திருக்குறள் - ஓர் அறிமுகம்




திருக்குறள்

ஓர் அறிமுகம்.

உலகத்திலே பல மொழிகளிலும் பல நூல்கள் படைக்கப்பட்டு இருந்தாலும், அமுதினும் இனிய தமிழ் மொழியில் தோன்றிய நூல்களில் தோன்றிய "திருக்குறள்" ஒன்றுதான், தனக்கு ஒப்பு ஆன ஒரு நூல் இன்றி உயர்ந்து உள்ளது என்பது பெருமைக்கு உரியது.

அதன் சிறப்பு தெள்ளிதின் உணரப் பட்டதாலேயே, திருக்குறள் மூலம் மட்டும் உடைய பல பதிப்புக்கள் சிறியதும் பெரியதும் ஆக வந்த வண்ணம் உள்ளன. சிறியது பெரியதும் ஆன பல உரை நூல்களும் வந்த வண்ணம் உள்ளன.

எத்தனையோ பெருமக்கள் உரை வரைந்து உள்ளனர். ஆயிரம் உரை நூல்கள் வந்தாலும், நூலாசிரியரின் உள்ளக் கிடக்கையைத் தெள்ளிதின் உணர்ந்து, பரிமேலழகர் வரைந்து உரையே வழிகாட்டியாகத் திகழ்கின்றது. நிகர் இல்லாததோர் உரை, பரிமேலழகர் உரையே என்பதில் ஐயம் நிகழ வாய்ப்பே இல்லை எனலாம்.

எல்லா உயிர்களும் துன்ப நீக்கத்தையும், இன்ப ஆக்கத்தையுமே விழைவது இழல்பு. ஆனால், அந்த நிலை, பொருள் அல்லவற்றைப் பொருளாகக் கொள்ளும் மயக்கம் காரணமாக உண்டாகும் காமம், வெகுளி உள்ள வரையில் வாய்க்காது என்பதே அனைத்து நூல் துணிபு.

பொருளைப் பொருளாகவும், பொருள் அல்லவற்றைப் பொருள் அல்லவாகவும் கொள்ளுவதே சாலச் சிறந்தது. அதுதான் தத்துவஞானம் உதித்த நிலை. இதனை, "மெய்யுணர்தல்" என்னும் அதிகாரத்தால் அறியலாம்.

மருள் நிலையை மாற்றி, அருள் நிலைக்கு மனிதன் உயர வேண்டுமானால், இந்த உண்மையை உணர வேண்டும். இது வெறும் நூல் அறிவால் மட்டுமே வாய்ப்பதில்லை. குருமுகமாக, நால்களின் உண்மைப் பொருளை உணர்ந்து தெளிந்து, அனுபவ அறிவு உதிக்க வேண்டும்.

இதனை, இறைவனே குருமுகமாக இருந்து, நால்வர்க்கு உணர்த்தினார். மக்கள் ஈடேறும் பொருட்டே வேதங்களையும், ஆகமங்களையும் இறைவன், தனது பெருங்கருணை காரணமாகத் திருவாய் மலர்ந்து அருளினான் என்பது தெளிவு.

இறைவன் உணர்த்த உணர்ந்ததை, அருளாளர்கள் உலக மக்கட்கு அவரவர் பயிலும் மொழியால் நூல் வடிவிலே உணர்த்தி அருளினார்கள். ஆழ்வார்களையும் நாயன்மார்களையும் வேதம் தமிழ் செய்தவர்களாகக் கொண்டுள்ளோம்.

திருவள்ளுவரும் அந்த மரபிலே வந்தவர். ஆதலால், அவரைத் திருவள்ளுவர் என்றும், "தெய்வப் புலவர்" என்றும் வழங்குகின்றோம்.

தேவர் - தெய்வத் தன்மை உடையவர்.

பிற புலவர்கள் எடுத்துச் சொல்லுதற்கு அரிய உண்மைகளை மக்கள் எளிதில் அறியுமாறு சொல்ல வல்லவர்.

தெய்வப் புலவர் - தெய்வத் தன்மை பொருந்திய அறிவு உடையவர். புலமை என்பது கல்வி அறிவைக் குறிக்கும்..  தெய்வப் புலமை என்பது ஆசிரியர் மாட்டு ஓதுதல் காரணமாகப் புலமை பெறாது, இயல்பாகவே புலமை நிரம்பப் பெற்ற தன்மையைக் குறிக்கும்.

ஒரு தொழிலைச் செய்பவர்கள் ஓரிடத்தில் கூடி வாழ்வதைக் காண்கின்றோம். உதாரணமாக, பட்டுத் தொழில் செய்யும் ஒர் ஊருக்குள் சென்றால், ஒவ்வொருவரும் அவரவர் அறிவுக்கும் திறமைக்கும் ஏற்ப அத் தொழிலைச் செய்வதைக் காணலாம்.  ஒவ்வொரு படைப்பும் அதனதன் நிலையில் உயர்ந்து விளங்கும்.

அதுபோல, திருக்குறளின் அருமை பெருமைகள், திருவள்ளுவமாலை என்னும் பகுதிக்குள் சென்றால் விளங்கும்.

திருவள்ளுவ மாலையில், அசரீரி என்ற தலைப்பில் ஒரு வெண்பா உள்ளது.

திருத்தகு தெய்வத் திருவள் ளுவரோடு
உருத்தகு நல்பலகை ஒக்க -- இருக்க
உருத்திர சன்மர் என உரைத்து,வானில்
ஒருக்க ஓ என்றது ஓர் சால்.

