001. கடவுள் வாழ்த்து - 10. பிறவிப் பெருங்கடல்.





திருக்குறள்
அறத்துப்பால் 

பாயிர இயல்
 
முதல் அதிகாரம் - கடவுள் வாழ்த்து

என்னும் முதல் அதிகாரத்தில் வரும் இறுதித் திருக்குறள், "இறைவனுடைய திருவடியைப் பற்றி நிற்பவர் பிறவியாகிய துன்பப் பெருங்கடலை நீந்திக் கரை சேர்வர். அவ்வாறு பற்றி நில்லாதவர் நீந்திக் கரை சேரார்" என்கின்றது.

பிறவிப் பெரும்கடல் நீந்துவர், நீந்தார்
இறைவன் அடி சேராதார். 

இதற்குப் பரிமேலழகர் உரை ---     

இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவர்;

சேராதார் நீந்தார் - அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர்.

(காரண காரியத் தொடர்ச்சியாய் கரை இன்றி வருதலின், 'பிறவிப் பெருங்கடல்' என்றார். சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். உலகியல்பை நினையாது இறைவன் அடியையே நினைப்பார்க்குப் பிறவி அறுதலும், அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்குப் அஃது அறாமையும் ஆகிய இரண்டும் இதனான் நியமிக்கப்பட்டன.)

காரண காரியத் தொடர்ச்சி என்பது, வித்தினால் முளையும், முளையினால் வித்தும் தொன்று தொட்டு வருவது போல என்று அறிக.

முன் பிறவியில் இழைக்கப்பட்ட வினைகளால், இப் பிறவியும், இப் பிறவியில் இழைக்கப்போகும் வினைகளால், இனி வரும் பிறவியும் ஆக, தொன்று தொட்டு, காரண காரியத் தொடர்ச்சி உடையதாய், பிறவியானது முடிவில்லாமல் வருவதால், அது "பிறவிப் பெருங்கடல்" எனப்பட்டது.

பிறவியை கடலாக உருவகப்படுத்திக் கூறுவது மட்டும் அல்லாமல், மரமாக உருவகப்படுத்திக் கூறுவதும் உண்டு. பகவத் கீதையின் பதினைந்தாவது அத்தியாயத்தில் பிறவி மரமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது காண்க.

அருணகிரிநாதப் பெருமானும், "எழுபிறவி நீர் நிலத்தில்" எனத்தொடங்கும் திருப்புகழில், பிறவியை மரமாக உருவகப்படுத்திக் காட்டினார்.

சொல் எச்சம் என்பது, செய்யுளில் ஒரு சொல்லுக்கு முன்னாவது பின்னாவது, சொல் மாத்திரம் குறைந்து நிற்றல். இங்கே, 'இறைவன் அடி சேர்ந்தார்' என்னும் சொல் குறைந்து நின்றது.

இறைவன் அடி சேர்ந்தார் பிறவிப் பெருங்கடல் நீந்துவர்.
இறைவன் அடி சேராதார் பிறவிப் பெருங்கடல் நீந்தார்.

உலகியல்பை நினையாது இறைவன் அடியையே நினைப்பார்க்குப் பிறவி அறுதலும், அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்கு, அது அறாமையும், என்றதில், அவ்வாறு இன்றி மாறி நினைத்தலாவது, உலகியல்பு ஆகிய, தான் அல்லாத உடம்பை நான் என்றும், தன்னோடு இயைபு இல்லாத பொருள்களை எனது என்றும் கருதுதல்.

சைவசித்தாந்தம் இதனையே வலியுறுத்துகின்றது. சிவஞானபோதம் முதலாகிய சித்தாந்த சாத்திர நூல்களில் இது தெளிவாக்கப்பட்டுள்ளது.

திருக்குறளையும், சைவ சித்தாந்தத்தையும் தெளிந்த, கமலை வெள்ளியம்பலவாண முனிவர், தாம் இயற்றிய "முதுமொழிமேல் வைப்பு" என்னும் நூலில் இத் திருக்குறளுக்கு விளக்கமாகப் பின் வரும் வெண்பாவைப் பாடி உள்ளார்.


