அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
புலவரை ரட்சிக்கும்
(சிக்கல்)
முருகா!
தேவரீரது திருவடிகளே எனக்குப்
புகலிடம்.
உமது அருட்பார்வையால்
பேரின்ப வாழ்வைத் தந்து அருள்.
தனதன
தத்தத் தந்தான தானன
தனதன தத்தத் தந்தான தானன
தனதன தத்தத் தந்தான தானன ...... தனதானா
புலவரை
ரட்சிக் குந்தாரு வேமது
ரிதகுண வெற்பொக் கும்பூவை மார்முலை
பொருபுய திக்கெட் டும்போயு லாவிய ......
புகழாளா
பொருவரு
நட்புப் பண்பான வாய்மையி
லுலகிலு னக்கொப் புண்டோவெ னாநல
பொருள்கள் நிரைத்துச் செம்பாக மாகிய ......
கவிபாடி
விலையில்த
மிழ்ச்சொற் குன்போலு தாரிகள்
எவரென மெத்தக் கொண்டாடி வாழ்வெனும்
வெறிகொளு லுத்தர்க் கென்பாடு கூறிடு ......
மிடிதீர
மிகவரு
மைப்பட் டுன்பாத தாமரை
சரணமெ னப்பற் றும்பேதை யேன்மிசை
விழியருள் வைத்துக் குன்றாத வாழ்வையு ......மருள்வாயே
இலகிய
வெட்சிச் செந்தாம மார்புய
சிலைநுதல் மைக்கட் சிந்தூர வாணுதல்
இமயம கட்குச் சந்தான மாகிய ...... முருகோனே
இளையகொ
டிச்சிக் கும்பாக சாதன
னுதவுமொ ருத்திக் குஞ்சீல நாயக
எழிலியெ ழிற்பற் றுங்காய மாயவன் ......
மருகோனே
அலர்தரு
புட்பத் துண்டாகும் வாசனை
திசைதொறு முப்பத் தெண்காதம் வீசிய
அணிபொழி லுக்குச் சஞ்சார மாமளி ...... யிசையாலே
அழகிய
சிக்கற் சிங்கார வேலவ
சமரிடை மெத்தப் பொங்கார மாய்வரும்
அசுரரை வெட்டிச் சங்கார மாடிய ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
புலவரை
ரட்சிக்கும் தாருவே, மது-
ரிதகுண வெற்பு ஒக்கும் பூவைமார் முலை
பொரு
புய, திக்கு எட்டும் போய்
உலாவிய ...... புகழாளா,
பொருஅரு
நட்புப் பண்பான வாய்மையில்,
உலகில் உனக்கு ஒப்பு உண்டோ எனா, நல
பொருள்கள் நிரைத்துச் செம்பாகம் ஆகிய
...... கவிபாடி,
விலைஇல்
தமிழ்ச் சொற்கு உன்போல் உதாரிகள்
எவர் என, மெத்தக் கொண்டாடி, வாழ்வு எனும்
வெறிகொள் உலுத்தர்க்கு, என்பாடு கூறிடு ...... மிடிதீர,
மிக
அருமைப்பட்டு, உன்பாத தாமரை
சரணம் எனப் பற்றும் பேதையேன் மிசை,
விழி அருள் வைத்து, குன்றாத வாழ்வையும்...அருள்வாயே.
இலகிய
வெட்சிச் செந்தாமம் ஆர்புய!
சிலைநுதல், மைக்கண், சிந்தூர வாள்நுதல்
இமய மகட்குச்
சந்தானம் ஆகிய ...... முருகோனே!
இளைய
கொடிச்சிக்கும், பாக சாதனன்
உதவும் ஒருத்திக்கும் சீல நாயக!
எழிலி எழில் பற்றும் காய மாயவன் ......
மருகோனே!
அலர்தரு
புட்பத்து உண்டாகும் வாசனை
திசைதொறும் முப்பத்து எண்காதம் வீசிய
அணிபொழிலுக்குச் சஞ்சாரமாம் அளி ...... இசையாலே
அழகிய
சிக்கல் சிங்கார வேலவ!
சமர்இடை மெத்தப் பொங்காரமாய் வரும்
அசுரரை வெட்டிச் சங்காரம் ஆடிய ......
பெருமாளே.
பதவுரை
இலகிய வெட்சிச்
செந்தாமம் ஆர் புய --- விளங்கும் வெட்சிப் பூக்களால் ஆன சிறந்த மாலை நிறைந்த திருத்தோள்களை
கொண்டவரே!
சிலை நுதல் --- வில்லைப் போன்ற புருவத்தையும்,
மைக் கண் --- மை தீட்டிய கருமையான கண்களையும்,
சிந்தூர வாள் நுதல் --- குங்குமம்
அணிந்த ஒளிவீசும் நெற்றியையும் உடைய
இமய மகட்கு --- இமவான் மகளாகிய பார்வதி தேவியார்க்கு
சந்தானம் ஆகிய முருகோனே --- திருமகனாக
வந்து அவதரித்த முருகப் பெருமானே!
