014. ஒழுக்கம் உடைமை - 09. ஒழுக்கம் உடையவர்க்கு





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 14 - ஒழுக்கம் உடைமை
    
     இந்த அதிகாரத்தில் வரும் ஒன்பதாவது திருக்குறள், "மறந்தும் தீய சொற்களைத் தமது வாயால் சொல்வது, ஒழுக்கம் உள்ள சான்றோர்க்கு இயலாத ஒன்றாகும்" என்கின்றது.

திருக்குறள்கை காண்போம்...

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே, தீய
வழுக்கியும் வாயால் சொலல்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     வழுக்கியும் தீய வாயால் சொலல் - மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் சொல்லும் தொழில்கள்;

     ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லா - ஒழுக்கம் உடையவர்க்கு முடியா.

         (தீய சொற்களாவன: பிறர்க்குத் தீங்கு பயக்கும் பொய் முதலியனவும், வருணத்திற்கு உரிய அல்லனவும் ஆம். அவற்றது பன்மையால், சொல்லுதல் தொழில் பலவாயின. சொல் சாதி ஒருமை. சொல் எனவே அமைந்திருக்க வாயால் என வேண்டாது கூறினார், 'நல்ல சொற்கள் பயின்றது' எனத் தாம் வேண்டியதன் சிறப்பு முடித்தற்கு, இதனை வடநூலார் 'தாற்பரியம்' என்ப.)

     இத் திருக்குளுக்கு விளக்கமா, மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

தீயனவே சொல்லும் சிசுபாலன் முன்பு, கண்ணன்
தூயதுஅலாச் சொல்உரையான், சோமேசா! - ஆயின்
ஓழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.

         ஒழுக்கம் உடைமையாவது தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஓதப்பட்ட ஒழுக்கத்தினை உடையராதல். இது மனம், மொழி, மெய் முதலிய அடங்கினார்க்கு அல்லது முடியாது.

இதன்பொருள் ---

         சோமேசா! ஆயின் --- ஆராயுமிடத்து,  வழுக்கியும் தீய வாயால் சொலல் --- மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் சொல்லும் தொழில்கள், ஒழுக்கம் உடையார்க்கு ஒல்லா --- ஒழுக்கமுடையவர்க்கு முடியா, 

         தீயனவே --- தீய சொற்களையே, சொல்லும் சிசுபாலன் முன்பு --- சொல்லிய சிசுபாலனுக்கு எதிரில், கண்ணன் --- கிருட்டினன், தூயது அலா சொல் உரையான் --- குற்றமற்றது அல்லாத ஒரு சொல்லும் சொல்ல மாட்டாதவனானான் ஆனால் என்றவாறு.

         தீய சொற்களாவன பிறர்க்குத் தீங்க பயக்கும் பொய் முதலியனவும், வருணத்திற்கு உரிய அல்லனவுமாம். அவற்றது பன்மையால் சொல்லுதல் தொழில் பலவாயின.  சொலல் சாதியொருமை. சொலல் எனவே அமைந்திருக்க வாயால் என வேண்டாது கூறினார்,  நல்ல சொற்கள் பயின்றது எனத் தாம் வேண்டியதின் சிறப்பு முடித்தற்கு. இதனை வடநூலார் தாற்பரியம் என்ப. 

         சிசுபாலன் என்பான் வசுதேவன் உடன் பிறந்தாளும் அதனால் கண்ணனுக்கு அத்தையும் ஆகிய சேதி மன்னன் மனைவி சுருதசிரவை என்பாளுடைய மகன். விஷ்ணுவின் துவாரபாலகர்களாகி ஜய விஜயர்கள் ஒருகால் வைகுண்டம் புகுந்த சனகாதியரைத் தடுத்தமை பற்றி மூன்று பிறப்பு விஷ்ணுவுக்குப் பகைவராய்ப் பிறந்து அவ் விஷ்ணுவின் கையால் இறக்க என அவரால் சபிக்கப்பட்டு, இரணிய இரணியாட்சராகவும், இராவண கும்பகர்ணனாகவும், சிசுபால தந்தவக்ரராகவும் பிறந்தார் என அறிக. இச் சிசுபாலன் பிறந்தபொழுது அவனுக்கு நான்கு கைகளும், மூன்று கண்களும் இருந்தன. யார் தொட்டால் அவை மறையுமோ, அவனால் இவனுக்கு மரணம் என்று ஆகாயவாணி கூற, அவ்வாறு பலரும் தொடுகையில் கண்ணன் தொட்ட அப்போதே அவை மறைய, கண்ணனால் அவற்கு மரணம் என்று அறிந்தார்கள். கண்ணனும் அவன் அத்தை வேண்ட நூறு பிழை பொறுப்பதாக வாக்களித்தான். ஏற்கெனவே சிசுபாலற்குக் கண்ணனிடத்து உள்ள பகை தனக்கென இருந்த ருக்குமிணியைக் கண்ணன் மணந்தபின் மேலிட்டது. தருமபுத்திரர் செய்த இராஜசூய யாகத்தில் அவர் கண்ணனுக்கு அக்ரபூசை செய்தமை கண்டு மனம் புழுங்கிக் கொதித்துக் கண்ணனைப் பன்னூறுமுறை வைதமையின், அப்பெருமான் எதிர் ஒன்றும் கூறாது சக்கரத்தை விட,  அது அவன் தலையைத் துணிக்க, உடன் அவன் உடம்பினின்றும் ஒரு சோதி எழுந்து கண்ணன் திருவடியை அடைந்தது. 

