அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
ஓலமிட்டு இரைத்து
(நாகப்பட்டினம்)
முருகா!
உன்னையே பணிந்து முத்தி
பெற அருள்வாய்.
தான
தத்த தத்த தந்த
தான தத்த தத்த தந்த
தான
தத்த தத்த தந்த ...... தனதான
ஓல
மிட்டி ரைத்தெ ழுந்த
வேலை வட்ட மிட்ட இந்த
ஊர்மு
கிற்ற ருக்க ளொன்று ...... மவராரென்
றூம
ரைப்ர சித்த ரென்று
மூட ரைச்ச மர்த்த ரென்றும்
ஊன
ரைப்ர புக்க ளென்று ...... மறியாமற்
கோல
முத்த மிழ்ப்ர பந்த
மால ருக்கு ரைத்த நந்த
கோடி
யிச்சை செப்பி வம்பி ...... லுழல்நாயேன்
கோப
மற்று மற்று மந்த
மோக மற்று னைப்ப ணிந்து
கூடு
தற்கு முத்தி யென்று ...... தருவாயே
வாலை
துர்க்கை சக்தி யம்பி
லோக கத்தர் பித்தர் பங்கில்
மாது
பெற்றெ டுத்து கந்த ...... சிறியோனே
வாரி
பொட்டெ ழக்ர வுஞ்சம்
வீழ நெட்ட யிற்று ரந்த
வாகை
மற்பு யப்ர சண்ட ...... மயில்வீரா
ஞால
வட்ட முற்ற வுண்டு
நாக மெத்தை யிற்று யின்ற
நார
ணற்க ருட்சு ரந்த ...... மருகோனே
நாலு
திக்கும் வெற்றி கொண்ட
சூர பத்ம னைக்க ளைந்த
நாக
பட்டி னத்த மர்ந்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
ஓலம்
இட்டு இரைத்து எழுந்த
வேலை வட்டம் இட்ட இந்த
ஊர்
முகில் தருக்கள் ஒன்றும் .....அவர் ஆர்என்றும்,
ஊமரை
ப்ரசித்தர் என்றும்,
மூடரைச் சமர்த்தர் என்றும்,
ஊனரை
ப்ரபுக்கள் என்றும், ...... அறியாமல்
கோல
முத்தமிழ் ப்ரபந்தம்
மாலருக்கு உரைத்து, அநந்த
கோடி
இச்சை செப்பி, வம்பில் ...... உழல்நாயேன்,
கோபம்
அற்று, மற்றும் அந்த
மோகம் அற்று, உனைப் பணிந்து
கூடுதற்கு
முத்தி என்று ...... தருவாயே?
வாலை, துர்க்கை, சக்தி, அம்பி,
லோக கத்தர் பித்தர் பங்கில்
மாது, பெற்று எடுத்து உகந்த ...... சிறியோனே!
வாரி
பொட்டு எழ, க்ரவுஞ்சம்
வீழ, நெட்டு அயில் துரந்த
வாகை
மல் புய! ப்ரசண்ட ...... மயில்வீரா!
ஞால
வட்டம் முற்ற உண்டு,
நாக மெத்தையில் துயின்ற
நாரணற்கு
அருள் சுரந்த ...... மருகோனே!
நாலு
திக்கும் வெற்றி கொண்ட
சூர பத்மனைக் களைந்த
நாகபட்டினத்து
அமர்ந்த ...... பெருமாளே.
பதவுரை
வாலை துர்க்கை சக்தி அம்பி --- வாலையும்
(என்றும் இளையவள்), துர்க்கையும், சக்தியும், அம்பிகையும்,
லோக கத்தர் பித்தர்
பங்கில்
--- உலகத்துக்கே தலைவர் ஆகிய பித்தராம் சிவபெருமானது இடப்பாகத்தில் அமர்ந்தவளுமான
மாது பெற்றெடுத்து
உகந்த சிறியோனே --- தேவி பெற்றெடுத்து மகிழ்ந்த இளையவரே!
வாரி பொட்டு எழ --- கடல் வற்றிப்
போக,
க்ரவுஞ்சம் வீழ --- கிரெளஞ்சமலை
தூளாகி விழ,
நெட்டு அயில் துரந்த --- நீண்ட வேலை
விடுத்து அருளிய,
வாகை மல்புய --- வெற்றி வாகை
சூடிய, வலிமை பொருந்திய திருத்தோள்களை
உடைவரே!
ப்ரசண்ட மயில் வீரா --- வேகமாக வரும் மயில்
மீது அமர்ந்த வீரரே!
ஞால வட்டம் முற்ற உண்டு --- பூமி மண்டலம்
முழுமையும் உண்டு தன் வயிற்றிலே அடக்கியவரும்,
நாக மெத்தையில் துயின்ற --- ஆதிசேடன்
என்னும் பாம்புப் படுக்கையில் துயில் கொள்பவரும் ஆகிய
நாரணற்கு அருள் சுரந்த
மருகோனே
--- நாராயணருக்கு அருள் பாலித்த திருமருகரே!
நாலு திக்கும் வெற்றி
கொண்ட சூரபத்மனைக்
களைந்த --- நான்கு
திசைகளிலும் வெற்றிகொண்டு இருந்த சூரபத்மனை அகற்றியவரே!
நாகபட்டினத்து அமர்ந்த
பெருமாளே
--- நாகப்பட்டினம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!
ஓலமிட்டு இரைத்து எழுந்த
வேலை வட்டம் இட்ட இந்த ஊர் --- ஓலம் இடுவதுபோல பேரிரைச்சலைச்
செய்யும் அலைகள் மிகுந்துள்ள கடலால் சூழப்பட்டு உள்ள இந்த ஊரில்
முகில் --- மேகத்தைப் போன்று
கைம்மாறு கருதாமல் வழங்குபவரும்,
தருக்கள் ஒன்றும் அவர் யார் என்று ---
விரும்பிதை எல்லாம் அளிக்கவல்ல கற்பகமரம் போல்பவர் யார் உள்ளார் என்று
தேடிப்போய்,
ஊமரை ப்ரசித்தர் என்றும் --- வாய் பேச
வராதவரை புகழ் படைத்தவர் என்றும்,
மூடரைச் சமர்த்தர் என்றும் --- முட்டாளைத்
திறமை உள்ளவர் என்றும்
ஊனரை ப்ரபுக்கள் என்றும் --- ஊனம் உள்ளவரைக்
கொடையாளி என்றும்,
அறியாமல் --- எனது அறிவின்மையால்
கோல முத்தமிழ்
ப்ரபந்தம்
--- அழகிய முத்தமிழால் அமைந்த பாடல் வகைகளை,
மாலருக்கு உரைத்து --- புல்லர்களைப்
புகழ்ந்து பாடி,
அநந்த கோடி இச்சை
செப்பி
--- எண்ணில்லாத எனது விருப்பங்களைத் தெரிவித்து (ஏதும் பெறாமல்)
வம்பில் உழல் நாயேன் --- வீணில்
உழல்கின்ற நாயினும் கீழான அடியேன்,
கோபம் அற்று --- சினத்தை ஒழித்து,
மற்றும் அந்த மோகம் அற்று --- மேலும் எனது மனத்திலே எழுகின்ற மோகம் என்பதும் அற்று,
உனைப் பணிந்து கூடுதற்கு --- தேவரீரைப்
பணிந்து வணங்கி, உமது திருவடிகளைக் கூடி
இன்புறுதற்கு,
முத்தி என்று தருவாயே --- பாசநீக்கம்
என்னும் முத்தி நிலையை அடியேனுக்கு எப்போது அருள் புரிவீர்.
பொழிப்புரை
வாலையும் (என்றும் இளையவள்), துர்க்கையும், சக்தியும், அம்பிகையும், உலகத்துக்கே தலைவர் ஆகிய பித்தராம் சிவபெருமானது
இடப்பாகத்தில் அமர்ந்தவளுமான உமாதேவி பெற்றெடுத்து
மகிழ்ந்த இளையவரே!
கடல் வற்றிப் போக, கிரெளஞ்சமலை தூளாகி விழ,
நீண்ட
வேலை விடுத்து அருளிய, வெற்றி வாகை சூடிய, வலிமை பொருந்திய திருத்தோள்களை உடைவரே!
