004. அறன் வலியுறுத்தல் - 06. அன்று அறிவாம் என்னாது




திருக்குறள்
அறத்துப்பால்
நான்காம் அதிகாரம் - அறன் வலியுறுத்தல்.

     இந்த அதிகாரத்தில், ஆறாவதாக வரும் திருக்குறள், மற்றொரு நாள் செய்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறத்தைச் செய்க. மற்றபடி, அவ்வாறு செய்யப்படும் அந்த அறமானது, இறக்கும் போது அழியாத துணையாக விளங்கும் என்கிறது.

     அறத்தைச் செய்த உடம்பானது அழிந்த பின்னும், அந்த உடம்போடு நின்று செய்த அறமானது, உயிரோடு சென்று, பின்னும் எடுக்கும் உடம்பிலும் சேரும். எனவே, அழியாத துணையாக எடுக்கும் பிறவிகள் தோறும் வரும் அறத்தை, உடம்பு உள்ளபோதே செய்து, உயிருக்கு ஆக்கத்தைத் தேடிக் கொள்ளவேண்டும் என்றது.

திருக்குறளைக் காண்போம்.....
                                     
அன்று அறிவாம் என்னாது அறம் செய்க, மற்று அது
பொன்றுங்கால், பொன்றாத் துணை.

இதற்குப் பரிமேலழகர் உரை ---
        
      அன்று அறிவாம் என்னாது அறம் செய்க --- 'யாம் இது பொழுது இளையம் ஆகலின் இறக்கும் ஞான்று செய்தும்' எனக் கருதாது அறத்தினை நாள்தோறும் செய்க;

     அது பொன்றுங்கால் பொன்றாத் துணை --- அவ்வாறு செய்த அறம் உடம்பினின்றும் உயிர் போங்காலத்து அதற்கு அழிவு இல்லாத துணை ஆம்.

         ('மற்று' என்பது அசைநிலை. 'பொன்றாத் துணை' என்றார், செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனை உடம்பினுட் சேறலின். இதனான் இவ்வியல்பிற்றாய அறத்தினை நிலையாத யாக்கை நிலையின பொழுதே செய்க என்பது கூறப்பட்டது.

         இத் திருக்குறளுக்கு விளக்கமா, பெரியபுராணத்தில் வரும் நேச நாயனாருடைய வரலாற்றை வைத்து, குமாப பாரதி என்னும் பெரியவர், தாம் இயற்றிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் பின்வருமாறு பாடி உள்ளார்..

ஈசருடை மெய்யடியார்க்கு ஏதேனும் செயவன்என்று
நேசர்உடை கோவணம்கீள் நெய்துஅளித்தார் - ஆசைபுரிந்து
அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க மற்றுஅது
பொன்றும்கால் பொன்றாத் துணை.               

         நேசநாயனார் என்பவர் காம்பீலி நகரத்திலே சாலியர் குலத்துக்குத் தலைவர். அவர் சிவபெருமானுடைய திருவடிகட்குத் தம் மனத்தை ஒப்புவித்தார்.  திருவைந்தெழுத்தை விதிப்படி கணித்ததற்குத் தமது வாக்கின் செயலை ஆக்கினார். சிவனடியார்கட்குப் பணிவிடை செய்யத் தமது கரத்தை வைத்தார். ஆடையும் கீளும் கோவணமும் நெய்து, தம்பால் வருகின்ற சிவனடியார்களுக்கு இடையறாது அன்பினால் அவற்றைக் கொடுத்து வணங்கி நாள்தோறும் துதித்துக் கொண்டு வாழ்ந்து சிவபதம் அடைந்தார்.

       யாம் இதுபொழுது இளையம் ஆகலின் இறக்கும் ஞான்று செய்தும் எனக் கருதாது அறத்தினை நாள்தோறும் செய்க. 

     அவ்வாறு செய்த அறம் இவ்வுடம்பினின்றும் உயிர்போம் காலத்து அதற்கு அழிவில்லாத துணையாம் என்று அருளினார் திருவள்ளுவ நாயனார்.

"அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே! விழியம் பொழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மி இரு
கைத்தலை மேல்வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே!
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே!"

என்னும் பட்டினத்தடிகள் பாடலும் இங்கு வைத்து எண்ணத் தக்கது.

     அடுத்ததா, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து, சென்ன மல்லையர் என்னும் பெரியார், தாம் பாடிய "சிவசிவ வெண்பா" என்னும் நூலில், இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பின்வருமாறு பாடி உள்ளார்.
                                                         
எய்தரும்அம் பால்உயிர்நீத்து எய்துபொழு தும்கருணன்
செய்தருமம் ஈந்தான் சிவசிவா - உய்யுநெறி
அன்றுஅறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றுஅது
பொன்றும்கால் பொன்றாத் துணை.          

         போர்க்களத்திலே அம்புகளால் தனது உடல் முழுதும் தொளைக்கப்பட்டு, உயிர் நீங்கும் தருணத்தில், போரைச் சற்றே நிறுத்தி, வேதியர் வடிவம் தாங்கிக் கண்ணன், கன்னனிடம் புண்ணியத்தைத் தானமாகக் கேட்டான். "என் உயிரோ நிலை கலங்கி உள்ளது. அந்த உயிர் உடலின் உள்ளே இருக்கின்றதோ, வெளியே இருக்கின்றதோ அறியேன். தீவினையேன் ஆகிய நான் இரப்பவர் வேண்டும் பொருளை எல்லாம் விரும்பிக் கொடுத்துக் கொண்டிருந்த தருணத்தில் வராமல், இப்போது வந்து இரக்கின்றீர். நான் இதுவரை செய்துள்ள புண்ணியம் அனைத்தையும் தந்தேன், பெற்றுக் கொள்வீராக" என்று சொல்லிக் கன்னன் வணங்கினான். தன்னை வணங்காத பகைவர்க்கு மேகத்தில் தோன்றும் பேரிடியைப் போன்றவனான கண்ணன், கன்னனை மகிழ்வோடு பார்த்து, "நீர் வார்த்துத் தருக" என்றான். தன் மார்பில் பட்டுள்ள அம்பின் வழியே வெளிப்படும் குருதியால் தாரை வார்த்துக் கொடுத்தான் கன்னன். முன் வாமனாவதாரத்தில் இரந்த திருமால், இப்பொழுது கண்ணனாக அந்தத் தாரையை ஏற்றான். அந்தணனாக வந்த கண்ணன் மகிழ்ந்து, கன்னனைப் பார்த்து, "நீ விரும்பிய வரங்களைக் கேள்" என்றான். 

