002. வான் சிறப்பு - 01. வான் நின்று





திருக்குறள்
அறத்துப்பால்

பாயிர இயல்

இரண்டாவது அதிகாரம் -  வான்சிறப்பு

         [அதாவது, அக்கடவுளது ஆணையான் உலகமும், அதற்கு உறுதியாகிய அறம் பொருள் இன்பங்களும் நடத்தற்கு ஏதுவாகிய மழையினது சிறப்புக் கூறுதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.]

அருட்பெருஞ்சோதி அகவலில், வள்ளற்பெருமான் இறைவனது அருட்கருணையை மழையாகவே உவமித்துப் பின்வருமாறு பாடி உள்ளார்.

உயங்கிய உள்ளமும் உயிரும் தழைத்திட
வயங்கிய கருணை மழைபொழி மழையே!   
         
என்னையும் பணிகொண்டு என்னுளே நிரம்ப
மன்னிய கருணை மழைபொழி மழையே!

உளங்கொளும் எனக்கே உவகைமேல் பொங்கி
வளங்கொளக் கருணை மழைபொழி மழையே!

 நலந்தர உடல்உயிர் நல்அறிவு எனக்கே
 மலர்ந்திடக் கருணை மழைபொழி மழையே!

 தூய்மையால் எனது துரிசு எலாம் நீக்கி, நல்
 வாய்மையால் கருணை மழைபொழி மழையே!

     அதாவது, கடவுளின் ஏவலால் உலகமும், அதற்கு உறுதியைத் தரும் அறம், பொருள், இன்பம் ஆகியவை நடப்பதற்கு துணைக் காரணமாக விளங்கும் மழையின் சிறப்பைச் சொல்லுதல் பொருட்டு இந்த அதிகாரம் எழுந்தது.

     இந்த இரண்டாவது அதிகாரத்தின் முதல் திருக்குறளில், மழையானது இந்த உலகத்தை நிலைத்து வாழ வைப்பதால், அந்த மழையே அமிழ்தம் ஆகியது என்று சொல்லப்பட்டது


வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் அமிழ்தம் என்று உணரல் பாற்று.      

இதற்குப் பரிமேலழகர் உரை ---   

         வான் நின்று உலகம் வழங்கி வருதலால் --- மழை இடையறாது நிற்ப உலகம் நிலைபெற்று வருதலான்;

      தான் அமிழ்தம் என்று உணரற் பாற்று --- அம்மழை தான் உலகிற்கு அமிழ்தம் என்று உணரும் பான்மையை உடைத்து.

         ('நிற்ப' என்பது 'நின்று' எனத் திரிந்து நின்றது. 'உலகம்' என்றது ஈண்டு உயிர்களை. அவை நிலைபெற்று வருதலாவது பிறப்பு இடையறாமையின் எஞ்ஞான்றும் உடம்போடு காணப்பட்டு வருதல். அமிழ்தம் உண்டார் சாவாது நிலைபெறுதலின், உலகத்தை நிலைபெறுத்துகின்ற வானை 'அமிழ்தம் என்று உணர்க' என்றார்.)

"அம்ருதம்" என்னும் வடமொழியின் திரிபு "அமிழ்தம்".

இத் திருக்குறளுக்கு ஒப்புமையாக அமைந்த திருமுறைப் பாடல்களை இங்கே தருகின்றேன்.

கொய்தஅம் மலர்அடி கூடுவார் தம்--
மைதவழ் திருமகள் வணங்க வைத்துப்
பெய்தவன் பெருமழை உலகம் உய்யச்
செய்தவன் உறைவிடம் திருவல்லமே.   --- திருஞானசம்பந்தர்.

உலகம் உய்ய, தனது கருணையால் மழை பொழியச் செய்தவன் என்கிறது இத் தேவாரப் பாடல்.

கடவுள் வாழ்த்து முதலில். அடுத்து வான் சிறப்பு. வான் சிறப்பு என்றது இறைவனது கருணையை. திருக்குறள் அதிகார வைப்பு முறை இத் தேவாரப் பாடலால் நன்கினிது விளங்கும்.

மழைவளர் உலகில் எங்கும் மன்னிய சைவம் ஓங்க
அழல்அவிர் சடையான் அன்பர்க்கு அடாதன அடுத்தபோது
முழைஅரி என்னத் தோன்றி முரண்கெட எறிந்து தீரக்கும்
பழமறை பரவும் தூய பரசுமுன் எடுக்கப் பெற்றார்.     ---  பெரியபுராணம்.

இறைவனது பெருங்கருணை என்னும் மழையால் இந்த உலகம் வளர்கின்றது என்றது இந்தப் பாடல். உலகம் என்றது உலகில் உள்ள உயிர்களை.

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...