002. வான் சிறப்பு - 02. துப்பார்க்குத் துப்பாய






திருக்குறள்
அறத்துப்பால்

பாயிர இயல்

இரண்டாவது அதிகாரம் -  வான்சிறப்பு

     இந்த அதிகாரத்தில் ஒரும் இரண்டாவது திருக்குறள், "இறைவனது அருட்கொடை ஆகிய வான்மழையானது, உண்பார்க்கு உண்ணுதற்கு உரிய உணவுகள் பல விளைவித்தும், தானை பருகுவதற்கு நீராகவும் விளங்குவது" என்கின்றது.

துப்பார்க்குத் துப்புஆய துப்பு ஆக்கி துப்பார்க்குத்
துப்பு ஆயதூஉம் மழை.                             

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி - உண்பார்க்கு நல்ல உணவுகளை உளவாக்கி;

     துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை - அவற்றை உண்கின்றார்க்குத் தானும் உணவாய் நிற்பதூஉம் மழை.

         (தானும் உணவாதலாவது, தண்ணீராய் உண்ணப்படுதல். சிறப்பு உடைய உயர்திணை மேல் வைத்துக் கூறினமையின், அஃறிணைக்கும் இஃது ஒக்கும். இவ்வாறு உயிர்களது பசியையும் நீர் வேட்கையையும் நீக்குதலின் அவை வழங்கி வருதல் உடைய ஆயின என்பதாம்.)

இதற்கு ஒப்புமையாக அமைந்த பாடல்கள் வருமாறு----

நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே யுணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரு நிலனும் புணரி யோரீண்
டுடம்பு முயிரும் படைத்திசி னோரே....   --- புறநானூறு.

     இதன் பொருள் ---

     நீர் இன்று அமையா யாக்கைக்கெல்லாம் --- நீரை இன்றி அமையாத உடம்பிற்கு எல்லாம்; உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் --- உணவு கொடுத்தவர்கள் உயிரைக் கொடுத்தார்; உண்டு முதற்று உணவின் பிண்டம் --- உணவை முதலாக உடைத்து அவ்வுணவால் உளதாகிய உடம்பு; உணவு எனப்படுவது நிலத்தொடு நீர் --- ஆதலால் உணவென்று சொல்லப்படுவது நிலத்தோடு கூடிய நீர்;  நீரும் நிலனும் புணரியோர் --- அந்நீரையும் நிலத்தையும் ஒருவழிக் கூட்டினவர்கள்; ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோர் --- இவ்வுலகத்து உடம்பையும் உயிரையும் படைத்தவராவர்;

அவனிமிசை மழைபொழிய உணவு மல்கி
         அனைத்து உயிரும் துயர்நீங்கி அருளினாலே
புவனம் எலாம் பொலிவு எய்தும் காலம் எய்தப்
         புரிசடையார் கழல் பலநாள் போற்றி வைகித்
தவமுனிவர் சொல்வேந்த ரோடும் கூடத்
         தம்பிரான் அருள்பெற்றுத் தலத்தின்மீது
சிவன்மகிழும் தானங்கள் வணங்கப் போவார்
         தென்திரு வாஞ்சியமூதூர் சென்று சேர்ந்தார்.       ---  பெரியபுராணம்.

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணத்தில் வரும் இந்தப் பாடலின் பொழிப்புரை---

உலகில் மழை பெய்ததால் உணவுப் பொருள்கள் பெருகி, அதனால் எல்லா உயிர்களும் துன்பம் நீங்கித் திருவருளினால் உலகம் முற்றும் செழிப்படையும் நற்காலம் வரவே, பிள்ளையார் சுருண்ட சடையை உடைய இறைவரின் திருவடிகளைப் பலநாள்கள் போற்றி, அங்கு எழுந்தருளியிருந்த பின்பு, தவ முனிவரான திருநாவுக்கரசரோடு கூடத் தம் இறைவரின் திருவருள் பெற்றுக் கொண்டு, உலகத்தில் சிவபெருமான் எழுந்தருளியுள்ள இடங்கள் பலவற்றையும் வணங்கிச் செல்பவராய் அழகிய திருவாஞ்சியம் என்ற பழைய பதியைச் சென்று அடைந்தனர்.


சீரின் விளங்கும் திருத்தொண்டர்
         இருந்து சிலநாள் சென்றதன்பின்
மாரி சுருங்கி, வளம்பொன்னி
         நதியும் பருவம் மாறுதலும்
நீரின் இயன்ற உணவு அருகி
         நிலவும் பலமன் உயிர்கள் எலாம்
பாரின் மலிந்த இலம்பாட்டில்
         படர்கூர் வறுமை பரந்ததால்.          ---  பெரியபுராணம்.

திருநாவுக்கரசு நாயனார் புராணத்தில் வரும் இந்தப் பாடலின் பொழிப்புரை வருமாறு ---

சீர்மை மிக்க திருத்தொண்டர்கள் இவ்வாறு சில நாள்கள் இருந்து கழிந்த பின்னர், மழைவளம் சுருங்கியதால், வளம் உடைய காவிரி நீர், வரும் பருவத்தில் வாராது மாறுதல் அடைய, அதனால் நீரால் விளையத்தக்க உணவுப் பொருள்கள் குறைய, உணவை முதன்மையாகக் கொண்டு வாழ்கின்ற உயிர்கள் எல்லாம், வறுமை காரணமாகத் துன்ப மிகுதியை அடையுமாறு வறுமை பரவியது.


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...