004. அறன் வலியுறுத்தல் - 01. சிறப்பீனும் செல்வமும்





திருக்குறள்
அறத்துப்பால்
நான்காம் அதிகாரம் - அறன் வலியுறுத்தல்

அறத்தின் வலிமையைக் கூறுதல்.

         அஃதாவது, அம்முனிவரான் உணர்த்தப்பட்ட அம்மூன்றனுள் (அறம், பொருள், இன்பம்) ஏனைப் பொருளும் இன்பமும் போலாது, அறம் இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் பயத்தலால், அவற்றின் வலி உடைத்து என்பது கூறுதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும். 'சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் அறத்துவழிப் படூஉம் தோற்றம் போல'  (புறநா.31 - கோவூர் கிழார் பாடியது) என்றார் பிறரும்.

இந்த அதிகாரத்தின் முதல் திருக்குறள், வீடுபேற்றை அளிப்பதுடன், செல்வச் சிறப்பையும் அளிப்பது அறமே ஆகும். அதனால், அறத்தை விட, உயிர் வாழ்க்கைக்கு மேம்பட்ட ஆக்கத்தைத் தருவது வேறு இல்லை என்றது.


சிறப்பு ஈனும், செல்வமும் ஈனும், அறத்தின் ஊஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

இதற்குப் பரிமேலழகர் உரை ---              

      சிறப்பு ஈனும் --- வீடுபேற்றையும் தரும்;

     செல்வமும் ஈனும் --- துறக்கம் முதலிய செல்வத்தையும் தரும்;

     உயிர்க்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன் --- ஆதலான் உயிர்கட்கு அறத்தின் மிக்க ஆக்கம் யாது?

துறக்கம் --- வீடுபேறு.
        
         (எல்லாப் பேற்றினும் சிறந்தமையின், வீடு 'சிறப்பு' எனப்பட்டது. ஆக்கம் தருவதனை 'ஆக்கம்' என்றார். ஆக்கம் : மேன் மேல் உயர்தல், ஈண்டு 'உயிர்' என்றது மக்கள் உயிரை, சிறப்பும் செல்வமும் எய்துதற்கு உரியது அதுவே ஆகலின். இதனால் அறத்தின் மிக்க உறுதி இல்லை என்பது கூறப்பட்டது.

இத் திருக்குறளுக்கு ஒப்புமையாக அமைந்த பாடல்கள் சிலவற்றைக் காண்போம்.....

பிச்சை புக்கு உண்பான் பிளிறாமை முன்இனிதே,
துச்சில் இருந்து துயர்கூரா மாண்பு இனிதே,
உற்ற பேராசை கருதி அறன் ஒரூஉம்
ஒற்கம் இலாமை இனிது.       ---   இனியவை நாற்பது

இதன் பொருள் ---

பிச்சை புக்கு உண்பான் பிளிறாமை முன் இனிது --- பிச்சைக்குச் சென்று இரந்து உண்பவன் கோபியாமை மிக இனிது;

துச்சில் இருந்து துயர் கூரா மாண்பு இனிது --- ஒதுக்குக் குடியிருந்து துன்பம் மிக்கு அடையாத மாட்சிமை இனிது, -;

உற்றபேர் ஆசை கருதி அறன் ஒரூஉம் ஒற்கம் இலாமை இனிது --- மிக்க பேராசையைக் கருத்துள் கொண்டு, அறவழியினின்றும் நீங்குதற்கு ஏதுவாகிய மனத்தளர்ச்சி இல்லாதிருத்தல் இனிது.
  
மிக்க பேராசை நிரம்பும் வரையில் பேரிடரும்; நிரம்பாதாயின் பேரிடரும், நிரம்பினும் முடிவில் பேரிடரும் விளைத்தலின் அதனைக் கருத்துட்கொண்டு, மேற்குறித்த திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்தது.

இம்மையினும் மறுமையினும் இன்பம் பெரிதும் தந்து, அந்தம் இல் இன்பத்து அழிவு இல் வீட்டையும் தரும் அறத்தைக் கைவிடுதல் அடாது.


முன்பு நின்று இசை நிறீஇ, முடிவு முற்றிய
பின்பும் நின்று, உறுதியைப் பயக்கும் பேரறம்,
இன்பம் வந்து உறும்எனின் இனிது; ஆயிடைத்
துன்பம் வந்து உறும்எனின், துறக்கல் ஆகுமோ?.
                                    --- கம்பராமாயணம், தைலாமாட்டு படலம்.

 இதன் பொருள் ---

பேர் அறம் --- பெருமை பொருந்திய தருமம்; முன்பு நின்று இசை நிறீஇ --- (தன்னை மேற்கொள்பவனுக்கு இவ்வுலகில்) முன்னதாகப் புகழை நிலை நிறுத்தி; முடிவு முற்றிய பின்பும் நின்று --- இந்த வாழ்வு முடிவுக்கு வந்தபிறகும் இருந்து (மறுமையில்);  உறுதியைப் பயக்கும் --- நன்மைப் பயனாகிய மேல் உலகத்தைத் தரும்; இன்பம் வந்து உறும் எனின் இனிது --- (வாழ்வில்) இன்பம் வந்து நேருமாயின் இனிமையானது;  ஆயிடை --- அவ்விடத்து; துன்பம் வந்து உறும் எனின் --- துன்பம் வந்து நேருமாயின்; துறக்கல் ஆகுமோ?’ --- அவ்வறத்தைக் கைவிட ஆகுமோ?