இளைய கொடிச்சிக்கும் --- இளையவளாகிய
வள்ளிநாயகிக்கும்,
பாகசாதனன் உதவும் ஒருத்திக்கும் --- பாகசாதனன்
எனப்படும் இந்திரன் அளித்த தேவயானை அம்மைக்கும்
சீல நாயக --- வாய்த்த சிறந்த நாயகரே!
எழிலி எழில் பற்றும்
காய மாயவன் மருகோனே --- மேகம் தனது அழகைப் பற்றிக் கொண்ட திருமேனியை உடைய
திருமாலின் திருமருகரே!
அலர் தரு புட்பத்து
உண்டாகும் வாசனை --- மலர்கின்ற மலர்களிலிருந்து உண்டாகும் நறுமணம்
திசைதொறும் முப்பத்து எண்காதம் வீசிய
--- எல்லாத் திசைகளிலும் முப்பத்தெட்டு காதம் வரை வீசுகின்ற,
அணி பொழிலுக்குச்
சஞ்சாரமாம்
--- அழகிய சோலைகளில் சஞ்சரிக்கின்ற
அளி இசையாலே அழகிய --- வண்டுகளின்
ரீங்கார இசையினால் பொலிவுபெற்று விளங்கும்
சிக்கல் சிங்கார வேலவ
---
சிக்கல் என்ற திருத்தலத்தில் வீற்றிருக்கும் சிங்கார வேலவரே!
சமர் இடை மெத்தப்
பொங்காரமாய் வரும் அசுரரை வெட்டி --- போரில் மிகவும் சினத்தோடு வந்த
அசுரர்களை வெட்டி,
சங்காரம் ஆடிய
பெருமாளே
--- சங்கரித்த பெருமையில் மிக்கவரே!
புலவரை ரட்சிக்கும்
தாருவே
--- புலவர்களை ஆதரித்துக் காப்பாற்றும் கற்பகமரம் போன்றவனே
மதுரித குண, வெற்பு ஒக்கும்
பூவைமார் முலை பொருபுய --- இனிமையான, மலை போன்ற முலைகளை உடைய பெண்களைத் தழுவும் தோள்களை உடையவனே,
திக்கு எட்டும் போய்
உலாவிய புகழாளா --- எட்டுத் திசைகளிலும் விளங்குகின்ற புகழை உடையவனே,
பொரு அரு நட்புப்
பண்பான வாய்மையில் உலகில் உனக்கு ஒப்பு உண்டோ --- ஒப்புக் கூற
முடியாத உண்மையான நட்புத் தன்மையில் உன்னை ஒப்பவர் உண்டோ
எனா --- என்றெல்லாம்
ந(ல்)ல பொருள்கள் நிரைத்து --- நல்ல
பொருளமைந்த சொற்களை நிரையாக வைத்து,
செம்பாகம் ஆகிய கவிபாடி --- செம்மையான
கவிகளைப் புனைந்து பாடி,
விலை இல் தமிழ்ச் சொற்கு --- விலை மதிக்க
முடியாத தமிழை (ஆதரிப்பதற்கு),
உன்போல் உதாரிகள் எவர் என ---
உன்னைப் போல் சிறந்த கொடையாளிகள் யார் உள்ளார்கள் என்று
மெத்தக் கொண்டாடி --- மெத்தப் புகழ்ந்து
பாடினாலும்,
வாழ்வு எனும்
வெறிகொள் உலுத்தர்க்கு --- தமது வாழ்வே பெரிது என்ற பித்துப்
பிடித்த உலோபிகள் இருக்கும் இடம் சென்று,
என் பாடு கூறிடும் மிடி தீர --- எனது குறையைச் சொல்லுகின்ற வறுமை என்னும்
அறிவின்மை தொலைய,
மிக அருமைப்பட்டு --- மிகவும் அரிதில்
முயன்று
உன்பாத தாமரை சரணம் எனப் பற்றும் --- தேவரீரது திருவடித் தாமரைகளே
புகலிடம் என்று பற்றுகின்ற,
பேதையேன் மிசை --- அறிவிலியாகிய
என்மீது
விழி அருள் வைத்து --- அருட்கண்ணால்
பார்த்து,
குன்றாத வாழ்வையும் அருள்வாயே --- குறைவில்லாத
பேரின்ப வாழ்வைத் தந்து அருள்வாயாக.
பொழிப்புரை
விளங்கும் வெட்சிப் பூக்களால் ஆன சிறந்த
மாலை நிறைந்த திருத்தோள்களை கொண்டவரே!
