எண்கண் - 0843. சந்தனம் திமிர்ந்து





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சந்தனம் திமிர்ந்து (எண்கண்)

முருகா!
அடியேன் மனத்தைக் கோயிலாக் கொண்டு எழுந்து அருள்வாய்.


தந்த தந்த தந்த தந்த, தந்த தந்த தந்த தந்த
     தந்த தந்த தந்த தந்த ...... தனதான


சந்த னந்தி மிர்ந்த ணைந்து குங்கு மங்க டம்பி லங்கு
     சண்ப கஞ்செ றிந்தி லங்கு ...... திரடோளுந்

தண்டை யஞ்சி லம்ப லம்ப வெண்டை யஞ்ச லன்ச லென்று
     சஞ்சி தஞ்ச தங்கை கொஞ்ச ...... மயிலேறித்

திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்த னென்று
     சென்ற சைந்து கந்து வந்து ...... க்ருபையோடே

சிந்தை யங்கு லம்பு குந்து சந்த தம்பு கழ்ந்து ணர்ந்து
     செம்ப தம்ப ணிந்தி ரென்று ...... மொழிவாயே

அந்த மந்தி கொண்டி லங்கை வெந்த ழிந்தி டும்ப கண்டன்
     அங்க முங்கு லைந்த ரங்கொள் ...... பொடியாக

அம்ப கும்ப னுங்க லங்க வெஞ்சி னம்பு ரிந்து நின்று
     அம்பு கொண்டு வென்ற கொண்டல் ...... மருகோனே

இந்து வுங்க ரந்தை தும்பை கொன்றை யுஞ்ச லம்பு னைந்தி
     டும்ப ரன்ற னன்பில் வந்த ...... குமரேசா

இந்தி ரன்ப தம்பெ றண்டர் தம்ப யங்க டிந்த பின்பு
     எண்க ணங்க மர்ந்தி ருந்த ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


சந்தனம் திமிர்ந்து அணைந்து, குங்குமம் கடம்பு இலங்கு,
     சண்பகம் செறிந்து இலங்கு ...... திரள்தோளும்,

தண்டை அம் சிலம்பு அலம்ப, வெண்டையம் சலன்சல் என்று
     சஞ்சு இதம் சதங்கை கொஞ்ச, ...... மயில்ஏறி,

திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்தன என்று
     சென்று அசைந்து உகந்து வந்து, ...... க்ருபையோடே

சிந்தை அம் குலம் புகுந்து, சந்ததம் புகழ்ந்து உணர்ந்து,
     செம்பதம் பணிந்து இரு என்று ...... மொழிவாயே.

அந்த மந்தி கொண்டு இலங்கை வெந்து அழிந்து, இடும்பகண்டன்
     அங்கமும் குலைந்து, அரம்கொள் ...... பொடியாக,

அம்ப கும்பனும் கலங்க, வெஞ்சினம் புரிந்து நின்று,
     அம்பு கொண்டு வென்ற கொண்டல் ...... மருகோனே!

இந்துவும், கரந்தை, தும்பை, கொன்றையும், சலம் புனைந்தி-
     டும் பரன் தன் அன்பில் வந்த ...... குமரஈசா!

இந்திரன் பதம் பெற, ண்டர் தம் பயம் கடிந்த பின்பு,
     எண்கண் அங்கு அமர்ந்து இருந்த ...... பெருமாளே.


பதவுரை

      அந்த மந்தி கொண்டு --- அந்தப் புகழ் பெற்ற குரங்காம் அனுமனைக் கொண்டு

     இலங்கை வெந்து அழிந்து --- இலங்கை எரியுண்டு அழியவும்,

      இடும்ப கண்டன் அங்கமும் குலைந்து அரங்கொள் பொடியாக --- கொடுஞ் செயலைக் கொண்ட இராவணன் தனது உடலும் அழிபட்டு, ரம்பத்தால் அராவினது போல பொடிப்பொடியாகத் தூளாகவும்,

       அம்ப கும்பனும் கலங்க --- அம்பு முதலிய பாணங்களைக் கொண்ட கும்பகர்ணனும் உள்ளம் கலங்குமாறு

