திருக்குறள்
அறத்துப்பால்
நான்காம் அதிகாரம் - அறன்
வலியுறுத்தல்
இந்த அதிகாரத்தில் வரும் மூன்றாவது
திருக்குறள், அவரவருக்குக்
கூடும் வகையால் அறம் செய்தலாகிய நல்வினையை இடைவிடாமல் முடிந்த இடங்களில்
எல்லாம் செய்து வரவேண்டும் என்கிறது.
கூடும் வகை என்பது, இல்லறத்தார் தமது
வருவாய் நிலைக்கு ஏற்பவும், துறவறத்திலே நின்றவர்கள் தமது சரீர நிலைக்கு
ஏற்பவும் செய்து வருவதைக் குறிக்கும்.
அப்படிச் செய்யத் துணிந்ததை இடையில் விடாமல்
செய்து வரல் வேண்டும்.
முடிந்த இடம் என்பது, மனம், வாக்கு, காயம் என்னும்
மூன்று நிலையிலும். மனத்தால் நல்லதைச்
சிந்தித்தல்,
வாக்கால்
நல்லதைப் பேசுதல், செயலால் நல்லதைச் செய்தல்.
அதாவது, ஒருவன் மேற்கொண்ட அறச்
செயலை,
முக்கரணங்களாலும், கூடுமான அளவு, இடைவிடாமல்
செய்து வரவேண்டும் என்றது.
திருக்குறளைக்
காண்போம்....
ஒல்லும்
வகையான், அறவினை ஓவாதே
செல்லும்வாய்
எல்லாம் செயல்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
ஒல்லும் வகையான் --- தத்தமக்கு இயலும்
திறத்தான்,
அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல்
--- அறம் ஆகிய நல்வினையை ஒழியாதே அஃது எய்தும் இடத்தான் எல்லாம் செய்க.
(இயலுந்திறம் ஆவது -
இல்லறம் பொருள் அளவிற்கு ஏற்பவும், துறவறம் யாக்கை நிலைக்கு ஏற்பவும்
செய்தல், ஓவாமை - இடைவிடாமை, எய்தும் இடம் ஆவன
மனம் வாக்குக் காயம் என்பன. அவற்றால் செய்யும் அறங்கள் ஆவன முறையே நற்சிந்தையும்
நற்சொல்லும் நற்செயலும் என இவை. இதனான் அறஞ்செய்யும் ஆறு
கூறப்பட்டது.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருத்தொண்டர்
மாலை" என்னும்
நூலில்,
பெரிய
புராணத்திலே குறிக்கப்பட்டுள்ள தொகை அடியாராகிய முழுநீறு பூசிய முனிவர் வரலாற்றை
வைத்து,
பின்
வருமாறு பாடி உள்ளார்.
அழுது
ஈசனை நினைந்தே, அஞ்சு பதம் சொல்லி,
முழு
நீறு அணிவார் தாம் முட்டார், - பழுது உறினும்
ஒல்லும்
வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய்
எல்லாம் செயல்.
பிறப்பொழுக்கத்தில் தலைமையான அற
ஒழுக்கத்தை உடையவர்களாய், மெய்யுணர்வு
உடையவர்களாய், தாம் கொண்ட
அறநெறியில் தவறாது நிற்பவர்களாய்த் தொன்று தொட்டு வரும் மும்மலங்களையும் அறுத்த
வாய்மையுடைய அரிய முனிவர்கள், முறையாகச் செய்து வரும்
நாள் வேள்வியில் விளைத்து எடுத்த திருநீற்றைப் புதிய கலத்தில் வைத்துக் கொண்டு, புலித் தோலை உடுத்த இறைவரை வணங்கி, அத் திருநீற்றை மேனி முழுவதும் பூசிக்
கொள்வர். இவர்களே முழுநீறு பூசிய முனிவர் எனப்படுவார். தோன்றும் காரணங்களால்
கற்பம், அநுகற்பம், உபகற்பம் எனத் திருநீறு மூன்று
வகைப்படும்.