வில்லைப் போன்ற புருவத்தையும், மை தீட்டிய கருமையான கண்களையும், குங்குமம் அணிந்த ஒளிவீசும்
நெற்றியையும் உடைய இமவான் மகளாகிய பார்வதிதேவிக்கு திருமகனாக வந்த முருகப்
பெருமானே!
இளைய பெண்ணாகிய வள்ளிநாயகிக்கும், பாகசாதனன் எனப்படும் இந்திரன் பெற்ற
ஒப்பற்ற தேவயானை அம்மைக்கும் வாய்த்த சிறந்த நாயகரே!
மேகம் தனது அழகைப் பற்றிக் கொண்ட திருமேனியை
உடைய திருமாலின் திருமருகரே!
மலர்கின்ற மலர்களில் இருந்து உண்டாகும்
நறுமணம் எல்லாத்
திசைகளிலும் முப்பத்தெட்டு காதம் வரை வீசுகின்ற, அழகிய சோலைகளில் சஞ்சரிக்கின்ற
வண்டுகளின் ரீங்கார இசையினால் பொலிவுபெற்று விளங்கும் சிக்கல் என்ற திருத்தலத்தில்
வீற்றிருக்கும் சிங்கார வேலவரே!
போரிடையே மிகவும் சினத்தோடு வந்த அசுரர்களை
வெட்டி சங்காரம் செய்த பெருமையில்
மிக்கவரே!
புலவர்களை ஆதரித்துக் காப்பாற்றும்
கற்பகமரம் போன்றவனே, இனிமையான, மலை போன்ற முலைகளை உடைய பெண்களைத் தழுவும் தோள்களை உடையவனே, எட்டுத் திசைகளிலும் விளங்குகின்ற புகழை
உடையவனே, ஒப்பு கூற முடியாத உண்மையான
நட்புத் தன்மையில் உன்னை ஒப்பவர் உண்டோ என்றெல்லாம், நல்ல பொருளமைந்த சொற்களை நிரையாக
வைத்து, செம்மையான கவிகளைப் புனைந்து
பாடி,
விலை
மதிக்க முடியாத தமிழை ஆதரிப்பதற்கு உன்னைப் போல் சிறந்த கொடையாளிகள் யார்
உள்ளார்கள் என்று மெத்தப் புகழ்ந்து பாடினாலும், தமது வாழ்வே பெரிது என்ற பித்துப்
பிடித்த உலோபிகள் இருக்கும் இடம் சென்று, எனது
குறையைச் சொல்லுகின்ற வறுமை என்னும் அறிவின்மை தொலைய, மிகவும் அரிதில் முயன்று தேவரீரது திருவடித் தாமரைகளே
புகலிடம் என்று பற்றுகின்ற அறிவிலியாகிய என்மீது
அருட்கண்ணால்
பார்த்து, குறைவில்லாத பேரின்ப வாழ்வைத் தந்து
அருள்வாயாக.
விரிவுரை
பொருட்புலவர்கள்
பலர் உண்டு. பொருள் உள்ளோரை, அவரிடம் இல்லாத
சிறப்புக்கள் அத்தனையும் பொருந்தி இருப்பதாக, பொய்யாகப் பாடுவார்கள்.
பொய் சொன்ன வாய்க்கு போசனம் இல்லை என்னும் வாசகம் எல்லோரும் அறிந்ததே.
கைசொல்லும்
பனைகாட்டும் களிற்றுஉரியார்
தண்டலையைக் காணார் போல,
பொய்சொல்லும்
வாயினர்க்குப் போசனமும்
கிடையாது! பொருள் நில்லாது!
மைசொல்லும்
கார் அளிசூழ் தாழைமலர்
பொய்சொல்லி வாழ்ந்த துண்டோ?
மெய்சொல்லி
வாழாதான் பொய்சொல்லி
வாழ்வதில்லை! மெய்ம்மை தானே! --- தண்டலையார் சதகம்.
கல்லாத
ஒருவனை நான் கற்றாய் என்றேன்;
காடுஉறையும் ஒருவனை நாடுஆள்வாய் என்றேன்;
பொல்லாத
ஒருவனை நான் நல்லாய் என்றேன்;
போர் முகத்தை அறியானைப் புலியே என்றேன்;
மல்லாரும்
புயம் என்றேன் சூம்பல் தோளை;
வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன்;
இல்லாது
சொன்னேனுக்கு 'இல்லை' என்றான்
யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே. --- இராமச்சந்திர கவிராயர்.
