உள்ளம் என்பது
ஆமை - அதில் உண்மை என்பது ஊமை.
இதை மகாபாரதம்
என்னும் இதிகாசத்தில் கண்டோம்.
கௌரவர் சபையில்
பாஞ்சாலி அவமானப்படுத்தப்பட்டது பொய்யர்களால், நீதி நேர்மை
அற்றவர்களால். அப்போது, நீதியும் நேர்மையுமே வடிவான பாண்டவர்கள், பிதாமகர் ஆன
பீஷ்மர், ஆச்சாரியர்களான துரோணர், கிருபர்
முதலானோர் தமது உணர்வுகளை எல்லாம், ஆமையானது தனக்குக்
கேடு வரும் காலம் உணர்ந்து, தனது உடல் உறுப்புக்களை ஓட்டுக்கொள் மறைத்துக் கொள்வது போல், ஆன்றோர்கள்
எல்லோரும் தமது உணர்வுகளை அடக்கிக் கொண்டனர். உண்மையானது ஊமையாகிப் போனது.
அறிவே வடிவான
விதரர் ஒருவர் தான் மனம் பொறுக்காமையால், சில நீதிகளைச்
சொன்னார். அது அநீதியின் முன் எடுபடவில்லை. மனம் புழுங்கிய அவருக்குத் துணையாக, கண்ணன்
அவரது விருந்தாளியாகச் சென்று, பாரதப் போரில் வில்லை எடுக்காது விதுரன் இருக்குமாறு
சூழ்ச்சி புரிந்தான்.
புலி பதுங்குவதும், ஆடு
பின்வாங்குவதும், தக்க சமயம் பார்த்துப் பாய்வதற்காகத்தான்.
"ஊக்கம்
உடையான் ஒடுக்கம், பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து" என்றார்
திருவள்ளுவ நாயனார்.
ஊக்கம் மிகுந்தவன், காலத்தை எதிர் நோக்கி, அடங்கி
இருத்தல் என்பது, ஆட்டுக்கடா தனது பகையைத் தாக்குவதற்குப் பின்வாங்குவது
போன்றது என்கின்றது நாயனார் அருளிய திருக்குறள்.
பகவத் கீதையில் அருளி உள்ளதுபோல், அதர்மமானது
எப்படியும் தலைவிரித்து ஆடத் தான் செய்யும். அதனை உடனே அடக்கமுடியாது. காலம்
பார்த்தே அடக்க முடியும். ஆடினால் அடங்கித் தான் ஆகவேண்டும் என்பதை அதர்மம்
முடிவில் தான் உணர்ந்து கொள்ளும்.
இது ஒவ்வொருவருடைய வாழ்விலும், வெவ்வேறு விதமாக
உணரப்பட்ட ஒன்றுதான். நம்மில் யாரும் இந்த உண்மை என்னும் விதிக்கு விலக்கானவர்கள்
அல்லர்.
நான் விருத்தாசலம் நகராட்சியில் பணியாற்றிக்
கொண்டு இருந்தபோது, ஏற்கெனவே, தொடரப்பட்டு
இருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழ்நாடு
தீர்ப்பாயத்தின் முன்னர் நான் ஆஜரானேன். ஒரு தற்காலிகப் பணியாளர் பணியில் இருந்து தான்
நீக்கப்பட்டதைப் பற்றிய வழக்கு அது. தீர்ப்பு நகராட்சிக்கு எதிராக வந்தது.
வாதியைப் பணியில் அமர்த்த, தகுந்த பணியிடம் இல்லாததால், ஒரு
பணியிடத்தை உருவாக்க அரசுக்குக் கருத்துரு அனுப்பப்பட்டு இருந்தது. அரசு காரியம்
தான் என்ன என்று நமக்குத் தெரியுமே. அங்கே உள்ளோர்க்கு நெருக்கடி என்றால் உடனே
தீர்க்கப்படும். கீழ்நிலையில் உள்ளோர்க்கு நெருக்கடி என்றால், அது போகின்ற
போக்கில் போகும். அபிமானம் என்பது பல நேரங்களில் அடங்கிப் போகும் அல்லது தோற்றுப்
போகும்.
தீர்ப்பாயத்தில், நீதிபதி முன்னர் தோன்றி, "MY Lord. as per the Act, I am only an Appointing
Authority. I have no power to create a post. Propossal has been sent to
Government and I am awaiting orders" என்று சொன்னேன்.
