எட்டிகுடி - 0842. மைக்குழல் ஒத்தவை





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மைக்குழல் ஒத்தவை (எட்டிகுடி)

முருகா!
வேலும் மயிலும் எனது உடம்பில் பொறித்து ஆள்வாய்.


தத்தன தத்தன தானா தானா
     தத்தன தத்தன தானா தானா
     தத்தன தத்தன தானா தானா ...... தனதான


மைக்குழ லொத்தவை நீலோ மாலோ
     அக்கணி ணைக்கிணை சேலோ வேலோ
     மற்றவர் சொற்றெளி பாலோ பாகோ .....வடிதேனோ

வத்திர மெய்ச்சசி தானோ நாணா
     குத்துமு லைக்கிள நீரோ மேரோ
     வைப்பதி டைக்கிணை நூலோ மேலோ ....வெனமாதர்

தக்கவு றுப்பினுள் மாலே மேலாய்
     லச்சைய றப்புணர் வாதே காதே
     சைச்சையெ னத்திரி நாயே னோயா .....தலையாதே

தற்பொறி வைத்தருள் பாராய் தாராய்
     தற்சமை யத்தக லாவே னாதா
     தத்தும யிற்பரி மீதே நீதான் .....வருவாயே

முக்கணர் மெச்சிய பாலா சீலா
     சித்தசன் மைத்துன வேளே தோளார்
     மொய்த்தம ணத்தது ழாயோன் மாயோன்..மருகோனே

முத்தமிழ் வித்வவி நோதா கீதா
     மற்றவ ரொப்பில ரூபா தீபா
     முத்திகொ டுத்தடி யார்மேல் மாமால் ....முருகோனே

இக்குநி ரைத்தவி ராலுார் சேலூர்
     செய்ப்பழ நிப்பதி யூரா வாரூர்
     மிக்கவி டைக்கழி வேளூர் தாரூர் .....வயலூரா

எச்சுரு திக்குளு நீயே தாயே
     சுத்தவி றற்றிறல் வீரா தீரா
     எட்டிகு டிப்பதி வேலா மேலோர் .....பெருமாளே.


பதம் பிரித்தல்


மைக்குழல் ஒத்தவை நீலோ? மாலோ?
     அக்கண் இணைக்கு இணை சேலோ? வேலோ?
     மற்றுஅவர் சொல்தெளி பாலோ? பாகோ? ...... வடிதேனோ?

வத்திரம் மெய்ச் சசி தானோ? நாணா
     குத்து முலைக்கு இள நீரோ? மேரோ?
     வைப்பது இடைக்கு இணை நூலோ? மேலோ?......என,மாதர்

தக்க உறுப்பினுள் மாலே மேலாய்,
     லச்சை அறப்புணர் வாது ஏகாதே,
     சைச்சை எனத்திரி நாயேன் ஓயாது ...... அலையாதே,

தற்பொறி வைத்து அருள் பாராய், தாராய்,
     தற் சமையத்த! கலா வேல் நாதா!
     தத்து மயில் பரி மீதே நீதான் ...... வருவாயே,

முக்கணர் மெச்சிய பாலா! சீலா!
     சித்தசன் மைத்துன வேளே! தோள்ஆர்
     மொய்த்த மணத்த துழாயோன் மாயோன் ..மருகோனே!

முத்தமிழ் வித்வ விநோதா! கீதா!
     மற்றவர் ஒப்புஇல ரூபா! தீபா!
     முத்தி கொடுத்து அடியார் மேல் மாமால் ...... முருகோனே!

இக்கு நிரைத்த விராலுார், சேல்ஊர்
     செய்ப் பழநிப்பதி ஊரா! ஆரூர்,
     மிக்க விடைக்கழி, வேளூர், தார்ஊர் ...... வயலூரா!

எச்சுருதிக்கு உளும் நீயே தாயே,
     சுத்த விறல் திறல் வீரா! தீரா!
     எட்டி குடிப்பதி வேலா! மேலோர் ...... பெருமாளே!