முனிவர்களின் தலையாய, அன்றாடக் கடமையாவது, உலக நன்மை கருதி வேள்வியினை இயற்றுதல்.
அது எக்காலத்தும், எக் காரணத்தும் முட்டின்றி நடைபெறுதல் வேண்டும்.
நம்பியாண்டார் நம்பி அவர்கள் பாடி அருளிய வகை
நூலாகிய திருத்தொண்டர் திரு அந்தாதியில், பின் வருமாறு பாடி உள்ளார்.
உலகம்
கலங்கினும், ஊழி திரியினும், உள் ஒருகால்
விலகுதல்
இல்லா விதியது பெற்ற நல் வித்தகர்தாம்,
அலகில்
பெருங்குணத்து ஆரூர் அமர்ந்த அரன் அடிக்கீழ்
இலகு
வெண்ணீறு தம் மேனிக்கு அணியும் இறைவர்களே.
இதன்
பொருள் ---
அளவுபடாத பெரிய எண்குணங்களை உடைய திருவாரூர்ப் பெருமான் திருவடிக் கீழே
விளங்கும் திருவெண்ணீற்றினைத் தமது
மேனியில்
அணியும் எமது தலைவர்களே, உலகங்கள் எல்லாம்
கலங்கினாலும், ஊழிக்காலம்
மாறுபட்டாலும் ஒருகாலத்தும் உள்ளம் தாம் கலங்காத நிலைபெற்ற வித்தகர்களாவார்.
பெரிய
புராணம் என்னும் திருத்தொண்டர் புராணத்தில், தெய்வச் சேக்கிழார் பெருமான் முழுநீறு பூசிய
முனிவர்கள் குறித்து பின்வருமாறு பாடி உள்ளார்.
சாதியினில்
தலையான தரும சீலர்,
தத்துவத்தின் நெறி உணர்ந்தோர், தங்கள் கொள்கை
நீதியினில்
பிழையாது நெறியில் நிற்போர்,
நித்த நியமத்து நிகழ்
அங்கி தன்னில்
பூதியினைப்
புதிய பாசனத்துக் கொண்டு,
புலி அதளின்
உடையானைப் போற்றி, நீற்றை
ஆதிவரும்
மும்மலமும் அறுத்த வாய்மை
அருமுனிவர் முழுவதும்
மெய் அணிவார் அன்றே.
இதன்
பொருள் ---
பிறப்பொழுக்கத்தில் தலைமையான அற ஒழுக்கத்தை உடையவர்களாய், மெய்யுணர்வு உடையவர்களாய், தாம் கொண்ட அறநெறியில் தவறாது
நிற்பவர்களாய்த் தொன்று தொட்டு வரும் மும்மலங்களையும் அறுத்த வாய்மையுடைய அரிய
முனிவர்கள், முறையாகச் செய்து வரும்
நாள் வேள்வியில் விளைத்து எடுத்த திருநீற்றைப் புதிய கலத்தில் வைத்துக் கொண்டு, புலித் தோலை உடுத்த இறைவரை வணங்கி, அத்திருநீற்றை மேனி முழுவதும் பூசிக்
கொள்வர். இவர்களே முழுநீறு பூசிய முனிவர் எனப்படுவார்.
புதிய பாசனம் - புதிய கலம்; பாத்திரம்.
அடுத்து, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள்
தாம் பாடிய "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில், மேற்குறித்த
திருக்குறளுக்கு விளக்கமாக,பின் வரும் பாடலைப் பாடி உள்ளார்.
அற்றம்இன்றி
சாமந்தன் கோன்நிதியால் அண்ணல்பணி
முற்றுவித்து
இன்புற்றான் முருகேசா - மற்றதனால்
ஒல்லும்
வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய்
எல்லாம் செயல்.