"No. What sort of an Officer you are. Don't you obey the orders of
the Tribunal. What are you talking?" என்று மாண்பமை நீதிபதி இன்னும் பலவிதமாகப் பொரிந்து தள்ளினார். நல்ல காலமாக, வாதியின் வழக்கறிஞர் எனது கூற்றை
ஏற்றுக் கொண்டார். பின்னர் அவமதிப்பு வழக்கு தள்ளுபடி ஆனது.
இது
அரசுத் தரப்பில் எதிர்வழக்குரையாக ஏற்கேனவே தரப்பட்டது தான். ஆனாலும், அந்த உண்மை ஆரம்பத்தில் ஏற்றுக்
கொள்ளப்படவில்லை.
இன்னொரு சமயம், நான் ஆரணி நகராட்சியில்
பணியாற்றிக் கொண்டு இருந்தபோது, நகரில் அமைந்திருந்த மன்றத்தின் நீதிபதி என்னை அழைப்பதாகத் தகவல் வந்து, உடனடியாகச் சென்றேன். மன்றத்தில்
வழக்கு ஒன்று வாதத்தில் இருந்தது. அதை நிறுத்திவிட்டு, திறந்த மன்றத்தில் நீதிபதி என்னைப் பார்த்து, ஒரு இடத்தைக் குறிப்பட்டு, அதில் உள்ள ஆக்கிரமிப்பு நீண்ட
காலமாக உள்ளது. நாளைக்குள் அகற்றப்படவில்லையானால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். விளக்கம்
அளிக்க வாயைத் திறந்த என்னை அவர் எச்சரித்தார். எந்த விளக்கமும் ஏற்றுக் கொள்ளப்பட
மாட்டாது என்றார். தவறினால், நீதிமன்றத்தை அவமதித்த்தாக, நான் கம்பி எண்ணவேண்டி இருக்கும் என்றார். "I don'ft mind being behind ht bars, if I don't obey your orders, My Lord"
என்று எனது ஆத்திரத்தைக் கொட்டிவிட்டு விரைந்து
அலுவலகம் வந்தேன்.
என் பின்னாலேயே, சில நண்பர்களும், நகராட்சி வழக்குரைஞரும் வந்தனர்.
"என்ன சார், ஏன் இப்படி அவசரப்பட்டீர்கள்" என்றேன். நான் பதில் ஒன்றும் சொல்லாமல், ஒரு தட்டச்சுப் பொறியைக் கொண்டு
வருமாறு பணித்து, அது வந்தபின்னர், நெடுஞ்சாலைப் பொறியாளருக்கு ஒரு நேர்முகக் கடிதம் எழுதினேன். நீதிபதி
குறிப்பிட்டது நெடுஞ்சாலைக்கு உரிய இடம் என்பதைக் குறிப்பிட்டு, நீதிபதியின் ஆண்ணைப்படி, அங்குள்ள ஆக்கிரமிப்பை
அகற்றவேண்டும் என்ற கேட்டு, கடிதத்தை அனுப்பிவிட்டு, அதன் நகலை உடனே நீதிபதிக்கும் அனுப்பி வைத்தேன்.
மறுநாள் காலை, துப்புரவு ஆய்வாளர், என்னிடம் வந்து, நீதிபதி, நடந்த நிகழ்வுக்கு வருந்துவதாகவும், என்னைச் சந்திக்க
விரும்புவதாகவும் சொன்னார். நான் மறுத்துவிட்டேன். நீதிபதியின் இல்லத்தில், இரண்டு நகராட்சித் துப்புரவுப்
பணியாளர்கள் நெடுங்காலமாக வேலை பார்த்து வருகின்றனர். அவர்களை நான்
நிறுத்திவிடுவேனோ என்று நீதிபதி அஞ்சுவதாக, துப்புரவு ஆய்வாளர் சொன்னார். அச்சுறுத்திய நீதிபதி, இப்போது, துப்புரவு ஆய்வாளரின் துணையை நாடி, அசிங்கப்பட நேர்ந்தது.
ஆராய்ச்சி
அறிவு இன்மையும், அதிகாரப் போதையும் இவ்வாறு செயல்பட வைக்கும்.
பொய்க்குத்
தலைவணங்க வேண்டிய துர்ப்பாக்கியம் நேர்ந்ததை நினைத்து, நான் இந்த நாள் வரையும் பொறுமிக் கொண்டு தான்
இருக்கின்றேன்.. அது தலை விதி.
இது போலவே, சில நடப்புக்கள் நமக்குத் தோன்றும். நாம் உணர்ச்சி வசப்படுவோம்.