அப்பர் முதல் சித்தாந்திகள் வீடு அடைதலுமே,
வைத்த புவனத்து இருந்தார் மற்றையவர்,  ---  ஒக்கும்
பிறவிப் பெரும்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்.                     

அப்பர் முதல் சித்தாந்திகள் --- சமய குரவர் முதலியோர்.  மற்றையவர் என்றது பிரமா, விஷ்ணு, இந்திரன் முதலியோரை. சைவசித்தாந்திகள் அல்லாதாரை எனலும் ஆம். வைத்த ---  வெவ்வேறாக வைத்த. புவனத்து ---  அழியும் இயல்பு உடைய சுவர்க்காதி புவனங்களில்.

சைவத்துள் சரியை, கிரியை, யோகமார்க்கம், ஞானத்தால் சிவனடி சேர்தல். புறச்சமயமும் சைவர்க்கு உடன்பாடே என்பது,

புறச்சமய நெறி நின்றும், அகச்சமயம் புக்கும்,
புகல் மிருதி வழிஉழன்றும், புகலும் ஆச்சிரம
அறத்துறைகள் அவைஅடைந்தும், அருந்தவங்கள் புரிந்தும்,
அருங்கலைகள் பலதெரிந்தும், ஆரணங்கள் படித்தும்,
சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும், வேத
சிரப்பொருளை மிகத்தெளிந்தும், சென்றால் சைவத்
திறத்து அடைவர், இதில் சரியை, கிரியை யோகம் செலுத்தியபின்,
 ஞானத்தால் சிவன் அடியைச் சேர்வர்

என்னும், சிவஞான சித்தியார் செய்யுளால் காண்க. 

"விரிவிலா அறிவினோர்கள் வேறொரு சமயம் செய்து எரிவினால் சொன்னாரேனும், எம்பிராற்கு ஏற்றது ஆகும்" என்றார் அப்பர் பெருமானும்.

பதியினைப் போல் பசுபாசம் அநாதி என்ற திருமந்திரத்தின் திருவாக்கின்படி, பதி, பசு, பாசம் என்ற முப்பொருள்களும் என்றைக்கும் உள்ளவை. அவைகள் அநாதி நித்தியம் என்று கூறப்படும்.

பதி - தானே அறிகின்ற பொருள்.
பசு - அறிவிக்க அறிகின்ற பொருள்.
பாசம் - அறிவித்தாலும் அறியாத பொருள்.

இந்த முப்பொருள் உண்மைகளை இனிது தெளிவாக உரைப்பது சைவசித்தாந்தம் ஒன்றே ஆம். ஏனைய சமயங்கள் யாவும் இதற்கு அங்கங்களாகவே அமைந்துள்ளன.

முடிந்த முடிபாக விளங்குவது "சித்தாந்தம்" என்று அறிக. இதுவே சமயாதீதப் பழம்பொருளாய், வேதசிவாகமங்களின் உட்பொருளாய், பிறவிப்பிணியை அகற்ற வல்லதாய், அறிவின் மணிமுடியாய் விளங்குவது என்று அறிஞர்கள் அனைவர்களும் முடிவு செய்து உள்ளார்கள் என உணர்க.  இச் சித்தாந்த சைவம் ஏனைய சமயங்களைப் போல், அறிவுடைய சில மனிதர்களால் செய்யப்பட்டது அன்று.  செம்பொருளாம் சிவமே இதனை ஆன்மாக்களின் மல நீக்கத்தின் பொருட்டு அருளியது ஆகும்.

