001. கடவுள் வாழ்த்து - 03. மலர்மிசை ஏகினான்





திருக்குறள்
அறத்துப்பால்

பாயிர இயல்

அதிகாரம் 01 -- கடவுள் வாழ்த்து

     இந்த அதிகாரத்தில் வரும் மூன்றாவது திருக்குறள் பாடல், "மலர் மேல் விளங்குகின்ற கடவுளின் சீர் ஆர் திருவடிகளைப் பற்றியவர் நிலவுலகில் நெடிது வாழ்வார்" என்கின்றது.

     மேலான வீட்டு உலகில் சென்று, தாம் பருவுடலுடன் வாழ்ந் நிலவுலகத்தில் அழியாப் புகழோடு விளங்குவார் என்று கொள்ளலாம்.

     முந்தைய திருக்குறளில் கூறியவாறு, இறைவனது அடியைத் தொழுதார் எல்லோருக்கும் அவன் அருள் செய்தல் கூடுமோ என்னும் ஐயம் எழுதலும் கூடும். மனத்தில் மெய்யுணர்வு தோன்றி, இறையுணர்வு உள்ளத்தில் நிரம்புவதால், உள்ளமானது இறைவனுக்குக் கோயில் ஆகின்றது.  "நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்" என்றும், "என் மனமே ஒன்றிப் புக்கனன், போந்த சுவடு இல்லையே" என்றும் போற்றினார் அப்பர் அடிகள்.
    
     "மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்து என் மனத்திடை மன்னிய மன்னே" என்றும், "அறவையேன் மனமே கோயிலாக் கொண்டு ஆண்டு, அளவிலா ஆனந்தம் அருளி, பிறவி வேர் அறுத்து, என் குடி முழுது ஆண்ட பிஞ்ஞகா" என்றும், "இறைவனே, நீ என் உடல் இடம் கொண்டாய்" என்றும் மணிவாசகப் பெருமான் அருளியது அறிக. "உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்" என்றும், "உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று, உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே" என்று நமது கருமூலம் கழிக்க வந்த திருமூல நாயனார் கூறுவது காண்க. "நெஞ்சமே கோயில், நினைவே சுகந்தம்" என்று தாயுமான அடிகளார் அருளியது காண்க.

     எனவே, இறைவன் தன்னை அன்பால் நினைவாரது உள்ளமெனும் தாமரையில் (இதயத் தாமரையில்) அவர் நினைந்த வடிவோடு, சிறிதும் தாமதியாது விரைந்து செல்வான் என்பதை அறிவிப்பது பின்வரும் திருக்குறள்...

மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்,
நிலமிசை நீடு வாழ்வார்.  

இதற்குப் பரிமேலழகர் உரை ---          

மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் --- மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்;

நில மிசை நீடுவாழ்வார் --- எல்லா உலகிற்கும் மேலாய வீட்டு உலகின்கண் அழிவின்றி வாழ்வார்.
        
(அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின் 'ஏகினான்' என இறந்த காலத்தால் கூறினார்; என்னை? "வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச் சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள் என்மனார் புலவர்" (தொல், சொல், வினை, 44) என்பது ஓத்தாகலின். இதனைப் 'பூமேல் நடந்தான்' என்பதோர் பெயர்பற்றிப் பிறிதோர் கடவுட்கு ஏற்றுவாரும் உளர். சேர்தல் - இடைவிடாது நினைத்தல்)
 
இத் திருக்குறளானது, பரிமேலழகரின் உறையினால் சிறப்புப் பெறுகின்றது என்றே கூறலாம்.

இந்த உரையில் இரண்டு சிறப்புக்கள் உள்ளன.

ஒன்று, அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறல் என்பது.

மற்றொன்று, "சேர்தல்" என்பது "இடைவிடாது நினைத்தல்" என்றது.

     மலர் என்றது அன்பால் நினைவாரது உள்ளமாகிய தாமரை மலர். "பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை" என்றாற் போல், பூ என்று வெறுமனே சொன்னாலே அது தாமரையைத் தான் குறிக்கும். இங்கே உள்ளமானது தாமரை எனப்பட்டது. உள்ளம் எப்போது தாமரை ஆகும். அன்பு இருந்தால். அதற்கு கையானது குவிய வேண்டும். கை குவிந்தால் இதயம் தானே மலர்கின்ற தன்மையைப் பெறும். "கரமலர் மொட்டித்து இருதயம் மலர, கண் களி கூர, நுண் துளி அரும்ப, சாயா அன்பினை நாள்தொறும் தழைப்பவர்" என்பார் மணிவாசகப் பெருமான். 'கைகுவித்து இரு கண்களில் நீர் பெருகி" என்பார் தாயுமானார். 

     இறைவன் அன்பு வடிவானவன் என்பதை, "அன்பு உருவாம் பரசிவமே" என்னும் வள்ளல் பெருமான் வாக்கால் அறியலாம். "நேயத்தே நின்ற நிமலன்" என்றும் "அன்பினில் விளைந்த ஆரமுதே" என்றும் மணிவாசகப் பெருமான் காட்டினார்.

