அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சுருதியாய்
(திருக்குடவாயில்)
முருகா!
குருவாய் வருவாய் அருள்வாய்.
தனன
தானன தானன தானன
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன ...... தனதான
சுருதி
யாயிய லாயியல் நீடிய
தொகுதி யாய்வெகு வாய்வெகு பாஷைகொள்
தொடர்பு மாயடி யாய்நடு வாய்மிகு ..... துணையாய்மேல்
துறவு
மாயற மாய்நெறி யாய்மிகு
விரிவு மாய்விளை வாயருள் ஞானிகள்
சுகமு மாய்முகி லாய்மழை யாயெழு ......
சுடர்வீசும்
பருதி
யாய்மதி யாய்நிறை தாரகை
பலவு மாய்வெளி யாயொளி யாயெழு
பகலி ராவிலை யாய்நிலை யாய்மிகு ......
பரமாகும்
பரம
மாயையி னேர்மையை யாவரு
மறியொ ணாததை நீகுரு வாயிது
பகரு மாறுசெய் தாய்முதல் நாளுறு ......
பயனோதான்
கருது
மாறிரு தோள்மயில் வேலிவை
கருதொ ணாவகை யோரர சாய்வரு
கவுணி யோர்குல வேதிய னாயுமை ...... கனபாரக்
களப
பூண்முலை யூறிய பாலுணு
மதலை யாய்மிகு பாடலின் மீறிய
கவிஞ னாய்விளை யாடிடம் வாதிகள் ......
கழுவேறக்
குருதி
யாறெழ வீதியெ லாமலர்
நிறைவ தாய்விட நீறிட வேசெய்து
கொடிய மாறன்மெய் கூனிமி ராமுனை ......குலையாவான்
குடிபு
கீரென மாமது ராபுரி
யியலை யாரண வூரென நேர்செய்து
குடசை மாநகர் வாழ்வுற மேவிய ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
சுருதிஆய், இயலாய், இயல் நீடிய
தொகுதியாய், வெகுவாய், வெகு பாஷைகொள்
தொடர்புமாய், அடியாய், நடுவாய், மிகு.....துணையாய்,மேல்
துறவுமாய், அறமாய், நெறியாய், மிகு
விரிவுமாய், விளைவாய், அருள் ஞானிகள்
சுகமுமாய், முகிலாய், மழையாய், எழு ...... சுடர்வீசும்
பருதியாய், மதியாய், நிறை தாரகை
பலவுமாய், வெளியாய் ஒளியாய், எழு
பகல் இரா இலையாய், நிலையாய், மிகு ...... பரம்ஆகும்
பரம
மாயையின் நேர்மையை, யாவரும்
அறிய ஒணாததை, நீ குருவாய் இது
பகருமாறு செய்தாய், முதல் நாளஎஉறு ...... பயனோதான்?
கருதும்
ஆறுஇரு தோள்,மயில், வேல் இவை
கருத ஒணாவகை ஓர்அரசாய் வரு,
கவுணியோர் குலவேதியனாய், உமை ...... கனபாரக்
களப
பூண்முலை ஊறிய பால் உணும்
மதலையாய், மிகு பாடலின் மீறிய
கவிஞனாய், விளையாடு இடம், வாதிகள் ...... கழு ஏறக்
குருதி
ஆறு எழ, வீதி எலா மலர்
நிறைவதாய் விட, நீறு இடவே செய்து,
கொடிய
மாறன் மெய்கூன் நிமிரா, முனை ......குலையா
வான்
குடிபுகீர்
என மா மதுராபுரி
இயலை ஆரண ஊர் என நேர்செய்து,
குடசை மாநகர் வாழ்வுற மேவிய ......
பெருமாளே.
பதவுரை.
கருதும் ஆறு இரு
தோள் மயில் வேல் --- எல்லோராலும் கருதிப் போற்றப்படும் பன்னிரு திருத்தோள்கள், மயில், வேலாயுதம்,
இவை கருத ஒணா வகை --- இவை யாவையும்
தோன்றாத வகை மறைத்து,
ஓர் அரசாய் வரு
கவுணியோர் குல வேதியனாய் --- சீகாழிவேந்தராக, கவுணியர் குலத்தில் வேதியராய்
அவதரித்து,
உமை கனபார களப
பூண்முலை ---
உமாதேவியினுடைய, பருத்துள்ளதும், கலவைச் சாந்து அணிந்துள்ளதும் ஆகிய முலைகளில்
ஊறிய பால் உணு மதலையாய் --- சுரந்த ஞானப்
பாலைப் பருகிய குழந்தையாகி,
மிகு பாடலின் மீறிய
கவிஞனாய் விளையாடு இடம் --- தேவாரத் திருப்பதிகங்கள் பாடுவதில்
இணையற்ற கவித் திறன் பெற்றவராய், திருவிளையாடல்கள் பலவும்
செய்திருந்த காலத்தில்,
வாதிகள் கழுவேற, குருதி ஆறு எழ --- வீண்
வாதத்துக்கு வந்த சமணர்கள் கழுவில் ஏறவும், அவர்களுடைய இரத்தம் ஆறாகப் பெருகவும்,
வீதி எலாம் மலர்
நிறைவதாய் விட --- வீதிகளில்
எல்லாம் விண்ணவரும் மண்ணவரும் பொழிந்த மலர் மாரி நிறைந்திட,
நீறு இடவே செய்து --- திருநீற்றை பாண்டிய
மன்னனும் மற்றுள்ள யாவரும் இடும்படிச் செய்து,
கொடிய மாறன் மெய்
கூன் நிமிரா
--- முன்பு கொடியவனாக இருந்த பாண்டிய மன்னனின் கூன் உடல் நிமிர்ந்து விளங்கவும்,
முனை குலையா --- வாதுப் போரில்
சமண் பகையை அழித்து,
வான் குடி புகீர் என --- அவர்களை
வானில் குடி புகுங்கள் என்று,
மாமதுரா புரி இயலை
ஆரண ஊர் என நேர் செய்து --- சிறந்த மதுரையில் முன்னிருந்த
சமண நிலையை மாற்றி வேதபுரி என்னும்படியாக அந்த ஊரை செந்நெறியில் சேர்ப்பித்து,
குடசை மாநகர் வாழ்வுற
மேவிய பெருமாளே --- திருக்குடவாயில் என்னும் பெருநகரில் அடியார்கள் வாழ்வு
பெறத் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் பெருமையில் மிக்கவரே!
சுருதியாய் --- வேதமாய்,
இயலாய் --- இயல் தமிழாய்,
இயல் நீடிய தொகுதியாய் --- அத்தகைய
இயல் தமிழின் விளக்கங்கள் பொருந்திய பகுதியாய்,
வெகுவாய், வெகு பாஷை கொள்
தொடர்புமாய்
--- பலவுமாய், பல மொழிகளோடும்
தொடர்பு கொண்டதாய்,
அடியாய், நடுவாய் மிகு
துணையாய்
--- அடிப்படையாய், நடுவாய், மிக்க துணையாய்,
மேல் துறவுமாய்
அறமாய் நெறியாய் --- மேலான துறந்த நிலை உடையதாய், அறநெறியாய், நன்னெறியாய்,
மிகு விரிவுமாய் --- எல்லாவற்றிலும் மிகுந்த
விரிவுகளை உடையதாய்,
விளைவாய் --- அவை யாவற்றினுடைய விளைவுமாய்,
அருள் ஞானிகள் சுகமுமாய் --- அருள்ஞானிகள்
அனுபவிக்கும் சுகானந்தப் பொருளாய்,
முகிலாய் --- கருமேகமாய்,
மழையாய் --- அது பொழியும் மழையாய்,
எழுசுடர் வீசும் பருதியாய் மதியாய் --- சுடர் வீசும் சூரியனாய், சந்திரனாய்,
நிறை தாரகை பலவுமாய் --- நிறைந்துள்ள
நட்சத்திரங்கள் பலவுமாய்,
வெளியாய் --- வெளியாய்
ஒளியாய் --- ஜோதியாய்,
எழு பகல் இராவு
இலையாய்
--- மாறி மாறி வருகின்ற பகலும் இரவும் இல்லாததாய் நிலைத்துள்ளதாய்,
நிலையாய் --- என்றும் உள்ளதாய்,
மிகு பரமாகும் பரம
மாயையின் நேர்மையை --- மிக்க மேலான பொருளான சுத்த மாயையின் உண்மை நிலையை,
யாவரும் அறிய ஒணாததை --- எவரும் அறிய
முடியாததை,
நீ குருவாய் இது
பகருமாறு செய்தாய் --- நீ குருவாக வந்து எடுத்து ஓதுமாறு திருவருள் புரிந்தாய்
முதல் நாள் உறு பயனோ
தான்
--- நான் முற்பிறப்பில் செய்த தவத்தின் பயன் இது தானோ?
பொழிப்புரை
எல்லோராலும் கருதிப் போற்றப்படும்
பன்னிரு திருத்தோள்கள், மயில், வேலாயுதம், இவை யாவையும் தோன்றா வகை மறைத்து, சீகாழி வேந்தராக கவுணியர் குலத்தில் வேதியராய்
அவதரித்து, உமாதேவியினுடைய, பருத்துள்ளதும், கலவைச் சாந்து அணிந்துள்ளதும் ஆகிய முலைகளில்
சுரந்த ஞானப்பாலைப் பருகிய குழந்தையாகி, தேவாரத்
திருப்பதிகங்கள் பாடுவதில் இணையற்ற கவித் திறன் பெற்றவராய். திருவிளையாடல்கள் பலவும்
செய்திருந்த காலத்தில், வீண் வாதத்துக்கு வந்த சமணர்கள் கழுவில்
ஏறவும், அவர்களுடைய இரத்தம்
ஆறாகப் பெருகவும், வீதிகளில்
எல்லாம் விண்ணவரும் மண்ணவரும் பொழிந்த மலர் மாரி நிறைந்திட, திருநீற்றை மன்னனும்
மற்றுள்ள யாவரும் இடும்படிச் செய்து, முன்பு
கொடியவனாக இருந்த பாண்டிய மன்னனின் உடல் கூனோடு உள்ளக் கூனும் நிமிர்ந்து
விளங்கவும், சமண் பகையை அழித்து, பொன்னுலகில் உங்கள் ஊருக்குக் குடி
புகுங்கள் என, சிறந்த மதுரையின்
முன்னிருந்த சமண நிலையை மாற்றி வேதபுரி என்னும்படியாக அந்த ஊரை செந்நெறியில் சேர்ப்பித்து, திருக்குடவாயில்
என்னும் பெருநகரில் அடியார்கள் வாழ்வு பெறத் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும்
பெருமையில் மிக்கவரே!
வேதமாய், இயல் தமிழாய், இயல் தமிழின் விளக்கங்கள் பொருந்திய
பகுதியாய், பலவுமாய், பல மொழிகளோடும் தொடர்பு கொண்டதாய், அடிப்படையாய், நடுவாய், மிக்க துணையாய், மேலான துறந்த நிலை உடையதாய், அறநெறியாய், நன்னெறியாய், எல்லாவற்றிலும் மிகுந்த விரிவுகளை
உடையதாய், அவை யாவற்றினுடைய விளைவுமாய்,
அருள்
நிறைந்த ஞானிகள் அனுபவிக்கும் சுகானந்தப் பொருளாய்,
கருமேகமாய், அது பொழியும் மழையாய், சுடர் வீசும் சூரியனாய், சந்திரனாய், நிறைந்துள்ள
நட்சத்திரங்கள் பலவுமாய், யாதும் அற்ற வெளியாய் ஜோதியாய், மாறி மாறி வருகின்ற பகலும்
இரவும் இல்லாததாய் நிலைத்துள்ளதாய், மிக்க மேலான பொருளான
பெரிய மாயையின் உண்மை நிலையை, எவரும் அறிய
முடியாததை, நீ குருவாக வந்து எடுத்து ஓதுமாறு
திருவருள் புரிந்தாய். நான் முற் பிறப்பில் செய்த தவத்தின் பயன் இது தானோ?
