திருக்குறள்
அறத்துப்பால்
பாயிர இயல்
அதிகாரம் 01 -- கடவுள்
வாழ்த்து
திருக்குறளில் முதல் அதிகாரம் "கடவுள்
வாழ்த்து" என்ற தலைப்பில் அமைந்து காணக் கிடக்கின்றது. ஆனால், கடவுள் என்ற
சொல் இந்த முதல் அதிகாரத்தில் மட்டுமல்ல. திருக்குறளில் எங்கும் எடுத்தாளப் பெறவில்லை.
எனவே,
முதல்
அதிகாரத் தலைப்பு, "கடவுள் வாழ்த்து" என்று இருக்கமுடியாது
என்பது முற்போக்காளர்கள் சிலரது கருத்தாக இருக்கின்றது.
‘பண்டத் தமிழர் ஒரே கடவுள் வழிபாட்டையே
கொண்டிருந்தனர். "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" என்ற கொள்கையே இருந்து
வந்தது. ஆரியர்கள் வந்த பின்னரே பல தெய்வ வழிபாடும் பூசை முறைகளும் உயிர்ப்பலி
முறைகளும் தமிழகத்தில் தோன்றின’ என்கின்றனர் அறிஞர் பெருமக்கள்.
பண்டைத் தமிழகத்தில் ஒரே கடவுள் என்று
இருந்ததா என்றால் இல்லை. கடவுள் இல்லை என்போரும் இருந்தனர். உண்டு என்பது எப்படி
ஒருவரது நம்பிக்கையோ, அதுபோலவே இல்லை என்பதும் ஒருவரது நம்பிக்கையாக இருந்தது.
உண்டு என்போர் இல்லை என்போரைப் பழித்தது இல்லை. இல்லை என்போரும் உண்டு என்போரைப்
பழித்ததும் இல்லை.
சங்க
நூலான தொல்காப்பியத்தில் ‘தெய்வம் சுட்டிய பெயர் நிலைக் கிளவி’ என்று இறைவனின்
பெயருக்கு ஒரு பகுதி உள்ளது.
தொல்காப்பியத்தில் நால்வகை நிலங்கள்
குறிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு கடவுள் அமைந்துள்ளதாக உள்ளது. ‘மாயோன், சேயோன், வேந்தன், வருணன்’ முதலிய கடவுளர்
குறிக்கப்பட்டுள்ளனர். ‘மாயோன் மேய காடுறை உலகமும்..” என்று தொடங்கும்
தொல்காப்பியப் பாடல் இதனைச் சுட்டுகிறது. இப்பாடலில் முருகனும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
ஆண் தெய்வங்கள் தவிர, ‘கொற்றவை’ என்னும் பெண்
தெய்வமும் பேசப்படுகிறது. இத்தெய்வத்தையே ‘துர்க்கை, காளி’ என்று
வழிபட்டனர் என்று தமிழ் அறிஞர் சாமி.சிதம்பரனார் கூறுகிறார்.
இவை தவிர கதிரவன், தீ, நிலவு முதலிய
இயற்கைப் பொருட்களையும் தமிழர் கடவுளர்களாக வழிபட்டனர் என்பதை ‘கொடிநிலை கந்தழி
வள்ளி என்ற வடு நீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே’ என்று கதிரவன், தீ, நிலவு
இம்மூன்றையும் வாழ்த்துவதும் கடவுள் வாழ்த்துப் போலவே எண்ணப்பட்டு வந்தது என்று
தொல்காப்பியம் கூறுகின்றது.
எனவே, தொல்காப்பியத்தில், "கடவுள்
வாழ்த்தொடு கண்ணிய வருமே" என்றதனால், இந்த முதல்
அதிகாரத்திற்கு,
"கடவுள்
வாழ்த்து" எனத் தலைப்பு இருப்பதில் தடை ஏதும் இல்லை எனத் தோன்றுகின்றது.
கடவுள்
வாழ்த்து என்பது கடவுளை வாழ்த்தும் வாழ்த்து ஆகும். கடவுள் வாழ்த்து இது எனத்
தெரிந்து கொள்ளும் முன்னர், கடவுள் உண்டா இல்லையா என்னும் ஐயம்
தெளிவாக்கப்படல் வேண்டும். காரணம், கடவுள் உண்டு என்போரும், இல்லை என்போரும்
உள்ளனர். எல்லாவற்றிற்கும் ஏற்போரும் மறுப்போரும் உண்டு.
கடவுள் இல்லை என்கிற கொள்கை உடையவர்கள், உலகாயதர்கள்.
இவர்கள் காண்டல், கருதல், உரை என்கின்ற மூன்று அளவைகளுள், காண்டல்
என்கின்ற பிரத்தியட்ச அளவை மட்டுமே தமக்கு உடன்பாடு எனக் கொண்டு, கண்ணுக்குப்
புலனாகின்ற நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கு பூதங்களுமே எப்போதும்
உள்ள பொருள் என்று ஒத்துக் கொள்ளுகின்றவர்கள். முதலில் சொல்லப்படுகின்ற ஆகாயம்
என்பது கண்ணுக்குப் புலப்படாமையால், அதை உலகாயதர், ஒரு பூதமாக ஏற்க
மறுக்கின்றனர். நிலம், நீர், தீ, காற்று என்னும் நான்கு பூதங்களின்
சம்பந்தத்தால் ஆகியதே உடம்பு என்கின்றனர். அது எது போல என்றால், வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகிய
மூன்றையும் ஒருவன் வாயில் இட்டு உண்கின்ற போது, செந்நிறம் தோன்றுவது போல, இந்த நான்கு
பூதங்களின் சேர்க்கையால், அவற்றிற்கு வேறாகிய ஓர் உணர்வு உண்டு என்றும், அந்த
உணர்ச்சியானது உடம்பு வளருந்தோறும் வளர்ந்து, தேயும்தோறும் தேய்ந்து
போவது என்பது. உடம்பிற்கு வேறாக உயிர் என்பது உண்டு என்பது பொய் என்பது அவர்
கூற்று. அல்லாமலும், உடம்பிற்கு நல்வினை தீவினை என்கின்ற இருவினையால் வரும் இன்ப
துன்பங்கள் என்பதும் பொய். இன்ப
துன்பங்கள் உடம்பிற்கு இயல்பாகவே உள்ளதால், இருவினை என்பதும் பொய்
என்பது அவர் கூற்று. கடவுள் உண்டு என்பதும் பொய் என்பார் அவர். மயிலுக்கு அழகை
ஊட்டியவர் யாரும் இல்லை. குயிலின் குரலுக்கு இனிமையை ஊட்டினவரும் யாரும் இல்லை.
அவை இயல்பாகவே அமைந்துள்ளது போல், இந்த உலகமும் இயற்கையாகவே அமைந்து உள்ளது. இல்லாத
கடவுளை உண்டு என்று சொல்லும் மார்க்கத்தைத் தழுவி, மோட்ச இன்பத்தை அடைவோம்
என்னும் கொள்கையும் பொய். ஆனால், தான் கருதுகின்றபடி, இயல்பாகவே அமைந்த இந்த
உலகத்தில்,
வாழுகின்ற
காலத்தில் இளம்பருவம் உடைய பெண்களை மணந்து, நல்ல உணவை உண்டு, நல்ல ஆடைகளை
உடுத்து,
போகத்துடன்
வாழ்வதே மோட்ச இன்பம் என்பது அவர் கொள்கை. இந்த இன்பத்தைப் பெறாமல், பகைவராலும், நோயாலும், வறுமையாலும்
வருந்துவதே நரகத் துன்பம் என்பது உலகாயதர் கொள்கை.
