நாகப்பட்டினம் - 0838. விழுதாது எனவே




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

விழுதாது எனவே (நாகப்பட்டினம்)

முருகா!
வினையை வேரறுத்துத் திருவருள் புரிவீர்.


தனனா தனனா தனனா தனனா
     தனனா தனனா ...... தனதான


விழுதா தெனவே கருதா துடலை
     வினைசேர் வதுவே ...... புரிதாக

விருதா வினிலே யுலகா யதமே
     லிடவே மடவார் ...... மயலாலே

அழுதா கெடவே அவமா கிடநா
     ளடைவே கழியா ...... துனையோதி

அலர்தா ளடியே னுறவாய் மருவோ
     ரழியா வரமே ...... தருவாயே

தொழுதார் வினைவே ரடியோ டறவே
     துகள்தீர் பரமே ...... தருதேவா

சுரர்பூபதியே கருணா லயனே
     சுகிர்தா வடியார் ...... பெருவாழ்வே

எழுதா மறைமா முடிவே வடிவே
     லிறைவா எனையா ...... ளுடையோனே

இறைவா எதுதா வதுதா தனையே
     இணைநா கையில்வாழ் ...... பெருமாளே.

பதம் பிரித்தல்
  
விழு தாது எனவே கருதாது, டலை
     வினை சேர்வதுவே ...... புரி தாக,

விருதாவினிலே உலகாயதம் மேல்
     இடவே, மடவார் ...... மயலாலே,

அழுது ஆ கெடவே, அவம் ஆகிட, நாள்
     அடைவே கழியாது, ...... உனை ஓதி

அலர் தாள் அடியேன் உறவாய் மருவ,
     ஓர் அழியா வரமே ...... தருவாயே.

தொழுதார் வினை வேர் அடியோடு அறவே
     துகள் தீர் பரமே ...... தரு தேவா!

சுரர் பூபதியே! கருணா லயனே!
     சுகிர்தா! அடியார் ...... பெருவாழ்வே!

எழுதா மறை மா முடிவே! வடிவேல்
     இறைவா! எனைஆள் ...... உடையோனே!

இறைவா! எது தா அது தா, தனையே
     இணை நாகையில் வாழ் ...... பெருமாளே.


பதவுரை

      தொழுதார் வினை வேர் அடியோடு அறவே --- தொழுகின்ற அடியார்கள்தம் வினையின் வேர் அற்றுப் போகும்படியாக

      துகள் தீர் பரமே தருதேவா --- குற்றமற்ற பரமபதத்தைத் தரும் தேவரே!

      சுரர் பூபதியே --- தேவர்களுக்கு அரசரே! 

     கருணாலயனே --- கருணைக்கு உறைவிடமே!!

      சுகிர்தா --- புண்ணியரே!

     அடியார் பெருவாழ்வே --- அடியார்களின் பெருவாழ்வே!

      எழுதா மறைமா முடிவே --- எழுதப்படாத மறையாம் வேதத்தின் முடிவானவரே!
  
     வடிவேல் இறைவா --- கூரிய வேலை ஏந்திய இறைவரே!

      எனை ஆள் உடையோனே --- என்னை ஆளாக உடையவரே!

      இறைவா எது தா அது தா --- இறைவா! அடியேனுக்கு எது தரவேண்டுமோ அதைத் தந்தருள்.

      தனையே இணை --- தானே தனக்கு நிகராய் விளங்குபவரே!

     நாகையில் வாழ் பெருமாளே --- நாகப்பட்டினம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கின்ற பெருமையில் மிக்கவரே!

     விழு தாது எனவே கருதாது உடலை --- விழுகின்ற தாது (சுக்கிலம்)தான் இந்த உடல் என்று கருதாமல்,
 
     வினை சேர்வதுவே புரி தாக --- வினைகளை மேலும் மேலும் சேர்ப்பதையே விருப்பம் கொண்டு,

      விருதாவினிலே உலகாயதம் மேலிடவே --- வீணாக (தேகமே ஆத்மா, போகமே மோட்சம் என்ற) உலக வழக்கில் அறிவு மேலிட,

       மடவார் மயலாலே அழுது ஆகெடவே அவம் ஆகிட --- பெண்களின் மேல் ஆசைமயக்கத்தால் அவநிலையை அடைந்து கெட்டுப் போகும்படியா,

      நாள் அடைவே கழியாது --- வாழ்நாள் முழுவதும் கழிந்து போகாமல்,

      உனை ஓதி --- தேவரீரது திருப்புகழை ஓதித் துதித்து,

     அலர்தாள் அடியேன் உறவாய் மருவ  ---அன்றலர்ந்த தாமரை போன்ற உமது திருவடிகளே எனக்கு உறவாகக் கலந்து இருக்க,

      ஓர் அழியா வரமே தருவாயே --- ஒப்பற்ற அழியா வரத்தினைத் தந்து அருள்வாயாக.


பொழிப்புரை


      தொழுகின்ற அடியார்கள்தம் வினையின் வேர் அற்றுப் போகும்படியாகத் துணை நின்று, அவர்க்குக் குற்றமற்ற பரமபதத்தைத் தரும் தேவரே!

      தேவர்களுக்கு அரசரே! 
  
     கருணைக்கு உறைவிடமே!!

      புண்ணியரே!
       
      அடியார்களின் பெருவாழ்வே!

      எழுதப்படாத மறையாம் வேதத்தின் முடிவானவரே!
  
     கூரிய வேலை ஏந்திய இறைவரே!

     என்னை ஆளாக உடையவரே!

     இறைவா! அடியேனுக்கு எது தரவேண்டுமோ அதைத் தந்தருள்.

      தானே தனக்கு நிகராய் விளங்குபவரே!

     நாகப்பட்டினம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கின்ற பெருமையில் மிக்கவரே!

     விழுகின்ற தாது (சுக்கிலம்)தான் இந்த உடல் என்று கருதாமல், வினைகளை மேலும் மேலும் சேர்ப்பதையே விருப்பம் கொண்டு, வீணாக (தேகமே ஆத்மா, போகமே மோட்சம் என்ற) உலக வழக்கில் அறிவு மேலிட, பெண்களின் மேல் ஆசைமயக்கத்தால் அவநிலையை அடைந்து கெட்டுப் போகும்படியா, வாழ்நாள் முழுவதும் கழிந்து போகாமல், தேவரீரது திருப்புகழை ஓதித் துதித்து, அன்றலர்ந்த தாமரை போன்ற உமது திருவடிகளே எனக்கு உறவாகக் கலந்து இருக்க, ஒப்பற்ற அழியா வரத்தினைத் தந்து அருள்வாயாக.


விரிவுரை

விழு தாது எனவே கருதாது உடலை ---

தாதுக்களால் ஆன இந்தத் தூல உடம்பு ஒரு நாள் விழுந்து விடும் என்று நினைவில் கொள்ளவேண்டும். இந்த உடம்பு நிலையானது அல்ல. உயிர் நிலையானது. அதற்கு, அதன் பிராரத்த வினைக்கு ஏற்ப இறையருளால் உடம்பு வாய்க்கும்.

அது வரும்வகை எப்படி என்றால், தூல உடம்பிலிருந்து நீங்கியதும் உயிர், சூக்கும உடம்போடு மேகமண்டலத்தினை எய்தி, அங்கிருந்து மழைத் தாரையோடு கூடி நிலத்தை அடைந்து, நெல் முதலிய பயிர்களில் விரவி நின்று, அவை உணாவாய் மாறியதும், அவற்றோடு கூடித் தந்தை வயிற்றுள் சென்று அங்குச் சுக்கிலமாக மாறி அங்கே இரண்டு மாதம் இருந்து,  பிறகு தாயின் சுரோணிதத்தோடு கலந்து, கருப்பைக்குள் தாய் வயிற்றில் சென்று கருவாய்க் கிடந்து, பிறிதொரு தூல உடலோடு நிலத்தில் பிறக்கும், இவ்வாறு மேகமண்டலம், மழை, நெல், தந்தை, தாய் ஆகிய ஐந்து இடங்களைத் தீயாகவும் இவற்றை எய்திய உயிர் ஆகுதியாகவும் தியானிப்பது ஒரு சாதகம் ஆதலின், இது பஞ்சாக்கினி வித்தை எனப்பட்டது.

தந்தையிடமிருந்து தாயின் கருப்பை ஆகிய நிலத்தில் முளைத்து, வளர்ந்து, பயிராகி, உலகமாகிய பெருநிலத்தில் நாற்று நடப்பட்டு, இம் மனிதப்பயிர் விளைகின்றது. பெண் மயலாகிய கோடையால் வெதும்பி காம க்ரோத முதலிய களைகளால் மெலிந்து முத்திக் கதிர் தோன்றாமுன் சாவியாகிறது.