விரிவுரை
சுருதியாய் ---
சுருதி
--- காது, ஒலி.
எழுதப்படாமல்,
காதால் கேட்டே ஓதப்பட்டு வருவது வேதம். ஆகலின், அது சுருதி எனபட்டது.
உண்மையைக் காண்பது வேதம். அவ் வேதங்களின் சிகரமாக நிறைந்திருப்பவர் இறைவர்.
வேதத்தின் முடிவு உபநிடதம். அது ஞானகாண்டம் ஆகும். ஞானந்தான் உருவாகிய நாயகனாகிய
முருகன் அவ் வேத சிகரப் பொருளாக விளங்குகின்றனன்.
நாலந்த வேதத்தின் பொருளோனே
நான்என்று மார்தட்டும் பெருமாளே... ---
(நீலங்கொள்) திருப்புகழ்.
இயலாய் ---
இயல்
தமிழாய் என்றும் கொள்ளலாம். இயல் என்னும் சொல்லுக்கு ஒழுக்கம் என்று ஒரு பொருள்
உண்டு. இவ்வாறும் கொள்ளலாம்.
வெகு
பாஷை கொள் தொடர்புமாய் ---
பல
மொழிகளோடும் தொடர்பு கொண்டதாய் விளங்குவது பரம்பொருள். பரம்பொருளுக்கு எல்லா
மொழிகளும் உரியன.
மைம்மலர்க்
கோதை மார்பினர் எனவும்
மலைமகள் அவளொடு
மருவினர் எனவும்
செம்மலர்ப்
பிறையும் சிறைஅணி புனலும்
சென்னிமேல் உடையர்
எம்சென்னிமேல் உறைவார்
தம்மலர்
அடிஒன்று அடியவர் பரவத்
தமிழ்ச்சொலும்
வடசொலும் தாள்நிழல்சேர
அம்மலர்க்
கொன்றை அணிந்த எம்அடிகள்
அச்சிறுபாக்கம் அது
ஆட்சிகொண்டாரே. --- திருஞானசம்பந்தர்.
இதன் பொழிப்புரை :அச்சிறுபாக்கத்தில்
ஆட்சி கொண்டுள்ள இறைவர் குவளை மலர்களால் இயன்ற மாலையைச் சூடிய மார்பினர் எனவும், மலைமகளாகிய பார்வதி தேவியை இடப்பாகமாகக்
கொண்டுள்ளவர் எனவும், சிவந்த மலர் போலும்
பிறையையும், தேங்கியுள்ள கங்கை
நீரையும் தம் சடைமுடி மீது உடையவர் எனவும், எம் சென்னி மேல் உறைபவர் எனவும், தம் மலர் போன்ற திருவடிகளை மனத்தால்
ஒன்றி நின்று அடியவர்கள் பரவவும் தமிழ்ச் சொல், வடசொற்களால் இயன்ற தோத்திரங்கள் அவர்தம்
திருவடிகளைச் சாரவும் அழகிய கொன்றை மலர் மாலையை அணிந்தவராய் விளங்கும் அடிகள்
ஆவார்.
வானவன்காண்
வானவர்க்கு மேல் ஆனான்காண்
வடமொழியும்
தென்தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன்காண்
ஆன்ஐந்தும் ஆடி னான்காண்
ஐயன்காண் கையில்அனல்
ஏந்தி யாடும்
கானவன்காண்
கானவனுக்கு அருள்செய் தான்காண்
கருதுவார் இதயத்துக்
கமலத்து ஊறும்
தேன்அவன்காண்
சென்றுஅடையாச் செல்வன் தான்காண்
சிவன்அவன்காண்
சிவபுரத்து எம்செல்வன் தானே. --- அப்பர்.
இதன் பொழிப்புரை :சிவபுரத்து எம் செல்வன்
ஆம் சிவபெருமான், வானிடத்து உறைபவனும், தேவர்களுக்கு மேலானவனும், வட மொழியும் இனிய தமிழ் மொழியும் மறைகள்
நான்கும் ஆனவனும், ஆன்ஐந்தாம்
பஞ்சகவ்வியத்தில் ஆடினவனும், கானவனாகிய
கண்ணப்பனுக்கு அருள் செய்தவனும்,
தன்னைக்
கருதுவார் இதயத் திடத்து, தாமரை மலரிடத்து ஊறும்
தேன் போன்றவனும், முன்பு இல்லாது, பின்பு காரணத்தாற் சென்றடையும்
பெற்றியதன்றி இயல்பாகவே உள்ள செல்வனும் ஆவான்.
பண்டித
ராவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர்
கூறுங் கருத்தறி வார்என்க
பண்டிதர்
தங்கள் பதினெட்டுப் பாடைருளி
அண்ட
முதலான் அறஞ்சொன்ன வாறே. ---
திருமந்திரம்.
இதன் பொழிப்புரை : கற்றவர் போற்றுகின்ற
பதினெண்மொழிகளும் சிவபிரான் தனது அறத்தைப் பொதுவாகவும், சிறப்பாகவும் உணர்த்தற்கு அமைத்த
வாயிலே. அதனால், `கற்றவர்` எனப்படுவார், பல மொழிகளையும் உணர்ந்து, அவற்றில் சொல்லியுள்ள முடிந்த பொருளை
உணர்ந்தவரே என அறிக.
எந்த
மொழியானாலும், அந்த மொழியில் உள்ள அருள்நூல்களைப் பயின்று இறையருளைப் பெறுவதே
குறிக்கோள் ஆகும்.
மாரியும்
கோடையும் வார்பனி தூங்கநின்று,
ஏரியும்
நின்றங்கு இளைக்கின்ற காலத்து,
ஆரியமும்
தமிழும் உடனே சொலிக்
காரிகையார்க்குக்
கருணை செய்தானே. --- திருமந்திரம்.
இதன் பொழிப்புரை : பெருகற்காலத்தும், சிறுகற்காலத்தும் நிறைந்த
மெய்யுணர்விருக்கவும் அதனை நோக்காது புலன் உணர்வே மிகப் பெற்று மக்கள்
மெலிவுறுகின்ற காலத்து அம்மெலிவு நீங்குமாறு சிவபெருமான் `ஆரியம், தமிழ்` என்னும் இருமொழிகளை உமா தேவியார்க்கு
ஒருங்கு சொல்லி உலகம் உய்யத் திருவருள் செய்தான்.
அவிழ்க்கின்ற
வாறும் அதுகட்டு மாறும்,
சிமிழ்த்தலைப்
பட்டு உயிர் போகின்றவாறும்,
தமிழ்ச்சொல்
வடசொல் எனும்இவ் விரண்டும்
உணர்த்தும்
அவனை உணரலும் ஆமே. --- திருமந்திரம்.
இதன் பொழிப்புரை : சிவபெருமான்
உயிர்களைப் பாசத்தளை யினின்றும் விடுவிக்கின்ற முறையையும், பின் அவற்றை அன்பு வாயி லாகத்
தன்னிடத்தே நிலைபெறுவிக்கின்ற முறையையும், அங்ஙனம் நிலைபெறுவித்தற்கண் உயிர் தனது
பண்டைப் பயிற்சி வயத்தால் பாசத்திலே பொருந்தி அலைவுறுகின்ற முறையையும், `தமிழ்மொழி, வடமொழி` என்னும் இருமொழியுமே ஒருபடித்தாக
உணர்த்தும்; அதனால், அவற்றுள் யாதொன்றையாயினும் முறைப்படி
உணர வல்லார்க்குத் தத்துவ ஞானத்தையே யன்றிச் சிவஞானத்தைப் பெறுதலுங் கூடுவதாம்.
தென்தமிழும்
வடகலையும் தேசிகமும் பேசுவன
மன்றினிடை
நடம்புரியும் வள்ளலையே பொருள் ஆக
ஒன்றியமெய்
உணர்வோடும் உள்உருகிப் பாடுவார்
பன்றியுடன்
புள்காணாப் பரமனையே பாடுவார். --- பெரியபுராணம்.
இதன்
பொழிப்புரை : தென்
தமிழ், வடமொழி, பிறநாட்டு மொழிகள் ஆகிய மொழிகளுள்
யாதொன்றில் தமக்குப் பயிற்சி இருப்பினும் அவற்றுள், அம்பலத்தில் கூத்தியற்றும் அருள்
வடிவினனாகிய கூத்தப் பெருமானேயே நன்குணர்ந்து உயர்ந்த குறிக்கோளாகிய அவ்வொரு
பொருளிலேயே பொருந்திய மனவுணர்வுடன் உள்ளம் உருகிப் பாடுவார்கள், பன்றியான திருமாலுடன் அன்னப் பறவையான
நான்முகனும் தேடி அறிய இயலாதவாறு விளங்கும் பரமனையே பாடுவார் ஆவார்.
"அலகில்
கலையின் பொருட்கு எல்லை ஆடுங்கழலே" என்பார்
தெய்வச் சேக்கிழார் பெருமான். எம் மொழிக்கும் முடிந்த பொருளாகவும் உயிர்கள் சென்று
அடையத்தக்க பொருளாகவும் இருப்பது இறைவனின் திருவடியேயாம்.
அடியாய்
---
ஆதியாய்
விளங்குவது. எல்லாப் பொருட்கும் ஆதாரமாய் விளங்குவது.
நடுவாய்
---
நடு
--- தெய்வத் தன்மை.
"நல்லார்க்கும்
பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே" என்பார் வள்ளல்பெருமான்.
மிகு
துணையாய்
---
தோன்றாத்
துணையாய் விளங்குவது பரம்பொருள்.
"தோன்றாத்
துணையாய் இருந்தனன்" என்பார் அப்பர் பெருமான்.
துறவுமாய்
---
துறந்த
நிலை பற்றற்ற நிலையைக் குறிக்கும். துறவு நிலையில் விளங்குவது.
அறமாய்
---
அற
வடிவாய் விளங்குவது.
நெறியாய் ---
நன்னெறியினில்
விளங்குவது.
மிகு
விரிவுமாய்
---
மேற்சொன்ன
எல்லாவற்றிற்கும் மிகுந்த விரிவுகளை உடையதாய் விளங்குவது.
விளைவாய் ---
"விதியாய்
விளைவாய் விளைவின் பயனாகிக்
கொதியா
வரு கூற்றை உதைத்தவர் சேரும்
பதி
ஆவது பங்கயம் நின்று அலரத் தேன்
பொதியார்
பொழில்சூழ் புகலிந் நகர்தானே". --- திருஞானசம்பந்தர்.
இதன்
பொழிப்புரை ---
மார்க்கண்டேயருக்கு
வயது பதினாறு என விதித்த விதியாகவும், அதன்காரணமாக
வந்த மரணமாய், அவர் இறை வழிபாடு செய்ததன்
காரணமாகத்தானே விதியின் பயனாய் வெளிப்பட்டுச் சினந்துவந்த கூற்றுவனை உதைத்தருளிய சிவபிரான்
எழுந்தருளிய தலம், தாமரை மலர்கள் மலர்ந்த
நீர்நிலைகளும், தேன்கூடுகள் நிறைந்த பொழில்களும்
சூழ்ந்த புகலிநகராகும்.