இதன் பொருள் --- அருட்செல்வத்தையும், அதற்குத் தக்க தெய்வத் தன்மையையும் உடைய திருவள்ளுவரோடு, அவர் இருத்தற்குத் தனது உருவத்தினாலே தக்க நல்ல சங்கப் பலகையிடத்து, உருத்திரசன்மர் ஒருவரே ஒப்ப இருக்க என்று கூறி, ஆகாயத்தில் இருந்து அவ் இடத்தில் உள்ள புலவர்களின் கருத்தை எல்லாம் ஒற்றுமை செய்யும்படி ஒரு வாக்கியம் ஓ என்று இரைந்து எழுந்தது.

திரு என்பது அறிவு உடையாரால் விரும்பப்படும் தன்மை. வள்ளுவர் - ஈகை உடையார். (வண்கை - ஈகை) வேத,புராண இதிகாசங்களில் இலைமறை காய்போல் இருந்த உண்மைகளை எல்லாம். தமிழ் மக்கள் எளிதில் அறிந்து உய்யுமாறு, தொகுத்து வழங்கிய வள்ளன்மை உடையவர் என்ற காரணம் பற்றி திருவள்ளுவர் எனப் பெயர் வழங்கல் ஆயிற்று.

திருக்குறளை அரங்கேற்றத் தொடங்கிய காலத்து, தெய்வப் புலவராகிய அவரோடு ஒப்ப இருந்து கேட்பதற்குத் தகுதி உடையார் யார் என யாவரும் எண்ணி நின்ற போது, இந்த அசரீரி வாக்கியம் பிறந்தது. அப்போது, அங்கு நின்று கேட்ட புலவர்களுள் ஒருவர் அதனை இவ்வாறு பாடலாகச் செய்தார் என்று சொல்லப்படுகின்றது.

திருவள்ளுவரோடு ஒப்ப இருக்கும் தகுதி பெற்றவர், முருகப் பெருமானின் திரு அவதாரமாய் வணிகர் மரபில் தோன்றிய உருத்திரசன்மர் என்பதால், திருவள்ளுவரை தெய்வப் புலவர் என்பது சாலப் பொருத்தமானதே ஆகும்.

மேலும், வேதா என்னும் பிரமனே, தன் உருவை மறைத்து, திருவள்ளுவராக அவதரித்து, நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்னும் புருஷார்த்தங்களின் திறத்தை, அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பொருளாகத் தமிழில் தந்து அருளிய திருக்குறள் என்னும் திருமுறையை எனது தலையானது வணங்கட்டும், வாயானது துதிக்கட்டும், மனமானது தியானிக்கட்டும், செவியானது கேட்கட்டும் என்று, உக்கிரப் பெருவழுதியார் என்னும் புலவர் பாடியருளிய பாடலொன்றும் திருவள்ளுவமாலையில் உள்ளது.

நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
தான் மறைந்து, வள்ளுவனாய்த் தந்து உரைத்த --- நூல்முறையை
வந்திக்க சென்னி, வாய் வாழ்த்துக, நல்நெஞ்சம்
சிந்திக்க, கேட்க செவி.     

இதனாலும், திருவள்ளுவர் தெய்வப் புலவரே என்பது தெளிவாகும்.

காரிக் கண்ணனார் என்னும் புலவர் பாடிய பாடலொன்றும், வேதப் பொருள் விளக்கம் பெற, தாமரையோன் ஆகிய பிரமனே திருவள்ளுவராக அவதாரித்து, 133 அதிகாரங்களைக் கொண்ட திருக்குறளை உலகிற்குத் தந்தான் என்றும் தெரிவிக்கின்றது.
  
ஐயாறும் நூறும் அதிகாரம் மூன்றுமா
மெய் ஆய வேதப் பொருள் விளங்க - பொய்யாது
தந்தான் உலகிற்குத் தான், வள்ளுவன் ஆகி,
அம் தாமரை மேல் அயன்.

திருமால் வாமனனாக அவதரித்து, தனது இரண்டு திருவடிகளால் உலகம் அனைத்தையும் ஒருங்கே அளந்தான். மெய்யறிவினை உடைய திருவள்ளுவரும், தாம் அருளிய குறள் வெண்பாக்களின் இரண்டு சிறிய அடிகளால், இந்த உலகத்தில் உள்ளோர் நினைந்த எல்லாவற்றையும் அளந்தார்.

பரணர் என்னும் புலவர் பெருமான் திருவள்ளுவ மாலையில் பாடியருளிய பாடல் இவ்வாறு தெரிவிக்கின்றது.

மாலும் குறளாய் வளர்ந்து இரண்டு மாண் அடியால் 
ஞாலம் முழுதும் நயந்து அளந்தான் --- வால் அறிவின் 
வள்ளுவரும், தம் குறள் வெண்பா அடியால், வையத்தார் 
உள்ளுவ எல்லாம் அளந்தார்.

இதில் வியப்பு என்னவென்றால், திருமால் தன்னைத் தானே குறள் வடிவாக்கிக் கொண்டு, பின்பு அந்நிலையில் நில்லாது வளர்ந்து, தனது பேரடிகளால் அளவுபட்ட உலகத்தை அளந்தார். திருவள்ளுவர் தனது நிலையில் மாறாமலேயே, தன்னில் இருந்து திருக்குறள் வெண்பாக்களை உண்டாக்கினார். அது தன் நிலையிலேயே நின்று, அதன் சிற்றடிகளால், உலகத்தாரின் அளவு படாத எண்ணங்களை எல்லாம் இன்னமும் அளந்து காட்டிக் கொண்டு இருக்கின்றது.

வெளி வருகின்ற திருக்குறள் பதிப்புக்களுக்கும் இன்னமும் குறைவு இல்லை. உரை நூலுகளும் வந்த வண்ணமாகவே உள்ளது.

