001. கடவுள் வாழ்த்து - 05. இருள்சேர் இருவினையும்





திருக்குறள்
அறத்துப்பால்

பாயிர இயல்

அதிகாரம் 01 - கடவுள் வாழ்த்து.

     இதில் ஐந்தாவதாக வரும் திருக்குறள்,  இறைவனுடைய உண்மை சேர்ந்த, புகழத் தக்க நல்ல செயல்களை விரும்பிச் செய்பவரிடத்தில், பொய்சேரும் அறியாமையால் ஆகிய இருவினைகளும் சேரா என்கின்றது.

     இறைவன் இத் தன்மையதான சொரூபம் உடையவன் என்று கல்வி அறிவால் நிறைந்த ஒருவராலும் சொல்லப்படாமையால், அஞ்ஞானத்தை "இருள்" என்றார்.

     நல்வினையும் பிறவிக்கு ஏதுவாக இருப்பதால், "இருள் சேர் இருவினை" என்றார்.

     தலைமைக் குணங்கள் இல்லாதவரை, அக்குணங்களை உடையவர் என்று நினைத்து, அறிவில்லாதவர் சொல்லுகின்ற பெருமைகள் பொருள் சேர்ந்தவை அல்ல. தலைமைக் குணம் உடையவன் இறைவன் ஒருவனே ஆதலின், அவன் புகழ், "பொருள்சேர் புகழ்" ஆயிற்று.

     புரிதலாவது, எப்பொழுதும் வாயால் துதித்தல்.

திருக்குறளைக் காண்போம்...

இருள்சேர் இருவினையும் சேரா, இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு.

இதற்குப் பரிமேலழகர் உரை ----     

     இருள்சேர் இருவினையும் சேரா --- மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உள ஆகா;

     இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு --- இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து.

     (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை 'இருள்' என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் 'இருவினையும் சேரா' என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் - எப்பொழுதும் சொல்லுதல்)

     அவிச்சை, அவித்தை, அறியாமை, மாயை, ஆணவம், மோகம் என்று இவை எல்லாம் ஒரே பொருளைத் தருவன. எது சரி, எது சரியில்லை; எது நன்மை, எது தீமை என்னும் அறிவு தெளியாத நிலையில், அறியாமையில் நம்மால் வினைகள் ஆற்றப்படுகின்றன. அறிவோடு தான் எதையும் செய்வதாக நாம் நம்முடைய அறிவைக் கொண்டு தீர்மானம் செய்கின்றோம்.

     நாம் அறிந்தது எதுவோ அது அறிவு அல்ல. நல்லதன் நன்மையும், தீயதன் தீமையும் உள்ளவாறு உணர்ந்து தெளிவதே அறிவு என்றனர் நம் முன்னோர்.

"அறிவினுள் எல்லாம் தலை என்ப, தீய
செறுவார்க்கும் செய்யா விடல்".

என்ற திருக்குறளில் தலையான அறிவு எது என்பதைக் காட்டினார்.

அறிவினால் ஆகுவது உண்டோ? பிறிதின் நோய்
தம் நோய் போல் போற்றாக் கடை

என்ற திருக்குறளின் மூலம் அறிவின் பயன் என்ன என்றும் காட்டினார்.

     எனவே தான், "மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உள ஆகா" என்று உரை வகுத்தார் பரிமேலழகர்.

     தீவினை சேரக் கூடாது என்பதில் ஐயம் ஏதும் நிகழ வாய்ப்பு இல்லை. நல்வினை என்னும் புண்ணியமுமா? என்னும் ஐயம் நிகழத் தான் செய்யும்.

     மனிதப் பிறவியின் நோக்கமே, வாழ்வாங்கு வாழ்ந்து, பிறவி அற்ற நிலைக்கு உயர்வதே என்னும் உண்மையைத் தெளிய வேண்டும்.

     வினைகள், அவற்றிற்கு உரிய பயனைத் தருவன. "அவ்வினைக்கு இவ்வினை" என்னும் அருள் வாக்கை மறத்தல் கூடாது.

     நாம் செய்யும் தீவினை, பாவமாகி, அதற்கேற்ற துன்ப நிலையை இந்தப் பிறவியிலோ, வரும் பிறவியிலோ தரும். தீவினையையே புரிந்தவர்கள் அதன் பயனை நரக உலகம் சென்று அனுபவிக்க வேண்டும்.

     புண்ணியமும் அப்படியே. முழுதும் புண்ணியம் செய்தவர்கள் அதன் பலனை சுவர்க்கத்திலே அனுபவித்துக் கழிக்க வேண்டும்.

     இருவினையும் எஞ்சி இருந்தால், மறு பிறப்பில் இந்தப் பூமியில் பிறந்து அனுபவித்துத் தான் கழிக்க முடியும். பிறந்து விட்டால், மீண்டும் இயற்கையாக அவிச்சை காரணமாக, வினைகளைப் புரிந்துதான் ஆகவேண்டும்.

     அதனால் தான், இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை 'இருள்' என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் 'இருவினையும் சேரா' என்றும் கூறினார்.

     அவிச்சை காரணமா, உலகியல் நிலையில் இறைவனைத் தவிர மற்றவர்கள் புகழைப் பேசுகின்றோம். அது பொருள் சேர் புகழ் அல்ல என்பதைக் காட்ட, "இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக் கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது" என்றார் பரிமேலழகர்.