இதன் பதவுரை ---
முருகேசா --- முருகப் பெருமானே, சாமந்தன் --- சாமந்தன் என்பவன், அற்றம் இன்றி --- சிறிதும்
சோர்வில்லாமல், கோன் நிதியால் ---
அரசனுடைய பொருளினால், அண்ணல் பணி ---
சிவபெருானுடைய திருப்பணிகளை, முற்றுவித்து அதனால்
இன்புற்றான் --- நிறைவேறச் செய்து அதனால் இன்பத்தை அடைந்தான்.
அறவினை --- அறச்செயலை, ஓவாதே --- ஒழியாமல், ஒல்லும் வகையால் --- செய்யக் கூடிய
அளவோடு, செல்லும் வாய்
எல்லாம் செயல் --- செல்லுமிடம் எல்லாம் செய்தல் வேண்டும்.
சாமந்தன் என்பவன் அரசனுடைய பொருளைக்
கொண்டு சிவபெருமானுடைய திருப்பணிகளைச் செய்து மகிழ்ந்தான். அறச் செயலை ஒழிவில்லாமல் இயன்ற பொழுதெல்லாம்
செய்தல் வேண்டும் என்பதாம். அற்றம் - சோர்வு, குறைவு முதலியவற்றைக் குறிக்கும் ஒரு
சொல்.
சாமந்தன் திருப்பணி
செய்த கதை
மதுரைமா நகரில் குலபூஷண பாண்டியன்
அரசாட்சி செய்து கொண்டிருக்கும் நாளையில் சாமந்தன் என்பவன் பாண்டியனுடைய படைத்
தலைவனாக இருந்தான். அவன் சிவபெருமானிடத்தில் அன்புள்ளவன். அடியார்களைச் சிவமாக
எண்ணி வழிபடும் பண்புடையவன். அந்நாளில் வேடர்கட்குத் தலைவனாக இருந்த சேதிராயன்
என்பவன் படைப் பெருக்கும் ஆற்றலும் உடையவனாக விளங்கினான். அவன் பாண்டிய
நாட்டின்மேல் படை எடுத்துச் சென்று அதனைக் கைப்பற்ற வேண்டுமென்னும் எண்ணமுடையவனாய்
அதற்குத் தக்க ஏற்பாடுகளைச் செய்தான். இச்செய்தியை உணர்ந்த பாண்டியன் சாமந்தனை
அழைத்து, "வேண்டிய
பொருளைக் கொண்டுபோய் நம்முடைய படையையும் பெருக்குவாயாக" என்று கட்டளை
இட்டான். சாமந்தன் ஏராளமான பொருளை எடுத்துக் கொண்டுபோய்ச் சோமசுந்தரப்
பெருமானுக்குப் பலவகையான திருப்பணிகளைச் செய்தான்.
பொருளைக் கொண்டு திருப்பணிகளைச் செய்தலை
உணர்ந்த பாண்டியன் சாமந்தனை அழைத்துப்
படைகள்
எவ்வளவு சேர்ந்துள்ளன எப்பொழுது வருகின்றன உடனே படைகள் வருதல் வேண்டும் என்று
கடுமையான கட்டளை இட்டான். சாமந்தன் கடவுளிடம் முறையிட்டுக் கொண்டான். கடவுள்
தம்முடைய பூதப் படையை மனிதப் படையாக்கிக் கொண்டுவந்து சேர்ந்தார். சாமந்தன்
பாண்டியனுக்குப் படை வந்துள்ள செய்தியைக் கூறினான். பாண்டியன் படையைப் பார்த்து
மகிழ்ந்தான். படைத் தலைவராக வந்த பரமனுக்கு நன்கொடைகள் வழங்கினான். சேதிராயன்
வேட்டைக்குச் சென்ற இடத்தில் புலியால் தாக்கிக் கொல்லப்பட்டதாகச் செய்தி
வந்தது. கடவுள் தம்முடைய படையோடு
மறைந்தருளினார். பாண்டியன் உண்மை உணர்ந்து சாமந்தனைப் போற்றிப் பாராட்டினான்.