திருவள்ளுவரது திருவாயினின்றும் தோன்றிய திருக்குறளின் பெருமையைச் சொல்லப் புகில், அது ஓதுவதற்கு எளிதாக இனிமையான நல்ல சொற்களை உடையதாகவும், அறியப்படுதற்கு அரிய பொருள்களை உடையதால் ஆழம் உடையதாகியும், வேதப் பொருளை விளக்குவதாக உள்ளதால் மேலானதாகவும், பொருள் ஆராய்ச்சிக்கு ஏற்ற நுண்ணளிவு உடையவர்கள் நினைக்கும் போதும், நினைக்கும் போதும், உள்ளத்தை உருக்குவதாகவும் உள்ளது என்று மாங்குடி மருதனார் என்னும் புலவர், திருக்குறளின் சிறப்பை வியந்து ஓதி உள்ளார்

ஓதற்கு எளிதாய், உணர்தற்கு அரிதாகி,
வேதப் பொருளாய் மிக விளங்கி -- தீது அற்றோர்
உள்ளுதொறும், உள்ளுதொறும், உள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு.         

எந்தப் பொருளானாலும், யாரும் இயல்பாக அறிந்து தெளியும்படி, திருவள்ளுவர் சால்லால் வரைந்த திருக்குறளுக்கு உவமானமாக, பழமையான வேதங்கள், மனுநூல், பாரதம், இராமாயணம் ஆகியவையே ஆகும் என்பார் பாரதம் பாடிய பெருந்தேவனார்.

எப்பொருளும் யாரும் இயல்பின் அறிவுறச்
செப்பிய வள்ளுவர்தாம் செப்பவரும் -- முப்பாற்கு,
பாரதம், சீராமகதை, மனு, பண்டை மறை
நேர்வன மற்று இல்லை நிகர். 

பூவிலே சிறந்தது தாமரை. பொன்னிலே உயர்ந்தது சாம்பூநதம். பசுக்களிலே சிறந்தது காமதேனு. யானைகளிலே சிறந்தது அயிராவதம். தேவர்களுக்குள்ளே திருமால். அதுபோல, நூல்களுக்குள்ளே திருக்குறளே சிறந்தது என்று அறிவுடையோர் சொல்லுவர் என்கின்றார் கவிராசப் பெருந்தேவனார். 
             
பூவிற்குத் தாமரையே, பொன்னுக்கு சாம்பூநதம்,
ஆவிற்கு அருமுனி ஆ, யானைக்கு அமரர் உம்பல்,
தேவில் திருமால், எனச் சிறந்தது என்பவே
பாவிற்கு வள்ளுவர் வெண்பா.
                      
ஆகவே, இத்தகு அருமை பெருமைகளை உடைய திருக்குறளை ஓதாத நாவுக்கு இன்சொல் சொல்லி வாழ்தல் இல்லை. மனத்திற்கு சொற்களின் சுவையை அறிதல் உண்டாகாது. இதைத் தவிர உடம்புக்கு நல்ல செயலும் இல்லை என நினைத்து, அப்படிப்பட்டவரிடம் திருமகள் சேரமாட்டாள் என்கிறது இன்னொரு திருவள்ளுவமாலைப் பாடல்.

தேவில் சிறந்த திருவள்ளுவர் குறள் வெண்
பாவில் சிறந்திடு முப்பால் பகரார் -- நாவிற்கு
உயல் இல்லை, சொல்சுவை ஓர்வு இல்லை, மற்றும்
செயல் இல்லை என்னும் திரு.      ---  உறையூர் முதுகூற்றனார்.

வடமொழியிலே வேதம் உள்ளது. தமிழிலே திருவள்ளுவனார் அருளிய திருக்குறள் உள்ளது.

ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து, இதனின் இது
சீரியது என்று ஒன்றைச் செப்ப அரிதால் --- ஆரியம்
வேதம் உடைத்து, தமிழ் திரு வள்ளுவனார்
ஓது குறட்பா உடைத்து.              ---- வண்ணக்கஞ் சாத்தனார்.

புற இருளை நீக்க வேண்டுமானால், தகளி, திரி, நெய், தண்டு ஆகிய பொருள்களைக் கொண்டு விளக்கினை ஏற்ற வேண்டும். திருவள்ளுவர், இந்த உலகில் வாழ்வோரின் அக இருளாகிய அஞ்ஞானத்தை நீக்கும் பொருட்டு, அறத்தை அகலாகவும், பொருளைத் திரியாகவும், இன்பத்தை நெய்யாகவும், செம்மையான சொல்லை நெருப்பாகவும், திருக்குறள் பாவைத் தண்டு ஆகவும் கொண்டு, உலகத்தில் வாழும் மனிதர்களின் மனத்துள்ள அஞ்ஞானமாகிய இருளை நீக்கும் அருள்ஞான விளக்கினை ஏற்றினார் என்று நப்பாலத்தனார் என்னும் புலவர் போற்றிப் பாடியுள்ளார்.

அறம் தகளி, ஆன்ற பொருள் திரி, இன்பு
சிறந்த நெய், செஞ்சொல் தீத் தண்டு ---  குறும்பாவா
வள்ளுவனார் ஏற்றினார், வையத்து வாழ்வார்கள்
உள்இருள் நீக்கும் விளக்கு.

அதனால், திருவள்ளுவ தேவர் அருளிய திருக்குறளும், நான்கு வேதங்களின் முடிபு என்னும், மூவர் அருளிய தமிழ்த் திருமுறைகளும், முனிபுங்கவர் ஆகிய மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகமும், திருக்கோவையாரும், திருமூல நாயனார் அருளிய திருமந்திரமும் ஆகிய இந்த அருள் நூல்கள் பொருளால் மாறுபடாதவை என்கின்றார் ஔவைப் பிராட்டியார்.  
        
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர்.     