வேண்டுவார்
வேண்டுவதை வரையாது வழங்கும் வள்ளலாக, பரம்பொருள் இருக்க, அதனை உணர்கின்ற அறிவும், அதற்கேற்ற நல்வினைப்
பயனும்,
முயற்சியும்
இல்லாத ஏழைகள் (அறிவிலிகள்), தாம் கற்ற கல்வியின் பயன், இறைவனுடைய
திருவடியைத் தொழுவதே என்பதை உணராதவர்கள், பொருள் உள்ளோர் இடம்தேடிச் சென்று, இல்லாததை
எல்லாம் சொல்லி,
வாழ்த்திப்
பாடுவார்கள். பண்புகளே அமையாதவனை, அவை உள்ளதாகவும், உடல் வளமே இல்லாதவனை, அவை நிறைந்து
உள்ளதாககவும்,
கற்பனையாகப்
பாடுவார். எல்லாம் கற்பனையாகவே முடியும். பாடுவதும் கற்பனையே. பொருள் கிடைப்பதும்
கற்பனையே.
இதனை, சுந்தரமூர்த்தி
சுவாமிகள் அருமையாகப் பாடியுள்ளார்....
தம்மையே
புகழ்ந்து இச்சை பேசினும்
சார்வினும் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மையாளரைப்
பாடாதே, எந்தை
புகலூர் பாடுமின், புலவீர்காள்!
இம்மையே
தரும், சோறும் கூறையும்;
ஏத்தல் ஆம்; இடர் கெடலும் ஆம்;
அம்மையே
சிவலோகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
மிடுக்கு
இலாதானை, “வீமனே; விறல்
விசயனே, வில்லுக்கு இவன்;” என்று,
கொடுக்கிலாதானை, “பாரியே!” என்று,
கூறினும் கொடுப்பார் இலை;
பொடிக்
கொள் மேனி எம் புண்ணியன்
புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!
அடுக்கு
மேல் அமருலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
“காணியேல் பெரிது உடையனே!
கற்று நல்லனே! சுற்றம், நல் கிளை,
பேணியே
விருந்து ஓம்புமே!” என்று
பேசினும் கொடுப்பார் இலை;
பூணி
பூண்டு உழப் புள் சிலம்பும் தண்
புகலூர் பாடுமின், புலவீர்காள்!
ஆணி
ஆய் அமருலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
நரைகள்
போந்து மெய் தளர்ந்து மூத்து
உடல் நடுங்கி நிற்கும் இக் கிழவனை,
“வரைகள் போல்-திரள் தோளனே!” என்று
வாழ்த்தினும் கொடுப்பார் இலை;
புரை
வெள் ஏறு உடைப் புண்ணியன்
புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!
அரையனாய்
அமருலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
வஞ்ச
நெஞ்சனை, மா சழக்கனை,
பாவியை, வழக்கு இ(ல்)லியை,
பஞ்சதுட்டனை, “சாதுவே!” என்று
பாடினும் கொடுப்பார் இலை;
பொன்
செய் செஞ்சடைப் புண்ணியன்
புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!
நெஞ்சில்
நோய் அறுத்து உஞ்சு போவதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
நலம்
இலாதானை, “நல்லனே!” என்று,
நரைத்த மாந்தரை, “இளையனே!”,
குலம்
இலாதானை, “குலவனே!” என்று,
கூறினும் கொடுப்பார் இலை;
புலம்
எலாம் வெறி கமழும் பூம்புக
லூரைப் பாடுமின், புலவீர்காள்!
அலமரது
அமருலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
நோயனை, “தடந்தோளனே!” என்று,
நொய்ய மாந்தரை, “விழுமிய
தாய்
அன்றோ, புலவோர்க்கு எலாம்!” என்று,
சாற்றினும் கொடுப்பார் இலை;
போய்
உழன்று கண் குழியாதே, எந்தை
புகலூர் பாடுமின், புலவீர்காள்!
ஆயம்
இன்றிப் போய் அண்டம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
எள்
விழுந்த இடம் பார்க்கும் ஆகிலும்,
ஈக்கும் ஈகிலன் ஆகிலும்,
“வள்ளலே! எங்கள் மைந்தனே!” என்று
வாழ்த்தினும் கொடுப்பார் இலை;
புள்
எலாம் சென்று சேரும் பூம்புக
லூரைப் பாடுமின், புலவீர்காள்!
அள்ளல்பட்டு
அழுந்தாது போவதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
கற்றிலாதானை, “கற்று நல்லனே!”,
“காமதேவனை
ஒக்குமே”,
முற்றிலாதானை, “முற்றனே!”, என்று
மொழியினும் கொடுப்பார் இலை;
பொத்தில்
ஆந்தைகள் பாட்டு அறாப்புக
லூரைப் பாடுமின், புலவீர்காள்!
அத்தனாய்
அமருலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
“தையலாருக்கு ஒர் காமனே!” என்றும்,
“சால நல அழகு உடை ஐயனே!”
“கை உலாவிய வேலனே!” என்று,
கழறினும் கொடுப்பார் இலை;
பொய்கை
ஆவியில் மேதி பாய்புக
லூரைப் பாடுமின், புலவீர்காள்!