முகிலாய்
மழையாய்
---
"மின்னானை
மின்னிடைச்சேர் உருமி னானை
வெண்முகிலாய்
எழுந்துமழை பொழிவான்" தன்னைத்
தன்னானைத்
தன் ஒப்பார் இல்லாதானைத்
தாயாகிப்
பல்லுயிர்க்கு ஓர் தந்தை ஆகி,
என்னானை
எந்தை பெருமான் தன்னை,
இருநிலமும்
அண்டமுமாய்ச் செக்கர் வானே
அன்னானை,
ஆவடுதண் துறையுள் மேய
அரன்அடியே
அடிநாயேன் அடைந்து உய்ந்தேனே. ---
அப்பர்.
இதன்
பொழிப்புரை ---
மின்னாய்
, மின்னிடையே சேரும் இடியாய்
, வெண்முகிலாய் , மழைபெய்யும் கார்முகிலாய்ச் சுதந்திரனாய்
, தன்னை ஒப்பார் பிறர் இல்லாதவனாய்ப்
பல்லுயிர்க்கும் தாயாய்த் தந்தையாய் எனக்கு உரிய எந்தையாய்ப் பெரிய உலகங்களும் உலகங்களின்
தொகுப்பாகிய அண்டங்களுமாய்ச் செவ்வான் போன்ற நிறத்தினனாய் , ஆவடுதுறையுள்மேய அரனடியே அடிநாயேன் அடைந்து
உய்ந்தேனே . கருமேகமாய்,
எழுசுடர்
வீசும் பருதியாய் மதியாய் நிறை தாரகை பலவுமாய்,
வெளியாய், ஒளியாய் ---
இருநிலனாய்த்
தீயாகி நீரும் ஆகி,
இயமானனாய் எறியும் காற்றும் ஆகி,
"அருநிலைய
திங்களாய் ஞாயிறு ஆகி"
ஆகாசமாய் அட்ட மூர்த்தி ஆகிப்
பெருநலமுங்
குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறர்உருவுந் தம்உருவுந் தாமே யாகி
நெருநலையாய்
இன்றுஆகி நாளை ஆகி
நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே. ---
அப்பர்.
இதன் பொழிப்புரை :பெரிய பூமியாகியும் , நீராகியும் , தீயாகியும் , எறியும் காற்றாகியும் , ஆகாயமாகியும் , ஞாயிறாகியும் , அழிவில்லாத நிலையையுடைய திங்களாகியும் , இயமானனாகியும் இங்ஙனம் அட்ட
மூர்த்தியாகியும் , பெருமையுடையதாகிய
நன்மையும் , சிறுமை உடையதாகிய
குற்றமும் , பெண்ணும் , ஆணும் ஏனைய தேவருடைய வடிவங்களும் அருவம்
, உருவம் , அருவுருவம் என்னும் தம் மூவகைத்
திருமேனிகளும் தாமே ஆகியும் , நேற்று ஆகியும் , இன்று ஆகியும் , நாளை ஆகியும் நீண்ட செஞ்சடையுடைய
எம்பெருமான் நின்றவாறு வியக்கத் தக்கதாகும் .
தீயாகி
நீராகித் திண்மை யாகித்
திசையாகி அத்திசைக்கு ஓர்தெய்வ மாகித்
தாயாகித்
தந்தையாய்ச் சார்வு மாகித்
தாரகையும்
ஞாயிறுந்தண் மதியு மாகிக்
காயாகிப்
பழமாகிப் பழத்தில் நின்ற
இரதங்கள் நுகர்வானும் தானே யாகி
நீயாகி
நானாகி நேர்மை யாகி
நெடுஞ்சுடராய் நிமிர்ந்துஅடிகள் நின்ற
வாறே.--- அப்பர்.
இதன் பொழிப்புரை : தீயின்
வெம்மையாகியும் , நீரின் தண்மையாகியும்
, நிலத்தின்
திண்மையாகியும் , திசைகள் ஆகியும் , அத்திசைகள் ஒவ்வொன்றிற்கும் உரிய
தெய்வமாகியும் , தாயாகியும் , தந்தையாகியும் , சார்தற்குரிய பற்றுக்கோடாகியும் , நாண் மீனாகியும் , ஞாயிறாகியும் , குளிர் மதியமாகியும் , காயாகியும் , பழங்கள் ஆகியும் , பழத்தில் நின்ற சுவைகள் ஆகியும் , அச்சுவைகளை நுகர்பவன் ஆகியும் தன்மை
முன்னிலை படர்க்கை என்னும் மூன்று இடங்கள் ஆகியும் நுண்மை ஆகியும் நீண்ட
ஒளிப்பிழம்பாகியும் எம்பெருமான் பரவி நின்றவாறு வியக்கத்தக்கதாகும் .
எழு
பகல் இராவு இலையாய் ---
இரவு
--- அறியாமை,
மறதி, துன்பம், நோய் இவற்றைக்
குறிக்கும். இது உயிரின் கேவ நிலை.
பகல்
- அறிவு,
நினைப்பு, இன்பம், நோயின்மை
இவற்றைக் குறிக்கும். இது உயிரின் சகல நிலை.
உயிர்களுக்கு
நினைப்பும் மறப்பும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். இவற்றால் இன்பமும்
துன்பமும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். இவற்றால் நோயும், நோயின்மையும்
மாறி மாறி வந்துகொண்டே இருக்கும்.
இவற்றைத்
துவிதங்கள் என்பர் பெரியோர். இவை இரண்டும் அசுத்தமே. துவிதங்கள் இல்லாத தூய நிலையை
உயிரானது அடையவேண்டும். இதை "இராப்பகல் அற்ற நிலை" என்றனர் நமது
அருளாளர்கள். "அந்தி பகல் அற்ற நினைவு அருள்வாயே" என்று அடிகளார்
வேண்டினார் பிறிதொரு திருப்புகழ்ப் பாடலில்.
இரவு
பகல் அற்ற நிலையை இறையருளால் மட்டுமே பெறமுடியும். எனவே, "இராப்பகல் அற்ற இடம்
காட்டி,
யான்
இருந்தே துதிக்க" என்றார் அடிகளார் கந்தர் அலங்காரத்தில்.
அராப்புனை
வேணியன் சேய்அருள்வேண்டும், அவிழ்ந்த அன்பால்
குராப்புனை
தண்டை அம்தாள் தொழல்வேண்டும், கொடிய ஐவர்
பராக்கு
அறல் வேண்டும், மனமும் பதைப்புஅறல் வேண்டும்
என்றால்,
இராப்
பகல் அற்ற இடத்தே இருக்கை எளிது அல்லவே.
என்பது
கந்தர் அலங்காரம்.
இதன்
பொருள் ----
பாம்பை
அணிந்த திருமுடியை உடைய சிவபெருமானுடைய திருமகனாகிய முருகப்பெருமானின் திருவருள் வேண்டும்.
மலர்ந்து நெகிழ்ந்த அன்பினால் குராமலர் மாலையையும் தண்டையையும் அணிந்துள்ள அப்
பெருமானது அழகிய திருவடிகளை வணங்க வேண்டும். கொடிய ஐம்புலன்களின் சேட்டை
ஒழிய வேண்டும். மனமும் பதைப்பு நீங்குதல் வேண்டும். இந்த நிலையை அடைய
வேளண்டுமானால்,
இரவு
பகல் இல்லாத இடத்தில் இருக்கவேண்டும். அது அவ்வளவு எளிது அல்ல.
அதனை
முருகப் பெருமான் அருள் புரிய வேண்டுகின்றார் அடிகளார் கந்தர் அலங்காரத்தில்.
"இராப்பகல்
அற்ற இடம் காட்டி, யான் இருந்தே துதிக்க,
குராப்புனை
தண்டை அம்தாள் அருளாய், கரி கூப்பிட்ட நாள்
கராப்பட
கொன்றக் கரி போற்ற நின்ற கடவுள் மெச்சும்
பராக்ரம
வேல! நிருத சங்கார! பயங்கரனே!"
இதன்
பொருள் ---
கஜேந்திரன்
என்னும் யானையானது, ஆதிமூலமே என்ற அழைத்த நாளில், ஓடி வந்து, இந்த யானையைப்
பற்றிய முதலை அழியும்படி கொன்று, அந்த யானையானது போற்றி செய்யுமாறு, அதன்முன் சென்று
நின்று காட்சி தந்து அருளிய திருமால் பாராட்டுகின்ற ஆற்றலை உடையவரே! வேலாயுதரே! இராக்கதர்களுக்கு
அச்சத்தை விளைவிப்பவரே! இரவு பகல் என்ற நினைப்பு மறப்பு (கேவல சகலம்) இல்லாத அருள்
நிலையைக் காண்பித்து, அடியேன் அந்த நிருவிகற்ப நிலையில் இருந்து துதியாமல் துதிக்க, குரை மலரையும், தண்டையையும்
அணிந்த அழகிய திருவடிகளைத் தந்து அருள்வீர்.
"ஆங்காரமும்
அடங்கார் ஒடுங்கார் பரமானந்தத்தே
தேங்கார்
நினைப்பும் மறப்பும் அறார் தினைப்போது அளவு
ஓங்காரத்துள்
ஒளிக்கும் உள்ளே முருகன் உருவங்கண்டு
தூங்கார்
தொழும்பு செய்யார் என் செய்வார் யமதூதருக்கே".
--- கந்தர் அலங்காரம்.
இதன்
பொருள் ---
மமகாரம்
ஆகிய "எனது" என்னும் புறப்பற்றையும், அகங்காரம் ஆகிய
"நான்" என்னும் அகப்பற்றையும் ஒழித்து அருள் அனுபவத்திலே அடங்கி
இருக்கப் பெறார். பொறிபுலன்கள் ஒடுங்கப் பெறார். பேரின்ப வெள்ளத்தில் முழுகி
நிறைவு பெறார். நினைப்பு என்னும் சகல நிலையும், மறப்பு என்னும் கேவல
நிலையும் அற்று சமாதி நிலையில் பொருந்தப் பெறார். ஒரு தினை அளவு காலமாயினும், ஓங்காரம் ஆகிய
நாதத்துக்குள்ளே ஒளிருகின்ற சோதியில் முருகப் பெருமானுடைய திருவுருவத்தைத்
தரிசித்து,
கருவி
கரணங்கள் எல்லாம் ஓய்ந்து, அறிவு மாத்திரம், ஒளிசெய்ய, அந்தப் பரவச
நிலையிலே தேங்கி இருக்கமாட்டார். தொண்டு செய்யார். இவர்கள் எமதூதர் வரும்போது என்ன
செய்யக்கூடும்.?
அந்தி
பகல் என்ற இரண்டையும் ஒழித்து,
இந்திரிய சஞ்சலங்களை அறுத்து,
அம்புய பதங்களின் பெருமையைக் ...... கவிபாடி,
செந்திலை
உணர்ந்து,
உணர்ந்து, உணர்வு உற,
கந்தனை அறிந்து அறிந்து, அறிவினில்
சென்று செருகும் தடம் தெளிதர,
...... தணியாத
சிந்தையும்
அவிழ்ந்து,
அவிழ்ந்து, உரைஒழித்து,
என்செயல் அழிந்து, அழிந்து, அழிய, மெய்ச்
சிந்தை வர, என்று நின் தெரிசனைப்
...... படுவேனோ?--- திருப்பகழ்.
அஞ்சுவித பூதமும், கரணம் நாலும்,
அந்தி பகல் யாதும் ......
அறியாத,
அந்தம் நடு ஆதி ஒன்றும் இலது ஆன
அந்த ஒரு வீடு ...... பெறுமாறு,
மஞ்சு தவழ் சாரல் அம் சயில வேடர்
மங்கை தனை நாடி, ...... வனமீது
வந்த, சரண அரவிந்தம் அது பாட
வண்தமிழ் விநோதம் ......
அருள்வாயே. --- திருப்புகழ்.