சற்காரியவாதம் கொண்டு, காட்சி, கருதல், ஆகமம் என்னும் மூன்று விதமான அளவைகளால், கடவுள் ஒருவர் அநாதியே உண்டு. அக்கடவுள் சிவபரம் பொருள். அக் கடவுளுக்கு வேறாய், எண்ணில்லாத உயிர்கள் அநாதியே உண்டு. இவ் உயிர்களை அநாதியே கட்டுப்படுத்திய ஆணவமலம் ஒன்று உண்டு. அது மூலமலம் அல்லது சகசமலம் எனப்படும்.  அம் மலத்தின் காரணமாக உயிர்களுக்குக் கன்மமலம் உண்டு. மல சம்பந்தம் உடைய உயிர்களுக்கு உறைவிடமாக மாயாமலம் ஒன்றுண்டு. மலம் சடமாதலின், அதனைச் செலுத்துகின்ற ஆதி சத்தியாகிய திரோதான மலமும், அதனாலாய மாயாகாரியங்களாகிய மாயேய மலமும் உண்டு. கன்ம மலமானது, ஆகாமியம், பிராரத்தம், சஞ்சிதம் என மூவகைப்படும். கன்ம மல போகங்களைத் துய்க்கும் இடங்களாகிய சுவர்க்க நரக உலகங்கள் உண்டு.  அங்ஙனம் துய்க்கும்கால், அடையத் தக்க சுரர், நரகர், அலகை முதலிய யோனி பேதங்களும் உண்டு.  இங்ஙனம் இறந்து பிறந்து வருவதால், மறுபிறப்புக்கள் உண்டு. சங்காரம் இளைப்பு ஒழித்தல் ஆகும். பிறவிப் பிணியை அகற்றும் வழிகளை அறிவிக்கும் விதி நூல்கள் வேத சிவாகமங்கள் ஆகும்.  அவைகளில் விதிக்கப்பட்ட வருணாச்சிரம பேதங்களுக்கு ஈடாக ஒழுகுங்கால் செய்யப்படும் கன்மங்கள் நல்வினை தீவினை என இருதிறப்படும். இவைகளும் திருஷ்டகன்ம போக்கியம், திருஷ்டாதிருஷ்ட கன்ம போக்கியம், அதிருஷ்டகன்ம போக்கியம் என மூவகைப்படும். அக் கன்ம பேதங்களால், போக பேதங்கள் உண்டு. கன்ம பலன்கள் அநுபவமாவது நிச்சயம். அப்பலன்களை இறைவனே உயிர்களுக்குக் கொடுப்பான். அங்ஙனமாயினும் சிவாகமங்களின் வழி ஒரு வினைக்கும் மற்றொரு வினையால் அழிவு உண்டு. அறங்களைச் செய்ய வேண்டும். அதுவும் பாத்திரம் அறிந்து செய்யவேண்டும். அறங்களுக்குள்ளே வேள்வி சிறந்தது. அதனினும் உயிர்க்கருணை மிகச் சிறந்தது. அதுவும் அருள் இல்லாத வழி அமையாது. ஆதலின் அருளே இன்றியமையாதது. அருள் இல்லாதவர் எத்தகையாராயினும் பரகதி அடையார். வினைகளும் ஒருவன் செய்தது, அவனைச் சார்ந்தார்க்கும் ஆகும்.

முத்தி உலகம் தேவர் உலகங்களுக்கு மேல் உள்ளது.  அதனை அடைவதற்கு நித்தியாநித்திய வஸ்துவிவேகம் முதல் சாதனம். வேறு சிறந்த சாதனங்களும் உண்டு. அவைகளைக் கடைப்பிடித்து மனமொழி மெய்களால் முதல்வனை வழிபட வேண்டும். அவ்வாறு வழிபட்டோர்க்கு இருவினையொப்பு உண்டாகி மலபரிபாகம் உண்டாகும். அதனால், சத்திநிபாதம் நிகழும். தீவிர முதலிய சத்திநிபாதம் உடையோர்க்கு இறைவன் குருவுமாய் வந்து தீக்கை செய்து, மல வன்மையை அகற்றி, சிவானந்தத்தை அளிப்பான். அக் குருவின் உபதேசப்படி நின்று சிவானந்தாநுபவத்தில் திகழ்கின்ற சீவன் முத்தர்கள், வாசனா மல நீக்கத்திற்காக திருவைந்தெழுத்தை ஓதி, குருலிங்க சங்கம வழிபாடு செய்ய வேண்டியது அவசியம். இவ்வாறு சீவன் முத்தராய்த் திகழ்ந்து, பிராரத்த கன்ம அனுபவ முடிவில், சிவத்துடன் இரண்டறக் கலந்து சிவாநுபவம் ஒன்றையே துய்த்துக் கொண்டு இருப்பர்.முத்தியிலும் உயிர்களுக்கு முப்பொருள்களும், இறைவன் உபகாரமும் உண்டு. முதல்வனின் அருள் சேர் முத்தியாகிய அடிசேர் முத்தியே சித்தாந்த முத்தி எனப்படும்.

இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்த சில அருட்பாடல்களை இங்கே தருகின்றேன்.

                                                     
புற்றுஆடு அரவம் அரைஆர்த்து உகந்தாய்
         புனிதா பொருவெள்விடை ஊர்தியினாய்
எற்றேஒரு கண்இலன் நின்னை அல்லால்
         நெல்வாயில் அரத்துறை நின்மலனே
மற்றேல் ஒரு பற்றுஇலன் எம்பெருமான்
         வண்டார்குழலாள் மங்கை பங்கினனே
அற்றார் பிறவிக் கடல் நீந்தி ஏறி
         அடியேன் உய்யப்போவதோர் சூழல் சொல்லே.--- சுந்தரர்.
 
அருள்பழுத்து அளிந்த கருணை வான்கனி,
ஆரா இன்பத் தீராக் காதல்
அடியவர்க்கு அமிர்த வாரி, நெடுநிலை
மாடக் கோபுரத்து ஆடகக் குடுமி
மழைவயிறு கிழிக்கும் கழுமல வாண,நின்

வழுவாக் காட்சி முதிரா இளமுலைப்
பாவையுடன் இருந்த பரம யோகி,
யான்ஒன்று உணர்த்துவன், எந்தை, மேனாள்
அகில லோகமும், அனந்த யோனியும்,
நிகிலமும் தோன்றநீ நினைந்த நாள் தொடங்கி,

எனைப்பல யோனியும், நினைப்பு அரும் பேதத்து
யாரும், யாவையும், எனக்குத் தனித்தனி
தாயர் ஆகியும், தந்தையர் ஆகியும்,
வந்து இலாதவர் இல்லை, யான், அவர்
தந்தையர் ஆகியும், தாயர் ஆகியும்,

வந்து இராததும் இல்லை, முந்து
பிறவா நிலனும் இல்லை, அவ்வயின்
இறவா நிலனும் இல்லை, பிறிதில்
என்னைத் தின்னா உயிர்களும் இல்லை, யான் அவை
தம்மைத் தின்னாது ஒழிந்ததும் இல்லை, அனைத்தே

காலமும் சென்றது, யான் இதன் மேல்இனி
இளைக்குமாறு இலனே நாயேன்,
நந்தாச் சோதி, நின் அஞ்செழுத்து நவிலும்
தந்திரம் பயின்றதும் இலனே, தந்திரம்
பயின்றவர்ப் பயின்றதும் இலனே, ஆயினும்

இயன்றது ஓர் பொழுதின் இட்டது மலராச்
சொன்னது மந்திரமாக, என்னையும்
இடர்ப் பிறப்பு இறப்பு என்னும் இரண்டின்
கடல்படா வகை காத்தல் நின்கடனே. ---  திருக்கழுமல மும்மணிக்கோவை.