         பின்வரும் வில்லிபாரதப் பாடல்களைக் காண்போம். போரை நிறுத்தி, வேதியர் வடிவம் தாங்கிக் கண்ணன், கர்ணனிடம் புண்ணியத்தையே தானமாகக் கேட்டான்.

தாண்டிய தரங்கக் கருங்கடல் உடுத்த
         தரணியில் தளர்ந்தவர் தமக்கு
வேண்டிய தருதி நீஎனக் கேட்டேன்
         மேருவின் இடைத்தவம் பூண்டேன்
ஈண்டிய வறுமைப் பெருந்துயர் உழந்தேன்
         இயைந்ததுஒன்று இக்கணத்து அளிப்பாய்
தூண்டிய கவனத் துரகதத் தடம்தேர்ச்
         சுடர்தரத் தோன்றிய தோன்றால்.

         அருணனால் ஓட்டப்படும் கதிகளை உடைய குதிரைகள் பூட்டப்பட்ட பெரிய தேரை உடைய மூன்று சுடர்களுள் சிறந்த கதிரவனுக்குப் பிறந்த வீரனே! பெரிய மேரு மலையில் தவம் செய்து கொண்டிருந்தவனான நான் பெருந்துன்பத்தை அனுபவித்தேன். வீசும் அலைகளை உடைய கருங்கடலால் சூழப்பட்ட உலகில் வறுமையால் தளர்ச்சி உற்றவர்க்கு, அவர்கள் வேண்டிய பொருள்களை நீ தருகின்றாய் என்று கேள்விப்பட்டு, உன்னிடம் இப்போது வந்தேன்.  எனக்குத் தரக்கூடிய ஒரு பொருளை இப்போது அளிப்பாயாக.


என்றுகொண்டு அந்த அந்தணன் உரைப்ப
         இருசெவிக்கு அமுதுஎனக் கேட்டு
வென்றிகொள் விசயன் விசயவெம் கணையால்
         மெய்தளர்ந்து இரதமேல் விழுவோன்
நன்றுஎன நகைத்து, தரத்தகு பொருள்நீ
         நவில்கஎன நான்மறை யவனும்
ஒன்றிய படிநின் புண்ணியம் அனைத்தும்
         உதவுக என்றலும் உளம் மகிழ்ந்தான்.

         என்று அந்த அந்தணன் சொல்ல, அதை, வெற்றி பொருந்திய அருச்சுனனின் சிறப்பான வெற்றியைத் தருகின்ற கொடிய அம்புகளால் உடல் தளரப் பெற்றுத் தேரின்மீது விழும் நிலையில் உள்ள கர்ணன், இரு செவிகளுக்கு அமுதம் என்னுமாறு கேட்டு, "நல்லது" எனச் சொல்லி நகைத்து, "உனக்குத் தரக்கூடிய பொருளை நீ சொல்வாயாக" எனக் கூறினான்.  நான்கு மறைகளில் வல்ல அந்த அந்தணனும், "நீ செய்த புண்ணியம் எல்லாவற்றையும் உள்ளபடி அளிப்பாயாக" என்று சொன்ன அளவில் கர்ணன் மனம் மகிழ்ந்தான்.


ஆவியோ நிலையின் கலங்கியது, யாக்கை
         அகத்ததோ புறத்ததோ அறியேன்
பாவியேன் வேண்டும் பொருள்எலாம் நயக்கும்
         பக்குவம் தன்னில் வந்திலையால்
ஓவுஇலாது யான்செய் புண்ணியம் அனைத்தும்
         உதவினேன் கொள்க நீ,உனக்குப்
பூவில்வாழ் அயனும் நிகர்அலன் என்றால்
         புண்ணியம் இதனினும் பெரிதோ.

         "என் உயிரோ நிலை கலங்கி உள்ளது. அந்த உயிர் உடலின் உள்ளே இருக்கின்றதோ, வெளியே இருக்கின்றதோ அறியேன்.  தீவினை உடைய நான் இரப்பவர் வேண்டும் பொருள் எல்லாம் விரும்பிக் கொடுக்கும் சமயத்தில் நீ வரவில்லை. நான் இதுவரை செய்துள்ள புண்ணியம் எல்லாவற்றையும் மிச்சம் இல்லாதபடி உனக்குத் தந்தேன். நீ பெற்றுக் கொள்க. உனக்குப் பூவில் வாழும் நான்முகனும் ஒப்பாகான் என்றால், என் நல்வினை, உனக்குத் தானம் செய்யும் இத்தொழிலினும் பெரியதோ?"


என்னமுன் மொழிந்து கரம்குவித்து இறைஞ்ச
         இறைஞ்சலர்க்கு எழிலிஏறு அனையான்
கன்னனை உவகைக் கருத்தினால் நோக்கிக்
         கைப்புனலுடன் தருக என்ன
அன்னவன் இதயத்து அன்பின்வாய் அம்பால்
         அளித்தலும் அங்கையால் ஏற்றான்
முன்னம்ஓர் அவுணன் செங்கைநீர் ஏற்று
         மூஉலகமும் உடன் கவர்ந்தோன்.

