011. செய்ந்நன்றி அறிதல் - 10. எந்நன்றி கொன்றார்க்கும்





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

பதினோராம் அதிகாரம் - செய்ந்நன்றி அறிதல்

     இந்த அதிகாரத்தில் இறுதியாக வரும் திருக்குறள், "எந்த பெரிய அறங்களைக் கெடுத்தவர்க்கும், அந்தப் பாவத்தில் இருந்து நீங்க வழி உண்டு. ஒருவன் தனக்குச் செய்த உபகாரத்தைக் கெடுத்தவனுக்கு, அந்தப் பாவத்தில் இருந்து நீங்க வழி இல்லை" என்கின்றது.

     இதனால், செயந்நன்றியை மறப்பதன் கொடுமை கூறப்பட்டது.

திருக்குறளைக் காண்போம்....

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டுஆம், உய்வு இல்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     எந் நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் --- பெரிய அறங்களைச் சிதைத்தார்க்கும் பாவத்தின் நீங்கும் வாயில் உண்டாம்;

     செய்ந் நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை - ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்த மகனுக்கு அஃது இல்லை.

       (பெரிய அறங்களைச் சிதைத்தலாவது, ஆன்முலை அறுத்தலும், மகளிர் கருவினைச் சிதைத்தலும், பார்ப்பார்த் தப்புதலும் (புறநா.34) முதலிய பாதகங்களைச் செய்தல். இதனால் செய்ந்நன்றி கோறலின் கொடுமை கூறப்பட்டது.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பலவாண முனிவர், தாம் அருளிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் பின்வரும் பாடலைப் பாடி உள்ளார்...

அன்று குணன் உய்ந்தான் அந்தணனைக் கொன்றும், அரன்
நன்றி கொலும் அசுரர் நாடு அறியப் ---  பொன்றுதலால்,
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டுஆம், உய்வு இல்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.  

இதன் பொருள் ---

     குணன் ---  வரகுண பாண்டியன்.

     அவன் ஒரு சமயம் வேட்டைமேல் சென்று திரும்பி வருகையில், வழியில் களைத்துப் படுத்திருந்த ஓர் அந்தணன் மீது அறியாமல் குதிரையைச் செலுத்தவே, அம் மறையவன் மாண்டனன். அதனால் பிரமஹத்தி தோஷம் பாண்டியனை விடாமல் பற்றிக்கொள்ள, வரகுணன் மிகவும் வருந்தி ஆலவாய் எம்பிரான் கோயிலைப் பன்முறை வலம் வந்து வழிபட்டு, அம்முர்த்தியின் ஆணைப்படியே, திருவிடைமருதூர் சென்று அங்கே தோஷத்தைத் தீர்த்துக் கொண்டான் என்பது திருவிளையாடல் புராணத்தில் கண்ட வரலாறு. 

         நன்றி கொலும் அசுரர் --- முப்புரவாசிகள். சிவபெருமானால் பல்வகைச் செல்வங்களைப் பெற்று வீறுடன் இருந்த அசுரர்கள். பின்னொரு காலத்தில் தமது செருக்கால் இறைவன் தந்த வரங்களை, பிறரைத் துற்புறுத்தவதில் பயன்படுத்தினர். பின்னொரு காலத்தில் திருமாலால் ஏவப்பட்ட நாரதர் வார்த்தையைக் கேட்டுச் சிவ நிந்தனைக்கு உள்ளாகினர். அவர்களுடைய முப்புரங்களைச் சிவபெருமானின் சிரித்து அழித்தார்.

     அடுத்து,  சிதம்பரம் ஈசானிய மடத்து, இராமலிங்க சுவாமிகள், திருக்குறளுக்கு விளக்கமாகப் பாடி அருளிய "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூல்லி இருந்து ஒரு பாடல்...                                                       

மெய்த்தரும தெய்வம் நன்றிவீட்டி மதிமம்மர்உற்றான்
முத்தவற்ச நாபன், முருகேசா! - இத்தரையில்
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

இதன் பொருள் ---

     முருகேசா --- முருகப் பெருமானே, மெய்த்தரும தெய்வம் நன்றி --- மெய்ம்மைத் தன்மை பொருந்திய அறக் கடவுள் செய்த நன்றியை, வீட்டி --- அழித்து, முத்த வற்சநாபன் --- வீடுபேற்று நெறியை நாடி நின்ற வற்சநாபர் என்னும் முனிவர், மதி மம்மர் உற்றான் --- அறிவு மயக்கத்தை அடைந்தவரானார். இத் தரையில் --- இந்நிலவுலகில், எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் --- எத்தகைய நன்மையை அழித்தவர்கட்கும் வாழ்தல் உளதாம், செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை --- பிற்செய்த நன்மையை மறந்தவர்கட்குச் சிறப்புறுதல் இல்லையாகும்.

      வற்சநாப முனிவர் அறக்கடவுல் செய்த நன்மையை மறந்து அறிவு மயக்கத்தை அடைந்தார். எந்த நன்மையை மறந்தவர்கட்கும் உய்வுண்டு. பிறர் செய்த நன்மையை மறந்தவர்கட்கு உய்வில்லை என்பதாம்.

     தரும தெய்வம் --- அறக்கடவுள். வீட்டுதல் --- அழித்தல். முத்த வற்சநாபன் --- நல்வினைகளில் முதிர்ச்சி பெற்று நின்ற வற்சநாப முனிவர்.