இந்த உலகாயதக் கொள்கை மக்களை எளிதில்
மயக்கும் ஆற்றல் படைத்தது. எனவே தான், "உலோகாயதன் எனும் ஒண்
திறல் பாம்பின் கலாபேதத்த கடு விடம்" என்றார் மணிவாசகப் பெருமான்.
மேலும், இவ்விதம் கூறிய நான்கு
பூதங்களின் கூட்டுறவில், பிராணவாயு என்பது நீங்குமானால், முன் வளர்ந்த
உணர்வு என்பது நீங்கி, உடம்பு என்பது நாசம் ஆகும். அதுவே, வீடு என்கின்ற மோட்சத்தை
அடைகின்ற பேறு ஆகும். எனவே, இந்த உண்மையை உணராதோர் மறுபிறவி உண்டு என்றும், வீடு என்பது
உண்டு என்றும் சொல்லி, தவம் கிடந்து, பட்டினி கிடந்து, உடலை வருத்துகின்றனர்.
அல்லாமலும்,
பொன்
தானம்,
நிலத்
தானம்,
உணவுத்
தானம் என்பவர்கள் வறுமமை நோயால் பீடிக்கப்பட்டவர்கள் ஆவர். ஆலயம், தண்ணீர்ப்பந்தல், கிணறு, சோலை, குளம்
முதலியவைகளை தருமத்துக்கு அமைப்பவர்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லுகின்ற நூல்கள், வழிச்
செல்பவர்கள் தாம் செல்லுகின்ற காலத்து இளைப்பு அடையாமலும், உடம்பு வருந்தாமலும், பொருள் செலவு
இல்லாமலும்,
தங்களின்
பயணத்தை முடிப்பதன் நிமித்தம் எழுதிய நூல்கள் ஆகும் என்பவர் உலகாயதர். ஆகையால், இவைகளை எல்லாம்
விட்டுவிட்டு,
மனம்
விரும்பு உணவு உண்டு, நல்ல வத்திரம் அணிந்து, இளம்பெண்களோடு சுகித்து
வாழ்வதே வாழ்க்கையின் பயன் என்பது இவர்தம் கொள்கை.
ஆனால், இவர்களை மறுத்து, கடவுள் உண்டு
என்ற நிறுவுகின்றவர்கள் சொல்லுவது, ஒருவன் பிறந்தவுடன் தாய் தந்தையர் இறந்து போய்
இருப்பார்களானால், அவர்களைக் காணாததாலேயே, தாய்தந்தையர் இல்லை
என்று கூறுவது போலத்தான், கண்ணுக்குப் புலப்படாத ஆகாயத்தை இல்லை என்று
கூறுவது. மேகமானது திரண்டு, முழங்கி, மின்னி, வானில் பரந்து
எழுந்து அதனால் மழை பொழிவதைக் காண்ணால் காண்கின்றோம். இது காட்சி அளவை மட்டுமன்றி
கருதல் அளவையும் ஆகும். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகிய மூன்றும் கூடி, சிவப்பு என்னும்
தன்மையை உண்டாக்குவதற்கு, அவைகளை மென்று தின்கின்ற ஒருவன் வேண்டும்
என்பதைப் போல,
அவைகளை
உண்டாக்குவதற்கும் ஒருவன் வேண்டும் என்று ஆத்திகர்கள் கூறுகின்றனர்.
கடவுள் இல்லை என்று கூறுபவர்கள் கூட்டுறவு
கூடாது என்பதை,
வள்ளல்பெருமான்
பின்வரும் பாடலால் காட்டினார்.
"பரம்ஏது, வினைசெயும் பயன்ஏது, பதிஏது,
பசுஏது, பாசம்ஏது,
பத்திஏது, அடைகின்ற முத்திஏது, அருள்ஏது,
பாவபுண் ணியங்கள் ஏது,
வரம்ஏது, தவம்ஏது, விரதம்ஏது, ஒன்றும்இலை,
மனம்விரும்பு உணவு
உண்டு, நல்
வத்திரம் அணிந்து, மட மாதர்தமை நாடி,நறு
மலர்சூடி, விளையாடி,மேல்
கரம்மேவ
விட்டு, முலைதொட்டு வாழ்ந்து, அவரொடு
கலந்து மகிழ்கின்ற
சுகமே
கண்கண்ட சுகம், இதே கைகண்ட பலன்எனும்
கயவரைக் கூடாது அருள்,
தரம்
மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே!
தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!
சண்முகத் தெய்வமணியே!"
உடம்பே உயிர், உடம்பால் அடையும் இன்பமே மோட்சம் எனக் கருதுகின்ற உலகாயத நிலை விருதா
என்றும், மடவார் மயலாலே அந்த
வாழ்வு அவமாகிப் போகும் என்றும் அருணகிரிநாதப் பெருமான் பின்வரும் திருப்புகழில்
அறிவுறுத்துமாறு காண்க.
"விழு
தாது எனவே கருதாது, உடலை
வினை சேர்வதுவே ...... புரிதாக,
விருதாவினிலே
உலகாயதம் மேல்
இடவே, மடவார் ...... மயலாலே,
அழுது
ஆ கெடவே, அவம் ஆகிட, நாள்
அடைவே
கழியாது, ...... உனை ஓதி
அலர்
தாள் அடியேன் உறவாய் மருவ,
ஓர் அழியா வரமே ...... தருவாயே".
மணிவாசகப்
பெருந்தகையும் இதனைத் தமது திருவாசகத்தில் பின்வருமாறு காட்டினார்...