அங்கே உண்மை ஊமையாகித் தான் போகும். உண்மை மிகவும் மென்மையாகப் பேசும். காலப்போக்கில்
தான் பேசும். நாம் எதிர்பார்த்தபோது பேசாது. அது பேசுவது மனசாட்சிக்கு மட்டும்தான்
புரியும்.
"நன்மையும்
தீமையும் நாடி, நலம் புரிந்த தன்மையான் ஆளப்படும்" என்றார் திருக்குறள் ஆசான்.
நன்மையையும், தீமையையும் ஆராய்கின்ற அவகாசம் பலநேரங்களில்
அவசரப் புத்தியால் இல்லாமல் போகும். உண்மையைப் பொய் எனவும் பொய்யை உண்மை எனவும் கருதத்
தோன்றும்.
பிறருக்கு நன்மை
செய்கிறவர்களை நல்லவர்கள் என்கிறோம்; தீமை செய்கிறவர்களைத் தீயவர்கள் என்கிறோம். நன்மை செய்கின்ற மனத்தை இயல்பாகக்
கொண்டவர்கள் எக்காரணத்தாலும் பிறருக்குத் தீமை செய்ய மாட்டார்கள். நல்லவர்களின்
இயல்பை "வெற்றிவேற்கை" என்னும் "நறுந்தொகை"
பின்வருமாறு காட்டி வழங்கியுள்ளது.
அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது
சுடினும் செம்பொன் தன்ஒளி கெடாது
அரைக்கினும் சந்தனம் தன்மணம் அறாது
புகைக்கினும் கார்அகில் பொல்லாங்கு கமழாது
கலக்கினும் தண்கடல் சேறு ஆகாது.
என்கின்றது
"வெற்றிவேற்கை" என்னும் "நறுந்தொகை".
1. அடுப்பில் வைத்துக்
காய்ச்சுவதால், பசும் பாலின் சுவை குறையாது.
2. நெருப்பில் போட்டுச் சுடுவதால், பொன்னின் ஒளி இல்லாமல் போகாது.
3. கல்லில் வைத்து அரைப்பதால், சந்தனத்தின் மணம் போகாது.
4. நெருப்பில் போட்டு அகில்
கட்டையைப் புகைத்தால், கெட்ட மணம் வராது.
5. கலக்குவதால், கடல்நீர் சேற்று நீராக மாறாது.
இந்த ஐந்து பொருள்களும் அவற்றின்
இயல்பான தன்மையில் மாறாதது போல் நல்லவர்களும் தங்கள் நல்ல குணத்திலிருந்து
மாறமாட்டார்கள்.
பொய்யும்
மெய்யும் உண்டாவது எப்படி என்றால், அதற்கும் விடை தருகின்றது, "வெற்றிவேற்கை" என்னும்
"நறுந்தொகை".
"பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால்
மெய் போலும்மே; மெய் போலும்மே".
"மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையால்
பொய் போலும்மே; பொய் போலும்மே".
பொய்யைச் சொல்லுகின்ற ஒருவன், சொல்வன்மை உடையவனாக இருந்தால், அவன் தனது சொல்வன்மையால், பொய்யையும் மெய்யாகக் காட்டி விடுவான்.
சொல்ல விரும்பும் கருத்துகளை
ஒருவனால் சரியாக எடுத்துச்சொல்ல முடியவில்லையானால், அவனால் எந்தக் கருத்தையும் நிலை நாட்ட இயலாது. அவன் உண்மையைச் சொன்னாலும்
பொய்யாகவே கருதப்படும்.
உள்ளம் ஆமையாவதும், உண்மை ஊமையாவதும் இப்படித்தான்.
இதில் வெதும்பி யாது ஒரு பயனும் இல்லை. என்றாவது ஒரு நாள் உண்மை வெளிப்படும். "ஆயிரம்
கைகள் மறைத்து நின்றாலும், ஆதவன் மறைவது இல்லை"
அமரகவி பாரதியார் பாடிய "பாஞ்சாலி
சபதம்" நினைவுக்கு வரும். அதில், அருச்சுனன் கூற்றாகப் பாரதியார் பாடியிருக்கும் வரிகளை நினைவில் கொள்வோம்....
‘“தருமத்தின் வாழ்வு அதனைச் சூது
கவ்வும்;
தருமம் மறுபடி வெல்லும்” எனும் இயற்கை
மருமத்தை, நம்மாலே உலகம் கற்கும்,
வழிதேடி விதிஇந்தச் செய்கை செய்தான்.
கருமத்தை மேன்மேலும் காண்போம், இன்று
கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; காலம் மாறும்,
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்,
தனுஉண்டு, காண்டீவம் அதன்பேர்’ என்றான்.
No comments:
Post a Comment