                                    வற்சநாப முனிவர் கதை

         வற்சநாப முனிவர் என்பவர், தம் உடல் புற்றினால் மூடுமாறு நெடுநாள் தவம் செய்து கொண்டிருந்தார்.  இவருடைய தவ நிலையை இந்திரன் ஆராய்ந்து பார்க்க எண்ணினான். மேகங்களைக் கொண்டு பெருமழை பொழியச் செய்து புற்று அழியச் செய்தான். அந்நாளில் அறக் கடவுள் எருமைக் கடா உருக்கொண்டு வந்து புற்றைத் தன் உடலால் மறைத்து முனிவருக்கு எத்தகைய இடையூறும் வராமல் செய்தது. முனிவர் தவநிலை நீங்கிப் பார்த்தார். காத்து நின்ற கடாவை அறக்கடவுள் என்று உணர்ந்து கொள்ளவில்லை. பொதுவான கடாவே என்று எண்ணி அதற்கு நீண்ட வாழ்வு உண்டாகுமாறு வாழ்த்துரை வழங்கி மீண்டும் தவநிலையில் அமர்ந்தார். அறக்கடவுளைப் போற்றி வழிபடாது நன்றி மறந்த தன்மையினால் முனிவருடைய உள்ளம் ஒருமை நிலையை அடையவில்லை. பிறகு உண்மையை உணர்ந்துகொண்ட முனிவர் இதற்குக் கழுவாய் உயிர்விடுதலே என்று முடிவு செய்து, மலைமுடியில் ஏறி உயிர்விடத் தொடங்கினார். உடனே அறக்கடவுள் வெளிப்பட்டு, "வீணாக உயிரை விடாதே, சேதுவிலே சங்கத் தீர்த்தம் என்னும் புனித நீரிலே நீராடினால் இத்தீவினை நீங்கும்" என்று இயம்பியது. முனிவர் அவ்வாறே மூழ்கித் தூய்மை பெற்றார்.

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...


இசையா ஒருபொருள் இல்என்றால் யார்க்கும்
வசைஅன்று வையத்து இயற்கை –--  நசைஅழுங்க
நின்றுஓடிப் பொய்த்தல் நிரைதொடீஇ செய்ந்நன்றி
கொன்றாரின் குற்றம் உடைத்து.          --- நாலடியார்.

இதன் பதவுரை ---

     இசையா ஒரு பொருள் இல் என்றல் --- கொடுக்க இயலாத ஒரு பொருளை இரப்போர்க்கு இல்லை என்று கூறிவிடுதல், யார்க்கும் வசை அன்று வையத்து இயற்கை --- யார்க்கும் பழியாகாது, அது உலகத்தின் இயற்கையே ஆகும்; நசை அழுங்க நின்று ஓடிப் பொய்த்தல் --- ஆசையால் நையும்படி உதவுவார்போல் தோன்றிக் காலம் நீடிப் பின் பொய்த்துவிடுதல், நிரைதொடீ-- - ஒழுங்காக அமைந்த வளையல்களையணிந்த மாதே!, செய்ந்நன்றி கொன்றாரின் குற்றம் உடைத்து --- ஒருவர் செய்த நன்றியை அழித்தாரது குற்றத்தை ஒப்பத் தீது உடைத்தாகும்.

         இயன்றதை உடனே உதவிடுதல் உண்மை அறம். "இயல்வது கரவேல்" என்றார் ஔவைப் பிராட்டியார்.

        
ஆன்முலை அறுத்த அறன் இலோர்க்கும்,
மாண்இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்,
குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும்,
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள என,
நிலம்புடை பெயர்வது ஆயினும் ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என
அறம் பாடிற்றே, ஆயிழை கணவ...   ---  புறநானூறு.

இதன் பதவுரை ---

     ஆன்முலை அறுத்த அறனிலோர்க்கும் --- பசுவினது முலையால் பெறும் பயனைக் கெடுத்த தீவினையாளர்க்கும்; மாண்இழை மகளிர் கரு சிதைத்தோர்க்கும் --- மாட்சிமைப்பட்ட ஆபரணத்தையுடைய பெண்டிரது கருப்பத்தை அழித்தோர்க்கும்;
குரவர் தப்பிய கொடுமையோர்க்கும் --- தந்தை தாயாரைப் பிழைத்த கொடுந் தொழிலை உடையோர்க்கும்; வழுவாய் மருங்கின் கழுவாயும் உள என --- அவர் செய்த பாதகத்தினை ஆராயுமிடத்து அவற்றைப் போக்கும் வழியும் உள வெனவும்; நிலம் புடை பெயர்வதாயினும் --- நிலம் கீழ் மேலாம் காலமாயினும்; ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென --- ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்தோர்க்கு நரகம் நீங்குதல் இல்லை எனவும்; அறம் பாடிற்று --- அறநூல் கூறிற்று; ஆயிழை கணவ --- தெரிந்த ஆபரணத்தை உடையாள் கணவனே!


சிதைவு அகல் காதல் தாயை,
     தந்தையை, குருவை, தெய்வப்
பதவி அந்தணரை, ஆவை,
     பாலரை, பாவைமாரை
வதை புரிகுநர்க்கும் உண்டாம்
     மாற்றலாம் ஆற்றல், மாயா
உதவி கொன்றார்க்கு என்றேனும்
     ஒழிக்கலாம் உபயம் உண்டோ?   ---  கம்பராமாயணம், கிட்கிந்தைப் படலம்.

இதன் பதவுரை ---

     சிதைவு அகல் --- கேடு நீங்கிய; காதல் தாயை --- அன்புடைய தாயையும்;  தந்தையை, குருவை --- தந்தையையும் குருவையும்; தெய்வப் பதவி அந்தணரை --- தெய்வத்தின் இடத்திலுள்ள அந்தணர்களையும்; ஆவை, பாலரை --- பசுக்களையும் குழந்தைகளையும்; பாவைமாரை --- மகளிரையும்; வதை புரிகுநர்க்கும் --- கொலை செய்தவர்களுக்கும்; மாற்றலாம் ஆற்றல் --- (அந்தப் பாவங்களை) நீக்குவதற்குரிய வழிகள்; உண்டாம் --- உள்ளதாம்; மாயா உதவி --- (ஆனால்) அழியாத பேருதவியை; கொன்றார்க்கு --- மறந்தவர்களுக்கோ; ஒழிக்கலாம் உபாயம் --- (அப் பாவத்தைப்) போக்குவதற்குரிய வழி; ஒன்றானும்  உண்டோ --- ஒன்றாவது உண்டோ? (இல்லை).