இத்
திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்த சில பாடல்கள்......
இன்றுகொல்
அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே
நின்றது கூற்றம் --- என்றுஎண்ணி
ஒருவுமின்
தீயவை, ஒல்லும் வகையால்
மருவுமின்
மாண்டார் அறம். --- நாலடியார்.
இதன்
பொருள் ---
எமன் வருவது இன்றைக்கா, நாளைக்கா என்று அலட்சியமாக இராதீர்கள்.
அவன் உங்கள் பின்னாலேயே இருக்கின்றான். (எப்போதாகிலும் வருவான். வந்தால்
விடமாட்டான்.) அது உங்களளுக்குத் தெரியாது. எனவே, தீய செயல்களை
விட்டு,
மேலோர்
சொன்ன அறத்தை இயன்ற வரையில் செய்து வாருங்கள்.
இம்மிஅரிசித்
துணையானும் வைகலும்
நும்மில்
இயைவ கொடுத்து உண்மின் --- உம்மைக்
கொடாஅதவர்
என்பர் குண்டுநீர் வையத்து
அடாஅ
அடுப்பின் அவர். --- நாலடியார்.
இதன்
பொருள் ---
இம்மி அரிசி எனப்படும் ஒருவகைச் சிறிய அரிசியின், அதாவது, நொய் அரிசி, அளவாவது, உம்மால் எவ்வளவு முடியுமோ அதை நாள் தோறும் பிறர்க்குக்
கொடுத்துப் பின் உண்ணுங்கள். ஏனென்றால் கடல் சூழ்ந்த
இந்த உலகத்தில் சமைத்து உண்ண அடுப்பு இல்லாத ஏழைகள் யாவரும், முந்தைய பிறப்பில் பிறர்க்கு
ஒன்றும் கொடுத்து உதவாதவர்கள் தான் சான்றோர் கூறுவர்.
மறுமையும்
இம்மையும் நோக்கி ஒருவற்கு
உறுமாறு
இயைவ கொடுத்தல் --- வறுமையால்
ஈதல்
இசையாது எனினும், இரவாமை
ஈதல்
இரட்டி உறும். --- நாலடியார்.
இதன்
பொருள் ---
இந்தப் பிறப்பிலே ஒருவன் செய்த தருமம் தான், அடுத்த பிறவிக்கு ஆகி வரும். எனவே, இந்தப் பிறப்பில் இயன்ற அளவு தருமத்தை
ஒருவன் மனம் வாக்கு காயம் என்னும் முக்கரணங்களாலும் செய்து வருதல் வேண்டும்.
தனக்கு உள்ள வறுமைக்
காலத்தில் பிறருக்குக் கொடுத்து உதவுதல் இயலாது என்றாலும், தான் பிறரை இரவாதிருத்தலும், தன்னிடம் இரந்து வந்தவர்க்கு தன்னால்
இயன்ற உதவியைச் செய்து கொடுத்தலும் ஒருவனுக்குக் கடமை. இரவாது இருத்தலாவது, இரண்டு மடங்கு கொடுத்தலுக்குச் சமம்.
எத்துணை
யானும் இயைந்த அளவினால்
சிற்றறம்
செய்தார் தலைப்படுவர் --- மற்றைப்
பெருஞ்செல்வம்
எய்தியக்கால் பின்அறிதும் என்பார்
அழிந்தார்
பழிகடல் அத்துள். --- நாலடியார்.