"தெய்வம்
என்பது ஓர் சித்தம் உண்டாகி
முனிவு
இலாததோர் பொருள் அது கருதலும்
ஆறு
கோடி மாயா சத்திகள்
வேறு
வேறுதம் மாயைகள் தொடங்கின,
ஆத்தம்
ஆனார் அயலவர் கூடி
நாத்திகம்
பேசி நாத்தழும்பு ஏறினர்,
சுற்றம்
என்னும் தொல்பசுக் குழாங்கள்
பற்றி
அழைத்துப் பதறினர், பெருகவும்
விரதமே
பரமாக வேதியரும்
சரதம்
ஆகவே சாத்திரம் காட்டினர்,
சமய
வாதிகள் தத்த மதங்களே
அமைவதாக
அரற்றி மலைந்தனர்,
மிண்டிய
மாய வாதம் என்னும்
சண்ட
மாருதம் சுழித்து அடித்து ஆஅர்த்து
உலோகாயதன்
எனும் ஒண்திறல் பாம்பின்
கலாபே
தத்த கடுவிடம் எய்தி,
அதில்
பெருமாயை எனைப்பல சூழவும்,
தப்பா
மேதாம் பிடித்தது சலியாத்
தழலது
கண்ட மெழகு அது போலத்
தொழுது, உளம் உருகி, அழுது, உடல் கம்பித்து,
ஆடியும்
அலறியும் பாடியும் பரவியும்
கொடிறும்
பேதையும் கொண்டது விடாது எனும்
படியே
ஆகி, நல் இடையறா அன்பில்
பசுமரத்து
ஆணி அறைந்தாற் போலக்
கசிவது
பெருகி, கடல் என மறுகி,
அகங்குழைந்து, அனுகுலம் ஆய், மெய் விதிர்த்து,
சகம்பேய்
என்று தம்மைச் சிரிப்ப,
நாண்அது
ஒழந்து, நாடவர் பழித்துரை
பூண்
அது ஆக, கோணுதல் இன்றி,
சதுர்
இழந்து, அறிமால் கொண்டு
சாரும்
கதியது
பரம அதிசயம் ஆக,
கற்றா
மனம் எனக் கதறியும் பதறியும்,
மற்றோர்
தெய்வம் கனவிலும் நினையாது,
அருபரத்து ஒருவன்
அவனியில் வந்து
குருபரன்
ஆகி அருளிய பெருமையைச்
சிறுமை
என்று இகழாதே, திருவடி இணையைப்
பிறிவினை
அறியா நிழல் அது போல
முன்பின்
ஆகி முனியாது, அத்திசை
என்பு
நைந்து உருகி, நெக்கு நெக்கு ஏங்கி,
அன்பு
எனும் ஆறு கரையது புரள,
நன்புலன்
ஒன்றி, நாத என்று அரற்றி,
உரைதடு
மாறி, உரோமம் சிலிர்ப்ப,
கரமலர்
மொட்டித்து, இருதயம் மலர,
கண்களி
கூர நுண்துளி அரும்ப,
சாயா
அன்பினை நாள்தொறும் தழைப்பவர்த்
தாயே
ஆகி வளர்த்தனை போற்றி".
முன்னர்க் குறிப்பிட்டது போல, உலோகாயதம் என்பது, காட்சியே அளவை என்றும், பூதங்கள் நான்கே என்றும், சரீரமே ஆன்மா என்றும், மறுமையும் கடவுளும் இல்லை என்றும், இன்பமும் பொருளுமே புருஷார்த்தங்கள் என்றும்
சொல்லும் மதம். பாம்பு ஒளி உடையது.
ஆனால், விடத்தைக் கொண்டது. உலோகாயதம் கவர்ச்சி உடையது. ஆனால், தீமை உடையது. இனி, விடம் இம்மையில் தீமை புரிவது. உலோகாயத
மதம் இம்மை மறுமை இரண்டிலும் தீமை புரிவது. அதனால் உலோகாயத மதத்தைப்
"பாம்பு" என்றும், அதன் பயனைக்
"கடுவிடம்" என்றும் கூறினார்.
"மின்அனைய
பொய்உடலை நிலைஎன்றும், மைஇலகு
விழிகொண்டு மையல்பூட்டும்
மின்னார்கள் இன்பமே மெய் என்றும், வளர்மாட
மேல்வீடு சொர்க்கம் என்றும்,
பொன்னை
அழியாது வளர் பொருள் என்று போற்றி, இப்
பொய்வேடம் மிகுதிகாட்டி,
பொறை அறிவு துறவு ஈதல் ஆதி நற்குணம் எலாம்
போக்கிலே போகவிட்டு,
தன்நிகர்
இல் உலோபாதி பாழ்ம்பேய் பிடித்திட,
தரணிமிசை லோகாயதன்
சமயநடை சாராமல், வேதாந்த சித்தாந்த
சமரச சிவாநுபூதி
மன்ன,
ஒருசொல் கொண்டு, எனைத் தடுத்து ஆண்டன்பின்
வாழ்வித்த ஞானகுருவே!
மந்த்ர குருவே! யோக தந்த்ர குருவே! மூலன்
மரபில்வரு மௌனகுருவே."
எனவே, தெய்வப் புலவர் திருவள்ளுவ நாயனார் தாம்
எடுத்துக் கொண்ட நூலுக்கு ஏற்ப, பொதுப்படத் தெய்வ வணக்கம் செய்தார். "கடவுள்
வாழ்த்து" என்பது "கடவுளுக்கு வாழ்த்து" அல்லது "கடவுளை
வாழ்த்தும் வாழ்த்து" என்று விரிந்து பொருள் தரும்.
எல்லாம்
வல்ல முழுமுதல் பரம்பொருளை, நாம் ஏன் வாழ்த்துதல் வேண்டும்? கடவுளை
வாழ்த்தும் வாழ்த்து நாம் வாழ்வதற்காகவே ஆகும். அல்லாமல், என்றும் உள்ள பொருளாய், ஞான உருவினனாக
இருக்கும் பொருளுக்கு அந்த வாழ்த்தால் யாதொரு நன்மையும் இல்லை. இது மக்களுக்கு
மட்டுமல்ல. தேவர்களுக்கும் தான். தேவர்களும் தாம் வாழ்வதற்கும், தம்மை எல்லாரும்
தொழுவதற்கும் இறைவனை வாழ்த்துகின்றனர் என்பதை,
வாழ்த்துவதும்
வானவர்கள் தாம்வாழ்வான், மனம்நின்பால்
தாழ்த்துவதும்
தாம்உயர்ந்து தம்மைஎல்லாம் தொழவேண்டி,
சூழ்த்தும்
மதுகரம் முரலும் தாரோயை நாய் அடியேன்
பாழ்த்த
பிறப்பு அறுத்திடுவான் யானும்உன்னைப் பரவுவனே.
என்னும்
மணிவாசகத்தால் அறியலாம்.
"கடவுள் வாழ்த்து" என்னும்
அதிகாரத் தலைப்பிற்குப் பரிமேலழகர் வகுத்த உரை வருமாறு......
அஃதாவது, கவி, தான் வழிபடும் கடவுளையாதல், எடுத்துக்கொண்ட பொருட்கு ஏற்புடைக்
கடவுளையாதல் வாழ்த்துதல். அவற்றுள் இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை என அறிக. என்னை? சத்துவ முதலிய குணங்களான் மூன்றாகிய
உறுதிப் பொருட்கு (சத்துவத்தால் விளைவது அறம், இராசதத்தால் விளைவது பொருள், தாமசத்தால்
விளைவது காமம்)
அவற்றான் மூவராய கடவுளரோடு இயைபுண்டாகலான்.
அம்மூன்று பொருளையும் கூறலுற்றார்க்கு அம்மூவரையும் வாழ்த்துதல்
முறைமையாகலின், இவ்வாழ்த்து
அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினாரென உணர்க.
இதற்கு
விளக்கம்.....
எழுத்து என்பது ஒலி எழுத்து, வரி எழுத்து என இருவகைப்படும். ஒலி
எழுத்து காணமுடியாதது. வரி எழுத்து கண்ணால் காணக் கூடியது. "அ" என்னும்
முதல் எழுத்து,
வரி
வடிவிலும்,
ஒலி
வடிவிலும் உள்ளது. அதுபோலவே, காணப்படுகின்ற அறிவற்ற பொருளாகிய உலகத்துக்கும், காண முடியாத, ஆனால், உணரக் கூடிய
பொருளாகிய உயிர்கள் ஆகிய நமக்கும் முதல்வனாக இருந்து, இந்த உலகத்தையும், உயிர்களையும்
இயக்கிக் கொண்டு இருப்பவன் கடவுள்.
