004. அறன் வலியுறுத்தல் - 07. அறத்தாறு இது




திருக்குறள்
அறுத்துப்பால்
நான்காம் அதிகாரம் - அறன் வலியிறுத்தல்


     இந்த அதிகாரத்தில் ஏழாவது திருக்குறள்,  "அறம் செலுத்தும் வழி இதுதான் என்று ஆகம அளவையால் சொல்லுதல் வேண்டாம். அது, பல்லக்கைச் சுமந்தவனோடு, பல்லக்கில் செல்பவனுக்கு இடையில் காணப்படும்" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்.....

அறத்து ஆறு இது என வேண்டா, சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     அறத்து ஆறு இது என வேண்டா --- அறத்தின் பயன் இது என்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா;

     சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை --- சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னானே உணரப்படும்.

         (பயனை 'ஆறு' என்றார், பின்னது ஆகலின். 'என' என்னும் எச்சத்தால் சொல் ஆகிய ஆகம அளவையும், 'பொறுத்தானோடு ஊர்ந்தானிடை' என்றதனால் காட்சியளவையும் பெற்றாம். உணரப்படும் என்பது சொல்லெச்சம். இதனான் அறம் பொன்றாத் துணையாதல் தெளிவிக்கப்பட்டது. தன்னானே உணரப்படும். (பயனை 'ஆறு' என்றார், பின்னது ஆகலின் 'என' என்னும் எச்சத்தால் சொல் ஆகிய ஆகம அளவையும், 'பொறுத்தானோடு ஊர்ந்தானிடை' என்றதனால் காட்சியளவையும் பெற்றாம், உணரப்படும் என்பது சொல்லெச்சம். இதனான் அறம் பொன்றாத் துணையாதல் தெளிவிக்கப்பட்டது.

     ஒருவன் பல்லக்கிலே போகின்றான். இன்னொருவன் பல்லக்கைத் தூக்கிக்கொண்டு போகின்றான். பல்லக்கில் போகின்றவன் அறம் புரிந்தவன் என்றும், பல்லக்கைத் தூக்கிச் செல்வோன் அறத்தைப் புரியாதவன் என்றும், அதன் பயனாகவே பல்லக்கைச் சுமந்து செல்கின்றான் என்றும் சொல்லுவது பழைய வழக்கம். அதன்படியே, அறத்தாறு இது என வேண்டா என்று திருவள்ளுவர் காட்டியதற்குப் பலரும் உரை செய்து உள்ளார்கள்.

     உண்மையில் பார்த்தோமானால், பல்லக்கில் ஊர்ந்து செல்வதற்கும், பல்லக்கைத் தூக்கிச் செல்வதற்கும் அறத்திற்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை என்று அறியலாம். செல்வம் நிறையப் படைத்தவர்கள், தமது செல்வாக்கை நிலைநிறுத்தப் பல்லக்கை வைத்து உள்ளார்கள். கூலி கொடுத்துத் தூக்கச் செய்து போகின்றார்கள். செல்வம் நிறையப் படைத்தவர்கள் என்பதாலேயே அவர்கள் யாவரும் அறத்தைப் புரிந்தவர்கள் என்று கொள்ள இடமில்லை. செல்வத்தைப் படைத்திருப்பது ஒன்றே அறம் ஆகாது. "பொருட்செல்வம் பூரியார் கண்ணணும் உள" என்று நாயனார் பிறிதோர் திருக்குறளில் அருளி இருப்பதையும் சிந்திக்கவேண்டும். 

     அதனால், பல்லக்கில் ஊர்ந்து செல்லுதல், தாங்குதல் என்னும் வாழ்க்கை வேறுபாடுகள் உலகியல் நிலையிலும், செல்வ நிலையிலும் வேறுபட்டு நிற்பது அல்லாமல், அது அறத்தின்பால் பட்டது என்று கொள்ள இடமில்லை.

