திருக்குறள்
அறத்துப்பால்
இல்லற இயல்
ஏழாம் அதிகாரம் - மக்கள் பேறு
இந்த அதிகாரத்தில் வரும் ஒன்பதாவது
திருக்குறள், "பெற்றெடுத்த தன் மகனைத் தனது தொடையில்
வைத்த போது உண்டான மகிழ்ச்சியை விடவும், அவன் கல்வி கேள்விகளில் வல்லவன் என்று
அறிவு உடையார் சொல்லக் கேட்ட போது உண்டாகிய மகிழ்ச்சி பெரிது ஆகும்"
என்கின்றது.
பெண்மைக் காரணமாக தானாக அறிய மாட்டாமையால், கேட்ட தாய்
என்றதாக,
பரிமேலழகர்
காட்டினார்.
அது பொருந்தாத உரை என்று சிலர் கூறுவர்.
அதிலும் ஒர் உண்மை உள்ளதை எண்ணிப் பார்க்க வேண்டும். கற்றவர்கள் தன்னை விடவும்
கல்வி கேள்விகளில் சிறந்தோரை மதிப்பர். அன்பு காரணமாக, குற்றம் குறை தோன்றாது.
தான் தனது மகனை அன்பு காரணமாக வியந்து மகிழ்வதை விடவும், கல்வி கேள்விகளில்
சிறந்தவர்கள்,
நடுநிலையோடு
நின்றே யாரையும் புகழ்வர். என்பதால், "கேட்ட தாய்" என்று
கொண்டார் எனக் கொள்ளுதல் பெரிதும் பொருந்தும். அறிவு உடையோர் சிந்திக்கலாம்.
இனி, திருக்குறளைக்
காண்போம் ---
ஈன்ற
பொழுதின் பெரிது உவக்கும்,
தன்
மகனைச்
சான்றோன்
எனக் கேட்ட தாய்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
ஈன்ற பொழுதின் பெரிது
உவக்கும்
--- தான் பெற்ற பொழுதை மகிழ்ச்சியினும் மிக மகிழும்;
தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் ---
தன் மகனைக் கல்வி கேள்விகளால் நிறைந்தான் என்று அறிவுடையோர் சொல்லக் கேட்ட தாய்.
(கவானின் கண்கண்ட பொது உவகையினும்
சால்புடையான் எனக்கேட்ட சிறப்பு உவகை பெரிதாகலின், 'பெரிது உவக்கும்' எனவும், 'பெண்ணியல்பால் தானாக அறியாமையின் கேட்ட
தாய்' எனவும் கூறினார்.
அறிவுடையார் என்பது வருவிக்கப்பட்டது. சான்றோன் என்றற்கு உரியர் அவர் ஆகலின். தாய்
உவகைக்கு அளவு இன்மையின் அஃது இதனான் பிரித்துக் கூறப்பட்டது.)
திருக்குறளின் பெருமையை உலகுக்கு அறிவிக்க வந்த
நூல்களுள், குமார பாரதி
என்னும் பெரியார் இயற்றிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலும்
ஒன்று. அதில்,
மேற்குறித்த
திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ள ஒரு பாடலைக் காண்போம்.
உற்றஇசை
ஞானிதான் ஓங்குபுகழ்ச் சுந்தரரை
பெற்றதினும்
அன்புமிகப் பெற்றாளே - முற்றுஅறிவால்
ஈன்ற
பொழுதின் பெரிது உவக்கும் தன்மகனைச்
சான்றோன்
எனக்கேட்ட தாய்.
சடைய நாயனாருடைய மனைவியார்
இசைஞானியார். தம்பிரான் தோழராகிய
சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் தன் மணி வயிறு வாய்த்துப் பெறுதற்குரிய பெரும்பேற்றை
அடைதலால் மிக்க புகழைப் பெற்றவர். சுந்தரர் சிவபெருமான் திருவருளைப் பெற்று உலகம்
எல்லாம் சைவசமயத்தைப் பரப்பும் நிலைகளையும், பற்பல அற்புதங்களையும் கேட்டுப்
பெரிதும் மகிழ்ந்திருந்தார்.