திருக்குறளைக்
காண்போம்....
அகர
முதல் எழுத்து எல்லாம் ஆதி
பகவன்
முதற்றே உலகு.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
எழுத்து எல்லாம் அகரம் முதல --- எழுத்துக்கள்
எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன;
உலகு ஆதிபகவன் முதற்று --- அது போல உலகம்
ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து.
இது, தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு
உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி, நாதமாத்திரை ஆகிய இயல்பால் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை, செயற்கை உணர்வான் அன்றி இயற்கை
உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க. தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும்
முதல் ஆதல் நோக்கி, 'எழுத்து' எல்லாம் என்றார். ஆதிபகவன் என்னும் இரு
பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு.
'உலகு' என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது.
காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு
உண்மை கூற வேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே' என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது
கருத்தாகக் கொள்க. ஏகாரம் - தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது
உண்மை கூறப்பட்டது.
இம் முதல் திருக்குறளால், உலகத்தில் உள்ள
எழுத்துக்கள் அனைத்தும் அகரம் ஆகிய எழுத்து ஒன்றினையே தமக்கு முதல் எழுத்தாகக்
கொண்டுள்ளது போல, அசைவதும்
அசையாதனவும் ஆகிய உயிர்களைக் கொண்ட உலகமும், ஆதிபகவன் ஆகிய ஒரு முதலைத் தனக்கு
முதலாக உடையது என்பது விளங்குகின்றது. அகரம் என்னும் எழுத்தானது, அது பிறக்கும்
இயல்பால் தலைமை ஆனது போல, ஆதிபகவனாகிய
இறைவனும் தமது இயற்கை உணர்வால் முழுவதையும் உணர்வதால் தலைவன் ஆயினான்.
நச்சினார்க்கினியர் --- அகரமுதல என்புழி, அகரம் தனி உயிருமாய், ககர ஒற்று
முதலிவயற்றுக்கு உயிருமாய் வேறு நிற்றல். அவ்வகரம் தனியே நிற்றலானும், பல மெய்க்கண்
நின்று அவ்வம் மெய்கட்கு இசைந்த ஓசைகளைப் பயந்தே நிற்றலானும், வேறுபட்டதாதலின்
ஒன்றை ஆயும்,
பலவே
ஆயும் நிற்பது ஓர் தன்மையை உடைத்து என்று கோடும். இறைவன் ஒன்றே ஆய் நிற்கும்
தன்மையும்,
பல
உழிர்க்கும் தானே ஆய் அவற்றின் அளவாய் நிற்கும் தன்மையும் போல.
இங்ஙனம் மெய்க்கண் அகரம் கலந்து நிற்குமாறு
கூறினால் போல, பதினோரு
உயிர்க்கண்ணும் அகரம் கலந்து நிற்கும் என்பது ஆசிரியர் கூறலாயினார். அந்நிலைமை தனக்கே
புலப்படுதலானும், பிறர்க்கு இவ்வாறு உணர்த்துதல் அரிதாகலானும் என்று உணர்க.
இறைவன் இயங்குதிணைக்கண்ணும், நிலைத்திணைக்கண்ணும் பிறவற்றின் கண்ணும் அவற்றின்
தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தால் போல, அகரமும் உயிர்க்கண்ணும், தனிமெய்க்
கண்ணும் கலந்து,
அவற்றின்
தன்மையே ஆய் நிற்கும் என்பது சான்றோர்க்கு எல்லாம் ஒப்ப முடிந்தது. அகரமுதல
என்னும் குறலால் அகரமாகிய முதலை உடைய எழுத்துக்கள் எல்லாம், அதுபோல
இறைவனாகிய முதலை உடைத்து உலகம் என வள்ளுவனார் உவமை கூறியவற்றானும்.... உணர்க.
பகவன் என்ற சொல் பகத்தை உடையவன் என்னும்
பொருள் உடையது. ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம்
என்ற ஆறையும் "பகம்" என்னும் சொல் குறிக்கும். பகவன் என்ற சொல்லுக்கு, கேவலஞானி என்று
பொருள் உரைப்பர் அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில்.
இங்கே, திருக்குறளை
எடுத்துக் கொண்டதன் நோக்கம் என்னவெனில், திருக்குறளை
நன்கு ஓதி, உணர்ந்து, தெளிந்த மேலோர்
சிலர்,
திருக்குறளுக்கு
விளக்கமாக வரைந்த நூல்கள் உள்ளன. அவற்றில் எனக்குப் பலகாலம் அரிதில் முயன்றதன்
பயனாக,
சில
நூல்கள் கிடைக்கப்பெற்றன. ஒவ்வொரு அதிகாரத்திலும், ஒன்றிரண்டு
திருக்குறள் பாக்களை எடுத்துக் கையாண்டு, விளக்கமாக சில
பாடல்களை வரைந்துள்ளனர். இந்த நூல்களை ஓதினால் திருக்குறள் மிகத் தெளிவாகும்
என்பது எண்ணம்.
அவற்றை அன்பர்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும்
என்னும் அவாவே, என்னை இதனை எழுதத் தூண்டியது.
இம் முதல் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர், தாம் இயற்றிய, சோமேசர் முதுமொழி
மேல் வைப்பு என்னும் நூலில், பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம் அற நிறைந்து
இருக்கும் பரிபூரண ஆனந்தப் பரம்பொருள் நிற்கும் நிலைகள் இரண்டு என, உலகுக்கு சிவஞான
போதம் என்னும் சாத்திர நூலின் வழி உணர்த்திய மெய்கண்ட தேவநாயனார் காட்டிய
சித்தாந்தத்தைக் காட்டினார். மேலும் மெய்கண்டதேவ நாயனாரை, "தமிழ்ச்
சிங்கம்" என்கின்றார்.
கடவுள் இலக்கணம் குறித்து, சிவஞான போதம், இரண்டாம்
சூத்திரம்,
"அவையே
தானே ஆய்,
இரு
வினையின் போக்கு வரவு புரிய, ஆணையின் நீக்கம் இன்றி நிற்கும் அன்றே"
என்று தெரிவிக்கின்றது.
கண் ஒளி, ஒரு பொருளைக் காணும்
பொருட்டு,
ஆன்ம
அறிவுடன் நின்று, கண் ஒளியோடு கூடவே பொருளில் செல்லுவது போல, உயிர்கள் இன்ப
துன்பங்களை அனுபவித்தல் பொருட்டு, அந்த இன்ப துன்பங்களுக்கு முன்னிலை ஆகிய
விடயங்களில் உயிரோடு கூடவே இறைவன் செல்லுவதனால், உயிர்களோடு உடனும் ஆகி, இவ்வாறு
உயிர்களோடு இறைவன் ஒன்றாயும், உடனாயும், வேறாகவும் நிற்கின்றான்.
மேல் உள்ள,
"அவையே
தானே ஆய்" என்பதை, "அவையே ஆய்", "தானே ஆய்", "அவையே தானே
ஆய்" என்று கொள்ளவேண்டும்.
