், வீவது குறியான் ஆகில் --- (தான்) அழிவதைச் சிந்தியானானாலும், விளைவதும் உணரான் ஆகில் --- (இம்மை மறுமைகளில் தனக்கு இனி) விளையும் பயன்களை அறியானானாலும், நா அது காவான் ஆகில் --- (தனது) நாக்கை (த்தீச்சொற் சொல்லாமல்) அடக்கிவையானானாலும், அவனுக்கு ஆ நடந்து --- அவனுக்கு உதவியாகச் சென்று, போரில் சாவது --- யுத்தத்தில் இறப்பது, பழுது --- குற்றமாகும்' என்று அன்றோ சகத்து உளோர் சாற்றுகின்றார் ---  என்றே உலகத்திலுள்ள  பெரியோர்கள்  எல்லோரும் சொல்லுகிறார்களன்றோ?

    ஆவது கருதாமை முதலாக இங்குக் கூறிய துர்க்குணங்களை உடைய துரியோதனனுக்கு உதவியாகச் சென்று போரில் இறத்தல் பழிபாவங்களைத் தருவதாதலால், அதனை ஒழித்தேன் என்பதாம்.

     "யாகாவாராயினு நாகாக்க காவாக்கால், சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு" என்ற திருக்குறளினாலும், மொழியடக்கம் மற்றை மெய்யடக்க மனவடக்கங்களினும் முக்கியமாதலை அறிக. 

 

1 comment:

  1. the explanation is very nice. apt examples. who is the author or commentator for these beautiful explanations?

    ReplyDelete

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...