" 'பூபாலர் அவையத்து முற்பூசை
     பெறுவார், புறங்கானில் வாழ்
கோபாலரோ'' என்று உருத்து, அங்கு
     அதிர்த்து, கொதித்து, ஓதினான்-
காபாலி முனியாத வெங் காமன்
     நிகரான கவின் எய்தி, ஏழ்
தீ பால் அடங்காத புகழ் வீர கயம்
     அன்ன சிசுபாலனே.   

திண்ணிய நெஞ்சினனான சிசுபாலன்,
      தன் நெஞ்சில் தீங்கு தோன்ற,
எண்ணிய மன்பேர் அவையின் இயம்பிய புன்
     சொற்கள் எலாம் எண்ணி எண்ணி,
புண்ணியர் வந்து இனிது இறைஞ்சும் பூங்கழலோன்
     வேறு ஒன்றும் புகலான் ஆகி,
பண்ணிய தன் புரவி நெடும் பரு மணித் தேர்
     மேற்கொண்டான்,  பரிதி போல்வான்.

வெஞ் சினம் முடுக, ஒருவருக்கு ஒருவர்
     வெல்லலும் தோற்றலும் இன்றி,
வஞ்சினம் உரைசெய்து, உள்ளமும், மெய்யும்,
      வாகு பூதரங்களும், பூரித்து,
எஞ்சினர் தமைப்போல் இளைத்த பின், இனி வான்
     ஏற்றுதல் கடன் எனக் கருதி,
கஞ்சனை முனிந்தோன், இவன் முடித் தலைமேல்,
      கதிர் மணித் திகிரி ஏவினனே.
             
ஏவிய திகிரி, வீரரைத் துறக்கம் ஏற
     விட்டிடும் இரவியைப்போல்,
மேவிய பகையாம் மைத்துனன் முடியை
     விளங்கு கோளகை உற வீசி,
ஆவிகள் அனைத்தும் நிறைந்து, ஒளி சிறந்த
     அச்சுதன், அலைகொள் பாற்கடலில்
தீவிய அமுதம் அமரருக்கு அளித்தோன்,
     திருக் கரம் சென்று சேர்ந்ததுவே.

சேதி மன்னவன்தன் முடியினை நெடியோன்
     திகிரி சென்று அரிந்திட, ஒரு பொற்
சோதி மற்று அவன்தன் உடலின்நின்று எழுந்து,
     சுடரையும் பிளந்துபோய், மீண்டு,
மாதிரம் அனைத்தும் ஒளியுற விளக்கி,
      மண் அளந்தருள் பதம் அடைய,
வேதியர் முதலோர் யாவரும், வேள்விப்
     பேர் அவை வேந்தரும் கண்டார்.

என்னும் வில்லிபுத்தூரார் பாரதக் கவிகள் காண்க.

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்காக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடிய "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
                                                      ---  .
தன்மதுரை சொன்னபழிக்கு அஞ்சித் தகவுரைத்தான்
தென்மதுரை நாதன், சிவசிவா! --- என்னின்
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்.

         திருவிளையாடல் பழிக்கு அஞ்சின படலம்

     குலோத்துங்க பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் திருப்பத்தூர் எனும் ஊரைச் சேர்ந்த அந்தணர் குடும்பம் மதுரைக்கு வந்து கொண்டிருந்தது. பயணக் களைப்பில் இருந்து விடுபட, ஒரு மரத்தடியில் மனைவி இளைப்பாற, குழந்தை விளையாட கணவன் நீரைத் தேடி சென்றான். அப்போது அந்த மரத்திலிருந்த ஒரு அம்பு விழுந்து மனைவி இறந்தாள். அந்த அம்பு முன்னொரு காலத்தில் ஒரு வேடன் இட்டதாகும். குறி தவறி சென்று மரத்தில் சிக்கிய அம்பு இப்போது அந்தணனின் மனைவியைக் கொன்றது.