     ஒரோவழி அறத்தின் காரணமாக பல்லக்கில் செல்லுதலும் உண்டு. அதைத் தாங்குதலும் உண்டு. அவ்விடத்தில், பல்லக்கை ஊர்பவரும், தாங்குபவரும் ஒத்த உணர்வும், தகுதியும் உடையவராய் இருத்தல் கூடும். அந்நிலையில் பல்லக்கைத் தாங்கிச் செல்வதும் அறமாகின்றது.

     இதனை, திருஞானசம்பந்தர் ஊர்ந்த பல்லக்கை, திருநாவுக்கரசர் தாங்கிச் சென்றதில் இருந்து தெளியலாம்.

     துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் பாடிய "நால்வர் நான்மணிமாலை" என்னும் நூலில், இத் திருக்குறளுக்கு சிறந்ததொரு விளக்கம் காணப்பட்டுள்ளது.


அறத்தாறு இது என வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடையை --- மறுத்தார்,சம்
பந்தன் சிவிகை பரித்தார் திரிகுவர் மற்று
உந்தும் சிவிகையினை ஊர்ந்து.

இதன் பொருள் ---
        
     சம்பந்தன் சிவிகை பரித்தார் --- திருஞானசம்பந்தப் பெருமானது சிவிகையைத் தாங்கப் பெற்றவர், 

     உந்தும் சிவிகையினை ஊர்ந்து திரிகுவர் --- செலுத்தும் சிவிகையை நடாத்தி, இப்பொழுதும் சிறந்த தேவராய்த் திரிகின்றாராகலின்,

     அறத்தாறு இது என வேண்டா --- அறத்தின் பயன் இது என்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டுவது இல்லை,

     சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடையை மறுத்தார் --- சிவிகையைக் கடாவுவானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னானே உணரப்படும் என்னும் பொருள் அமைந்த திருக்குறளை மறுத்தவர் ஆயினார்.

     அறம் செய்தவன் யார்? அறம் செய்யாதவன் யார்? என்பதை விளக்குவதற்கு அறநூல்களிலே சொல்லப்பட்டவற்றைச் சான்றுகளாக எடுத்துக் காட்டி உணர்த்த வேண்டாம். அதனை இவ்வுலகில் காணப்படும் நிகழ்வுகளைக் கண்ணால் கண்டே முடிவு செய்து கொள்ளலாம். பல்லக்கில் அமர்ந்து போகிறார் ஒருவர். பலர் அந்தப் பல்லக்கைச் சுமந்து செல்கிறார்கள். முற்பிறவியில் அறத்தைச் செய்யாதவன், இப்பிறவியில் பல்லக்கைச் சுமந்து செல்கின்றான். அறத்தின் பயன் இன்னது என்பதைக் காண்ணால் கண்டே தெரிந்து கொள்ளலாம் என்பது திருக்குறளின் கருத்தாகப் பலரும் கொள்வது கண்டு இருக்கின்றோம். உலகியல் நிலைகளைப் பாடுவது திருவள்ளுவர் கருத்து ஆகாது.

     இந்தக் கருத்துப்படி பார்த்தால், பல்லக்கில் ஊர்ந்து செல்லும் திருஞானசம்பந்தர் அறம் செய்தவர். அவருடைய பல்லக்கைச் சுமந்து செல்லுபவர்கள் முற்பிறப்பில் அறம் செய்யாதவர்கள் ஆவர்.

     ஆனால் உண்மை அது அல்ல. திருஞானசம்பந்தப் பெருமான் ஊர்ந்து ஒரும் பல்லக்கினைத் தாங்குவது தான் பெறும் அரிய பேறு என்று உணர்ந்தே அப்பர் பெருமான் அவ்வாறு செய்தார்.

     பின்வரும் பெரியபுராணப் பாடல்களால் இந்த உண்மை தெளியப்படும். திருநாவுக்கரசு நாயனார் புராணத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

சண்பைவரும் தமிழ்விரகர்
         எழுந்துஅருளத் தாம் கேட்டு,
மண்பரவும் பெருங்கீர்த்தி
         வாகீசர் மனம் மகிழ்ந்து,
கண்பெருகும் களிகொள்ளக்
         கண்டு இறைஞ்சும் காதலினால்
எண்பெருகும் விருப்புஎய்த
         எழுந்துஅருளி எதிர்சென்றார்.

