001. கடவுள் வாழ்த்து - 02. கற்றதனால் ஆயபயன்





திருக்குறள்
அறுத்துப்பால்
பாயிர இயல்

அதிகாரம் 01 --- கடவுள் வாழ்த்து

     இந்த முதல் அதிகாரத்தில், இரண்டாவதாக வரும், இத் திருக்குறட்பா, "தூய அறிவினை உடைய கடவுளின் பொன்னார் திருவடிகளைத் தொழமாட்டார் என்றால், ஒருவர் கற்ற கல்வியினால் உண்டாகிய பயன் என்னவோ?" என்கிறது.

     கடவுள் உண்டு என்று அறிந்த பிறகு, உயரிய மக்கள் பிறப்பால் ஆன பயனை அடைதல் வேண்டுமானால், அவன் திருவடிகளைத் தொழுதல் வேண்டும். பலபிறவிகளில் உழன்று உழன்று, அரியதோர் மானுடப் பிறவியை அடைந்தது அதற்கே ஆகும். புல் முதல் மனிதர் ஈறாக, நாம் பலப்பல பிறவிகளை எடுத்தோம் என்பதை,

"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன்அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்"

என்னும் திருவாசகப் பாடலாலும்,

"அருள்பழுத்து அளிந்த கருணை வான்கனி
ஆரா இன்பத் தீராக் காதல்
அடியவர்க்கு அமிர்த வாரி நெடுநிலை
மாடக் கோபுரத்து ஆடகக் குடுமி
மழைவயிறு கிழிக்கும் கழுமல வாண,நின்

வழுவாக் காட்சி முதிரா இளமுலைப்
பாவையுடன் இருந்த பரம யோகி
யான்ஒன்று உணர்த்துவான், எந்தை மேனாள்
அகில லோகமும் அனந்த யோனியும்
நிகிலமுந் தோன்றநீ நினைந்தநாள் தொடங்கி

எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்து
யாரும் யாவையும் எனக்குத் தனித்தனித்
தாயர் ஆகியுந் தந்தையர் ஆகியும்
வந்து இலாதவர் இல்லை, யான் அவர்
தந்தையர் ஆகியும் தாயர் ஆகியும்

வந்து இராததும் இல்லை, முந்து
பிறவா ,இல்லை அவ்வயின்
இறவா நிலனும் இல்லை, பிறிதில்
என்னைத் தின்னா உயிர்களும் இல்லை, யான் அவை

தம்மைத் தின்னாது ஒழிந்ததும் இல்லை,
அனைத்தே காலமும் சென்றது, யான்இதன்மேல்இனி
இளைக்குமாறு இலனே, நாயேன்
நந்தாச் சோதிநின் அஞ்செழுத்து நவிலும்
தந்திரம் பயின்றதும் இலனே, தந்திரம்

பயின்றவர்ப் பயின்றதும் இலனே, ஆயினும்
இயன்றஓர் பொழுதின் இட்டது மலராச்
சொன்னது மந்திர மாக, என்னையும்
இடர்ப்பிறப் பிறப்பெனும் இரண்டின்
கடல்ப டாவகை காத்தல்நின் கடனே."

எனப் பதினோராம் திருமுறையில் பட்டினத்து அடிகள் அருளிய பாடலாலும்,

"எந்தத் திகையினும் மலையினும் உவரியின்
எந்தப் படியினும் முகடினும் உளபல
எந்தச் சடலமும் உயிர்இயை பிறவியின் ...... உழலாதே
இந்தச் சடமுடன் உயிர் நிலைபெற"
                                                                                   
என வரும் திருப்புகழ்ப் பாடல் வரிகளாலும்,

"நினைமின் மனனே ! நினைமின் மனனே
சிவபெரு மானைச் செம்பொனவ் அம்பலவனை
நினைமின் மனனே ! நினைமின் மனனே !
அலகைத் தேரின் அலமரு காலின்
உலகப்பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க,
     
பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்;
     
அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்;
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்;
என்றிவை அனைத்தும் உணர்ந்தனை; அன்றியும்;
பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும்
கொன்றனை அனைத்தும், அனைத்து நினைக்கொன்றன.
     