கருதா
மறவா நெறிகாண,
எனக்கு
இருதாள்
வனசம் தர என்று இசைவாய்
வரதா, முருகா, மயில் வாகனனே
விரதா, சுர சூர விபாடணனே. --- கந்தர்அநுபூதி.
“இதம்அகிதம் விட்டுஉருகி, இரவுபகல்அற்ற விடம்
எனதுஎன இருக்கைபுரி யோகப் புராதனனும்”
--- வேடிச்சிகாவலன் வகுப்பு
"நினைப்பு மறப்பும்
இலாதவர் நெஞ்சம்
வினைப்பற்று
அறுக்கும் விமலன் இருக்கும்
வினைப்
பற்று அறுக்கும் விமலனைத் தேடி
நினைக்கப்
பெறில் அவன் நீளியன் ஆமே” --- திருமந்திரம்.
இதன்
பொருள் ---
நினைப்பு, மனம் முதலிய கருவிகள்
செயற்படுதலால் நிகழ்வது. மறப்பு, கருவிகள் செயற்படாது ஒடுங்குதலால் நிகழ்வது. கருவிகள்
இல்லாத பொழுது அறிவு நிகாழமை ஆணவ மல மறைப்பினால் ஆகும், ஆகவே, ஆணவ மலம் நீங்கினால்
கருவிகளால் ஆவதொன்று இல்லை. ஆன்ம அறிவு எப்பொழுதும் அறிவாயே இருக்கும்; அறியாமையாகாது. இவை
ஒளி குறைந்த கண்ணிற்குக் கண்ணாடி வேண்டாது, எப்பொழுதும் பார்வை நிகழ்வதும்
போல்வன ஆகும். ஆணவ மலத்தால் மறைக்கப்பட்ட அறிவு ஒளி குறையாத கண் போல்வது. பெத்தான்மாக்களது
அறிவு ஆணவ மலத்தால் மறைக்கப் பட்டிருத்தலால் அவ்வறிவு மேற்குறித்த நினைப்பும், மறப்புமாய் நிலைமாறிக்
கொண்டே இருக்கும். முத்தான்மாக்களின் அறிவு ஆணவ மலம் நீங்கப் பெற்றமையால் மாற்றம் இன்றி, அறிவாயே விளங்கும்.
அதனால் அவைகட்குச் சிவம் மறைதல் இன்றி, விளங்கியே நிற்கும்.
"இருந்தேன்
இக்காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன்
இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன்
இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன்
என்நந்தி இணையடிக் கீழே".---
திருமந்திரம்.
இதன்
பொருள் ---
இங்கும்
இவ்வுடம்பிலே பல்லாண்டுகள் இருந்தேன். அங்ஙனம் இருந்த காலம் முழுவதும்அறிவும், அறியாமையும்
கடந்த சிவஞானப் பேரொளியில்தான் இருந்தேன். அது தேவராலும் வணங்கப்படும் எங்கள் நந்தி
பெருமானது திருவடி நிழலே அன்றி வேறில்லை.
"இராப்பகல்
அற்ற இடத்தே இருந்து
பராக்குஅற
ஆனந்தத் தேறல் பருகி
இராப்பகல்
அற்ற இறையடி இன்பத்து
இராப்பகல்
மாயை இரண்டுஇடத் தேனே".--- திருமந்திரம்.
இதன்
பொருள் ---
இரவும், பகலும் ஆகிய கால
வேறுபாடுகள் தோன்றாத ஆழ்ந்த தியான நிலையிலேயே இருந்து, அதனால் விளைகின்ற சிவானந்தமாகி
தேனை வேறு நினைவு இன்றிப் பருகினமையால், இரவும், பகலும் ஆகிய கால வேறுபாடுகள்
இல்லாத இறைவனது திருவடியின்பத்தில் திளைத்து, மேற்கூறிய வேறுபாடுகளையுடைய
காலமாகிய மாயா காரியம் இரண்டினையும் யான் போக்கிவிட்டேன்.
"இரவுபகல் இல்லா இன்ப
வெளியூடே
விரவி விரவி நின்று உந்தீபற" --- திருவுந்தியார்
"அங்கு
இங்கு எனாதபடி எங்கும் ப்ரகாசமாய்,
ஆனந்த பூர்த்தியாகி,
அருளொடு நிறைந்தது எது? தன்அருள் வெளிக்குளே
அகிலாண்ட கோடியெல்லாம்
தங்கும்
படிக்குஇச்சை வைத்து, உயிர்க்கு உயிராய்த்
தழைத்தது எது? மனவாக்கினில்
தட்டாமல் நின்றது எது? சமய கோடிகள் எலாம்
தம்தெய்வம் எம்தெய்வம் என்று
எங்குந்
தொடர்ந்து,
எதிர்
வழக்குஇடவும் நின்றது எது?
எங்கணும் பெருவழக்காய்
யாதினும் வல்லஒரு சித்தாகி இன்பமாய்
என்றைக்கும் உள்ளது எது? மேல்
கங்குல்பகல்
அறநின்ற எல்லை உளது எது? அது
கருத்திற்கு இசைந்தது. அதுவே
கண்டன எலாம் மோன உருவெளியது ஆகவும்
கருதி அஞ்சலி செய்குவாம்". --- தாயுமானவர்.
மிகு
பரமாகும் பரம மாயையின் நேர்மையை ---
பரம
மாயை என்றார் அடிகளார். மேலான மாயை. அது சுத்த மாயையைக் குறிக்கும்.
சுத்த
மாயை நேர்மையானது. அசுத்த மாயை நேர்மை அற்றது.
மாயையின்
விரிவுகளைப் பின்வருமாறு காணலாம்.
மாயையின்
காரியமாக விளங்குவதே இந்த உலகம். ஒருவனால் செய்யப்படுகின்ற பொருள் காரியப் பொருள்
எனப்படும். அவன் பலவாகிய பகுதிகளை இணைத்துச் சேர்த்து அக்காரியப் பொருளை
உருவாக்குகிறான். எனவே காரியப் பொருளெல்லாம் பகுதிகளை உடையதாக இருக்கும். நாம்
கையில் அணியும் கடிகாரம், உடம்பில் அணியும் ஆடை, தோளில் அணியும் மாலை, கழுத்தில் அணியும் நகை முதலியவையெல்லாம்
பல பகுதிகளை உடைய காரியப் பொருள்களே ஆகும். உற்று நோக்கினால் உலகப் பொருள்கள்
அனைத்துமே இத்தகைய காரியப் பொருள்கள்தாம் என்பது புலனாகும். நாம் வாழுகின்ற
இப்பெரிய நிலவுலகமே மண், நீர், தீ, காற்று, வெளி என்னும் ஐம்பூதங்களாகிய பகுதிகளின்
சேர்க்கையால் உருவானது தான்.. எனவே இவ்வுலகமும் ஒரு காரியப் பொருளே.
காரியப்
பொருள் எதுவாயினும் அதற்கு ஒரு மூலப்பொருள் வேண்டும். குடம் என்ற காரியப்
பொருளுக்குக் களிமண் மூலப் பொருள். நாற்காலிக்கு மரம் மூலப்பொருள். நகைக்குப் பொன்
மூலப் பொருள். மூலப் பொருளை முதற் காரணம் என்று குறிப்பிடுவர். மற்றவை எல்லாம்
நிரம்ப இருப்பினும் எந்த ஒன்று இல்லாமல் காரியம் தோன்றாதோ அந்த ஒன்றே முதற் காரணம்
எனப்படும். குடம் என்ற செயப்படுபொருள் உருவாவதற்குச் சக்கரம், கழி முதலியவை பயன்படுகின்றன.
அவற்றையெல்லாம் குறைவறப் பெற்றிருந்தாலும் களிமண் என்ற ஒன்று இல்லையேல் குடம்
தோன்றாது. அது பற்றியே களிமண் முதற்காரணம் எனப்படுகிறது. இவ்வுண்மை பிற காரியப்
பொருள்களுக்கும் பொருந்தும். உலகம் காரியப் பொருள் எனப் பார்த்தோம் எனவே
காரியமாகிய உலகுக்கும் ஒரு முதற் காரணம் இருத்தல் வேண்டும். முதற் காரணமாகிய மூலப்
பொருள் தான் மாயை என்பது.
மாயை
கண்ணுக்குப் புலப்படாத நுண்மை உடைய அருவப் பொருள் ஆகும். மாயையிலிருந்து தான் எல்லாக் காரியப்
பொருள்களும் தோன்றுகின்றன. காரியம் காரணத்தை விடப் பருமையாக இருக்கும். பருமை
தூலம் எனப்படும். எனவே மாயையிலிருந்து படிமுறையில் தோன்றும் காரியப் பொருள்கள்
ஒன்றைவிட ஒன்று தூலமாக இருக்கும். இறுதியில் தோன்றும் காரியங்கள் முந்திய
எல்லாவற்றையும் விடத் தூலமாக இருக்கும். மாயையிலிருந்து இறுதியாகத் தோன்றுகின்ற
தூலமான காரியங்களில் ஒன்றாக இருப்பது ஆகாயம். முன்னே தோன்றிய காரியங்களைப்
பார்க்கத் தூலமான அந்த ஆகாயமே நமக்குப் புலப்படாத அருவமாக இருக்கிறதே. அவ்வாறாயின்
அதற்கு முன்னே தோன்றிய காரியங்கள் அதைவிட
நுண்ணியவாக இருக்கும். அக்காரியங்கள் அனைத்திற்கும் மூலமாக இருக்கும் மாயை
என்பது மிகமிக
நுண்ணியதாக
இருக்கும்.
இத்தகைய
மாயை சுத்தமாய் உள்ள பகுதி என்றும்,
அசுத்தமாய்
உள்ள பகுதி என்றும் இரு பகுதியாய் நிற்கும்.
சுத்தப்
பகுதி என்பது ஆணவ மலத்தோடு கலவாதது.
அசுத்தப்
பகுதி ஆணவ மலத்தோடு கலந்தது.
பூமியைச்
சூழ்ந்து காற்று மண்டலம் உள்ளது. காற்று மண்டலத்தின் மேற்பகுதி மாசு கலவாமல்
தூயதாய் விளங்குவது. கீழே உள்ள பகுதி தூசு, புகை முதலிய மாசுகள் கலந்து விளங்குவது.
இக்காற்று மண்டலம் போன்றது மாயை எனலாம். காற்று மண்டலத்தின் தூய பகுதி மேலாய்
விரிந்து விளங்க, மாசு படிந்த பகுதி
அதற்குள்ளே நிற்கிறது. அதுபோலச் சுத்த மாயை மேலாய் விரிந்து நிற்க, அசுத்த மாயை அதனுள்ளே அடங்கி நிற்கும்.
சுத்த மாயை வியாபகமும், அசுத்த மாயை அதில்
வியாப்பியமும் ஆகும். வியாபகம் என்பதற்கு விரிவு என்பது பொருள். வியாப்பியம்
என்பதற்கு உள்ளடங்கி நிற்றல் என்பது பொருள்.
மாமாயை
குடிலை விந்து என்பன சுத்தமாயையைக் குறிக்கும் வேறு பெயர்கள்.
மோகினி
என்பது அசுத்த மாயையின் மறுபெயர்.
ஆணவத்தோடு
கலவாமையால் சுத்த மாயை மயக்கத்தைச் செய்யாது.
அசுத்த
மாயை ஆணவத்தின் சார்பினால் மயக்கத்தைச் செய்யும். அது பற்றியே அது மோகினி
எனப்பட்டது. மோகினி மயக்குவது.
மாயை
என்றாலே அது அசுத்த மாயையைத்தான் குறிக்கும். அதனால் அடிகளார் இங்கு, "பரம
மாயை" என்றார்.