         என்று சொல்லிக் கர்ணன், கண்ணன் முன்னே கைகளைக் கூப்பி வணங்கினான். தன்னை வணங்காத பகைவர்க்கு மேகத்தில் தோன்றும் பேரிடியைப் போன்ற கண்ணன், கர்ணனை மகிழ்வுடன் கூடிய நினைவுடன் பார்த்துக் "கையால் தாரை வார்க்கப்படும் நீருடன் தானம் செய்க" என்று சொல்லவும், கர்ணன் தன் மார்பில் தைத்த அம்பின் வழியே வெளிப்படுகின்ற குருதியால் தாரை வார்த்துக் கொடுத்தான். அவ்வளவில், முன் வாமனாவதாரத்தில் ஒப்பில்லாத மாவலியின் சிவந்த கையால் தரப்பட்ட தான நீரை ஏற்று, மூன்று உலகங்களையும் தன் வசப்படுத்திக் கொண்ட கண்ணன், தன் உள்ளங்கையால் அந்தத் தான நீரை ஏற்றான்.


மல்லல்அம் தொடையல் நிருபனை முனிவன்
         மகிழ்ந்து "நீ வேண்டிய வரங்கள்
சொல்லுக, உனக்குத் தருதும்" என்று உரைப்ப
         சூரன்மா மதலையும் சொல்வான்
"அல்லல்வெவ் வினையால் இன்னம் உற்பவம்உண்
         டாயினும் ஏழ் எழு பிறப்பும்
இல்லைஎன்று இரப்போர்க்கு இல்லை என்று உரையா
         இதயம்நீ அளித்தருள்" என்றான்.

         அந்தணனாக வந்த கண்ணன் மகிழ்ந்து, வளப்பத்தை உடைய அழகிய மாலையைச் சூடியுள்ள கர்ணனைப் பார்த்து, "நீ விரும்பிய வரங்களைச் சொல். உனக்குத் தருகின்றேன்" என்று சொன்னான். கதிரவன் மகனான கர்ணன், "பிறவித் துன்பங்களுக்குக் காரணமான தீவினையால், இன்னமும் பிறவி உண்டாயின், எழுமையும் உடைய ஏழு பிறவிகளிலும், வறுமையால் இல்லை என இரப்பவர்களுக்கு, பொருளை வைத்துக் கொண்டே இல்லை என்று சொல்லாத உள்ளத்தை நீ கொடுத்து அருள்" என்றான்.


மைத்துனன் உரைத்த வார்த்தை கேட்டுஐயன்
         மனமலர் உகந்துஉகந்து அவனைக்
கைத்தல மலரால் மார்புறத் தழுவி
         கண்மலர்க் கருணைநீர் ஆட்டி,
"எத்தனை பிறவி எடுக்கினும் அவற்றுள்
         ஈகையும் செல்வமும் எய்தி
முத்தியும் பெறுதி முடிவில்" என்று உரைத்தான்
         மூவரும் ஒருவனாம் மூர்த்தி.

         மும்மூர்திகளும் ஒரு மூர்த்தியான வடிவம் உடைய கண்ணன், தன் மைத்துனன் ஆன கர்ணன் சொன்ன மனப்பூர்வமான சொல்லைக் கேட்டு, உள்ளக் கமலம் மிக மகிழ்ந்து, கைகளாகிய மலர்களால் மார்பில் பொருந்தத் தழுவிக் கொண்டு, செந்தாமரை மலர்போலும் கண்களில் இருந்து பெருகும் கருணை நீரால் ஆட்டி, கர்ணனைப் பார்த்து, "நீ எத்தனைப் பிறவி எடுத்தாலும், ஈகைக் குணமும், செல்வத்தையும் அடைந்து, முடிவில் முத்தியை அடைவாயாக" என்று சொன்னான்.


போற்றிய கன்னன் கண்டுகண் களிப்ப
         புணரிமொண்டு எழுந்தகார் முகிலை
மாற்றிய வடிவும் பஞ்ச ஆயுதமும்
         வயங்கு கைத்தலங்களும் ஆகி
கூற்றுஉரழ் கராவின் வாயின்நின்று அழைத்த
         குஞ்சர ராசன்முன் அன்று
தோற்றியபடியே தோற்றினான் முடிவும்
         தோற்றமும் இலாத பைந்துளவோன்.

         பிறப்பும் இறப்பும் கடந்தவனும், பசுமையான துளவ மாலையை அணிந்தவனும் ஆகிய கண்ணன், தன்னைத் துதித்த கரணன் வணங்கி மகிழும்பொருட்டு, கடல் நீரை வயிறு நிறைய மொண்டு வானில் எழுந்த கருமேகமும் தனக்கு நிகரில்லை என்று விளங்கும் கரியமேனியும், ஐம்படைக்கலன்கள் விளங்கும் திருக்கைகளும் ஆகி, மிகக் கொடிய கூற்றுவன் போன்ற முதலையினது வாயிலே சிக்கிக்கொண்டு, ஆதிமுலமே என்று அழைத்த கஜேந்தின் முன் அக்காலத்தில் தோன்றியபடியே காட்சி அளித்தான்.


அமரர் ஆனவரும் அமர யோனிகளும்
         அமரருக்கு அதிபன் ஆனவனும்
கமலநான் முகனும் முனிவரும் கண்டு
         கனகநாள் மலர்கொடு பணிந்தார்
"சமரமா முனையில் தனஞ்சயன் கணையால்
         சாய்ந்து உயிர்விடவும், செங்கண்
அமலநா ரணனைக் காணவும் பெற்றேன்"
         என்றுதன் அகம்மிக மகிழ்ந்தான்.