     தாய், தந்தை, குரு, அந்தணர், பசு, குழந்தை, பெண் ஆகியவர்களைக் கொல்லுதல் கொடும் பாதகச் செயலாகும்.  இருப்பினும் அப்பாவங்களைப் போக்குவதற்குரிய கழுவாய் உண்டு. ஆனால், செந்நன்றி மறத்தலுக்கோ அத்தகைய கழுவாய் இல்லை என்பதாம்.  'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை, செய்ந்நன்றி கொன்றை மகற்கு' (குறள் 110). 'ஒருவன், செய்தி கொன்றோர்க்கு உய்தியில்லென அறம் பாடிற்றே' (புறம் 34) என்ற வாக்குகளை ஒப்பிடுக. 

     மாயா உதவி - பயனழியாத உபகாரம், மறக்கத் தகாத நன்றி.

கன்று உயிர் ஓய்ந்து உகக் கறந்து பால் உண்டோன்,
மன்றிடைப் பிறப் பொருள் மறைத்து வவ்வினோன்,
நன்றியை மறந்திடும் நயம் இல் நாவினோன்,
என்று இவர் உறு நரகு என்னது ஆகவே. ---  கம்பராமாயணம், பள்ளியடைப் படலம்.

 இதன் பதவுரை ---

     கன்று உயிர் ஓய்ந்து உகப் பால் கறந்து உண்டோன் --- (பால் விடாமையால்) கன்றுக்குட்டி உயிர் இல்லையாய்ப் போக (பசுவினிடத்து) எல்லாப் பாலையும் (தானே) கறந்து உண்டவன்; மன்றிடைப் பிறர் பொருள் மறைத்து வவ்வினோன் --- மன்றத்தில் பிறரது பொருளை (அவர் அறியாதபடி) மறைத்துக் கைப்பற்றிக் கொண்டவன்; நன்றியை மறந்திடும் நயம்இல் நாவினோன் --- (ஒருவன்) செய்த நன்றியை மறந்து (அவனைப் பழித்துரை செய்யும்) இனிமையற்ற நாக்கை உடையவன்; என்று இவர் உறு நரகு என்னது ஆக --- என்று கூறப்பெறுகின்ற இந்த மூவரும் சென்றடையும் நரகம் எனக்கும் சொந்தமாகட்டும்.

     தனக்கும் கன்றக்கும் பயன்படும்படி பசுவினிடத்தில் நிறையப்பாலை இறைவன் அளித்திருப்பவும், கன்றுக்குச் சிறிதும் பால் விடாமல் தானே கறந்து அநுபவித்தல் பாதகம் ஆயிற்று. பலர் கூடியுள்ள இடத்தில் பிறர் பொருளை மறைத்துக் கைப்பற்றல் அறமற்ற செயல். நயமில் நாவினோன் தனக்கு நன்மை செய்தவர்களைத் தூற்றுகின்றவன்.

    
'நன்றி கொன்று, அரு நட்பினை நார் அறுத்து,
ஒன்றும் மெய்ம்மை சிதைத்து, உரை பொய்த்துளார்க்
கொன்று நீக்குதல் குற்றத்தில் தங்குமோ?
சென்று, மற்று அவன் சிந்தையைத் தேர்குவாய். ---  கம்பராமாயணம், கிட்கிந்தைப் படலம்.

இதன் பதவுரை ---

     நன்றிகொன்று --- (இப்படி) ஒருவன் தனக்குச் செய்த நன்றியைச் சிதைந்து;  அரு நட்பினை நார் அறுத்து --- பெறுவதற்கு அருமையான நட்பாம் அன்புக்கயிறு அற அழித்து; ஒன்றும் மெய்ம்மை --- (எல்லோர்க்கும்) ஏற்றதாகப் பொருந்தி நிற்கும் வாய்மையை; சிதைத்து --- குலைத் துவிட்டு; உரை பொய்த்துளான் --- வாக்குத் தவறியவனை; கொன்று நீக்குதல் --- கொன்று ஒழிப்பது; குற்றத்தின் நீங்கும் ஆல் --- பழிபாவங்களில் இருந்து நீங்கிய செயலே ஆகும் (ஆகவே); சென்று அவன் சிந்தையை --- நீ அங்கே சென்று அச்சுக்கிரீவனது மன நிலையை; தேர்குவாய் --- ஆராய்ந்து அறிந்து வருவாய்;

     ஒருவன் செய்த நன்றியை மறந்தவனைக் கொன்றாலும் பழிபாவமில்லை; ஆதலால், அச்சுக்கிரீவனது உண்மையான மனத்தை அறிந்து வருமாறு இலக்குவனிடம் இராமன் கூறினான் என்பது.

எய்தி, 'மேல் செயத்தக்கது என்?' என்றலும்,
'செய்திர், செய்தற்கு அரு நெடுந் தீயன;
நொய்தில் அன்னவை நீக்கவும் நோக்குதிர்;
உய்திர் போலும், உதவி கொன்றீர்?' எனா. ---  கம்பராமாயணம், கிட்கிந்தைப் படலம்.