"அவையே ஆய்" என்ற போது, இறைவன்
உயிர்களோடு ஒன்றாகவும்,
"தானே ஆய்" என்ற போது, இறைவன்
உயிர்களுக்கு வேறாகவும்,
"அவையே தானே ஆய்" என்ற போது, இறைவன்
உயிர்களோடு உடனாகவும் நிற்றலைக் குறிக்கும்.
இறைவன் ஒன்றிலும் தோய்வு இல்லாமல், சுயம்
பிரகாசமாய் நிற்கும் தன்மையில், சிவம் எனவும், உயிர்களோடு ஒன்றாயும், வேறாயும், உடனாகவும்
நிற்கும் தன்மையில் சத்தி ஆகவும், ஐந்தொழில் செய்யும் தன்மையில் பதி எனவும்
நிற்பான்.
சிவஞானபோதத்தை முதல் நூலாகக் கொண்டு எழுந்த
மற்றைய சித்தாந்த சாத்திர நூல்கள் கூறுவதைக் காண்போம்...
"அகர உயிர்
போல் அறிவாகி எங்கும்
நிகர் இல் உறை
நிற்கும் நிறைந்து"
"எங்கும்
எவையும் எரி உறு நீர்போல் ஏகம்
தங்கும்
அவன்தானே தனி"
என்று
உமாபதி சிவம் தமது திருவருட்பயன் என்னும் நூலில் பதி இலக்கணமாகப் பாடி காட்டி
உள்ளார்.
ஒன்று
என மறைகள் எல்லாம்
உரைத்திட, உயிர்கள் ஒன்றி
நின்றனன்
என்று பன்மை
நிகழ்த்துவது என்னை? என்னின்,
அன்று; அவை பதிதான்
ஒன்றுஎன்று
அறையும்; "அக்கரங்கள் தோறும்
சென்றிடும்
அகரம் போல
நின்றனன், சிவனும் சேர்ந்தே.
என்று
அருள்நந்திசிவம் தாம் இயற்றிய சிவஞானசித்தியார் என்னும் நூலில் விரித்து உள்ளார்.
அகரஉயிர்
எழுத்து அனைத்தும் ஆகி, வேறாய்
அமர்ந்தது என அகிலாண்டம் அனைத்தும் ஆகி,
பகர்வன
எல்லாம் ஆகி, அல்லது ஆகி,
பரம் ஆகி, சொல்லரிய பான்மை ஆகி,
துகள்
அறு சங்கற்ப விகற்பங்கள் எல்லாம்
தோயாத அறிவாகி, சுத்தம் ஆகி,
நிகர்
இல் பசுபதி ஆன பொருளை நாடி,
நெட்டு உயிர்த்துப்
பேரன்பால் நினைதல் செய்வாம்.
என்று
தாயுமான சுவாமிகள் பாடியுள்ளார்.
"முதுமொழி மேல் வைப்பு" என்ன தெரிவிக்கின்றது, பார்ப்போம்.
"எங்கும்உளன்
இறைவன் என்று இரண்டாய்ஏத்துதமிழ்ச்
சிங்கம் நடந்தவழிச்
சித்தாந்தம் --- என்றது
அகர முதல எழுத்து
எல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு".
எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இறைவன், தானே தனித்தும், ஆன்மாக்களுக்கு எல்லாம் அறிவாகி
சடத்திலும், சித்திலும் வேறு
இன்றிக் கலந்து நிற்கும் நிலைகள் இரண்டாக. "தமிழ்ச் சிங்கம்" ஆகிய மெய்கண்டதேவர்
"சிவஞானபோதம்" என்னும் நூலை அருளிச் செய்தார்.
அகரம் தானே தனித்தும், ஏனை மெய் உயிர்களோடு வேறு இன்றிக்
கலந்தும் நிற்றலானும், விகாரம் இன்றி நாத
மாத்திரையாய் இயல்பாகப் பிறத்தலானும், முதற்கண்
வைக்கப்படும் ஆதலானும், இறைவனுக்கு உவமை
ஆயிற்று. இச் செய்யுள் பதி இலக்கணம்
கூறிற்று. ' அகரஉயிர் போல அறிவாகி
எங்கும் நிகர் இல் இறை நிற்கும் நிறைந்து', 'எங்கும் எவையும் எரிஉறு நீர் போலேகம்
தங்குமவன் தானே தனி', 'அக்கரங்கள் தோறும் சென்றிடும் அகரம்
போல்', 'அகர உயிர் எழுத்து
அனைத்துமாகி வேறாய் அமர்ந்தது என',
என்பவற்றையும், சிவஞான போதம், சூத்திரம் 2-இன் பொருளையும் இதனுடன் நோக்குக.
அடுத்து, திராவிட மாபாடியக் கர்த்தரான, மாதவச் சிவஞான
யோகிகள் தாம் இயற்றிய, "சோமேசர் முதுமோழி வெண்பா"வில், மேற்குறித்த
முதல் திருக்குறளுக்கு விளக்கமாகப் பாடியுள்ள பாடலைக் காண்போம்...
"சீர்கொள்இறை
ஒன்றுஉண்டுஅத் தெய்வம் நீ என்றுஒப்பால்
சோர்வுஇல் அடையால்
தெளிந்தோம், சோமேசா! ---ஓரில்
அகர முதல
எழுத்துஎல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு".
இதன் பொருள் ----
சோமேசா --- சந்திரனுக்கு அருள்புரிந்த
சிவபெருமானே! எழுத்து எல்லாம் --- எழுத்துக்கள் எல்லாம், அகர முதல --– அகரத்தை முதலாக உயைடன, அதுபோல, உலகு --- உலகமானது, ஆதிபகவன் முதற்று --- ஆதிபகவனாகிய முதலை
உடையது. ஓரில் --- என்னும் பாவினை ஆராய்ந்தால், ஒப்பால் --- உவமையானும், சோர்வுஇல் அடையால் --- தளர்ச்சி இல்லாத
அடைமொழியானும், சீர்கொள் இறை ஒன்று
உண்டு --- சிறப்பைக் கொண்ட இறைவன் ஒருவன் உண்டு எனவும். அ தெய்வம் நீ என்று ---
அக்கடவுள் நீயே எனவும், தெளிந்தோம் --- ஐயம்
திரிபு இன்றித் தெளிந்துகொண்டோம் ஆகலான் என்றவாறு.
உலகிற்கு முதற்கடவுள் ஒருவன் உளன் என்பதும், அம் முதற்கடவுள்தான் ஆதிபகவன் என்பதும்
உணர்த்தப்பட்டது.
அகரம் நாதமாத்திரையால் இயற்கைத் தோற்றம்
உடைத்தாய் நிறைந்து முதன்மையுற்று நிற்ப, எனை
எழுத்துக்கள் எல்லாம் அதன் இயக்கத்தான் விகார முயற்சியில் தோன்றி அதனானே
வியாபிக்கப்படும் பரதந்திரம் உடையவாய் நிலவுதல் போல, ஆதிபகவன் இயற்கை உணர்வினானே முற்றும்
உணர்ந்து, யாண்டும் நிறைந்து
முழுமுதல்வனாய் விளங்கி நிற்ப, உலகு அனைத்தும் ஆவன்
ஆணையான் வியாபிக்கப்பட்டுப் பரதந்திரம் உள்ள வினைக்கீடாக உடல் கரணம் எய்தித்
தோன்றி புவனபோக வியபாரமுடையவாய் நிலவா நின்றது.