பதினாறு வயதை அடைந்து, ஆவி ஈடேறும் வழி தேடாமல், மன்மத பாணத்தால் மயங்கி, மங்கையர் சுகத்தை வெகு இங்கிதம் எனக் கொண்டு, தாம் கற்ற கல்வியை இறைவன் திருவருள் நெறியில் உபபோகிக்காது, இன்று இருந்து நாளை அழியும் மனிதர்களிடம் போய், கொடாதவனைப் “பாரியே காரியே” என்றும் வலியிலானை, “விஜயனே விறல் வீமனே” யென்றும் பலவகையாக கலம்பகம் மடல் பரணி கோவை தூது முதலிய பிரபந்தங்களைப் பாடி, அவர்கள் தரும் பொருள்களைக் கொணர்ந்து நல்வழியில் செலவழிக்காமல், போகத்தை அனுபவிப்பதே இன்பம். அதுவே நிலையானது என்று மயங்கிக் கிடந்து பிணிவாய்ப்பட்டு மடிகின்றது.

வினை சேர்வதுவே புரி தாக ---

மேலும் மேலும் வினைகளையே புரிந்து கொண்டு இருப்பதிலேயே தாகம் மிகுந்து இருக்கும்.

"வினையே ஆடவர்க்கு உயிரே" என்பது சங்கநூல். அதன்படி வினைகளைப் புரிந்து கொண்டுதான் இருக்கவேண்டும். அது நல்வினையாக இருந்தால், தனக்கும் பிறருக்கும் இன்பத்தைத் தரும். தீவினையாக இருந்தால், உடனடியாகப் பிறருக்கும், பின்னர் தனக்கும் துன்பத்தைத் தரும்.

விருதாவினிலே உலகாயதம் மேலிடவே ---

விருதா --- வீணாக. பயனில்லாமல்.

கடவுள் இல்லை என்கிற கொள்கை உடையவர்கள், உலகாயதர்கள். இவர்கள் காண்டல், கருதல், உரை என்கின்ற மூன்று அளவைகளுள், காண்டல் என்கின்ற பிரத்தியட்ச அளவை மட்டுமே தமக்கு உடன்பாடு எனக் கொண்டு, கண்ணுக்குப் புலனாகின்ற நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கு பூதங்களுமே எப்போதும் உள்ள பொருள் என்று ஒத்துக் கொள்ளுகின்றவர்கள். முதலில் சொல்லப்படுகின்ற ஆகாயம் என்பது கண்ணுக்குப் புலப்படாமையால், அதை உலகாயதர், ஒரு பூதமாக ஏற்க மறுக்கின்றனர். நிலம், நீர், தீ, காற்று என்னும் நான்கு பூதங்களின் சம்பந்தத்தால் ஆகியதே உடம்பு என்கின்றனர். அது எது போல என்றால், வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகிய மூன்றையும் ஒருவன் வாயில் இட்டு உண்கின்ற போது, செந்நிறம் தோன்றுவது போல, இந்த நான்கு பூதங்களின் சேர்க்கையால், அவற்றிற்கு வேறாகிய ஓர் உணர்வு உண்டு என்றும், அந்த உணர்ச்சியானது உடம்பு வளருந்தோறும் வளர்ந்து, தேயும்தோறும் தேய்ந்து போவது என்பது. உடம்பிற்கு வேறாக உயிர் என்பது உண்டு என்பது பொய் என்பது அவர் கூற்று. அல்லாமலும், உடம்பிற்கு நல்வினை தீவினை என்கின்ற இருவினையால் வரும் இன்ப துன்பங்கள் என்பதும் பொய்.  இன்ப துன்பங்கள் உடம்பிற்கு இயல்பாகவே உள்ளதால், இருவினை என்பதும் பொய் என்பது அவர் கூற்று. கடவுள் உண்டு என்பதும் பொய் என்பார் அவர். மயிலுக்கு அழகை ஊட்டியவர் யாரும் இல்லை. குயிலின் குரலுக்கு இனிமையை ஊட்டினவரும் யாரும் இல்லை. அவை இயல்பாகவே அமைந்துள்ளது போல், இந்த உலகமும் இயற்கையாகவே அமைந்து உள்ளது. இல்லாத கடவுளை உண்டு என்று சொல்லும் மார்க்கத்தைத் தழுவி, மோட்ச இன்பத்தை அடைவோம் என்னும் கொள்கையும் பொய். ஆனால், தான் கருதுகின்றபடி, இயல்பாகவே அமைந்த இந்த உலகத்தில், வாழுகின்ற காலத்தில் இளம்பருவம் உடைய பெண்களை மணந்து, நல்ல உணவை உண்டு, நல்ல ஆடைகளை உடுத்து, போகத்துடன் வாழ்வதே மோட்ச இன்பம் என்பது அவர் கொள்கை. இந்த இன்பத்தைப் பெறாமல், பகைவராலும், நோயாலும், வறுமையாலும் வருந்துவதே நரகத் துன்பம் என்பது உலகாயதர் கொள்கை.

இந்த உலகாயதக் கொள்கை மக்களை எளிதில் மயக்கும் ஆற்றல் படைத்தது. எனவே தான், "உலோகாயதன் எனும் ஒண் திறல் பாம்பின் கலாபேதத்த கடு விடம்" என்றார் மணிவாசகப் பெருமான்.

மேலும், இவ்விதம் கூறிய நான்கு பூதங்களின் கூட்டுறவில், பிராணவாயு என்பது நீங்குமானால், முன் வளர்ந்த உணர்வு என்பது நீங்கி, உடம்பு என்பது நாசம் ஆகும். அதுவே, வீடு என்கின்ற மோட்சத்தை அடைகின்ற பேறு ஆகும். எனவே, இந்த உண்மையை உணராதோர் மறுபிறவி உண்டு என்றும், வீடு என்பது உண்டு என்றும் சொல்லி, தவம் கிடந்து, பட்டினி கிடந்து, உடலை வருத்துகின்றனர். அல்லாமலும், பொன் தானம், நிலத் தானம், உணவுத் தானம் என்பவர்கள் வறுமமை நோயால் பீடிக்கப்பட்டவர்கள் ஆவர். ஆலயம், தண்ணீர்ப்பந்தல், கிணறு, சோலை, குளம் முதலியவைகளை தருமத்துக்கு அமைப்பவர்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லுகின்ற நூல்கள், வழிச் செல்பவர்கள் தாம் செல்லுகின்ற காலத்து இளைப்பு அடையாமலும், உடம்பு வருந்தாமலும், பொருள் செலவு இல்லாமலும், தங்களின் பயணத்தை முடிப்பதன் நிமித்தம் எழுதிய நூல்கள் ஆகும் என்பவர் உலகாயதர். ஆகையால், இவைகளை எல்லாம் விட்டுவிட்டு, மனம் விரும்பு உணவு உண்டு, நல்ல வத்திரம் அணிந்து, இளம்பெண்களோடு சுகித்து வாழ்வதே வாழ்க்கையின் பயன் என்பது இவர்தம் கொள்கை.

ஆனால், இவர்களை மறுத்து, கடவுள் உண்டு என்ற நிறுவுகின்றவர்கள் சொல்லுவது, ஒருவன் பிறந்தவுடன் தாய் தந்தையர் இறந்து போய் இருப்பார்களானால், அவர்களைக் காணாததாலேயே, தாய்தந்தையர் இல்லை என்று கூறுவது போலத்தான், கண்ணுக்குப் புலப்படாத ஆகாயத்தை இல்லை என்று கூறுவது. மேகமானது திரண்டு, முழங்கி, மின்னி, வானில் பரந்து எழுந்து அதனால் மழை பொழிவதைக் காண்ணால் காண்கின்றோம். இது காட்சி அளவை மட்டுமன்றி கருதல் அளவையும் ஆகும். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகிய மூன்றும் கூடி, சிவப்பு என்னும் தன்மையை உண்டாக்குவதற்கு, அவைகளை மென்று தின்கின்ற ஒருவன் வேண்டும் என்பதைப் போல, அவைகளை உண்டாக்குவதற்கும் ஒருவன் வேண்டும் என்று ஆத்திகர்கள் கூறுகின்றனர். 

கடவுள் இல்லை என்று கூறுபவர்கள் கயவர்கள். அவரது கூட்டுறவு கூடாது என்பதை, வள்ளல்பெருமான் பின்வரும் பாடலால் காட்டினார்.