இதன் பதவுரை ---

     எய்தி --- (அங்கதன் தாரையை அடைந்து); மேல் செயத் தக்கது என் --- இனி நாம் செய்யத்தக்க செயல் என்ன; என்றலும் --- என்று அவளை வினாவிய அளவில்; செய்தற்கு அரு --- (அவள் அவ்வானரர்களை நோக்கி) செய்யத் தகாத; நெடுந்தீயன --- பெரிய தீச் செயல்களை; நொய்தில் செய்திர் -- - எளிதிலே செய்து விட்டீர்கள்; அன்னவை நீக்கவும் --- அச் செயல்களால் வரும் கேடுகளை எளிதில் நீக்கிக் கொள்ளவும்; நோக்குதிர் --- வழி
தேடுகிறீர்கள்; உதவி கொன்றீர் --- செய்ந்நன்றி மறந்தவர்களான நீங்கள்; உய்திர் போலும் --- தப்பி வாழ்வீர்கள் போலும் !எனா --- என்று சொல்லி (விளம்புகின்றாள்).

     'உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு' (குறள் 110), உய்ய மாட்டீர் என்பது வலியுறுத்தப்பட்டது.  நெடுந்தீயன - மிக்க கொடியன. நோக்குதல் - வழிதேடுதல், ஆலோசித்தல், 'செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென் றறம் பாடிற்றே' என்ற பழம் பாடல் கருத்தினை நினைவு கூர்க. (புறம் 34)  
  
    
'உய்ய, 'நிற்கு அபயம்!" என்றான்
     உயிரைத் தன் உயிரின் ஓம்பாக்
கய்யனும், ஒருவன் செய்த
     உதவியில் கருத்திலானும்,
மய் அற, நெறியின் நோக்கி,
     மா மறை நெறியில் நின்ற
மெய்யினைப் பொய் என்றானும்,
     மீள்கிலா நரகில் வீழ்வார். ---  கம்பராமாயணம், விபீடணன் அடைக்கலப் படலம்.

இதன் பதவுரை ---

     உய்ய நிற்கு அபயம் என்றான் --- நான் உய்யுமாறு உன்னைச் சரண் புகுந்தேன் என்று வந்த ஒருவனுடைய; உயிரைத் தன் உயிரின் ஓம்பாக் கய்யனும் --- உயிரினைத் தன்னுயிராகக் கருதிப் பேணிக் காப்பாற்றாத கீழ்மகனும்; ஒருவன் செய்த உதவியில் கருத்திலானும் --- ஒருவன் செய்த உதவியில்  கருத்தில்லாது மறந்தவனும்;   மய் அற நெறியின் நோக்கி --- குற்றம் நீங்க, அறநெறியை அறிந்து; மாமறை நெறியில் நின்ற --- சிறந்த வேத நெறிப்படி நின்றொழுகும்;  மெய்யினைப் பொய் என்பானும் --- உண்மை நெறியைப் பொய் என்று கூறுபவனும்; மீள்கிலா நரகில் வீழ்வார் --- மீண்டு வரமுடியாத கொடிய நரகத்திலே வீழ்ந்து துன்புறுவார்.

     மய்-மை, குற்றம். மை, கையன் என்பன எதுகை நோக்கி மய், கய்யன் என வந்தது. மீள்கிலா --- மீளமுடியாத.


செம்மை சேர் உள்ளத்தீர்கள் செய்த
      பேர் உதவி தீரா;
வெம்மை சேர் பகையும்
      மாற்றி, அரசு வீற்றிருக்கவீட்டீர்;
உம்மையே இகழ்வர் என்னின்,
      எளிமையாய் ஒழிவது ஒன்றோ?
இம்மையே வறுமை எய்தி,
     இருமையும் இழப்பர் அன்றே?      ---  இராமாயணம், கிட்கிந்தைப் படலம்.

இதன் பதவுரை ---

     செம்மை சேர் உள்ளத்தீர்கள் --- நேர்மையான சிறந்த மனத்தை உடையவர்களான நீங்கள்; செய்த பேருதவி --- (சுக்கிரீவனுக்குச்) செய்த பெரிய உதவி; தீரா --- (என்றென்றும்) அழியாமல் இருக்கும்படி; வெம்மை சேர் பகையும் மாற்றி --- மிகக் கடுமையான பகைவனையும் அழித்து; அரசு வீற்றிருக்க விட்டீர் --- அரசாட்சியைப் பெற்றுச் சிறப்பாக அமரும்படி செய்துவிட்டீர்கள்; உம்மையே --- (உங்களால் உதவி  பெற்றவர்) உங்களையே; இகழ்வர் என்னின் --- புறக்கணிப்பார்களானால்; எளிமையாய் --- இழிந்த குணத்தோடு பொருந்தி; ஒழிவது ஒன்றோ --- பெருமை குலைவது மாத்திரமோ; இம்மையே வறுமை எய்தி --- இப்பிறப்பிலேயே வறுமையடைந்து; இருமையும் --- இம்மை மறுமைப் பயன்களாகிய இரண்டையும்; இழப்பர் அன்றே --- இழந்துவிடு வார்களன்றோ?

     செய்த நன்றியை மறந்தவர் இம்மையில் செல்வமும் புகழும் அழிந்து, மறுமையில் நற்கதி பெறாது நரகத்தையும் அடைவர் என்பது.


நன்றி, செய்குநர்ப் பிழைத்தோர்க்கு உய்வு இல என்னும்
குன்றா வாய்மை நின்று நிலை காட்டித்
தங்குவன கண்டும் வலிமனங் கூடி
ஏகவும் துணிந்தனம் எம்பெரும் படிறு             
சிறிதுநின்று இயம்ப உழையினம் கேண்மின்...  --- கல்லாடம்.