"தண் தமிழின் மேலாம் தரம்" என்று ஆறு நூல்களை வரிசைப்படுத்தி அருளினார் உமாபதிசிவம் என்னும் அருளாளர். அந்த வரிசையில் முதலில் வருவது திருக்குறளே. மேலும், ஒரு மூல நூலுக்கு வரையப்பட்ட உரை நூலும் அந்த வரிசையில் வருகிறது என்றால் அந்த நூலின் சிறப்பு விளங்கும்.  திருக்குறளுக்குப் பரிமேலழகர் வகுத்த உரையும் இதில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
        
வள்ளுவர்சீர் அன்பர்மொழி வாசகம்தொல் காப்பியமே
தெள்ளுபரி மேலழகன் செய்தவுரை-ஒள்ளியசீர்த்
தொண்டர் புராணம் தொகுசித்தி ஓராறும்
தண்டமிழின் மேலாந் தரம்.    

மாமூலனார் என்னும் புலவர் திருவள்ளுவரை, அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கின் திறம் தெரிந்து செப்பிய தேவர் என்கிறார். திருவள்ளுவர் தெய்வப் புலவர்.
அப் பெருமானை 'வள்ளுவன்' என்று சொல்பவனை, பேதை என்கிறார் அவர். அத்தகேயோரின் சொல்லை அறிவு உடையார் கொள்ளமாட்டார்கள் என்றும் தெரிவிக்கின்றார்.

ஆம். சிலர், வாய் கூசாமல், 'வள்ளுவன் சொன்னான்', 'வள்ளுவன் கூறினான்' 'வள்ளுவன் எழுதினான்' என்று முழங்குகின்றார்கள். இது பேதைமை தானே. வெறுமனே 'குறள்' என்று சொல்லுவதும் எழுதுவதும் அறியாமையே ஆகும்.

---   'திருவள்ளுவ தேவர்' என்று சொல்ல வேண்டும். 
---   'திருவள்ளுவர்' என்றும், 'திருக்குறள்' என்றும் வழங்கவேண்டும்.     

அறம் பொருள் இன்பம் வீடு என்னும் அந் நான்கின்
திறம் தெரிந்து செப்பிய தேவை -- மறந்தேயும்
வள்ளுவன் என்பான் ஒரு பேதை, அவன் வாய்ச்சொல்
கொள்ளார் அறிவு உடையார்.  

அருட்புலவர்கள் திருவள்ளுவரைப் போற்றுவதும், திருக்குறளை வியந்து ஒதுவதும்  , எண்ணுதற்கு உரியது.

வாக்கிற்கு அருணகிரி என்று போற்றப்படும், அருணகிரிநாதப் பெருமான் திருவள்ளுவரை, "திருவள்ளுவ தேவர்" என்று தமது திருப்புகழ்ப் பாடல் ஒன்றில் காட்டி உள்ளார் என்பது மேலும் சிறப்புக்கு உரியது.

"படர்புவியின் மீது மீறி வஞ்சர்கள்
     வியனினுரை பானு வாய்வி யந்துரை
     பழுதில்பெரு சீல நூல்க ளுந்தெரி ...... சங்கபாடல்

பனுவல்கதை காவ்ய மாமெ ணெண்கலை
     திருவளுவ தேவர் வாய்மை என்கிற
          பழமொழியை ஓதியே உணர்ந்து"

என்று திருச்செந்தூர்த் திருப்புகழில் பாடி உள்ளார்.

திருக்குறளை, "திருவள்ளுவ தேவர் வாய்மை" என்று அருணகிரிநாதர் சிறப்பித்து உள்ளது அற்புதம்.

இத் திருப்புகழுக்கு உரை வகுத்த, திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பின் வருமாறு கூறுகின்றார்.

"மனிதர்களில் விலங்கு உண்டு;
மனிதர்களில் மனிதர் உண்டு,
மனிதர்களில் தேவர் உண்டு;
ஆசையுள்ளம் படைத்தவன் விலங்கு.
அன்பு உள்ளம் படைத்தவன் மனிதன்.
அருள் உள்ளம் படைத்தவன் தேவன்".

"திருவள்ளுவர் அருள் உள்ளம் படைத்தவர். 1330 திருக்குறள் அமுதத்தால் உலகில் உள்ள மன்பதைகளை வாழச் செய்தார். அதனால் அவர் மனித உலகில் தேவர்.

திருவள்ளுவர் பாடியருளிய திருக்குறள் எப்போதும் மாறுபாடு-அழிவு இல்லாத ஒரு பெரிய சத்தியமறை. பொய்யா மொழி எனப்படும். அதற்கு ஈடு அதுதான். அது போன்ற ஒரு நூல் எந்த நாட்டிலும் எம்மொழியிலும் இல்லை என்பது உறுதி. சுருங்கிய சொற்களால் விரிந்த கருத்துக்களைத் தன்னகத்தே கொண்ட அறிவுக் கருவூலம் அது".

எல்லாவற்றுக்கும் மேலா, வள்ளல் பெருமான், திருக்குறள் பாக்களை அப்படியே எடுத்தாண்டு இருப்பதும், திருக்குறள் கருத்துக்களை ஆங்காங்கே தமது அருட்பாடல்களில் காட்டி இருப்பதும், திருக்குறளின் பெருமையை மேலும் பறைசாற்றும்.

பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்று திருக்குறள் என்னும் நீதி நூல். மற்றவை நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், முதுமொழிக்காஞ்சி, ஏலாதி என்னும் நீதி நூல்கள். நீதி நூல்களுள் சிறந்தவை திருக்குறளும் நாலடியாரும். "நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி" என்ற பழமொழியால் இது விளங்கும். அந்த இரண்டிலும் திருக்குறள் மிகச் சிறந்தது என்பது எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை.

