001. கடவுள் வாழ்த்து - 09. கோளில் பொறியில்





திருக்குறள்

பாயிர இயல்
 
முதல் அதிகாரம் - கடவுள் வாழ்த்து

       என்னும் முதல் அதிகாரத்தின்,  ஒன்பதாவது திருக்குறள், "எண்ணத் தக்க குணநலம் உடையவனின் திருவடிகளைத் தொழாத தலைகள், தமக்கு உரிய புலன்களைக் கொள்ளுதல் இல்லாத ஐம்பொளிகளைப் போலப் பயன் அற்றவை" என்று தெரிவிக்கின்றது.


கோள்இல் பொறியில் குணம் இலவே, எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.                    

இதற்குப் பரிமேலழகர் உரை ---

கோள் இல் பொறியில் குணம் இல --- தத்தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்கை இல்லாத பொறிகள் போலப் பயன்படுதலுடைய அல்ல;

எண் குணத்தான் தாளை வணங்காத் தலை --- எண் வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள்.

(எண்குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என இவை.இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது.

'அணிமா' வை முதலாக உடையன எனவும்,

'கடை இலா அறிவை' முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர்.

காணாத கண் முதலியன போல வணங்காத தலைகள் பயன் இல எனத் தலைமேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும், இனம் பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயன் இல என்பதூஉம் கொள்க.)

அணிமாவை முதலாக உடையன எண் வகைப்படும். அவை அணிமா, மிகிமா, கரிமா, லகிமா,  பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பன.

தேகம் பரம அணு போன்ற மிகச் சிறிய உருவினை உடையதாக ஆதல் - அணிமா.

தேகம் ஆகாயம் போன்று மிகப் பெரிய உருவினை உடையதாம ஆதல் - மகிமா.

தேகம் மலை போன்று மிகவும் கனத்து இருத்தல் - கரிமா.

தேகம் துரும்பு போன்று மிகவும் நொய்தாக இருத்தல் - லகிமா.

தேகம் விரும்பிய உருவத்தை அடைதல் - பிராப்தி.

வேறு ஓர் உடம்பில் புகுதல், வானத்தில் உலாவுதல், விரும்பிய எல்லா போகங்களையும் இருந்த இடத்தில் பெறுதல், சூரிய ஒளியால் பொருள்களைக் காண்பது போல, தனது உடல் ஒளியால் பொருள்களைக் காண்பது, முக்காலத்தையும் உணர்தல் முதலியன - பிராகாமியம்.

எத்தகையோர்க்கும் மேம்பட்டு இருத்தல் - ஈசத்துவம்.

சர அசரப் பொருள்கள் யாவற்றையும் தன் வசம் ஆக்குதல் - வசித்துவம்.

கடை இலா அறிவை முதலாக உடையனவும் எண் வகைப்படும் என்று சமணம் கூறும். அவை கடைஇலா அறிவு, கடைஇலாக் காட்சி, கடைஇலா வீரியம், கடைஇலா இன்பம், பெயர் இல்லாமை, கோத்திரம் இல்லாமை, ஆயுள் வரையறை இல்லாமை, அழியா இயல்பு என்பன.

காணும் தன்மை இல்லாத குருட்டுக் கண் பயன்றறது போலவே, வணங்காத தலையும் பயன்றறது என்றார்.

இனம் பற்றி, வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயனற்றவை எனவும் கொள்ளவேண்டும் என்பது கூறப்பட்டது.

வணங்குவதற்குத் தான் தலை. வாழ்த்துவதற்குத் தான் வாய். கூப்புவதற்குத் தான் கை.

திரு அங்கமாலை என்னும் திருப்பதிகம் அப்பர் பெருமானாரால் பாடப் பெற்றது. உடல் உறுப்புக்களைப் பற்றிப் பாடப் பெற்றது. அதில், தலை வணங்கவேண்டும், கண்கள் காண வேண்டும், செவிகள் கேட்க வேண்டும், மூக்கு முரல வேண்டும், வாய்வாழ்த்த வேண்டும், நெஞ்சம் நினைய வேண்டும், கைகள் கூப்ப வேண்டும், உடம்பு இறைவன் திருக்கோயிலை வலம் வரவேண்டும், கால்கள் இறைவனுடைய திருக்கோயிலை சூழ வேண்டும் என்று அங்க உறுப்புக்களின் பயனைக் காட்டிப் பாடி இருப்பார்.  

எண் சாண் உடம்பிற்குத் தலையே முதன்மை என்பதால், திருவள்ளுவ தேவர் (அருணகிரிநாதர் 'திருவள்ளுவதேவர்' என்றே பாடினார்) தலையைக் குறிப்பட்டுப் பாடினார்.