யாவரும்
அறிய ஒணாததை
---
மேற்குறித்தவாறெல்லாம்
விளங்குகின்ற பரம்பொருளின் தன்மையை எல்லோராலும் அறிந்து கொள்ள முடியாது. கல்வி
கேள்விகளாலும் அறிய முடியாது.
நீ
குருவாய் இது பகருமாறு செய்தாய் ---
இறைவன்
உருவெடுத்து வருவது ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு விதமாக அமையும். அவன் வரவை
எல்லோராலும் கண்டுகொள்ள முடிவதில்லை.
அவன்
குதிரை மீது வந்தபோது பாண்டியனுக்குத் தெரியவில்லை. குதிரைச் சேவகன் என்றே கருதினான். அதே
உருவத்தைப் பார்த்த மணிவாசகர் இறைவன் வந்திருப்புதைக் கண்டுகொண்டார்.
எல்லோருக்கும் அவ்வாறு கண்டுகொள்வது இயலுவதில்லை.
சுந்தரரின்
வாழ்க்கையிலும் இந்த மாட்டாமை இருந்துள்ளது. தமது திருமணத்தைத் தடுத்தவர் இறைவன்தான்
என்பதை அவரால் முதலில் கண்டுகொள்ள முடியவில்லை. இறைவனால் தடுத்து ஆட்கொள்ளபட்ட
பின்னரும், திருவடிதகை சித்தவடமடத்தில், தம் தலை மீது கால் படும்படி வைத்த
முதியவர் இறைவன்தான் என்று அவருக்குத் தெரியவில்லை. பக்குவப்பட்ட ஆன்மாக்களாகிய
நாயன்மார்க்கே இவ்வாறு என்றால், நம் போன்ற எளிய ஆன்மாக்களுக்கு அது மேலும்
இயலாததாகவே இருக்கும்.
எவராலும்
காண்டற்கரியவன் இறைவன். ஞானயோகிகள்,
தம்
உள்ளக் கமலத்தை மலரச் செய்து, அதன் நடுவில் உள்ள
நுண்ணிய வெளியான தகராலயத்தில் உள்ள தற்பரனை, உணர்வுக் கண்கொண்டு வழிபட்டு உவகை
அடைவர். இது ‘தகர வித்தை’ எனப் பெறும். இக்காட்சி ஞானயோகத்தில் முதிர்ந்த
மெய்யன்பர்க்கன்றிப் பிறர்க்கு இயலாத செய்தி.
எனவே,
இறைவன், மானுடச் சட்டை தாங்கி குரு வடிவில் எழுந்தருள் புரிகின்றான்.
"குருவடி
வாகிக் குவலயம் தன்னில்
திருவடி
வைத்து, திறம் இது பொருள் என
வாடா
வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளி"
என்கின்றார்
ஔவைப் பிராட்டியார்.
இறைவன்
குருவாக எழுந்தருள் புரியும் நிலையை, குமரகுருபர அடிகளார் கூறுமாறு காண்க.
........ ........ ........ "வெந்நிரய
சொர்க்க
ஆதி போகம் எலாம் துய்ப்பித்து, பக்குவத்தால்
நல்காரணம்
சிறிது நண்ணுதலும், - தர்க்கமிடும்
தொல்நூல்
பரசமயம் தோறும், அதுஅதுவே
நல்நூல்
எனத் தெரிந்து, நாட்டுவித்து,
- முன்நூல்
விரதமுத
லாயபல மெய்த்தவத்தின் உண்மை,
சரியை
கிரியா யோகம் சார்வித்து, - அருள்பெருகு
சாலோக
சாமீப சாரூபமும் புசிப்பித்து,
ஆலோகம்
தன்னை அகற்றுவித்து, - நால்வகையாம்
சத்தி
நிபாதம் தருதற்கு, இருவினையும்
ஒத்து
வரும் காலம் உளஆகி, - பெத்த
மலபரிபாகம்
வரும் அளவில், பல்நாள்
அலமருதல்
கண்ணுற்று, அருளி, - உலவாது
அறிவுக்கு
அறிவு ஆகி, அவ்வுறிவுக்கு எட்டா
நெறியில்
செறிந்த நிலை நீங்கி, - பிறியாக்
கருணைத்
திருவுருவாய், காசினிக்கே தோன்றி
குருபரன்
என்று ஓர் திருப்பேர் கொண்டு" --- கந்தர் கலிவெண்பா.
இதன்
பொழிப்புரை
- கொடிய நரகபோகமான துன்பங்களையும்,
சொர்க்கம்
முதலிய உலகங்களில் அநுபவிக்கப்படும் எல்லாப் போக இன்பங்களையும் அநுபவிக்கச் செய்து, இவ்வகையில் ஆன்மாக்கள் அடையும்
மலபரிபாகத்தால் முத்தி அடைதற்கு ஏதுவான நல்ல புண்ணியம் சிறிது பொருந்திய அளவில், தம்தம் சமயமே சிறந்தது என, வாதம் புரிதற்கு ஏதுவாக இயற்றப் பெற்று
உள்ள பழமையான நூல்களை உடைய புறச்சமயங்கள் தோறும், அவ் அச்சமய நூல்களே வீட்டுநெறி கூறும்
உண்மை நூல் என்று அறிந்து, அவற்றில் மனம்
அழுந்துமாறு செய்து, அதன்பின், புறச் சமயங்களில் இருந்து அகச்சமயத்துள்
புகுத்தி, முற்பட்ட நூல்களாகிய வேத சிவாகமங்களில்
கூறியுள்ள விரதங்கள் முதலிய பலவகைப்பட்ட உண்மைத் தவத்தின் பயனாக மெய்ந்நெறியினை
உணர்த்தும் சிவாகமத்தில் கூறிய சரியை, கிரியை, யோகம் என்னும் மூன்றையும் ஒன்றன் பின்
ஒன்றாகச் சார்பு கொள்ளச் செய்து,
அவற்றின்
வாயிலாகத் திருவருள் மிக்குப் பெருகா நின்ற சிவசாலோகம், சிவசாமீபம், சிவசாரூபம் என்ற மூன்று பரமுத்திகளையும்
அநுபவிக்கச் செய்து, நான்கு வகைப்பட்ட
சத்திநிபாதங்களை அளித்தற்கு ஏதுவாகிய இருவினை ஒப்பு உண்டாகும் காலம் தோன்றிப்
பாசத்தைத் தருதற்கு மூலகாரணமான ஆணவமலம் ஒடுங்குதற்குரிய பக்குவகாலம் வரும் வரையில்
பலகாலமாக உயிர்கள் இறைவன் அருள் நோக்கி வருந்திக்கொண்டு இருத்தலை நோக்கி அருள்
செய்து, உயிர்களுடன் நீங்காது
இருந்து, அவற்றின் அறிவினுக்குத்
தானே அறிவு ஆக, அந்த ஆன்ம
அறிவினாலும் உணர முடியாத வழியில் எங்கும் நிறைந்த நிலையில் இருந்து கீழ் இறங்கி, தன்னை விட்டு
ஒருபோதும் நீங்காத அருளே திருமேனியாக மானிடச் சட்டை தாங்கி, குருநாதன் ஒரு திருப்
பெயர் பூண்டு, இம்மண்ணுலகத்தில்
தோன்றி"
பிணக்கு
இலாத பெருந்துறைப் பெருமான்
உன் நாமங்கள் பேசுவார்க்கு,
இணக்கு
இலாதது ஓர் இன்பமே வரும்
துன்பம் ஏது உடைத்து
எம்பிரான்
உணக்கு
இலாதது ஓர் வித்து மேல்விளை-
யாமல் என் வினை
ஒத்தபின்
கணக்கிலாத்
திருக்கோலம் நீ வந்து
காட்டினாய்
கழுக்குன்றிலே. --- திருவாசகம்.
இருவினையும்
ஒத்து வருதல் - இருவினை ஒப்பு உண்டாதல். நல்வினை தீவினை, அவற்றின் விளைவாகிய புண்ணிய
பாவங்களிலும், அவற்றின் பயனாகிய
இன்ப துன்பங்களிலும், ஒன்றில் விருப்பும், ஒன்றில் வெறுப்பும்
இன்றி இருத்தல்.
நல்வினையும்
தீவினையும் பொன் விலங்கும், இரும்பு விலங்கும்
போல. பிறவிக்கு வித்தாவன இவை. ஒருபோதும்
தீமையும், பயன் கருதிய
நன்மையும் செய்யலாகாது. தன் கடமை என்றே
நற்செயல்களைச் செய்யவேண்டும்.
நம்கடம்பனைப்
பெற்றவள் பங்கினன்
தென்கடம்பைத்
திருக்கரக் கோயிலான்
தன்கடன்
அடியேனையும் தாங்குதல்
என்கடன்
பணி செய்து கிடப்பதே --- அப்பர்.
ஆன்மாவின்
அறிவுக்கு அறிவாய் இருந்தும், அவ் ஆன்ம அறிவால் அறியப்படான்.
சிவபெருமானே உலகில் குருவடிவாக எழுந்தருளி வந்து பக்குவ ஆன்மாக்களுக்கு அருள்
புரிவர். "அருபரத்து ஒருவன் அவனியில் வந்து குருபரனாகி அருளிய பெருமை"
என்பது மணிவாசகம்.
முதல்
நாள் உறு பயனோ தான் ---
தனக்கு,
முருகப் பெருமான் குருவாக எழுந்தருளி வந்து அபதேசம் புரிந்தருளிய அருமையைதன, அருணகிரிநாதப் பெருமான் இங்கு விரித்து
அருளினார். இது தாம் முற்பிறவியில் செய்த தவத்தின் பயன் ஆகுமோ என்று
வியக்கின்றார்.
கருதும்
ஆறு இரு தோள் மயில் வேல் இவை கருத ஒணா வகை ---
சோமசுந்தரக்
கடவுள் தனது உருவை மறைத்து, பாண்டியனாக வந்து மீனாட்சி அம்மையைத் திருமடம்
புணர்ந்ததாக, திருவிளையாடல்
புராணமும் கல்லாடமும் கூறும்.
"சடைமறைத்து,
கதிர்மகுடம் தரித்து, நறுங்
கொன்றை அநம்தார் தணந்து, வேப்பந்
தொடைமுடித்து,
விடநாகக் கலன் அகற்றி,
மாணிக்கச் சுடர்ப்பூண் ஏந்தி,
விடைநிறுத்தி,
கயல் எடுத்து வழுதிமரு
மகனாகி, மீன நோக்கின்
மடவரலை
மணந்து, உலக முழுது ஆண்ட
சுந்தரனை வணக்கஞ் செய்வாம்". --- திருவிளையாடல் புராணம்.
"கடுக்கை மலர்மாற்றி,
வேப்பமலர் சூடி,
ஐவாய்க்
காப்புவிட்டு, அணிபூண் அணிந்து,
விரிசடை
மறைத்து, மணிமுடி கவித்து,
விடைக்கொடி
நிறுத்தி, கயற்கொடி எடுத்து, வழுதியாகி" --- கல்லாடம்.
அதுபோல, முருகப் பெருமான் தனது திருவுருவை
மாற்றி, வேலும் மயிலும் விட்டு, திருஞானசம்பந்தப் பெருமானாக அவதரித்துத்
திருவிளையாடல்கள் பல புரிந்தார்.
ஓர்
அரசாய் ---
காழி
வேந்தராக முருகப் பெருமான் அவதரித்தார்.
கவுணியோர்
குல வேதியனாய்
---
சீகாழி
என்னும் திருத்தலத்தில், கவுணியர் குலத்தில், சிவபாத இருதயருக்கும், பகவதி
அம்மையாருக்கும், திருமகனாராக, வேதியராக அவதிர்த்தார்.