திருக்குறள் உலகில் உள்ள யாவருக்கும் பொதுவான நீதிகளைச் சொல்லுகின்றது. அதனால் உலகம் பயனடைகின்றது. இதனால், "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து, வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று பாரதியார் பாராட்டி உள்ளார்.

மக்கள் அடைய வேண்டிய உறுதிப் பொருள்கள் நான்கு. அவை வடமொழியில் தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்றும், தமிழில் அறம், பொருள், இன்பம், வீடு என்றும் சொல்லப்படும். தொன்மையான இரு மொழிகளிலும் இவ்வாறு வழங்கப்படுவதாலேயே, இவை நமது நாட்டில் உள்ளோரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை என்பது தெளிவாகும்.

நூலுக்குப் பயன் இந் நான்குமே என்பதால், "அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே" என்று இலக்கண நூலாகிய நன்னூலில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

"கற்க கசடு அறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக" என்னும் திருக்குறளுக்கு உரை வகுத்த பரிமேலழகரும் பின் வருமாறு தெரிவிக்கின்றார்.

"கற்பவை என்றதனால், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள் உணர்த்துவன அன்றி, பிற பொருள் உணர்த்துவன சில்நாள், பல்பிணி, சிற்றறிவினர்க்கு ஆகா என்பது பெற்றாம்"

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களை உணர்த்துவனவே அறிவு நூல்கள். மற்றவை உலக நூல்கள் என்கிறது நாலடியார்.

"இன்பமும் பொருளும் அறனும் என்று ஆங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை" என்று தொல்காப்பியமும் வகுத்துள்ளது.

மக்கட் பிறப்பில் குறை உடையன என்று கருதப்படுகின்ற குருடு, உறுப்புக் குறைபாடு, கூன், குட்டை, ஊமை, செவிடு, விலங்கு உரு உடையதும், அறிவு அற்றதும் ஆகிய எட்டும் ஒருவர்க்குப் பிறப்பில் பொருந்துவது குற்றம். எனவே, பிறவியின் பெரும்பயனை அடைய வேண்டுமாயின், நீ பெற்ற செல்வம் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றினையும் போற்றிப் பாதுகாப்பதற்காகவே ஆக வேண்டும். இதை நீ மறப்பாயாகில், குறை உடைய மனிதப் பிறவியில் இருந்து உன்னைப் பாதுகாக்கத் தவறியவன் ஆவாய்" என்னும் பொருளில் உறையூர் முதுகண்ணன்  சாத்தனார் என்னும் புலவர் சோழன் நலங்கிள்ளிக்கு அறிவுறுத்திய புறநானூற்றுப் பாடல் "அறனும் பொருளும் இன்பமும், மூன்றும் ஆற்றும் பெரும! நின் செல்வம். ஆற்றாமை நிற் போற்றாமையே" என்று கூறுவதால், மக்கள் பிறப்பில் உடைய வேண்டிய உறுதிப் பொருள் வலியுறுத்தப்பட்டது.

புராணங்களும், இதிகாசங்களும், பிற அருள் நூல்களும், மக்கள் பின்பற்ற வேண்டிய நீதிநெறிகளின் படி வாழ்ந்து காட்டப்பட்ட வரலாற்று நிகழ்வுகளை, கதைகளின் வாயிலாக அறிவுறுத்துபவை. அவைகளில் இலைமறை காயாகப் பல் வேறு வாழ்வியல் உண்மைகள், கருத்துக்கள், ஆங்காங்கே சொல்லப்பட்டு உள்ளன. அவற்றை ஓதி உணர்ந்து தெளிய வேண்டுவது நமது கடமை. தாமாகவே முழுதும் ஓதித் தெளிய முடியாது. இறையருள் அதற்குத் துணை புரிய வேண்டும். இறையருள் பெற்றுள்ளரைக் குருவாக அடுத்து, அதற்கு உரிய முறையில் கேட்டும், சிந்தித்தும், தெளிதல் வேண்டும்.

தெளிவு எப்படி நிகழும்?.......

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.

எல்லாவற்றையும் எல்லாக் காலங்களிலும் வரலாறாகவோ, கதையாகவோ ஓதுவதோ, கேட்பதோ, சொல்லுவதோ உரிய பயனைத் தராது. அஞ்ஞானமே மேலும் வளரும் என்பதே உண்மை.

உதாரணமாக, சிவபெருமான் முப்புரத்தை எரித்த செய்தியை எடுத்துக்கொள்வோம். சிவபெருமான் முப்புரத்தை ஏன் எரித்தார்? எரித்ததனால் அவருக்கு என்ன நன்மை? எரிக்காவிட்டால் என்ன நட்டம்? எரித்தவர் யார்? எரிக்கப்பட்டவர்கள் யார்? எண்ணிப் பார்த்தால் அறிவு தெளிவு பெறும். அதை விடுத்து, இந்த நிகழ்வை ஒரு கதையாகவே சொல்லியும் கேட்டும் வருவதால் என்ன பலன்?

ஒவ்வொரு செய்தியிலும் ஒரு உண்மை பொதிந்து இருக்கும். அதை விளங்கிக் கொள்ள வேண்டும். சிறு வயதில் பாட்டியோ, ஆசிரியரோ ஒரு கதையை நமக்குச் சொல்லிவிட்டு, இறுதியில் ஒரு வினாவை நம்மிடம் வைத்து இருப்பார்கள். "இதிலிருந்து என்ன தெரிகிறது" என்பது தான் அது. அந்த அறியாத வயதில் நமக்கு ஒன்றும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்பதால், அவர்களே நமக்குச் சொல்லியும் வைத்தார்கள் என்பதை நாம் மறந்திருக்க முடியாது.