ஐயனாய்
அமருலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
அருட்புலவர்கள்
மிகச் சிலரே உண்டு. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் என்பதை உணர்ந்து, அதனை உடைய இறைவனையே பாடுவார்கள். மிக
உயர்ந்த அருட்செல்வத்தை வழங்கும் வள்ளல், பொருட்செல்வத்தையும்
வழங்குவார். "இம்மையே தரும் சோறும்
கூறையும்" என்ற அருள் வாசகத்தை உன்னுக.
இத்
திருப்புகழில் சுவாமிகள்,
" மிடி
தீர" என்னும் ஒரு அருமையான சொற்றொடரைக் கையாண்டு உள்ளது அருமையிலும் அருமை.
மிடி
என்பதன் பொருள்,
வறுமை, துன்பம்.
பொருட்செல்வத்தைக்
கருதுகின்றவர்க்கு, பொருள் இன்மை வறுமை. அதனால் அவருக்கு நேருகின்ற துன்பம்.
அருட்செல்வத்தைக்
கருதுகின்றவர்க்கு, அருள் இன்மை வறுமை. அதனால் அவர் படுகின்ற துன்பம்.
அருள்
நூலாசிரியர் யாரும் பொருளைக் குறித்துப் பாடுவது இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு
அருள் நூல்களை ஓதினால் இந்த உண்மை தெற்றென விளங்கும்.
இலர்பலர்
ஆகிய காரணம், நோற்பார்
சிலர், பலர் நோலா தவர்.
என்று
திருவள்ளுவ நாயனார் பாடியள்ளதும்,
அதற்குப்
பரிமேலழகர் வகுத்துள்ள உரையும் கூர்ந்து கவனிக்கத்தக்கது. குறிப்பாக, இத் திருக்குறள், "தவம்"
என்னும் அதிகாரத்தில் வருவதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
இலர்
பலர் ஆகிய காரணம் - உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம்
யாது எனின், நோற்பார் சிலர்
நோலாதார் பலர் - தவம் செய்வார் சிலராக, அது
செய்யார் பலராதல்".
இது
பரிமேலழர் கண்ட வளமிக்க உரை.
இதில்
பரிமேலழகர் காட்டும் தெளிவு
---
"செல்வம் நல்குரவு
என்பன ஈண்டு அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன", என்னை? நுண்ணுணர்வு இன்மை வறுமை, அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம்
(நாலடி.251) என்றார் ஆகலின். 'நோற்பார் சிலர்' எனக் காரணம் கூறினமையான், காரியம் வருவித்து உரைக்கப்பட்டது. தவம்
செய்யாதார்க்கு இம்மை இன்பமும் இல்லை என இதனால் அவரது தாழ்வு கூறப்பட்டது.
ஆக, செல்வம் உடைமை
அறிவு உடைமையைக் குறித்தது.
அது
இல்லாமை,
அறிவு
இன்மையைக் குறித்தது.
மிடி, ஏழ்மை, வறுமை
என்பதெல்லாம் அறிவு இன்மையைக் குறித்து.
நல்குரவு
என்னும் சொல்லுக்கு, நுகரப்படுவன யாவும் இல்லாமை என்பதே பொருள்.
மிடி
- தரித்திரம். மிடி என்னாது, "சிறிதும் மிடியும் அணுகாதே"
என்று ஒரு திருப்புகழில் அடிகார் பாடி இருப்பார். தரித்திரம் மிகக் கொடியது என்பதும், அது சிறிது இருக்கினும் வாழ்வது மிகக்
கடினம். தரித்திரம் என்பதை பாவி என்று வைக்கின்றார். மற்றோர் இடத்தில்.
தரித்திரமாகிய பாவி ஒருவனிடம் அணுகவனேயானால், அழகு, செல்வம், நல்ல மனம், குணம், நற்குடி, குலம் முதலிய யாவும் அடியோடு குடி பெயர்ந்தேகும்.
வடிவம்
தனமும் மனமும் குணமும்
குடியும்
குலமும் குடி போகியவா?
அடி
அந்தம் இலா அயில்வேல் அரசே!
மிடி
என்று ஒரு பாவி வெளிப்படினே --- கந்தர்அநுபூதி.
தாங்க ஒணா வறுமை வந்தால்
சபைதனில் செல்ல நாணும்,
வேங்கை போல் வீரம் குன்றும்,
விருந்தினர் காண நாணும்,
பூங்கொடி மனையாட்கு அஞ்சும்,
புல்லருக்கு இணங்கச் செய்யும்,
ஓங்கிய அறிவு குன்றும்,
உலகெலாம் பழிக்கும் தானே. --- விவேக சிந்தாமணி.