உமை
கனபார களப பூண்முலை ஊறிய பால் உணு(ம்) மதலையாய் ---
உமையம்மையின்
திருமுலைப்பாலை உண்டவர்கள் இருவரே. ஒருவர்
இளைய பிள்ளையாராகிய திருமுருகன். ஞானாகரன், ஞானபண்டிதன் என்னும் திருப்பெயர் அமைந்தது.
மற்றொருவர்
ஆளுடைய பிள்ளையார். உமையம்மை அருளிய ஞானப் பாலை உண்டதனால், சிவஞானசம்பந்தர் ஆனார்.
எள்அத்
தனைவருந்து உறுபசிக்கும்
இரங்கி, பரந்து
சிறுபண்டி
எக்கிக் குழைந்து, மணித்துவர்வாய்
இதழைக்குவித்து,
விரித்து எழுந்து
துள்ளித்
துடித்து, புடைபெயர்ந்து,
தொட்டில் உதைத்து,
பெருவிரலைச்
சுவைத்து, கடைவாய் நீர்ஒழுக,
தோளின் மகரக்குழைதவழ,
மெள்ளத்
தவழ்ந்து, குறுமூரல்
விளைத்து, மடியின் மீதுஇருந்து,
விம்மிப் பொருமி முகம்பார்த்து,
வேண்டும் உமையாள்
களபமுலை
வள்ளத்து
அமுதுஉண்டு அகமகிழ்ந்த
மழலைச் சிறுவா!
வருகவே!
வளருங் களபக் குரும்பைமுலை
வள்ளி கணவா! வருகவே! --- திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்.
சீகாழியில்
வாழ்ந்திருந்த சிவபாத இருதயர் வழக்கம்போல் ஒருநாள் நீராடப் போனார். பிள்ளையார்
அழுதுகொண்டே அவரைப் பின்தொடர்ந்தார். சிவபாத இருதயர் திரும்பிப் பார்த்து,
முனிவார் போலப் பிள்ளையாரை விலக்கினார். பிள்ளையார் விடவில்லை, பின் தொடர்ந்தார்.
சிவபாத இருதயர் அவரை அழைத்துக் கொண்டு போய், பிரமதீர்த்தக் குளக்கரையை அடைந்தார்.
பிள்ளையாரைக் குளக்கரையில் வைத்து, தாம் மட்டும் நீரிலே மூழ்கி, அகமருடம்
செய்தார்.
கரையில்
இருந்த பிள்ளையார், தந்தையைக் காணாது, நொடிப் போதும் தரியாதவர் ஆனார். அச்
சமயத்தில், சிவபெருமானை வழிபட்ட முன்னுணர்ச்சி அவர்பால் மூண்டு எழுந்தது.
பிள்ளையார் அழத் தொடங்கினார். கண்மலர்களில் நீர் ததும்புகின்றது. கைம்மலர்கள்
கண்களைப் பிசைகின்றன. மணிவாய் துடிக்கின்றது. பிள்ளையார் அழுகின்றார். முன்னைத்
தொடர்பு உணர்ந்தோ, பிள்ளைமையாலோ அழுகின்றார். திருத்தோணிச் சிகரம் பார்த்து,
"அம்மே! அப்பா!" என்று அழுகின்றார்.
தடங்கருணைப்
பெருங்கடலாகிய சிவபெருமான், பிள்ளையாரின் அழுகையைத் தீர்க்கத் திருவுள்ளம் கொண்டு,
உமையம்மையாருடன் குளக்கரையை அடைந்தார். சிவபெருமான், உமையம்மையைத் திருநோக்கம்
செய்து, "உனது முலைகளில் பொழிகின்ற பாலைப் பொன் கிண்ணத்தில் கறந்து, இவனுக்கு
ஊட்டு" என்றார். உமையம்மையார் அப்படியே, திருமுலைப் பாலைப் பொன் கிண்ணத்தில்
கறந்து அருளி, எண்ணரிய சிவஞானத்தைக் குழைத்து, பிள்ளையாருக்கு ஊட்டினார்.
பிள்ளையாரின் அழுகை தீர்ந்தது. சிவஞானப் பாலை உண்டமையால், சிவஞானசம்பந்தர்
ஆயினார்.
"எண்ணரிய
சிவஞானத்து
இன் அமுதம் குழைத்து அருளி
உண்
அடிசில் என ஊட்ட,
உமையம்மை எதிர்நோக்கும்
கண்மலர்நீர்
துடைத்து அருளிக்
கையிற்பொற் கிண்ணம்அளித்து
அண்ணலை
அங்கு அழுகை தீர்த்து
அங்கணனார் அருள்புரிந்தார்".
"யாவருக்கும்
தந்தைதாய் எனும் இவர் இப்படி அளித்தார்.
ஆவதனால்
ஆளுடைய பிள்ளையாராய் அகில
தேவருக்கும்
முனிவருக்கும் தெரிவரிய பொருளாகும்
தாவில்தனிச்
சிவஞான சம்பந்தர் ஆயினார்".
"சிவன்
அடியே சிந்திக்கும் திருப்பெருகு
சிவஞானம்,
பவம்
அதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்,
உவமை
இலாக் கலைஞானம், உணர்வு அரிய
மெய்ஞ்ஞானம்,
தவ
முதல்வர் சம்பந்தர் தாம்உணர்ந்தார்
அந்நிலையில்". ---
பெரிய புராணம்.
பலவித
நல் கற்பு அடர்ந்த சுந்தரி,
பயில்தரு வெற்புத் தரும் செழுங்கொடி
பணைமுலை மெத்தப் பொதிந்து பண்பு உறு ......கின்றபாலை,
பலதிசை
மெச்சத் தெரிந்த செந்தமிழ்
பகர் என இச்சித்து உகந்து கொண்டு அருள்
பழநியில் வெற்பில் திகழ்ந்து நின்றருள்
......தம்பிரானே.--- திருப்புகழ்.
நுகர்
வித்தகம் ஆகும் என்று உமை
மொழியில்
பொழி பாலை உண்டிடு
நுவல்மெய்ப்பு உள பாலன் என்றிடும் ......இளையோனே! --- திருப்புகழ்.
மிகு
பாடலின் மீறிய கவிஞனாய் விளையாடு இடம் ---
உமையம்மை
அளித்த ஞானப்பாலை உண்டதுமே, எண்ணில்லாத ஞானத்தைப் பெற்ற திருஞானசம்பந்தர்,
"எச்சில் மயங்கிட உனக்குப் பாலைத் தந்தவர் யார்?" என்ற சினந்து
வினவியபோது, உச்சிக் கூப்பிய திருக்கையினராய், "தோடுடைய செவியன்"
இவன்தான் அவ்வாறு அருள் புரிந்து எனது உள்ளத்தைக் கவர்ந்தவன் என்று பாடி
அருளினார்.
திருக்கோலக்காவுக்கு
எழுந்தருளி இறைவரை வழிபட்டு, திருக்கையால் ஒத்து அறுத்து, "மடையில்
வாளை" என்னும் திருப்பதிகத்தை பாடி அருளினார். இறைவர் அருளால் பொன் தாளம்
பெற்றார்.
திருநனிபள்ளிக்கு
எழுந்தருளி, நிறையருளால் பாலை நெய்தல் ஆகுமாறு பாடி அருளினார்.
சீகாழியில்
இருக்கும் காலத்தில், தம்மைக் காண வந்த,
திருநீலகண்ட யாழ்ப்பாணரையும், அவரது துணைவியார் மதங்கசூளாமணியாரையும்
திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்று தொழுதார். தாழ்த்தப்பட்ட வகுப்பினரைத்
திருக்கோயில் வழிபாட்டில் ஈடுபடச் செய்த முதல் அருளாளர் இவரே. அது மட்டுமல்லாமல்,
பல்லாயிரம் அடியார்கள் சூழ்ந்து வர, திருத்தல யாத்திரையை
மேற்கொண்ட பெருமானார், திருநீலகண்ட யாழ்ப்பாணரையும், அவரது துணைவியாரையும் உடன் வர
இசைந்தார்.
திருநெல்வாயில் அரத்துறையில் ஈசர் அருளால், முத்துக் குடை,
முத்துச்சின்னம், முத்துச் சிவிகை பெற்றார்.
சீகாழியில்
இருந்த காலத்தில், தமக்கு உபநயனச் சடங்கை ஆற்றி, நான்கு மறையும் தந்த வேதியர்கள்
வியக்க, எண்ணில்லாத வேதங்களை
ஓதி அருளினார்.
திருப்பாச்சிலாச்சிராமத்தில்,
கொல்லி மழவனின் மகளுக்கு உண்டாயிருந்த முயலகன் என்னும் கொடிய நோயைத் திருப்பதிகம்
பாடித் தீர்த்து அருளினார்.
கொடிமாடச்
செங்குன்றூரில் இருந்த காலத்தில், குளர் நோயைத் தீர்த்து அருளினார்.
திருப்பட்டீச்சரம்
வந்தபோது, வெயில் வெப்பம் தணிப்பதற்கு, இறையருளால் பூதங்கள் முத்துப் பந்தரை
இட்டன.
திருவாவடுதுறையில்,
இறையவர் அருளால், ஆயிரம் பொற்காசுகளைப் பெற்றுத் தந்தையார் வேள்வி இயற்ற உதவினார்.
திருத்தருமபுரத்தில்,
ஏழிசையில் அடங்காத திருப்பதிகம், "மாதர்மடப்பிடி" பாடி அருளினார்.
திருமருகலில்,
பாம்பு தீண்டி இறந்தவனை எழுப்பி அருளினார்.
திருவீழிமிழலையில்
உண்டான பஞ்சத்தை, இறைவர் அருளால், திருநாவுக்கரசு நாயனாருடன், நாளும் ஒரு பொற்காசு
பெற்று, அடியார்களுக்கு அன்னம் பாலிப்பு செய்தார்.
திருமயிலையில்
எலும்பைப் பெண்ணாக்கினார்.
நதிவெள்ளத்தில்
ஓடத்தைச் செலுத்தினார்.
ஆண்பனையைப்
பெண்பனை ஆக்கினார்.
இப்படிப்
பலப்பல திருவிளையாடல்களை இறையருளால் புரிந்தார் திருஞானசம்பந்தப் பெருமான்.
வாதிகள்
கழுவேற, குருதி ஆறு எழ வீதி
எலாம் மலர் நிறைவதாய் விட, நீறு இடவே செய்து, கொடிய மாறன் மெய் கூன் நிமிரா, முனை
குலையா, வான் குடி புகீர் என, மாமதுரா புரி இயலை ஆரண ஊர் என நேர் செய்து ---
தொன்று
தொட்டு வைதிக சைவ சமயமே எங்கும் நிறைந்து விளங்கும் பாண்டி நாட்டிலே, கொல்லாமை மறைந்து உறையும் சமண சமயம்
பரவி, அரசனும் அம் மாய
வலைப்பட்டு சைவசமய சீலங்கள் மாறின. உலகெலாம் செய்த பெருந்தவத்தின் வடிவால், சோழ ராஜனது திருமகளாய், பாண்டிமாதேவியாய் விளங்கும்
மங்கையர்க்கரசியாரும், அவருக்கு சீதனமாக சோழமன்னனால்
தரப்பட்டு வந்து பாண்டிய அமைச்சராயிருந்து, சைவநிலைத் துணையாய், அரசியார்க்கு உடனுதவி செய்து வருகின்ற
குலைச்சிறை நாயனாரும் மிகவும் வருந்தி, ஆலவாய்
அண்ணலை நோக்கி, “சமண இருள் நீங்கி சைவ
ஒளி ஓங்கும் நாள் என்றோ” என்று ஏங்கி நின்றார்கள்.