வேதாந்தம், சித்தாந்தம் இரண்டையும் நன்கு தெளிந்த கமலை வெள்ளியம்பலவாண முனிவர், மேற்குறித்த திருக்குறளுக்க் விளக்கமாக, தாம் இயற்றிய முதுமொழி மேல் வைப்பு என்னும் நூலில் ஒரு வெண்பாவைப் பாடி உள்ளார்.


வைதிகமேல் கொண்டசொல்லும் மற்றவர்க்கு, பக்குவர்க்கு ஆம்
சைவம், அவர் கொண்ட சமயம், எனும் --- செய்திசொலும்
கோள்இல் பொறியில் குணம் இலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

வைதிகம் ---  வேத சம்பந்தமான மதங்கள், அவை, பஞ்சராத்ரம், வைணவம், வைகாநசம், ஜ்யோதிஷம், மாயாவாதம், வேதாந்தம், துவிதம், அத்துவிதம் என்பன.  மற்றவர்க்கு வைதிகத்தை மேற்கொண்டு சொல்லும் என்க.  மற்றவர்க்கு ---  பக்குவர் அல்லாதார்க்கு.

பக்குவர்க்கு சைவம்.

இந்தச் செய்தியினைச் சொல்லுவது இத் திருக்குறள். 

இங்கே சைவம் என்றது சிவாகமத்தின் கருத்தாகி வந்த சித்தாந்தத்தை.

எண்குணங்கள் குறித்து, மேலே பரிமேலழகர் கூறியுள்ளார்.

வேதாந்தத்தினும் சித்தாந்தம் சிறந்தது என்பது, வேதாந்தம் உடலும், சித்தாந்தம் உயிருமாக நிற்கும் என்ற கொள்கையானும், வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தத் திறன் என்னும் சிவப்பிரகாசத்தாலும் புலனாகும்.
                                                     

இத் திருக்குறளுக்கு ஒப்பாக உள்ள சில அருட்பாடல்களை இங்கே தருகின்றேன்.

இறைவன் எண்குணத்தான் என்பது......

எட்டுக்கொலாம் அவர் ஈறுஇல் பெருங்குணம்
எட்டுக்கொலாம் அவர் சூடும் இனமலர்
எட்டுக்கொலாம் அவர் தோள் இணை ஆவன
எட்டுக்கொலாம் திசை ஆக்கின தாமே.    ---  அப்பர்.              

குணங்கள் தோள் எட்டு மூர்த்தி இணையடி
இணங்குவார்கட்கு இனியனுமாய் நின்றான்
வணங்கி மாமலர் கொண்டுஅவர் வைகலும்
வணங்குவார் மனத்தார் வன்னியூரரே.     --- அப்பர்.

மணவன் காண் மலையாள் நெடுமங்கலக்
கணவன் காண் கலைஞானிகள் காதல், எண்
குணவன் காண் குரங்காடு துறைதனில்
அணவன் காண் அன்பு செய்யும் அடியார்க்கே.  --- அப்பர்.

திண்குணத்தார் தேவர் கணங்கள் ஏத்தித்
         திசைவணங்கச் சேவடியை வைத்தார் போலும்,
விண்குணத்தார் வேள்வி சிதைய நூறி
         வியன்கொண்டல் மேல்செல் விகிர்தர் போலும்,
பண்குணத்தார் பாடலோடு ஆடல் ஓவாப்
         பரங்குன்றம் மேய பரமர் போலும்,
எண்குணத்தார் எண்ஆயிரவர் போலும்
         இடைமருது மேவிய ஈச னாரே.          --- அப்பர்.

முறைவனை மூப்புக்கும் நான்மறைக்கும்
         முதல் ஏழ்கடல் அம்
துறைவனை, சூழ்கயிலாயச் சிலம்பனை
         தொன்மை குன்றா
இறைவனை, எண்குணத்து ஈசனை,
         ஏத்தினர் சித்தம் தம்பால்
உறைவனை, பாம்பனை யாம் பின்னை
         என்சொல்லி ஓதுவதே.              ---  பொன்வண்ணத்தந்தாதி.


இறைவனைத் தலையால் வணங்குவதன் சிறப்பு.....

வாளினான் வேலினான் மால்வரை எடுத்ததிண்
தோளினான் நெடுமுடி தொலையவே ஊன்றிய
தாளினான் கானப்பேர் தலையினால் வணங்குவார்
நாளும்நாள் உயர்வதோர் நன்மையைப் பெறுவரே.  --- திருஞானசம்பந்தர். 

கலையினான் மதியான் கதி ஆகிய
மலையினான் மருவார் புரம் மூன்று எய்த
திலையினான் சேர் திருமழபாடியைத்
தலையினால் வணங்கத் தவம் ஆகுமே. --- திருஞானசம்பந்தர்.