ஒருவனுக்குப் பொறுத்துக்கொள்ள முடியாத வறுமை வந்து சேர்ந்தால், அவன், தகுந்த ஆடை அணிகலன்கள்
இல்லாததால், உயர்ந்தோர் கூடியுள்ள சபைக்குப் போவதற்கு
நாணப்படுவான். அவன் முன்னே கொண்டு இருந்த வேங்கைப் புலி போன்ற வீரத் தன்மையானது குன்றிப்
போகும்.விருந்தினரைத் தக்கவாறு உபசரிக்கும் நிலை இல்லாததால், விருந்தினரைக் கண்டாலே நாணப்படுவான். மலர்க் கொடி போன்ற மனையாளுக்கும் அவன் அஞ்ச
வேண்டி வரும். அந்த
வறுமையானது அவனை, கீழ்மக்களோடு இணக்கம் கொள்ளச்
செய்யும். அவனிடத்தே
முன்பு மிகுந்து இருந்த அறிவானது, இப்போது
குன்றிப் போகும். உலகில் உள்ளவர்கள் அவனை நிந்தித்துப் பேசுவார்கள்.
திருவள்ளுவ நாயனார், இந்த வறுமை குறித்து, நல்குரவு என்று ஒரு அதிகாரத்தையே வைத்து உள்ளார். வறுமை என்று
சொல்லப்படுகின்ற ஒற்றைத் துன்பத்துள், பல வகையாகச்
சொல்லப்படுகின்ற துன்பங்கள் அனைத்தும் ஒருங்கு சேர்ந்து உண்டாகும் என்கின்றார்.
நல்குரவு என்னும் இடும்பையுள், பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.
என்பது திருக்குறள்.
வறுமை காரணமாக உணவு கிடைக்காமல், பசி நோய் வந்துவிட்டால், தன்மானமும், குடிப்பெருமையும், கல்வியும், கொடையும்,
அறிவு உடைமையும், தானமும், தவமும், பெருமையும், தொழிலில்
ஈடுபடும் முயற்சியும், தேன் கசிவது போன்ற இனிமையான சொற்களை
உடைய மங்கையர் மீது விருப்பம் கொள்ளுதலும், ஆகிய இவை பத்தும்
இல்லாமல் போய்விடும் என்கின்றார் ஔவையார்.
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்.
--- ஔவையார்.
குசேல உபாக்கியானம் சொல்வதைக் காண்போம்.....
தரித்திரம் மிக்க வனப்பினை ஒடுக்கிச்
சரீரத்தை உலர்தர வாட்டும்,
தரித்திரம் அளவாச் சோம்பலை எழுப்பும்,
சாற்றஅரும் உலோபத்தை மிகுக்கும்,
தரித்திரம் தலைவன் தலைவியர்க்கு இடையே
தடுப்ப அரும் கலாம்பல
விளைக்கும்,
தரித்திரம் அவமானம் பொய் பேராசை
தரும் இதில் கொடியது ஒன்று
இலையே.
இதன் பொருள் ---
வறுமையானது மிகுந்த அழகைக் கெடுத்து உடம்பினை மெலியும்படி வருத்தும். வறுமையானது அளவிடப்படாத சோம்பலை உண்டாக்கும், சொல்லுதற்கரிய உலோபத் தன்மையை மிகச் செய்யும். வறுமையானது கணவன் மனைவியர்க்குள் தடுத்தற்தகு
அரிய பல கலகங்களை உண்டாக்கும். வறுமையானது மானம் இழத்தல், பொய் பேசுதல், பேராசை கொள்ளுதல் முதலியவற்றை உண்டாக்கும். ஆதலால் இவ்வறுமையில் கொடியது வேறு ஒன்று இல்லை.
தரித்திரம் களிப்பாம் கடலுக்கு ஓர் வடவை,
சாற்றும் எண்ணங்கள் வாழ் இடமாம்,
தரித்திரம் பற்பல் துக்கமும் தோன்றத்
தக்க பேர் ஆகரம் என்ப,
தரித்திரம் நன்மை சால் ஒழுங்கு என்னும்
தழைவனம் தனக்கு அழல் தழலாம்,
தரித்திரங் கொடிய எவற்றினும் கொடிது, அத்
தகையதை ஒழித்தல் நன்று ஆமே.
இதன் பொருள் ---
வறுமையானது மகிழ்ச்சியாகிய கடலினுக்கு வடவைத் தீயாகும். சொல்லப்பட்ட பல எண்ணங்களுக்கு உறைவிடம் ஆகும். வறுமையானது பலப்பல துன்பங்களும் பிறத்தற்கு இடமாகும் என்பர். வறுமையானது
நன்மை மிகுந்த ஒழுக்கம் என்ற செழித்த சோலையை எரிக்கும் தீ ஆகும். தரித்திரம்
கொடிய எவற்றினும் கொடியது. அத்தன்மை உள்ள வறுமையை நீக்குவதே நன்மையாகும்.
