001. கடவுள் வாழ்த்து - 04. வேண்டுதல் வேண்டாமை



திருக்குறள்
அறுத்துப்பால்

பாயிர இயல்

அதிகாரம் 01 -- கடவுள் வாழ்த்து

     இந்த அதிகாரத்தில் வரும் நான்காம் திருக்குறள், "ஒரு பொருளையும் விரும்புதலும், வெறுத்தலும் இல்லாத இறைவனது திருவடிகளைச் சேர்ந்தார்க்கு எக்காலத்திலும் பிறவித் துன்பங்கள் இல்லை" என்கின்றது.

     பிறவித் துன்பங்கள் ஆவன ---  தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் ஆகிய மூவகைத் துன்பங்கள்.

     விருப்பும் வெறுப்பும் இல்லாத இறைவன் திருவடியைச் சேர்தலால், விருப்பு, வெறுப்புக் காரணமாக வருகின்ற மூவகைத் துன்பங்களும் இல்லை என்றாயிற்று.

     வேண்டுதல் --- பற்றாலும், ஆசையாலும், பாசத்தாலும் ஒன்றின் மீது விருப்பம் கொள்ளுதல்.

     வேண்டாமை --- வெறுப்பாலும், பொருந்தாமையாலும், பகைமையாலும் வன்றை விரும்பாமை.

     உயிருக்கு உள்ள மயக்க அறிவு காரணமா, ஒன்றை விரும்புதலும், ஒன்றை வெறுத்தலும் மாறி மாறி வரும். எனவே, அவற்றால் வரும் இன்பத் துன்பங்களும் மாறி மாறி வருகின்றன. ஒரு காலத்தில் விருப்புக் கொண்டதால் இன்பமாய்த் தோன்றிய ஒன்று, பிற்காலத்தில் துன்பம் தருவதாக அமைந்தால், வெறுப்பு வருகின்றது.

     நிலையில்லாத இன்பத் துன்பங்கள் மாறி மாறி வந்து சேர்வதை விடுத்து, நிலையான இன்பத்தை அடைய விரும்பினால், வேண்டுதல் வேண்டாமை இரண்டும் அறவேண்டும். அந்தப் பக்குவம் வருவதற்கு, அது உள்ள பொரு பொருளை உயிரானது எப்போதும் சார்ந்து இருக்கவேண்டும். அது பரம்பொருள் ஆகிய இறைவனே என்பதால், இத் திருக்குறளைக் காட்டினார் நாயனார்.

திருக்குறளைக் காண்போம்....   


வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு,
யாண்டும் இடும்பை இல.                      

இதற்குப் பரிமேலழகர் உரை---

     வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு --- ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு;

     யாண்டும் இடும்பை இல ---- எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா.

     (பிறவித் துன்பங்களாவன : தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான் வரும் துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும் (வேண்டுதலும் வேண்டாமையும்) இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.)

     இத் திருக்குறளுக்குப் பின்வரும் பாடல்களை ஒப்புமையாகக் கொண்டு நோக்கலாம்.

வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன் இறைவன் என்பதற்குப் பிரமாணம்...

கரைந்து கைதொழு வாரையும் காதலன்
வரைந்து வைதுஎழு வாரையும் வாடலன்
நிரந்த பாரிடத் தோடுஅவர் நித்தலும்
விரைந்து போவது வீழி மிழலைக்கே. ---  அப்பர்.

வேண்டாமை வேண்டுவதும் இல்லான் தன்னை,
         விசயனைமுன் அசைவித்த வேடன் தன்னை,
தூண்டாமைச் சுடர்விடுநல் சோதி தன்னை,
         சூலப் படையானைக் காலன் வாழ்நாள்
மாண்டுஓட உதைசெய்த மைந்தன் தன்னை,
         மண்ணவரும் விண்ணவரும் வணங்கி ஏத்தும்
ஆண்டானை ஆவடுதண் துறையுள் மேய
         அரன்அடியே அடிநாயேன் அடைந்து உய்ந்தேனே. ---  அப்பர்.

வேண்டா விருப்பும் வெறுப்பும் - அந்த
வில்லங்கத் தாலே விளையும் சனனம்,
ஆண்டான் உரைத்த படியே - சற்றும்
அசையாது இருந்துகொள் ஆறிவாகி நெஞ்சே. ---  தாயுமானார்.

இடும்பை இல்லாமல் போகும் என்பதற்குப் பிரமாணம்....

பொங்கு நல்கரி உரிஅது போர்ப்பது
     புலிஅதள் அழல்நாகம்
தங்க மங்கையைப் பாகமது உடையவர்
     தழல்புரை திருமேனி
கங்கைசேர்தரு சடையினர் கடிக்குளத்து
     உறைதரு கற்பகத்தை
எங்கும் ஏத்திநின்று இன்புறும் அடியரை
      இடும்பை வந்து அடையாவே.       ---  திருஞானசம்பந்தர்.   
 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...