பொழிப்புரை : சீகாழிப் பதியில் தோன்றிய தமிழ் வல்லுநரான திருஞானசம்பந்தர் எழுந்தருளி வர, அந் நற்செய்தியை உலகம் போற்றும் புகழையுடைய நாவரசர் தாம் கேட்டு, மனம் மகிழ்ந்து கண்களால் காணும் களிப்பு மிக, நேரில் கண்டு கும்பிட வேண்டும் என்னும் அவாவினால் உள்ளத்தில் பெருகும் விருப்பம் பொருந்த எதிரே சென்றார்.


காழியர்கோன் வரும்எல்லை
         கலந்துஎய்தி, காதலித்தார்
சூழும் மிடைந்திடு நெருக்கில்
         காணாமே தொழுது அருளி,
"வாழி, அவர் தமைத் தாங்கும்
         மணிமுத்தின் சிவிகையினைத்
தாழும் உடல் இதுகொண்டு
         தாங்குவன் யான்" எனத் தரித்தார்.

பொழிப்புரை : சீகாழியின் தலைவரான திருஞானசம்பந்தர் வருகின்ற அதுபொழுது, திருக்கூட்டத்துடன் கூடிச்சேர்ந்து அன்பு உடையவராகிச் சூழ்ந்து, நெருங்கிய கூட்டத்தின் நெருக்கத்துள் ஞானப்பிள்ளையார் தம்மைக் காணாத வண்ணம், அவரை வணங்கி, உலகினர்க்கு வாழ்வு தரவந்த பிள்ளையாரைத் தாங்கும் முத்துச் சிவிகையைத் தாங்கி வருபவருடன் தாழ்ந்த இவ்வுடலைக் கொண்டு `நானும் சுமப்பன்` எனும் நினைவுடையராய்.


வந்து ஒருவர் அறியாமே
         மறைந்த வடிவொடும், புகலி
அந்தணனார் ஏறி எழுந்து
         அருளிவரும் மணிமுத்தின்
சந்தமணிச் சிவிகையினைத்
         தாங்குவார் உடன் தாங்கி,
சிந்தை களிப்பு உற வருவார்
         தமை யாரும் தெளிந்து இலரால்.

பொழிப்புரை : பிள்ளையாருடன் வந்து கொண்டிருக்கும் எவரும் அறியாதவாறு, மறைத்த வடிவுடன், சீகாழி அந்தணரான திருஞானசம்பந்தர் எழுந்தருளி வரும் அழகான மணிச் சிவிகையைச் சுமப்பவர்களுடன் தாமும் ஒருவராய்த் தாங்கித், தம் உள்ளம் மிக மகிழ்ச்சி பொருந்த வருவாரான திருநாவுக்கரசு நாயனாரை ஒருவரும் அறிந்து கொண்டார் இல்லை.


திருஞான மாமுனிவர் அரசு இருந்த பூந்துருத்திக்கு
அருகாக எழுந்தருளி, "எங்குஉற்றார் அப்பர்" என,
உருகா நின்று, "உம்அடியேன் உம்அடிகள் தாங்கிவரும்
பெருவாழ்வு வந்துஎய்தப் பெற்று இங்கு உற்றேன்" என்றார்.

பொழிப்புரை : திருஞானப் பெருமுனிவராகிய சம்பந்தர், திருநாவுக்கரசு நாயனார் வீற்றிருந்த திருப்பூந்துருத்திக்கு அருகில் எழுந்தருளிச் சிவிகையில் இருந்தவாறே "அப்பர் எங்குற்றார்?" என்று வினவ, உள்ளம் மிகவுருகி, "உம் அடியவன் உம் திருவடிகளைச் சுமக்கும் பெருவாழ்வு பெற்று இங்கு இருக்கின்றேன்" என்று சிவிகையைத் தாங்கி வரும் அந் நிலையிலேயே விடை பகர்ந்தார்.