அறிவில் ஒழுக்கமும், பிறிதுபடு பொய்யும்
கடும்பிணித் தொகையும், இடும்பை ஈட்டமும்,
இனையன பலசரக்கு ஏற்றி, வினைஎனும்
தொல் மீகாமன் உய்ப்ப, அந் நிலைக்
கரு எனும் நெடுநகர் ஒருதுறை நீத்தத்து
புலன் எனும் கோள்மீன் அலமந்து தொடர,
பிறப்புஎனும் பெருங்கடல் உறப் புகுந்து அலைக்கும்
துயர்த் திரை உவட்டின் பெயர்ப்பிடம் அயர்த்துக்
குடும்பம் என்னும் நெடுங்கல் வீழ்த்து,
நிறைஎனும் கூம்பு முரிந்து, குறையா
உணர்வு எனும் நெடும்பாய் கீறிப் புணரும்
மாயப் பெயர்ப்படு காயச் சிறைக்கலம்
கலங்குபு கவிழா முன்னம், அலங்கல்
மதியுடன் அணிந்த பொதிஅவிழ் சடிலத்துப்
பையரவு அணிந்த தெய்வ நாயக.....

நின் அருள் எனும் நலத்தார் பூட்டித்
திருவடி நெடும்கரை சேர்த்துமா செய்யே.  --- கோயில் நான்மணி மாலை.


இப்பிறவி என்னும்ஓர் இருள்கடலில் மூழ்கி, நான்
                  என்னும் ஒரு மகர வாய்ப்பட்டு
         இருவினை எனும் திரையின் எற்றுஉண்டு, புற்புதம்
                  எனக் கொங்கை வரிசைகாட்டும்
துப்புஇதழ் மடந்தையர் மயல் சண்டமாருதச்
                  சுழல் வந்து வந்து அடிப்ப,
         சோராத ஆசையாம் கான்ஆறு வான்நதி
                  சுரந்தது என மேலும் ஆர்ப்ப,
கைப்பரிசு காரர்போல் அறிவான வங்கமும்
                  கைவிட்டு மதிமயங்கி,
         கள்ள வங்கக் காலர் வருவர் என்று அஞ்சியே
                  கண்அருவி காட்டும் எளியேன்
செப்பரிய முத்தியாம் கரைசேரவும் கருணை
                  செய்வையோ, சத்து ஆகி என்
         சித்தமிசை குடிகொண்ட அறிவுஆன தெய்வமே
                  தோஜோமய ஆனந்தமே.       --- தாயுமானவர்.

இல்லை பிறவிக் கடல் ஏறல், இன் புறவில்  
முல்லை கமழும் முதுகுன்றில் ---  கொல்லை
விடையானை, வேதியனை, வெண்மதிசேர் செம்பொன்
சடையானைச் சாராதார் தாம்.         --- பதினொராம் திருமுறை.

துவக்கு அற அறிந்து பிறக்கும் ஆரூரும்,
         துயர்ந்திடாது அடைந்து காண் மன்றும்,
உவப்புடன் நிலைத்து மரிக்கும் ஓர் பதியும்
         ஒக்குமோ? நினைக்கும் நின் நகரை;
பவக்கடல் கடந்து முத்தி அம் கரையில்
         படர்பவர் திகைப்பு அற நோக்கித்
தவக்கலம் நடத்த உயர்ந்து எழும் சோண
         சைலனே கைலை நாயகனே.  --- சோணசைலமாலை.

தோற்றிடும் பிறவி  எனும் கடல் வீழ்ந்து
         துயர்ப்பிணி எனும் அலை அலைப்ப
கூற்று எனும் முதலை விழுங்குமுன் நினது
         குரைகழல் கரை புக விடுப்பாய்
ஏற்றிடும் விளக்கின் வேறுபட்டு அகத்தின்
         இருள் எலாம் தன்பெயர் ஒருகால்
சாற்றினும் ஒழிக்கும் விளக்கு எனும் சோண
         சைலனே கைலை நாயகனே. --- சோணசைலமாலை.