"பரம்ஏது, வினைசெயும் பயன்ஏது, பதிஏது,
                  பசுஏது, பாசம்ஏது,
         பத்திஏது, அடைகின்ற முத்திஏது, அருள்ஏது,
                  பாவபுண் ணியங்கள் ஏது,
வரம்ஏது, தவம்ஏது, விரதம்ஏது, ஒன்றும்இலை,
                  மனம்விரும்பு உணவு உண்டு, நல்
         வத்திரம் அணிந்து, மட மாதர்தமை நாடி,நறு
                  மலர்சூடி, விளையாடி,மேல்
கரம்மேவ விட்டு, முலைதொட்டு வாழ்ந்து, அவரொடு
                  கலந்து மகிழ்கின்ற சுகமே
         கண்கண்ட சுகம், இதே கைகண்ட பலன்எனும்
                  கயவரைக் கூடாது அருள்,
தரம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
                  தலம் ஓங்கு கந்தவேளே!
         தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!
                  சண்முகத் தெய்வமணியே!"

உடம்பே உயிர், உடம்பால் அடையும் இன்பமே மோட்சம் எனக் கருதுகின்ற உலகாயத நிலை விருதா என்றும், மடவார் மயலாலே அந்த வாழ்வு அவமாகிப் போகும் என்றும் அருணகிரிநாதப் பெருமான் இத் திருப்புகழில் அறிவுறுத்துமாறு காண்க.

மணிவாசகப் பெருந்தகையும் இதனைத் தமது திருவாசகத்தில் பின்வருமாறு காட்டினார்...

"தெய்வம் என்பது ஓர் சித்தம் உண்டாகி
முனிவு இலாததோர் பொருள் அது கருதலும்
ஆறு கோடி மாயா சத்திகள்
வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின,
ஆத்தம் ஆனார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்,
சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள்
பற்றி அழைத்துப் பதறினர், பெருகவும்
விரதமே பரமாக வேதியரும்
சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர்,
சமய வாதிகள் தத்த மதங்களே
அமைவதாக அரற்றி மலைந்தனர்,
மிண்டிய மாய வாதம் என்னும்
சண்ட மாருதம் சுழித்து அடித்து ஆஅர்த்து
உலோகாயதன் எனும் ஒண்திறல் பாம்பின்
கலாபே தத்த கடுவிடம் எய்தி,
அதில் பெருமாயை எனைப்பல சூழவும்,
தப்பா மேதாம் பிடித்தது சலியாத்

தழலது கண்ட மெழகு அது போலத்
தொழுது, உளம் உருகி, அழுது, டல் கம்பித்து,
ஆடியும் அலறியும் பாடியும் பரவியும்
கொடிறும் பேதையும் கொண்டது விடாது எனும்
படியே ஆகி, நல் இடையறா அன்பில்
பசுமரத்து ஆணி அறைந்தாற் போலக்
கசிவது பெருகி, கடல் என மறுகி,
அகங்குழைந்து, னுகுலம் ஆய், மெய் விதிர்த்து,
சகம்பேய் என்று தம்மைச் சிரிப்ப,
நாண்அது ஒழந்து, நாடவர் பழித்துரை
பூண் அது ஆக, கோணுதல் இன்றி,
சதுர் இழந்து, அறிமால் கொண்டு சாரும்
கதியது பரம அதிசயம் ஆக,
கற்றா மனம் எனக் கதறியும் பதறியும்,
மற்றோர் தெய்வம் கனவிலும் நினையாது,

ருபரத்து ஒருவன் அவனியில் வந்து
குருபரன் ஆகி அருளிய பெருமையைச்
சிறுமை என்று இகழாதே, திருவடி இணையைப்
பிறிவினை அறியா நிழல் அது போல
முன்பின் ஆகி முனியாது, அத்திசை
என்பு நைந்து உருகி, நெக்கு நெக்கு ஏங்கி,
அன்பு எனும் ஆறு கரையது புரள,
நன்புலன் ஒன்றி, நாத என்று அரற்றி,
உரைதடு மாறி, உரோமம் சிலிர்ப்ப,
கரமலர் மொட்டித்து, ருதயம் மலர,
கண்களி கூர நுண்துளி அரும்ப,
சாயா அன்பினை நாள்தொறும் தழைப்பவர்த்
தாயே ஆகி வளர்த்தனை போற்றி".

முன்னர்க் குறிப்பிட்டது போ, உலோகாயதம் என்பது, காட்சியே அளவை என்றும், பூதங்கள் நான்கே என்றும், சரீரமே ஆன்மா என்றும், மறுமையும் கடவுளும் இல்லை என்றும், இன்பமும் பொருளுமே புருஷார்த்தங்கள் என்றும் சொல்லும் மதம். பாம்பு ஒளி உடையது. ஆனால், விடத்தைக் கொண்டது. உலோகாயதம் கவர்ச்சி உடையது. ஆனால், தீமையுடையது. இனி, விடம் இம்மையில் தீமை புரிவது. உலோகாயத மதம் இம்மை மறுமை இரண்டிலும் தீமை புரிவது. அதனால் உலோகாயத மதத்தைப் "பாம்பு" என்றும், அதன் பயனைக் "கடுவிடம்" என்றும் கூறினார்.

"மின்அனைய பொய்உடலை நிலைஎன்றும், மைஇலகு
                 விழிகொண்டு மையல்பூட்டும்
      மின்னார்கள் இன்பமே மெய் என்றும், வளர்மாட
                 மேல்வீடு சொர்க்கம் என்றும்,
பொன்னை அழியாது வளர் பொருள் என்று போற்றி, இப்
                 பொய்வேடம் மிகுதிகாட்டி,
      பொறை அறிவு துறவு ஈதல் ஆதி நற்குணம் எலாம்
                 போக்கிலே போகவிட்டு,
தன்நிகர் இல் உலோபாதி பாழ்ம்பேய் பிடித்திட,
                 தரணிமிசை லோகாயதன்
      சமயநடை சாராமல், வேதாந்த சித்தாந்த
                 சமரச சிவாநுபூதி
மன்ன, ஒருசொல் கொண்டு, எனைத் தடுத்து ஆண்டன்பின்
                 வாழ்வித்த ஞானகுருவே!
      மந்த்ர குருவே! யோக தந்த்ர குருவே! மூலன்
                 மரபில்வரு மௌனகுருவே."
  
மடவார் மயலாலே அழுது ஆகெடவே

உலகாயதம் மேலிட்ட போது, இயல்பாகவே, உடலை மெய்யென்று கருதி இருப்பதால், உடல் சுகத்தை மனம் நாடும். அதனால் விளைவது துன்பமே. ஆதலால் வருந்தியே ஆகவேண்டும்.

அவம் ஆகிட நாள் அடைவே கழியாது ---

இறையருளால் அரிதில் கிடைத்த இந்த உடம்பையும், அதற்குக் கிடைத்த வாழ்நாளையும் வீணாக்குவது அறிவீனம்.

இந்த மனித உடம்பு மிகமிக அருமையினும் அருமையானது.  பிறப்பின் நோக்கம் பிறவாமையே. அப் பிறவாமையைப் பெறுதற்குரியது மனிதப் பிறப்பே ஆம். எத்தனையோ காலம் ஈட்டிய நற்பயனால் வருவது இம்மானுடம். அண்டசம், சுவேதசம், உற்பீசம், சராயுசம் என்ற நால்வகைப் பிறப்புக்களில் மாறிமாறி பிறந்து இறந்து இம் மனித உடம்பு எடுப்பது, கடலைக் கையால் நீந்திக் கரை சேர்வது போலாகும்.

அண்டசம் சுவேதசங்கள் உற்பிச்சம் சராயுசத்தோடு
எண்தரு நால்எண்பத்து நான்குநூறு ஆயிரம்தான்
உண்டுபல் யோனி எல்லாம் ஒழித்து மானுடத்து உதித்தல்
கண்டிடில் கடலைக் கையால் நீந்தினன் காரியம்காண். ---  சிவஞான சித்தியார்.

பாரிடை வேர்வையில் பையிடை முட்டையில்
ஆர்உயிர் அமைக்கும் அருட்பெருஞ் ஜோதி

 ஊர்வன பறப்பன உறுவன நடப்பன
 ஆர்வுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

அசைவுஇல அசைவுஉள ஆருயிர்த் திரள்பல
 அசல்அற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

அறிவுஒரு வகைமுதல் ஐவகை அறுவகை
அறிதர வகுத்த அருட்பெருஞ் ஜோதி

வெவ்வேறு இயலொடு வெவ்வேறு பயன்உற
அவ்வாறு அமைத்த அருட்பெருஞ் ஜோதி.......
.....       .....       .....       .....       .....
பைகளில் முட்டையில் பாரினில் வேர்வினில்
ஐபெற அமைத்த அருட்பெருஞ் ஜோதி

தாய் கருப்பையினுள் தங்கிய உயிர்களை
ஆய்வுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

முட்டைவாய்ப் பயிலும் முழுஉயிர்த் திரள்களை
அட்டமே காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

நிலம்பெறும் உயிர்வகை நீள்குழு அனைத்தும்
அலம்பெறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

வேர்வுற உதித்த மிகும்உயிர்த் திரள்களை
ஆர்வுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி..
                       --- அருட்பெருஞ்சோதி அகவல்.