தின்றனை அனைத்தும், அனைத்து நினைக் கொன்றன;
பெற்றனை அனைத்தும், அனைத்து நினைப் பெற்றன;
ஓம்பினை அனைத்தும், அனைத்து நினை ஓம்பின;
செல்வத்துக் களித்தனை, தரித்திரத்து அழுங்கினை;
சுவர்க்கத்து இருந்தனை, நரகில் கிடந்தனை;      
     
இன்பமும் துன்பமும் இருநிலத்து அருந்தினை;
ஒன்றொன்று ஒழியாது உற்றனை; அன்றியும்,
புற்புதக் குரம்பைத் துச்சில் ஒதுக்கிடம்
என்னநின் றியங்கும் இருவினைக் கூட்டைக்
கல்லினும் வலிதாகக் கருதினை; இதனுள்
     
பீளையும் நீரும் புறப்படும் ஒருபொறி;
மீளுங் குறும்பி வெளிப்படும் ஒரு பொறி
சளியும் நீரும் தவழும் ஒருபொறி;
உமிழ்நீர் கோழை ஒழுகும் ஒருபொறி;
வளியும் மலமும் வழங்கும் ஒருவழி;       

சலமும் சீயும் சரியும் ஒருவழி;
உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறும்
சட்டகம் முடிவில் சுட்டெலும் பாகும்
உடலுறு வாழ்க்கையை உள்ளுறத் தேர்ந்து,
கடிமலர்க் கொன்றைச் சடைமுடிக் கடவுளை.
     
ஒழிவுஅரும் சிவபெரும் போகஇன் பத்தை,
நிழல் எனக் கடவா நீர்மையொடு பொருந்தி
எனது அற, நினைவு அற, இருவினை மலம் அற,
வரவொடு செலவு அற, மருள் அற, இருள் அற,
இரவொடு பகல் அற, இகபரம் அற, ஒரு
     
முதல்வனை, தில்லையுள் முனைத்து எழுஞ் சோதியை,
அம்பலத்து அரசனை, ஆனந்தக் கூத்தனை,
நெருப்பினில் அரக்கு என நெக்குநெக்கு உருகித்
திருச்சிற் றம்பலத்து ஒளிரும் சிவனை,
நினைமின் மனனே ! நினைமின் மனனே !
     
சிவபெரு மானைச் செம் பொனம்பலவனை
நினைமின் மனனே ! நினைமின் மனனே!"

என வரும் பட்டினத்து அடிகள் அருளிய "கோயில் நான்மணிமாலை" அகவல் பாடலாலும் தெரிய வரும்.

     சிற்றறிவினை உடைய ஆன்மா, பொருள் அல்லாதவற்றை எல்லாம் பொருளாகக் கொள்ளுகின்ற மருள் காரணமாக உண்டாகும் காமம், வெகுளி, மயக்கம் ஆகிய முக்குற்றங்களால், பெருநோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றது. சிற்றறிவு உள்ளவரை இது நிகழும்.

     இறைவன் திருவடியில் இரண்டறக் கலந்து இன்புற வேண்டுமாயின், சிற்றறிவு நீங்கப் பெற்று, வாலறிவு வாய்க்கப் பெறவேண்டும். கல்வியின் பயன் அதுவாகத் தான் இருக்க முடியும். இதனை வலியுறுத்திப் போதிக்க எழுந்தது இத் திருக்குறள்.
  
"கற்றதனால் ஆய பயன் என்கொல், வால் அறிவன்
நல்தாள் தொழாஅர் எனின்."                 

இதற்குப் பரிமேலழகர் உரை ---  

     கற்றதனால் ஆய பயன் என் --- எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது?;

     வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் --- மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்?
       
     (எவன் என்னும் வினாப்பெயர் என் என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது. 'கொல்' என்பது அசைநிலை. பிறவிப் பிணிக்கு மருந்து ஆகலின் 'நற்றாள்' என்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவி அறுத்தல் என்பது இதனான் கூறப்பட்டது.