வேகமாக வரும் மயில் மீது அமர்ந்த வீரரே!
பூமி மண்டலம் முழுமையும் உண்டு தன்
வயிற்றிலே அடக்கியவரும், ஆதிசேடன் என்னும்
பாம்புப் படுக்கையில் துயில் கொள்பவரும் ஆகிய நாராயணருக்கு அருள் பாலித்த திருமருகரே!
நான்கு திசைகளிலும் வெற்றிகொண்டு இருந்த
சூரபத்மனை அகற்றியவரே!
நாகப்பட்டினம் என்னும் திருத்தலத்தில்
வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!
ஓலம் இடுவதுபோல பேரிரைச்சலைச் செய்யும்
அலைகள் மிகுந்துள்ள கடலால் சூழப்பட்டு உள்ள இந்த ஊரில் மேகத்தைப் போன்று கைம்மாறு
கருதாமல் வழங்குபவரும், விரும்பிதை எல்லாம்
அளிக்கவல்ல கற்பகமரம் போல்பவர் யார் உள்ளார் என்று தேடிப்போய், வாய் பேச வராதவரை புகழ் படைத்தவர்
என்றும், முட்டாளைத் திறமை
உள்ளவர் என்றும், ஊனம் உள்ளவரைக்
கொடையாளி என்றும், எனது அறிவின்மையால், அழகிய முத்தமிழால்
அமைந்த பாடல் வகைகளை இயற்றி, புல்லர்களைப்
புகழ்ந்து பாடி, எண்ணில்லாத எனது
விருப்பங்களைத் தெரிவித்து, ஏதும் பெறாமல் வீணில்
உழல்கின்ற நாயினும் கீழான அடியேன், சினத்தை ஒழித்து,
மேலும் எனது மனத்திலே எழுகின்ற மோகம் என்பதும் அற்று, தேவரீரைப்
பணிந்து வணங்கி, உமது திருவடிகளைக் கூடி
இன்புறுதற்கு, பாசநீக்கம் என்னும்
முத்தி நிலையை அடியேனுக்கு எப்போது அருள் புரிவீர்.
விரிவுரை
இத்
திருப்புகழில் அடிகளார், புலவர்கள் தமது
வறுமை தீர, பொருள்
உள்ளோரைத் தேடி ஊர்கள் தோறும் சென்று, இந்த ஊரில் செல்வந்தர்கள் உள்ளனரா என்று
அறிந்து,
அவர்களை
நாடித் தாம் பெற்ற புலமையைக் கொண்டு, விதவிதமான பாடல்களால், இல்லாத
பெருமைகளை எல்லாம் அவர்மேல் ஏற்றி வைத்துப் பாடியும் ஏதும் பெறாமல், மனமும் உடலும்
வாடி உழல்வதை விடுத்து, இம்மையில் எல்லா நலங்களையும் தந்து அருளி, அம்மையில்
வீட்டின்பத்தையும் தரவல்ல முருகப் பெருமானைப் போற்றி உய்ய உலகோர்க்கு
அறிவுறுத்துகின்றார்.
முகில்
(ஒன்றும் அவர்) ---
முகில்
- மேகம். மேகமானது கைம்மாறு கருதாது எல்லோர்க்கும் மழையைப் பொழிவது போல, கைம்மாறு
கருதாமல்,
இல்லை
என்று வந்தோர்க்கு எல்லாம், இல்லை என்னாது வழங்குகின்ற தன்மையைக் குறித்து
நின்றது.
கைம்மாறு வேண்டா கடப்பாடு
மாரிமாட்டு
என்னாற்றுங் கொல்லோ உலகு.
என்பது திருவள்ளுவ
நாயனார் அருள்வாக்கு.
"கடமையைக்
கருதிச் செய்யும் உதவிகள் கைம்மாறு வேண்டாதன. மேகத்திற்கு இந்த உலகம் என்ன
கைம்மாறு செய்யும்?" என்கின்றார்
நாயனார்.
இதனைப் பின்வரும்
பிரமாணங்களால் தெளிக...
எல்லோர் தமக்கும்
இனிது உதவல் அன்றியே
நல்லோர் தமக்கு உதவி
நாடாரே --- வல்லதரு
நாமநிதி மேகம் நயந்து
உதவல் அன்றியே
தாம் உதவி நாடுமோ
சாற்று. ---
நீதிவெண்பா
விரும்பியவற்றை
விரும்பியபடியே கொடுக்கக் கூடிய கற்பக மரமும், புகழ்மிக்க சங்கம் பதுமம் என்னும்
இருநிதிகளும், மேகமும் பிறர்க்குத்
தாமே விரும்பி உதவுமே அல்லாமல்,
பிறரிடம்
இருந்து பதில் உதவி ஏதேனும் எதிர்பார்க்குமோ ? பார்க்கா. அவைபோல், நல்லவர்கள் மற்றைய எல்லாருக்கும்
மகிழ்ச்சியோடு உதவுவார்களே அல்லாமல், அவர்களிடம்
இருந்து தங்களுக்கு எந்த ஒரு பதில் உதவியையும் எதிர்பார்க்க மாட்டார்கள்.
பாரி பாரி என்று, பல ஏத்தி
ஒருவற் புகழ்வர்
செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்,
மாரியும் உண்டு ஈண்டு
உலகு புரப்பதுவே. --- புறநானூறு.
இதன் பதவுரை: பாரி பாரி என்று ---
பாரி பாரி என்று சொல்லி; பல ஏத்தி --- அவன் பல புகழையும் வாழ்த்தி; ஒருவற் புகழ்வர் செந்நாப்புலவர் ---
அவ்வொருவனையே புகழ்வர் செவ்விய நாவையுடைய அறிவுடையோர்; பாரி ஒருவனும் அல்லன் --- பாரியாகிய
ஒருவனுமே அல்லன்; மாரியும் உண்டு ---
மழைழைத் தரும் மேகமும் உண்டு. ஈண்டு உலகு புரப்பது - இவ்விடத்து உலகத்தைப்
பாதுகாத்தற்கு.
உலகு புரத்தற்கு மாரியும் உண்டாயிருக்கப்
பாரி ஒருவனைப் புகழ்வர் செந்நாப் புலவர் எனப் பழித்தது போலப் புகழ்ந்தவாறு.
"ஆரியன் அவனை நோக்கி,
‘ஆர் உயிர் உதவி, யாதும்
காரியம் இல்லான் போனான்;
கருணையோர் கடமை ஈதால்;
பேர் இயலாளர், “செய்கை
ஊதியம் பிடித்தும்” என்னார்;
மாரியை நோக்கிக் கைம்மாறு
இயற்றுமோ, வையம்? என்றான்." --- கம்பராமாயணம், நாகபாசப் படலம்.
இதன் பதவுரை ---
ஆரியன் --- இராமபிரான்; அவனை நோக்கி --- அந்தக் கருடனைப் பார்த்து; ஆர் உயிர் உதவி --- (நாக
அத்திரத்தால் விழுந்து இறந்தவர்களுக்கு) அருமையான
உயிரைத் தந்து உதவி; யாதும் காரியம் இல்லாமல் போனான் --- (நம்மிடத்தில்) எந்தக் காரியத்தையும் (கைம்மாறாகப்) பெறாமல் போனான்; கருணையோர் கடமை ஈதால் --- அருள் உடையவர்களுடைய செய்கை இதுதான் (போலும்); பேர் இயலாளர் --- பெருந்தன்மை
உடையவர்கள்; செய்கை ஊதியம் பிடித்தும் என்னார் --- செய்யும் செயலுக்குப் பயன் பெறுவோம்
என்று எண்ண மாட்டார்கள்; (இது எவ்வாறு எனின்) வையம்
--- இவ்வுலகில் வாழ்பவர்கள்; மாரியை நோக்கிக் கைம்மாறு இயற்றுமோ --- மழை (தங்களுக்கு) உதவுதலை நோக்கி அதற்குக் கைம்மாறு செய்ய வல்லமை உடையவர்கள் ஆள்வார்களோ? என்றான் --- என்று கூறினான்.
கைம்மாறு கருதாது நாக
அத்திரத்தால்ல் விழுந்து கிடந்தவர்களை
உயிர்ப்பித்துக்
காரியம் இல்லான் போன கருடனது செயல்,
உலகத்தவர்
எவ்வித் கைம்மாறு செய்யாத இடத்தும் அவர்களுக்குப் பெய்து உதவும் மழையின்
செயல் போன்றது என்றார்.