பெரியபுராணம் --- திருயஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
  
அந்தணர் சூளாமணியார்
         பூந்துருத்திக்கு அணித்தாக
வந்து அருளும் பெருவார்த்தை
         வாகீசர் கேட்டு அருளி,
நந்தமை ஆள் உடையவரை
         நாம் எதிர் சென்று இறைஞ்சுவது
முந்தை வினைப் பயன் என்று
         முகம் மலர அகம் மலர்வார்

பொழிப்புரை : மறையவர்களின் மணிமுடியாய் விளங்கும் திருஞானசம்பந்தர் திருப்பூந்துருத்திக்கு அண்மையாய் வந்தருளுகின்ற பெருமொழியைக் கேட்ட, நாவரசுப் பெருந்தகையாரும் `நம்மை ஆளாக உடைய பிள்ளையாரை நாம் எதிர் கொண்டு வணங்குவது முற் பிறவியில் செய்த நல்வினையின் பயனாகப் பெறக் கூடியதாகும்' என எண்ணி அகமும் முகமும் மலர,


"எதிர்சென்று பணிவன்" என
         எழுகின்ற பெருவிருப்பால்,
நதிதங்கு சடைமுடியார்
         நற்பதங்கள் தொழுது, ந்தப்
பதிநின்றும் புறப்பட்டு,
         பரசமயம் சிதைத்தவர்பால்
முதிர்கின்ற பெருந்தவத்தோர்
         முன் எய்த வந்து அணைந்தார்.

பொழிப்புரை : `எதிர் கொண்டு வணங்குவன்' என்று, தம் உள்ளத்தில் மேன்மேலும் எழும் பெருவிருப்பத்தால், கங்கை சூடிய சடையாரின் நல்ல திருவடிகளைத் தொழுது, அத்திருப்பதியினின்றும் புறப்பட்டுச் சென்று, பிற சமயங்களின் தீங்கை அழித்த பிள்ளையார் இடத்து, முதிரும் பெருந்தவத்தவர்களான அடியவர்களின் முன் வந்து சேர்ந்தார்.


திருச்சின்னம் பணிமாறக்
         கேட்ட நால் திசை உள்ளோர்
பெருக்கின்ற ஆர்வத்தால்
         பிள்ளையார் தமைச் சூழ்ந்த
நெருக்கின் இடை, அவர் காணா
         வகை நிலத்துப் பணிந்து, ள்ளம்
உருக்கி எழு மனம்பொங்கத்
         தொண்டர் குழாத்துடன் அணைந்தார்.

பொழிப்புரை : திருச்சின்னம் பிள்ளையாரின் புகழ்களை எடுத்து முழங்கக் கேட்டவர்களான நால் திசைகளில் இருந்தும் வந்த அன்பர்கள், பெருகும் ஆசையால் திருஞானசம்பந்தரைச் சூழ்ந்து வரும் நெருக்கத்தில், திருஞானசம்பந்தர் காணாத வகையில் நிலத்தில் விழுந்து பணிந்து, உள்ளத்தை உருக்கி எழும் மனம் ஓங்கத் திருத்தொண்டர் கூட்டத்துடன் சேர்ந்தார்.


வந்து அணைந்த வாகீசர்,
         வண்புகலி வாழ்வேந்தர்
சந்தமணித் திருமுத்தின்
         சிவிகையினைத் தாங்கியே
சிந்தை களிப்பு உற வருவார்,
         திருஞான சம்பந்தர்
புந்தியினில் வேறு ஒன்று
         நிகழ்ந்திட முன் புகல்கின்றார்.