வறுமை ஆகிய தீயின்மேல் கிடந்து
நெளியும்
நீள்புழு ஆயினேற்கு இரங்கி ...... அருள்வாயே.
--- (அறிவிலாதவர்) திருப்புகழ்.
"கொடிது கொடிது வறுமை கொடிது" என்றார் ஔவையார்.
மிக
அருமைப்பட்டு, உன்பாத தாமரை சரணம் எனப்
பற்றும் பேதையேன் மிசை விழி அருள் வைத்து குன்றாத வாழ்வையும் அருள்வாயே ---
பொருள்
இல்லாத நிலை தீர வேண்டி, எங்கெங்கெல்லாமோ
உழன்று,
உழன்று, உடல் சோர்ந்து, உள்ளம் வெம்பி, தளர்ச்சி உற்ற பிறகு, இனி நம்மால் ஏதும்
முடியாது என்னும் நிலை வரும்போது, கடவுள் நினைவு வருவது இயற்கை. அந்த நினைவு வந்ததும், இறையருளைப் பெறும்
நெறியில் மிகவும் முயன்று, இறைவன் திருவடிகளைத் தவிர, உயிருக்குப் புகலிடம்
வேறு ஏதும் இல்லை என்னும் தெளிவு பிறந்து, அதன் வழி இறைவன் திருவடிகளே
சரணம் என்று இருப்போரை, இறைவன் தனது திருக்கண்ணால் சிறிது நோக்கினாலும், இந்தப் பிறவி ஈடேறும்
என்பதால்,
அடிகளார், "விழி அருள் வைத்து"
என்றார்.
குன்றாத
வாழ்வு - பேரின்பப் பெருவாழ்வு.
"மிகுத்த
கனம்அதுஉறு நீள்ச வுக்ய, சகல செல்வ யோகம்
மிக்க பெருவாழ்வு, தகைமை சிவஞான முத்தி, பரகதியும் நீ கொடுத்து உதவி
புரிய வேணும் நெய்த்த வடிவேலா!" என்று அடிகளார்
பிறிதொரு திருப்புகழில் காட்டினார்.
இமய
மகட்கு சந்தானம் ஆகிய முருகோனே ---
சந்தானம்
--- சம் + தானம்.
சம்
--- நல்ல. தானம் - கொடை.
இறைவனது
அருட்கொடையாக வருவது சந்தானம்.
எழிலி
எழில் பற்றும் காய மாயவன் மருகோனே ---
எழிலி
- மேகம். காயம் - உடம்பு.
கரியவனாகிய
திருமாலின் திருமேனியைப் பார்த்து,
அந்த
கருமையை மேகமானது தனக்குக் கொண்டது.
அழகிய
சிக்கல் சிங்கார வேலவ ---
சிக்கல், சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
நாகப்பட்டினத்தில்
இருந்து 5 கி.மீ. தொலைவில்
திருவாரூர் செல்லும் சாலை வழியில் சிக்கல் திருத்தலம் உள்ளது.
நாகப்பட்டினம்
- திருவாரூர் சாலையில் கீழ்வேளூருக்கும் சிக்கலுக்கும் இடையே உள்ள ஆழியூர் என்னும்
தேவார வைப்புத் திருத்தலம் உள்ளது. இறைவன் பெயர் கங்காளநாதர். இறைவி பெயர்
கற்பகவல்லி. சாலை ஓரத்திலேயே ஊர் உள்ளது. ஆழியூரிலிருந்து 2 கி.மி. தொலைவில் திருக்கண்ணங்குடி
திவ்யதேசம் வைணவத் தலமும் உள்ளது.
இறைவர்
: நவநீதேசுவரர், வெண்ணெய்ப்பிரான்
இறைவியார்
: வேல்நெடுங்கண்ணி, சத்தியதாட்சி
தல
மரம் : மல்லிகை
தீர்த்தம் : க்ஷீர புஷ்கரணி, கயாதீர்த்தம், லட்சுமிதீர்த்தம்.
திருஞானசம்பந்தப்
பெருமான் வழிபட்டுத் திருப்பதிகம் அருளப் பெற்ற திருத்தலம்.