"தேன்செய்த
கொன்றைநெடுஞ் சடையார்முன்
தாழ்ந்து எழுந்து, செங்கை கூப்பி,
யான்செய்யும்
கைம்மாறாய் எம்பிராற்கு
ஒன்று
உண்டோ? யானும் என்னது
ஊன்செய்
உடலும் பொருளும் உயிரும் எனின்,
அவையாவும் உனவே ஐயா!
வான்செய்யும்
நன்றிக்கு வையகத்தோர்
செய்யும் கைம்மாறு உண்டேயோ".
--- தி.வி.புராணம்.
மாணிக்கம் விற்ற படலம்.
இதன்
பதவுரை ---
தேன்
செய்த கொன்றை நெடுஞ்சடையார் முன் --- தேன் பொருந்திய கொன்றை மலர் மாலையை அணிந்த
நீண்ட சடையை உடைய சொக்கலிங்கக் கடவுளின் திருமுன், தாழ்ந்து எழுந்து செங்கை கூப்பி ---
வீழ்ந்து வணங்கி எழுந்து சிவந்த கைகளைத் தலைமேல் குவித்து, எம்பிராற்கு --- எம் பெருமானாகிய
நினக்கு, யான் செய்யும்
கைம்மாறாய் ஒன்று உண்டோ ---
அடியேனால்
செய்யப்படும் எதிர் உதவியாக ஒன்று உண்டோ?, யானும்
என்னது ஊன்செய் உடலும் பொருளும் உயிரும் எனின் --- யானும் என்னுடைய தசையமைந்த
உடலும் பொருளும் ஆவியும் என்றால்,
ஐயா
அவை யாவும் உனவே --- ஐயனே! அவை முற்றும் உன்னுடையனவே, வான் செய்யும் நன்றிக்கு --- மேகம்
செய்த உதவிக்கு, வையகத்தோர் செய்யும்
கைம்மாறு உண்டோ --- நிலவுலகத்தார் செய்கின்ற கைம்மாறு உண்டோ (இல்லை என்றபடி).
தருக்கள்
ஒன்றும் அவர் ---
தரு
- தருதல் என்னும் தொழில் குறித்து அமைந்தது.
தருவதால், மரமானது தரு எனப்பட்டது.
தரு
- இங்கே விண்ணுலகில் உள்ள கற்பக மரத்தைக் குறித்து நின்றது மட்டுமல்லாமல், நாம் வாழும் உலகில் உள்ள மரங்களையும்
குறித்து நின்றது.
விரும்பியதை
எல்லாம் அளிக்க வல்லது விண்ணுலகில் உள்ள கற்பகமரம் என்று புராணங்கள் கூறும்.
மண்ணுலகில்
உள்ள மரங்களும்,
யார்
யார் என்ன என்ன பயனைக் கருதுகின்றார்களோ, அவற்றை எல்லாம் தருவனேவே ஆகும்.
இத்தகைய தெய்வத் தமிழைப் பயின்று பாட்டு இசைக்கும் ஆற்றல் வாய்ந்து, எவன் பிறப்பு இறப்பை நீக்கி பேரானந்தத்தைத்
தருவானோ - எவன் பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெருமானோ - எவன் மறையாகமங்களால்
துதிக்கப் பெறும் மாதேவனோ, அந்த எம்பெருமானைப் பாடி உய்வு பெறாமல், கேவலம் உண்டு உடுத்து உழலும் சிறுதொழிலும், சிறுமையும் உடைய மனிதர்களைப் பாடுவது எத்துணை மதியீனம்? காமதேனுவின் பாலை கமரில் உகுப்பதை
ஒக்கும். தமது அறிவையும் தமிழையும் அறிவுக்கு
அறிவாகிய இறைவன் மாட்டுப் பயன்படுத்தாமல், கேவலம்
பொருள் விருப்பால் மனிதர்மாட்டுப் பயன்படுத்துவது மிகவும் வருந்தத்தக்கது.
யாம்ஓதிய கல்வியும், எம்அறிவும்
தாமேபெற வேலவர் தந்ததனால்
பூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர் நடவீர் இனியே.
என்ற கந்தரநுபூதித் திருவாக்கை உய்த்து உணர்மின்கள். அங்ஙனம் பாடப் பெறுகின்றவர் எத்தன்மையானவர்
என்பதை சுவாமிகள் கூறுமாறு காண்க.
ஔவையார்
பாடிய மூதுரை என்னும் நூலில் இருந்து ஒரு வெண்பா...
சாம்தனையும்
தீயனவே செய்திடினும் தாம்அவரை
ஆம்தனையும்
காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்குந்
தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம்
கண்டீர் மரம்.
இதன்
பொருள் ---
மரங்கள்
ஆனவை மனிதர் தம்மை எவ்வளவு வெட்டினாலும், அவர்களுக்குக்
குளிர்ச்சியான நிழலைத் தந்து காக்கின்ற மரத்தைப் போல, அறிவில் சிறந்த பெரியவர்கள், தாம் சாகும் அளவும் கூட ஒருவர் தமக்குத்
தீங்குகளையே செய்தாரானாலும், அவரையும் தம்மால்
ஆகும் அளவும் காப்பார்கள்.
அறிவுடையவர்
தமக்குத் தீங்கு செய்வோருக்கும் நன்மையே செய்வார் என்பது கருத்து.
படிக்காசுப்
பலவர் பாடிய "பழமொழி விளக்கம்" என்னும் "தண்டலையார் சதகம்"
என்னும் நூலில் ஒரு பாடல்..
ஞாலம்உறு
நல்லவர்க்குச் செல்வம் வந்தால்
எல்லவர்க்கும் நாவ லோர்க்கும்
காலம்
அறிந்து அருமையுடன் பெருமை அறிந்து
உதவிசெய்து, கனமே செய்வார்,
மால்அறியாத்
தண்டலைநீள் நெறியாரே,
அவரிடத்தே வருவார் யாரும்,
ஆலமரம்
பழுத்தவுடன், பறவையின்பால்
சீட்டு எவரே அனுப்பு வாரே.
இதன்
பொருள் ---
திருமாலால்
அறிய முடியாதவரும், திருத்தண்டலை
நீள்நெறி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருப்பவரும் ஆகிய சிவபெருமானே! உலகத்திலே நல்லவர்களுக்குச் செல்வம்
வந்தால், எல்லோர்க்கும், கற்றறிந்தவர்க்கும், அவருக்குத் தேவைப்படும் காலம் அறிந்தும், அவருடைய பெருமையை அறிந்தும் உதவி செய்து
பெருமைப்பட வாழ்வார்கள். அப்படிப்பட்ட செல்வர்களிடத்தே எல்லாரும் வருவார்கள்.
எப்படி என்றால், ஆலமரம் பழுத்தவுடன்,பறவைகளுக்கு யாரும் சீட்டு எழுதி
அனுப்புவதில்லையே.
செல்வம்
படைத்தவர்கள் அது இல்லாதவர்களைத் தேடி உதவுவார்கள்.
நாலடியார்
சொல்லும் செய்தி...
நடுவூருள்
வேதிகை சுற்றுக் கோள் புக்க
படுபனை
அன்னர் பலர்நச்ச வாழ்வார்,
குடிகொழித்தக்
கண்ணும் கொடுத்து உண்ணா மாக்கள்
இடுகாட்டுள்
ஏற்றைப் பனை.
இதன்
பொருள் ---
பலராலும்
விரும்பப்படும் வள்ளல்கள், ஊரின் நடுவிலே
சுற்றிலும் திண்ணை அல்லது மேடையோடு கூடிய காய்த்த பனைமரத்தை ஒப்பர். காய்த்த
பனையானது பெண்பனை என்று சொல்லப்படும். தமக்கு செல்வம் நிறைந்துள்ளபோதும்
ஒருவருக்கும் கொடுத்து உண்ணாத மக்கள், சுடுகாட்டில்
உள்ல காய்க்காத பனைமரம் போல்வர். காய்க்காத பனையை ஆண்பனை என்பர்.
ஊமரை
ப்ரசித்தர் என்றும் ---
ஊமன்
- வாய் பேச வராதவன்.