கரையேற விடும்  இறைவன் கருணை

மனம் போன போக்கில் சென்றான் ஒருவன்; கண்ணை இழந்தான். கடலில் விழுந்தான். கரை தெரியவில்லை. கலங்குகிறான். நீருள் போகிறான். மேலே வருகிறான். திக்கு முக்காடித் திணறுகிறான். அபாயச் சூழ்நிலை. உடல் துடிக்கிறது. உள்ளம் பதைக்கிறது. அலறுகிறான். அழுகிறான். எதிர்பாராத ஒரு பருத்த மரம், அலைமேல் மிதந்து, எதிரே வருகிறது. காண்கிறான். நம்பிக்கை உதிக்கிறது. ஒரே தாவாகத் தாவி, அதைத் தழுவிக் கொள்கிறான். விட்டால் விபரீதம். இனி யாதாயினும் ஆக என்று அதையே இறுகப் பற்றியிருக்கின்றான்.

எதிர்பாராது எழுந்தது புயல். அலைவு அதிகரிக்கும் அது கண்டு அஞ்சினான். பயங்கரமாக வீசிய புயல் காற்று, அவனை ஒரே அடியாகக் கரையில் போய் வீழச் செய்தது. அந்த அதிர்ச்சியில், தன்னை மறந்தான். சிறிது பொறுத்து விழித்தான். என்ன வியப்பு! தான் கரையில் இருப்பதை அறிந்தான். மகிழ்ந்தது மனம். கட்டையை வாழ்த்தினான்; கரையில் ஒதுக்கிய காற்றையும் வாழ்த்தினான். ஆன்மாவின் வரலாறும், ஏறக்குறைய இதைப் போலவே இருக்கிறது பாருங்கள்!

இருண்ட அறிவால், ஒளிமயமான உணர்வை இழந்தது; அதன் பயனாக, ஆழம் காண முடியாத, முன்னும் பின்னும் தள்ளித் துன்புறுத்தும் வினை அலைகள் நிறைந்த, அநியாயப் பிறவிக்கடலில் வீழ்ந்தது ஆன்மா.

அகங்கார மமகாரங்கள், மாயை, காமக் குரோத லோப மோக மத மாற்சரியங்கள், பின்னி அறிவைப் பிணைத்தன. இவைகளால், கடுமையாக மோதியது கவலைப் புயல். வாழ்க்கையாம் வாழ்க்கை! கண்ணீர் வெள்ளத்தில் மிதந்தது தான் கண்ட பலன். அமைதியை விரும்பி, எப்புறம் நோக்கினாலும் இடர்ப்பாடு; கற்றவர் உறவில் காய்ச்சல்; மற்றவர் உறவில் மனவேதனை. இனிய அமைதிக்கு இவ்வுலகில் இடமேயில்லை. அவதி பல அடைந்து, பொறுக்க முடியாத வேதனையில், இறைவன் திருவடிகளைக் கருதுகிறது.

நினைக்க நினைக்க, நினைவில் நிஷ்காமியம் நிலைக்கிறது. அந்நிலையிலிருந்து,  இறைவனை வேண்டிப் பாடுகிறது. உணர்வு நெகிழ்ந்து உள்ளம் உருகிப் பாடும் பாக்களை, பாக்களில் உள்ள முறையீட்டை, கேட்டுக் கேட்டு இறைவன் திருவுளம் மகிழ்கிறது. அருளார்வ அறிகுறியாக அமலனாகிய இறைவனுடைய திருச்செவிகள் அசைகின்றன. அந்த அசைவிலிருந்து எழும் பெருங்காற்று, எங்கும் பரவி, பிறவிக்கடலில் தத்தளிக்கும் ஆன்மாவை, வாரிக் கரையில் சேர வீசி விடுகிறது. அந்நிலையில், முத்திக்கரை சேர்ந்தேன் என்று தன்னை மறந்து தனி இன்பம் காண்கிறது அந்த ஆன்மா.