இதன்
பொருள் ---
எவ்வளவு குறைவாக இருந்தாலும், தமக்கு இசைந்த அளவினால்
சிறிய அளவிலாவது பிறருக்குக் கொடுத்து உதவியவர் பிறவியின் பயனை அடைந்தவர் ஆவார். நமக்குப்
பெரும் செல்வம் வந்த பிறகு அறம் செய்வதைப் பற்றி எண்ணுவோம் என்று இருக்கின்றவர்கள், பிறவிப் பயனை அடையாது, துன்பக் கடலில்
விழுந்து அழிவார்கள்.
தோற்றம்சால்
ஞாயிறு நாழியா, வைகலும்
கூற்றம்
அளந்து, நும் நாள்உண்ணும் ; ஆற்ற
அறஞ்செய்து
அருளுடையீர் ஆகுமின் ; யாரும்
பிறந்தும்
பிறவாதாரில். --- நாலடியார்.
இதன் பொருள் ---
தோன்றி மறையும் சூரியனால் உண்டாகும் இரவையும்
பகலையும் அளவாகக் கொண்ட நாள் என்ற வாளால், எமன் வாழ்நாள் ஒவ்வொன்றையும் உண்டு தீர்த்து
வருகின்றான். எனவே, உயிருடன் இருக்கும்போதே அடுத்தவர்க்கு உதவி வாழ்கின்ற அன்பினை உடையவர்
ஆகுங்கள். இல்லை என்றால், மனிதனாய்ப் பிறந்தும் பயன் இல்லாது போய்விடும். மனதப் பிறவியின்
பயனே பிறருக்கு உதவி வாழ்தல் என்பது கருத்து.
தோற்றம்
அரிதாய மக்கட் பிறப்பினால்
ஆற்றும்
துணையும் அறஞ்செய்க மாற்றின்றி
அஞ்சும்
பிணிமூப்பு அருங்கூற்று உடன் இயைந்து
துஞ்சு
வருமே துயக்கு. --- பழமொழி
நானூறு.
இதன்
பொருள் ---
அறிவின் மயக்கம், அஞ்சத் தகும் நோய்,மூப்பு, அருங்கூற்று என்ற இவைகளுடன் சேர்ந்து, தடையில்லாது இறந்து படுமாறு வந்து
சேரும். ஆதலால், தோன்றுதற்கு
அருமையாகிய இம் மக்கள் பிறப்பைப் பெற்றதனால் ஒல்லும் வகையான் அறவினையைச் செய்க.
வையிற் கதிர்வடி
வேலோனை வாழ்த்தி, வறிஞர்க்கு என்றும்
நொய்யில் பிளவு அளவேனும் பகிர்மின்கள், நுங்கட்குஇங்ஙன்
வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறுநிழல்போல்,
கையிற் பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே. --- கந்தர் அலங்காரம்.
நொய்யில் பிளவு அளவேனும் பகிர்மின்கள், நுங்கட்குஇங்ஙன்
வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறுநிழல்போல்,
கையிற் பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே. --- கந்தர் அலங்காரம்.
இதன் பொருள் ---
உலகத்தீரே! உங்களுக்கு இங்கே வெய்யிலுக்கு
ஒதுங்கி நிற்க உதவாத, இந்த உடம்பின் பயனற்ற நிழலைப் போல, மரண காலத்தில்
ஆன்மா புறப்பட்டுச் செல்லும் இறுதி வழிக்கு, உங்கள் கையில் இப்போது
உள்ள பொருளும் துணை செய்யாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எனவே, கூரிய
வேலாயுதத்தை உடைய முருகப் பெருமானைத் துதித்து, ஏழைகளுக்கு எக்காலமும், நொய்யில் பாதி
அளவாவது பகிர்ந்து கொடுத்து வாழுங்கள்.
கெடுவாய்
மனனே, கதிகேள், கரவாது
இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்,
சுடுவாய் நெடுவே தனைதூள் படவே,
விடுவாய், விடுவாய், வினை யாவையுமே. --- கந்தரனுபூதி.
இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்,
சுடுவாய் நெடுவே தனைதூள் படவே,
விடுவாய், விடுவாய், வினை யாவையுமே. --- கந்தரனுபூதி.