     இதனை எல்லாம் அறியாது மரத்தின் கீழ் மறு இடத்தில் வேடன் ஒருவன் தங்கினான். நீர் கொண்டு வந்த அந்தணன் மனைவியை அம்பு தைத்து கொன்றிருப்பதை கண்டு அழுதான். யார் செய்திருப்பார் எனக் காண்கையில் உறங்கிக்கொண்டிருந்த வேடன் தென்பட்டான். அவனிடம் மனைவியை கொன்றமைக்காக முறையிட, வேடன் தான் கொல்லவில்லை என வாதாடினான்.

     அந்தணர் வேடனை அரண்மனைக்கு அழைத்து சென்றார். இருதரப்பு பேச்சையும் கேட்ட அரசன், அவர்களை ஒரு வாரம் கழித்து வரும்படி கூறிவிட்டு, சொக்கநாதரை தரிசித்து இக்கட்டான இந்த வழக்கில் இருந்து காக்குமாறு வேண்டினார். இறைவன் அருளால் இரு கிங்கனங்கள் பேசுவதையும். அவர்கள் அந்த அம்பினால் அந்தணன் மனைவி இறந்தமையும் தெரிவித்தமையை அறிந்து கொண்டான். தவறு செய்யாத அந்த வேடரை காத்து, அந்தணரின் துயரத்தில் பங்கெடுத்தான் அரசன்.[

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்காக அமைந்திருத்தலைக் காணலாம்...
ஆற்றானை ஆற்று என்று அலையாமை முன்இனிதே;
கூற்றம் வரவு உண்மை சிந்தித்து வாழ்வு இனிதே;
ஆக்கம் அழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியின் தேர்வு இனியது இல்.   --- இனியவை நாற்பது.

இதன் பதவுரை ---

     ஆற்றானை --- (ஒரு தொழிலைச்) செய்ய மாட்டாதானை, ஆற்று என்று --- (அதனைச்) செய்யென, அலையாமை --- வருத்தாமை, முன் இனிது --- மிக இனிது ; கூற்றம் --- யமனது, வரவு உண்மை --- வருகையின் நிச்சயத்தை, சிந்தித்து வாழ்வு --- நினைத்து வாழ்வது , இனிது --- இனிது; ஆக்கம் அழியினும் --- செல்வம் அழிந்தாலும், அல்லவை கூறாத --- பாவச் சொற்களைச் சொல்லாமைக்கு ஏதுவாகிய, தேர்ச்சியின் --- தெளிவினும், தேர்வு --- தெளிவு, இனியது இல் --- இனியது பிறிதொன்றில்லை.

     மரணம் வருதலை நினைப்பின், பாவ வழியில் மனஞ் செல்லாமையின் ‘கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வு' என்றார் ‘பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி ' என்றார் பிறரும்.

         அல்லவை என்றது பிறர்க்குத் தீங்கு பயக்கும் பொய் முதலியனவும் வருணத்திற்கு உரிய அல்லனவுமாம். அவைகூறின் ஒருவன்மாட்டு ஒழுக்கமின்மை வெளிப்படுதலின் கூறாத தேர்ச்சியின்'என்றார்.

"ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்"            (திருக்குறள்)

என்றிருத்தல் காண்க.

வடுச்சொல் நயம் இல்லார் வாய்த்தோன்றும், கற்றார்வாய்ச்
சாயினும் தோன்றா கரப்புச்சொல், - தீய
பரப்புச்சொல் சான்றோர்வாய்த் தோன்றா, கரப்புச்சொல்
கீழ்கள்வாய்த் தோன்றி விடும். --- நான்மணிக்கடிகை.

இதன் பதவுரை ---

     வடுச்சொல் நயம் இல்லார் வாய்த் தோன்றும் --- பழிச் சொற்கள் அன்பில்லாதாரது வாயில் பிறக்கும்;  கற்றார் வாய் கரப்புச் சொல் சாயினும் தோன்றா --- அறிவு நூல்களைக் கற்றவரது வாயில், வஞ்சனைப் பேச்சுக்கள், அவர் கெடுவதாயினும் பிறவா; தீய பரப்புச் சொல் சான்றோர்வாய் தோன்றா --- தீயவற்றைப் பரப்புதலால் ஆகும் பேச்சுக்கள் மேன்மக்கள் வாயில் தோன்றமாட்டா;

     அன்பில்லாதார் வாயில் பழிச்சொற்கள் தோன்றும்; காற்றார் வாயில் வஞ்சனைச் சொற்கள் தோன்றா; சான்றோர் வாயில் தீயவற்றைப் பரப்புஞ் சொற்கள் தோன்றா; கீழ்மக்கள் வாயில் ஒளிப்புச் சொல் தோன்றிவிடும்.


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...