         அந்த அருட்காட்சியைக் கண்டு, தேவர்களும் தேவசாதியினரும், தேவர்களுக்குத் தலைவனான இந்திரனும், தாமரையில் வாழும் பிரமனும், முனிவர்களும் பொன் மயமான புதிய கற்பகமலர்களைக் கொண்டு வணங்கினார்கள். கர்ணன், பெரிய போர்க்களத்தில் பெருவீரனான அருச்சுனனின் அம்பால் உடல் சாயந்து உயிர் விடவும், "சிவந்த கண்களை உடைய குற்றமற்ற நாராயணனைக் கண்டு வணங்கவும் பெற்றேன்" என்று மிகவும் மனம் மகிழ்ந்தான்.


அருந்தழல்மா மகம்புரிந்தும், கடவுள்கங்கை
         ஆதியாம் புனல்படிந்தும், அனிலயோகத்து
இருந்தும்,அணி மலர்தூவிப் பூசைநேர்ந்தும்,
         எங்கும்ஆ கியஉன்னை இதயத்துள்ளே
திருந்தநிலை பெறக்கண்டும், போகம்எல்லாம்
         சிறுக்கி,அனைத்து உயிருக்கும் செய்யஒண்ணாப்
பெருந்தவங்கள் மிகப்பயின்றும், பெறுதற்கு எட்டாப்
         பெரும்பயன்நின் திருவருளால் பெறப்பெற் றேனே.

         "அரிய தீயில் சிறந்த வேள்விகளைச் செய்தும், தெய்வத் தன்மை கொண்ட கங்கை முதலிய நதிகளின் புனித நீரில் ஆடியும், ஐந்து தீயின் நடுவில் நின்று தவம் செய்தும், எங்கும் நினைந்த பரிபூரணனாகிய உன்னை இதயக் கமலத்துள்ளே நிலைபெறத் தியானித்தும், போகங்களை வெறுத்துச் சுருக்கி எல்லா உயிர்களுக்கும் செய்தற்கு அரிய பெரிய தவங்களைச் செய்தும் பெறமுடியாத பெரும்பயனை உன் திருவருளால் அடையப் பெற்றேன்".


நீலநெடுங் கிரியும்மழை முகிலும் பவ்வ
         நெடுநீரும் காயாவும் நிகர்க்கும் இந்தக்
கோலமும்வெங் கதைவாள்அம் சங்குநேமி
         கோதண்டம் எனும்படையும் குழையும் காதும்
மாலைநறுந் துழாய்மார்பும் திரண்ட தோளும்
         மணிக்க ழுத்தும் செவ்விதழும் வாரிசாதக்
காலைமலர் எனமலர்ந்த முகமும் சோதிக்
         கதிர்முடியும் இம்மையிலே கண்ணுற்றேனே.

         "நீலவண்ணமான பெரிய மலையையும், மழை பொழியும் நீலமேகத்தையும், கடலின் நிறத்தையும், காயாம்பூவையும் ஒக்கும் உன் திருமேனி அழகையும், கொடிய தண்டும், வாளும், சங்கும், சக்கரமும், வில்லும் என்னும் ஐம்படைகளையும், குழையணிந்த திருக்காதுகளையும், நறுமணமுடைய திருத்துழாய் மாலையணிந்த திருமார்பையும், திரண்ட தோள்களையும், அழகிய திருக்கழுத்தையும், சிவந்த இதழ்போன்ற உதடுகளையும், தக்க காலத்தில் மலர்ந்த தாமரைப் பூப் போன்ற திருமுகமண்டலத்தையும், மிக்க ஒளி பொருந்திய திருமுடியையும் இப்பிறவியிலே நான் காணப்பெற்றேனே".


தருமன்மகன் முதலான அரிய காதல்
     தம்பியரோடு எதிர்மலைந்து தறுகண் ஆண்மைச்
செருவில்எனது உயிர் அனைய தோழற்காகச்
         செஞ்சோற்றுக் கடன்கழித்தேன், தேவர்கோவுக்கு
உரைபெறுநல் கவசமும்குண் டலமும் ஈந்தேன்
         உற்றபெரு நல்வினைப் பேறுஉனக்கே தந்தேன்
மருதுஇடைமுன் தவழ்ந்துஅருளும் செங்கண்மாலே
         மாதவத்தால் ஒருதமியன் வாழ்ந்தவாறே.

         "இளமையிலே இரண்டு மருத மரங்களுக்கு இடையில் தவழ்ந்த சிவந்த திருக்கண்களை உடைய திருமாலே! அஞ்சாமையுடன் கூடிய வீரத்தைக் காட்டும் போர்க்களத்திலே,  என் உயிர் போன்ற தோழன் துரியோதனன் பொருட்டாக, தருமன் முதலான அரிய அன்புடைய தம்பியர்களுடன் போரிட்டு,  அவன் எனக்கு அளித்த செஞ்சோற்றின் கடனைக் கழித்து உதவி செய்துவிட்டேன். இந்திரனுக்கு புகழிமிக்க எனது கவசகுண்டலங்களையும் தந்தேன். நான் இதுவரை செய்த புண்ணியங்களின் பயனை உனக்குத் தந்தேன். இப்படி எல்லாவற்றையும் தந்த மாபெரும் தவத்தால் பெருவாழ்வை நான் பெற்றேன்".


வான்பெற்ற நதிகமழ்தாள் வணங்கப் பெற்றேன்
         மதிபெற்ற திருவுளத்தால் மதிக்கப் பெற்றேன்
தேன்பெற்ற துழாய்அலங்கல் களப மார்பும்
         திருப்புயமும் தைவந்து தீண்டப் பெற்றேன்
ஊன்பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்தும்
         உணர்வுடன்நின் திருநாமம் உரைக்கப் பெற்றேன்
யான்பெற்ற பெருந்தவப்பே றுஎன்னை அன்றி
         இருநிலத்தில் பிறந்தோரில் யார்பெற் றாரே.