அதுபோலத் தான், முப்புரம் எரித்த நிகழ்விலும் ஒரு உண்மை பொதிந்து உள்ளது. அதை உணர்ந்தால் நாம் அறியாமையில் இருந்து விடுபட்டு அறிவு நிலைக்கு வந்தவர்கள் ஆவோம். இல்லையெனில் அஞ்ஞானத்தால் மூடப்பட்டுள்ள மூடர்களே. இதைத் தான் திருமூல நாயனார் நமக்குத் தெரிவிக்கின்றார்.

அப்பு அணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரம் ஆவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யார் அறிவாரே.

கங்கை நீர் தங்கிய செஞ்சடையினையும், ஆதியாகிய அன்னையையும் உடைய முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம் பொருளாகிய தொல்லோன் சிவபெருமான். ஆருயிர் உய்தல் பொருட்டு அவ்வவ் உயிர்களைச் சார்ந்த மும்மல காரியங்களை அவ் வுயிர்களால் செவ்வியுறச் செய்து அச் சிவபெருமான் திருவருள் நோக்கத்தால் சுட்டெரித்து அருள்வன். இவ் உண்மையினை எளியவர்கட்கு உணர்த்தும் பொருட்டு உருவகக் கதையாக உயர்ந்தோர் அமைத்து, உருவகமெனவே கூறியுணர்த்தினர். பின்னுள்ளோர் அவ் உண்மையினை மறந்து கதையை மெய்யாக்கி விட்டனர். அத்தகையோர் அறியாமைக்கு இரங்கித் திருமூலநாயனார் அவர்களை மூடர்கள் எனக் கூறுகின்றனர்.

திருமந்திரத்தில் இன்னொன்றையும் தெரிவிக்கின்றார்.  அது நஞ்சை உண்டு கண்டம் கறுத்தது.

அண்டமோடு எண்திசை தாங்கும் அதோமுகம்,
கண்டம் கறுத்த கருத்து அறிவார் இல்லை,
உண்டது நஞ்சு என்று உரைப்பர் உணர்வு இலோர்,
வெண்லை மாலை விரிசடை யோற்கே.

அண்டங்களையும், எட்டுத் திசைகளையும் முட்டின்றிக் காத்தருளும் சிவபெருமானின் நிலவறையாகிய கீழ்நோக்கிய திருமுகம் அதோமுகம். அம் முகத்தின் கண்டம் கறுத்தது குற்றம் பொறுத்ததேயாம்.

மற்றுக் கூறப்படும் புராணக்கதைகள் உருவகமேயாம்.

கண்டம் கறுத்த கருத்து: திருப்பாற்கடல் - ஆருயிர் நன்றாய் வாழச் சிவபெருமான் திருவருளால் நல்கிய உலகு உடல் உடைமைகளாம். கடைதல் - சிவனை மறந்து யான் என்னும் செருக்கொடு வானவர் தானவர் எனப்படும் இருவினைக்கண் முயலுதல். நஞ்சு - சிவபெருமானை மறந்ததாகிய குற்றம். அதுவே கறையாகும். அக் குற்றத்தை ஏற்றுப் பொறுத்ததே கண்டம் கறுத்ததாகும். இதுவே உண்மைக் கருத்து.

இது போலவே, மற்ற புராணங்களிலும், இதிகாசங்களிலும் வாழ்வியல் உண்மைகள பொதிந்து உள்ளன. வாழ்வியல் உண்மைகளை வெறுமனே சொல்லுவதை விடவும், வரலாறுகள், கதைகளின் வாயிலாகச் சொன்னால், மனதில் தெளிவாகப் பதியும்.

வடமொழியில் இராமகாதையைச் சொன்னவர் மூவர். வால்மீகி, வசிட்டர், போதாயனர். இவரில் முந்தியவர் ஆகிய வால்மீகி சொன்னதை தமிழ்ப் பாவினால் சொன்னதாகக் கம்பர் பாடுகின்றார்.

தேவ பாடையின் இக் கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம்முளும், முந்திய
நாவினான் உரையின்படி, நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்பு அரோ.

ஆனால், வால்மீகி சொன்னபடியே தமிழில் கம்பராமாயணம் அமைந்து உள்ளதா என்றால் இல்லை என்பது தான் பெரியவர்கள் கருத்து. காப்பியக் கட்டமைப்பின் சிறப்பையும், தமிழ்ப் பண்பாட்டு மரபையும் கருதி, பல மாற்றங்கள் கம்பராமாயணத்தில் அமைந்து உள்ளன. வால்மீகி முனிவர் சுருங்கச் சொன்னதை விரித்தும், விரித்துச் சொன்னதைச் சுருக்கியும், செய்திகளை இடம் மாற்றியும் பாடியுள்ளார். போகின்ற போக்கில் இடையிடையே வாழ்வியல் உண்மைகளையச் சிறிதும் பெரிதுமாகத் தூவிக் கொண்டே செல்கின்றார்.

உதாரணமாக, தாடகையின் உடலிலே இராமபிரான் விட்ட அம்பு, அவளது உடலை ஊடுருவி மிக வேகமாகச் சென்றது என்று சொன்னாலே போதும். அல்லது அம்பு மிக வேகமாகச் சென்றது என்பதை,காற்றை விட வேகமாகச் சென்றது என்று சொன்னால் இன்னும் தெளிவாக விளங்கும்.

கல்லாத புல்லர்களுக்கு நல்லவர்கள் சொன்ன அறிவுரையானது அவர் மனதில் தங்காது. இந்தக் காதில் வாங்கி, அந்தக் காது வழியாக விட்டுவிடுவர். இந்த வாழ்வியல் உண்மையை நமக்குத் தெளிவிக்க எண்ணிய கம்பநாட்டாழ்வார், "கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் எனப் போயிற்று அன்றே" என்று பாடிக் காட்டினார்.