இத்திருக்குறளுக்கு இதுவே பொருள் என்பது
அகர உயிர்போல் அறிவாகி எங்கும்,
நிகரிலிறை
நிற்கும் நிறைந்து என உமாபதிதேவ நாயனார் அருளிச் செய்த திருவருட்பயனால் உணர்க.
நாயனார் எடுத்துக்காட்டு உவமையால்
கூறியருளிய பொருட்பற்றி இனிது புலப்படும் பொருட்டு உபமாலங்காரத்தில் வைத்து
எடுத்தோதினார் என்றறிக.
ஆதிபகவனாகிய முதற்கடவுளை எழுத்துக்களின்
நிறைந்து அவை தமக்கு முதலாய் நிற்கும் பொதுவியல்பு பற்றி அகரத்தோடு
ஒப்பித்தருளினும், அப்பரம்பொருள் அறிவுருவாய் யாங்கணும்
நிறைந்து எப்பொருட்கும் ஆதாரமாய் நிற்கும் முழுமுதலான உடையான் ஆகலின், உண்மையில் தன் உடைப் பொருளாகிய
பசுபாசங்களுள் ஒன்றனோடும் உவமிக்கப்படான் என்பதே நாயனாருக்குக் கருத்தாம் என்பது
அறிவிப்பார், "அறிவாகி எங்கும்
நிகரிலிறை நிற்கும் நிறைந்து" என்று அச் சுருதிப் பொருளினை இங்ஙனம் தெளித்து
ஓதியருளினார். இனி, உடைப்பொருள் அடிமையும் உடைமையும் என
இருவகைப்படும். அவற்றுள், உயிர்வருக்கம் எல்லாம் ஆதிபகவனாகிய
இறைவனுக்கு அடிமை எனவும், மாயை கன்மங்களும்
அவற்றின் காரியங்களும் உடைமை எனவும் உணர்ந்துகொள்க.
அடுத்து, திருத்தொண்டர் மாலை என்னும் நூலில்
குமார பாரதி அவர்கள், பெரிய
புராணத்தில் வரும் தில்லைவாழ் அந்தணர்களை முன்னிட்டு, மேற்குறித்த முதல்
திருக்குறளுக்கு விளக்கமாக ஒரு பாடலைப் பாடி உள்ளார்.
"பூவா
யிரம்பேர் புகழ்கூத்த ரைத்தில்லை
மூவா
யிரம்பேர் முதல்எனக் கொண்டு - ஓவார்
அகர
முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன்
முதற்றே உலகு".
நிலவுலகத்திலே
மானிடர்கள் பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை, ஆயிரம் திருநாமங்கள் சொல்லிப்
புகழ்கின் கூத்தப் பிரானை, தில்லைவாழ் அந்தணர்கள்
மூவாயிரம் பேர்களும் தமக்கு முதல்வரென்று கொண்டு போற்றிப் புகழ்ந்து பூசை
செய்வதினின்றும் நீங்கமாட்டார்கள்.
எழுத்துக்களெல்லாம் அகரத்தை
முதலாகவுடையன. அதுபோல உலகமானது
ஆதிபகவனாகிய முதலை உடைத்து என்றவாறு. ஆதிபகவன் என்பது ஆதிசத்தியை உடைய பகவன்
என்னும் பொருட்டு.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசைச் சாந்தக்
கவிராயர் தாம் இயற்றிய, நீதி சூடாமணி என்னும் இரங்கேச வெண்பாவில்
பின் வருமாறு பாடி உள்ளார்.
"சொன்ன
கம்பத்தே மடங்கல் தோன்றுதலால் அன்பர்உளத்து
இன்னமுதம்
ஆகும், இரங்கேசா! - மன்னும்
அகர
முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன்
முதற்றே உலகு".
இதன்
பதவுரை
---
அன்பர் உள்ளத்து இன் அமுதம் ஆகும் ---
பத்தர்களுடைய மனத்தில் இனிக்கும் இனிய அமுதம் போன்ற கடவுளே, இரங்கேசா ---- அரங்கநாதன் என்னும்
திருநாமம் உடைய கடவுளே, சொன்ன கம்பத்தே --- பிரகலாதன் சொன்ன
தூணிலே, மடங்கல் தோன்றுதலால் ---
நரசிம்மாவதார சொரூபியாய் நீர் அவதரித்தபடியால், மன்னும் எழுத்து எல்லாம் --- உலகத்தில்
நிலை பெற்ற எல்லா எழுத்துக்களும்,
அகர
முதல --- அகரத்தை முதலாக உடையன போல,
உலகு
--- இந்த உலகமானது, ஆதிபகவன் முதற்றே -
ஆதிபகவனாகிய கடவுளையே முதலாக உள்ளதென்பது விளங்குகின்றது.
கருத்துரை -- உலகம், எங்கும் நிறைந்த கடவுளை முதலாக உடையது.
அடுத்து, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள்
பாடிய "முருகேசர்
முதுநெறி வெண்பா" என்னும் நூலில் ஒரு வெண்பா......
"தேவரையும்
சூரனையும் தேற்று உருவால் தேர்ந்தனர் நீ
மூவர்இறை
என்ன, முருகேசா! - ஓவில்
அகர
முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன்
முதற்றே உலகு".
இதன்
பதவுரை ---
முருகேசா --- முருகப் பெருமானே, நீ மூவர் இறை என்ன --- தேவரீரே
நான்முகன் திருமால் உருத்திரன் என்னும் மூன்று கடவுளர்கட்கும் தலைவர் என்பதனை, தேவரையும் --- தேவர்களையும், சூரனையும் --- சூரபதுமன்
முதலியவர்களையும், தேற்று உருவால் ---
தெளிவிக்கக் காட்டிய வடிவத்தினால்,
தேர்ந்தனம்
--- நன்குணர்ந்து கொண்டோம், ஓவில் ---
ஒழிதலில்லாத, எழுத்து எல்லாம் ---
எல்லா மொழிகளின் எழுத்தும், அகரம் முதல ---
அகரமாகிய உயிரெழுத்தை முதலாகக் கொண்டன. அதைப்போல, உலகு --- இந்த
உலகமானது, ஆதிபகவன் முதற்று ---
ஆதிபகவனாகிய கடவுளை முதலாகக் கொண்டுள்ளது.
தேவர்களையும் சூரபன்மனையும் மயக்கித்
தெளிவித்தபடியினால் தேவரீரே மூவர்க்கும் முதல்வர் என்பதை நாங்கள் உணர்ந்து
கொண்டோம். எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாகக் கொண்டிருத்தல் போன்று, இவ்வுலகம் கடவுளையே முதலாகக்
கொண்டிருக்கின்றது என்பதும் இதனால் பெறப்பட்டது என்பதாம். (ஓவின்மை -
நீங்குதலின்மை).
முருகக்
கடவுள் சூரபன்மன் முதலிய அவுணர்களை வென்று தேவர்களைக் காக்கும் பொருட்டுத்
தோன்றியருளினார். பாலப் பருவத்திற்கேற்ப பல திருவிளையாடல்களைப் புரிந்தார்.
முருகன் திருவிளையாடல்களைப் பார்த்துத் தேவர்களும் அவுணர்களும் திகைத்தார்கள்.