“அரிது அரிது மானிடர் ஆதல் அரிது” என்பார் ஔவையார்.

எண்ணரிய பிறவிதனில் மானுடப் பிறவிதான்
யாதினும் அரிதுஅரிது காண்
இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ
யாது வருமோ அறிகிலேன்...

என்று கல்லும் கனியக் கூறுவார் அநுபூதிச் செல்வராகிய தாயுமானார்.

பெறுதற்கரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற்கரிய பிரான்அடி பேணார்..

என்பார் திருமூல நாயனார்.

நமது வாழ்நாள் மிகவும் சிறந்தது. ஒவ்வொரு கணமும் விலை மதிக்க முடியாத மாணிக்கமாகும். சிறந்த இந்த உடம்பையும் உயர்ந்து வாழ்நாளையும் வீணில் கழித்தல் கூடாது.  பயனுடையவாகப் புரிதல் வேண்டும். பயனற்ற களியாடல்களிலும், வீண் பேச்சுக்களிலும், வம்புரைகளிலும், வழக்காடுவதிலும், பெண்சுகத்திலும், நம் நாளைக் கழிப்பது பேதைமையாகும். காமதேனுவின் பாலைக் கமரில் விடுவதுபோல் ஆகும். தனியே இருந்து இதனைச் சிந்தித்தல் வேண்டும். பொழுதுபோக்கிப் புறக்கணிப்பாரை ஈசன் கீழ்க்கணக்கில் எழுதுவான். சென்ற வாழ்நாளை மலையளவு செம்பொன் கொடுத்தாலும் திரும்ப அடைதல் இயலாது.

"ஓடு கின்றனன் கதிரவன் அவன்பின்
     ஓடு கின்றன ஒவ்வொரு நாளாய்
வீடு கின்றன என்செய்வோம் இனிஅவ்
     வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே
வாடு கின்றனை அஞ்சலை நெஞ்சே
     மார்க்கண் டேயர்தம் மாண்பறிந் திலையோ
நாடு கின்றவர் நாதன்தன் நாமம்
     நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே".

என்பர் இராமலிங்க அடிகள்.

இத்தகைய சிறந்த நேரத்தைச் சிலர், பொழுதே போகவில்லை, பாழும்பொழுது என்று கூறி அல்லல் உறுகின்றனர். சிலர் வீண்பொழுது கிழிக்கின்றனர். பொழுதுபோக்கு என்று பயனற்றவைகளில் காலத்தைக் கழிக்கின்றனர்.

நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்
மென்றாலும் அயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும்
மன்றாடு மலர்ப்பாதம் ஒருபோதும் மறவாமல்
குன்றாத உணர்வுஉடையார் தொண்டராம் குணமிக்கார்.

என்ற தெய்வச் சேக்கிழாரின் அருமைத் திருவாக்கை நன்கு சிந்தித்து உய்க.

மெய்த்தவர் அடிக்குற் றேவலின் திறத்தும்,
      விளங்கும் ஆகமஉணர்ச் சியினும்,
புத்தலர் கொடுநின் பரவுபூ சையினும்
      பொழுதுபோக்கு எனக்குஅருள் புரிவாய்;
முத்தமும் அரவ மணிகளும் எறிந்து
      முதிர்தினைப் புனத்துஎயின் மடவார்
தத்தைகள் கடியும் சாரல்அம் சோண
      சைலனே கைலைநா யகனே.

என்பார் "சோணசைல மாலை" என்னும் நூலில் பொழுதுபோக்கு எவ்வாறு அமைதல் வேண்டும் என்ற அறிவுறுத்துகின்றார் சிவப்பிரகாச சுவாமிகள்.

இதன் பொருள் ---

முதிர்ந்த தினைப்புனத்தைக் காவல் செய்யும் வேடர் மகளிர், முத்துக்களையும், மணிகளையும் எறிந்து கிளிகளைத் துரத்துகின்ற சாரலோடு விளங்கும் சோணசைலப் பெருமானேதி! ருக்கயிலையின் நாயகனே!  உண்மைத் தவம் உடையவர்களின் திருவடிகளை வழிபடுதலிலும், சிவாகமங்களை ஆய்ந்து ஓதி உணர்தலிலும், அன்று அலர்ந்த மலர்களால் உம்மை வழிடுகின்ற திறத்திலுமே எனது பொழுது கழியுமாறு அருள் புரவீராக.

எந்நேரமும் நல் நேரமாகக் கழிய வேண்டும். திருவருள் தாகம் இருத்தல் வேண்டும். எடுத்த இப்பிறப்பிலேயே பிறப்பின் இலட்சியத்தைப் பெறப் பெரிதும் முயலுதல் வேண்டும்.

"பொய்திகழும் உலகநடை என்சொல்கேன், என்சொல்கேன்,
             பொழுதுபோக்கு ஏது என்னிலோ,
  பொய்உடல் நிமித்தம் புசிப்புக்கு அலைந்திடல்,
             புசித்தபின் கண்ணுறங்கல்,
கைதவம் அலாமல் இது செய்தவம் அதுஅல்லவே,
             கண்கெட்ட பேர்க்கும்வெளியாய்க்
  கண்டது இது விண்டு இதைக் கண்டித்து நிற்றல்எக்
              காலமோ அதை அறிகிலேன்"

என்று அறிவுறுத்துகின்றார் தாயுமானார்.

இதன் பொருள் ---

நிலை இல்லாது சென்று கொண்டிருக்கின்ற இந்த உலகமே பெரிது எனக்கொண்ட, உலகத்து வாழும் மதியிலா மாந்தர்தம் உலக ஒழுக்கத்தினை என்னவென்று சொல்லுவேன், என்னவென்று சொல்லுவேன். அம் மக்கட்குப் பொழுது எவ்வாறு போகின்றது என்னில், நிலையாத தத்தம் உடலின்பொருட்டு உண்ணவேண்டிய உணவினுக்கு ஓயாது அங்கும் இங்கும் அலைந்து திரிந்து ஐயம் ஏற்று உண்பதும். உண்ட களைப்பு நீங்கியிட நன்றாய்க் கண்ணுறக்கம் கொள்ளுதலும், ஆகிய பிறப்பிற்குரிய இவைகள் வஞ்சனைச் செய்கைகள் அல்லாமல், நல்ல செய்தவம் ஆகாதல்லவா? கண்ணில்லாத குருடர்க்கும் வெட்ட வெளியாகக் கண்ட செய்தியாகும் இது. இப் பொய் ஒழுக்கினை உளமாரக் கண்டித்து விலகி அடியேன் நிற்றற்குரிய காலம் எக்காலம் என்பதை அறிகிலேன்.

உனை ஓதி ---

இறைவன் திருப்புகழை எந்நேரமும், காதலாகி, கசிந்து கண்ணார் மல்கி ஓதவேண்டும்.

தொழுதார் வினை வேர் அடியோடு அறவே துகள் தீர் பரமே தரு தேவா ---

துகள் --- குற்றம்.

பரம் - மேலான நிலை. பரநிலை.

உயிர்களாகிய நாம் அறிவுப் பொருள். அறிவுப் பொருளாகிய நம்மிடத்தில் அறியாமையும் இருக்கிறது. எவ்வாறெனில் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து வருகின்ற பிறப்பு இறப்புக்களில் அகப்பட்டுத் துன்புற்று வருகிறோம். ஆயினும், எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தோம் என்பதையோ, பிறவி நமக்குத் துன்பம் தருவது என்பதையோ உணராது இருக்கின்றோம். நாம் செய்த வினை காரணமாகவே பிறவியும் துன்பங்களும் வருகின்றன என்பதையும் நாம் உணர்வதில்லை. இப்பிறவியிலிருந்து நம்மை எடுத்துக் காத்துப் பேரின்பத்துள் வைக்கவல்ல இறைவனது திருவருளையும் நாம் அறியாமல் அதனைப் பற்றிச் சிறிம் கவலை கொள்ளாமல் வாழ்கின்றோம். அறிவுப் பொருளாக இருந்தும், நாம் பிறவித்துயர், வினை, திருவருள் முதலியவற்றை அறியாது இருக்கிறோம். இவற்றை அறியாமல் இருப்பதற்கு காரணம் அகவிருள் ஆகும்.