பிரசித்தம்
- வெளிப்படை, புகழ், நன்கு
அறியப்பட்ட நிலை.
மூடரைச்
சமர்த்தர் என்றும் ---
மூடர்
- அறியாமையால் மூடப்பட்டு அறிவு விளங்காமல் இருப்பவர்.
சமர்த்தன்
- சாமர்த்தியம். திறமை.
முட்டாளிடம்
என்ன திறமை இருக்கும்?
ஊனரை
ப்ரபுக்கள் என்றும் ---
ஊனம்
--- உறப்புக் குறைவோடு, உள்ளத்திலும்
அன்பு,
அறிவு, இரக்கம் ஆகிய
நற்பண்புகள் குறைந்தவரைக் குறிக்கும்.
பிரபு
- பெருமையில் சிறந்தவன், அதிகாரி, கொடையாளி.
உள்ளத்தில்
நற்பண்புகள் இல்லாதவனிடத்தில் கொடைப் பண்பு இருக்காது.
கோல
முத்தமிழ் ப்ரபந்தம் மாலருக்கு உரைத்து அநந்த கோடி இச்சை செப்பி, வம்பில் உழல் நாயேன் ---
அருமையான
பாலை, நிலத்திலே கொட்டினால்
பயனில்லை. அருமையான தமிழ்ப் பாடல்களைக் கொண்டு, வார் வழங்கும்
வள்ளல்களைப் பாடினாலும் பெருமை உண்டு. ஏதும் வழங்காதவர்களை நாடி, அவரிடத்தில்
இச்சகம் பேசுவது ஈனத்தனம்.
பொருட்புலவர்கள்
பலர் உண்டு. அவர்கள் கற்றதைக் கொண்டு பொருள் தேடுவதிலேயே சிந்தைஐ வைத்து
உழல்வார்கள். பொருள் உள்ளோரை, அவரிடம் இல்லாத
சிறப்புக்கள் அத்தனையும் பொருந்தி இருப்பதாக, பொய்யாகப் பாடுவார்கள். உண்மையாகவே
கருணை வடிவாக உள்ள இறைவனைப் பாடி எல்லா நலங்களையும் பெறலாம் என்னும் நல்லுள்ளமும், நம்பிக்கையும், முயற்சியும்
இல்லாதவர்கள். பொய்ய்யையே பேசுபவர்க்கு, பொய் தான் கிடைக்கும். பொய் என்பதன்
பொருள் இல்லை என்பது ஆகும். தாழை மலர் பொய் சொன்னது. வல்லோரும் விரும்பினாலும், இறைவன்
திருவடியைச் சேரும் பாக்கியம் அதற்கு இல்லால் போனது. "பொய் சொன்ன வாய்க்கு
போசனம் இல்லை" என்னும் வாசகம் எல்லோரும்" அறிந்ததே.
இதைப்
பின்வரும் "தண்டலையார் சதக"ப் பாடல் விளக்குவதை அறிவோமாக.
கைசொல்லும்
பனைகாட்டும் களிற்றுஉரியார்
தண்டலையைக் காணார் போல,
பொய்சொல்லும்
வாயினர்க்குப் போசனமும்
கிடையாது! பொருள் நில்லாது!
மைசொல்லும்
கார் அளிசூழ் தாழைமலர்
பொய்சொல்லி வாழ்ந்த துண்டோ?
மெய்சொல்லி
வாழாதான் பொய்சொல்லி
வாழ்வதில்லை! மெய்ம்மை தானே!
இல்லாத்தை
எல்லாம் சொன்னேன். இறுதியில் இல்லைமையே எனக்கு வாய்த்தது என்று ஒரு புலவர்
இரங்குவதைப் பாருங்கள்.
கல்லாத
ஒருவனை நான் கற்றாய் என்றேன்;
காடுஉறையும் ஒருவனை நாடுஆள்வாய் என்றேன்;
பொல்லாத
ஒருவனை நான் நல்லாய் என்றேன்;
போர் முகத்தை அறியானைப் புலியே என்றேன்;
மல்லாரும்
புயம் என்றேன் சூம்பல் தோளை;
வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன்;
இல்லாது
சொன்னேனுக்கு 'இல்லை' என்றான்
யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே.
--- இராமச்சந்திர
கவிராயர்.
வேண்டுவார்
வேண்டுவதை வரையாது வழங்கும் வள்ளலாக, பரம்பொருள் இருக்க, அதனை உணர்கின்ற அறிவும், அதற்கேற்ற
நல்வினைப் பயனும், முயற்சியும் இல்லாத ஏழைகள் (அறிவிலிகள்), தாம் கற்ற
கல்வியின் பயன்,
இறைவனுடைய
திருவடியைத் தொழுவதே என்பதை உணராதவர்கள், பொருள் உள்ளோர் இடம் தேடிச் சென்று, இல்லாததை
எல்லாம் சொல்லி,
வாழ்த்திப்
பாடுவார்கள். பண்புகளே அமையாதவனை, அவை உள்ளதாகவும், உடல் வளமே இல்லாதவனை, அவை நிறைந்து
உள்ளதாககவும்,
கற்பனையாகப்
பாடுவார். எல்லாம் கற்பனையாகவே முடியும். பாடுவதும் கற்பனையே. பொருள் கிடைப்பதும்
கற்பனையே.
இதனை, சுந்தரமூர்த்தி
சுவாமிகள் அருமையாகப் பாடியுள்ளார்....
தம்மையே
புகழ்ந்து இச்சை பேசினும்
சார்வினும் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மையாளரைப்
பாடாதே, எந்தை
புகலூர் பாடுமின், புலவீர்காள்!
இம்மையே
தரும், சோறும் கூறையும்;
ஏத்தல் ஆம்; இடர் கெடலும் ஆம்;
அம்மையே
சிவலோகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
மிடுக்கு
இலாதானை, “வீமனே; விறல்
விசயனே, வில்லுக்கு இவன்;” என்று,
கொடுக்கிலாதானை, “பாரியே!” என்று,
கூறினும் கொடுப்பார் இலை;
பொடிக்
கொள் மேனி எம் புண்ணியன்
புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!
அடுக்கு
மேல் அமருலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
“காணியேல் பெரிது உடையனே!
கற்று நல்லனே! சுற்றம், நல் கிளை,
பேணியே
விருந்து ஓம்புமே!” என்று
பேசினும் கொடுப்பார் இலை;
பூணி
பூண்டு உழப் புள் சிலம்பும் தண்
புகலூர் பாடுமின், புலவீர்காள்!
ஆணி
ஆய் அமருலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
நரைகள்
போந்து மெய் தளர்ந்து மூத்து
உடல் நடுங்கி நிற்கும் இக் கிழவனை,
“வரைகள் போல்-திரள் தோளனே!” என்று
வாழ்த்தினும் கொடுப்பார் இலை;
புரை
வெள் ஏறு உடைப் புண்ணியன்
புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!
அரையனாய்
அமருலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
வஞ்சம்
நெஞ்சனை, மா சழக்கனை,
பாவியை, வழக்கு இ(ல்)லியை,
பஞ்சதுட்டனை, “சாதுவே!” என்று
பாடினும் கொடுப்பார் இலை;
பொன்
செய் செஞ்சடைப் புண்ணியன்
புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!
நெஞ்சில்
நோய் அறுத்து உஞ்சு போவதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
நலம்
இலாதானை, “நல்லனே!” என்று,
நரைத்த மாந்தரை, “இளையனே!”,
குலம்
இலாதானை, “குலவனே!” என்று,
கூறினும் கொடுப்பார் இலை;
புலம்
எலாம் வெறி கமழும் பூம்புக
லூரைப் பாடுமின், புலவீர்காள்!
அலமரது
அமருலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
நோயனை, “தடந்தோளனே!” என்று,
நொய்ய மாந்தரை, “விழுமிய
தாய்
அன்றோ, புலவோர்க்கு எலாம்!” என்று,
சாற்றினும் கொடுப்பார் இலை;
போய்
உழன்று கண் குழியாதே, எந்தை
புகலூர் பாடுமின், புலவீர்காள்!
