004. அறன் வலியுறுத்தல் - 05. அழுக்காறு அவா





திருக்குறள்
அறத்துப்பால்
நான்காம் அதிகாரம் - அறன் வலியுறுத்தல்.

     இந்த அதிகாரத்தில் வரும் ஐந்தாம் திருக்குறள், பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளாத மனமும், அதனால் ஐம்புலன்கள் மீது செல்லுகின்ற ஆசையும், அவை காரணமாகப் பிறர் மேல் உண்டாகும் கோபமும், அது பற்றி வருகின்ற கடும் சொல்லும் ஆகிய இந்த நான்கினையும் கடிந்து, ஒழிவு இல்லாமல் செய்து வருவதே அறம் என்கின்றது.

     பிறர் ஆக்கம் கண்டு ஏற்படும் பொறாமையாவது, பிறருக்கு உண்டாகும் கல்வி, செல்வம், அதிகாரம், மரியாதை முதலாயினவற்றைக் கண்டு மனம் புழுங்குதல்.

     அதனால், அழுக்காறு முதலிய நான்கினையும் உள்ளத்தே வைத்துக் கொண்டு செய்வது அறம் ஆகாது.

திருக்குறளைக் காண்போம் ---
  
அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.                                              

இதற்குப் பரிமேலழகர் உரை ---

      அழுக்காறு --- பிறர் ஆக்கம் பொறாமையும்;

     அவா --- புலன்கள்மேல் செல்கின்ற அவாவும்;

     வெகுளி --- அவை ஏதுவாகப் பிறர்பால் வரும் வெகுளியும்;

     இன்னாச்சொல் --- அதுபற்றி வரும் கடுஞ்சொல்லும் ஆகிய;

     நான்கும் இழுக்கா இயன்றது அறம் --- இந்நான்கினையும் கடிந்து இடையறாது நடந்தது அறம் ஆவது.

      (இதனான், இவற்றோடு விரவி இயன்றது அறம் எனப்படாது என்பதூஉம் கொள்க.)

     தக்கன் செய்தது பெருவேள்வி என்றாலும், அது அறம் ஆகவில்லை, மறம் ஆயிற்று என்னும் பொருளை வைத்து, மேற்குறித்த திருக்குறளுக்கு  விளக்கமாக, தாம் இயற்றிய "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில், மாதவச் சிவஞான யோகிகள் பின்வரும் பாடலைப் பாடி உள்ளார்.


தக்கனார் வேள்வித் தவத்தைமேற் கொண்டிருந்துந்
தொக்கஅறம் ஆயிற்றோ சோமேசா - மிக்க
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

இதன்பொருள்---

         சோமேசா!  மிக்க அழுக்காறு --- ஏனைய குற்றங்களின் மேம்பட்ட பிறர் ஆக்கம் பொறாமையும்,  அவா --- ஐம்புலன்களின்மேல் செல்லுகின்ற அவாவும், வெகுளி --- அவை ஏதுவாகப் பிறர்பால் வரும் வெகுளியும்,  இன்னாச்சொல் ---  அதுபற்றி வரும் கடும்சொல்லும் ஆகிய,  நான்கும் --- இந்நான்கினையும்,  இழுக்கா இயன்றது அறம் --- நீக்கி இடையறாது நடைபெற்றது அறமாவது,

         தக்கனார் --- தக்கன் என்பான்,  வேள்வித் தவத்தை --- யாகமாகிய தவ ஒழுக்கத்தை, மேற்கொண்டிருந்தும் --- செய்து முடிப்பதாக மனத்தில் உறுதி கொண்டிருந்தும்,  தொக்க அறம் ஆயிற்றோ --- அவ் வேள்வி பொருந்திய அறம் ஆயிற்றோ இல்லை, அது மறமாயிற்று ஆகலான் என்றவாறு.

         அழுக்காறு --- பிறர் ஆக்கம் கண்டு மனம் பொறாமை.  அறம் --- அறன், இறுதிப்போலி.

         வேட்கை --- பொருள்களின் மேல் தோன்றும் பற்றுள்ளம்.  அவா --- அப் பொருள்களைப் பெறவேண்டுமென்று மேன்மேல் நிகழும் ஆசை என வேறுபாடு உணர்க.