சிலைதனால் முப்புரம் செற்றவன் சீரினார்
மலைதனால் வல்அரக்கன் வலி வாட்டினான்
கலைதனார் புறவுஅணி மல்கு காட்டுப்பள்ளி
தலைதனால் வணங்கிடத் தவமது ஆகுமே. --- திருஞானசம்பந்தர்.

தலையே நீ வணங்காய் –
         தலைமாலை தலைக்கு அணிந்து
                  தலையாலே பலி தேரும் தலைவனை -
                           தலையே நீ வணங்காய்.    --- அப்பர்.

இலையாரும் சூலத்தாய் எண்தோளானே
         எவ்விடத்தும் நீஅல்லாது இல்லை என்று
தலையாரக் கும்பிடுவார் தன்மையானே
         தழல்மடுத்த மாமேருக் கையில் வைத்த
சிலையானே திருஆனைக்காவுள் மேய
         தீயாடீ சிறுநோயால் நலிவுண்டு உள்ளம்
அலையாதே நின்அடியே அடையப் பெற்றால்
         அல்லகண்டம் கொண்டு அடியேன் என்செய்கேனே. --- அப்பர்.

நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா
         நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு
புலர்வதன் முன் அலகு இட்டு மெழுக்கும் இட்டுப்
         பூமாலை புனைந்து ஏத்தி, புகழ்ந்து பாடி,
தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடி,
         சங்கரா சயபோற்றி போற்றி என்றும்     
அலைபுனல்சேர் செஞ்சடை எண் ஆதிஎன்றும்
         ஆரூரா என்றுஎன்றே அலரா நில்லே.   --- அப்பர்.


வணங்கத் தலை வைத்து வார்கழல்வாய்  வாழ்த்தவைத்து
இணங்தத்தன் சீரடியார் கூட்டமும் வைத்து எம்பெருமான்
அணங்கொடு அணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற
குணங் கூரப் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ.     --- திருவாசகம்.


எந்தை! நினை வாழ்த்தாத பேயர் வாய், கூழுக்கும்
                  ஏக்கு அற்று இருக்கும் வெறுவாய்;
         எங்கள் பெருமான்! உனை வணங்காத மூடர் தலை,
                  இகழ்விறகு எடுக்கும் தலை;
கந்தம் மிகு நின்மேனி காணாத கயவர் கண்,
                  கலம் நீர் சொரிந்த அழு கண்;
         கடவுள்! நின் புகழ்தனைக் கேளாத வீணர் செவி,              
               கைத்து இழவு கேட்கும் செவி;
பந்தம்அற நின்னை எண்ணாப் பாவிகள் தம் நெஞ்சம்,
                  பகீர் என நடுங்கும் நெஞ்சம்;
         பரம! நின் திரு முன்னர் குவியாத வஞ்சர் கை,
                  பலி ஏற்க நீள் கொடும் கை;
சந்தம்மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
                  தலம் ஓங்கு கந்தவேளே!
         தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!
                  சண்முகத் தெய்வமணியே!              


ஐய! நின் சீர்பேசு செல்வர் வாய், நல்ல தெள்
                  அமுது உண்டு உவந்த திருவாய்;
         அப்ப! நின் திருவடி வணங்கினோர் தலை, முடி
                  அணிந்து ஓங்கி வாழும் தலை;
மெய்ய! நின் திருமேனி கண்ட புண்ணியர் கண்கள்,
                  மிக்கஒளி மேவு கண்கள்;
         வேல! நின் புகழ் கேட்ட வித்தகர் திருச்செவி,
                  விழாச் சுபம் கேட்கும் செவி;
துய்ய! நின் பதம் எண்ணும் மேலோர்கள் நெஞ்சம், மெய்ச்
                  சுகரூபமான நெஞ்சம்;
         தோன்றல்! உன் திருமுன்னர் குவித்த பெரியோர் கைகள்
                  சுவர்ணம் இடுகின்ற கைகள்,
சையம்உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
                  தலம் ஓங்கு கந்தவேளே
         தண்முகத் துய்யமணி உள்முகச் சைவமணி
                  சண்முகத் தெய்வமணியே!               ---  திருவருட்பா.

முறைவனை மூப்புக்கும் நான்மறைக்கும்
         முதல் ஏழ்கடல் அம்
துறைவனை, சூழ்கயிலாயச் சிலம்பனை
         தொன்மை குன்றா
இறைவனை, எண்குணத்து ஈசனை,
         ஏத்தினர் சித்தம் தம்பால்
உறைவனை, பாம்பனை யாம் பின்னை
         என்சொல்லி ஓதுவதே.          --- பொன்வண்ணத்தந்தாதி.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...