அப்போது
திருஞானசம்பந்தரது அற்புத மகிமையையும், அவர்
திருமறைக்காட்டில் எழுந்தருளி இருப்பதையும் உணர்ந்து, முறைப்படி அவரை அழைத்து வருமாறு சில
தகுந்த ஏவலரை அனுப்பினார்கள்ன. அவர்கள்
வேதாரணியத்திற்கு வந்து பாலறாவாயரைப் பணிந்து, பாண்டிய நாட்டில் சைவநிலை கரந்து, சமண நிலை பரந்திருப்பதை விண்ணப்பித்து, அதனை ஒழுங்குபடுத்த அம்மையாரும்
அமைச்சரும் அழைத்து வருமாறு அனுப்பினார்கள் என்று தெரிவித்து நின்றார்கள்.
திருஞானசம்பந்தர்
மறைக்கானட்டு மணிகண்டரை வணங்கி,
அப்பரிடம்
விடை கேட்டனர்: திருநாவுக்கரசர் சமணர்களது கொடுமையை யுன்னி ”பிள்ளாய்! வஞ்சனையில்
மிக்க சமணர்களுள்ள இடத்திற்கு நீர் போவது தகுதியன்று; கோளும் நாளும் வலியில்லை” என்றனர்.
“வேயுறு தோளிபங்கன் விடம்
உண்ட கண்டன்
மிகநல்ல வீணைதடவி
மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்துஎன்
உளமே புகுந்த அதனால்,
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பு இரண்டும் உடனே,
ஆசு அறும் நல்லநல்ல, அவைநல்ல, நல்ல
அடியாரவர்க்கு மிகவே”
என்ற
திருப்பதிகத்தைத் திருஞானசம்பந்தர் திருவாய் மலர்ந்து, அப்பரை உடன்படச் செய்து விடைபெற்று, முத்துச் சிவிகை ஊர்ந்து, பல்லாயிரம் அடியார்கள் “அரகர” என்று
கடல்போல் முழங்க, பாண்டி நாட்டிற்கு
எழுந்தருளி வருவாராயினார்.
எண்ணாயிரம்
சமண குருமார்களுக்கும் அவரைச் சார்ந்த பல்லாயிரம் சமணர்களுக்கும் பற்பல துற்சகுனம்
ஏற்பட்டது. எல்லாரும் மதுரையில் கூடி நின்றார்கள். புகலி வேந்தர் வரவை உணர்ந்த
மங்கையர்க்கரசியார் வரவேற்குமாறு அமைச்சர் பெருமானை அனுப்பித் தாம் திருவாலவாய்த்
திருக்கோயிலில் எதிர் பார்த்து நின்றனர்.
“சீகாழிச் செம்மல் பல
விருதுகளுடன் வருவதை நோக்கி, குலச்சிறையார்
ஆனந்தக் கூத்தாடி, கண்ணீர் ததும்பி கைகூப்பி, மண் மிசை வீழ்ந்து வணங்கிய வண்ணமாய்க்
கிடந்தார். இதனை அறிந்த கவுணியர் கோன் சிவிகை விட்டிழிந்து, அவரை யெடுத்து “செம்பியர் பெருமான் குலமகளார்க்கும்
திருந்திய சிந்தையீர்! உமக்கும் நம் பெருமான்றன் திருவருள் பெருகு நன்மைதான்
வாலிதே” என்னலும், குலச்சிறையார்
கைகூப்பி,
“சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும்
இனி எதிர் காலத்தின் சிறப்பும்,
இன்றெழுந்தருளப்
பெற்ற பேறிதனால்
எற்றைக்கும் திருவருள் உடையேம்;
நன்றியில்
நெறியில் அழுந்திய நாடும்
நற்றமிழ் வேந்தனும் உய்ந்து,
வென்றி
கொள் திருநீற்று ஒளியினில் விளங்கும்
மேன்மையும் பெற்றனம் என்பார்"
மதுரையும்
ஆலவாயான் ஆலயமும் தெரிய, மங்கையர்க்கரசியாரையும், குலச்சிறையாரையும் சிறப்பித்து திருசானசம்பந்தர்
பதிகம் பாடி, கோயிலுட் புகுதலும், அங்கு எதிர்பார்த்திருந்த அம்மையார்
ஓடிவந்து அடிமிசை வீழ்ந்து வணங்க,
பிள்ளையார்
அவரை எடுத்து அருள் புரிந்து இன்னுரை கூறி, ஆலவாயானைத் தெரிசித்து, தமக்கு விடுத்த திருமடத்தில்
தங்கியருளினார்.
சமணர்கள்
அது கண்டு வருந்தி, “கண் முட்டு” “கேட்டு
முட்டு” என்று பாண்டியனிடம் இதனைக் கூறி அவனநுமதி பெற்று திருமடத்தில் தீப்பிடிக்க
அபிசார மந்திரஞ் செபித்தனர். அம்மந்திர சக்தி அடியார் திருமடத்திற்கு
தீங்கிழைக்கும் ஆற்றல் அற்றது. சமணர்கள் அது கண்டு கவன்று, தாமே இரவிற் போய் திருமடத்தில் தீ
வைத்தனர். அதனை யடியார்கள் அவித்து,
ஆளுடைய
பிள்ளையாரிடம் தெரிவிக்க, சம்பந்தர் இது
அரசனாணையால் வந்ததென்றுணர்ந்து,
“செய்ய னேதிரு வாலவாய் மேவிய
ஐயனே அஞ்ச லென்றருள் செய்யெனைப்
பொய்யராம் அம ணர்கொளு வுஞ்சுடர்
பையவே சென்று
பாண்டியற்கு ஆகவே”
என்று
பாடியருளினார்.
“பையவே”
என்றதனால் அந்நெருப்பு உயிர்க்கு மிகவும் கொடுமை செய்யாது சுர நோயாகி பாண்டியனைப்
பிடித்து வருத்தியது. அந்நோயை நீக்க ஆயிரக்கணக்கான சமணர்கள் வந்து மந்திரஞ் சொல்லி, மயிற் பீலியால் பாண்டியன் உடம்பைத்
தடவினர். அம்மயிற் பீலிகளெல்லாம் வெந்து நீறாயின. அண்மி வந்த அமணர்களுடைய உடலும்
உயிரும் கருகின. அரசன் அவரைக் கடிந்து விரட்டினான்.
மங்கையர்க்கரசியார்
மகிணனை வணங்கி, திருஞானசம்பந்தர்
திருமடத்திற்குச் செய்த தீங்கினால் தான் இச் சுரநோய் பிடித்ததென்றும், அவர் வந்தாலொழிய இது தீராதென்றும் கூற; அரசன் “இந்நோய் தீர்த்தார் பக்ஷத்தில் நான்
சேருவேன்; அவரை அழைமின்”
என்றான். அது கேட்டு அம்மையாரும் அமைச்சரும் திருமடத்திற்கு வந்து,
“ஞானத்தின் திருவுருவை
நான்மறையின் தனித்துணையை
வானத்தின்
மிசையின்றி மண்ணில் வளர் மதிக்கொழுந்தைத்
தேனக்க
மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும்
கானத்தி
னெழுபிறப்பைக் கண்களிக்கக் கண்டார்கள்.” --- பெரியபுராணம்.
கண்டு
வணங்கி நிகழ்ந்தது கூறி, அரசனையும் தம்மையும்
உய்விக்க எழுந்தருளுமாறு விண்ணப்பஞ் செய்தனர். சம்பந்தர் அபயந்தந்து, அடியார் குழத்துடன் புறப்பட்டு
திருக்கோயில் சென்று, தென்னவனாயுல காண்ட
கன்னிமதிச் சடையானைப் பணிந்து,
“ஞாலம்
நின்புகழே மிகவேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே ” என்று பாடி விடைபெற்று, பாண்டியர் கோன் மாளிகை புக்கார்.
ஆலமே
அமுதமாக உண்டு, வானவர்க்கு அளித்துக்
காலனை
மார்க்கண்டர்க்காக் காய்ந்தனை, அடியேற்கு இன்று
ஞாலம்நின்
புகழே ஆக வேண்டும், நான் மறைகள் ஏத்தும்
சீலமே!
ஆல வாயில் சிவபெருமானே! என்றார். ---
பெரியபுராணம்.
பாண்டியன்
சுவாமிகளைக் கண்டு கைகூப்பி, தலைப்பக்கத்தில் பொன்னால்
ஆன இருக்கை தரச் செய்து இருக்கச் செய்வித்தனன். சுவாமிகள் இனிது வீற்றிருக்க, சமணர் பலரும் அது கண்டு பொறாராய்
சீறினர். அம்மையார் அது கண்டு அஞ்ச,
கவுணியர்
வேந்து,
“மானின் நேர்
விழிமாதராய்! வழுதிக்கு மாபெருந் தேவி! கேள்
பானல்வாய்
ஒருபாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல்,
ஆனைமாமலை
ஆதியாய இடங்களிற் பல அல்லல்சேர்
ஈனர்கட்கு
எளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே.”
என்று
பாடித் தேற்றினார்.
அரசன் சமணரையும் திருஞானசம்பந்தரையும்
சுரநோயைத் தீர்ப்பதன் மூலம் தமது சமயத்தின் உண்மையைக் காட்டலாமென; அமணர் இடப்புறநோயை நீக்குவோம் என்று
மந்திர உச்சாடனத்துடன் மயிற்பீலியால் தடவ, நோய் அதிகப்பட்டது. அரசன் வருந்தி,
புகலி வேந்தரை நோக்க, சுவாமிகள், "மந்திரமாவது நீறு" என்ற
திருப்பதிகம் பாடி, வலப்பக்கத்தில்
தடவியருள, நோய் தீர்ந்தது. இடப்பக்கம் அதிகரித்தது. இறைவன் சமணரைக் கடிந்து
வெருட்டிவிட்டு, பாலறாவாயரைப் பணிய, பிள்ளையார் மீண்டுத் திருநீறு பூச, நோய் முற்றும் நீங்கியது. அரசன் பன்முறை
பணிந்து ஆனந்தமுற்றான்.
பின்னர், சமய உண்மையைக் கூறி வாதிக்கும் ஆற்றலற்ற
சமணர்கள் அனல் வாதம் தொடங்கினர். பெரு நெருப்பு மூட்டினர். திருஞானசம்பந்தர் தாம்
பாடிய தேவராத் திருமுறையில் கயிறு சாத்தி ன"போகமார்த்த பூண்முலையாள்" என்ற
திருப்பதிக ஏட்டை எடுத்து, “தளரிள வளரொளி” என்ற
பதிகம் பாடி நெருப்பிலிட்டனர். அது வேகாது விளங்கியது. சமணர்கள் தங்கள் ஏடுகளை இட, அவை சாம்பலாயின. பின்னர் புனல் வாதம்
தொடங்கினர். தோற்றவர் கழுவில் ஏறுவதென்று துணிந்தனர். வையை யாற்றில் சமணர்கள் தமது
ஏடுகளை விட, அது நீருடன்
கீழ்நோக்கிச் சென்றது, “வேந்தனும் ஓங்குக”
என்றதனால் பாண்டியன் கூன் நிமிர்ந்து, நின்ற
சீர் நெடுமாறனாயினார். அவ்வேடு நிற்க “வன்னியும் மத்தமும்” என்ற திருப்பதிகம்
பாடினார். குலச்சிறையார் ஓடி அவ்வேட்டை எடுத்த இடம் திருவேடகம் என்பர்.
மும்முறையுங் தோற்ற சமணர் கழுவேறி மாய்ந்தனர். பாண்டியன் சைவசீலம் மேவி
வாழ்ந்தனன்.
