திருக்குறள்
அறத்துப்பால்
நான்காம் அதிகாரம் - அறன் வலியுறுத்தல்
இந்த
அதிகாரத்தில் வரும் நான்காம் திருக்குறள், மனத்தில் அழுக்கு இல்லாமல் இருத்தல் என்னும்
இயல்பையே வரையறையாக உடையது அறம். மனத்தூய்மை இல்லாமல் செய்யும் செயல்கள் ஆரவாரத் தன்மையை
உடையன என்கின்றது.
திருக்குறளைக்
காண்போம்....
மனத்துக்கண் மாசு
இலன் ஆதல், அனைத்து அறன்,
ஆகுல
நீர பிற.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
மனத்துக்கண் மாசு
இலன் ஆதல்
--- அவ்வாற்றான் அறஞ் செய்வான் தன் மனத்தின்கண் குற்றமுடையன் அல்லன் ஆக;
அனைத்து அறன் --- அவ்வளவே அறம் ஆவது;
பிற ஆகுல நீர --- அஃது ஒழிந்த
சொல்லும் வேடமும் அறம் எனப்படா,
ஆரவார
நீர்மைய;
(குற்றம் - தீயன சிந்தித்தல். பிறர்
அறிதல் வேண்டிச் செய்கின்றன ஆகலின்,
'ஆகுல
நீர' என்றார். மனத்து
மாசுடையான் ஆயவழி அதன்வழிய ஆகிய மொழி மெய்களால் செய்வன பயனில என்பதூஉம்
பெறப்பட்டது.)
இத்
திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்த பாடல் ஒன்று இன்னா நாற்பது என்னும் நூலில் இருந்து....
அற
மனத்தார் கூறும் கடுமொழியும் இன்னா,
மறமனத்தார்
ஞாட்பின் மடிந்து ஒழுகல் இன்னா,
இடும்பை
உடையார் கொடை இன்னா, இன்னா
கொடும்பாடு
உடையார்வாய்ச் சொல். --- இன்னா நாற்பது.
இதன்
பொருள் ---
அறம்
மனத்தார் கூறும் கடுமொழியும் இன்னா --- அறத்தை விரும்பும் நெஞ்சத்தினர் சொல்லுகின்ற
கடுஞ் சொல்லும் துன்பமாம்;
மறம்
மனத்தார் ஞாட்பில் மடிந்து ஒழுகல் இன்னா --- வீரத் தன்மையையுடைய நெஞ்சத்தினர் போரின்கண்
சோம்பி இருத்தல் துன்பமாம்;
இடும்பை
உடையார் கொடை இன்னா - வறுமை உடையாரது ஈகைத் தன்மை துன்பமாம்;
கொடும்பாடு
உடையார் வாய்ச்சொல் இன்னா - கொடுமை உடையாரது வாயில் சொல்லும் துன்பமாம்.
இதனால்,
அறவழியில் வாழும் நெஞ்சத்தினர், மனமாசு அற்றவர் என்பதும், அவர் கடுமொழி கூறமாட்டார்
என்பதும் பெறப்படும்.
No comments:
Post a Comment