திருக்குறள்
அறத்துப்பால்
இல்லற
இயல்
பன்னிரண்டாம்
அதிகாரம் - நடுவு நிலைமை
இந்த அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறள், "ஒருவன் தனது மனம்
அறவழியில் நிற்றலை விடுத்து, பாவச் செயல்களைச் செய்ய நினைக்குமாயின், அந்த நினைவைக்
கொண்டே தான் கெடுவது உறுதி என்பதை அறிந்துகொள்ளலாம்" என்கின்றது.
நினைப்பதும் செய்வதோடு ஒக்கும்.
"உள்ளத்தால் உள்ளலும் தீதே" என்றார் நாயனார் பிறிதொரு திருக்குறளில்.
தீய நினைவே கெடுதலுக்கு உற்பாதம் என்று கொள்ளலாம். உற்பாதம் - பின்வரும் நன்மை
தீமைகளை முன் அறிவிக்கும் கருவி.
கேடு வரும் பின்னே, மதி கெட்டு வரும் முன்னே.
யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே.
திருக்குறளைக்
காண்போம்...
கெடுவல்
யான் என்பது அறிக, தன் நெஞ்சம்
நடுவு
ஒரீஇ அல்ல செயின்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின் ---
ஒருவன் தன் நெஞ்சம் நடுவு நிற்றலை ஒழித்து நடுவல்லவற்றைச் செய்ய நினைக்குமாயின்;
யான் கெடுவல் என்பது அறிக ---
அந்நினைவை 'யான் கெடக்கடவேன்' என்று உணரும் உற்பாதமாக அறிக.
(நினைத்தலும் செய்தலோடு ஒக்கும் ஆகலின், 'செயின்' என்றார்.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை
வெள்ளியம்பலவாண முனிவர், தாம் இயற்றிய, "முதுமொழி மேல்
வைப்பு"
என்னும் நூலில் பின்வரும் பாடலைப் பாடி உள்ளார்....
ஈசன்
உமையாள் இடைப்பட்டு, வாரமாய்ப்
பேசலும், மாயோன் பெரும்
பாம்பாம், --- ஆசில்
கெடுவல்
யான் என்பது அறிக தன் நெஞ்சம்
நடுவு
ஒரீஇ அல்ல செயின்.
இதன்
பொருள் ---
வாரமாய் ---
ஒருங்கு பற்றிய அன்புடன். ஆசில்
--- விரைவில்.
சிவபெருமானும் உமாதேவியாரும் கழகம் என்னும்
ஆட்டத்தை ஆடும்பொழுது, தம்முள் வெற்றி
தோல்விகள் எவருடையன என்று அறிந்து சொல்லுதற்கு, திருமாலை நடுவராக வைத்தார்கள். திருமால்
நடுநிலைமை தவறி, ஒருபட்சமாகப் பேச, உமாதேவியார் அவரை மலைப்பாம்பு ஆகுமாறு
சபித்தனர் என்பது வரலாறு. இந்த வரலாறு, கந்தபுராணம், தட்ச காண்டம், கயமுகன் உற்பத்திப்
படலத்து உள்ளது.
விதியது
வலியினாலும், மேல்
உள விளைவினாலும்,
பதி
உறு கேடு வந்து
குறுகிய பயத்தினாலும்,
கதி
உறு பொறியின் வெய்ய காம
நோய், கல்வி நோக்கா
மதியிலி
மறையச் செய்த தீமைபோல்,
வளர்ந்தது அன்றே. --- கம்பராமாயணம், மாரீசன் வதைப்படலம்.
இதன்
பதவுரை ---
விதியது வலியினாலும் --- ஊழ்வினையின் ஆற்றலினாலும்; மேல் உள விளைவினாலும் --- இனிமேல் அதனால் உண்டாக
இருக்கிற பயன்களாலும்; பதி உறு கேடு வந்து குறுகிய பயத்தினாலும்
--- இலங்கை மா நகருக்கு அழிவுக்குரிய
நிலை ஏற்பட்டு நெருங்கியுள்ள பலன்களாலும்; கதி உறு பொறியின் --- விரைவாய் உற்று பொறிகளின்
வழியே; வெய்ய காம நோய் --- (இராவணனைப் பற்றிய) கொடிய காம
நோயானது; கல்வி
நோக்கா
மதியிலி --- கல்வி அறிவு அற்ற அறிவிலி ஒருவன்; மறையச் செய்த தீமை போல் --- யாரும் அறியாமல் மறைவாகச்
செய்த கெடுதி போல; வளர்ந்தது --- ஓங்கிப்
பெருகியது;
வேதவதி சாபம், வானரங்களால் இலங்கை அழிய வேண்டுமென நந்தி இட்ட சாபம் முதலியனவெல்லாம் நிறைவேறத் தக்க
காலம் நெருங்கியது. ஞானம் அற்றவன் மறைவாகச்
செய்த தீங்கும் விரைவாக வெளிப்படும்.
விடுக
இந்த வெகுளியைப் பின்பு உற,
அடுக
நும் திறல் ஆண்மைகள் தோன்றவே,
வடுமனம்
கொடு வஞ்சகம் செய்பவர்
கெடுவர்
என்பது கேட்டு அறியீர்கொலோ.
--- வில்லிபாரதம், அருச்சுனன் தவநிலைச் சருக்கம்.
இதன்
பதவுரை ---
இந்த வெகுளியை விடுக --- இக்கோபத்தை இப்பொழுது விடுவீர்களாக; பின்பு உற --- (வனவாச அஜ்ஞாதவாசங்களின்)
பின்பாக, நும் திறல் ஆண்மைகள் தோன்ற அடுக --- உம்முடைய
பலபராக்கிரமங்கள் வெளிப்படும்படி, பகைவர்களைக் கொல்லுவீராக; 'வடுமனம் கொடு வஞ்சகம் செய்பவர் --- குற்றத்தையுடைய
மனத்தையுடையவர்களாய் வஞ்சனை செய்பவர்கள், கெடுவர் என்பது கேட்டு அறியீர்கொல் ஓ ---
கெட்டே விடுவர், என்னும் வார்த்தையை நீங்கள் கேட்டும் அறிந்தீரில்லையோ?
மனக்குற்றங்கொண்டு பிறர்க்குத் தீமை செய்பவர்
கெடுவராதலால், இப்போது சீற்றங்கொண்டு
துரியோதனாதியரைச் செறல் ஆகாது என்பதாம்.
No comments:
Post a Comment