பொழிப்புரை : அங்ஙனம் தொண்டர் கூட்டத்துள் வந்து சேர்ந்த திருநாவுக்கரசர், கொடைத் தன்மை வாய்ந்த சீகாழிப் பதியை வாழ்விக்க வந்தருளிய பிள்ளையாரது அழகிய முத்துச் சிவிகையைத் தாங்குகின்றவர்களுடன் கூடி, தாமும் தாங்கி உள்ளக் களிப்புடனே வருவாராக, திருஞானசம்பந்தர் தம் உள்ளத்தில் திருவருட் குறிப்பால் வேறொரு உணர்ச்சி உண்டானதால் முற்படக் கூறுவாராய்,


"அப்பர் தாம் எங்கு உற்றார்
         இப்பொழுது" என்று அருள் செய்ய,
செப்ப அரிய புகழ்த் திருநா
         வுக்கரசர் செப்புவார்,
"ஒப்ப அரிய தவம் செய்தேன்,
         ஆதலினால், உம் அடிகள்
இப்பொழுது தாங்கிவரப்
         பெற்று உய்ந்தேன் யான்"என்றார்.

பொழிப்புரை : `அப்பர் தாம் இப்போது எங்கு எழுந்தருளினார்?' என்று வினவியருள, சொலற்கரிய புகழையுடைய திருநாவுக்கரசரும் விடை தருபவராய் `ஒப்பற்ற தவத்தை முன்னே செய்தேனாதலின் இப்போது உம் திருவடிகளைத் தாங்கிவரும் பெரும்பேற்றை அடைந்து உய்ந்தேன்' என்று அருளிச் செய்தார்.


அவ்வார்த்தை கேட்டு அஞ்சி,
         அவனியின் மேல் இழிந்து அருளி,
"இவ்வாறு செய்து அருளிற்று
         என் ஆம்?" என்று இறைஞ்சுதலும்,
செவ்வாறு மொழி நாவர்,
         "திருஞான சம்பந்தர்க்கு
எவ்வாறு செயத் தகுவது?"
         என்று எதிரே இறைஞ்சினார்.

பொழிப்புரை : அத் திருமொழிகளைக் கேட்டு அச்சம் கொண்ட திருஞானசம்பந்தர், சிவிகையினின்றும் இறங்கியருளி,  "இவ்வாறு தாங்கள் செய்தருளுவது என்னோ?" எனப் பதைப்புடன் வணங்குதலும், செம்மையே மொழியும் நாவுடைய அரசரும் "திருஞானசம்பந்தருக்கு, வேறு யாது செய்தல் தக்கதாகும்?"  எனக் கூறி வணங்கினார்.


சூழ்ந்து மிடைந்து அருகு அணையும்
         தொண்டர் எல்லாம் அதுகண்டு,
தாழ்ந்து, நிலம் உற வணங்கி,
         எழுந்து, அங்கை தலைகுவித்து,
வாழ்ந்து, மனக் களிப்பினராய்,
         "மற்று இவரை வணங்கப்பெற்று,
ஆழ்ந்த பிறப்பு உய்ந்தோம்" என்று
         அண்டம் எலாம் உற ஆர்த்தார்.

பொழிப்புரை : சூழ்ந்து நெருங்கி வரும் உண்மைத் தொண்டர்கள் எல்லாம் அதைப்பார்த்துத் தாழ்ந்து நிலத்தில் பொருந்த வணங்கி எழுந்து அழகிய கைகளைத் தலைமீது குவித்து உள்ளக் களிப்புடையவராய், `இவ்விரு பெருமக்களையும் வணங்கப் பெற்றதால் நாம் ஆழ்ந்துள்ள பிறவிக் கடலினின்றும் ஈடேறி உய்யப் பெற்றோம்' என மொழிந்து அண்டங்கள் எல்லாம் பொருந்த மகிழ்வொலி செய்தனர்.

     திருஞானசம்பந்தப் பெருமான் ஊர்ந்து ஒரும் பல்லக்கைத் தாங்கியவர்கள் எல்லோருமே இப்பொழுதும் தேவர்களாக அவ்வுலகத்தில் தாங்களாகவே செலுத்தக் கூடிய தேவலோகச் சிவிகையை ஊர்ந்து திரிந்து கொண்டு இருப்பவர்களே. தேவர்கள் தான் அவருடைய பல்லக்கைச் சுமந்து வருகின்றார்கள். 