கம்பராமாயணத்தில் வேள்விப் படலத்தில், ஒர் உண்மையை உணர்த்த வந்த கம்பநாட்டாழ்வார், அதற்கு அச்சாரமாக ஒரு பாடலைத் தருகின்றார்.

காலம் நுனித்து உணர் காசிபன் என்னும்

வால் அறிவற்கு அதிதிக்கு ஒரு மகவு ஆய்.

நீல நிறத்து நெடுந்தகை வந்து. ஓர்

ஆல் அமர் வித்தின் அரும் குறள் ஆனான்.


காசிப முனிவருக்கும் அதிதிக்கும் ஒரு குழந்தையாக வந்து, நீல நிறத்து நெடுந்தகை ஆன திருமால் ஒரு குழந்தையாக வந்து உதித்தார்.  எப்படி? ஆல் அமர் வித்தின் அரும் குறள் ஆனான் என்கின்றார். ஆலமரம் மிகப் பெரியது. அதன் விதை மிக மிகச் சிறியது.

வாமனனாக வந்த திருமால் மாவலி பால் சென்று, மூவடி மண் இரந்து, மாவலி அந்த மூவடி மண்ணைத் தாரை வார்த்துத் தந்த போது, அவன் வளர்ந்ததைப் பாட வந்த கம்பர்,

கயம் தரும் நறும் புனல் கையில் தீண்டலும்,
பயந்தவர்களும் இகழ் குறளன், பார்த்து, எதிர்
வியந்தவர், வெருக் கொள, விசும்பின் ஓங்கினான்;
உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே.

என்று பாடுகின்றார். "வியந்தவர் வெருக் கொள விசும்பின் ஓங்கினான், உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே" என்று பாடியதன் மூலம் ஒரு வாழ்வியல் உண்மையை உணர்த்துகின்றார்.

ஆலமரத்தின் விதையானது மிகச் சிறியது. ஆனால், அது விரிந்து வளர்ந்து பலருக்கும் நிழல் தரும். தக்கோருக்குச் செய்த உதவியும், அப்போது சிறிதாக இருந்தாலும், பின்னர் அது மிகப் பெரிய நற்பலனைத் தரும் என்று நாலடியார் கூறும் நீதியை இங்கு வைத்துக் காட்டினார்.

உறக்கும் துணையதோர் ஆலம்வித்து ஈண்டி
இறப்ப நிழல் பயந்தா அங்கு - அறப்பயனும்
தான்சிறிது ஆயினும், தக்கார் கைப் பட்டக்கால்
வான் சிறிதாப் போர்த்து விடும்.

சிறிய அளவினதான ஓர் ஆலம் விதை, தழைத்து, இறப்ப மிகவும் நிழல் கொடுத்தாற் போல, அறச்செயல்களின் பயனான புண்ணியத்தைத் தரும் பொருளும், தான் அளவில் சிறியதேயானாலும், தகுதியுடைய பெரியோர் கையில் சேர்ந்தால், வானமும் சிறிது என்னும்படி அவ்வளவு பெரிய புண்ணியத்தைச் சூழ வைத்துவிடும்.

இந்த வரலாற்றில் மேலும் ஓர் உண்மையைப் பொதிந்து தந்துள்ளார் கம்பர் பெருமான்.

மாவலி வாமனனுக்கு, அவன் கேட்ட மூவடி மண்ணைத் தர இசைந்த போது, சுக்கிராச்சாரியார், தனது அன்பு காரணமாக, "வந்திருப்பவன் இந்த உலகையே உண்டவன். வஞ்சக எண்ணத்தோடு வந்துள்ளான். இதை உணர்ந்து கொள்" என்கின்றார். "ஒருவருக்கு உதவுவதைத் தடுப்பது தங்களுக்கு அழகல்ல. கொடுப்பதை விலக்குகின்ற கொடியவர்களின் சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும்" என்கின்றான் மாவலி.

எடுத்து, ஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன்னே,
தடுப்பது, நினக்கு அழகிதோ? தகவு இல் வெள்ளி!
கொடுப்பது விலக்கு கொடியோர் தமது சுற்றம்,
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி ஒழியும் காண்.

"கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்"

என்னும் திருவள்ளுவர் வாய்மொழியை இங்கே கம்பநாட்டாழ்வார் காட்டி உள்ளார்.

பெரிய புராணத்தில் ஒரு நிகழ்வு. ஏனாதி நாதர் என்னும் அடியாரோடு, அதிசூரனுடைய ஆட்கள் போரிடுகின்றார்கள்.  அவரை வந்து எதிர்த்தவர்கள் எல்லாரும் கொல்லப்பட்டார்கள். எதிர்க்காதவர்கள் போர்க்களத்தை விட்டு ஓடிப்போனார்கள். எப்படி? ஆன்மாவுக்கு மெய்யுணர்வு தலைப்பட்ட போது, அலைந்து ஒழிந்த காமம், வெகுளி குற்றங்களைப் போல.

தலைப்பட்டார் எல்லாரும் தனிவீரர் வாளில்
கொலைப்பட்டார்; முட்டாதார் கொல்களத்தை விட்டு
நிலைப்பட்ட மெய்யுணர்வு நேர்பட்ட போதில்
அலைப்பட்ட ஆர்வமுதல் குற்றம்போல் ஆயினார்.

இது போலவே, வில்லி பாரதம், பெரியபுராணம், மற்றும் பிறவற்றிலும் பொதிந்து உள்ள உண்மைகளைத் தெளிந்த பெரியோர், அந்த உண்மைகளைத் திருக்குறளை ஓதித் தெளிந்த தமது அறிவு ஆராய்ச்சிக்கு உட்படுத்தி, அதன் பயனாக நூல்களை நமக்குத் தந்து உள்ளனர்.