காணும் தன்மையுடைய கண் பொருள்களைக் காண ஒட்டாதபடி, இருள் என்ற பொருள் அக்கண்ணை மூடி மறைக்கின்றது. கண் பொருள்களை அறியாத தன்மை இருளால் உண்டாவது. கண்ணை மறைக்கின்ற புற இருள்போல உயிரோடு பொருந்தி அதனை மறைத்திருக்கின்ற அக இருள் ஒன்று உள்ளது. அதுவே ஆணவமலம் எனப்படுவது. முன்னே கூறியபடி பிறவித்துயர். வினை, திருவருள் முதலிய அறியத்தக்க பல பொருள்களுள் ஒன்றையும் அறியவொட்டாதபடி செய்வது ஆணவ இருளே ஆகும்.
  
புற இருள் வந்து கண்ணை மறைக்கும் போது, கண் செயற்படாது போகிறது. உயிர் கண்ணுக்கு வேறாக இருப்பதனால் அக் கண் செயற்படாமையைக் கொண்டு அதனை மறைக்கக் கூடிய இருளாகிய பொருள் வந்தது என்று உயிர் கருதி உணர்கிறது. அக இருளாகிய ஆணவமோ உயிரையே மறைத்து நிற்கிறது. அவ்வாறு மறைத்து நின்று அறியாமையை உண்டாக்குகிறது. உயிர் அவ்வறியாமையையே அறிவு என்று நம்பி விடுகிறது. அதனாலேயே தன்னை ஒன்று மறைத்திருக்கிறது என்பதை எவ்வகையினாலும் உணர முடியாமல் போகிறது.

புற உலகில் இருள் வந்து சேர்ந்தபோது, அதனை உணர்ந்து, அதனை நீக்கிக் கொள்ள வழி தேடுகிறோம். ஆணவ இருளினால் அறிவு மறைக்கப்படும் போது அம் மறைப்பினை நாம் உணர்வதில்லை. அதனால் ஏற்படும் அறியாமையையே அறிவு என்று நம்பி விடுகிறோம். அதனாலேயே அறியாமையைப் போக்கிக் கொள்ள வழி தேடாமல் இருக்கிறோம்.

இதனை உலகியலாகச் சிந்திக்கலாம். ஒரு குடும்பத்தலைவர் தமது மனைவி, மக்கள், உடன் பிறந்தார் பொருட்டு வாழ்நாளெல்லாம் பாடுபட்டுப் பொருள் ஈட்டினார். இறுதிக் காலத்தில் அவர்கள் தனக்குத் துணையாக இருப்பர் என்று உறுதியாக நம்பினார். ஆனால், அவர் ஓய்வு பெற்ற பின்னர், அவருக்கு வருவாய் இல்லை என்று ஆன பின்னர், குடும்பத்தார் அவரிடம் நடந்து கொண்ட முறையில் அவர் வேறுபாட்டைக் கண்டார். தனக்கு உரிய மதிப்பினை அளிக்காமல் புறக்கணிக்கும் போக்கினைக் கண்டார். அவர்கள் கடைசி வரை தமக்குத் துணையாய் இருப்பர் என்று நம்பியது எவ்வளவு அறியாமை என்று எண்ணி வருந்தினார். இத்துணைக் காலமும் அவர் அறியாமையில் இருந்தார். ஆயினும் நாம் அறியாமையில் இருக்கிறோம் என்பதை அவர் உணரவில்லை அதற்குக் காரணம், அந்த அறியாமையே அவருக்கு அறிவாகத் தோன்றியதுதான்.

இனி அறியாமையிலே இரு நிலைகள் உள்ளன. ஒன்று பேரறியாமை; மற்றொன்று, ஓரளவில் அறியாமை. பேரறியாமையாவது உயிர் யாதொன்றையும் அறிய முடியாமல் முழுமையான அறியாமையில் மூழ்கி இருத்தல். அந்நிலையில் உயிர், தான் ஒரு பொருள் உண்டு எனத் தன் இருப்பையும் கூட அறியாது நிற்கும். நாம் உறங்கும் காலத்தில் இப்படிப்பட்ட பேரறியாமையே நமக்கு உண்டாகிறது அப்பொழுது ஐம்பொறி முதலிய கருவிகள் செயற்படாது போதலினால் அறிவு விளங்காமல் போகிறது. உயிர் அந்நிலையில் ஆணவமலத்தின் வயப்பட்டு விடுகிறது. இருள் வயப்பட்ட கண் ஒன்றையும் அறிய மாட்டால் திகைத்து நிற்பதுபோல, உயிரும் உறக்கத்தில் ஆணவ மலத்தால் மறைக்கப்பட்டு முழு அறியாமை உடையதாய் நிற்கிறது. இப்படிப்பட்ட பேரறியாமை நிலை, கேவல நிலை எனப்படும். நாள்தோறும் நாம் இக் கேவல நிலையை நாம் ஒவ்வொருவரும் அடைந்து வருகிறோம்.

இனி ஓரளவில் உள்ள அறியாமை பற்றிக் காண்போம். எங்கும் செறிந்த இருளிடத்தில் ஒரு விளக்கை ஏற்றினால் அவ்விளக்கொளியில் இருள் சிறிது விலகுகிறது. ஆனால், அது முற்றிலும் நீங்கி விடவில்லை. நீங்காது இருக்கிற அந்த இருள் விளக்கொளியின் காரணமாக முன்பு போலப் பொருள்களை முற்றிலும் மறைக்க முடியவில்லை. ஆனால், அது வேறு ஒரு காரியத்தைச் செய்கிறது. விளக்கொளியானது பொருள்களைப் புலப்படுத்துகிற போது இருளானது அந்த ஒளியோடு கலந்து பொருள்களை மங்கலாகப் புலப்படும்படி செய்கிறது. தரையில் கிடக்கும் கயிற்றைப் பாம்பு என்று தவறாகக் கருதும்படி செய்கிறது. இவ்வாறு இருள் ஒளியோடு சேர்ந்து பொருளின் இயல்பை வேறுபடுத்திக் காட்டுகிறது.

இந்தப் புற இருளின் செய்கை போல அக இருளாகிய ஆணவத்தின் செயலும் அமைகிறது. ஆணவம் இருள் என்றால் அதனை நீக்கும் விளக்குப் போன்றது மாயை. நமக்கு வாய்த்துள்ள ஐம்பொறிகளும், மனம் புத்தி போன்றவையும் மாயையினின்றும் தோன்றிய கருவிகளே என்பது நாம் அறிந்தது. இக்கருவிகளின் செயற்பாட்டினால், அதாவது, மாயாமலத்தின் சேர்க்கையால் ஆணவ மலத்தின் சத்தி சிறிது விலகுகிறது. அறிவு விளங்குகிறது. மாயையின் காரணமாக ஆணவ இருள் முன்பு போல அறிவை முற்றிலும் மறைக்க முடியவில்லை. ஆனால் அது இப்பொழுது வேறு ஒரு காரியத்தைச் செய்கிறது. மாயா கருவிகளால் விளங்கும் அறிவை விபரீத அறிவாக மாற்றி விடுகிறது. அற்பமான பொருளை உயர்வானது என்றும், நிலையில்லாத பொருளை நிலைத்தது என்றும் இவ்வாறு மாறி உணரும்படியாகச் செய்து விடுகிறது. இவ்வாறு ஆணவ இருள் மாயையோடு கூடிய நிலையில் உயிருக்கு மயக்க உணர்வை உண்டாக்குகிறது. நாமெல்லாம் நமக்கு வேறாகிய உடம்பையே நாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

ஆணவ மலத்தின் இயல்பு இரண்டு என்பது இப்போது தெளிவாகும். ஒன்று மாயையோடு சேராத தனி நிலையில் ஆணவமலம் உயிருக்குப் பேரறியாமையைத் தருதல். மற்றொன்று, மாயையோடு கூடிய நிலையில் உயிருக்கு ஓரளவில் அறியாமையைத் தருதல்.

ஆணவம் தனித்துச் செயற்படும் நிலை கேவலநிலை.

மாயையோடு கூடிச் செயற்படும் நிலை சகல நிலை.

ஆணவத்தின் காரணமாக உண்டாவது கன்மம் எனப்படும் வினையாகும்.