     எனவே, அறம் செய்யாதவர்களே பல்லக்கைத் தாங்குபவர்கள் என்ற அறநூல் துணிபு மறுக்கப்பட்டு விட்டது. காரணம், திருஞானசம்பந்தப் பெருமானின் பல்லக்கைச் சுமந்தவரில் அப்பர் பெருமானும் ஒருவர். அவருடைய பெருமை அளப்பரியது.

     "பெற்றால் நினைப் பெற்றவர் போல் பெறலும், பிறப்பு அது உண்டேல் நல் தாரணியில் நின்னைப் போல் பிறப்பதும் நல்ல" என்று சிவப்பிரகாச சுவாமிகள் அப்பர் பெருமானைக் குறித்துப் பாடி உள்ளதே, அவர் பெருமையைக் காட்டும்.

     இனி, திருக்குறளின் பெருமையை உலகறியச் செய்ய வந்த நூல்கள் சில உண்டு. அவற்றில், கமலை வெள்ளியம்பலவாண முனிவர் தாம் இயற்றிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில், இத் திருக்குறளை வைத்து ஒரு பாடலைப் பாடி உள்ளார். அது வருமாறு.....
                                                              
காணலாம் ஈசன் கழல் பணிந்து நல்லறங்கள்
பேணுவார் நாளும் பெறும்பயனைப் --- பேணும்
அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.     

நல்அறங்கள் ---  பசு புண்ணியங்கள்.

     ஈசன் கழல் பணிந்து நல்லறங்கள் பேணுவார் நாளும் பெறும் பயனைச் சிவிகை பொறுத்தானோடு  ஊர்ந்தான் இடைக் காணலாம் என முடிக்க. 

     சிவிகையில் ஊர்பவனையும், அதைச் சுமப்பவனையும் நோக்கி அறங்களின் பயனைத் தெரிந்து கொள்ளலாம் என்பது கருத்து.

      சிவிகையில் ஊர்பவன் வெறும் பணம் படைத்தவனாக இருப்பின், சிவிகையைச் சுமப்போரும், கூலிப் பொருளுக்காக சுமப்பவராகவே இருப்பர். இதை உணர்த்த திருக்குறள் வேண்டாம் என்பதை உணர்தல் வேண்டும்.


முற்பெரிய நல்வினை முட்டின்றிச் செய்யாதார்
பிற்பெரிய செல்வம் பெறலாமோ? - வைப்போடு
இகலிப் பொருள்செய்ய எண்ணியக்கால் என்னாம்?
முதல் இலார்க்கு ஊதியம் இல். --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

      முன் --- முற்பிறப்பின்கண், பெரிய நல்வினை --- மிகுந்த நன்மை பயக்கும் அறங்களை, முட்டு இன்றி --- தடையில்லாது, செய்யாதார் --- செய்யாதவர்கள், பின் --- பிற்பிறப்பின் கண், பெரிய செல்வம் பெறலாமோ --- மிகுந்த செல்வத்தைப் பெறக்கூடுமோ?, வைப்போடு --- பிறர் வைத்திருக்கின்ற செல்வத்தோடு, இகலி பொருள்செய்ய எண்ணியக்கால் --- மாறுபட்டுப் பொருளினைச் செய்வோம் என்று நினைத்தால், என் ஆம் --- எங்ஙனம் முடியும், முதல் இல்லார்க்கு --- வைத்ததொரு முதற்பொருள் இல்லாதவர்களுக்கு, ஊதியம் இல் --- (அதனால் வரும்) பயனில்லையாதலால்.

         முன் செய்த நல்வினையில்லார் முயன்றாலும் பொன்னைப் பெற முடியாது என்பது கருத்து. இதனால், பொருள் உள்ளபோதே அறம் செய்யவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.







No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...