அவர்களுடைய திகைப்பைப் போக்க எண்ணிய முருகக் கடவுள் மேருமலையை அடைந்தார். அதன் கொடுமுடிகளைப் பறித்து நான்கு
பக்கங்களினும் வீசினார். பல
திருவிளையாடல்களை அங்கும் புரிந்தருளினார். இந்திரன் முதலியோர் உலகத்தை நிலை
கலங்கச் செய்கின்றவன் இவனே, இவனை இப்பொழுதே
கொன்றொழிக்கவேண்டும் என்று
எண்ணியவர்களாய்ப் போர் செய்யத் தொடங்கினார்கள். போரின் முடிவில் தம்முடைய
உண்மை வடிவத்தை அவர்களுக்குக் காட்டினார். அதனால், தேவர்கள் தம்முடைய மயக்கம் நீங்கி
உண்மையை உணர்ந்தார்கள். போர் நிகழ்ந்த காலத்தில் முருகக் கடவுள் தம்முடைய உம்மை
வடிவத்தைச் சூரபன்மனுக்கு ஒரு கணப் பொழுது காட்டினார். அப்பொழுது சூரபன்மனும்
முழுமுதற் கடவுள் முருகக் கடவுளே என்னும் உண்மையை உணர்ந்து கொண்டான்.
அடுத்து, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து, சென்ன மல்லையர் பாடிய "சிவசிவ
வெண்பா" என்னும் நூலில் பின்வருமாறு காட்டப்பட்டு உள்ளது.
"வில்பிரம்பால்
உற்றவடு மேவவுலகு எங்குநிறை
சிற்பரனே
தெய்வம், சிவசிவா! - சொல்சிறந்த
அகர
முதல எழுத்துஎல்லாம் ஆதி
பகவன்
முதற்றே உலகு".
அருச்சுனனுடைய வில்லாலும், பாண்டியனுடைய தண்டாலும் அடிபட்டவர்
சிவபெருமான். அந்த அடியானது பெருமான் மேல் மட்டுமல்லாமல், அண்ட சராசரங்களில் எங்கும் பட்டது.
அதனால், வாலறிவனான சிவபெருமானே
உலக முதல்வன் என்பது விளங்குகின்றது.
இக்கருத்தையே,
வில்லிபுத்தூர் ஆழ்வார் தாம் அருளிய வில்லிபாரதத்தில்,,
விண்ணில்உறை
வானவரில் யார்அடி படாதவர்?
விரிஞ்சன் முதலோர், உததிசூழ்
மண்ணில்உறை
மானவரில் யார்அடி படாதவர்?
மனுக்கள் முதலோர்கள், அதலக்
கண்ணில்உறை
நாகர்களில் யார்அடி படாதவர்?
கட்செவி மகீபன் முதலோர்,
எண்ணில்பல
யோனியினும் யாஅடி படாதன?
இருந்துழி இருந்துழி அரோ.
வேதம்அடி
உண்டன, விரிந்தபல ஆகம
விதங்கள்அடி உண்டன, ஓர்ஐம்
பூதம்அடி
உண்டன, விநாழிகை
முதல்புகல்செய்
பொருளொடு சலிப்பில் பொருளின்
பேதம்அடி
உண்டன, பிறப்பிலி இறப்பிலி
பிறங்கல் அரதன்தன் மகளார்
நாதன்அம
லன்சமர வேடவடி வங்கொடு
நரன்கை அடிஉண்ட பொழுதே.
என்று
கூறி இருத்தல் காண்க.
மேலும், இறைவன் என்றும் உலகிற்கு முதல்வன்
என்றும், உயிர்கள் எல்லாம் அவன் வடிவம் ஆகும் என்றும், அவன் ஆணையில்லாவிடில், ஓர்
அணுவும் அசையாது என்பதை,
"எல்லா
உயிருக்கும் உயிர்
அருணேசர், இவர் அசைவின்
அல்லாது
அணுவும் அசையாது
என்பது அறிந்தனம் - மேல்
வில்லாடன்
மாறன் இருக்கவும்,
யோகம் விளைந்த அந்நாள்
புல்லாது
இருந்தன எல்லா
உயிரும் தம் போகத்தையே"
என்னும்
அருணைக் கலம்பகப் பாட்டினாலும் அறியலாம்.
இதனால், எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதலாக உடையது போல, வாலறிவனான சிவபெருமானே
உலக முதல்வன் என்பது விளங்குகின்றது.
உலகினுக்கு முதல்வனாகிய ஆதிபகவன் அசைந்தால்,
யாவும் அசையும், அல்லாவிடில் அணுவும் அசையாது என்பதை,
"தான்
அலாது உலகம் இல்லை,
சகம் அலாது அடிமை இல்லை,
கான்
அலாது ஆடல் இல்லை,
கருதுவார் தங்களுக்கு
வான்
அலாது அருளும் இல்லை,
வார்குழல் மங்கையோடு
மான்
அலாது ஊர்வது இல்லை,
ஐயன் ஐயாற னார்க்கே"
என்னும்
அப்பர் தேவாரத்தாலும்,
"கையும்
காலும் நிமிர்த்துக் கடாரநீர்
பைய
ஆட்டி, பசும் சிறுமஞ்சளால்
ஐயன்
நா வழித்தாளுக்கு, அங்காந்திட
வையம்
ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே"
"வாயுள்
வையகம் மண்ட மடநல்லார்
ஆயர்
புத்திரன் அல்லன், அருந்தெய்வம்
பாய
சீர் உடைப் பண்பு உடைப் பாலகன்,
மாயன்
என்று மகிழ்ந்தனர் மாதரே"
என
வரும் பெரியாழ்வார் பாசுரங்களாலும் அறிய வரும்.
இறைவன்
ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்னும் ஆறு குணங்களை
உடையவன் என்னும் பொருளில் "பகவன்" எனப்பட்டனன்.
அடுத்து, திருப்புல்லாணி என்னும் திவ்விய
தேசத்தில் எழுந்தருளி உள்ள, தெய்வச் சிலைப்
பெருமாள் மீது பாடப்பெற்றுள்ள "திருப்புல்லாணி மாலை"யில் இத்
திருக்குறளுக்கு விளக்கமாக வரும் பாடல்....
"மூதுரை
வள்ளுவர் அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி
பகவன் முதற்றே உலகு எனலாய் அமைத்த
நீதி, உனைஅன்றி நீள் நிலம்
உய்ய நெறி மற்றுஉண்டோ?
மாதவ!
புல்லைத் தலத்தும் என் நெஞ்சத்தும் வாழ்பவனே".
இதன்
பொருள் ---
மாதவனே! திருப்புல்லாணி என்னும்
திருத்தலத்திலும், எனது
நெஞ்சத்திலும் வாழ்கின்ற பெருமாளே! பழைய உரையாகிய திருக்குறளைச் செய்த
திருவள்ளுவர்,
எழுத்துக்கள்
எல்லாம் அகரத்தை முதலாக உடையது போல், இந்த உலகமானது ஆதிபகவனையே முதலாக உடையது
என்று அமைத்துக் காட்டிய நீதியானது, இந்த உலகமானது உய்தி பெற, திருமால் ஆகிய நின்னை
அல்லாமல் வேறு வழி உண்டோ? இல்லை என்றவாறு.