     "உள்ள நிறை கலைத் துறைகள் ஒழிவு இன்றிப் பயின்றவற்றால், தெள்ளி வடித்து அறிந்த பொருள், சிவன் கழலில் செறிவு" என்று தெய்வச் சேக்கிழார் பெருமான் பாடிக் காட்டினார்.

     பெரிய புராணத் தொகை அடியார்களில் ஒரு பகுதியினர், பொய் அடிமை இல்லாத புலவர்கள். இவர்கள் திறத்தை தெய்வச் சேக்கிழார் பெருமான் பின் வருமாறு பாடிக் காட்டி உள்ளார்.

செய்யுள்நிகழ் சொல்தெளிவும்,
     செவ்வியநூல் பலநோக்கும்,
மெய்யுணர்வின் பயன் இதுவே
     எனத்துணிந்து, விளங்கி ஒளிர்
மை அணியும் கண்டத்தார்
     மலர் அடிக்கே ஆளானார்,
பொய்யடிமை இல்லாத
     புலவர் எனப் புகழ் மிக்கார்.

     இதன் பொழிப்புரை ---

     செய்யுட்கண் வரும் சொற்களின் அமைவைத் தெளிதலும் சிறந்த நூல்கள் பலவற்றையும் நுணுகி ஆராய்தலும் ஆகிய எல்லாம், மெய்யுணர்வின் பயனாக விளங்கும் செம்பொருளின் அடைவேயாம் எனத் துணிந்து, விளங்கி ஒளிவீசுகின்ற நஞ்சினையுண்ட கழுத்தினையுடைய சிவபெருமானின் மலர் அனைய திருவடிக்கு ஆளானவர்களே, பொய்யடிமையில்லாத புலவர்கள் எனக் குறித்துப்போற்றப் பெற்று விவரிகளாவர்.

இதற்குக் குறிப்புரை ---

     செவ்வியநூல் - இலக்கண வரம்பாலும், நுவலப்படும் பொருட்சிறப்பாலும் செவ்விதாய நூல். கற்றதனால் ஆய பயன் வாலறிவன் நற்றாள் தொழுவதேயாம். ஆதலின் சொற்பொருள் தெளிதலும், அவற்றின் மெய்ம்மை உணர்தலுமான பயன், மலரடிக்கே ஆளாதல் எனத் துணிந்தனர் புலவர்கள். `மையணியும் கண்டத்தார் மலரடிக்கே ஆளானார்' எனவே பொது நீக்கித் தனை உணரும் பான்மை தெரிய வருகிறது.

பொற்பு அமைந்த அரவு ஆரும்
     புரிசடையார் தமை அல்லால்,
சொற்பதங்கள் வாய் திறவாத்
     தொண்டுநெறி தலைநின்ற
பெற்றியினில், மெய்யடிமை
     உடையாராம் பெரும்புலவர்,
மற்று அவர் தம் பெருமை, யார்
     அறிந்துரைக்க வல்லார்கள்?

இதன் பொழிப்புரை ---

     இவர்கள் அழகிய பாம்புகளை அணிந்த முறுக்குண்ட சடையையுடைய சிவபெருமானையே அல்லாமல், மற்றவரைப் பற்றிச் சொற்பொருள்களை அமைத்துச் செல்லாத இயல்பில், திருத்தொண்டின் நெறியில் முதன்மை பெற்ற பண்பினால், மெய்யடிமையுடையவராகும் பெரும் புலவர்கள் ஆவார்கள். இவர்களின் பெருமையை அறிந்து உரைக்க வல்லவர் யார்? எவரும் இலர் என்பதாம்.

தரணியில் பொய்ம்மை இலாத் தமிழ்ச் சங்கம் அதில் கபிலர்
பரணர் நக்கீரர் முதல்நாற்பத் தொன்பது பல்புலவோர்
அருள்நமக்கு ஈயுந் திருஆலவாய் அரன் சேவடிக்கே
பொருள்அமைத்து இன்பக் கவிபல பாடும் புலவர்களே.

என்று, திருத்தொண்டர் திருவந்தாதியில் நம்பாண்டார் நம்பிகள் பொய்யடிமை இல்லாத புலவர்கள், மதுரைத் தமிழ்ச் சங்கத்திலே இருந்த நாற்பத்தொன்பது புலவர்களே என்று காட்டிப் பாடினார்.