     "மலர் மிசை ஏகினான்" என்னும் திருக்குறளின் உரையில், "சேர்தல்" என்பதற்கு "இடைவிடாது நினைத்தல்" என்று உரை கண்ட, பரிமேலழகர், இத் திருக்குறளில், "புரிதல்" என்னும் சொல்லுக்கு "எப்பொழுதும் சொல்லுதல்" என்று உரை வகுத்தார்.

     இருள் சேர் இருவினையும் சேராமல் இருப்பதற்கு இறைவனுடைய பொருள் சேர் புகழையே சொல்லவேண்டும் என்று தெளிந்து விட்டால், "எப்பொழுதும் சொல்லுதல்" தவிர்க்க இயலாதது ஆகும்.

     "பொய்ம் மாயப் பெரும் கடலில் புலம்பா நின்ற புண்ணியங்காள், தீவினைகாள், திருவே, நீங்கள் இம் மாயப் பெருங்கடலை அரித்துத் தின்பீர்க்கு இல்லையே கிடந்துதான்" என்பது அப்பர் திருத்தாண்டகம்.

     அவிச்சையாகிய இருள் கெடுமானால், அருவினை இல்லை ஆகும். இதை வலியுறுத்தியது, சைவசித்தாந்தமும் திருக்குறளுமே. பிற சமயத்தார் சொல்லுவதை, திருவள்ளவர் மறுத்தார் என்று, கமலை வெள்ளியம்பலவாண முனனிவர் தாம் பாடிய, "முதுமொழிமேல் வைப்பு" என்னும் நூலில் பின் வரும் வெண்பாவைப் பாடினார்.

புத்தர் பிறர் சொல்லும் பொருள் மறுத்து, வள்ளுவர்தாம்
அத்தர் மறை ஆகமங்கள் ஆம்என்று ---  வைத்தது,
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு.

     புத்தர் பிறர் --- புத்தர் முதலிய புறச்சமயத்தார். அவர் கூறும் பொருள் உலகாயதம், பௌத்தம், சமணம் என்பன. பிறர்  ---  சைனருமாம்.  அத்தர் --- கடவுள். திருவள்ளுவர் அத்தருடைய மறைகளையும் ஆகமங்களையும் ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதை இதில் உள்ள திருக்குறள் காட்டும் என்பது கருத்து.

     அகரமுதல என்னும் திருக்குறளால் பதி இலக்கணமும், வேண்டுதல் வேண்டாமை என்னும் திருக்குறளால் பசு இலக்கணமும், இருள்சேர் இருவினையும் என்னும் திருக்குறளால் பாச இலக்கணமும் பெறப்பட நாயனார் கடவுள் வாழ்த்தை அமைத்து இருப்பதால், அவருக்கு ஆகமங்கள் உடன்பாடாம் என்பர் சித்தாந்திகள்.
                                   

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருத்தொண்டர் மாலை" என்னும் தமது நூலில் குமார பாரதி அவர்கள், பின் வரும் பாடலைப் பாடினார்.

பரமனையே பாடுவார் பாடும் புகழால்
இருவினையும் சேரார் இவரே - மருளாம்
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 

     பெரிய புராணத்தில் வரும் பரமனையே பாடுவார் என்னும் தொகை அடியார்களைப் பற்றியது.

     வடமொழி தென்மொழிகளில் வல்லவராய், பிறப்பு இறப்புக்களில் அகப்பட்டுச் சுழலும் பசுக்களாகிய பிரமவிட்டுணு முதலிய தேவர்களையும் மனிதர்களையும் மதித்து, அவர்களுக்கு வினைக்கு ஈடாகக் கிடைத்த அநித்தமும் துக்கமும் ஆகிய வாழ்வை மெய் எனக் கருதி, அவர்களைப் பாடி வாழ்நாளை வீண்நாளாகப் போக்காமல் பதிப்பொருளாகிய சிவபெருமானுடைய பெருமையை வேத சிவாகம புராண வழியால் உள்ளபடி அறிந்து, அவருடைய திருவடிகளை அடைந்து, மனம் கசிந்து உருக, மெய்ம்மயிர் பொடிப்ப, ஆனந்த அருவி பொழிய, அவரையே மெய்யன்போடு பாடி, நாம் சுவதந்திரர் ஆகிய சிவபெருமானுக்கே ஆளானோம், பர தந்திரர் ஆகிய மற்றுள்ளோர்களில் ஒருவருக்கும் குடியல்லோம், அவர்கள் எல்லாருக்கும் மேலானோம் என்று இறுமாப்பு அடைந்து திரிகின்ற மெய்யடியார்களே "பரமனையே பாடுவார்" என்று சொல்லப்படுவார்கள். 

         மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை தீவினை என்னும் இரண்டு வினைகளும் உளவாகா. இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து என்று திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்தமை காண்க.

         பொருள் --- மெய்ம்மை. புரிதல் --- எப்பொழுதும் சொல்லுதல். நல்வினையும் பிறவிக்குக் காரணமாதலின் இருவினையும் என்றார்.

     இதற்கு ஒப்புமையாக அமைந்த தேவாரப் பாடல் வருமாறு....

பையஞ்சுடர் விடுநாகப் பள்ளிகொள்வான் உள்ளத்தானும்
கைஅஞ்சு நான்குஉடையானைக் கால்விரலால் அடர்த்தானும்
பொய்அஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ்புரிந்தார்க்கு அருள்செய்யும்
ஐஅஞ்சின் அப்புறத்தானும் ஆரூர்அமர்ந்த அம்மானே.  ---  அப்பர். 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...