     இன்ப துன்பங்கள் கலந்ததே வாழ்வு. அறவழி நடப்பார்க்கு  இன்பமே வரும். ஆயினும்,ஒருவேளை துன்பம் வருமாயினும் அதுபற்றி அறத்தைக் கைவிடல் ஆகாது. அறம் என்ற சொல்லின் முழுப் பொருளும் தருமம் என்பதன்கண் அடங்காது. பொருள் விளங்க வேண்டிய அளவுக்கே அறம் என்பதற்குத் தருமம் என்று உரை காண்கிறோம்.


மருள் தரும் களி வஞ்சனை வளை
     எயிற்று அரக்கர்,
கருடன் அஞ்சுறு, கண் மணி
     காகமும் கவர்ந்த;
இருள் தரும் புரத்து இழுதையர்
     பழுது உரைக்கு எளிதோ?
அருள் தரும் திறத்து அறன்
     அன்றி, வலியது உண்டாமோ? ---  கம்பராமாயணம், கரன் வதைப் படலம்.

இதன் பொருள் ---   

மருள் தரும் --- மாயையைச் செய்கின்ற; களி வஞ்சனை --- களிப்பும் வஞ்சனையுமுள்ள; வளை எயிற்று அரக்கர் --- வளைந்த கோரமான பற்களையுடைய இராக்கதர்களின்; கருடன் அஞ்சுறு கண்மணி --- கருடனும் காண அஞ்சும்படியான கண்களின் கருவிழிகளை; காகமும் கவர்ந்த --- (இப்பொழுது) காக்கைகளும் பறித்தெடுத்தன; இருள் தரும் புரத்து இழுதையர் --- இருளைப் போன்ற மிகக் கரிய உடம்பையுடைய வஞ்சகர்களிடம்; பழுது உரைக்கு --- கேடு சொல்வதற்கு; எளிதோ --- எளியது ஆகுமோ; அருள் தரும் திறத்து --- கருணை செய்யும் தன்மையையுடைய; அறன் அன்றி --- தருமமேயல்லாமல்; வலியது --- வலிமை உடையது; உண்டாமோ --- (உலகத்தில் வேறு) உள்ளதாகுமோ?

     உயிர்களுக்குத் தருமத்தினும் மிக்க நன்மை தருவதும், அதருமத்தினும் மிக்க கேடு தருவதும் வேறு இல்லையாதலால் கொடியவரான அரக்கர் எளிதாக அழிவடைந்தனர் என்பது.

     'அருள் தரும் திறத்து அறனன்றி வலியது உண்டாமோ' - இராமபிரானே வெற்றி பெற்றமையைத் தெரிவிப்பது


நிலை இலா உலகினிடை நிற்பனவும்
     நடப்பனவும் நெறியின் ஈந்த
மலரின்மேல் நான்முகற்கும் வகுப்பு அரிது,
     நுனிப்பது ஒரு வரம்பு இல் ஆற்றல்
"உலைவு இலா வகை இழைத்த தருமம் என,
     நினைந்த எலாம் உதவும் தச்சன்"
புலன் எலாம் தெரிப்பது, ஒரு புனை மணி
     மண்டபம் அதனில் பொலிய மன்னோ!
                                ---  கம்பராமாயணம், மாரீசன் வதைப் படலம்.

இதன் பொருள் ---

நிலை இலா --- நிலையற்றதான; உலகினிடை --- உலகத்தில்; நிற்பனவும் --- (இடம் பெயராது) நிலை நிற்கும் இயல்புடைய தாவரப் பொருள்களையும்; நடப்பனவும் --- (இடம் பெயரும் இயல்பினவான) சங்கமப் பொருள்களையும்; நெறியின் ஈந்த --- முறையாகப் படைத்த; மலரின் மேல் நான்முகற்கும் --- (திருமாலின்) உந்திக் கமலத்தின் மேலமர்ந்த பிரமனுக்கும்; வகுப்பு அரிது --- படைத்தற்கு அரியதாகவும்; நுனிப்பது ஒரு வரம்பு இல் ஆற்றல் --- நுட்பமாக அறிகிற ஒப்பற்றதும் அளவற்றதுமாகிய வல்லமையால்; உலைவு இலா வகை இழைத்த --- (தமக்கும் பிறர்க்கும்) தீமை தராத வகையில் செய்யப் பெற்ற; தருமம் என --- அறத்தினைப் போன்று; நினைந்த எலாம் உதவும் --- நினைத்த அனைத்தையும் நினைத்தபடியே உண்டாக்கித் தரவல்ல; தச்சன் --- தெய்வத் தச்சனாகிய விசுவகர்மாவின்; புலன் எலாம் --- சிற்ப நூலறிவு முழுவதையும்; தெரிப்பது --- எடுத்துக் காட்டுவதாகிய; ஒரு --- ஒப்பற்ற; புனை மணி மண்டபம் அதனில் --- மணிகள் குயிற்றிச் செய்யப் பெற்ற சபை மண்டபத்திலே; பொலிய --- (தன் வீற்றிருக்கையால்) அம் மண்டபம் அழகு பெறுமாறும்...(மன் ஓ - அசைகள்).

     இராவணனின் மணி மண்டபம் தெய்வத் தச்சனின் அறிவுத் திறமெலாம் புலப்படுத்துவது. அதன் மேலும் அதன் சிறப்பை வரம்பு இலா ஆற்றல் கொண்டதும், எவர்க்கும் தீமை தராத வகையில் செய்யப் பெற்றதுமான அறத்தை உவமையாக்கிப் புலப்படுத்திய பாங்கு நினையத்தக்கது.

     நான்முகனாலும் படைத்தற்கு அரியது, தெய்வத் தச்சன் புலன் எலாம் தெரிப்பது மண்டபத்தின் சிறப்பு. அம் மண்டபத்தில் வீற்றிருப்பதால் இராவணனுக்குப் பொலிவு என்பதனை உணர்த்தப் 'பொலிய' எனச் சுட்டினார். 

   

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...