         "வானத்தில் பொருந்திய கங்கையாறு தோயும் உன் திருவடிகளை வணங்கப் பெற்றேன். சந்திரனை உண்டாக்கிய உன் திருவுள்ளத்தால் மதிக்கப் பெற்றேன். தேன் பொருந்திய திருத்துழாய் மாலை தாங்கிய, கலவைச் சாந்து பூசப்பெற்ற உன் திருமார்பும் திருப்பயங்களும் பொருந்தப் பெற்றேன். பகைவரின் ஊன் பொருந்தப் பெற்ற அருச்சுனனின் அம்பால் வலியிழந்து வீழ்ந்த பின்பும், நல்ல உணர்வுடன் உன் திருநாமங்களைச் சொல்லப் பெற்றேன். இவ்வாறு நான் பெற்ற பெரும்பேற்றினை, என்னை அல்லாமல் இந்தப் பெரிய உலகத்தில் வேறு யார் பெற்றார்".
                                                                                
இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்த பாடல்கள் சிலவற்றை இங்கே தருகின்றேன்...

மலைஆறு கூறு எழவேல் வாங்கினானை வணங்கி அன்பின்

நிலையான மாதவம் செய்குமினோ நும்மை நேடி வரும்

தொலையா வழிக்குப் பொதிசோறும் உற்றதுணையும் கண்டீர்

இலையாயினும் வெந்தது ஏதாயினும் பகிர்ந்து ஏற்ற வர்க்கே.

                                                                 ----    கந்தர் அலங்காரம்.

இதன் பொருள் ---

உலகத்தவரே! வறிஞர்க்கு நீவிர் வழங்கியது, நீவிர் வாழ்நாளின் இறுதியில் செல்லும் தொலையாத வழிக்கு, உம்மைத் தேடிக் கொண்டு வருகின்ற, கட்டமுதும், பொருந்திய உதவியும் ஆகும் என்பதை உணருங்கள். ஆதலால், உம்மை வந்து இரந்தவர்க்கு, இலைக்கறியை ஆயினும், வெந்தது வேறு எதுவாயினும், பங்கிட்டுக் கொடுத்து, கிரவுஞ்ச மலையானது வழிவிட்டுப் பிளக்குமாறு, வேலாயுதத்தை விடுத்து அருளிய முருகப் பெருமானை அன்புடன் பணிந்து, என்றும் நிலைத்து இருக்கும்படியான பெருந்தவத்தை ஆற்றுவீர்களாக

"அறமே ஒருவருக்குப் பொன்றாத துணை" என்றதற்கு ஒப்புமை .......

ஈட்டிய வொண்பொருளும் இல்லொழியும் சுற்றத்தார்
காட்டுவாய் நேரே கலுழ்ந்தொழிவர் -- மூட்டும்
எரியின் உடம்பொழியும் ஈர்ங்குன்ற நாட!
தெரியின் அறமே துணை.           ---  அறநெறிச்சாரம்.

இதன் பொருள் ---

ஈர்ங்குன்ற நாட --- குளிர்ந்த மலைநாட்டுக்கரசே! ஈட்டிய ஒண் பொருளும் --- தேடிய சிறந்த செல்வமும், இல் ஒழியும் --- மனையிலேயே நின்றுவிடும்,

சுற்றத்தார் காட்டுவாய் நேரே கலுழ்ந்து ஒழிவர் --- உறவினர் சுடுகாட்டுவரை கூட அழுதுகொண்டு வந்து நீங்குவர்,

மூட்டும் எரியின் உடம்பு ஒழியும் --- மூட்டப்படுகின்ற நெருப்பால் உடல் அழியும்,

தெரியின் --- ஆராயின்,

அறமே துணை --- ஒருவனுக்கு துணையாவது அறமேயாகும்.


"அன்று அறிவாம் என்னாது அறம் செய்தல் வேண்டும்" என்றதற்கு ஒப்புமை .....

பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன்
ஓசை அவிந்தபின் ஆடுது மென்றற்றால்
இற்செய் குறைவினை நீக்கி அறவினை
மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு.      --- நாலடியார்.

இதன் பொருள் ---

     இல்செய் குறைவினை நீக்கி அறவினை மற்று அறிவாம் என்று இருப்பார் மாண்பு --- குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய குறைகளைச் செய்து தீர்த்து அறச்செயல்களைப் பின்பு கருதுவோம் என்று காலத்தை எதிர்நோக்கி இருப்பாரது இழிதகைமை,

     பெருங்கடல் ஆடிய சென்றார் ஒருங்கு உடன் ஓசை அவிந்த பின் ஆடுதும் என்றற்று --- பெரிய கடலில் நீராடுதற்குச் சென்றவர், முழுதும் ஒருசேர அலையொலி அடங்கிய பின் நீராடுவோம் என்று கருதினாற் போன்றது.

         வாழ்நாளின் இறுதிக் காலத்தில் அறத்தினை இயற்றலாம் என்பது நடவாது. நடவாதது ஒன்றை நினைவது பேதைமையின் இயல்பு.


மற்றறிவாம் நல்வினை யாம்இளையம் என்னாது
கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்ம்மின்;
முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு.          ---  நாலடியார்.

இதன் பொருள் ---

     மற்று அறிவாம் நல்வினை --- நற்செயல்களைப் பின்னால் தெரிந்து செய்து கொள்ளலாம்,

     யாம் இளையம் --- இப்போது யாம் இளமைப் பருவமுடையேம்,

     என்னாது --- என்று கருதாமல்,

     கைத்து உண்டாம் போழ்தே --- கையில் பொருள் உண்டானபொழுதே.