இதன் பதவுரை ---

     நன்றி செய்குநர்ப் பிழைத்தோர்க்கு --- தமக்கு நன்மை செய்தவர் திறத்திலே தவறு செய்தவர்க்கு அப்பாவத்தினின்றும் நீங்குவதற்கு; உய்வு இல --- வழியில்லை; என்னும் குன்றா வாய்மை --- என்று கூறப்படும் குறையாத உண்மையை; நிலை நின்று காட்டித் தங்குவன கண்டும் --- தாம் ஈண்டே தங்கி நிலைத்தலால் எமக்கு அறிவித்துத் தங்குகின்ற அப் பறவைகளைக் கண்டு வைத்தும்; மன வலி கூடி --- மனவலிமை பெற்று; ஏகவும் துணிந்தனம் --- இப் புனங்காவலை விட்டு எம்மில்லத்திற்குச் செல்லத் துணிந்துளோம்.
 

அரவம் மல்கிய பதாகையாய்! மதி
     அமைச்சர் ஆய் அரசு அழிப்பினும்,
குரவர் நல்உரை மறுக்கினும், பிறர்
     புரிந்த நன்றியது கொல்லினும்,
ஒருவர் வாழ் மனையில் உண்டு பின்னும்
     அவருடன் அழன்று பொர  உன்னினும்,
இரவி உள்ள அளவும் மதியம் உள்ள அளவும்
     இவர்களே நரகில் எய்துவார்.      ---  வில்லிபாரதம், கிருட்டிணன் தூது.

இதன் பதவுரை ---

     அரவம் மல்கிய பதாகையாய் --- பாம்பின் வடிவம் பொருந்தின பெருங்கொடியை உடையவனே! மதி அமைச்சர் ஆய் அரசு அழிப்பினும் --- நல்லறிவு உடைய [அல்லது அரசனுக்கு அறிவுறுத்தற்குரிய] மந்திரிகளாயிருந்து அரசாட்சியை (வேண்டுமென்று) கெடுத்தாலும், குரவர் நல்உரை மறுக்கினும் --- பெரியோர்களது நல்ல உபதேச மொழிகளை(க்கேட்டு ஒழுகாது) விலகி நடந்தாலும், பிறர் புரிந்த நன்றியது கொல்லினும் --- அயலார் செய்த உபகாரத்தை மறந்தாலும், ஒருவர் வாழ்மனையில் உண்டு பின்னும் அவருடன் அழன்று பொர உன்னினும் --- ஒருவர் வசிக்கின்ற வீட்டிலே அவர் உணவைப் புசித்துப் பின்பு அவருடன் கோபித்துப் போர்செய்யக் கருதினாலும், இவர்களே --- இந்த நான்கு அக்கிரமத் தொழில்களைச் செய்பவர்களே, இரவி உள் அளவும் மதியம் உள் அளவும் நரகில் எய்துவார் --- சூரியன் உள்ள வரையிலும் சந்திரன் உள்ள வரையிலும் நரகலோகத்தில் சேர்ந்து துன்பங்களை அனுபவிப்பார்கள்.

    துரியோதனன் வீட்டில் தான் இறங்காமைக்கு ஏற்ற காரணம் கூறுதற்கு, 'ஒருவர் வாழ்மனையில் உண்டு பின்னும் அவருடன் அழன்று பொர உன்னின்' என்றது மாத்திரமே போதுமாயினும், மற்ற மூன்று கொடுவினைகளையும் முன்னே இனமாக உடன் எடுத்துக் கூறியது - நீயும் சகுனி முதலிய உன்னைச் சேர்ந்தவர்களுமே இப்படிப்பட்ட பெரும்பாவங்களைச் செய்து பயில்பவர்; நான் அப்படிப்பட்டவனல்லன் என அவனுக்கு உரைக்கும்படி சுட்டிக்காட்டுதற் பொருட்டு என்க. 

     குரவர் - தந்தை, (தாய்), தமையன், வம்சகுரு,உபாத்தியாயன், அரசன் என இவர். 

     நல்உரை --- இம்மை மறுமைகளுக்கு நன்மையை விளைக்கும் வார்த்தை. மறுக்கத்தக்க தீய உரையை அவர் கூறாரென்றற்கு, 'நல்லுரை' எனப்பட்டது.

     பிறர்புரிந்த நன்றியது கொல்லினும் - ஒருவர் ஒருவர்க்கு செய்யும் உபகாரத்தைக் கெடுத்தாலும், என்று பொருள் கொள்ளலாம். "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வில்லை, செய்ந்நன்றி கொன்ற மகற்கு" என்பது இதற்கு
மேற்கோளாம்.

     உன் அமைச்சர்கள் உனக்கு இதங்கூறாது உனது அரசை அழிப்பவரென்றும், நீ பீஷ்மர் துரோணர் கிருபர் விதுரர் முதலிய பெரியோரது உறுதிமொழிகளைக் கேளாது மறுப்பவனென்றும், சித்திரசேனன் கட்டினது முதலான காலத்தில் பாண்டவர் செய்த உபகாரத்தை நீ மறப்பவனென்றும், பீஷ்மர் முதலியவர் உன் கட்டளைப்படி நடப்பது உனது வார்த்தை சரியென்கிற காரணத்தாலன்று, சோற்றுக்கடன் கழிக்கவேண்டும் என்கிற கருத்தினாலேயே யென்றும் குறிப்பாக உணர்த்தினபடியாம்.

     இரவி உள்ள அளவும் மதியம் உள்ள அளவும் --- உலகம் அழியுமளவும். ஆழ்வயிற்று அடக்கி, என்றும் மீட்டு உமிழ்கலாத எரிவாய் வெம்மை கூர் நரகில் அழுந்துவர் என்க. மற்றைத் தீவினை செய்தவர் நரகமடைந்தாலும், அவர்களுக்கு மீளுதற்கு உரிய எல்லை ஒன்று உண்டு; இவர்களுக்கோ அது இல்லை; நரகலோகம் அழிந்தால் உண்டு.