தான் பெற்ற பொழுதை மகிழ்ச்சியினும்
மிமகிழும் தன்மகனைக் கல்வி கேள்விகளால் நிறைந்தான் என்று அறிவுடையோர் சொல்லக்
கேட்ட தாய் எனத் திருவள்ளுவ நாயனார் அருளினார்.
மீன்உண்
கொக்கின் தூவி அன்ன
வாலநரைக்
கூந்தநல் முதியோள் சிறுவன்
களிறு
எறிந்து பட்டனன் என்னும் உவகை,
ஈன்ற
ஞான்றினும் பெரிதே, கண்ணீர்
நோன்கழை
துயல்வரும் வெதிரத்து
வான்பெயத்
தூங்கிய சிதரினும் பலவே. --- புறநானூறு.
இதன் பொருள் ---
மீனை விரும்பி உண்ணுகின்ற கொக்கின் மெல்லிய இறகு
போல,
மிகவும்
வெளுத்து நரைத்த கூந்தலை உடைய, வயதில் முதிர்ந்தவளான இவளின் இளைய மகன், போரில் எதிர் வந்த
யானை மேல் வேலை எறிந்து, அதைக் கொன்றதோடு, பாவம், தானும் இறந்து பட்டான்.
அவன் இப்படி இறந்தான் என்ற சேதியை, கண்டவர் சொல்லக் கேட்ட அந்த வயதான தாய் அடைந்த மகிழ்ச்சி, அவனைப் பெற்ற போது
அவள் அடைந்த மகிழிச்சிக்கும் மேலானதே. இந்த மகிழ்ச்சியில் அவள் கண்கள் வடித்த ஆனந்தக்
கண்ணீர்,
வலிமை
உடைய மூங்கில் புதரில் உள்ள மூங்கில் இலைகள், வான மழையில் நனைந்து சிந்தும்
நீர்த் துளிகளிலும் மிக அதிகமானது.
நரம்பு
எழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
முளரி
மருங்கின் முதியோள் சிறுவன்,
படை
அழிந்து மாறினன் என்று பலர் கூற,
மண்டு
அமர்க்கு உடைந்தனன் ஆனயின், உண்ட என்
முலை
அறுத்திடுவென் யான் எனச் சினைஇக்
கொண்ட
வாளொடு படுபிணம் பெயராச்
செங்களம்
துழவுவோள், சிதைந்து வேறாகிய
படுமகன்
கிடக்கை காணூஉ
ஈன்ற
ஞான்றினும் பெரிது உவந்தனளே. --- புறநானூறு.
இதன் பொருள் ---
நரம்பு தோன்றி வற்றிய நிரம்பாத மெல்லிய
தோள்களையும்; தாமரை இலை போன்ற
அடிவயிற்றினையும் உடைய முதியவள் கண்டு, என்
மகன் போருக்கு
அஞ்சி இறந்தான் என்பது உண்மையாயின்;
அவன் வாய் வைத்துண்ட என் முலையை அறுத்து
எறிவேன் யான் என்று சினந்து சொல்லி;
சொல்லிய வண்ணமே செய்தற்கு வாளைக்
கையிலேந்திப் போர்க்களம் சென்று;
அங்கே இறந்து கிடக்கும் மறவர்
பிணங்களைப் பெயர்த்துப் பெயர்த்துப் பார்த்துக் கொண்டே; குருதி படிந்து
சிவந்த போர்க்கள முற்றும் சுற்றி வருபவள்; விழுப்புண் பட்டுச் சிதைந்து வேறு
வேறாகத் துணிபட்டுக் கிடக்கின்ற தன் மகனது கிடக்கையைக் கண்டு; அவனைப் பெற்ற நாளிற் கொண்ட உவகையினும்
கொண்டாள்.
‘மனிதர், வானவர், மற்றுளோர் அற்றம் காத்து
அளிப்பார்
இனிய
மன்னுயிர்க்கு இராமனின் சிறந்தவர் இல்லை ;
அனையது
ஆதலின், அரச! நிற்கு உறு பொருள்
அறியின்,
புனித
மாதவம் அல்லது ஒன்று இல்’ எனப் புகன்றான்.
--- கம்பராமாயணம், மந்திரப் படலம்.