     கரவாது அறம் செய்ம்மின் --- ஒளியாமல் அறஞ் செய்யுங்கள்;

ஏனென்றால்,

     முற்றி இருந்த கனி ஒழிய --- பழுத்திருந்த பழங்களே அல்லாமல்,

     தீ வளியால் --- கோடைக் காற்றினால்,

     நல் காய் உதிர்தலும் உண்டு --- வலிய காய்களும் மரங்களிலிருந்து உதிர்ந்து விழுதல் உண்டு.

         மூத்தோரே அல்லாமல் இளையோரும் திடும் என இறந்துபோதல் உண்டு. இளமை இன்பங்களை நுகர்தற்கு, இப்போது பொருள் தேவை. முதுமை வந்தபோது, அறம் செய்யலாம் என்று இருத்தல் கூடாது. கையில் பொருள் உண்டான இளமைக் காலத்திலேயே அதனை அறஞ்செய்து பயன் கொள்ளவேண்டும்.


ஆட்பார்த் துழலும் அருளில்கூற் றுண்மையால்
தோட்கோப்புக் காலத்தால் கொண்டுய்ம்மின் - பீட்பிதுக்கிப்
பிள்ளையைத் தாய் அலறக் கோடலான் மற்றதன்
கள்ளம் கடைப்பிடித்தல் நன்று.      ---  நாலடியார்.

இதன் பொருள் ---

ஆள் பார்த்து உழலும் அருள் இல் கூற்று --- தான் உயிர் பிரித்துக் கொண்டு போகும் ஆளைக் கருதி, அதே வேலையாகத் திரிகின்ற இரக்கம் இல்லாத கூற்றுவன்,

     உண்மையால் --- ஒருவன் இருக்கின்றான் ஆதலால்,

     தோள் கோப்பு காலத்தால் கொண்டு உய்ம்மின் --- மறுமையாகிய வழிக்குக் கட்டுச் சோறு போல் உதவும் புண்ணியத்தை இளமையாகிய தக்க காலத்திலேயே உண்டாக்கிக் கொண்டு பிழையுங்கள்,

     பீள் பிதுக்கி பிள்ளையை தாய் அலறக் கோடலான் - முற்றாத இளங்கருவையும் வெளிப்படுத்தி, குழந்தையை தாய் அலறி அழும்படி உயிர் கொள்ளுதலால்,

     அதன் கள்ளம் கடைப்பிடித்தல் நன்று --- அக்கூற்றுவனது கடுமையை நினைவில் இருத்திக் காரியங்கள் செய்தல் நல்லது.

         இளங் கருவையும் அழிக்கும் கூற்றுவன் இருக்கின்றான் என்னும் உண்மையால், இளமை நிலையாமை விளங்கும். இம்மை மறுமைக்குரிய புண்ணிய காரியங்களை இளமை உடையோர் உடனே செய்துகொள்ள வேண்டும்.


காலைச் செய்வோம் என்று அறத்தைக் கடைப்பிடித்து
சாலச் செய்தவரே தலைப்படுவார் ---  மாலைக்
கிடந்தான் எழுதல் அரிதால், மற்று என்கொல்,
அறம் காலைச் செய்யாதவாறு.      --- அறநெறிச்சாரம்.

இதன் பொருள் ---

அறத்தினை இளமைப் பருவத்திலேயே செய்வோம் என்று உறுதியாகக் கருதிச் செய்பவரே உயர்ந்தோர் ஆவர். இரவில் படுத்தவன் மறுநாள் காலையில் எழுந்திருப்பது உலகத்தில் அருமையாக இருக்கிறது. இதனை நன்கு அறிந்து இருந்தும், இளமைப் பருவத்திலேயே அறத்தினைச் செய்யாது இருப்பது அறியாமையே ஆகும்.

சென்றநாள் எல்லாம் சிறுவிரல் வைத்து எண்ணலாம்
நின்றநாள் யார்க்கும் உணர்வு அரிது -- என்றுஒருவன்
நன்மை புரியாது நாள்உலப்ப விட்டுஇருக்கும்
புன்மை பெரிது புறம்.                 --- அறநெறிச்சாரம்.

இதன் பொருள் ---

வாழ்நாளில் சென்ற நாள்கள் எல்லாவற்றையும் சிறிய விரல்களைக் கொண்டே, இவ்வளவு நாள் வாழ்ந்திருக்கின்றோம் என்று கணக்கிட்டு விடலாம்.  ஆனால், இனி வாழ உள்ள நாள்களை, இவ்வளவு என எண்ணி அறிய யாராலும் இயலாது.  இதனை நன்கு அறிந்து இருந்தும், ஒருவன் நல்வினையை விரைந்து செய்யாமல், வாழ்நாள் வீணே கெடும்படி விட்டிருப்பதால் வரும் துன்பம், பின்னர் மிகுதியாகும்.

உலப்ப --- அழிய. புன்மை --- துன்பம், இழிவு. புறம் --- பின்னர், பின்பு.

மின்னும் இளமை உளதாம் எனமகிழ்ந்து
பின்னை அறிவென் என்றல் பேதைமை, - தன்னைத்
துணித்தானும் தூங்காது அறஞ்செய்க, கூற்றம்
அணித்தாய் வருதலும் உண்டு. --- அறநெறிச்சாரம்.

இதன் பொருள் ---

இளமைப் பருவம் மின்னலைப் போன்றது. அது, நிலைத்து இருக்கக் கூடியது என்று எண்ணி மகிழ்ந்து, வயதான பின்னர் அறத்தினைச் செய்வேன் என்று இருப்பது அறிவின்மையே ஆகும். எமன் இளமைப் பருவத்திலேயே உயிரைக் கவர்ந்து செல்ல வருதலும் உண்டு. ஆதலால், உடலை வருத்தி உழைத்தாவது, கால தாமதம் செய்யாமல், உயிரோடு உள்ள காலத்திலேயே அறத்தினை ஒவ்வொருவரும் செய்தல் வேண்டும்.