பதவுரை

      முக்க(ண்)ணர் மெச்சிய பாலா  --- மூன்று கண்களை உடைய சிவபெருமான் மெச்சிப் புகழும் பாலகரே!

     சீலா --- தூயவரே!

     சித்தசன் மைத்துன வேளே --- மன்மதனின் மைத்துனனான செவ்வேள் பரமனே!

     தோள் ஆர் மொய்த்த மணத்த துழாயோன் மாயோன் மருகனே --- தோள்கள் நிரம்ப, நறுமணம் உள்ள, துளசி மாலை அணிந்தவராகிய திருமாலின் திருமருகரே!

      முத்தமிழ் வித்வ --- முத்தமிழ்ப் புலமை வாய்ந்தவரே!

     விநோதா --- திருவிளையாடல்களைப் புரிபவரே!
    
     கீதா --- இசை வடிவானவரே!

     மற்றவர் ஒப்பு இல ரூபா --- பிறர் எவரும் ஒப்பில்லாத உருவத்தவரே!

     தீபா --- ஞான ஒளி விளக்கே!

     முத்தி கொடுத்து அடியார் மேல் மா மால் முருகோனே --- முக்தியைக் கொடுத்து அருளி அடியார்கள் மீது ஆசை பெரிதும் கொண்ட முருகக் கடவுளே!

      இக்கு நிரைத்த விராலூர் ---  கரும்பு வயல்கள் நிறைந்து உள்ள விராலியூர்,

     சேல் ஊர் செய்ப் பழனிப்பதி ஊரா --- சேல் மீன்கள் நீந்தி ஊடுருவும் வயல்கள் உள்ள பழனியம்பதி,

     ஆரூர் --- திருவாரூர்,

     மிக்க இடைக்கழி --- சிறப்பு வாய்ந்த திருவிடைக்கழி,

     வேளூர் --- புள்ளிருக்குவேளூர்

     தார் ஊர் வயலூரா --- மலர்ச் சோலைகள் நிறைந்துள்ள வயலூர் என்னும் திருத்தலங்களில் வீற்றிருப்பவரே!

      எச் சுருதிக்கு(ள்)ளும் நீயே தாயே --- எத்தகைய வேதத்துக்குள்ளும் மூலப் பொருளாய் நிற்கின்றவரே!

     சுத்த விறல் திறல் வீரா தீரா --- தூய்மையான வலிமையும், திறமையும் வாய்ந்த வீரரே!

     தீரனே --- தீரம் உள்ளவரே!

     எட்டிகுடிப் பதி வேலா --- எட்டிகுடியில் வீற்றிருக்கும் வேலவரே!

     மேலோர் பெருமாளே --- தேவர்கள் போற்றும் பெருமைக்கு உரியவரே!

      மைக்குழல் ஒத்தவை நீலோ மாலோ --- கரிய கூந்தலுக்கு ஒப்பானவை கருங்குவளையோ, கருமையோ?

      அக்கண் இணைக்கு இணை சேலோ வேலோ ---. அந்தக் கண்கள் இரண்டுக்கும் ஒப்பானவை சேல் மீனோ, வேலோ?

      மற்று அவர் சொல் தெளி பாலோ பாகோ வடிதேனோ --- மேலும், அந்த விலைமாதர்களின் சொல்லுக்கு இணை தெளிந்த பாலோ, வெல்லப் பாகோ, வடித்த தேனோ?

      வத்திரம் மெய்ச் சசி தானோ --- முகம் உண்மையாகவே சந்திரன் தானோ?

     நாணா குத்து முலைக்கு இளநீரோ மேரோ --- வெட்குதல் இல்லாமல் எழுந்துள்ள குத்து முலைக்கு ஒப்பானவை இளநீரோ, மேருமலையோ?