உயிர் இறைவனைப் போல அறிவுப் பொருளே ஆகும். ஆயினும் சுதந்திரமான அறிவினை உடையதல்ல. அறிவதற்குத் துணை ஒன்றே வேண்டாது, தானே அறிவதே சுதந்திர அறிவாகும். அத்தகைய சுதந்திர அறிவு உயிருக்கு இல்லை. பிறந்தது முதற்கொண்டு பெற்றோர், ஆசிரியர், நூல்கள் முதலிய துணையைக் கொண்டு தான் அறிவு விளங்குகிறது. மேலும் கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் அறிவதற்கு ஐம்பொறிகள் துணை செய்கின்றன. இவ்வாறு பொறிகளின் துணையில்லாமல் யாதொன்றையும் அறிய மாட்டாத உயிர்க்குச் சுதந்திர அறிவென்பது இல்லை. சுதந்திரமான செயலும் இல்லை. சுதந்திரமான செயலாவது எத்தடையுமின்றி நினைத்ததை நினைத்தவாறே செய்து முடித்தலாகும்.

ஒன்றை நினைக்கில் அது ஒழிந்திட்டு ஒன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும்  ஒன்றை
நினையாத முன் வந்து நிற்கினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்

என மூதுரையில் ஔவைப் பிராட்டியார் அருளிய அனுபவ வாக்கு உயிருக்குச் சுதந்திரமான செயல் இல்லை என்பதை உணர்த்தி நிற்கிறது.

இறைவனை இன்றி ஆன்மா எதனையும் தானே அறியவும் மாட்டாது. எதனையும் தானே செய்யவும் மாட்டாது. ஆயினும், ஆணவமலம் உண்டாக்குகிற மயக்க உணர்வால் ஆன்மா எச்செயலுக்கும் தன்னையே வினைமுதலாகக் கருதி நான் நான் என்று முனைத்து எழும். அவ்வாறு எழுந்த ஆன்மா ஆணவ சத்தியின் தூண்டுதலால் உலகப் பொருள்களை நோக்கி அவற்றின் மேல் இச்சை கொள்ளும். அவ் இச்சையினால் தனது அல்லாத அப்பொருள்களை எனது எனது என்று சென்று பற்றும். எனது என்பது புறப்பற்றும், யான் என்பது அகப்பற்றும் ஆகும். இவ்விரு பற்றுக்களின் வழியே செய்யும் முயற்சியே வினை அல்லது கன்மம் எனப்படும்.

ஆணவ மலமே உயிருக்கு "நான்" என்னும் உணர்வை உண்டாக்கி வினை புரியும் தன்மையைத் தருகிறது. "எனது" என்னும் உணர்வை உண்டாக்கி அனுபவிக்கின்ற தன்மையைத் தருகிறது. இவ்விரண்டு தன்மைகளும், வினை உண்டாவதற்கு ஏதுவாகின்றன.
        
ஆன்மா தனது செய்வோனாம் தன்மையினால் ஒரு செயலைச் செய்யும் போது நிகழ்வது தூல கன்மம். புலப்படுகிற வினை என்பது அதற்குப் பொருள். அச்செயல் முடிந்த பின் அது தூல நிலை நீங்கிச் சூக்கும நிலையை அடைந்து நிற்கும். அதனைப் புலப்படாத வினை எனலாம். புலப்படும் வினை நல்வினை, தீவினை என இரண்டு வகையாய் அமையும் பின் அவைகளே புலப்படாத வினையாய் நிற்கும்போது புண்ணியம், பாவம் எனப் பெயர் பெறும்.

புலப்படாத வினைகளே தத்தமக்குரிய காலம் வந்தபோது இன்பமும் துன்பமும் ஆகிய தம் தம் பயன்களைத் தம்மைச் செய்த ஆன்மாக்களுக்குக் கொடுக்கும்.

புலப்படும் நிலையில் நிகழும் வினை ஆகாமியம் எனப்படும். ஆகாமியம் என்பதற்கு "விரும்பிச் செய்யப்படுவது" என்பது பொருள். அச்செயல் முடிந்தபின், புலப்படா நிலையை அடைந்து சூக்குமமாய் நிலைத்து நிற்குங்கால் சஞ்சிதம் எனப்படும். சஞ்சிதம் என்பதற்கு நன்கு பெறப்பட்டது என்பது பொருள். புலப்படாத நிலையினின்று பயனாய் வந்து இன்ப துன்பங்களைக் கொடுக்கும் போது பிராரத்தம் எனப்படும். பிராரத்தம் என்பதற்கு நேர்படுவது என்பது பொருள்.

இதனால், ஒருவர் நல்வினை செய்தால் அது புலப்படாத நிலையில் புண்ணியமாய் நிலைத்து நின்று பின் காலம் வந்தபோது இன்பமாகிய பயனைத் தன்னைச் செய்தவருக்குக் கொடுக்கும். ஒருவர் தீவினை செய்தால் அது பாவமாய் நிலைத்து நின்று பின் காலம் வந்த போது துன்பமாகிய பயனைத் தன்னைச் செய்தவருக்குக் கொடுக்கும். எனவே, இன்ப துன்பங்களுக்குக் காரணம் வினை என்பது விளங்கும்.

எனவே, பிறவிக்கு வினை காரணம். அவ்வினை அற்றால் அன்றி பிறவி அறாது.

இருவினை முமலமுற இறவியொடு பிறவிஅற
ஏகபோகமாய் நீயும் நானுமாய்
இறுகும்வகை பரமசுகம் அதனைஅருள் இடைமருதில்
ஏகநாயகா லோகநாயகா.        ---  (அறுகுநுனி) திருப்புகழ்.

அவையே தானே ஆய்இரு வினையில்
போக்குவரவு புரிய, ஆணையில்
நீக்கம்இன்றி நிற்கும்அன்றே.

என்ற சிவஞானபோத இரண்டாம் சூத்திரத்தினாலும், இதற்கு மாதவச் சிவஞான யோகிகள் எழுதிய பேருரையாலும், சித்தியார், சிவப்பிரகாசம் முதலிய வழிநூல் புடைநூல்களாலும் வினையின் விளக்கத்தை விரிவாகக் கண்டு தெளிக.

இவ்வினைகளே பிறப்பு இறப்புக்குக் காரணமாம். வினை ஒழிந்தால் இத் தேகம் தினைப் போது அளவும் இராது.

வினைப்போக மேஒரு தேகம் கண்டாய்,
         வினைதான் ஒழிந்தால்
தினைப்போது அளவுநில்லாது கண்டாய்,
         சிவன் பாதம் நினை,
நினைப்போரை மேவு, நினையாரை
         நீங்கி நெறியின் நின்றால்
உனைப்போல் ஒருவர்உண்டோ, மனமே!
         எனக்கு உற்றவரே.                  ---  பட்டினத்தார்.

", மனமே! இவ்வுடம்பானது இருவினையின் காரியத்தால் ஆகியது. அக் கன்மத்தை நுகர்ந்து முடிந்தால், இவ்வுடம்பு ஒரு கணமும் நில்லாது அழியும். ஆதலினால், சிவபெருமானை நினைப்பாயாக. சிவசிந்தை செய்யும் அடியாருடன் உறவு கொள்வாயாக. சிவசிந்தை இல்லாதவரை விட்டு விலகுதி.  இங்ஙனம் நீ நடப்பாயேல் எனக்கு உற்ற துணைவர் உன்னைப்போல் ஒருவர் உண்டோ?” என்று பட்டினத்தடிகள் கூறுமாறு காண்க.

உயிர்கட்கு முற்பிறப்பில் செய்யப்பட்டுக் கிடந்த இருவினைக்கு ஈடாக இப்பிறப்பின் கண் இன்ப துன்பங்கள் எய்தும். 

வினை சடமாகலின் அதனை இறைவன் உயிர்கட்கு உரிய காலத்தில் ஊட்டுவன். மருத்துவனும் மன்னனும் போல் என்று உணர்க.

இருவினை இன்பத் துன்பத்து இவ்வுயிர் பிறந்துஇறந்து
வருவது போவது ஆகும், மன்னிய வினைப் பலன்கள்
தரும் அரன் தரணியோடு தராபதி போலத் தாமே
மருவிடா வடிவும் கன்ம பலன்களும் மறுமைக் கண்ணே.  ---  சிவஞான சித்தியார்.

இறைபணியில் நின்றால் வினைகள் விளைவது அற்றுப் போகும்.
பிராரத்த வினை உடல் ஊழாகக் கழியும்.

எல்லைஇல் பிறவி நல்கும்
         இருவினை, எரிசேர் வித்தின்
ஒல்லையில் அகலும், ஏன்ற
         உடல்பழ வினையது ஊட்டும்,
தொல்லையில் வருதல் போலத்
         தோன்றுஇரு வினையது உண்டேல்,
அல்ஒளி புரையும் ஞானத்
         தழலுற அழிந்து போமே.  --- சிவப்பிரகாசம்.