பெற்றி கருமம் பிழையாமற் செய்குறின்
பற்றின் கண் நில்லா தறஞ்செய்க--மற்றது
பொன்றாப் புகழ்நிறுத்திப் போய்ப்பிறந்த ஊர்நாடிக்
கன்றுடைத் தாய்போல் வரும்.   ---  அறநெறிச்சாரம்.

இதன் பொருள் ---

மனமே! நீ நற்குணம் மிக்க நல்ல செயல்களைது தவறாமல் செய்யக் கருதினால், ஆசையை விடுத்து, அறத்தினைச் செய்வாயாக. அந்த அறமானது, இந்தப் பிறப்பில் அழியாத புகழை நிலைபெறச் செய்து, மறுபிறப்பில் நீ சென்று பிறந்த ஊரைத் தேடி, தாய்ப் பசு, தன் கன்றைத் தேடி அடைந்து பாலைக் கொடுக்க வருவது போல, தன் பயனாகிய இன்பத்தைச் சேர்க்க, உன்னிடம் விரைந்து வரும்.

மாய்வதன் முன்னே வகைப்பட்ட நல்வினையை
ஆய்வின்றிச் செய்யாதார் பின்னை வழிநினைந்து
நோய்காண் பொழுதின் அறஞ்செய்வார்க் காணாமை
நாய்காணின் கற்காணா வாறு.      ---  பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

     உணர்வு அழிவதன் முன்னே, பல திறத்த செயல்களால் வரும் அறங்களை, ஆராய்தலின்றிச் செய்யாதவர்கள், பிற்காலத்தில் செய்வோம் என்று நினைத்திருந்து, நோய்கள் சூழ்ந்து நின்று தமக்கு இறுதியை ஆராயும்பொழுது,  தாம் கூறியபடி அறம் செய்வாரைக் காணாதிருத்தல்,  நாயைக் கண்ட பொழுது கல் மறைதலை யொக்கும்.

         அறத்தைப் பொருள் பெற்ற பொழுதே, நாளைச் செய்வோம் என்று ஆகலம் தாழ்த்தாமல் உடனே செய்க.


இளமையும் நில்லா; யாக்கையும் நில்லா;        
வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா;
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்;
மிக்க அறமே விழுத்துனை ஆவது;
தானஞ் செய் எனத் தரும தத்தனும்
மாமன் மகள்பால் வான்பொருள் காட்டி           
ஆங்கு அவன் அவளுடன் செய்த நல்லறம்
ஓங்கு இரு வானத்து மீனினும் பலவால்..  ---  மணிமேகலை.

இதன் பொருள் ---

     இளமையும் நில்லா யாக்கையும் நில்லா --- இளமையும் நிலை பெறாது உடம்பும் நிலைபெறாது,

     வளவிய வான் பெருஞ் செல்வமும் நில்லா --- வளமுடைய சிறந்த பொருளும் நிலைபெறாது,

     புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் --- உம்பர் உலகத்தைப் புதல்வராலும் பெற இயலாது,

     மிக்க அறமே விழுத்துணையாவது --- எவற்றினும் மேம்பட்ட அறமே சிறந்த துணையாகுவது,

     தானம் செய் என --- ஆதலின் அறம்புரிவாய் என்று கூற,

     தருமதத்தனும் மாமன் மகள்பால் வான் பொருள்காட்டி --- தருமதத்தன் விசாகையிடம் தனது சிறந்த நிதி களைக் காட்டி,

     ஆங்கவன் அவளுடன் செய்த நல்லறம் --- அவன் அவளுடன் சேர்ந்து செய்த நல்லறங்கள்,

     ஓங்கு இரு வானத்து மீனினும் பலவால் --- மிகப்பெரிய விசும்பின்கணுள்ள மீனினும் பலவாகும்;


நல்வினைப் பயன்கொல் நான் கண்டது எனத்
தையல் கேள்! நின் தாதையும் தாயும்
செய்த தீவினையில் செழுநகர் கேடுஉறத்
துன்புஉற விளிந்தமை கேட்டுச் சுகதன் 
அன்புகொள் அறத்திற்கு அருகனேன்; ஆதலின்,
மனைத்திற வாழ்க்கையை மாயம்என்று உணர்ந்து,
தினைத்தனை ஆயினும் செல்வமும் யாக்கையும்
நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே,
மலையா அறத்தின் மாதவம் புரிந்தேன் 
புரிந்த யான் இப்பூங்கொடிப் பெயர்ப்படூஉம்
திருந்திய நல்நகர்ச் சேர்ந்தது கேளாய்:   ---  மணிமேகலை.

இதன் பொருள் ---

     தூயோய் நின்னை நான் கண்டது என் நல்வினைப் பயன் கொல் என --- தூய குணம் செய்கைகளையுடையாய், நின்னை யான் காணப்பெற்றது எனது நல்வினைப் பயனாகும் என்று மாசாத்துவான் கூறி மேலும் கூறலுற்று,

     தையல் கேள், நின் தாதையும் தாயும் செய்த தீவினையில் செழுநகர் கேடுறத் துன்புற விளிந்துமை கேட்டு --- நங்காய் கேட்பாயாக, நின் தந்தையும் தாயும் முற்பிறப்பிற் செய்த தீவினையினாலே வளம் மிகுந்த மதுரை மாநகர் தீக்கிரையாகிக் கேடு எய்துமாறு துன்புற்று இறந்தமை கேட்டு,

     சுகதன் அன்புகொள் அறத்திற்கு அருகனேன் ஆகலின் --- புத்த தேவனின் அருளறத்தினைப் புரியும் தகுதி உடையேன் ஆகலின்,