மதுரையின்
மீதுஆல வாயினில்
எதிர்
அமணார் ஓர் எணாயிரர்
மறிகழு மீது ஏற, நீறு ...... பரந்து உலாவச்
செழியனும்
ஆள்ஆக வாதுசெய்
கவிமத
சீகாழி மாமுனி!
சிவசிவ மாதேவ கா என ...... வந்துபாடும்
திருவுடையாய்!
தீது இலாதவர்,
உமையொரு
பால்ஆன மேனியர்,
சிரகிரி வாழ்வான தேவர்கள் ...... தம்பிரானே. --- (அழுதுஅழுது)
திருப்புகழ்.
பால்
அறாத் திரு வாயால் ஓதிய
ஏடு நீர்க்கு எதிர் போயே, வாதுசெய்,
பாடல் தோற்று, இரு நாலாம் ஆயிர ...... சமண்மூடர்
பாரின்
மேல் கழு மீதே ஏறிட,
நீறு இடாத் தமிழ் நாடு ஈடேறிட,
பாது காத்து அருளாலே கூன்நிமி் ......இறையோனும்
ஞாலம்
ஏத்தியது ஓர் மா தேவியும்,
ஆலவாய்ப் பதி வாழ்வு ஆமாறு எணும்
ஞான பாக்கிய பாலா! வேலவ! ...... மயில்வீரா! --- (காலன்வேல்)
திருப்புகழ்.
பறித்த
தலைத் திருட்டு அமணக்
குருக்கள் அசட்டு உருக்களிடைப்
பழுக்கள் உக, கழுக்கள் புக, ...... திருநீறு
பரப்பிய
தத் திருப்பதி புக்கு
கனல் புனலில் கனத்த சொலைப்
பதித்து எழுதிப் புக அட்ட திறல் ...... கவிராசா! --- (குறித்தமணி)
திருப்புகழ்.
திகுதிகு
என மண்ட விட்ட தீ ஒரு
செழியன் உடல் சென்று பற்றி, ஆருகர்
திகையின் அமண் வந்து விட்ட போதினும் ......அமையாது,
சிறிய
கர பங்கயத்து நீறு, ஒரு
தினை அளவு சென்று பட்ட போதினில்
தெளிய, இனி வென்றி விட்ட
மோழைகள் ......கழு ஏற,
மகிதலம்
அணைந்த அத்த! யோனியை
வரைவு அற மணந்து நித்தம் நீடு அருள்
வகைதனை அகன்று இருக்கு மூடனை, ...... மலரூபம்
வரவர
மனம் திகைத்த பாவியை,
வழி அடிமை கொண்டு, மிக்க மாதவர்
வளர்பழநி வந்த கொற்ற வேலவ! ......
பெருமாளே. --- (நிகமமெனில்)
திருப்புகழ்.
மதுர
வாணி உற்ற கழலோனே!
வழுதி
கூன் நிமிர்த்த பெருமாளே! --- (எதிரிலாத) திருப்புகழ்.
கருது சட்சமயிகட்கு அமைவுற, கிறி உடைப்
பறிதலைச் சமணரை, குலமுதல் பொடிபடக்
கலகம் இட்டு, உடல் உயிர்க் கழுவின் உச்சியினில் வைத் ...... திடுவோனே!
--- (ஒருவரைச் சயன) திருப்புகழ்.
அழிந்து புவனம் ஒழிந்திடினும்
அழியாத் தோணி புரத்தின்மறை
யவர்கள் குலத்தின் உதித்து, அரனோடு
அம்மை தோன்றி அளித்த வள்ளச்
செழுந்தண் முலைப்பால் குடித்து, முத்தின்
சிவிகை ஏறி மதுரையில் போய்,
செழியன் பிணியும், சமண் பகையும்,
தேவி துயரும் தீர்த்து அருளி,
வழிந்து நறுந்தேன் உகுவனபோல்
மதுரம் கனிந்து கடைதுடிக்க
வடித்துத் தெளிந்த செந்தமிழ்த் தே-
வாரப் பாடல் சிவன் கேட்க
மொழிந்து சிவந்த கனிவாய்ச்சண்
முகனே! முத்தம் தருகவே.
முத்துக் குமரா! திருமலையின்
முருகா! முத்தம் தருகவே. --- திருமலை
முருகன் பிள்ளைத்தமிழ்.
குடசை
மாநகர் வாழ்வுற மேவிய பெருமாளே ---
திருக்
குடவாயில்,சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம். மக்கள்
வழக்கில் "குடவாசல்" என்று அழைக்கப்படுகின்றது.
கும்பகோணம்
- திருவாரூர் சாலை வழியில் குடவாசல் இருக்கிறது. திருவாரூரிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் இத்திருத்தலம் உள்ளது.
கொரடாச்சேரி, நீடாமங்கலம், வலங்கைமான் மற்றும் நன்னிலம் ஆகிய
இடங்களிலிருந்தும் குடவாசல் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
திருப்பெருவேளூர், திருதலையாலங்காடு என்ற பாடல் பெற்ற
திருத்தலங்கள் அருகருகில் உள்ளன.
இறைவர்
: கோணேசுவரர், சூரியேசுவரர், ப்ருகநாதர்
இறைவியார்
: பெரிய நாயகி
தல
மரம் : வாழை
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம்
கோச்செங்கட்
சோழ நாயனார் அமைத்த மாடக் கோயில்களுள் இதுவும் ஒன்றாகும்.
காசிப
முனிவரின் இரண்டு மனைவிகளில் ஒருத்தியான விநதை இளையவள். அவளின் மகன் கருடன்.
மகாவிஷ்ணுவிற்கு வாகனமாகவும், பரமபக்தனாகவும்
இருந்து "பெரிய திருவடி" என்று புகழ் பெற்றவர். ஒரு சமயம் கருடனும், அவன் தாய் விநதையும் மூத்த மனைவியின்
அடிமையாக வேண்டிய நிலை உண்டானது. தாயின் அடிமைத்தனத்தை போக்குவதற்காக கருடன், பெரியன்னை கேட்டபடி தேவலோகத்தில்
இருந்து அமிர்தத்தை எடுத்து வந்தான். பூலோகத்தில் குடவாயிலுக்கு அருகே பறந்து
வரும்போது ஒரு அசுரன் எதிர்பட்டு அமிர்த குடத்தை பறிக்க முற்பட்டான். கருடன்
அருகிலிருந்த ஒரு பெரிய புற்றின் மீது தர்ப்பைகளைப் பரப்பி, அதன் மீது குடத்தை வைத்துவிட்டு, அசுரனுடன் மூர்க்கமாகப் போர் புரிந்து
அவனை வீழ்த்தினார். இதற்குள் அந்த புற்றுக்குள்ளே இருந்த இறைவன் கோணேசப் பெருமான்
அந்த அமிர்த குடத்தை மெள்ளத் தம்மிடம் இழுத்துக் கொண்டார். அசுரனை வீழ்த்திவிட்டு
வந்த கருடன் அமிர்த குடத்தைக் காணாமல் அந்த புற்றைத் தன் மூக்கால் கிளறியபோது
சுவாமி புற்றிலிருந்து வெளிவந்து கருடனுக்கு தரிசனம் தந்தார். கோணேசப் பெருமான்
அருளாணைப்படி கருடன் இத்திருத்தலத்தில் இறைவனுக்கு ஆலயம் ஒன்றை எழுப்பினார்.
கருடாழ்வார் கொண்டு வந்த அமிர்தத்தால் அபிஷேகம் செய்யப்படவராதலால் கோணேசர்
அமிர்தலிங்கமானார். அமிர்த துளிகள் சிந்தியதால் ஆலயத்திற்கு எதிரிலுள்ள தீர்த்தம்
அமிர்த தீர்த்தம் ஆயிற்று.
திருணபிந்து
முனிவர் பூஜிக்க இறைவன் திருக்குடத்திலிருந்து வெளிப்பட்டு முனிவர் நோயினை
நீக்கயருளிய தலம் இதுவாகும். அனுமனும் இத்தல இறைவனை வழிபட்டிருக்கிறார். அவர்
திருவுருவங்கள் இங்குள்ளன.
பிரளய
காலத்தில் உயிர்கள் அனைத்தையும் ஓர் அமுதக் குடத்தில் இட்டு, அதன் வாய்ப்பகுதியில் சிவலிங்கமாக
இருந்து சிவபெருமான் காத்தார்; குடத்திலிட்டுக்
காத்த உயிர்களை, மீண்டும் படைப்புக்
காலத்தில் வேடன் வடிவெடுத்து வந்த சிவபிரான் வில்லால் அக்குடத்தை உடைத்தார். குடம்
மூன்றாக உடைந்து, முதற்பாகமாகிய அடிப்பாகம்
விழுந்த இடத்தில் இறைவன் திருமேனி கொண்டார். அதுவே குடமூக்கு எனப்படும் கும்பகோணம்
(ஆதி கும்பேசம்) ஆகும். அடுத்து நடுப்பாகம் விழுந்த இடமே கலையநல்லூர் ஆகும்.
குடத்தின் முகப்பு பாகம் விழுந்த இடமே குடவாயில் என்னும் குடவாசல் எனப்படுகின்றது.
இத்திருத்தலம்
சங்ககாலச் சிறப்பும் பழைமையும் வாய்ந்தது. சோழன் கோச்செங்கணான், சேரமான் கணைக்கால் இரும் பொறையை வென்று, அவனை இக்குடவாயிற் சிறைக் கோட்டத்தே
சிறை வைத்தான் என்னும் செய்தியை புறநானூறு தெரிவிக்கிறது. இதிலிருந்து அன்றைய
குடவாயில், சோழப்பேரரசின்
சிறைக்கோட்டமாக இருந்தது என்று தெரிய வருகிறது. குடவாயில் கீரத்தனார், குடவாயில் நல்லாதனார் போன்ற புலவர்கள்
பாடியுள்ள பாடல்கள் அகநானூறு முதலிய சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன.
நடராச
சபை அழகானது. நடராசப் பெருமானின் அவிர்சடை அழகு நம் மனத்தை விட்டகலாது. நடராசப்
பெருமானின் திருமேனியின் பீடத்தில் 10 -11
ஆம் நூற்றாண்டு காலத்திய தமிழ் எழுத்துக்கள் வடிவில் "களக்காடுடையார் மாலை
தாழ்மார்பன்" என எழுதப்பட்டுள்ளது. இத்தொடரில் எழுத்துக்களுடன் மத்தியில்
இருகரங்கள் கூப்பிய நிலையில் அடியவர் ஒருவரின் உருவமும் உள்ளது. இராஜராஜ சோழனின்
காலத்துக் கலைப்பாணியை உடைய இத்திருமேனி இத்தலத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள களக்காட்டில்
வாழ்ந்த 'மாலைதாழ் மார்பன்' என்பவரால் வடித்து வழங்கப்பட்டது எனக்
கூறப்படுகிறது.
சந்நிதிக்கு
வெளியில் பக்கவாட்டிலுள்ள காசிவிசுவநாதர் சந்நிதியில் சிவலிங்கத் திருமேனி செம்மண்
நிறத்தில் காணப்படுகிறது. இருபத்து நான்கு படிகளைக் கடந்து மேலே சென்றால் மூலவர்
கோணேசுவரர் மேற்கு நோக்கிய சந்நிதியில் பெரிய சிவலிங்கத் திருமேனி உருவில்
எழுந்தருளியுள்ளார். இறைவன் திருமேனியில் கருடன் தீண்டி வழிபட்ட சுவடுகள் உள்ளன.
கருத்துரை
முருகா! குருவாய் வருவாய்
அருள்வாய்.
https://www.youtube.com/watch?v=WqoMGvi-tzs&t=173s
ReplyDelete