கன்றால் விளவின் கனி உதிர்த்தோன்
     கடவும் திண்தேரவன் ஆக,
வன்தாள் தடக்கை மாருதியே
     ஆக, அமரில் மறித்திலமேல்
என்றுஆம் நாளை முனிபோரில்
     எந்நன்றியினும் செய்ந்நன்றி
கொன்றார் தமக்குக் குருகுலத்தார்
     கோவே யாமும் கூட்டு என்றார்.   ---  வில்லிபாரதம், 11-ஆம் போர்....

இதன் பதவுரை ---

     குரு குலத்தார் கோவே --- குருவமிசத்து அரசர்களுக்குத் தலைவனான துரியோதனனே! கன்றால் --- ஒரு கன்றைக் கொண்டு, விளவின் கனி --- விளா மரத்தின் பழத்தை, உதிர்த்தோன் --- உதிரச் செய்தவனான கிருஷ்ணன், கடவும் --- செலுத்துகிற, திண் தேரவன் ஆக --- வலிய தேரையுடைய அருச்சுனனேயானாலும், வல்தாள் --- கொடிய போர் முயற்சியையும், தடக்கை --- பெரிய கைகளையும் உடைய,
மாருதியே ஆக --- வீமசேனனேயானாலும், (இவர்கள்) அமரின் --- (எதிரில் வந்து) அமைந்தால், என்ற ஆம் நாளை --- (இவ்விரவு கழிந்து) சூரியன் உதிக்கும் நாளை யதினத்தில், முனி போரின் --- கோபித்துச் செய்யும் யுத்தத்தில், மறித்திலமேல் --- (தருமன் அருகில் சேராதபடி அவர்களைத்) தடுத்திடோமாயின்,- எந் நன்றியினும். --- எல்லாத் தருமங்களுள்ளும், செய்ந்நன்றி --- (தமக்குப் பிறர்) செய்த உபகாரத்தை, கொன்றார் தமக்கு --- அழித்த பாவிகளுக்கு, யாமும் கூட்டு ---  நாங்களும் இனமாவோம்,' என்றார் --- என்றும் (அவர்கள் சபதஞ்) செய்தார்கள்: (எ - று.)

     பசுவதை, சிசுவதை, பிராமணவதை முதலிய பெரும் பாதகங்களைச் செய்தார்க்கு ஆயினும், அப்பாவத்தினின்று நீங்கத் தக்க பிராயச்சித்தங்கள் உண்டு; செய்ந்நன்றி மறந்தவனுக்கோ எவ்வித பரிகாரமும் இல்லை என்பது, நூல் துணிபு. "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை, செய்ந்நன்றி கொன்ற மகற்கு" என்ற திருக்குறளையும் காண்க. இனி, தாள் தடக்கை - முழங்கால் அளவும் நீண்ட பெரிய கை [ஆஜானுபாகு] எனினுமாம்; இது - உத்தம இலக்கணம். அன்றி, வலிய கால்களையும் பெரிய கைகளையும் உடைய என்றலும் ஒன்று.

     நன்றி கொல்லுதல் --- செய்த நன்மையை மறத்தலும், கைம்மாறு செய்யாமையும், தீங்கு செய்தலும். குரு என்பவன் - சந்திர குலத்தில் பிரசித்திபெற்ற ஓரரசன்; அவனால், அக்குலம் குருகுல மென்றும், அந்நாடு குருநாடு என்றும் குருக்ஷேத்திரம் என்றும், அக்குலத்திற் பிறந்தவர் கௌரவர் என்றும் கூறப்படுதல் காண்க.

     கன்றால் விளவின் கனிய உதிர்த்த கதை: கம்சனால் ஏவப்பட்ட கபித்தாசுரன் (கபித்தம் - விளாமரம்), விளாமரத்தின் வடிவமாய், கண்ணன் தன் கீழ் வரும் பொழுது மேல் விழுந்து கொல்வதாக எண்ணி வந்து நிற்க, அதனை அறிந்து, கிருஷ்ணபகவான், அவ்வாறே தன்னை முட்டிக் கொல்லும் பொருட்டுக் கன்றின் வடிவங்கொண்டு தான் மேய்க்குங் கன்றுகளோடு கலந்திருந்த வத்ஸாசுரனைப் பின்னிரண்டு கால்களையும் பிடித்து எடுத்துச் சுழற்றி விளாமரத்தின் மேல் எறிய, இருவரும் இறந்து தமது அசுர வடிவத்துடனே விழுந்திட்டனர் என்பதாம். இதனால், பகையைக் கொண்டு பகையை அழித்த கண்ணனது விசித்திர சக்தி விளங்கும்                


நன்றியைக் கொன்று தின்றோன்
         நாயகன் ஆணைக்கு அஞ்சும்
வன் திறல் அரிமான் ஊர்தித்
         தெய்வதம் வழிபட்டு ஏத்தி,
வென்றிவாள் பரவிக் கச்சு
         வீக்கி, வாள் பலகை ஏந்திச்
சென்று, வாள் உழவன் சொன்ன
         செருக்களம் குறுகி னானே.   ---  தி.வி. புராணம், அங்கம் வெட்டின..