     மனைத்திற வாழ்க்கையை மாயம் என்று உணர்ந்து --- இல்வாழ்க்கையைப் பொய்யென அறிந்து,

     செல்வமும் யாக்கையும் தினைத்தனையாயினும் நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே --- பொருளும் உடலும் தினையளவேனும் நிலைபெறாதன என்பதனைத் தெளிவாக உணர்ந்து,

     மலையா அறத்தின் மாதவம் புரிந்தேன் --- மாறுபடாத நல்லறத்தினையுடைய பெருந்தவஞ் செய்யலானேன்;

     புரிந்த யான் இப்பூங்கொடிப் பெயர்ப்படூஉம் திருந்திய நன்னகர் சேர்ந்தது கேளாய் --- அங்ஙனம் தவத்தை மேற்கொண்ட யான் அழகிய வஞ்கொடியின் பெயரினையுடைய இவ்வழகு மிக்க நகரத்தினை அடைந்த காரணத்தைக் கேட்பாயாக;


நாளைச் செய்குவம் அறம் எனில், இன்றே
கேள்வி நல் உயிர் நீங்கினும் நீங்கும்,
இது என வரைந்து வாழும் நாள் உணர்ந்தோர்
முதுநீர் உலகில் முழுவதும் இல்லை..  --- சிலப்பதிகாரம்.
        
இதன் பொருள் ---

     நாளைச் செய்குவம் அறம் எனில் --- அடுத்த நாளில் அறம் செய்வோம் என்று நாம் கருதின்,

     இன்றே கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும் --- இற்றைப் பொழுதிலேயே கேள்வி அளவே ஆன நல்ல உயிரானது விலகினும் விலகும்,

     இதுவென வரைந்து வாழுநாள் உணர்ந்தோர் முதுநீர் உலகில் முழுவதும் இல்லை --- தம் வாழ்நாள் இத்துணைத்து எதன வரையறை செய்து அறிந்தவர் கடல்சூழ்ந்த உலகத்தின்கண் யாங்கணும் இல்லை;

 
முன்பு நின்று இசை நிறீஇ, முடிவு முற்றிய
பின்பும் நின்று, உறுதியைப் பயக்கும் பேரறம்,
இன்பம் வந்து உறும்எனின் இனிது; ஆயிடைத்
துன்பம் வந்து உறும்எனின், துறக்கல் ஆகுமோ?
                           ---  கம்பராமாயணம், தைலமாட்டு படலம்.

 இதன் பொருள் ---

பேர் அறம் --- பெருமை பொருந்திய தருமம்; முன்பு நின்று இசை நிறீஇ --- (தன்னை மேற்கொள்பவனுக்கு இவ்வுலகில்) முன்னதாகப் புகழை நிலை நிறுத்தி;  முடிவு முற்றிய பின்பும் நின்று --- இந்த வாழ்வு முடிவுக்கு வந்த பிறகும் இருந்து (மறுமையில்);  உறுதியைப் பயக்கும் --- நன்மைப் பயனாகிய மேல் உலகத்தைத் தரும்; இன்பம் வந்து உறும் எனின் இனிது --- (வாழ்வில்) இன்பம் வந்து  நேருமாயின் இனிமையானது;  ஆயிடை --- அவ்விடத்து; துன்பம் வந்து உறும் எனின் --- துன்பம் வந்து நேருமாயின்; துறக்கல் ஆகுமோ?’ --- அவ்வறத்தைக் கைவிடல் ஆகுமோ?

     இன்ப துன்பங்கள் கலந்ததே வாழ்வு. அறவழி நடப்பார்க்கு  இன்பமே வரும். ஆயினும், ஒருவேளை துன்பம் வருமாயினும் அதுபற்றி அறத்தைக் கைவிடல் ஆகாது என்பதாம். அறம் என்றசொல்லின் முழுப் பொருளும் தருமம் என்பதன்கண் அடங்காது. பொருள் விளங்க வேண்டிய அளவுக்கே அறம் என்பதற்குத் தருமம் என்று உரை காண்கிறோம்.


அறம்தலை நின்றார்க்கு  இல்லை 
     அழிவு' எனும் அறிஞர் வார்த்தை
சிறந்தது-சரங்கள் பாயச்
     சிந்திய சிரத்த ஆகி,
பறந்தலைஅதனில் மற்று அப்
     பாதக அரக்கன் கொல்ல,
இறந்தன கவிகள் எல்லாம்
     எழுந்தன, இமையோர் ஏத்த. ---  கம்பராமாயணம், இந்திரசித்து வதைப் படலம்.

இதன் பொருள் ---

அறந்தலை நின்றார்க்கு இல்லை அழிவு எனும் அறிஞர் வார்த்தை சிறந்தது --- அறவழியில் நின்றவர்க்கு இல்லை அழிவுஎன்ற அறிஞரின் மொழி (உண்மையாய்ச்) சிறப்புற்றது;

(எங்ஙனம் எனின்?)

சரங்கள் பாயச் சிந்திய சிரத்த ஆகி --- அம்புகள் பாய்ந்ததனால் சிதறப்பெற்ற தலையினவாகி;  புறந்தலை அதனில் மற்று அப்பாதக அரக்கன் கொல்ல --- போர்க்களத்தில் அந்தப் பாதக அரக்கனாகிய இந்திரசித்தினால் கொல்லப்பட்டு;

இறந்தன கவிகள் எல்லாம்  இமையோர் ஏத்த எழுந்தன --- இறந்தனவாகிய குரங்குகள் எல்லாம்  இமையவர்கள்  வாழ்த்தியதனால் உயிர் பெற்று எழுந்தன (ஆகலின் என்க).


1 comment:

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...