001. கடவுள் வாழ்த்து - 06. பொறிவாயில் ஐந்து




திருக்குறள்
அறத்துப்பால்

பாயிர இயல்

அதிகாரம் 01 --- கடவுள் வாழ்த்து

     முதல் அதிகாரத்தில், ஆறாவது திருக்குறளில், "மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது மெய்யான ஒழுக்க நெறியின்கண் வழுவாது நின்றார் பிறப்பின்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார்" என்று அருளினார் திருவள்ளுவ நாயனார்.


பொறிவாயில் ஐந்து அவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறி நின்றார், நீடு வாழ்வார்.                      

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     பொறி வாயில் ஐந்து அவித்தான் --- மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது;

     பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார் --- மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார்,

     நீடு வாழ்வார் --- பிறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார்.

     (புலன்கள் ஐந்து ஆகலான், அவற்றின்கண் செல்கின்ற அவாவும் ஐந்து ஆயிற்று. ஒழுக்க நெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது. 'கபிலரது பாட்டு' என்பது போல.

(இறைவன் வகுத்த நெறி நின்றார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, பெரியபுராணத்தில் வரும் தொகை அடியாராகிய முப்போதும் திருமேனி தீண்டுவார் பற்றி, திருத்தொண்டர் மாலை என்னும் நூலில் குமார பாரதி அவர்கள் பின்வருமாறு பாடி உள்ளார்கள்.

கருமேனி அன்பால் கழீஇமுப் போதும்
திருமேனி தீண்டுவார் சீர்வாழ்வு - ஒருவா
பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.


     முப்போதும் திருமேனி தீண்டுவார் திறத்தை, தெய்வச் சேக்கிழார் பெருமான் பின் வருமாறு காட்டி உள்ளார்..

எப்போதும் இனியபிரான் இன்னருளால் அதிகரித்து
மெய்ப்போத நெறிவந்த விதிமுறைமை வழுவாமே
அப்போதைக் கப்போதும் ஆர்வமிகும் அன்பினராய்
முப்போதும் அர்ச்சிப்பார் முதற்சைவ ராமுனிவர்.

இதன் பொழிப்புரை ---

     எஞ்ஞான்றும் உயிர்களுக்கும் இனியவரான சிவபெருமானின் இனிய திருவருளால் பெருகி, உண்மையான சிவாகம ஞான நெறியில் நின்று, தவறாமல் அவ்வக் காலத்தோறும் ஆசை மிகும் அன்புடையவராகி, முக்காலத்தும் இறைவழிபாடாற்றி வருபவர்கள் ஆதிசைவரான முனிவர்கள் ஆவர்.

இதற்குக் குறிப்புரை ---

     அதிகரித்து - பெருகி. இறைவனின் ஐம்முகங்களின் வழியாகத் தோன்றிய அகத்தியர், கௌதமர், பரத்துவாசர், காசிபர், கௌசிகர் ஆகிய ஐவர் வழி வந்து பெருகியவர்கள் ஆதலின் `இன்னருளால் அதிகரித்து' என்றார். மெய்ப்போதம் - உண்மை ஞானம். இதனைப் பெறுதற்குச் சிவாகமங்கள் உதவும். அந்நெறி வழி ஒழுகுபவர்களே இவ்வடியவர்கள் ஆவர். ஆறுகாலங்களிலும் வழிபாடு செய்விக்கும் இவர்கள், அவ்வக் காலத்தும் முற்காலத்தில் ஆற்றிய வழிபாட்டிற்கும் மேலாக அன்பும் ஆர்வமும் கொண்டு வழிபட்டும் வழிபாடு செய்வித்தும் வருபவர்கள் ஆவர். முதற்சைவர் - ஆதி சைவர்.


தெரிந்துணரின் முப்போதும் செல்காலம் நிகழ்காலம்
வருங்கால மானவற்றின் வழிவழியே திருத்தொண்டின்
விரும்பிஅர்ச் சனைகள்சிவ வேதியர்க்கே யுரியனஅப்
பெருந்தகையார் குலப்பெருமை யாம்புகழும் பெற்றியதோ.

இதன் பொழிப்புரை ---

      ஆராய்ந்து காணின், இறப்பு நிகழ்வு எதிர்வு என்று மூன்றாய்ப் பகுக்கப்படும் எக்காலத்திலும், வழிவழியாய்ச் சிவபெருமானது அகம்படித் தொண்டில் விரும்பிய உள்ளத்தினராய் வழிபட்டும், போற்றியுரை செய்தும் வரும் மரபு சிவமறையோர்களுக்கே உரித்தாகும். அப் பெருந்தகையார்தம் குலத்தின் பெருமை, எம்மால் புகழப்படும் தன்மையதோ? அன்று என்பதாம்.

     பின்வரும் அருட்பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க....

அஞ்சுஒண் புலனும் அவை செற்ற
மஞ்சன் மயிலாடு துறையை
நெஞ்சு ஒன்றி நினைந்து எழுவார்மேல்
துஞ்சும் பிணி ஆயின தானே.       --- திருஞானசம்பந்தர்.