     இறைவன் ஒரு நாமம், ஓர் உருவம் இல்லாதவன். அவன் சோதி வடிவமானவன். சோதி என்று நாம் கருதுவதுமே உருவ நிலை தான் என்கிறது மணிவாசகம். "சோதியாய்த் தோன்றும் உருவமே, அருவாம் ஒருவனே" எனவரும் திருவாசகத்தால் அறியலாம். அந்த சோதி என்பதும் நமது கற்பனையைக் கடந்தது என்பதால், "கற்பனை கடந்த சோதி", என்றும், அது கருணையே வடிவானது என்பதால், "கருணையே வடிவமாகி" என்றும் தெய்வச் சேக்கிழார் பெருமான் வழங்கினார்.

     அன்பு வேறு, சிவம் வேறு என்பவர் அறிவு இல்லாதவர். அன்பும் சிவமும் இரண்டு அல்ல என்கிறார் திருமூல நாயனார்.

அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவு இலார்,
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார்,
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிந்தபின்,
அன்பே சிவமாய் அமர்ந்து இருப்பாரே.

என்கிறார்.

     எனவே, அன்பு வடிவான சிவத்தை, அன்பு ஒன்றினால் மட்டுமே அடைய முடியும். எனவே தான், அன்பால் நினைவாரது உள்ளம் கமலம் எனப்பட்டது.

     அழுத பிள்ளையைப் போல, துன்பம் நேரும்போதும், தேவை உண்டாகும் போதும் இறைவனை நினைந்து வழிபட்டு, பிறகு அவனை மறந்து உலகியலிலேயே உழல்வது மனித இயல்பு. அவ்வாறு இல்லாமல், எப்போதும் இறைவனது திருவடியை நினைப்பதையே, சேர்தல் என்னும் சொல்லால் குறித்தார்.

     உருவமும் பெயரும் அற்ற, பரம்பெருள், யார் யார் எந்த எந்த வடிவில் வழிபடுகின்றார்களோ, அந்த வடிவிலே வந்து அருள் புரியும் என்பதுதான் உண்மை. இந்த வடிவம்தான், இந்தப் பெயர்தான் என்று பாவித்து முழங்குவது எல்லாம் வெறும் சமயப் பூசலே.

யாதுஒரு தெய்வம் கொண்டீர்,
     அத்தெய்வம் ஆகி ஆங்கே
மாதுஒரு பாகனார்தாம்
     வருவர், மற்றத் தெய்வங்கள்
வேதனைப்படும் இறக்கும்
     பிறக்கும் மேல் வினையும் செய்யும்,
ஆதலால், இவை இலாதான்
     அறிந்து அருள் செய்வன் அன்றே.

என்கிறது சைவசித்தாந்தம்.

எச்சமயத் தெய்வமும் தான் எனநிறைந்த தெய்வம்
எல்லாஞ்செய் வல்லதெய்வம் எனதுகுல தெய்வம்

என்கிறார் வள்ளல் பெருமான்.

ஆரொருவர் உள்குவார் உள்ளத்துள்ளே, அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்என்பது அப்பர் தேவாரம்.

சுருதி வானவனாம் திருநெடுமாலாம்
     சுந்தர விசும்பின் இந்திரனாம்
பருதி வானவனாம் படர்சடை முக்கண்
     பகவனாம் அக உயிர்க்கு அமுதாம்
எருது வானவனாம் எயில்கள் மூன்று எரித்த
     ஏறு சேவகனுமாம் "பின்னும்
கருதுவார் கருதும் உருவமாம்" கங்கை
     கொண்ட சோளேச்சரத்தானே.      ---  திருவிசைப்பா.

எனவே தான், பரிமேலழகர், "அவர் நினைந்த வடிவத்தோடு" என்று அழகுறக் காட்டினார்.

     இறைவனை உள்ளக் கமலத்தில் வைத்து, இடையறாது வழிபடுவது ஞானபூசை ஆகும். "இறைவன் அடி அடைவிக்கும் எழில் ஞான பூசை" என்கிறது சைவசித்தாந்தம். இந்த ஞான பூசையைச் செய்து இறைவனுடைய மாட்சிமைப்பட்ட திருவடியைச் சேர்ந்தவர் பெரியபுராணத்தில் வைத்துப் போற்றப்படுகின்ற பூசலார் நாயனார்.

     இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில், குமார பாரதி என்னும் பெரியவர், பூசலார் நாயனாரை வைத்துப் பாடிய பாடல் வருமாறு...

வானமுதல் தூபி வரைமனத்தே கட்டி, அரன்
தான் அமரப் பூசலார் தாபித்தார், - ஞானம்
மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.                 