ஆயம்
இன்றிப் போய் அண்டம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
எள்
விழுந்த இடம் பார்க்கும் ஆகிலும்,
ஈக்கும் ஈகிலன் ஆகிலும்,
“வள்ளலே! எங்கள் மைந்தனே!” என்று
வாழ்த்தினும் கொடுப்பார் இலை;
புள்
எலாம் சென்று சேரும் பூம்புக
லூரைப் பாடுமின், புலவீர்காள்!
அள்ளல்பட்டு
அழுந்தாது போவதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
கற்றிலாதானை, “கற்று நல்லனே!”,
“காமதேவனை
ஒக்குமே”,
முற்றிலாதானை, “முற்றனே!”, என்று
மொழியினும் கொடுப்பார் இலை;
பொத்தில்
ஆந்தைகள் பாட்டு அறாப்புக
லூரைப் பாடுமின், புலவீர்காள்!
அத்தனாய்
அமருலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
“தையலாருக்கு ஒர் காமனே!” என்றும்,
“சால நல அழகு உடை ஐயனே!”
“கை உலாவிய வேலனே!” என்று,
கழறினும் கொடுப்பார் இலை;
பொய்கை
ஆவியில் மேதி பாய்புக
லூரைப் பாடுமின், புலவீர்காள்!
ஐயனாய்
அமருலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
அருட்புலவர்கள்
மிகச் சிலரே உண்டு. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் என்பதை உணர்ந்து, அதனை உடைய இறைவனையே பாடுவார்கள். மிக
உயர்ந்த அருட்செல்வத்தை வழங்கும் வள்ளல், பொருட்செல்வத்தையும் வழங்குவார். "இம்மையே தரும் சோறும் கூறையும்"
என்ற அருள் வாசகத்தை உன்னுக.
"பஞ்சாமிர்த
வண்ணம்" என்பது "பாம்பன் சுவாமிகள்" பாடி அருளிய அற்புதமானதொரு
துதி நூல். அதில் வரும் ஒருக பகுதியைக் காணுங்கள்.
வஞ்சம்
சூது ஒன்றும்பேர்,
துன்பம் சங்கடம்
மண்டும் பேர்,
மங்கும்பேய்
நம்பும்பேர்,
துஞ்சும் புன்சொல்
வழங்கும் பேர்,
மான் கணார் பெணார் த(ம்)மாலினால்
மதியதுகெட்டுத்
திரிபவர், தித்திப்பு
என மது துய்த்துச்
சுழல்பவர், இச்சித்தே
மனம்உயிர்
உட்கச் சிதைத்துமே
நுகர்த்தின துக்கக்
குணத்தினோர்,
வசையுறு துட்டச்
சினத்தினோர்,
மடிசொல மெத்தச்
சுறுக்குளோர்,
வலிஏறிய
கூரம் உளோர், உதவார்,
நடு ஏதும்இலார், இழிவார் களவோர்,
மணமலர்
அடியிணை விடுபவர் தமையினும்
நணுகிட
எனைவிடுவது சரி இலையே . . . . . .
தொண்டர்கள்
பதிசேராய்.
இதன்
பதவுரை வருமாறு ---
வஞ்சம்
சூது ஒன்றும் பேர் --- வஞ்சனையும் சூதும் மிக்கவர்கள்,
துன்பம்
சங்கடம் மண்டும் பேர் --- துன்பத்திலும் வருத்தத்திலும் உழல்பவர்கள்,
மங்கும்
பேய் நம்பும் பேர் --- அழியும் பேய்களை நம்புபவர்கள்
துஞ்சும்
புன்சொல் வழங்கும் பேர் --- கடுமையான பழித்துரைகளைப் பேசுபவர்கள்,
மான்
கணார் பெணார் தம் மாலினால் --- மான் போலும் விழியை உடைய பெண்களிடம் கொண்ட
மயக்கத்தால்
மதியது
கெட்டுத் திரிபவர் --- அறிவு கெட்டு அலைபவர்கள்,
தித்திப்பு
என --- இனிமை என நினைத்து
மது
துய்த்துச் சுழல்பவர் --- மது அருந்திச்
சுழன்று ஆடுபவர்கள்,
மனம்
இச்சித்தே உயிர் உட்கச் சிதைத்துமே --- விருப்பமொடு (கொல்லப்படும் பிராணிகளின்)
உயிரும் உள்ளமும் நடுங்கும்படியாக அவைகளைக் கொன்று
நுகர்
தின துக்கக் குணத்தினோர் --- தினந்தோறும் உணவாகக் கொள்ளும் கொடுமையா குணத்தினை
உடையவர்கள்,
வசையுறு
துட்டச் சினத்தினோர் --- பழிக்கும்படியான கோபத்தைக் கொண்டவர்கள்,
மடி
சொல மெத்தச் சுறுக்குளோர் --- கோள் சொல்லுவதில் அவசரப் படுவோர்கள்,
வலி
ஏறிய கூரம் உளோர் --- வன்மை கொண்ட பொறாமைக் குணத்தை உயைவர்கள்,
உதவார்
--- யாருக்கும் எதுவும் கொடுக்காதவர்கள்,
நடு
ஏதும் இலார் இழிவார், களவோர் ---
நீதியில்லாதவர்கள், கீழ்மக்கள், திருடர்கள் (ஆகிய இவர்கள் எல்லாம்)
மணமலர்
அடி இணை விடுபவர் --- உனது திருப்பாத கமலங்களைச் சேராதவர்கள்,
தமை
இனும் நணுகிட எனை விடுவது சரியிலையே --- இவர்களிடையே இன்னும் சேர்ந்து இருக்குமாறு
எனை விடுவது சரியில்லை,
தொண்டர்கள்
பதி சேராய் --- என்னை உன் அடியார்கள் திருக்கூட்டத்தில் சேர்ப்பாயாக.
கோபம்
அற்று
---
சினமானது
தான் உள்ள இடத்தை அழிக்கும். சார்ந்தவர்களையும் அழிக்கும்.
"சினம்என்னும்
சேர்ந்தாரைக் கொல்லி, இனம்என்னும்
ஏமாப்
புணையைச் சுடும்".
என்றருளினார்
திருவள்ளுவ நாயனார்.
இதனைப்
பின்வரும் பிரமாணங்களால் தெளிக.
அவ்வித்து
அழுக்காறு உரையாமை முன்இனிதே;
செவ்வியனாய்ச்
செற்றுச் சினங்கடிந்து வாழ்வு இனிதே;
கவ்வித்தாம்
கொண்டு தாம் கண்டது காமுற்று
வவ்வார்
விடுதல் இனிது. --- இனியவை நாற்பது.
இதன்
பதவுரை ---
அவ்வித்து
--- மனக்கோட்டம் செய்து, அழுக்காறு உரையாமை ---
பொறாமைச் சொற்களைச் சொல்லாமை, முன் இனிது --- மிக இனிது.
செவ்வியனாய்
--- மனக்கோட்டம் இல்லாதவனாய், சினம் செற்று கடிந்து
வாழ்வு இனிது --- கோபத்தைப் பகைத்து நீக்கி வாழ்வது
இனிது.
கவ்விக்கொண்டு
==- மனம் அழுந்தி நிற்ப, தாம் கண்டது ---
தாங்கள் கண்ட பொருளை , காமுற்று (பெற) ---
விரும்பி, வவ்வார் ---
(சமயங்கண்டு) அபகரியரதவராய், விடுதல் --- (அதனை
மறந்து) விடுதல்,இனிது -.
கர்ப்பத்தால்
மங்கையருக்கு அழகு குன்றும்,
கேள்வி இல்லா அரசனால் உலகம் பாழ் ஆம்,
துர்ப்புத்தி
மந்திரியால் அரசுக்கு ஈனம்,
சொல் கேளாப் பிள்ளைகளால் குலத்துக்கு ஈனம்,
நற்புத்தி
கற்பித்தால் அற்பர் கேளார்,
நன்மை செய்ய, தீமை உடன் நயந்து செய்வார்,
அற்பரோடு இணங்கிடில் பெருமை தாழும்,
"அரிய தவம் கோபத்தால் அழிந்து போமே"!
--- விவேக சிந்தாமணி.
இதன்
பொருள் ---
திருமணம்
ஆன பெண்களுக்கு, கர்ப்பம்
அடைந்தால்,
அழகு
சற்றே குறையும்.
விசாரித்து
அறியாத அரசன் இருந்தால், அவனால் ஆளப்படுகின்ற உலகம் செழிக்காது.