இனி, இறைவன் ஒருவனே உலகுக்கு
முன்னவன்,
அவன்
அகரம் போன்றவன் என்னும் பொருள்படும் தேவாரம் முதலிய பாடல்கள் சிலவற்றைக் காணலாம்.
ஒப்புமைப்
பாடல்கள்.....
முன்னவன் உலகுக்கு முழுமணிப்
பொன்அவன் திகழ் முத்தொடு போகமாம்
மன்னவன் திருமாற்பேறு கைதொழும்
அன்னவர் எமை ஆள்உடையார்களே. --- அப்பர்.
தகர மணி அருவித் தடமால் வரை சிலையா
நகரம் ஒருமூன்றும் நலம்குன்ற வென்று
உகந்தான்
அகர முதலானை அணி ஆப்பனூரானை
பகரும் மனம் உடையார் வினைப்பற்று
அறுப்பாரே. ---
திருஞானசம்பந்தர்.
சத்தியுள் ஆதி ஓர்
தையல் பங்கன்
முத்திஅது ஆகிய மூர்த்தியோ தான்
அத்திய கையினில் அழகு சூலம்
வைத்தவன் இராமனது ஈச்சரமே. --- திருஞானசம்பந்தர்.
ஆகம்தோய் அணி கொன்றையாய், அனல்
அங்கையாய், அமரர்க்கு அமரா, உமை
பாகம்தோய் பகவா, பலிஏற்று உழல் பண்டரங்கா,
மாகம்தோய் பொழில் மல்கு சிற்றம்பலம்
மன்னினாய், மழுவாளினாய், அழல்
நாகம்தோய் அரையாய், அடியாரை நண்ணா வினையே. --- திருஞானசம்பந்தர்.
ஆதிபகவன் என்பது ஆதியாகிய
சத்தியோடு பிரிப்பு இன்றி ஒன்றாய் உள்ளவன் என்ற பொருளில் இறைவனுக்கு வழங்கும் திருப்பெயர்.
ஏனத்து இளமருப்புப் பூண்டார் போலும்
இமையவர்கள் ஏத்த
இருந்தார் போலும்
கானக் கல்ஆல்கீழ் நிழலார் போலும்
கடல்நஞ்சம் உண்டு
இருண்ட கண்டர் போலும்
வானத்து இளமதிசேர் சடையார் போலும்
வான்கயிலை வெற்பின்
மகிழ்ந்தார் போலும்
ஆனத்து முன்எழுத்தாய்
நின்றார்
போலும்
அணிஆரூர்த் திருமூலட்
டானனாரே. ---
அப்பர்.
சிகரம் முகத்தில் திரளார் அகிலும்
மிஉந்தி வரும்நிவவின்
கரைமேல்
நிகர்இல் மயிலார் அவர்தாம் பயிலும்
நெல்வாயில் அரத்துறை
நின்மலனே
மகரக் குழையாய் மணக்கோலம் அதே
பிணக்கோலம் ஆதுஆம்
பிறவி இதுதான்
அகரம் முதலின்
எழுத்து ஆகி நின்றாய்
அடியேன் உய்யப்
போவதுஓர் சூழல் சொல்லே. ---
சுந்தரர்.
இழைக்கும்
எழுத்துக்கு உயிரே ஒத்தியால்
இலையே ஒத்தியால், உளை ஒத்தியால்
குழைக்கும் பயிர்க்கு ஓர் புயலே
ஒத்தியால்
அடியார் தமக்குஓர்
குடியே ஒத்தியால்
மழைக்கு நிகர்ஒப்பன வன்திரைகள்
வலித்து எற்றி
முழங்கி வலம்புரிகொண்டு
அழைக்கும் கடலங்கரைமேல் மகோதை
அணியார் பொழில்
அஞ்சைக்களத்து அப்பனே. ---
சுந்தரர்.
முன்னிக் கடலைச்
சுருக்கி எழுந்துஉடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி யவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய். --- திருவாசகம்.
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி யவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய். --- திருவாசகம்.
ஆரும் அறியார் அகாரம் அவன்என்று
பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி
தாரம் இரண்டும் தரணி முழுதுமாய்
ஊறி எழுந்திடும் ஓசை அதுஆமே. --- திருமூலர்.
அகார முதலாய்
அனைத்துமாய் நிற்கும்
உகார முதலாய் உயிர்ப் பெய்து நிற்கும்
அகார உகாரம் இரண்டும் அறியில்
அகார உகாரம் இலிங்கமது ஆமே. ---
திருமூலர்.
அகாரம் முதலாக
ஐம்பத்து ஒன்றாகி
உகாரம் முதலாக ஓங்கி உதித்து
மகார இறுதியாய் மாய்ந்து மாய்ந்துஏறி
நகார முதலாகும் நந்திதன் நாமமே. ---
திருமூலர்.
அகாராதி ஈர்எட்டு
அலர்ந்த பரையாம்
உகாராதி சத்தி உள்ளொளி ஈசன்
சிகாராதி தான்சிவம் ஏதமே கோணம்
நகாராதி தான்முல மந்திரம் நண்ணுமே.--- திருமூலர்.
அகரப் பொருள் ஆதி
ஒன்றிடு
முதல்அக்கரம் ஆனதின்
பொருள்
அரனுக்கு இனிதா
மொழிந்திடு குருநாதா
அமரர்க்கு இறையே வணங்கிய
பழநித் திரு ஆவினன்குடி
அதனில் பரிவாய் இருந்தருள்...பெருமாளே.
--- திருப்புகழ்.
அகர
உயிர் எழுத்து அனைத்தும் ஆகி, வேறாய்
அமர்ந்தது என, அகிலாண்டம் அனைத்தும் ஆகி,
பகர்வன
எல்லாம் ஆகி, அல்லது ஆகி,
பரம் ஆகி, சொல்லரிய பான்மை ஆகி,
துகள்
அறு சங்கற்ப விகற்பங்கள் எல்லாம்
தோயாத அறிவு ஆகி, சுத்தம் ஆகி,
நிகரில்
பசுபதியான பொருளை நாடி
நெட்டு உயிர்த்துப் பேரன்பால் நினைதல்
செய்வாம். --- தாயுமானவர்.
அகர
உயிர்போல் அறிவாகி எங்கும்
நிகரில்
இறைநிற்கும் நிறைந்து. --- திருவருட்பயன்
ஒன்றென
மறைகள் எல்லாம்
உரைத்திட உயிர்கள் ஒன்றி
நின்றனன்
என்று பன்மை
நிகழ்த்துவது என்னை என்னின்
அன்றவை
பதிதான் ஒன்றென்று
அறையும் அக்கரங்கள் தோறும்
சென்றிடும்
அகரம் போல
நின்றனன் சிவனும்
சேர்ந்தே." --- சிவஞானசித்தியார் சுபக்கம்.
ஒன்று
என்றது ஒன்றேகாண் ஒன்றே பதிபசுவாம்
ஒன்று
என்ற நீ பாசத்தோடு உளைகாண் -- ஒன்றுஇன்றால்
அக்கரங்கள்
இன்றாம் அகரஉயிர் இன்றேல்
இக்கிரமத்து
என்னும் இருக்கு. --- சிவஞானபோதம்.
No comments:
Post a Comment