      இடைக்கு இணை வைப்பது நூலோ மேலோ என --- இடைக்கு இணையாகக் கூறப்படுவது நூலோ, அதை விட மேலானது ஒன்றோ என்றெல்லாம்

     மாதர் தக்க உறுப்பினுள் மாலே மேலாய் --- மாதர்களுடைய மனத்தைக் கவர வல்ல அவயவங்களுள் காம மயக்கம் மிக்கவனாய்,

     லச்சை அற புணர் வாது ஏகாதே --- கூச்சம் சிறிதும் இல்லாமல் புணர்கின்ற நிலையில் இப்படி அப்படி என்று இல்லாமல்,

      சைச் சை எனத் திரி நாயேன் ஓயாது அலையாதே --- சீச் சீ என்று பிறர் வெறுக்குமாறு திரிகின்ற நாயேன் ஓயாது அதிலேயே நாட்டம் வைத்து அலையாமல்,

     தற்பொறி வைத்து அருள் பாராய் தாராய் --- (வேல்-மயில்) இலச்சினையை என் மேல் பொறித்து வைத்து, கண் பார்த்து அருள் தருவாயாக.

      தற் சமையத்த --- சிவசமயத்தரே!

     கலா வேல் நாதா --- ஒளி மிக்க வேலாயுதத்தை உடைய தலைவரே!

     தத்து மயில் பரி மீதே நீ தான் வருவாயே ---  தாவிச் செல்லும் மயில் வாகனத்தின் மேல் தேவரீர் வந்து அருள வேண்டும்.


பொழிப்புரை


     மூன்று கண்களை உடைய சிவபெருமான் மெச்சிப் புகழும் குழந்தையே!!

     தூயவரே!

     மன்மதனின் மைத்துனனான செவ்வேள் பரமனே!

     தோள்கள் நிரம்ப, நறுமணம் உள்ள, துளசி மாலை அணிந்தவராகிய திருமாலின் திருமருகரே!

      முத்தமிழ்ப் புலமை வாய்ந்தவரே!

     திருவிளையாடல்களைப் புரிபவரே!
    
     இசை வடிவானவரே!

     பிறர் எவரும் உனக்கு ஒப்பில்லாதவரே!

     ஞான ஒளி விளக்கே!

     அடியார்கள் மீது ஆசை பெரிதும் கொண்டு, முத்தியைக் கொடுத்து அருளிய முருகக் கடவுளே!

     கரும்பு வயல்கள் நிறைந்து உள்ள விராலியூர், சேல் மீன்கள் நீந்தி ஊடுருவும் வயல்கள் உள்ள பழனிப்பதி, திருவாரூர், சிறப்பு வாய்ந்த திருவிடைக்கழி, புள்ளிருக்குவேளூர்  மலர்ச் சோலைகள் நிறைந்துள்ள வயலூர் என்னும் திருத்தலங்களில் வீற்றிருப்பவரே!

      எத்தகைய வேதத்துக்குள்ளும் மூலப் பொருளாய் நிற்கின்றவரே!

     தூய்மையான வலிமையும், திறமையும் வாய்ந்த வீரரே!

     தீரம் உள்ளவரே!

     எட்டிகுடியில் வீற்றிருக்கும் வேலவரே!

     தேவர்கள் போற்றும் பெருமைக்கு உரியவரே!

     சிவசமயத்தரே!

     ஒளி மிக்க வேலாயுதத்தை உடையவரே!