கெட்ட
புத்தியினை உடைய அமைச்சன் ஒருவன் இருந்தால், அவனால் அரசுக்குக் கேடு
உண்டாகும்.
தாய்
தந்தையர் கூறும் அறிவுரைகளைக் கேட்டு அதன்படி நடவாத மகன்களால் குலப் பெருமை
கெடும்.
கீழ்
மக்களுக்கு நல்ல புத்திமதிகளைச் சொன்னால் கேட்க மாட்டார்கள். அந்தக் கீழ் மக்களுக்கு நன்மை தருபவற்றைச்
செய்தால்,
அதற்கு
நன்றி பாராட்டாமல், உடனே அந்த நன்றியினை மறந்து, தீமைகளை விரும்பிச்
செய்வார்கள்.
இத்தகைய
புல்லறிவாளரோடு நட்பு பூண்டு பழகினால், அவ்வாறு நட்புக் கொண்டவருடைய பெருமை
சிறுமை உறும்.
சினத்தால், செய்தற்கு அரிய
தவமானது அழிந்து போகும்.
மூங்கிலில்
பிறந்த முழங்குதீ மூங்கில்
முதல் அற முருக்குமா போல்
தாங்க
அரும் சினத்தீ தன்னுளே பிறந்து
தன்உறு கிளை எலாம் சாய்க்கும்,
ஆங்கு
அதன் வெம்மை அறிந்தவர் கமையால்
அதனை உள்ளடக்கவும் அடங்காது
ஓங்கிய
கோபத் தீயினை ஒக்கும்
உட்பகை உலகில் வேறு உண்டோ? --- விவேக
சிந்தாமணி.
இதன்
பொருள் ---
மலைகளில்
அடர்ந்து இருக்கின்ற மூங்கில் காட்டில் மூங்கில்கள் ஒன்றோடொன்று உராய்வதாலே
நெருப்பு உண்டாகும். அந்த நெருப்பு மூங்கில்களை அழிக்கும். அத்தோடு அருகில் உள்ள
கிளை மூங்கில்களையும் அழிக்கும். அதுபோல, ஒருவனிடத்தில் வந்த கோபமானது, பெரியோர்
தடுத்தாலும் அடங்காமல் அவனை அழிப்பது அல்லாமல், அவனுடைய சுற்றத்தையும்
அழித்துவிடும். எனவே, கொடுமையான கோபத்தை விட்டுவிட வேண்டும். அதைவிட உள் பகை வேறு
இல்லை.
கோபத்தால்
கௌசிகன் தவத்தைக் கொட்டினான்,
கோபத்தால்
நகுடனும் கோலம் மாற்றினான்,
கோபத்தால்
இந்திரன் குலிசம் போக்கினான்,
கோபத்தால்
இறந்தவர் கோடி கோடியே. --- விவேக சிந்தாமணி.
விசுவாமித்திரன்
தனது கோப மிகுதியினாலே வசிட்டரோடு சபதம் புரிந்து தனது தவத்தை எல்லாம் இழந்தான்.
நகுடன் என்னும் அரசன் நூறு அசுவமேத யாகங்களைப் புரிந்து இந்திர பதவியை அடைந்தும், முனிவர்களிடம்
தனது கோபத்தைக் காட்டியதால், அகத்திய முனிவரின் சாபத்தால், அப் பதவியை
இழந்து மீண்டும் பாம்பாக ஆனான். இந்திரன் ஒரு காலத்தில் உக்கிரபாண்டியனோடு போர்
புரிந்து தன்னுடைய வச்சிராயுதத்தைப் போக்கினான். கோபத்தால் எண்ணிறந்த பேர் உயிர்
துறந்தனர்.
"கோபமே
பாவங்களுக் கெல்லாம் தாய்தந்தை!
கோபமே குடிகெ டுக்கும்!
கோபமே ஒன்றையும் கூடிவர வொட்டாது!
கோபமே துயர்கொ டுக்கும்!
கோபமே
பொல்லாது! கோபமே சீர்கேடு!
கோபமே உறவ றுக்கும்!
கோபமே பழிசெயும்! கோபமே பகையாளி!
கோபமே கருணை போக்கும்!
கோபமே
ஈனமாம் கோபமே எவரையும்
கூடாமல் ஒருவ னாக்கும்!
கோபமே மறலிமுன் கொண்டுபோய்த் தீயநர
கக்குழி யினில்தள் ளுமால்!
ஆபத்தெ
லாந்தவிர்த் தென்னையாட் கொண்டருளும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!" --- அறப்பளீசுர சதகம்.
இதன்
பதவுரை ---
ஆபத்து
எலாம் தவிர்த்து என்னை ஆட்கொண்டருளும் அண்ணலே --- இடையூறுகளை யெல்லாம் நீக்கி
என்னை ஏற்றுக்கொண்டருளும் பெரியோனே!, அருமை மதவேள் - அரிய
மதவேள், அனுதினமும் மனதில்
நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே -
சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,
கோபமே
பாவங்களுக்கு எல்லாம் தாய் தந்தை --- சினமே எல்லாப் பாவங்களுக்கும் அன்னையும்
அப்பனும் ஆகும்,
கோபமே
குடிகெடுக்கும் --- சினமே குடியைக் கெடுக்கும்,
கோபமே
ஒன்றையும் கூடிவர ஒட்டாது --- சினமே எதனையும் அடைய விடாது,
கோபமே
துயர் கொடுக்கும் --- சினமே துயரத்தைத் தரும்,
கோபமே
பொல்லாது --- சினமே பொல்லாதது,
கோபமே
சீர்கேடு --- சினமே புகழைக் கெடுப்பது,
கோபமே
உறவு அறுக்கும் --- சினமே உறவைத் தவிர்க்கும்,
கோபமே
பழி செயும் --- சினமே பழியை உண்டாக்கும்,
கோபமே
பகையாளி --- சினமே ஒருவனுக்கு மாற்றான்,
கோபமே
கருணை போக்கும் --- சினமே அருளைக் கெடுக்கும்,
கோபமே
ஈனம் ஆம் --- சினமே இழிவு ஆகும்,
கோபமே
எவரையும் கூடாமல் ஒருவன் ஆக்கும் --- சினமே ஒருவரையும் சேர்க்காமல் தனியன் ஆக்கும்,
கோபமே
மறலிமுன் கொண்டுபோய்த் தீய நரகக் குழியில் தள்ளும் --- சினமே காலன்முன்
இழுத்துச்சென்று கொடிய நரகக் குழியிலே வீழ்த்தும்.
மற்றும்
அந்த மோகம் அற்று ---
கோபம்
அல்லாமல், மோகமும் அறவேண்டும்
என்கின்றார் அடிகளார்.
மோகம்
என்பது அறுவகைக் குற்றங்களுள் ஒன்று. இவை உயிர்க்குத் துன்பத்தைத் தருவன என்பதால் வடநூலார், "அரிட்ட வர்க்கம்"
என்பர்.
இது
உயிர்களுக்கு உள்ள தாமத குணத்தால் விளைவது. தாமத குணத்தால் மூடத்தனம் விளங்கும். அறிவு
மயங்கும். மோக உணர்வு மிகுந்து இருக்கும். இதனால் விளைவது துன்பமே. ஆதலால், மோகத்தை விடவேண்டும்
என்றார் அடிகளார்.
மோகத்தை
வீணன் என்கின்றார் வள்ளல்பெருமான்.
லோக
கத்தர் பித்தர் பங்கில் ---
"கர்த்தர்"
என்னும் சொல் "கத்தர்" என வந்தது.
கர்த்தர்
- தலைவர், கடவுள்.
உலகநாயகரான
சிவபெருமானை,
நம்பியாரூரர்
பெருமான் "பித்தா" என்றார்.
அந்தப்
பித்தனுக்கு இடப்பாகத்தில் உறைபவள் உமாதேவியார்.
வாரி
பொட்டு எழ
---
சூரபதுமன்
இறுதியில் கடலுக்குள் ஒளிந்தான். எம்பெருமான் தனது ஞானசத்தியாகிய வேலாயுத்ததை
விடுத்து அருளியதும் கடல் வற்றி வறண்டு போனது. உயிர்களின் ஆசை கடல் போன்று உள்ளது.
ஞானசத்தி ஆசையை அழித்தது.