இந்த வரலாற்றை,

மாற்றரிய தொல்பிறவி மறிகடலின் இடைப்பட்டுப்
போற்றுறுதன் குரைகழல்தாள் புணைபற்றிக் கிடந்தோரைச்
சாற்றரிய தனிமுத்தித் தடங்கரையின் மிசைஉய்ப்பக்
காற்றுஎறியும் தழைசெவிய கடாக்களிற்றை வணங்குவாம்'

என்று கனிவொடு பாடுகின்றது காசிகாண்டம்.

தனியேனன் பெரும் பிறவிப் பௌவத்து எவ்வத்
      தடம் திரையால் எற்றுண்டு பற்று ஒன்று இன்றிக்
கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால்
      கலக்குண்டு காம வான் சுறவின் வாய்ப்பட்டு
இனி என்னே உய்யும் ஆறு என்று என்று எண்ணி
      அஞ்சுஎழுத்தின் புணை பிடித்துக் கிடக்கின்றேனை
முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லல்
     கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே.
                                                     
என்கிறது திருவாசகம்.

"நீச்சு அறியாது ஆங்கு ஓய் மலைப்பிறவி ஆர்கலிக்கு ஓர் வார்கலமாம் ஈங்கோய் மலைவாழ் இலஞ்சியமே"
                                        
என்கிறது திருவருட்பா.


வேதன், நெடுமால், ஆதி விண்நாடர்,
         மண்நாடர், விரத யோகர்,
மாதவர் யாவரும் காண மணிமுறுவல்
         சிறிது அரும்பி, மாடக் கூடல்
நாதன் இரு திருக்கரம் தொட்டு அம்மியின் மேல்
         வைத்த கயல் நாட்டச் செல்வி
பாதமலர், எழுபிறவிக் கடல் நீந்தும்
         புணை என்பர் பற்று இலாதோர்.     
                      
என்கிறது திருவிளையாடல் புராணம்.


ஆயிழை தன்பிறப்பு அறிந்தமை அறிந்த
தீவ திலகை செவ்வனம் உரைக்கும்          
ஈங்கு இதன் அயலகத் திரத்தின் தீவத்
தோங்குயர் சமந்தத் துச்சி மீமிசை
அறவியங் கிழவோன் அடியிணை யாகிய
"பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம்
அறவி நாவாய்" ஆங்கு உளது ஆதலின்                
தொழுதுவலங் கொண்டு வந்தேன், ஈங்குட்
பழுதில் காட்சியிந் நன்மணிப் பீடிகை
தேவர்கோன் ஏவலிற் காவல் பூண்டேன்
தீவ திலகை என்பெய ரிதுகேள்...         ---  மணிமேகலை.

இதன் பதவுரை ---

ஆயிழை தன் பிறப்பு அறிந்தமை அறிந்த --- மணிமேகலை தன் முற்பிறப்பினை அறிந்த தன்மையை உணர்ந்த, தீவதிலகை செவ்வனம் உரைக்கும் ---- தீவதிலகை செம்மையாகக் கூறுகின்றாள், ஈங்கிதன் அயலகத்து இரத்தின தீவத்து --- இம் மணிபல்லவத்தின் அயலிடத்துள்ளதாகிய இரத்தின தீவத்தின்கண், ஓங்குயர் சமந்தத்து உச்சி மீமிசை --- மிக உயர்ந்த சமந்தம் என்னும் மலையின் உச்சிமீது, அறவியங் கிழவோன் அடியிணை ஆகிய --- அறத்திற்கு உரிமையுடையோனாகிய புத்தனின் இணையடிகள் என்னும், பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம் --- பிறவியாகிய பெரிய கடலைக் கடத்துவிக்கும், அறவி நாவாய் ஆங்குளது ஆதலின் --- அறத்துடன் கூடிய மரக்கலம் அவ்விடத்துள்ளதாகலின், தொழுது வலங் கொண்டு வந்தேன் ஈங்கு --- அதனை வலங்கொண்டு பணிந்து ஈண்டு வந்தேன், பழுதில் காட்சி இந் நன் மணிப் பீடிகை --- குற்றமற்ற தோற்றத் தினையுடைய நன்றாகிய இந்த மணிப்பீடத்தை, தேவர் கோன் ஏவலின்காவல் பூண்டேன் --- இந்திரன் ஏவலாற் காத்தலை மேற்கொண்டேன், தீவதிலகை என் பெயர் --- எனது பெயர் தீவதிலகை என்பதாகும் ;