      வெஞ்சினம் புரிந்து நின்று --- மிக்க கோபத்துடன் போர்க்களத்தில் நின்று

      அம்பு கொண்டு வென்ற கொண்டல் மருகோனே --- அம்புகளை ஏவி வென்ற மேகவர்ணன் ராமனின் மருகனே,

      இந்துவும் --- பிறைச் சந்திரனையும்,

     கரந்தை --- திருநீற்றுப் பச்சையும்,

     தும்பை --- தும்பை மலரையும்,

     கொன்றையும் --- கொன்றை மலரையும்,

     சலம் புனைந்திடும் --- கங்கையையும் திருச்சடையில் அழகுபெற வைத்துள்ள

      பரன் தன் அன்பில் வந்த குமர ஈசா --- சிவபெருமான் தேவர்கள் பால்வைத்த அன்பினால் தோன்றிய குமாரக் கடவுளே!

      இந்திரன் பதம் பெற அண்டர் தம் பயம் கடிந்த பின்பு ---  தேவேந்திரன் தன் பதவியை மீண்டும் பெறும்படியாக, தேவர்களுடைய பயத்தைத் தீர்த்த பின்னர்

      எண்கண் அங்கு அமர்ந்து இருந்த பெருமாளே --- எண்கண் என்ற திருத்தலத்தில் வந்து வீற்றிருந்த பெருமையில் மிக்கவரே!

      சந்தனம் திமிர்ந்து அணைந்து --- சந்தனத்தை நிரம்பப் பூசிக் கலந்து,

      குங்குமம் கடம்பு இலங்கு சண்பகம் --- குங்குமமும், கடப்ப மலரும், விளங்கும் சண்பக மலரும்,

      செறிந்து இலங்கு திரள்தோளும் --- நெருங்கி மிளிரும் திரண்ட திருத்தோள்களும் துலங்க,

      தண்டை, அம் சிலம்பு அலம்ப --- தண்டையும், அழகிய சிலம்பும் ஒலி செய்ய,

      வெண்டையம் சலன்சல் என்று --- வீர வெண்டயம் என்னும் காலணி சலன் சல் என்று ஒலிக்க,

      சஞ்சு இதம் சதங்கை கொஞ்ச --- அழகிய உரு அமைந்த கிண்கிணியானது கொஞ்சுவதுபோல ஒலிக்க,

      மயில் ஏறி --- மயில் வாகனத்தில் ஏறி

      திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்தனந் தனந்தன என்று சென்று அசைந்து உகந்து வந்து --- திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்தனந் தனந்தன என்ற தாள ஒத்தில் ஆடி அசைந்து ஆனந்தத்துடன் வந்து,

      க்ருபையோடே சிந்தை அம் குலம் புகுந்து --- அருள் கூர்ந்து எனது அழகிய மனக் கோயிலுள் புகுந்து,

      சந்ததம் புகழ்ந்து உணர்ந்து --- எப்போதும் உணர்ந்து ஓதிப் புகழ்ந்து,

      செம்பதம் பணிந்து இரு என்று மொழிவாயே --- செவ்விய திருவடிகளைப் பணிந்து இருப்பாய் என்று எனக்குக் கூறி அருள்வாயாக.


பதவுரை


     அந்தப் புகழ் பெற்ற குரங்காம் அனுமனைக் கொண்டு இலங்கை எரியுண்டு அழியவும்,  கொடுஞ் செயலைக் கொண்ட இராவணன் தனது உடலும் அழிபட்டு, ரம்பத்தால் அராவினது போல பொடிப்பொடியாகத் தூளாகவும்,  அம்பு முதலிய பாணங்களைக் கொண்ட கும்பகர்ணனும் உள்ளம் கலங்குமாறு மிக்க கோபத்துடன் போர்க்களத்தில் நின்று அம்புகளை ஏவி வென்ற மேகவர்ணன் ராமனின் மருகனே,

         பிறைச் சந்திரனையும், திருநீற்றுப் பச்சையையும், தும்பை மலரையும், கொன்றை மலரையும், கங்கையையும் திருச்சடையில் அழகுபெற வைத்துள்ள சிவபெருமான் தேவர்கள் பால்வைத்த அன்பினால் தோன்றிய குமாரக் கடவுளே!