வேலை வற்றி வறண்டு சுறீல் சுறீல் என,
மாலை வெற்பும் இடிந்து திடீல்
திடீல் என,
மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயாஐயா
என ...இசைகள் கூற,
வேல் எடுத்து நடந்த திவாகரா! சல
வேடு வப்பெண் மணந்த புயாசலா!
தமிழ்
வேத வெற்பில் அமர்ந்த
க்ருபாகரா! சிவ ...... குமரவேளே. --- திருப்புகழ்.
திரைக்கடலை
உடைத்து, நிறை புனல் கடிது
குடித்து, உடையும் உடைப்பு அடைய அடைத்து, உதிரம்
நிறைத்து விளையாடும். ---
வேல் வகுப்பு.
க்ரவுஞ்சம்
வீழ நெட்டு அயில் துரந்த ---
கிரவுஞ்சம்
- உயிர்களின் வினைத் தொகுதி.
இலட்சத்து ஒன்பது வீரர்களையும் தாரகனுடைய
மாயக் கருத்துக்கு இணங்கி, கிரவுஞ்சும் என்னும் மலை வடிவாய் இருந்த அசுரன், தன்னிடத்தில் மயக்கி இடர் புரிந்தான். முருகப் பெருமான் தனது
திருக்கரத்தில் இருந்து வேலை விடுத்து, கிரவுஞ்ச மலையைப் பிளந்து, அதில் இருந்த அனைவரையும் விடுவித்து அருள் புரிந்தார்.
"மலை பிளவு பட மகர சலநிதி குறுகி மறுகி முறை இட முனியும்
வடிவேலன்" என்றார் அடிகளார் சீர்பாத வகுப்பில். "மலை ஆறு கூறு எழ வேல்
வாங்கினான்" என்பார் கந்தர் அலங்காரத்தில். "கனக் கிரவுஞ்சத்தில்
சத்தியை விட்டவன்" என்றார் கச்சித் திருப்புகழில்.
"சுரர்க்கு வஞ்சம் செய் சூரன்
இள க்ரவுஞ்சம் தனோடு
துளக்க எழுந்து, அண்ட கோளம் ...... அளவாகத்
துரத்தி, அன்று இந்த்ர லோகம்
அழித்தவன் பொன்றுமாறு,
சுடப்பருஞ் சண்ட வேலை
...... விடுவோனே!"
என்றார் திருப்பரங்குன்றத் திருப்புகழில்.
கிரவுஞ்ச மலையானது மாயைக்கு இடமாக அமைந்திருந்தது. கிரவுஞ்சமலை என்பது
உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய
வேலாயுதம், கிரவுஞ்சமலை
என்னும் வினைத்தொகுதியை அழித்தது. இது உயிர்களின் வினைத் தொகுதியை அழித்து, அவைகளைக் காத்து அருள் புரிந்த செய்தி ஆகும்.
"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்
கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்
பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட
தனி வேலை வாங்கத் தகும்."
என்னும் திருமுருகாற்றுப்படை வெண்பாப் பாடலாலும் இனிது விளங்கும்.
"நீசர்கள் தம்மோடு எனது தீவினை எலாம் மடிய, நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா" என்று பழநித் திருப்புகழில்
அடிகளார் காட்டியபடி, நமது
வினைகளை அறுத்து எறியும் வல்லமை முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலுக்கே உண்டு
என்பது தெளிவாகும். "வேலுண்டு வினை இல்லை" என்னும் ஆப்த வாக்கியமும்
உண்டு. "வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்" என்றார் கந்தர் அநூபூதியில்.
ஞால
வட்டம் முற்ற உண்டு நாக மெத்தையில் துயின்ற நாரணற்கு அருள் சுரந்த மருகோனே ---
திருமால்
ஞாலவட்டத்தை உண்டவர் என்பதும், நாமெத்தையில் துயில்பவர்
என்பதும் பின்வரும் பிரமாணங்களால் விளங்கும்.
"பண்டுஏழ்உலகு
உண்டான்", அவை கண்டானும்
முன்அறியா
ஒண்தீ
உரு ஆனான்உறை கோயில் நிறை பொய்கை
வண்தாமரை
மலர்மேல்மட அன்னநம் நடை பயில
வெண்தாமரை
செந்தாது உதிர் வீழிம்மிழ லையே. --- திருஞானசம்பந்தர்.
"உலகம்
உண்ட பெருவாயா!"
உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும்
சுடர்சூழ் ஒளிமூர்த்தி!.
நெடியாய்! அடியேன் ஆருயிரே!
திலதம்
உலகுக் காய்நின்ற
திருவேங்கடத்து எம் பெருமானே!
குலதொல்
அடியேன் உன்பாதம்
கூடு மாறு கூறாயே. --- நம்மாழ்வார்.
ஏக
மூர்த்தி, இரு மூர்த்தி,
மூன்று மூர்த்தி, பல மூர்த்தி,
ஆகி
ஐந்து பூதமாய்,
இரண்டு சுடராய் அருவாகி,
"நாகம்
ஏறி நடுக்கடலுள்
துயின்ற நாராயணனே!" உன்
ஆகம்
முற்றும் அகத்து அடக்கி,
ஆவி அல்லல் மாய்த்ததே. ---
நம்மாழ்வார்.
ஏகமூர்த்தி
மூன்றுமூர்த்தி நாலுமூர்த்தி நன்மைசேர்
போகமூர்த்தி
புண்ணியத்தின் மூர்த்தி எண்ணில் மூர்த்தியாய்*
"நாகமூர்த்தி
சயனமாய் நலங்கடல் கிடந்து*மேல்
ஆகமூர்த்தி"
ஆயவண்ணம் என்கொல்?ஆதி தேவனே! --- திருமழிசை ஆழ்வார்.
திருமாலுக்கு
அருள் சுரந்தவர் திருமுருகப் பெருமான் என்பதற்குப் பிரமாணங்கள் காண்க.
சிலைமகள்
நாயன், கலைமகள் நாயன்,
திருமகள் நாயன் ...... தொழும் வேலா! --- திருப்புகழ்.
"படைத்து
அளித்து அழிக்கும் திரிமூர்த்திகள் தம்பிரானே" ---
திருப்புகழ்.
திருமால்
முருகரை வழபட்டுத் தாரகாசுரனால் கவரப்பட்ட சக்கராயுதத்தைப் பெற்றார் என்ற தணிகைப்
பாராணம் கூறும். விஷ்ணு தீர்த்தம் திருக்கோயிலுக்கு மேற்கே, அர்ச்சகர்களின் வீடுகளின் எதிரில் உளது.
நாகபட்டினத்து
அமர்ந்த பெருமாளே ---
நாகப்பட்டினம், சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
நாகப்பட்டினம்
நகரில் காயாரோகணேசுவரர் திருக்கோயில் உள்ளது. இதற்கு மிக அருகிலேயே 108 திவ்யதேசங்களில் ஒன்றான நாகை சௌரிராஜப்
பெருமாள் ஆலயம் இருக்கிறது.
நாகப்பட்டினத்திற்கு
அருகில் வடக்கு பொய்கைநல்லூர் என்னும் தேவார வைப்புத் தலம் உள்ளது. நாகப்பட்டினம்
- வேளாங்கண்ணி சாலையில் தெற்கே 5 கி.மீ. தொலைவில்
உள்ள வடக்கு பொய்கைநல்லூர் ஒரு தேவார வைப்புத் தலம். இத்தலத்தின் மூலவர் நந்தி
நாதேசுவரர் ஒரு சுயம்பு லிங்கம். அம்பாள் பெயர் செளந்தரநாயகி.
இறைவர்
: காயாரோகணேசுவரர், ஆதிபுராணர்.
இறைவியார்
: நீலாயதாட்சி, கருந்தடங்கண்ணி.
தல
மரம் : மாமரம்.
தீர்த்தம் : தேவ தீர்த்தம், புண்டரீக தீர்த்தம்.
தேவார
முதலிகள் ஆகிய திருஞானசம்பந்தர்,
திருநாவுக்கரசர், நம்பியாரூரர் வழிபட்டுத்
திருப்பதிகங்கள் அருளப் பெற்ற திருத்தலம்.
