010. இனியவை கூறல் - 10. இனிய உளவாக






திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

பத்தாம் அதிகாரம் - இனியவை கூறல்

     இந்த அதிகாரத்தின் இறுதியில் வரும் இத் திருக்குறள், "இனிய சொற்கள் இருக்கும்போது, துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, இனிய கனிகள் இருக்கும்போது, காயை நுகர்தல் போன்றது" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்....

இனிய உள ஆக, இன்னாத கூறல்,
கனிஇருப்பக் காய் கவர்ந்து அற்று. 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     இனிய உளவாக இன்னாத கூறல் --- அறம் பயக்கும் இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க, அவற்றைக் கூறாது பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறுதல்;

     கனி இருப்பக் காய் கவர்ந்தற்று --- இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க, அவற்றை நுகராது காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும்.

      ('கூறல்' என்பதனான் சொற்கள் என்பது பெற்றாம். பொருளை விசேடித்து நின்ற பண்புகள் உவமைக்கண்ணும் சென்றன. இனிய கனிகள் என்றது ஔவை உண்ட நெல்லிக்கனி போல அமிழ்தானவற்றை. இன்னாத காய்கள் என்றது காஞ்சிரங்காய் போல நஞ்சானவற்றை. கடுஞ்சொல் சொல்லுதல் முடிவில் தனக்கே இன்னாது என்பதாம்.)

     இத் திருக்குறளில், ஔவைப் பிராட்டியார், அதியர்கோமான் என்னும் வள்ளலிடம் இருந்து, அமுதின் தன்மையினை உடைய ஒரு நெல்லிக்கனியைப் பெற்று நீண்ட காலம் உயிர் வாழ்ந்து இருந்தார் என்ற வரலாற்றினைக் குறிப்பித்தார் பரிமேலழகர்.

     பின்வரும் புறநானூற்றுப் பாடல் காண்க.

வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை
ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போரடு திருவில் பொலந்தார் அஞ்சி
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
 நீல மணிமிடற்று ஒருவன் போல
 மன்னுக, பெரும! நீயே! தொல் நிலைப்
பெருமலை விடர் அகத்து அருமிசைக் கொண்ட
சிறிஇலை நெல்லித் தீங்கனி குறியாது,
ஆதல் நின் அகத்து அடக்கிச்
 சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே.

     ஔவையார் உண்ட நெல்லிக்கனி அவரை நீண்ட வாழத் தந்தது. அதுபோலவே, ஒருன் உரைக்கும் இனிய சொல்லும், கேட்பவரைத் துன்புறுத்தாமல், அவரது வாழ்நாளை மிகுவிக்கும். துன்பத்தால் வாழ்நாள் குறையும். இன்பத்தால் அது நேராது.

     பின்வரும் பாடல்கள், இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்....

வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்
பட்டுருவுங் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.     ---  நல்வழி.

இதன் பதவுரை ---

     வேழத்தில் பட்டு உருவும் கோல் பஞ்சில் பாயாது --- வலிய யானையின் மேலே பட்டுருவும் அம்பானது மெல்லிய பஞ்சின்மேலே பாயாது; நெடு இருப்புப்பாரைக்கு நெக்கு விடாப் பாறை --- நெடுமையாகிய இருப்புப் பாரைக்குப் பிளவாத கருங்கல் பாறையானது, பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும் --- பச்சை மரத்தின் வேருக்குப் பிளந்துபோம்; (அவ்வாறே) வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் --- வன்சொற்கள் இன்சொற்களை வெல்லமாட்டாவாகும்; (இன் சொற்களே வெல்லும்)

         வன் சொல் தோற்கும்; இன்சொல் செல்லும்.

காவாது ஒருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்
ஓவாது தன்னைச் சுடுதலால் - ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து.  --- நாலடியார்.

இதன் பதவுரை ---

     காவாது ஒருவன் தன் வாய் திறந்து சொல்லும் சொல் --- அடக்காமல் சினத்தினால் ஒருவன் தன் வாய்விட்டுச் சொல்லிய சினச்சொல், ஓவாது தனனைச் சுடுதலால் --- என்றைக்குமே தன்னை வருத்துதலால், ஓவாதே ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவுடையார் --- இடைவிடாமல் ஆராய்ந்து பண்பட்ட கேள்வி ஞானத்தையுடையவர்கள், எஞ்ஞான்றும் --- எப்பொழுதும், காய்ந்து அமைந்த சொல்லார் கறுத்து --- மனம் வெதும்புதலால் அமைந்த சுடுமொழிகளைச் சினந்து சொல்லமாட்டார்கள்.

         சினப்பது தன்னையே சுடுமாதலால், பண்பட்ட உள்ளமுடையோர் சினங்கொள்ளார்.


வன்மொழி உரைக்கின் எதிர்
     வன்மொழி கிடைக்கும்;
இன்மொழி உரைக்கின் வரும்
     இன்மொழி எமக்கும்;
நன்மொழிகளே பல
     இருக்க நவிலாமல்
புன்மொழி உரைப்பவர்கள்
     பூரியர்கள் அன்றோ. ---  நீதிநூல்.
        
         நாம் யாருடனும் வன்மொழி பேசினால் நமக்கும் வன்மொழியே கிடைக்கும். இன்சொல் சொன்னால் இன்சொல்லே கிடைக்கும். நல்ல சொற்கள் பல இருக்க அவற்றைக் கூறாது இழிவான கடுஞ்சொற் கூறுவோர் தாழ்வானவர்கள் ஆவர்.


மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த
         மேனியான் தாள் தொழாதே
உய்யலாம் என்று எண்ணி உறிதூக்கி
         உழிதந்து என் உள்ளம் விட்டுக்
கொய்உலா மலர்ச் சோலைக்
         குயில்கூவ மயில்ஆலும் ஆரூரரைக்
கையினால் தொழாது ஒழிந்து கனிஇருக்கக்
         காய்கவர்ந்த கள்வனேனே.     ---  அப்பர் தேவாரம்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...