     தேவேந்திரன் தன் பதவியை மீண்டும் பெறும்படியாக, தேவர்களுடைய பயத்தைத் தீர்த்த பின்னர் எண்கண் என்ற திருத்தலத்தில் வந்து வீற்றிருந்த பெருமையில் மிக்கவரே!

         சந்தனத்தை நிரம்பப் பூசிக் கலந்து, குங்குமமும், கடப்ப மலரும், விளங்கும் சண்பக மலரும் நெருங்கி மிளிரும் திரண்ட திருத்தோள்களும் துலங்க,  திருவடிகளில் தண்டையும், அழகிய சிலம்பும் ஒலி செய்ய, வீர வெண்டயம் என்னும் காலணி சலன் சல் என்று ஒலிக்க, அழகிய உரு அமைந்த கிண்கிணியானது கொஞ்சுவதுபோல ஒலிக்க,  மயில் வாகனத்தில் ஏறி, திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்தனந் தனந்தன என்ற தாள ஒத்தில் ஆடி அசைந்து ஆனந்தத்துடன் வந்து, அருள் கூர்ந்து எனது அழகிய மனக் கோயிலுள் புகுந்து, எப்போதும் உணர்ந்து ஓதிப் புகழ்ந்து, செவ்விய திருவடிகளைப் பணிந்து இருப்பாய் என்று எனக்குக் கூறி அருள்வாயாக.


விரிவுரை

சிந்தையங்குலம் ---

சிந்தை + அம் + குலம். மனம் என்னும் அழகிய கோயில்.

சிந்தாகுலம் தீர்ந்தால் சிந்தையானது அழகிய கோயிலாகும்.

அறவையேன் மனமே கோயிலாக் கொண்டு, ண்டு,
    அளவிலா ஆனந்தம் அருளி,
பிறவிவேர் அறுத்து, ன் குடிமுழுது ஆண்ட
    பிஞ்ஞகா! பெரியஎம் பொருளே!
திறவிலே கண்ட காட்சியே! அடியேன்
    செல்வமே! சிவபெரு மானே!
இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
    எங்கு எழுந்து அருளுவது இனியே.  ---  திருவாசகம்.


எண்கண் தலம் திருவாரூரிலிருந்து நீடாமங்கலம் செல்லும் ரயில் பாதையில் திருமதிக்குன்றம் ரயில் நிலையத்துக்கு அருகே உள்ளது.

எண்கண், எட்டிகுடி, சிக்கல் ஆகிய இம் மூன்று திருத்தலங்களையும் ஆன்றோர் ஒன்று படுத்திக் கூறுவர் : முருகவேளின் அழகிய திருவுருவை ஒரு சிற்பி எண்கண்' என்னும் தலத்துக்கு அமைக்க, அத்தகைய அழகிய உரு வேறொன்று செய்யாதிருக்க வேண்டி அரசன் அச் சிற்பியின் ஒரு கையை வெட்டிவிட்டான் என்றும், அந்தக் குறையுடனே அதனிலும் அழகான முருகன் உருவை எட்டிகுடியில் அந்தச் சிற்பி அமைத்தான் எனவும், அரசன் சிற்பியின் மற்றொரு கையையும் வெட்டினான் என்றும், இரண்டு கையும் அற்ற நிலையில் சிக்கலில் பின்னும் அழகிய முருகன் உருவத்தை அந்தச் சிற்பி அமைக்க முருகவேள் அச் சிற்பியின் மீது உகந்து அவன் அமைத்த மயில் மீது இருந்தபடியே விண்ணில் அவனையும் அழைத்துப் பறந்து மறைந்தனர் எனவும் செவிவழிச் செய்தி வழங்கப்படுகின்றது.

கருத்துரை

முருகா! அடியேன் மனத்தைக் கோயிலாக் கொண்டு எழுந்து அருள்வாய்.

1 comment:

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...