     திருக்குறளின் பெருமையை உலகுக்கு விளக்கிக் காட்ட வந்த நூல்களுள் ஒன்று, குமார பாரதி என்பவர் பாடிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூல். இதில், மேற்குறித்த திருக்குறளுக்கு விளக்கமாகப் பின்வரும் வெண்பாவைப் பாடினார்.

"மதுரையில்ஏழ் ஏழ்புலவர் வல்லசிவன் பாதம்
அதுபொருளா கக்கவிசெய் தாரே --- புதுமையோ
கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன்
நல்தாள் தொழாஅர் எனின்."                                 

     பாண்டி நாடாகிய மங்கைக்கு முகம் போல விளங்குவது மதுரையம்பதி. அதனைத் துவாதசாந்தத் தலம் எனவும் கூறுவர்.  அத் திருத்தலத்திலே கடைச்சங்கப் புலவர் நாற்பத்தொன்பதின்மர் தலைமையிலே புலவர் பலர் செந்தண் தமிழ் நூல்களை ஆராய்ந்தனர். கபிலர் பரணர் நக்கீரர் முதலியோர் கடைச்சங்கப் புலவர்கள்.

     சோமசுந்தரக் கடவுளிடத்திலே, சதுரமாய் இரண்டு சாண் அளவினதாகி, மெய்ப்புலவர்களுக்கு எல்லாம் முழம் வளர்ந்து இருத்தற்கு இடம் கொடுக்கின்ற சங்கப் பலகையைப் பெற்று, அதில் இருந்துகொண்டு தமிழ்மொழியை அவர்கள் ஆராய்ந்தனர். உடலிலே திருநீறு கண்டிகை பூண்டவராய், பஞ்சாக்கர மந்திரம் செபிக்கும் நாவினை உடையவராய், சிவனே பரம்பொருள் என உறுதி பூண்டவராய், அகத்தியம் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலின்படி ஆசு மதுரம் சித்திரம், வித்தாரம் என்னும் நாற்கவிகளாலும் மெய்யன்புடன் பரமசிவனையே பாடி, பொய்யடிமை இல்லாத புலவர்களாய்த் திகழ்ந்து சிவபதம் அடைந்தார்கள்.

     எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவானாய பயன் யாது? மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின் எனத் திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்தமை காண்க.

     "கற்றல்" என்றமையால், கற்கவேண்டிய நூல்களைக் கற்று, கற்க வேண்டாத நூல்களைத் தள்ளுதல் என்று அறிதல் வேண்டும். கற்க வேண்டிய நூல்கள் அறிவு நூல்கள். கற்கவேண்டாத நூல்கள் உலக நூல்கள். அறிவு நூல்கள் என்பன, பிறப்பினை அறுத்து, முத்தியை அடைவதற்குக் கடவுளின் திருவடிய அடையத் தக்க வழிகளைப் போதிக்கும் நூல்கள் ஆகும். உலகநூல்கள் என்பன இம்மைக்கு வேண்டுவன ஆகிய போமக் ஒன்றையே கொடுத்து, உயிரை இடையறாத பிறப்பில் செலுத்துவது ஆகும்.

இதைப் பின்வரும் "நாலடியார்" பாடல் வலியுறுத்தும்...

அலகுசால் கற்றும், அறிவுநூல் கால்லாது,
உலகநூல் ஓதுவது எல்லாம் --- கலகல
கூஉம்துணை அல்லால் கொண்டு தடுமாற்றம்
போஒம் துணை அறிவார் இல்.

இத் திருக்குறளுக்கு ஒப்புமை உடைய அருட்பாடல்கள் சிலவற்றை இங்கே தருகின்றேன்.
                                                                        
பூமகள்தன் கோன் அயனும் புள்ளினொடு
         கேழல்உரு ஆகிப் புக்கிட்டு
ஆம்அளவுஞ் சென்றுமுடி அடிகாணா
         வகைநின்றான் அமரும் கோயில்
பாமருவும் கலைப்புலவோர் பன்மலர்கள்
         கொண்டு அணிந்து பரிசினாலே
காமனைகள் பூரித்துக் களிகூர்ந்து
         நின்று ஏத்தும் கழுமலமே. --- திருஞானசம்பந்தர்.


கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்துள்
         ஈசன்தன் கழல்மேல் நல்லோர்
நல்துணைஆம் பெருந்தன்மை ஞானசம்
         பந்தன்தான் நயந்து சொன்ன
சொல்துணை ஓர்ஐந்தினொடு ஐந்து இவை வல்லார்
         தூமலராள் துணைவர் ஆகி
முற்று உலகம் ஆது ஆண்டு முக்கணான்
         அடிசேர முயல்கின்றாரே.    --- திருஞானசம்பந்தர்.  

செற்றவர் தம்அரணம் அவற்றைச்
         செவ்வழல் வாய்எரி ஊட்டி நின்றும்
கற்றவர்தாம் தொழுது ஏத்தநின்றான்
         காதலிக்கப் படும் காட்டுப்பள்ளி
உற்றவர் தாம் உணர்வு எய்தி நல்ல
         உம்பர் உள்ளார் தொழுது ஏத்த நின்ற
பெற்றமரும் பெருமானை அல்லால்
         பேசுவது மற்றுஓர் பேச்சு இலோமே. --- திருஞானசம்பந்தர்.

நெற்றிஓர் கண்உடை நெல்வெணெய் மேவிய
பெற்றிகாள் பிறைநுத லீரே
பெற்றிகாள் பிறைநுத லீர்உமைப் பேணுதல்
கற்று அறிவோர்கள் தம் கடனே.   --- திருஞானசம்பந்தர்.

ஆழிஅங்கையில் கொண்ட மால்அயன்அறிவுஒணாதது ஓர்வடிவுகொண்டவன்
காழி மாநகர்க் கடவுள் நாமமே கற்றல் நல்தவமே.       --- திருஞானசம்பந்தர்.

உற்றநோய் தீர்ப்பர் போலும் உறுதுணை ஆவர் போலும்
செற்றவர் புரங்கள் மூன்றும் தீஎழச் செறுவர் போலும்
கற்றவர் பரவிஏத்தக் கலந்து உலந்து அலந்து பாடும்
அற்றவர்க்கு அன்பர் போலும் ஆவடு துறையனாரே.    --- அப்பர்.

கல்லாதார் மனத்துஅணுகாக் கடவுள் தன்னை
கற்றார்கள் உற்றுஓரும் காத லானைப்

பொல்லாத நெறிஉகந்தார் புரங்கள் மூன்றும்
பொன்றிவிழ அன்றுபொரு சரம்தொட்டானை
நில்லாத நிணக்குரம்பைப் பிணக்கம் நீங்க
நிறைதவத்தை அடியேற்கு நிறைவித்து என்றும்
செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைச்
செங்காட்டங் குடிஅதனில் கண்டேன் நானே. --- அப்பர்.

உற்றார் இலாதார்க்கு உறுதுணை ஆவன, ஓதிநன்னூல்
கற்றார் பரவப் பெருமை உடையன,  காதல் செய்ய--
கிற்பார் தமக்குக் கிளர்ஒளி வானகம்தான் கொடுக்கும்
அற்றார்க்கு அரும்பொருள் காண்க ஐயாறன் அடித்தலமே.  --- அப்பர்.

கல்லேன் அல்லேன் நின்புகழ், அடிமை
     கல்லா தேபல கற்றேன்,
நில்லேன் அல்லேன் நின்வழி, நின்றார்
         தம்முடை நீதியை நினைய
வல்லேன் அல்லேன், பொன்அடி பரவ
         மாட்டேன் மறுமையை நினைய,
நல்லேன் அல்லேன் நானுனக்கு அல்லால்
         நாட்டியத் தான்குடி நம்பீ.            --- சுந்தரர்.

உள்ளநிறை கலைத்துறைகள்
     ஒழிவு இன்றிப் பயின்று, அவற்றால்
தெள்ளி வடித்து அறிந்த பொருள்
     சிவன்கழலில் செறிவு என்றே
கொள்ளும் உணர்வினில் முன்னே
     கூற்று உதைத்த கழற்கு அன்பு
பள்ள மடையாய் என்றும்
    பயின்று வரும் பண்பு உடையார்.  --- பெரியபுராணம்.