இதன் பதவுரை ---

     நன்றியைக் கொன்று தின்றோன் --- குரவன் செய்த உதவியை முற்றுங் கெடுத்தவனாகிய சித்தன், நாயகன் ஆணைக்கு அஞ்சும் --- சிவபெருமான் ஆணைக்கு அஞ்சும், வன்திறல் அரிமான் ஊர்தித் தெய்வதம் வழிபட்டு ஏத்தி --- மிக்க வலியினையுடைய சிங்க ஊர்தியையுடைய துர்க்கையை வணங்கித் துதித்து, வென்றி வாள் பரவி --- வெற்றி பொருந்திய வாட்படையைத் துதித்து, கச்சு வீக்கி வாள் பலகை ஏந்திச் சென்று --- கச்சினைக் கட்டி வாளையும் கேடகத்தையுங் கையிலேந்திச் சென்று, வாள் உழவன் சொன்ன செருக்களம் குறுகினான் --- வாளாசிரியன் சொன்ன போர்க்களத்தை அடைந்தான்.

     ஆசிரியன் செய்த நன்றியை மறந்து அவனுக்குப் பெருந்தீங்கு இயற்றலானான் ஆகலின் 'நன்றியைக் கொன்று தின்றோன்' என்றார். நன்றி கோறல் உய்தியில்லாத பாவம் என்பது,

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு"

என்னுந் திருக்குறளால் பெறப்படும்.

நிரை திமில் களிறாக, திரை ஒலி பறையாக,
கரை சேர் புள்ளனித்து அம் சிறை படையாக,
அரைசு கால்கிளர்ந்தன்ன உரவு நீர்ச் சேர்ப்பl கேள்: கற்பித்தான் நெஞ்சு அழுங்கப் பகர்ந்து உண்ணான் விச்சைக்கண்
தப்பித்தான் பொருளேபோல் தமியவே தேயுமால், ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான்; மற்று அவன் எச்சத்துள் ஆயினும், அஃது எறியாது விடாதே காண். கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள்
தாள் இலான் குடியேபோல், தமியவே தேயுமால்,
சூள்வாய்த்த மனத்தவன் நினை பொய்ப்பின் மற்று அவன் வாள்வாய் நன்று ஆயினும், அஃது எறியாது விடாதேகாண். ஆங்கு
அனைத்து, இனி பெரும! அதன்நிலை; நினைத்துக் காண்: சினைஇய வேந்தன் எயிற்புறத்து இறுத்த
வினை வரு பருவரல் போல,
துனை வரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே. ---  கலித்தொகை.

இதன் பொருள் ---

     வரிசையான திமில்கள் யானைகளாகவும், அலையின் ஒலி முரசமாகவும், இனத்தையும் அழகையும் உடைய கரையைச் சேர்ந்துள்ள பறவைகள் காலாட் படையாகவும் பாண்டியன் பகைவர் மேல் படையெடுத்துச் சென்றதைப் போன்ற வலிமையையுடைய கடலைச் சேர்ந்த நிலத்தை உடையவனே, நான் கூறுவதைக் கேட்பாயாக:

     தனக்கு ஒரு வருத்தம் உண்டான இடத்து உதவினவர்களுக்கு ஒரு வருத்தம் ஏற்பட்டால், உதவி செய்யாதவன், தனக்கு நூல் முதலியவற்றைக் கற்பித்தவன் தன்னிடம் ஒன்றும் பெறாமல் மனம் வருந்த, தனது கைப் பொருளை அக் கல்விப் பொருளுக்குக் கைம்மாறாகக் கொடுத்து உண்ணாதவனாகத் தான் கற்ற கலையில் தவறு செய்து கொண்டவனின் கல்விப் பொருள் நாள்தோறும் தேய்வதைப் போன்று தானே தானாகத் தேய்வான்.  அதுவே அல்லாமல் அந்தச் செய்ந்நன்றி கொல்லலான அது தான், உடலை ஒழித்து உயிர் சென்றவிடத்தே ஆயினும் அனுபவிக்கச் செய்யாமல் போகாது

     தான் சொல்லும் சூளைக் காண்கின்றவர் மனம் கொள்ளும்படி சூள் உரைத்த மனத்தை உடையவன், தான் சொன்ன சூளை நிறைவேற்றாது, கைவிட்டுப் பொய்ப்பவன்.

     ஆனால், தன்னைச் சேர்ந்து வாழும் உறவினர் நெஞ்சை தான் ஒன்றை அறியாமல் வருத்துமாறு தன்னிடம் பொருந்திய செல்வத்தில் நின்று மேன்மேலும் வளர்க்கும் முயற்சி இல்லாதவனின் குடியானது நாள்தோறும் தேயும். அதுபோல் தானே தானாகத் தேய்வன். அதுவுமே அல்லாது பின் அச் சூளைப் பொய்த்த தீவினை மறுமையில் விரவி, அது வாளினது கூர்மையைப் போல் கூர்மை உடையதாய், அவன் புத்தேளில் புகுந்தாலும் அவனை நுகருமாறு செய்யாமல் விடாது.

     பெருமையனே! செய்ந்நன்றி கேடானது, பொய்ச் சூளுறவு ஆன தீவினையின் இயல்பு முன் கூறிய அத்தகைய இயல்புடையது. இனி நீ அத் தன்மைமை உடையவனாய் உள்ளாய். இதை நினைந்து பார் இவள்தான் தன் பகைவனுடன் சினம் கொண்ட மன்னன் அவன் மதிற்புறத்தே போய்விட்ட வினையினால் முற்றுகையிட்டு உள்ளவனுக்கு வந்த வருத்தம் போன்று, மணம் விரைவில் முடிவதற்கு விரைதல் வரும் மனத்தால் பெரிதும் வருத்தம் அடைந்தாள். இனி அந்த வருத்தம் நீங்கும்படி விரைந்து தலைவி மணந்து கொள்வாயாக என்று வரைவு வேண்டினாள்.
  

ஒன்றுஒரு பயன்தனை உதவினோர் மனம்
கன்றிட ஒருவினை கருதிச் செய்வரேல்
புன்தொழில் அவர்க்குமுன் புரிந்த நன்றியே
கொன்றிடும் அல்லது கூற்றும் வேண்டுமோ. ---  கந்தபுராணம்.