(பிறவிப் பிணி துஞ்சும்)

அன்றிய அமணர்கள் சாக்கியர்கள்
குன்றிய அறவுரை கூறாவண்ணம்
வென்றவன் புலனைந்தும் விளங்க எங்கும்
சென்றவன் உறைவிடம் திருவல்லமே. --- திருஞானசம்பந்தர்.

இலங்கையர் இறைஞ்சு இறை விலங்கலின் முழங்க
உலம்கெழு தடக்கைகள் அடர்த்திடலும் அஞ்சி
வலங்கொள எழுந்தவன் நலம்கவின அஞ்சு
புலங்களை விலங்கினை புறம்பயம் அமர்ந்தோய்.     --- திருஞானசம்பந்தர்.

அக்கு இருந்த ஆரமும் ஆடுஅரவும் ஆமையும்
தொக்கு இருந்த மார்பினான் தோல்உடையான் வெண்நீற்றான்
புக்குஇருந்த தொல்கோயில் பொய்யிலா மெய்ந்நெறிக்கே
தக்குஇருந்தார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. --- திருஞானசம்பந்தர்.

பொறிப் புலன்களைப் போக்குஅறுத்து உள்ளத்தை
நெறிப்ப டுத்து நினைந்தவர் சிந்தையுள்
அறிப்புஉறும் அமுத் ஆயவன் ஏகம்பம்
குறிப்பினால் சென்று கூடித் தொழுதுமே. --- அப்பர்.

வென்றானைப் புலன் ஐந்தும் என் தீவினை
கொன்றானைக் குணத்தாலே வணங்கிட
நன்றா நன்மனம் வைத்திடு ஞானமாம்
ஒன்றானைக் கண்டுகொண்டது என்உள்ளமே.  --- அப்பர்.

எல்லாம்முன் தோன்றாமே தோன்றி னான்காண்
         ஏகம்பம் மேயான்காண் இமையோர் ஏத்தப்
பொல்லாப் புலன்ஐந்தும் போக்கினான் காண்
         புரிசடைமேல் பாய்கங்கை பூரித்தான் காண்
நல்லவிடை மேல்கொண்டு நாகம் பூண்டு
         நளிர்சிரம் ஒன்றுஏந்தி ஓர் நாணாய் அற்ற
கல்லாடை மேல்கொண்ட காபாலி காண்
         காளத்தியான் எவன் என்கண் உளானே.   --- அப்பர்.

ஒறுத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்
         ஒள்அழலை மாட்டி உடனே வைத்து
இறுத்தானாம் எண்ணான் முடிகள் பத்தும்
         இசைந்தானாம் இன்னிசைகள் கேட்டான் ஆகும்
அறுத்தானாம் அஞ்சும் அடக்கி அங்கே
         ஆகாய மந்திரமும் ஆனான் ஆகும்
கறுத்தானாம் காலனைக் காலால் வீழக்
         கண்ணாம் கருகாவூர் எந்தை தானே.      --- அப்பர்.

புலன்கள் ஐந்தால் ஆட்டுண்டு போது போக்கி
         புறம்புறமே திரியாதே போது நெஞ்சே
சலங்கொள்சடை முடிஉடைய தலைவா என்றும்
         தக்கன்செய் பெருவேள்வி தகர்த்தாய் என்றும்
இலங்கையர்கோன் சிரம்நெரித்த இறைவா என்றும்
         எழில்ஆரூர் இடம்கொண்ட எந்தாய் என்றும்
நலங்கொள்அடி என்தலைமேல் வைத்தாய் என்றும்
         நாள்தோறும் நவின்று ஏத்தாய் நன்மையாமே. --- அப்பர்.

விருத்தனே வேலைவிடம் உண்ட கண்டா
         விரிசடைமேல் வெண்திங்கள் விளங்கச் சூடும்
ஒருத்தனே உமைகணவா உலக மூர்த்தீ
         நுந்தாத ஒண்சுடரே, அடியார் தங்கள்
பொருத்தனே என்றென்று புலம்பி நாளும்
         புலனைந்து அகத்தடக்கிப் புலம்பி நோக்கி
கருத்தினால் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
         கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.    --- அப்பர்.

கறிமாமிள கும்மிகு வன்மரமும்
         மிகஉந்தி வரும் நிவவின் கரைமேல்
நெறிவார் குழலார்அவர் காண நடம்செய்
         நெல்வாயில் அர்த்துறை நின்மலனே
வறிதே நிலையாத இம்மண் உலகில்
         நரனாக வகுத்தனை நான் நிலையேன்
பொறிவாயில் இவ்வைந்தினையும் அவியப்
         பொருதுஉன் அடியேபுகும் சூழல் சொல்லே.  ---  சுந்தரர்.

செம்மை வெண்நீற்று ஒருமையினார்,
         இரண்டு பிறப்பின் சிறப்பினார்,
மும்மைத் தழல் ஓம்பிய நெறியார்,
         நான்கு வேதம் முறை பயின்றார்,
தம்மை ஐந்து புலனும் பின்
         செல்லும் தகையார், அறு தொழிலின்
மெய்ம்மை ஒழுக்கம் ஏழ் உலகும்
         போற்றும் மறையோர் விளங்குவது.…  பெரியபுராணம்.


1 comment:

  1. புலமை காட்டும் பொருளுரை
    பொருத்தமான் விளக்கம்

    ReplyDelete

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...