இதன் பொழிப்புரை ---

     தம் உள்ளம் நிறைவு பெறச் செய்யும் கலைத் துறைகளை எல்லாம் இடைவிடாது கற்று, `அவை எல்லாவற்றாலும் தெளிவு பெற வடித்து எடுத்த பொருளாவது, சிவனடிகளில் பொருந்திய அன்புடைமையான ஒழுக்கமேயாகும்\' என்று கொள்ளும் உணர்வினால் முதன்மை பெற, இயமனை உதைத்த திருவடியிடத்தே அன்பு கொண்ட ஒழுக்கம், பள்ள மடையில் நீர் ஓடுவது போல், தடையில்லாது விரைவாக என்றும் பயின்று வரும் பண்பை உடையவரானார்.


     பின்வரும் தாயுமான சுவாமிகளின் பாடல்களை, இத் திருக்குறளுக்கு ஒப்பாகக் கொண்டு கருதத்தக்கவை.
 
கேட்டதையே சொல்லும் கிளிபோல, நின்அருளின்
நாட்டம் இன்றி, வாய்பேசல் நன்றோ பராபரமே.

கொலை களவு கள்காமம் கோபம் விட்டால் அன்றோ,
மலை இலக்கா நின்அருள்தான் வாய்க்கும் பராபரமே.

கற்கும் மது உண்டு களித்தது அல்லால், நின் அருளில்
நிற்கும் மது தந்தது உண்டோ, நீதான் பராபரமே.

கற்றாலும், கேட்டாலும், காயம் அழியாத சித்தி
பெற்றாலும் இன்பம் உண்டோ, பேசாய் பராபரமே.

வாக்கும் மனமும் மவுனம் உற, எந்தை நினை
நோக்கும் மவுனம், இந்த நூல் அறிவில் உண்டாமோ.

கற்றஅறிவால் உனைநான் கண்டவன்போல் கூத்துஆடில்
குற்றம் என்று என் நெஞ்சே கொதிக்கும் பராபரமே.

கற்றகலையால் நிலைதான் காணுமோ, காண்பது எல்லாம்
அற்ற இடத்தே வெளிஆம் அன்றோ பராபரமே.

சினம் இறக்கக் கற்றாலும் சித்தி எல்லாம் பெற்றாலும்
மனம் இறக்கக் கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே.

கற்றதும் கேட்டதும் தானே ஏதுக்காக
கடபடம் என்று உருட்டுதற்கோ, கல்ஆல் எம்மான்
குற்றம் அறக் கைகாட்டும் கருத்தைக் கண்டு
குணம்குறி அற்று இன்பநிட்டை கூட அன்றோ.

நில்லாத ஆக்கைநிலை அன்று எனவே கண்டாய்.
  நேயஅருள் மெய்அன்றோ, நிலயமதா நிற்கக்
கல்லாதே ஏன் படித்தாய், கற்றது எல்லாம் மூடம்,
  கற்றது எல்லாம் மூடம் என்றே கண்டனையும் அன்று,
சொல்லாலே பயன் இல்லை, சொல் முடிவைத் தானே
  தொடர்ந்து பிடி, மர்க்கடம் போல் தொட்டது பற்றா நில்,
எல்லாரும் அறிந்திடவே வாய்ப்பறை கொண்டு அடிநீ,
  இராப்பகல் இல்லா இடமே எமக்கு இடம் என்று அறிந்தே.

ஒன்றிஒன்றி, நின்றும்நின்றும் என்னை, என்னை,
     உன்னி உன்னும் பொருள் அலைநீ, உன்பால் அன்பால்
நின்ற தன்மைக்கு இரங்கும் வயிராக்கியன் அல்லேன்,
    நிவர்த்தி அவை வேண்டும் இந்த நீலனுக்கே,
என்றும் என்றும் இந்நெறி ஓர் குணமும் இல்லை,
    இடுக்குவார் கைப்பிள்ளை ஏதோ ஏதோ,
கன்று மனத்துடன் ஆடு தழைதின்றால் போல்
    கல்வியும் கேள்வியும் ஆகிக் கலக்குற்றேனே.
  