அறவி - அறம். காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருதலின் பிறவியைப் பெருங்கடல் என்றார். அறவி நாவாய் - அறவுருவினதாகிய நாவாய் என்றுமாம். பிறவியாகிய பெருங்கடலைக் கடத்தும் அடியிணையாகிய நாவாய் என்க; "பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார், இறைவனடி சேரா தார்" என்பதன் கருத்து இதில் அமைந்துள்ளமை காண்க.

இறப்பு எனும் மெய்ம்மையை, இம்மை யாவர்க்கும்
மறப்பு எனும் அதனின்மேல் கேடு மற்று உண்டோ,
"துறப்பு எனும் தெப்பமே" துணை செயாவிடின்
"பிறப்பு எனும் பெருங்கடல்" பிழைக்கல் ஆகுமோ.----  கம்பராமாயணம்.

இதன் பதவுரை ---

இம்மை யாவர்க்கும் --- இப்பிறப்பிலே எவர்க்கும் ;  இறப்பு எனும் மெய்ம்மையை --- சாவு உண்டு என்னும் உண்மையை ;  மறப்பு எனும் அதனின்மேல் --- மறத்தல் என்னும் அதற்கு மேற்பட ;  கேடு மற்று உண்டோ --- கெடுதல் வேறு உண்டோ? (இல்லை) ;  துறப்பு எனும் தெப்பமே --- துறத்தல் என்னும் மிதவையே ;  துணை செய்யாவிடின் --- உதவி செய்யாவிட்டால் ;  பிறப்பு எனும் பெருங்கடல் --- பிறப்பு என்னும் பெரிய கடலினின்று ;  பிழைக்கல் ஆகுமோ --- தப்புதல் இயலுமேடா? இயலாது.

யாக்கை நிலையாமையை எஞ்ஞான்றும் மனத்துக் கொண்டால் அது பிறவியை ஒழித்தற்கு இன்றியமையாத துறவினை மேற்கொள்ளச் செய்யும் ; செய்யவே, பிறவிப் பெருங்கடல்கடத்தலாகும் என்பது கருத்து. காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருதலின் பிறவிப் பெருங்கடல் என்றார். பிறவிப் பெருங்கடல் (குறள், 10) என்பர் திருவள்ளுவரும். பிழைக்கல் - தப்புதல், உய்தல்.  

'சுருங்கு இடை! உன் ஒரு துணைவன் தூய தாள்
ஒருங்குடைஉணர்வினோர், ஓய்வு இல் மாயையின்
பெருங் கடல்கடந்தனர் பெயரும் பெற்றிபோல்,
கருங் கடல்கடந்தனென், காலினால்' என்றான். --- கம்பராமாயணம்.

இதன் பதவுரை ---

சுருங்கிடை --- சுருங்கிய இடையை உடைய தாயே; உன் ஒரு துணைவன் --- உன் ஒப்பற்ற நாயகனின்; தூய தாள் --- தூய திருவடியில்; ஒருங்கு அடை --- ஒன்றுபட்டு அடைந்த; உணர்வினோர் --- பேரறிவு பெற்ற ஞானிகள்; ஓய்வு இல் --- ஓய்ந்து போதல் இல்லாத; மாயையின் பெருங்கடல் --- மாயையாகிய பெருங்கடலை; கடந்தனர் --- தாண்டி; பெயரும் பெற்றி போல் --- நீங்கும் தன்மையைப் போல (அடியேன்); காலினால் --- கால்களால்; கருங்கடல் --- கரிய கடலைக்; கடந்தனென் --- கடந்து வந்தேன்; என்றான் ---  என்று கூறினான்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...