       கரிய கூந்தலுக்கு ஒப்பானவை கருங்குவளையோ, கருமையோ? அந்தக் கண்கள் இரண்டுக்கும் ஒப்பானவை சேல் மீனோ, வேலோ? மேலும், அந்த விலைமாதர்களின் சொல்லுக்கு இணை தெளிந்த பாலோ, வெல்லப் பாகோ, வடித்த தேனோ? முகம் உண்மையாகவே சந்திரன் தானோ? வெட்குதல் இல்லாமல் எழுந்துள்ள குத்து முலைக்கு ஒப்பானவை இளநீரோ, மேருமலையோ? இடைக்கு இணையாகக் கூறப்படுவது நூலோ, அதை விட மேலானது ஒன்றோ? என்றெல்லாம் விலைமாதர்களுடைய மனத்தைக் கவர வல்ல அவயவங்களுள் காம மயக்கம் மிக்கவனாய், கூச்சம் சிறிதும் இல்லாமல் புணர்கின்ற நிலையில் இப்படி அப்படி என்று இல்லாமல், சீ சீ என்று பிறர் வெறுக்குமாறு திரிகின்ற நாயேன், ஓயாது அதிலேயே நாட்டம் வைத்து அலையாமல், (வேல்-மயில்) இலச்சினையை என் மேல் பொறித்து வைத்து, கண் பார்த்து அருள் தர, தாவிச் செல்லும் மயில் வாகனத்தின் மேல் தேவரீர் வந்து அருள வேண்டும்.


விரிவுரை

தற்பொறி வைத்து அருள் பாராய் ---

அப்பர் பெருமான்,  பெண்ணாகடம் என்னும் திருத்தலத்தை அடைந்து, அங்குள்ள திருத்தூங்கானை மாடம் என்னும் திருக்கோயில் சென்று, ஆண்டவனைத் தொழுது, "பெருமானே! அடியேனுடைய உடல்  சமணர் தொடர்பால் இருந்தது. இந்த உடலோடு அடியேன் வாழேன். அடியேனுடைய ஆவியைக் காப்பது உமது சித்தமாக இருக்கும் பட்சத்தில், சூலத்தையும், இடபத்தையும் அடியேன் மீதுபொறித்து அருளல் வேண்டும் என்று வேண்டி, திருப்பதிகம் பாடினார். ஆண்டவன் அருளால் சிவபூதம் ஒன்று ஒருவரும் அறியாதவாறு, சுவாமிகளுடைய திருத்தோள்களில் இரு குறியையும் பொறித்தது.

பொன்னார் திருவடிக்கு ஒன்றுஉண்டு விண்ணப்பம், போற்றிசெய்யும்
என்ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல், ருங் கூற்றுஅகல
மின்ஆரும் மூவிலைச் சூலம்என் மேல்பொறி, மேவுகொண்டல்
துன்ஆர் கடந்தையுள் தூங்கானை மாடச்  சுடர்க்கொழுந்தே.

ஆஆ சிறுதொண்டன் என்நினைந்தான் என்று அரும்பிணிநோய்
காவாது ஒழியில், கலக்கும் உன் மேல்பழி, காதல்செய்வார்
தேவா! திருவடி நீறு என்னைப் பூசு, செந்தாமரையின்
பூஆர் கடந்தையுள் தூங்கானை மாடத்து எம் புண்ணியனே.

கடவும் திகிரி கடவாது ஒழிய, கயிலை உற்றான்
படவும் திருவிரலு ஒன்று வைத்தாய், பனி மால்வரைபோல்
இடவம் பொறித்து என்னை ஏன்றுகொள்ளாய், ரும் சோலைதிங்கள்
தடவும் கடந்தையுள் தூங்கானை மாடத்து எம் தத்துவனே.

அருணகிரி நாதப் பெருமானும், தனது உடம்பில் வேல் மயில் குறிகளைப் பொறித்து அருளுமாறு முருகப் பெருமானை வேண்டுகின்றனர்.

எச் சுருதிக்குளும் நீயே ---

வேதங்கள் எண்ணில. அளவற்ற வேதங்களின் உட்பொருளாக விளங்குவது முருகப் பெருமானே.

எட்டிகுடி நாகப்பட்டினத்துக்கு அருகே, கீழ்வேளூர் இரயில் நிலையத்திற்குத் தெற்கே 10 கி. மீ. தொலைவில் உள்ளது.

கருத்துரை

முருகா! வேலும் மயிலும் எனது உடம்பில் பொறித்து ஆள்வாய்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...