இதன்
பதவுரை ---
அரச ! --- மன்னனே! ; மனிதர், வானவர், மற்றுளோர் --- மக்களும், தேவரும், நரகரும் ஆகிய ; இனிய மன் உயிர்க்கு ---இனிமை
நிறைந்த நிலைபெற்ற உயிர்களுக்கு ;
அற்றம்
காத்து அளிப்பார் --- கேடு வாராமல் பாதுகாத்து அருள் புரிபவர் ; இராமனின் சிறந்தவர் இல்லை
--- இராமனைப் போலச் சிறந்தவர் மற்றொருவர் இல்லை; அனையது ஆதலின் --- இராமனது
சிறப்பு அத்தன்மையதாக இருத்தலின் ;
நிற்கு
உறு பொருள் அறியின் --- உனக்குச் செய்தற்குரிய செயலை ஆராய்ந்தால்; புனித மாதவம் அல்லது ---
தெய்வத்தன்மையுடைய துறவறம் அன்றி ;
ஒன்று இல் --- மற்றொரு செயல் இல்லை ;’ எனப் புகன்றான் --- என்று சொன்னான் (வசிட்ட
முனிவன்).
இனிய
மன்னுயிரைக் காத்து அளிக்க இராமனில் சிறந்தவர் இல்லை என, வசிட்டன் சொன்ன சொல்லைக் கேட்ட அளவில் தயரதன்
மகிழ்ச்சியால் கூறுகின்றான்...
மற்று
அவன் சொன்ன வாசகம் கேட்டலும், மகனைப்
பெற்ற
அன்றினும், பிஞ்ஞகன்
பிடித்த அப் பெருவில்
இற்ற
அன்றினும். எறிமழுவாளவன் இழுக்கம்
உற்ற
அன்றினும் பெரியதோர் உவகையன் ஆனான்.
--- கம்பராமாயணம்,
மந்திரப் படலம்.
இதன்
பதவுரை ---
அவன் சொன்ன வாசகம் கேட்டலும் --- வசிட்ட முனிவன்
சொன்ன சொற்களைக் கேட்டவுடன் ; மகனைப் பெற்ற அன்றினும் --- நெடுங்காலம்
மகப்பேறு இல்லாதிருந்து வேள்வி செய்து இராமனை மகனாகப் பெற்ற அந்த நாளினும் ; பிஞ்ஞகன் பிடித்த அப்
பெரு வில் --- தலைக்கோலமுடைய சிவபிரான் ஏந்திய பிறரால் வளைத்தற்கு அரியஅந்தப் பெரிய
வில்லானது ; இற்ற அன்றினும் --- இராமன்
ஆற்றலுக்குப் போதாமல் கணத்தில் ஒடிந்த நாளினும் ; எறி மழுவாளவன் --- அரசர்களை
வெட்டி வீழ்த்திய மழு என்னும்
படை ஏந்திய பரசுராமன் ; இழுக்கம் உற்ற அன்றினும் --- தோல்வி அடைந்த
நாளினும் ; பெரியது ஓர் உவகையன் ஆனான்-- - மிகுந்த ஒப்பற்ற
மகிழ்ச்சி உடையவனாக ஆயினான்.
இராமன் பிறந்த நாளில் தன் ஒருவன் துயரமும், வில் முரிந்த அன்று சனகனாகிய பிறன் ஒருவன்
துயரமும், பரசுராமன் தோல்வியுற்ற
நாளில் மன்னர் குலமாகிய பலரின் துயரமும் அகன்றன. ஆதலின், ஒன்றின் மற்றொன்று மிக்க மகிழ்ச்சிக்கு அடியாய்
அமைந்தது.
இராமன் முடிசூடினால் உயிர்க்குலம் அனைத்தும் இன்புறுமாதலின் அவற்றினும்
இன்று பெரியதோர் உவகையன் ஆயினான். ஈன்ற பொழுதினும் சான்றோன் எனக் கேட்ட பொழுது தாய்
மகிழ்வாள் என்பர் திருவள்ளுவர். தாயே அன்றித் தந்தையும் மகிழ்வான் என்பது இதனால் போந்தது.
No comments:
Post a Comment