புராண
காலத்தில் மல்லிகைவனம் என்று அழைக்கப்பட்ட இத்தலத்தில் வசிட்ட முனிவர் ஆசிரமம்
அமைத்துக் கொண்டு இத்தலத்து சிவபெருமானை வழிபட்டு வந்தார். அக்கால கட்டத்தில்
தேவலோகத்துப் பசுவான காமதேனு நாயின் ஊனைத் தின்றதால் சாபம் பெற்று இத்தலத்திற்கு
வந்தது. தற்போதுள்ள ஆலயத்தின் மேற்குப் பக்கம் உள்ள பாற்குளம் என்றும்
க்ஷீரபுஷ்கரணி என்றும் சொல்லப்படும் தீர்த்தத்தில் தன் பாவம் தீர நீராடியது. காமதேனு
குளித்தபோது அதனுடைய பால் பெருகி குளம் முழுக்கப் பாலாக மாறியது. அங்கு வந்த வசிட்ட
முனிவர் பால் குளத்தைப் பார்த்து அதில் இருந்து வெண்ணையை எடுத்து சிவலிங்கமாக்கி
அதற்கு பூசை செய்தார். பூசையை முடித்தபின் அந்த சிவலிங்கத்தை வேறு இடத்தில் வைக்க
எண்ணி அதை எடுக்க முயன்றார். அது இயலாமல் அந்த வெண்ணை இலிங்கம் அவர் கையில்
சிக்கிக் கொண்டது. அதனாலேயே இத் திருத்தலம் "சிக்கல்" என்ற பெயருடன்
விளங்குகிறது என்று புராண வரலாறு கூறுகின்றது. வெண்ணெய் இலிங்கத் திருமேனியான
இறைவன் "வெண்ணெய்ப் பிரான்" என்ற
திருநாமத்தோடு விளங்குகின்றார்.
திலோத்தமையைக்
கூடியதால் தன் தவவலிமையை இழந்த விசுவாமித்திர முனிவர் இழந்த தவவலிமையை திரும்பப்
பெற்ற திருத்தலம் சிக்கல்
முசுகுந்தச்
சக்கரவர்த்திக்கு ஒரு அந்தணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷமும் சாபமும்
நீங்கிய தலம் சிக்கல்.
ஒவ்வொரு
வருடமும் ஐப்பசி மாதம் வேல் வாங்கும் விழாவில் சூரபத்மனை அழிப்பதற்காக தன் தாயிடம்
வேல் வாங்கி முருகப்பெருமான் தன் கோவிலில் வந்து அமர்ந்த பிறகு, வேலின் வீரியம் தாங்காமல் சிக்கல்
சிங்காரவேலருக்கு வியர்க்கும். பட்டுத்துணியால் துடைக்கத் துடைக்க முத்து முத்தாக
வியர்வை துளிர்த்துக் கொண்டே இருக்கும் அற்புதம் இன்றளவும் நடைபெறும் தலம்
சிக்கல். "சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்" என்பது ஒரு
பழமொழி. இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள அம்பாள் வேல்நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கி
திருச்செந்தூரில் சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். இத்தலத்தில்
கந்தசஷ்டி விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
கோச்செங்கட்சோழ
நாயனார் அமைத்தருளிய மாடக் கோயில்களில் ஒன்றாகும். கோவிலின் மையத்தில் 12 படிகள் கொண்ட ஒரு கட்டுமலை மேல் மூலவர்
நவநீதநாதர் இலிங்க வடிவில் அருள் புரியும் சந்நிதியும், சிக்கல் சிங்காரவேலர் என்று பிரசித்தி
பெற்ற முருகப்பெருமான் சந்நிதியும் உள்ளன. கீழ்ப்படிக்குப் பக்கத்திலுள்ள சுந்தர
கணபதியை தரிசித்த பிறகே கட்டுமலை மேலே செல்ல வேண்டும் என்பது வழக்கம். மேலே சென்று
மண்டபத்தை அடைந்ததும் நேரே தியாகராஜ சந்நிதி உள்ளது. இது சப்தவிடங்கத்தலங்களுள்
அடங்காது. இங்குள்ள மரகதலிங்கம் மிகவும் சிறப்புள்ளது. உள்ளே வெண்ணைப்பிரான்
இருக்கும் கருவறை உள்ளது. சிக்கல் சிங்காரவேலர் வள்ளி, தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில்
காட்சி தருகிறார். ஐப்பசி மாத விழாவில் வியர்வை சிந்தும் வேலவர் இவர்தான். கட்டுமலையின்
கீழ்பக்கம் இறைவி வேல்நெடுங்கண்ணியின் சந்நிதி அமைந்துள்ளது. இறைவி முருகனுக்கு
வேல் தருவது போன்ற சிற்பம் சந்நிதியின் மேல்பாகத்தில் இருக்கிறது. பிரகாரம் சுற்றி
வரும்போது வடக்குச் சுற்றில் கோலவாமனப் பெருமாள் கோவில் தனியாக அமைந்திருக்கிறது. சீதேவி, பூதேவி சகிதம் நின்ற திருக்கோலத்தில்
பெருமாள் காட்சி தருகிறார்.
கருத்துரை
முருகா!
தேவரீரது திருவடிகளே எனக்குப் புகலிடம். உமது அருட்பார்வையால் பேரின்ப வாழ்வைத் தந்து
அருள்.
No comments:
Post a Comment