இதன் பொருள் ---

     நன்றி மறந்த பாவிகள் ஒருபோதும் ஈடேறமாட்டார்கள்.  அவர்கள் விரைவில் அழிவர். அவரைக் கொல்வதற்கு வேறு கூற்றுவன் வரவேண்டா. அவர் மறந்த நன்றியே அவரைக் கொன்றுபோடும்.

ஒன்று உதவி செய்யினும், அவ்வுதவி மறவாமல்
பின்றை அவர் செய்பிழை பொறுத்திடுவர் பெரியோர்;
நன்றி பலவாக ஒரு நவை புரிவரேனும்
கன்றிடுவது அன்றி முதுகயவர் நினையாரே. ---  வில்லிபாரதம்.

இதன் பதவுரை ---

     ஒன்று உதவி செய்யினும் --- ஒருத்தர் ஓருதவி செய்தாரேயாயினும், அவ் உதவி --- அந்த உபகாரத்தை, மறவாமல் --- மறந்திடாமல்,  பின்றை --- பிறகு, அவர் --- அந்த உபகாரம் செய்தவர்,  செய் --- செய்த, பிழை --- பல குற்றத்தை, பெரியோர் --- பெரியவர்கள், பொறுத்திடுவர் ---: பொறுத்துக் கொள்வார்கள்.

     முது கயவர் ---- பழமையான கீழ்மக்கள்,  நன்றி --- (ஒருவர் செய்த) உபகாரம், பல ஆக --- மிகப்பலவாய் இருக்க, (அந்த உபகாரஞ் செய்தவர்), ஒரு நவை புரிவரேனும் --- ஒரு குற்றம் செய்வாரேயானாலும் (அன்னார் செய்த மிகப்பல நன்மைகளையும் மறந்து அவர் செய்த ஒரு தீமைக்காக), கன்றிடுவது அன்றி --- (அவர்மீது) கோபிப்பதே
அன்றி, நினையார் --- (அவர்செய்த நன்மையை) எண்ணிச் சாந்தமாக இருக்க மாட்டார்.

     நீங்கள் கயவர் தன்மையை மேற்கொள்ளாமல் பெரியோர் தன்மையை மேற்கொண்டு, விராடன் செய்த பல நன்மைகளை எண்ணி, என் நெற்றியில் வடுச்செய்த இந்த ஒரு தீமையை மறக்கவேணும் என்றபடி தருமன் சொன்னான்:

ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த
பிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர்; - கயவர்க்கு
எழுநூறு நன்றிசெய்து ஒன்றுதீது ஆயின்
எழுநூறும் தீதாய் விடும்.       ---  நாலடியார்.


இதன் பொருள் ---

     ஒரு உதவியைச் செய்தவர், பின்னர் தமக்குப் பல நூறு தீமைகள் செய்திருந்தாலும், பெரியோர் அதைப் பொருட்படுத்த மாட்டார். ஆனால, கீழ்மக்களுக்கு எழுநூறு நன்மைகள் செய்து இருந்து, தவறிப் போய் ஒரு தீமை செய்ய நேர்ந்து விட்டாலும், இந்த ஒரு தீமையால், முன்செய்த எழுநூறு நன்மையும் தீமையாய் விடும்.

         துரியோதனன் தனக்குச் செய்த பேருதவியை எண்ணி, அவன் செய்த நன்றியை மறத்தல் ஆகாது என்று கர்ணனின் கூற்றாக, பெருந்தேவனார் பாடிய "பாரத வெண்பா"வில் இருந்து சில பாடல்கள்....

இன்னான் என அறியா என்னை முடிகவித்து
மன்னர் வணங்க அரசு இயற்றி --- பின்னையும்
தன் எச்சில் உண்ணாத் தகைமையான் தான் உண்டான்
என் எச்சில் என்னோடு இனிது.       ---  பாரதவெண்பா

கொன்னவிலும் தேர்ப்பாகன் என்று குலம் பேசி,
என்னைப் பலரும் இகழ்ந்து உரைப்ப --- பின்னையும்தான்
என் எச்சில் என்னோடும் உண்டானை, எங்ஙனே
உன்னிச் சிறப்பேன் உரை.           ---  பாரதவெண்பா

மதமா மழகளிற்றான் மற்று எனக்குச் செய்த
உதவி உலகு அறியும் அன்றே, --- உதவிதனை
நன்று செய்தோர் தங்களுக்கு நானிலத்தில் நல்லோர்கள்
குன்றுவதோ செய்ந்நன்றி கூறு.      ---  பாரதவெண்பா.

பன்மணிகள் சிந்திப் பரந்து கிடந்தது கண்டு
இன்மணிக்கு என் புகுந்தது என்னாமல் --- நன்மணியைக்
கோக்கோ பொறுக்குகோ என்றானுக்கு என் உயிரைப்
போக்காது ஒழிவேனோ புக்கு.        ---  பாரதவெண்பா.

மைத் தடங்கண் மாதேவி வார்த்துகிலை யான்பிடிப்ப
ஆற்று விழுந்த அருமணிகள், --- மற்றுஅவற்றைப்
கோக்கேனோ என்று உரைத்த கொற்றவற்கு என் ஆர்உயிரைப்
போக்காது ஒழிவேனோ புக்கு.        ---  பாரதவெண்பா.

நன்றாக மன்னன் எனக்கு இந்த நாடு ஆறிய
குன்றாத நன்மை பல கொடுத்தான் --- என்னாலும்
ஈண்டு அவன் செய்த உதவியினை யான் மறந்தால்
தீண்டுவளோ தாரமையாள் சேர்ந்து.  ---  பாரதவெண்பா.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...