இதன் பொருள் ---

எல்லையற்ற பிறவிகளைத் தரும் இருவினைகளின் தொகுதியாகிய சஞ்சித கன்மம் என்பது தீயிலே இடப்பட்ட வித்துப் போல் ஞான ஆசிரியரின் அத்துவ சுத்தியினால் அழியும். இப் பிறவியில் அனுபவிப்பதற்கு ஏன்று கொண்ட பிராரத்த கன்மம் உடல் ஊழாய்க் கழியும். நுகரும் போது ஈட்டுவதாகிய ஆகாமிய கன்மம் என்பது ஒளி முன்பு இருள் நீங்குவது போல ஞான ஆசிரியரின் ஞானத் தீ பொருந்துதலால் அழிந்து போகும்.

இந்த ஞானத் தீ என்பது இறையருள் ஆகும்.  இறையருளால் வினைகள் வேர் அற்றுப் போகும் என்பதைப் பின்வரும் பிரமாணங்களால் தெளிக.

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகில்அவை ஒன்றும் இல்லையாம்;
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே.  ---  அப்பர்.

இதன் பொழிப்புரை ---

வானளாவ அடுக்கிய விறகிலே கொடிய நெருப்பு அவற்றை உண்பதற்கு உள்ளே புகுந்தால், விறகினுள் ஒன்றும் மீதியிராது எல்லாம் சாம்பலாகும். இறைவனால் படைக்கப்பட்ட உலகில் மக்கள் பலகாலும் பழகிச் செய்த பாவத்தை நெருங்கி நின்று போக்குவது திருவைந்தெழுத்தே ஆகும் .

இதனை,  நான்காம் திருமுறையிலும்,  

"சந்திரற் சடையில் வைத்த 
     சங்கரன் சாமவேதி, 
அந்தரத்து அமரர் பெம்மான்
     ஆன்நல் வெள்ளேறு  ஊர்தியான் தன்
மந்திரம் நமச்சிவாய
     ஆக நீறு அணியப் பெற்றால்
வெந்து அறும் வினையும் நோயும்
          வெவ்வழல் விறகு இட்டு அன்றே"

என்று அருளினார் அப்பர் பெருமான்.

திருஞானசம்பந்தப் பெருமானும்

"மவ்வம் தோய் பொழில் அரிசிலின்
     வடகரை வருபுனல் மாகாளம்
கவ்வையால் தொழும் அடியவர் மேல்வினை
     கனல் இடைச் செதிள் அன்றே"

என்று அருளி உள்ளார்.

வழிபாடு நம் வினைகளை நெருப்பில் பட்ட விறகைப்போல் ஆக்கும் எனபதால், வழிபாட்டினை மறவாது ஆற்றி,  வினைகளை வீட்டி, பிறவியை மாற்றுவோம்.
        
ஆண்டாள் நாச்சியாரும் தமது திருப்பாவையில்,   "மாயனை, மன்னு வடமதுரை மைந்தனை,  தூய பெருநீர் யமுனைத் துறைவனை, ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,  தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை,  தூயோமாய் வந்து,  நாம் தூமலர் தூவித் தொழுது,  வாயினால் பாடி,  மனத்தினால் சிந்திக்க,போய பிழையும், புகுதருவான் நின்றனவும்,  தீயினில் தூசு ஆகும்" என்றே சாதித்துக் காட்டினார்.

பகவத் கீதை நான்காம் அத்தியாயத்தில், 37-ஆவது சுலோகம் கூறுவதைக் காண்போம்.  "யதா ஏதாம்ஸி ஸமித்தோக்னிர் பஸ்மஸாத் குருதே அர்ஜுன,  ஞானாக்னி ஸர்வகர்மாணி பஸ்மஸாத் குருதே ததா". 

இதன் கருத்து, "அருச்சுனா, சுடர்விட்டு எரியும் தீயானது விறகுகளை எப்படி சாம்பலாக்குகிறதோ, அப்படியே ஞானாக்கினியானது எல்லாக் கர்மங்களையும் சாம்பலாகச் செய்கிறது".

விளக்குப் புக இருள் மாய்ந்தாங்கு ஒருவன்
தவத்தின் முன் நில்லாதாம் பாவம் -  விளக்கு நெய்
தேய்விடத்துச் சென்று இருள் பாய்ந்தாங்கு, நல்வினை
தீர்விடத்து நிற்குமாம் தீது"

என்பது நாலடியார். 

எழுதா மறைமா முடிவே ---

வேதம் என்பது எழுதாக் கிளவி. எழுதப் படாமல் கேள்வி வாயிலாகவே அறியப்பட்டு வருவதால், சுருதி எனப்பட்டது.

வேதத்தின் முடிபொருளாகு விளங்குபவர் முருகப் பெருமான்.
"மறை முடிவாம் சேவக் கொழுந்தே" என்பது கந்தர் கலிவெண்பா.

இறைவா எது தா அது தா ---

இறைவன் இன்னாருக்கு இன்னது என்று அறிந்து, அவரவரை அந்த அந்தத் தொழிலில் செலுத்தி ஆட்டுவிப்பான்.  அதன் வழியை பலனைத் தருவான். பாவைக் கூத்தில் ஆட்டுவிப்பான் செயல் வழி, பாவை ஆடுவது போல், இறைவன் செலுத்திய வழி ஆன்மாக்கள் செல்லும்.

ஊட்டுவிப் பானும் உறக்குவிப் பானும் இங்குஒன்றொடு ஒன்றை
மூட்டுவிப் பானும் முயங்குவிப் பானும் முயன்றவினை
காட்டுவிப் பானும் இருவினைப் பாசக் கயிற்றின் வழி
ஆட்டுவிப் பானும் ஒருவன்உண்டே தில்லை அம்பலத்தே.---  பட்டினத்தடிகள்.

ஆட்டுவித்தால் ஆர்ஒருவர் ஆடா தாரே,
    அடக்குவித்தால் ஆர்ஒருவர் அடங்கா தாரே,
ஓட்டுவித்தால் ஆர்ஒருவர் ஓடா தாரே,
    உருகு வித்தால் ஆர்ஒருவர் உருகா தாரே,
பாட்டுவித்தால் ஆர்ஒருவர் பாடா தாரே,
    பணிவித்தால் ஆர்ஒருவர் பணியா தாரே,
காட்டுவித்தால் ஆர்ஒருவர் காணா தாரே,
    காண்பார்ஆர் கண்ணுதலாய் காட்டாக் காலே.---  அப்பரடிகள்.

பாட்டுவித்தால் பாடுகின்றேன், பணிவித்தால்
    பணிகின்றேன், பதியே, நின்னைக்
கூட்டுவித்தால் கூடுகின்றேன், குழைவித்தால்
    குழைகின்றேன், குறித்த ஊணை
 ஊட்டுவித்தால் உண்கின்றேன், உறக்குவித்தால்
    உறங்குகின்றேன், உறங்காது என்றும்
ஆட்டுவித்தால் ஆடுகின்றேன், அந்தோ, இச்
    றியேனால் ஆவது என்னே.       ---  திருவருட்பா.

இன்ன பணியில் என்னை ஏவுதல் வேண்டும் என்று தலைவனைப் பணியாளர் கேட்பது முறைமையாகாது.  தலைவன் இட்ட கட்டளையையே பணியாளர் புரிவர்.  அவர்களை எப்படி ஏவவேண்டும் என்ற கணக்கைத் தலைவன்தான் அறிவான்.

கண்ணார் நுதலோய், கழல்இணைகள்
         கண்டேன் கண்கள் களிகூர
எண்ணாது இரவும் பகலும் நான்
         அவையே எண்ணும் அது அல்லால்,
மண்மேல் யாக்கை விடுமாறும்,
         வந்துஉன் கழற்கே புகுமாறும்
அண்ணா! எண்ணக் கடவேனோ?
         அடிமை, சால அழகுஉடைத்தே.           ---  மணிவாசகம்.

நாகையில் வாழ் பெருமாளே ---

நாகப்பட்டினம், சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
நாகப்பட்டினம் நகரில் காயாரோகணேசுவரர் திருக்கோயில் உள்ளது. இதற்கு மிக அருகிலேயே 108 திவ்யதேசங்களில் ஒன்றான நாகை சௌரிராஜப் பெருமாள் ஆலயம் இருக்கிறது.

நாகப்பட்டினத்திற்கு அருகில் வடக்கு பொய்கைநல்லூர் என்னும் தேவார வைப்புத் தலம் உள்ளது. நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி சாலையில் தெற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள வடக்கு பொய்கைநல்லூர் ஒரு தேவார வைப்புத் தலம். இத்தலத்தின் மூலவர் நந்தி நாதேசுவரர் ஒரு சுயம்பு லிங்கம். அம்பாள் பெயர் செளந்தரநாயகி.