ஆணிலே பெண்ணிலே என்போல ஒருபேதை
            அகிலத்தின் மிசையுள்ளதோ
      ஆடிய கறங்குபோ லோடியுழல் சிந்தையை
            அடக்கியொரு கணமேனும்யான்
காணிலேன் திருவருளை யல்லாது மௌனியாய்க்
            கண்மூடி யோடுமூச்சைக்
      கட்டிக் கலாமதியை முட்டவே மூலவெங்
            கனலினை எழுப்பநினைவும்
பூணிலேன் இற்றைநாள் கற்றதும் கேட்டதும்
            போக்கிலே போகவிட்டுப்
      பொய்உலகன் ஆயினேன் நாயினும் கடையான
            புன்மையேன், இன்னம்இன்னம்
வீணிலே அலையாமல் மலைஇலக்கு ஆகநீர்
            வெளிப்படத் தோற்றல் வேண்டும்
      வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
            வித்தகச் கித்தர்கணமே.

இனியே தெமக்குனருள் வருமோ வெனக்கருதி
             ஏங்குதே நெஞ்சம், ஐயோ
      இன்றைக் கிருந்தாரை நாளைக்கி ருப்பரென்
             றெண்ணவோ திடமில்லையே
    அனியாய மாயிந்த வுடலைநான் என்றுவரும்
             அந்தகற் காளாகவோ
      ஆடித் திரிந்துநான் கற்றதும் கேட்டதும்
            அவலமாய்ப் போதல்நன்றோ
    கனியேனும் வறியசெங் காயேனும் உதிர்சருகு
             கந்தமூ லங்களேனும்
      கனல்வாதை வந்தெய்தின் அள்ளிப் புசித்துநான்
             கண்மூடி மொளனியாகித்
    தனியே இருப்பதற் கெண்ணினேன் எண்ணமிது
             சாமிநீ அறியாததோ
      சர்வபரி பூரண அகண்டதத் துவமான
             சச்சிதா னந்தசிவமே.

உற்றதுணை நீ அல்லால் பற்று வேறு ஒன்று
     உன்னேன், பன்னாள் உலகத்து ஓடிஆடிக்
கற்றதும் கேட்டதும் இதனுக்கு ஏது ஆகும்,
     கற்பதும் கேட்டதும் அமையும், காணா நீத
நல்துணையே, அருள் தாயே, இன்பம் ஆன
     நாதாந்தப் பரம்பொருளே, நாரணாதி
சுற்றமுமாய் நல்அன்பர் தமைச் சேய்ஆகத்
     தொழும்பு கொளும் கனாகனமே, சோதிக் குன்றே.

கற்றும் என்பலன், கற்றிடும் நூல்முறை
சொற்ற சொற்கள் சுகஆரம்பமோ, நெறி
நிற்றல் வேண்டும், நிர்விகற்பச் சுகம்
பெற்றபேர் பெற்ற பேசாப் பெருமையே.

பெற்றவர் பெற்ற பெருந்தவக் குன்றே,
     பெருகிய கருணை வாரிதியே,
நல்தவத் துணையே, ஆனந்தக் கடலே,
     ஞாதுரு ஞான ஞேயங்கள்
அற்றவர்க்கு அறாத நட்புஉடைக் கலப்பே,
     அநேகம் நின் அடிக்கு அன்பு
கற்றதும், கேள்வி கேட்டதும், நின்னைக்
     கண்டிடும் பொருட்டு அன்றோ காணே.

கற்றும், பலபல கேள்விகள் கேட்டும், கறங்கு எனவே
சுற்றும் தொழில்கற்று, சிற்றின்பத்து ஊடு சுழலின்என்னாம்,
குற்றம் குறைந்து குணம் மேலிடும் அன்பர் கூட்டத்தையே
முற்றும் துணை என நம்பு கண்டாய் சுத்த மூடநெஞ்சே. --- தாயுமான சுவாமிகள்.


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...