இதன் பொருள் ---
கெடு வழியிலே செல்லுகின்ற மனமே! நல் வழியைக் கூறுகின்றேன், கேட்பாயாக! உன்னிடம் உள்ளதை மறைக்காமல் பிறருக்குத்
தானமாகக் கொடுத்து மகிழ்ந்து, கூர்மையான வேலினைத் தாங்கிய
இறைவன் திருமுருகப்பெருமானின் திருவடிகளை நினைந்து தியானம் செய்து வருவாயாக.
அப்படிச் செய்தால் நீண்ட காலமாகப் பிறவியிலே அகப்பட்டு நீ அனுபவித்து வருகின்ற
துன்பங்கள் எல்லாம் சுட்டு எரிக்கப்படும். பிறவிக்கும், அதனால் வரும் துன்பத்திற்கும் காரணமான வினைகள் எல்லாம்
உன்னை விட்டு நீங்கும்.
ஆற்றும்
துணையால் அறம் செய்கை முன்இனிதே,
பால்
பட்டார் கூறும் பயமொழி மாண்பு இனிதே,
வாய்ப்பு
உடையர் ஆகி வலவைகள் அல்லாரைக்
காப்பு
அடையக் கோடல் இனிது.--- இனியவை நாற்பது.
இதன்
பொருள் ---
கூடிய மட்டும் தருமஞ் செய்தல் மிக இனிது. நன்னெறிப்
பட்டார் சொல்லும், பயனுடைய சொல்லின் மாட்சிமை
இனிது. கல்வி, செல்வம், அதிகாரம், ஆண்மை முதலிய நலம் யாவும் பொருந்துதல் உடையவராய், நாண் இலிகள அல்லாதவரை, காப்பாகப் பொருந்தக் கொள்ளுதல்,இனிது.
அறமாவது நல்லன நினைத்தலும், நல்லன சொல்லுதலும், நல்லன செய்தலுமாம். ஆற்றுந்துணையாவது
பொருள் அளவிற்கேற்பச் செய்தல். தமது தன்மையை விடாதார் பகைவராயினும், நொதுமலராயினும், நண்பராயினும் பயனுடை மொழிகளையே
பகர்தலின் ‘பாற்பட்டார் கூறும் பயமொழி ' என்றார்.
கல்வி, செல்வம், அதிகாரம், ஆண்மை முதலிய எல்லா மிருந்தும் ஒருவன்
கண் நாணொன் றில்லையாயின அவன், தன்னை யடைந்தாரைக்
கைவிடுவ னென்பது, ‘வாய்ப்புடையராகி
வலகைளல்லாரைக், காப்படையக் கோட
லினிது'என்பதன் கருத்தென்க.
இன்றி
யமையா இருமுது மக்களைப்
பொன்றினமை
கண்டும் பொருள்பொருளாக் கொள்பவோ
ஒன்றும்
வகையான் அறஞ்செய்க ஊர்ந்துருளின்
குன்று
வழியடுப்ப தில். --- பழமொழி நானூறு.
இதன்
பொருள் ---
தம்மையின்றி
உயிர் வாழாத இருவராகிய முதிய தாயும் தந்தையும், தாம் தேடிய பொருளையும் தம்மையும்
விட்டுவிட்டு இறந்தமையை அறிந்தும்,
செல்வத்தை ஒரு பொருளாக மனத்தில்
கொள்வார்களோ? பொருந்தும் நெறியான்
அறத்தைச் செய்து உய்க. மலை ஊர்ந்து உருண்டு செல்லுமாயின் அதனை வழி நின்று தடுப்பது
ஒன்றுமில்லை ஆதலின்.
செல்வத்திற்கே அன்றி உனக்கும் நிலையாமை
உண்மையால் உடனே அறம் செய்க என்பது கருத்து.
No comments:
Post a Comment