இறைவர்  : காயாரோகணேசுவரர், ஆதிபுராணர்.
இறைவியார் : நீலாயதாட்சி, கருந்தடங்கண்ணி.
தல மரம் : மாமரம்.
தீர்த்தம்  : தேவ தீர்த்தம், புண்டரீக தீர்த்தம்.

தேவார முதலிகள் ஆகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாரூரர் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளப் பெற்ற திருத்தலம்.

கடற்கரையை ஒட்டியுள்ள ஊர்கள் பட்டினம் என்ற பெயரால் வழங்கப் பெறும். நாகர்கள் என்ற ஒரு வகுப்பினர் இந்த இடத்தில் குடியேறி வாழ்ந்து வந்ததால் இவ்வூர் நாகப்பட்டினம் எனப் பெயர் பெற்றது. அஷ்ட நாகங்களில் ஒன்றான ஆதிசேஷன் என்ற நாகம் பூசித்த தலம் ஆதலால் இப்பெயர் பெற்றது என்று தலபுராணம் கூறுகிறது.

சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றான இத்திருத்தலத்தில்,
(64 சக்தி பீடங்களில் ஒன்று) அம்பாள் நீலாயதாட்சி அருளாட்சி செய்கிறாள். காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி என்ற வரிசையில் இத்தலத்து அம்பிகை நாகை நீலாயதாட்சி என்று வழங்கப் பெறுகிறாள்.

இறைவன் அளித்த அதே உடலோடு சொர்க்கத்தில் இடம் கேட்டு தவம் செய்த புண்டரீக முனிவரின் பக்தியில் உள்ளம் உருகி முனிவரை அதே உடலோடு (காயம்) ஆரோகணம் செய்து முக்தி கொடுத்ததால் இத்தலத்து இறைவன் காயாரோகனேசுவரர் என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள் செய்கிறார். இங்குள்ள சிவலிங்கம் புண்டரீக முனிவரால் தோற்றுவிக்கப்பட்டதற்கு அத்தாட்சியாக அவரின் திரு உருவம் உட்பிரகார கிழக்குப் பகுதி தூணில் அழகுற செதுக்கப்பட்டிருக்கிறது.

அம்பாள் நீலாயதாட்சி இங்கு கருந்தடங்கண்ணி என்ற பெயரில் கன்னிப் பெண்ணாகக் காட்சி அளிக்கிறாள். ஆகையால் சுவாமிக்குப் பக்கத்தில் அமையாது தனியாகக் கோவில் கொண்டு அருள் பாலிக்கிறாள்.

நாகாபரண பிள்ளையார் இக்கோயிலின் நுழைவாசலில் தனிக்கோயில் கொண்டு அருள் பாலிக்கிறார்; பாம்புகளை நகைகளாக அணிந்துகொண்டு ஆசி வழங்கும் பிள்ளையார் இவர் ஒருவரே. திருநாகேஸ்வரத்திற்கு முன்பான இக்கோயிலில், ராகு, கேது தோஷங்கள் உள்ளவர்கள் வழிபடவேண்டிய பிள்ளையாராக இருக்கிறார்.

இத்தலத்திலுள்ள சனிபகவான் தசரத சக்கரவர்த்தியால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தலம் சனி பகவானுக்கு உகந்த தலம். தசரத மன்னனுக்கு சனிபகவான் தான் என்றும் இத்தலத்தில் நிலைத்திருப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறான் என்பதை இத்தல புராணம் விரிக்கிறது. இங்கு அனைத்து கிரகங்களும் சனி பகவானை மேற்குப் பார்த்தபடி இருப்பதும், சனி பகவான் தெற்குப் பார்த்தவாறு இருப்பதும் இத்தலத்தின் சிறப்பம்சமாகும். ஆலயத்தின் தீர்த்தங்களாக கோவிலுக்கு மேற்கில் புண்டரீக தீர்த்தமும், முத்தி மண்டபம் அருகில் தேவ தீர்த்தமும் உள்ளன.

தனி சந்நிதியில் ஒரே கல்லினால் ஆன ஆறுமுகப் பெருமான் பன்னிரு திருக்கரங்களுடன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் அருகில் காட்சி தருகின்றனர்.

நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் இத்தலத்தில் அவதரித்து முக்தி அடைந்தவர். அவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது.

அதிபத்த நாயனார் வரலாறு

அவதாரத் தலம்: நாகப்பட்டினம் - நுளைபாடி (நம்பியார் நகர்)
வழிபாடு          : இலிங்க வழிபாடு.
முத்தித் தலம்     : நாகைக்காரோணம்.
 குருபூசை நாள்   : ஆவணி - ஆயில்யம்.

சோழ நாட்டிலே, நாகப்பட்டினத்திலே, நுளைப் பாடியிலே, வலைஞர் குலத்திலே அவதரித்தவர் அதிபத்த நாயனார். அவர் பரதவர்களுக்குத் தலைவர். சிவபத்தியில் சிறந்தவர்.  வலைப்படும் மீன்களில் ஒரு தலைமீனைச் சிவபெருமானுக்கு என்று கடலிலே விடுவது அவரது வழக்கம். வலையில் ஒரே மீன் படினும், அதனைச் சிவபெருமானுக்கு என்றே அவர் கடலில் விடுவார்.

சிவபெருமான் திருவருளால் நாள்தோறும் ஒவ்வொரு மீனே கிடைப்பது ஆயிற்று. வழக்கம்போல் அதிபத்தர் அதனைக் கடலிலே விட்டு வந்தார். நாயனார் செல்வம் சுருங்கிற்று.  சுற்றங்கள் உணவு இன்றி வருந்தின. உணவு இன்மையால் நாயனார் திருமேனியும் மெலிந்தது. அது குறித்து அவர் வருந்தவதில்லை. சிவபத்தியில் மட்டும் நாயனாருக்குத் தளர்ச்சி தோன்றவேயில்லை.

ஒரு நாள் வலையில் பொன்மீன் ஒன்றே அகப்பட்டது. அதை வலைஞர்கள், நாயனார் முன்னிலையில் கொண்டு வந்தார்கள்.  நாயனார் அதைக் கண்டு, "இது என்ன பொன் மீன்? உறுப்புக்களிலும் நவமணிகள் அமைந்திருக்கின்றன. இது சிவபெருமானுக்கு ஆக" என்று அதனையும் கடலிலே விடுத்தார்.

அப்பொழுது சிவபெருமான் நாயனாருக்குக் காட்சி அளித்தார். நாயனார் அகம் குழைந்து தொழுதார். சிவபெருமான் அவருக்குச் சிவலோக வாழ்வு தந்து அருளினார்.

அதிபத்த நாயனார் வழிபட்ட அமுதீசர் திருக்கோயில் நுளைபாடியில் (நம்பியார் நகர்) உள்ளது.

 சேக்கிழார் பெருமான் குறிப்பிடும் நாகப்பட்டினத் திருநகர "நுளைபாடி" என்பது தற்போது "நம்பியார் நகர்" என்று வழங்கப்படுகின்றது. இது நாகப்பட்டினம் நகரின் ஒரு பதியாகும்.

கற்றார் பயில் கடல் நாகைக்காரோணம் என்பது திருஞானசம்பந்தர் திருவாக்கு. காளமேகப் புலவர் இவ்வூருக்கு வந்தபோது பசியால், வீதியில் பாக்கு விளையாடும் பாலகர்களை நோக்கி 'சோறு எங்கு விக்கும்?' என்று கேட்டார். அச்சிறுவர்கள் 'தொண்டையில் விக்கும்' என்று பதில் கூறினர். (விற்கும் என்பது பேச்சு வழக்கில் விக்கும் என வழங்குதல் உண்டு.) புலவர் சிறுவர்கள் மீது கோபங்கொண்டு, அவர்கள் மீது வசைபாடும் பொருட்டு வரை சுவர் ஒன்றில் 'பாக்குத் தறித்து விளையாடும் பாலகர்க்கு...' என்று எழுதி நிறுத்தி விட்டு, பசி தீர்ந்து எஞ்சிய பகுதியைப் பாடி முடிப்போம் என்று சென்று, பசியாறி வந்து பார்க்கும்போது, அப்பாடலின் இரண்டாம் அடி 'நாக்குத் தமிழ் உரைக்கும் நன்னாகை' என்று எழுதி இருப்பதைக் கண்டு, சிறுவர்களின் கல்வியறிவை மெச்சிச் சென்றார் என்பது தனிப்பாடல் திரட்டில் காணப்படும் வரலாறு.

கருத்துரை

முருகா! வினையை வேரறுத்துத் திருவருள் புரிவீர்.



No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...