 "திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு" என்னும் அற்புதமான நூல் ஒன்றை உலகுக்கு வழங்கியவர் பெரியவர், திரு. கி. வா. ஜகந்நாதன் அவர்கள். இந்த ஆராய்ச்சி 1950-ஆம் ஆண்டு அன்றைய குடியரசுத் தலைவராகிய டாக்டர். இராஜேந்திர பிரசாத் அவர்களால் தொடங்கப்பட்டது. நூலானது, 1963-ஆம் ஆண்டு, இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களால் வெளியிடப்பட்டது. இந்த நூலில், பின் வருமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

"வேதத்தில் உள்ள ஏதேனும் ஓர் அடியைச் செய்யுள்தோறும் ஈற்றில் அமைத்து இயற்றிய நூல் ஒன்று வடமொழியில் உண்டு. அதற்கு "வேதபாத ஸ்தவம்" என்று பெயர். அதுபோலத் தமிழ் மறையாகிய திருக்குறட் பாக்களைப் பிற்பகுதியில் வைத்து, முற்பகுதியில் அதற்கு விளக்கமாக வரலாறுகளைக் கூறும் செய்யுட்களை உடைய நூல்கள் பல தமிழில் உண்டு. இதுவும் திருக்குறளின் தனிச்சிறப்பை வெளிப்படுத்தும்".

இந்த முறையில் 14 நூல்களை அவர் வரிசைப்படுத்தி உள்ளார். அவற்றில் ஒரு நூல், "திருக்குறள் குமரேச வெண்பா" என்னும் நூல் அண்மையில் மறுபதிப்பாக வெளி வந்துள்ளது அறிந்ததே.

மற்ற நூல்களில் சில வருமாறு ---

நீதிசூடாமணி என்னும் இரங்கேச வெண்பா. பிறைசைச் சாந்த கவிராயர் இயற்றியது. 

முருகேசர் முதுநெறி வெண்பா --- பொம்மபுரம் ஸ்ரீசிவஞான பாலைய தேசிகர் ஆதீனத்து, சிதம்பரம் ஈசானிய மடம், இராமலிங்க சுவாமிகளால் பாடப்பெற்றது.

முதுமொழி மேல் வைப்பு --- தரும்புர ஆதீனம் கமலை வெள்ளியம்பலவாண முனிவரால் பாடப்பெற்றது.

சோமேசர் முதுமொழி வெண்பா --- சென்னையின் ஒரு பகுதியாக உள்ள குளத்தூரில் திருக்கோயில் கொண்டுள்ள சோமேசர் மீது, திராவிட மாபாடிய கர்த்தர் மாதவச் சிவஞான யோகிகளால் பாடப்பெற்றது.

திருத்தொண்டர் மாலை --- பெரிய புராணத்தில் வரும் நாயன்மார்களின் வரலாற்றை அடியாகக் கொண்டு, குமார பாரதி என்பவரால் பாடப்பெற்றது.

திருப்புல்லாணி மாலை --- திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் திருக்கோயில் கொண்டுள்ள தெய்வச் சிலைப் பெருமாள் மீது பாடப்பெற்றது. ஆசிரியர் தெரியவில்லை.

அதிகாரத்திற்கு ஒரு திருக்குறளையோ, ஒன்றுக்கு மேற்பட்டவையோ கொண்டு, அவற்றிற்கு விளக்கமாக, இதிகாச புராண வரலாறுகளைக் காட்டியுள்ளது அற்புதம். இவைகளைத் திருக்குறள் விளக்க நூல்கள் எனலாம்.

இந்த நூல்களை இப்போது காண்பது மிக அரிதாக உள்ளது.  அவைகளைத் தேடி, அவ்வப்போது கடைகளுக்குச் செல்வது உண்டு. என்னை அடிக்கடி பார்த்த சிலர் இவ்வாறு கூறுவது உண்டு. "உங்களைப் போன்ற ஒரு சிலர் தான், இத்தகைய நூல்களைத் தேடி வருகின்றீர்கள்.".

ஆம், தேடி அலைந்தாலும் கிடைக்காத அருமையான நூல்கள் தான் இவைகள். இவைகளைத் தேடுவோர் இக்காலத்தில் மிக அருமை என்பது உண்மை.

திருக்குறளை உருப் போடச் செய்வதும், மேலிருந்து கீழும், கீழிருந்து மேலுமாக ஒப்பிக்கச் செய்வதும் அல்லாமல், மேற்குறித்த நூல்களில் சொல்லப்பட்டுள்ள, சிறுவர் சிறுமியருக்குச் சொல்லித் தந்தால் பயன் மிக விளையும் என்பதில் ஐயமில்லை.

இந்த நிலையில் தான், மேற்குறித்த திருக்குறள் உரை நூல்களைத் தொகுக்க வேண்டும் என்னும் அவா எனக்குள் உண்டானது. ஆசைதான் உள்ளதே ஒழிய, அதற்கான அறிவு ஒரு சிறிதும் அடியேனுக்கு இல்லை என்பதே உண்மை. ஆசையை அடக்கினவர் யாரும் இல்லை. அதற்கு அடியேனும் விலக்கு இல்லை. எனவே, அவைகளை, ஒரு சிறிதும் கலப்படம் இல்லாமல் அப்படியே தருவது என்று தேர்ந்தேன்.

பழைய வீட்டை செப்பனிட்டுத் தருவதுபோல் தந்துள்ளேன்.
நிறை இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். குறை இருந்தால் பொறுத்தருளுங்கள்.

No comments:

Post a Comment

கச்சித் திரு அகவல்

பட்டினத்து அடிகளார் அருளிய கச்சித் திரு அகவல் திருச்சிற்றம்பலம் ----- திருமால் பயந்த திசைமுகன் அமைத்து வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து ...