         நான்முகன் மகனான தக்கன் வரங்கிடப்ப, தன்பால் தோன்றி தாட்சாயணி என்னும் பெயர்கொண்ட உமையம்மையாரைச் சிவபெருமானுக்குத் திருமணம் புரிவித்துப் பின் அப் பெருமானோடு மாறுபட்டு யாகம் செய்கையில், தாட்சாயணி தன் மணாளன் சொல் கேளாது அவன் யாகசாலை புகுந்து அவனால் அவமதிக்கப் பெற்றுத் தீக்குளித்துத் தக்கன் மகளாகிய உருவம் நீங்கிவிட, அதனை அறிந்து கோபம் கொண்ட பெருமான் வீரபத்திரரைத் தோற்றித் தக்கனைத் தண்டித்தற்கு விடுக்க, அக்கடவுள் காளியோடும் பூதகணங்களோடும் சென்று அந்த யாகத்தை அழித்து, அங்கிருந்த தேவர்களை அங்கபங்கம் செய்து தக்கனைத் தலை துமித்தார். இது கந்தபுராணத்து உள்ளது.

     நாயன்மார்களிலே ஒருவராகிய சேரமான் பெருமாள், "பொன்வண்ணத்து அந்தாதி" என்றும் அற்புதமான நூலைப் பாடி உள்ளார். அது பதினோராம் திருமுறையில் உள்ளது. அதில் பின்வரும் பொருளோடு ஒரு பாடல் அமைந்துள்ளது.

     மனிதனாகப் பிறப்பெடுத்த வாழ்நாளில் பாதியானது இரவாகவே கழிந்தது. பாதி ஆயுள் உறங்குவதாகவே முடிந்தது. மீதம் உள்ள பாதியில், முன் பகுதி ஏதும் அறியாக் குழந்தைப் பருவமாகக் கழிந்தது. இறுதிக் காலம் வயோதிகத்தில் கழிந்தது. இடையில் உள்ள மிகக் குறைந்த காலத்திலும் கொடிய நோய்களுடனும், அச்சம், வெகுளி, ஆசை, பொறாமை என்று இப்படியே கழிந்தது. இது ஒழிய வேண்டுமானால், முக்கண் பரம்பொருளை அடைவோம்.

வேண்டிய நாள்களில் பாதியும் கங்குல், மிகஅவற்றுள்
ஈண்டிய வெந்நோய், முதலது பிள்ளைமை, மேலது மூப்பு
ஆண்டின, அச்சம், வெகுளி, அவா, அழுக்காறு இங்ஙனே
மாண்டன, சேர்தும் வளர்புன்சடை முக்கண் மாயனையே.
                                                      --- பொன்வண்ணத்து அந்தாதி.

     திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்திலே திருக்கோயில் கொண்டு வீற்றிருக்கும் தெய்வச்சிலைப் பெருமாள் மீது பாடப்பட்ட "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில், இத் திருக்குறளுக்கு விளக்கமாகப் பின் வருமாறு பாடப்பட்டுள்ளது.

பொன்னாட்டு இறையோடு அயிராணி போற்றும் அம்போருகப் பூ
மின்னாட்கு நாயகம் என்றும் புல்லாணியில் வீற்றிருக்கும்,
அன்னார்க்கு அடியவர் சொல்வர், ழுக்காறு, வா, வெகுளி
இன்னாச் சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் எனவே.


இதன் பொருள் ---

     பொன் நாடு எனப்படும் தேவலோகத்துக்குத் தலைவனாகிய இந்திரனும், அவன் தேவியாகிய இந்திராணியும் போற்றுகின்றவன், தாமரை மலரில் எழுந்தருளிய திருமகள் கேள்வனான தெய்வச் சிலைப் பெருமாள் ஆவார். திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் அவனுடைய அடியார்கள், பொறாமை, பேராசை, கோபம், கடும்சொல் ஆகிய நான்கிலும் தவறிவிடாமல் அமைந்தது அறம் ஆகும் என்று சொல்வர்.

     பொன்னாட்டிறை --- இந்திரன். அம்போருகப் பூ மின்னாள் --- தாமரை மலரில் எழுந்தருளிய திருமகள். அம்போருகம் --- தாமரை. அன்னார்க்கு --- அத்தன்மை உடையவர்க்கு.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...