     தொண்டை மண்டலத்திலே திருநின்றவூரிலே பூசலார் நாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் அந்தணர்.  சிவனடியார்களுக்கு வேண்டுவனவற்றைக் கொடுத்து அதனால் மகிழ்வார். சிவபெருமானுக்கு ஒரு திருக்கோயில் அமைக்க விரும்பினார். எங்கும் வருந்திப் பொருள் தேடத் தொடங்கினார். சிறிதும் கிடைத்திலது. பெரிதும் நைந்து நொந்தார். 

     பின்பு மனோபாவனையினாலே கோயில் கட்டத் துணிந்தார். மனத்தினாலேயே அதற்கு வேண்டும் பொருள்களையும், துணைக் கருவிகளையும், சிற்பர்களையும் தேடி அமைத்தார். நான்னாளிலே அடிநிலை பாரித்தார். இரவிலும் துயிலின்றி நெடுநாள் முயன்று கோயில் கட்டி முடித்தார். சிவப் பிரதிட்டை செய்வதற்கு உரிய நன்னாளை நோக்கியிருந்தார். இது இவ்வாறாக, பல்லவ அரசன் காஞ்சிபுரத்தில் தம் பெரும்பொருளைச் செலவழித்துக் கோயில் கட்டினான். அதிலே சிவபெருமானைப் பதிட்டை செய்யும் முதல்நாள் அரசனது கனவிலே தோன்றிப் "பூசலார் கோயிலில் நாளைப் புகுவேம். உன் கோயிலில் பிரதிட்டையை வேறு நாளில் வைத்துக் கொள்ளுக" என்று அருளினார். உடன் அரசன் விழித்து எழுந்தான். திருநின்றவூரை அடைந்து விசாரித்தான். பூசலாரை அறிந்து, அவரிடம் தானே சென்றான். கனவு நிகழ்ச்சியை விண்ணப்பித்தான். பூசலார் தாம் தம் மனக்கோயில் கட்டியதை அவ் அரசனுக்கு அறிவித்தார். அரசன் வணங்கி விடைபெற்றுச் சென்றான். பூசலார் நன்னாளிலே சுவாமியைப் பதிட்டை செய்து நெடுங்காலம் பூசித்து இருந்தார். 

     மலரின்கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார் எல்லா உலகிற்கும் மேலாய வீட்டுலகின்கண் அழிவு இன்றி வாழ்வார் என்று அருளிச் செய்த திருவள்ளுவ நாயனார் வாக்கு, இந்த வரலாற்றால் மெய்ப்பிக்கப்பட்டது.
                                                     
     இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ள அருட்பாடல்களில் சிலவற்றைக் காண்போம்....

அகன்அமர்ந்த அன்பினர்ஆய் ஆறுபகை செற்று
         ஐம்புலனும் அடக்கி ஞானம்
புகல்உடையோர்  தம் உள்ளப் புண்டரீகத்து
         உள் இருக்கும் புராணர் கோயில்
தகவுஉடைநீர் மணித்தலத்து சங்குஉள
         வர்க்கம் திகழ சலசத்தீயுள்
மிகஉடைய புன்கு மலர்ப் பொரி அட்ட
         மணம்செய்யும் மிழலை ஆமே.  --- திருஞானசம்பந்தர். 
    
புவம்வளி கனல்புனல் புவிகலை
         உரைமறை திரிகுணம் அமர்நெறி
திவமலி தருசுரர் முதலியர்
         திகழ்தரும் உயிர் அவை அவைதம
பவமலி தொழிலது நினைவொடு
         பதுமநன் மலரது மருவிய
சிவனது சிவபுரம் நினைபவர்
         செழுநலனினில் நிலை பெறுவரே.   --- திருஞானசம்பந்தர்.   
  
அள்ளலைக் கடக்க வேண்டில் அரனையே நினைமின் நீர்கள்
பொள்ளல் இக்காயம் தன்னுள் புண்டரீ கத்து இருந்த
வள்ளலை வானவர்க்கும் காண்பரி தாகி நின்றுவிட்ட
துள்ளலைத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே.---  அப்பர்.

சிந்தையாய் நின்ற சிவனே போற்றி
         சீபர்ப்பதம் சிந்தை செய்தாய் போற்றி
புந்தியாய் புண்டரிகத்து உள்ளாய் போற்றி
         புண்ணியனே போற்றி புனிதா போற்றி
சந்தியாய் நின்ற சதுரா போற்றி
         தத்துவனே போற்றி என் தாதாய் போற்றி
அந்தியாய் நின்ற அரனே போற்றி
         அலைகெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி.   --- அப்பர்.

பதிகநான் மறை தும்புருவும் நாரதரும்
         பரிவொடு பாடு காந்தர்ப்பர்
கதிஎலாம் அரங்கம் பிணையல் மூவுலகில்
         கடிஇருள் திருநடம் புரியும்
சதியிலார் கதியில் ஒலிசெயும் கையில்
         தமருகம் சாட்டியக் குடியார்
இதயமாம் கமலம் கமலவர்த்தனை ஏழ்
         இருக்கையில் இருந்த ஈசனுக்கே. --- திருவிசைப்பா.


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...