கடற்கரையை
ஒட்டியுள்ள ஊர்கள் பட்டினம் என்ற பெயரால் வழங்கப் பெறும். நாகர்கள் என்ற ஒரு
வகுப்பினர் இந்த இடத்தில் குடியேறி வாழ்ந்து வந்ததால் இவ்வூர் நாகப்பட்டினம் எனப் பெயர்
பெற்றது. அஷ்ட நாகங்களில் ஒன்றான ஆதிசேஷன் என்ற நாகம் பூசித்த தலம் ஆதலால்
இப்பெயர் பெற்றது என்று தலபுராணம் கூறுகிறது.
சப்தவிடங்கத்
தலங்களில் ஒன்றான இத்திருத்தலத்தில், (64 சக்தி பீடங்களில்
ஒன்று) அம்பாள் நீலாயதாட்சி அருளாட்சி செய்கிறாள். காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி என்ற வரிசையில்
இத்தலத்து அம்பிகை நாகை நீலாயதாட்சி என்று வழங்கப் பெறுகிறாள்.
இறைவன் அளித்த அதே உடலோடு சொர்க்கத்தில்
இடம் கேட்டு தவம் செய்த புண்டரீக முனிவரின் பக்தியில் உள்ளம் உருகி முனிவரை அதே
உடலோடு (காயம்) ஆரோகணம் செய்து முக்தி கொடுத்ததால் இத்தலத்து இறைவன்
காயாரோகனேசுவரர் என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள் செய்கிறார். இங்குள்ள
சிவலிங்கம் புண்டரீக முனிவரால் தோற்றுவிக்கப்பட்டதற்கு அத்தாட்சியாக அவரின் திரு
உருவம் உட்பிரகார கிழக்குப் பகுதி தூணில் அழகுற செதுக்கப்பட்டிருக்கிறது.
அம்பாள் நீலாயதாட்சி இங்கு
கருந்தடங்கண்ணி என்ற பெயரில் கன்னிப் பெண்ணாகக் காட்சி அளிக்கிறாள். ஆகையால்
சுவாமிக்குப் பக்கத்தில் அமையாது தனியாகக் கோவில் கொண்டு அருள் பாலிக்கிறாள்.
நாகாபரண
பிள்ளையார் இக்கோயிலின் நுழைவாசலில் தனிக்கோயில் கொண்டு அருள் பாலிக்கிறார்; பாம்புகளை நகைகளாக அணிந்துகொண்டு ஆசி
வழங்கும் பிள்ளையார் இவர் ஒருவரே. திருநாகேஸ்வரத்திற்கு முன்பான இக்கோயிலில், ராகு, கேது தோஷங்கள் உள்ளவர்கள் வழிபடவேண்டிய
பிள்ளையாராக இருக்கிறார்.
இத்தலத்திலுள்ள
சனிபகவான் தசரத சக்கரவர்த்தியால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தலம்
சனி பகவானுக்கு உகந்த தலம். தசரத மன்னனுக்கு சனிபகவான் தான் என்றும் இத்தலத்தில்
நிலைத்திருப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறான் என்பதை இத்தல புராணம் விரிக்கிறது.
இங்கு அனைத்து கிரகங்களும் சனி பகவானை மேற்குப் பார்த்தபடி இருப்பதும், சனி பகவான் தெற்குப் பார்த்தவாறு
இருப்பதும் இத்தலத்தின் சிறப்பம்சமாகும். ஆலயத்தின் தீர்த்தங்களாக கோவிலுக்கு
மேற்கில் புண்டரீக தீர்த்தமும்,
முத்தி
மண்டபம் அருகில் தேவ தீர்த்தமும் உள்ளன.
தனி
சந்நிதியில் ஒரே கல்லினால் ஆன ஆறுமுகப் பெருமான் பன்னிரு திருக்கரங்களுடன் மயில்
மீது அமர்ந்த திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். தேவியர்
இருவரும் அருகில் காட்சி தருகின்றனர்.
அதிபத்த நாயனார்
வரலாறு
அவதாரத் தலம் : நாகப்பட்டினத் திருநகர் - நுளைபாடி(நம்பியார் நகர்)
வழிபாடு : இலிங்க வழிபாடு.
முத்தித் தலம் : நாகைக்காரோணம்.
குருபூசை நாள் : ஆவணி - ஆயில்யம்.
சோழ
நாட்டிலே, நாகப்பட்டினத்திலே, நுளைப் பாடியிலே, வலைஞர் குலத்திலே அவதரித்தவர் அதிபத்த
நாயனார். அவர் பரதவர்களுக்குத் தலைவர். சிவபத்தியில் சிறந்தவர். வலைப்படும் மீன்களில் ஒரு தலைமீனைச்
சிவபெருமானுக்கு என்று கடலிலே விடுவது அவரது வழக்கம். வலையில் ஒரே மீன் படினும், அதனைச் சிவபெருமானுக்கு என்றே அவர்
கடலில் விடுவார்.
சிவபெருமான்
திருவருளால் நாள்தோறும் ஒவ்வொரு மீனே கிடைப்பது ஆயிற்று. வழக்கம்போல் அதிபத்தர்
அதனைக் கடலிலே விட்டு வந்தார். நாயனார் செல்வம் சுருங்கிற்று. சுற்றங்கள் உணவு இன்றி வருந்தின. உணவு
இன்மையால் நாயனார் திருமேனியும் மெலிந்தது. அது குறித்து அவர் வருந்தவதில்லை. சிவபத்தியில்
மட்டும் நாயனாருக்குத் தளர்ச்சி தோன்றவேயில்லை.
ஒரு
நாள் வலையில் பொன்மீன் ஒன்றே அகப்பட்டது. அதை வலைஞர்கள், நாயனார் முன்னிலையில் கொண்டு
வந்தார்கள். நாயனார் அதைக் கண்டு, "இது என்ன பொன் மீன்? உறுப்புக்களிலும் நவமணிகள்
அமைந்திருக்கின்றன. இது சிவபெருமானுக்கு ஆக" என்று அதனையும் கடலிலே
விடுத்தார்.
அப்பொழுது
சிவபெருமான் நாயனாருக்குக் காட்சி அளித்தார். நாயனார் அகம் குழைந்து தொழுதார். சிவபெருமான்
அவருக்குச் சிவலோக வாழ்வு தந்து அருளினார்.
அதிபத்த
நாயனார் வழிபட்ட அமுதீசர் திருக்கோயில் நுளைபாடியில் (நம்பியார் நகர்) உள்ளது.
சேக்கிழார் பெருமான் குறிப்பிடும் நாகப்பட்டினத்
திருநகர "நுளைபாடி" என்பது தற்போது "நம்பியார் நகர்" என்று
வழங்கப்படுகின்றது. இது நாகப்பட்டினம் நகரின் ஒரு பதியாகும்.
கற்றார்
பயில் கடல் நாகைக்காரோணம் என்பது திருஞானசம்பந்தர் திருவாக்கு. காளமேகப் புலவர்
இவ்வூருக்கு வந்தபோது பசியால், வீதியில் பாக்கு
விளையாடும் பாலகர்களை நோக்கி 'சோறு எங்கு விக்கும்?' என்று கேட்டார். அச்சிறுவர்கள் 'தொண்டையில் விக்கும்' என்று பதில் கூறினர். (விற்கும் என்பது
பேச்சு வழக்கில் விக்கும் என வழங்குதல் உண்டு.) புலவர் சிறுவர்கள் மீது
கோபங்கொண்டு, அவர்கள் மீது
வசைபாடும் பொருட்டு வரை சுவர் ஒன்றில் 'பாக்குத்
தறித்து விளையாடும் பாலகர்க்கு...'
என்று
எழுதி நிறுத்தி விட்டு, பசி தீர்ந்து எஞ்சிய
பகுதியைப் பாடி முடிப்போம் என்று சென்று, பசியாறி
வந்து பார்க்கும்போது, அப்பாடலின் இரண்டாம்
அடி 'நாக்குத் தமிழ் உரைக்கும்
நன்னாகை' என்று எழுதி
இருப்பதைக் கண்டு, சிறுவர்களின்
கல்வியறிவை மெச்சிச் சென்றார் என்பது தனிப்பாடல் திரட்டில் காணப்படும் வரலாறு.
கருத்துரை
முருகா!
உன்னையே பணிந்து முத்தி பெற அருள்வாய்.
No comments:
Post a Comment